|
|
அகிலன் லெட்சுமணன்
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல பேட்டியை/கட்டுரையை வாசித்த நிறைவு.
பேட்டிக்கான கேள்விகளை தேர்ந்தெடுத்த விதமும், பேட்டியாளரின்
கருத்துக்களுக்கு ஒரு விசாலமான களத்தை ஏற்படுத்தி தந்திருப்பதும், பேட்டி
என்பதையும் தாண்டி, நல்ல தரமான கட்டுரையை படித்த மன நிறைவை
ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற ஆக்கங்கள் வல்லினத்தின் தரத்தை மேலும்
உயர்த்துகிறது. நன்றி, இந்த மாத வல்லினத்திற்கும் அதன் குழுவிற்கும்.
நோவா
சென்ற மே மாதம் வெளிவந்த வல்லினம் கலை, இலக்கிய இணைய இதழில் ஒரு
சிறுகதையைப் படித்தேன். தலைப்பு 'ஒட்டிகொண்டது'. ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதி
இருந்தார். என்ன அது ஒட்டிகொண்டது? பலரும் முக்கியமாக பெண்கள் வெளிப்படையாக
ஆராய தயங்கும் ஒரு விஷயத்தைக் கருவாக கொண்டு இந்த சிறுகதையை அவர்
எழுதியுள்ளார். தலைப்பே வாசிக்க தூண்டும் ஒரு உந்துதலை ஏற்படுத்தி
இருந்தது. கற்பு. பல்லாண்டுகளாக நிலவி வரும் ஒரு உறுத்தல். இதை பற்றிய
உறுத்தல் கன்னி பெண்ணுக்கு வந்தால் அது சுய புரிந்துணரல் எனக்கூறும்
சமுதாயம் அதே அந்த உறுத்தல் பற்றிய ஆராய்ச்சி ஒரு குடும்பப்பெண்ணுக்கு
வந்தால் என்னவென்று கூறும்? இந்த சிறுகதையில் சமகால உணர்வுகளை ஒரு பெண்ணின்
உளக்கிடங்கை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர். சரி, சிறுகதை
என்னவென்று பார்ப்போம்.
பெயரில்லாத அவள் தன்னுடலில் எங்கே கற்பு ஒட்டியுள்ளது என்ன ஆராய
தொடங்குகிறாள். முகத்திலா? மார்பிலா? வயிற்று பகுதியிலா? இல்லை கால்
இடுக்கிலா? பல கோணங்களில் அவள் கூர்ந்து கவனித்து பார்க்கிறாள். எங்கே
எப்போது அது ஆவலுடன் ஒட்டி கொண்டது என அவளுக்கே தெரியவில்லை. உடலில்
மட்டுமா என்றாலும் இல்லை. ஆன்மாவிலும் அது அவளுக்கு இருப்பதாக
தென்படவில்லை. பிரமையாக இருக்குமோ என எண்ணி தன்னை சுற்றி உள்ளோரிடம்
நாசுக்காக வினவுகிறாள். சமுதாயம் முன்னேற்படுத்திய கருத்துகளையே அவர்களும்
முன்வைக்கின்றனர். இது அவளுக்கு அன்னியமாகப்படுகிறது. முன்னிருந்த தனது
சுயத்தை எங்கேயோ தொலைத்து பின் மீண்டும் அதை அடைய அவள் எத்தனிக்கிறாள் தன்
நினைவு மூட்டையை அவிழ்ப்பதன் மூலம். அங்கே திருமணத்துக்கு முன் தனக்கிருந்த
கன்னிமை, கற்பு, தாய்மை, பெண்ணிமை என்ற தனது முற்போக்கான பார்வை மாறி
குடும்பம், கட்டுப்பாடு, அதிகாரம், ஆட்டுவாழ்க்கை என ஒரு வட்டத்துக்குள்
சிக்கி கொண்டதைப் பல ஆண்டுகளுக்கு பின் உணருவதாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
கற்பு என்றால் என்ன என்ற விவரிப்பு முழுமையாக இங்கு தென்படவில்லை என்றாலும்
அது நாம் பார்க்கும் பார்வையில் சிந்திக்கும் கோணத்தில் இருப்பதை மெலிதாக
உணர்த்துகிறார் ஆசிரியர்.
கற்பு பற்றிய சர்ச்சையில் சிக்கி சீரழிந்தவர்கள் ஏராளம். கற்பு என்பது
உடலில் இல்லை, உள்ளத்திலும் இல்லை. கற்பழிந்து விட்டால் உலகத்தில் வாழ
தகுதி இல்லை என்பதும் இல்லை. அது மனிதனால் உருவாக்க பட்டது. மிருகத்தைப்
போல உறவு கொள்ளக்கூடாது என்ற ஒரு எண்ணத்தில் உருவாக்க பட்ட ஒன்று.
வலுவிழந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கலவியை எதிர்க்கும் நோக்கத்தில்
உருவாக்க பட்டது.
ஆனால் அதுவே பலரின் வாழ்க்கையில் பெரும் போராட்டமாக அமைந்து விடுகிறது.
உறுத்தலை ஏற்படுத்தி விடுகிறது. கற்பு என்று ஆராயும் போது கற்பழிப்பு
பற்றியும் ஆராய வேண்டும். கலவி என்பது இருவரும் ஆண் பெண் இருபாலரும்
தூண்டப்பட்டு நடைபெற வேண்டும். ஆக இந்த கலவி வன்முறைக்கு உட்படுட்டபட்டு
நடந்தால் அதுவே கற்பழிப்பு என கூறப்படுகிறது. அது யாராக இருந்தாலும் சரி.
அப்படி பார்த்தால் இன்றைய சூழலில் எத்தனை குடும்ப பெண்களுக்கு இப்படி
வன்கலவி நடக்கிறது? அவர்களும் தானே கற்பழிக்கபடுகிறார்கள். மாறுப்பட
கோணத்தில் பார்த்தோமானால் இதெல்லாம் இருக்கிறது என்று நினைத்தால் தானே
உறுத்தல் வரும். எல்லாவற்றையும் தூக்கி வீசி விட்டால் நிம்மதியாக வாழலாம்
என்று நினைத்தாலும் அதிலே ஊறி பழக்க பட்டவர்களுக்கு மீண்டும் இந்த உறுத்தல்
வந்துவிடுகிறது. இன்றைய நிலையில் துப்பவும் முடியாமல் விழுங்கவும்
முடியாமல் இருதலைகொள்ளி எறும்பு போல் இருப்பவர்கள் தான் ஏராளம் என யோசிக்க
தோன்றுகிறது. பலரும் நினைக்கும் நினைவுகளை வெளியில் சொல்ல முடியாமல்
இருப்பது தானே உண்மை. சமுதாயம், குடும்பம், சொந்த வாழ்க்கை என பல விஷயங்கள்
இந்த பிரச்சனைக்கான முடிவை முடுக்கி வைக்கின்றன. ஆணாதிக்கத்தையும் இங்கே
பார்க்கலாம். ஒரு பெண் என்பவள் தனக்கு அடங்கி இருக்கவேண்டும் என்பதில் ஒரு
ஆண் மிகவும் கவனமாக இருப்பதில் கற்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அது
மட்டும் இல்லாமல் போனால் பெண் என்பவள் ஆணைப் பின்னுக்கு தள்ளிவிடுவாள்
அல்லவா. அந்த பயத்தின் காரணமாக தந்தைவழி சமுகம் செய்யும் சில
அடங்குமுறைகளில் ஒன்று தான் இந்த கற்பு. பெண் என்பவள் இதை ஆழ சிந்திக்க
வேண்டும். வழி தவறி போயிருந்தால் மீண்டும் வாழ்கையை தேடுவதில் தவறில்லை.
அதே சமயத்தில் இதைத் தவறான முறையில் பார்த்து உடலுக்கு தீங்கு
விளைவிப்பதும் முறையில்லை. எனவே நாம் யார், நம் நிலை என்ன, எது நமக்கு
நல்லது, என்பதை யோசித்து முடிவெடுத்து நம் வாழ்கையை நாமே அமைத்து கொள்ள வழி
செய்ய வேண்டியுள்ளது.
|
|