முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 30
ஜூன் 2011

  நேர்காணல்:
“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்”
தீபச்செல்வன்
 
 
       
நேர்காணல்:

“பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்”

தீபச்செல்வன்



பத்தி:

மே தினம் 2011 : பல்லின சங்கமத்தில் ஒரு நாள்
சு. யுவராஜன்

மே மாதம் : அமெரிக்கா, சிங்கப்பூர், தமிழ்நாடு
கெ. எல்.



புத்தகப்பார்வை:

பறவையின் தடங்கள் : மலாய் மொழிக்கவிதைகள்
பாவண்ணன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...12
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...20

ஷம்மி முத்துவேல்

வீ. நித்தியா

ஏ. தேவராஜன்



எதிர்வினை

தீபச்செல்வன் (பிறப்பு: அக்டோபர் 24, 1983) ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் வசித்து வருகிறார். கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக 2008/2009 இல் பதவி வகித்த இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்று தற்பொழுது யாழ் பல்கலைக்கழக ஊடக பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிகிறார். அத்தோடு சுயாதீன ஊடகவியலாளராகவும் இயங்குகிறார். கிளிநொச்சி நகர வாழ்க்கையை பற்றி ‘கிளிநொச்சியின் கதை' என்ற இரு கட்டுரைகளை எழுதியுள்ளார். கவிதைகள் தவிர, விமர்சனம், ஓவியம், புகைப்படம் போன்ற பங்களிப்புகளையும் செய்து வருகிறார். 'தீபம்' என்கிற பெயரில் வலைப்பதிவு ஒன்றும் எழுதிவருகிறார். 2005ஆம் ஆண்டு சுடரொளிப் பத்திரிகையில் முதல் கவிதை வெளியாகியிருந்தது. 2007இல் தீபம் என்ற வலைப்பதிவில் இவர் எழுதத் தொடங்கினார். திண்ணை, வார்ப்பு ஏனைய மின்னிதழ்களிலும் எழுதி வந்தார். இணையத்தில் பரவலாக இவரது கவிதைகள் வந்தன. பின்னர் தமிழக சிற்றிதழ்கள், புலம்பெயர் இதழ்கள் போன்றவற்றிலும் வன்னிப் போர் தொடர்பில் எழுதி வந்தார். வன்னிப் போர் பற்றிய ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் என்ற நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது “பாழ் நகரத்தின் பொழுது” என்ற கவிதை நூலை எழுதினார். இவரது போருக்கு பிந்திய ஈழம் தொடர்பான உரையாடல்களும் கதைகளும் அடங்கிய ஈழம் மக்களின் கனவு என்ற நூலை தோழமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நடத்திய நேர்காணல் இடம்பெற்றிருந்தது. கொளதமசித்தார்தன் நடத்திய நேர்காணலுடன் வன்னியின் சமகால நிலமைகள் தொடர்பிலான பல்வேறு பதிவுகளும் அந்த நூலில் அடங்குகின்றன. தற்பொழுது காலச்சுவடு பதிப்பகத்தால் பெருநிலம், உயிர்மையால் கூடாரநிழல், தோழமையால் நிலக்கனவு முதலிய புத்தகங்கள் வெளியாக உள்ளன. இன்றைய ஈழத்தின் முழு அவதானிப்புகளையும் உடைய தீபச்செல்வனை 'வல்லினம்' இதழுக்காக இணையத்தின் வழி நேர்காணல் செய்யப்பட்டது.

கேள்வி: உங்களின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதை படித்திருக்கிறேன். அப்படியொரு உண்மை சம்பவம் உண்டா? பதுங்கு குழிக்கும் ஈழத்துச் சிறார்களுக்கும் இடையில் பரவிக்கிடக்கும் கசப்பான வலி மிகுந்த தருணங்களைச் சொல்ல முடியுமா?

பதில்: நான் அதிகமதிகம் குழந்தைகளின் மனவெளிகளைக் குறித்தே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். எந்தக் குற்றங்களும் இழைக்காதக் குழந்தைகளைப் போர் மிகக் துன்புறுத்துகிறது. அந்த அனுபவங்களை என்னைச் சுற்றிச் சுற்றி தொடர்ச்சியாக உணருகிறேன். நானும் அம்மாவும் தங்கையும் விமானத் தாக்குதல்கள் நடைபெறும் சூழலில் பதுங்கு குழிக்குள் இருப்போம். அப்பொழுது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பெண் ஒருவர் பிறந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்த குழந்தையைக் கொண்டு வந்து எங்களுடன் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருப்பார். அந்தத் தருணத்தில்தான் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற அந்தக் கவிதையை எழுதியிருந்தேன்.

ஒருநாள் எனது வீட்டில் இருந்து அந்தக் கவிதையை எழுதிக் கொண்டிருந்த பொழுது மீண்டும் விமானங்கள் வந்து தாக்கத் தொடங்கின. மீண்டும் பதுங்கு குழிக்குள் ஓடிப் பதுங்கிய பொழுது அந்தக் கவிதையை எழுதாமல் கொல்லப்படுவேனோ என்றும் அஞ்சியிருந்தேன். மீண்டும் விமானம் அழிவுகளை நிகழ்த்திச் சென்ற பிறகு அந்தக் கவிதையை எழுதி முடித்திருந்தேன். எனக்கு அந்தக் குழந்தையைப் போன்ற குழந்தைகளின் பிறப்புச் சூழலும் பதுங்கு குழி வாழ்க்கையும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. ‘பதுங்குகுழி வாழ்வு’ என்று எழுதப்பட்ட கவிதை ஒன்றும் அதே நாட்களில் அந்த அனுபவங்களின் பின்னணியிலேயே எழுதப்பட்டது.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதையை எழுதிய தருணத்தில் திண்ணை இணையத்தில் வெளியிட்டிருந்தேன். ஜெயபாலன், கருணாகரன், பொன்காந்தன் எல்லோரும் அந்தக் கவிதை மிகவும் சரியாக எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அந்தக் கவிதை பதற்றமான அதிர்ச்சியான சூழலில் எழுதப்பட்டிருந்தது. வாழ்கிற சூழலின் நெருக்கடிகளை எழுத உந்தப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்தக் கவிதையில் குழந்தைகளின் சூழலை ஓரளவு பதிவு செய்ய நிர்பந்திக்கபட்டிருக்கிறேன். போர் முழுக்கவும் எனக்கு குழந்தைகள் பற்றிய ஏக்கமே அதிகமாகியிருந்தது. அதனால் குழந்தைகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

விமானங்களையும் செல்களையும் கண்டு வெறுந்தரைகளில் விழுந்து பதுங்குமளவுக்கு ஒரு சில வயதுக் குழந்தைகளே பழக்கப்பட்டிருந்தனர். சின்னச் சின்னச் சத்தங்களுக்கும் குழந்தைகள் பதுங்குளமவில் போர்ச் சத்தங்கள் அவர்களைப் பாதித்திருந்தன. வானத்தைப் பார்க்க அவர்கள் அஞ்சினார்கள். இன்று கூட பட்டாசுச் சத்தங்களையும் இரைச்சல்களையும் கண்டு நாங்களே திடுக்கிடுகிற அளவில் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் குழந்தைகளுக்கு அவை எவ்வளவு அச்சத்தை உருவாக்கியிருக்கும்? அவர்களின் முகங்களில் அதன் கொடுமையான அதிர்வுகளைப் பார்த்திருக்கிறேன்.

பதுங்கு குழிகளில் இருந்து துடிக்கிற குழந்தைகளில் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் என்னைப் பாதித்தது. அவர்கள் வீட்டிலிருந்து தூரத்தில் பாடசாலையில் இருக்கையில் வீட்டாரையும் தங்களையும் நினைத்து விமானங்களின் குண்டுகளுக்கு அஞ்சி துடிப்பார்கள். நான் பள்ளிச் சிறுவனாக இருக்கிற பொழுது விமானங்கள் குண்டு வீசுகையில் அந்தக் குண்டுகளிடமிருந்து தப்பிக்கொள்ள பற்றைகள் என்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அஞ்சியபடி பற்றைகளுக்குள் ஒளிந்திருப்பேன். பதுங்கு குழியும் விமானங்களும் குழந்தைப் பருவம் முதல் என்னைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. அச்சமும் பதற்றமும் பயங்கரமும் நிறைந்த தருணங்களாகக் குழந்தைகளின் வாழ்வை அது பாதிக்கிறது.

பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதுடன் சமையல், சாப்பாடு, வேலை என்று முழு நாட்களும் முழுக்காலமும் பதுங்கு குழிக்குள், நிலத்தின் கீழாய் முடிந்து போயிருக்கிறது. யுத்தம் தொடங்கிய சூழலில் கிளிநொச்சியில் பலர் பதுங்கு குழிகளை வீடுகளைப் போல நிலத்தின் கீழ் அமைத்திருந்தார்கள். மின்குமிழ்கள் பொருத்தி கதிரைகள் வைத்து படிக்கட்டுக்கள் செதுக்கி செய்திருந்தார்கள். வன்னியில் செயற்பட்ட சில அலுவலகங்களின் முக்கிய வேலைகள் பதுங்கு குழிக்குள்ளேயே நடந்தது. பின்னர் வெறும் தரையில் வரம்பளவுக்கு மண்ணை அணைத்துக் கொண்டு பதுங்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளியில் தலை காட்ட முடியாத வானத்தை பாதுகாக்க முடியாத அந்த நாட்களில் மண்ணுக்கடியில் குழிகளில் வாழ வேண்டியிருந்தது. யுத்தத்தால் அலைக்கப்பட்ட ஒவ்வொருவரும் இறுதிவரை இருபதுக்கு மேற்பட்ட பதுங்குகுழிகளை உயிரைப் பாதுகாப்பதற்காய் வெட்டியிருக்கிறார்கள்.

கேள்வி: கிளிநொச்சி நகர வாழ்க்கை போர் சமயத்திலும் போருக்கு பிந்தைய நிலையிலும் அடைந்திருக்கும் அடையாள மாற்றங்கள் என்ன? இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது?

பதில்: கிளிநொச்சி பல தடவைகள் போருக்கு முகம் கொடுத்த நகரம். அதேவேளை எப்பொழுதும் கனவுகளை உருவாக்கிற நகரம். தமிழ் நகரம் என்கிற வகையில் தமிழ்ப்பெயர்களும் அதன் சிறப்புக்களும் கிளிநொச்சியின் அடையாளம். இன்று அதன் நிலமை மிகவும் கவலை தரும் நிலையிலிருக்கிறது. ஒரு சாமாதான நகரமாக, வெள்ளை நகரமாக, பூக்களின் நகரமாக பிரகாசித்திருந்தது. போரினால் ஏற்பட்ட அழிவுகள் அந்த நரகத்தை தரையுடன் அழித்திருந்தது. அதன் கட்டிடங்களில் எல்லாம் போரின் காயங்கள் ஆறாதிருக்கின்றன. சாம்பலும் சிதைவுகளும் நிறைந்திருக்கின்றன. 1980களின் இறுதியில் கிளிநொச்சி நகரம் தாக்குதல்களுக்கு உட்படும் பொழுது அம்மா மற்றும் அண்ணாவுடன் பதுங்கு குழிகளிலும் மண்சுவர்கரைகளிலும் பதுங்கியிருப்பேன். 1996இல் கிளிநொச்சி நகரத்தை விட்டு சிறுவனாக இடம்பெயர்ந்து அலைந்த பொழுதுதான் கிளிநொச்சி நகரம் பற்றி அதிகமதிகம் கனவுகள் ஏற்பட்டன. கிளிநொச்சிக்கு நாங்கள் திரும்புவோமா என்றெல்லாம் நினைந்திருந்தேன்.

மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பிய பொழுது யுத்தமும் ஆக்கரிமிப்பும் நகரத்தின் கோலத்தைப் பயங்கரமாக்கியிருந்தது. திரும்பும் இடமெல்லாம் நகரம் கோரத்திற்கு உள்ளாகியிருந்தது. மீண்டும் கிளிநொச்சியை மூடியிருந்த அழிவுகள் அழிக்கப்பட்டு வியப்பைத் தரும் நகரமாகப் பிரகாசித்தது. போராளிகளும் மக்களும் கிளிநொச்சி நகரத்தை உயிரூட்டினார்கள். 2002 களில் கிளிநொச்சி சமாதான நகரமாகவும் புன்னகை நகரமாகவும் முக்கியத்துவம் பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசு நடைபெற்ற நிழல் தலைநகரமாகவும் விளங்கியது. சமாதானம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு வந்தவர்களே அந்த நகரத்தின் அழிவுக்கும் கிளிநொச்சி மக்களின் பெயர்வுக்கும் காரணமானவர்கள். அவர்கள் வந்தமர்ந்த கண்ணாடி அறைகளும் கதிரைகளும் தேநீர்க் கோப்பைகளும் குண்டுகள் வீசி அழிக்கப்பட்டன.

கிளிநொச்சி நகரத்தில் சுற்றித்திரிவதைப்போல எனக்கு ஆறுதல் தருகிற ஒரு பொழுதும் இருந்ததில்லை. வன்னி யுத்தம் 2006 இல் தொடங்கிய பொழுதும் அந்த நகரம் விமானத் தாக்குதல்களின் பயங்கரங்களுக்குள்ளும் தனது உயிரை இழக்காமல் கலகலப்பாக இருக்கும். நானும் எனது நண்பர்களும் பதுங்கு குழிகளில் பதுங்கியிருக்கிற சமயங்களைத்தவிர நகரத்தைக் கொண்டாடியபடி திரிவோம். கிளிநொச்சி நகரம் என்றதும் அந்த நகர வாழ்க்கையுடன் இணைந்த எனது நண்பர்கள் பலர் நினைவுக்கு வருகிறார்கள். இன்று அவர்களில் பலர் இல்லை. பல இடங்கள் நண்பர்களற்று வெறித்துப் போயிருக்கிறது. நகரத்தைச் சுற்றும் பொழுதெல்லாம் அந்த ஞாபகங்களே மனதைச் சுற்றுகின்றன.

இன்று சிங்கள பௌத்த நகரத்தைப்போல மாற்றப்படுகிறது. பல இடங்களில் சிங்களப் பெயர்ப்பலகைகள், எங்கும் இராணுவத்தின் விசாலமான முகாம்கள், நெருக்கமான காவரண்கள், துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர், புத்தர்சிலைகள் என்று கிளிநொச்சி அடையாள நெருக்கடிகளை இன்று எதிர்க்கொள்கிறது. நகரின் மத்தியில் பெரும் புத்தவிகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. டிபபோ சந்தி என்கிற இடத்தில் யுத்த வெற்றியை நினைவுகூரவும் ஈழத்தின் தகர்வை வெளிப்படுத்தவும் பெரும் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. வீழ்த்தப்பட்ட தண்ணீர் தாங்கி கிளிநொச்சியின் வீழ்ச்சியின் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஒரு சமதான நகரத்திற்கு இந்தக் கதிதான் நடந்திருக்கிறது. கிளிநொச்சி நகரம் போர் முடிந்த பிறகே திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டிருந்தது. அந்த நகரத்தின் அடையாளங்களை அழித்து புதிய அடையாளங்களை ஏற்படுத்தவே அப்படி அழிக்கப்பட்டிருந்தது.

கேள்வி: இன்றைய ஈழம் என்பதை நாம் போர் முடிந்த பிறகு எஞ்சியிருக்கும் போர்க் கைதிகளாக இருக்கும் மக்களை மட்டும் குறிப்பிடலாமா அல்லது அகதிகளாக உலகம் முழுக்கவும் பரவியிருக்கும் அனைவரையும் அடையாளப்படுத்தளாமா?

பதில்: ஈழத்து மக்கள் போர்க்கைதிகள்தான். வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் அவர்கள் போர்க் கைதிகளாகவே நடத்தப்படுகிறார்கள். ஈழப்போர் முள்ளி வாய்க்கால் பேரழிவுடன் முடிவுபடுத்தப்பட்ட சூழலில் மீட்க முடியாத போர்க் கைதிகளாக ஒட்டுமொத்த ஈழத்து மக்களும் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். தடுப்புமுகாம் என்ற திறந்த வெளிச் சிறைகளில் மக்கள் கைதிகளாக அவல விலங்கு மாட்டியவர்களாகத் தடுத்து வைக்கப்பட்டார்கள். இன்றும் ஒரு லட்சம் மக்கள் அப்படி கைதிகளாக இருக்கிறார்கள். முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் கைதிகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

போர் நடந்த நிலத்திலும் அதற்கு வெளியிலான இராணுவ நிலத்திலும் எமது மக்கள் கைதிகளாக நடத்தப்படுகிறார்கள். அந்த அச்சத்தையும் பதற்றத்தையும் நான் அதிகமதிகமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். வாழ்கிற சூழல் தொடர்ந்தும் பதற்றத்தை உருவாக்குகின்றன. போர் நடந்த வன்னி நிலத்தில் சுகந்திரமாக எதையும் செய்ய முடியாது. எல்லாவற்றுக்கும் இராணுவத்திடம் அனுமதி பெற வேண்டும். எனது வீட்டுக்குப் போவதற்கும் தினமும் நான் இராணுவத்திடம் அனுமதி பெற்றுச் செல்கிறேன். எனது ஊரில் நிலப்பிரச்சினை வெடித்த பொழுது மக்களுடன் நான் பேசியதற்காக அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட கருத்துக்களைப் பேசினேன் என்று என்னை இராணுவம் எச்சரிப்புடன் தேடியது.

போருக்குப் பிந்திய சூழல் என்பது நிலத்தைப் பொறுத்தவரை நடமாடுகிற பேசுகிற உறவாடுகிற சுகந்திரம் இல்லாத போர்க் கைதிகளின் சூழலாகவே விரிந்திருக்கிறது. வடக்கு கிழக்கு என்கிற ஈழம் முழுவதிலும் இந்த நிலைமை நீடிக்கிறது. ஈழம் என்கிற வகையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் அலைச்சல், எதிர்ப்பார்ப்பு, அர்ப்பணிப்பு, கனவு, உழைப்பு, தியாகம் என்பன மிகவும் அவலமானது. அவர்கள் போர் நிலத்திலிருந்து வாழ முடியாமல் நெருக்கடிகளால் இடம்பெயர்ந்து கடல் கடந்து புலம்பெயர்ந்தவர்கள். ஈழப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டத்தின் தோல்வி அல்லது சிதைப்பு என்பது புலம்பெயர்ந்த தமிழர்களை உலகத்தின் நிரந்தர அகதிகளாக்கியிருக்கிறது. ஈழத்துயரங்களில் நாடற்று அலையும் எங்கள் மக்களின் துயரம் என்பது நிலத்தை பிரிந்த, வேரறுந்த வலியைக் கொண்டிருக்கிறது.

யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டது என்றும் அய்க்கிய இலங்கைத் திரு நாட்டுக்கு வாருங்கள் என்றும் ஜனாதிபதி மகிந்த அழைக்கிறார். எங்கள் நிலைமையை நாளும் பொழுதும் பார்ப்பவர்களுக்கு இங்கு என்ன நிலமை இருக்கிறது என்பது புரியும். இன்று தாயகத் தமிழர்களின் அசைக்க முடியாத சக்தியாக உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் பலத்தை அழிக்கவே அப்படி அழைப்பு விடுக்கப்படுகிறது. நிலத்திற்காகவும் நிலத்திலிருக்கும் மக்களுக்காகவும் நடக்கிற புலப்போராட்டம் என்பது அடக்கி வைத்திருக்கும் நிலத்தின் வெளிப்பாடுதான். ஈழம் என்கிற பொழுது தமிழகத்து மக்கள் முதல் நாடற்ற ஒடுக்கப்படுகிற ஈழம்மீது பற்றுக்கொண்ட அனைத்துத் தமிழர்களையும் இணைத்தே பார்க்கிறேன். அனைவரிடத்திலும் ஈழம் பற்றிய கனவு தகித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கொடுமையான அழிவுகளால் எச்சரிக்கப்பட்ட முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் உலகத் தமிழர்களின் குரல் இப்படி விரிந்த தளங்களிலிருந்தே ஒலிக்கிறது.

கேள்வி: தற்சமயம் தாய் தங்கையுடன் கிளிநொச்சியில் மீள்குடியேற்றம் செய்துள்ளதாக அறிகிறேன். இன்னமும் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் உங்கள் மக்களுக்கு மீள்குடியேற்றம் பற்றி சொல்லி வருகிறீர்கள். மீள்குடியேற்றத்தின் சாத்தியங்கள் எப்படியுள்ளன? இலங்கை அரசு தமிழர்களின் மீள்குடியேற்றத்தை எப்படிக் கையாளுகிறது? அரசு ரீதியில் தடைகள், கட்டுபாடுகள் ஏதேனும் உண்டா?

பதில்: மீள்குடியேற்றம் என்பது மிகவும் துயரத்தைத் தருகிறது. யுத்தத்தின் வாயிலாக எமது மக்கள் எப்படி வதைக்கப்பட்டார்களோ அப்படியே மீள்குடியேற்றத்தின் பொழுதும் வதைக்கப்படுகிறார்கள். தடுப்புமுகாம் எப்படி மூடுண்ட சிறைச்சாலைகளாகக் கட்டுப்பாடுகளைச் செலுத்தி உணர்வுகளைக் காயப்படுத்தினவோ அப்படியே மீள்குடியேற்றப்பட்ட நிலமும் காயத்திற்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதைகளைச் சுமக்கிறது. வன்னியில் நடக்கிற மீள்குடியேற்றத்தின் விசித்திரங்களைப் பற்றி பல பதிவுகளை உள்நாட்டிலும் வெளிநாட்டு ஊடகங்களிலும் பதிவு செய்து வருகிறேன்.

வன்னியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களும் மீள்குடியேற்றத்தின் பொழுது எப்படிக் கையாளப்படுகிறது என்பது துயர வித்தியாசங்களைக் கொண்டது. ஒன்றுமற்று அழிந்த நிலத்தில் மீள வாழுகின்ற ஆசையுடன் வருகின்ற மக்கள்தான் துன்புறுத்தப்படுகிறார்கள். தடுப்பு முகாமிலிருந்து ஏற்றியதோடு பல விசாரணைகளையும் பதிவுகளையும் புகைப்படப் பிடிப்புக்களையும் மேற்கொள்வார்கள். பின்னர் தெளிவாகப் பதிவு செய்து இலக்கத்தகடுகள் கட்டப்பட்டு போர்க்கைதிகள் போல சொந்த மண்ணில் விடப்படுகிறார்கள். தறப்பாள் கூடார நிலமாக மீள்குடியேற்ற நடவடிக்கை எமது நிலத்தை மாற்றிவிட்டது. சரியான நிவாரணங்கள் எதுவும் இல்லாமல் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்கள் மீள நிலத்தில் விடப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு மீள்குடியேறியாகிய என்னை மீள்குடியேற்றம் பெரும் விரக்திக்கும் அவலத்திற்கும் தள்ளியிருக்கிறது. எனது அம்மாவும் தங்கையையும் ஒரு ஆண்டுவரை தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு சொந்த நிலத்திற்கு மீள்குடியேற்றத்தில் அனுப்பட்டவர்கள். என்னையும் அம்மாவையும் தங்கையையும் ஒன்றாக நிறுத்தி இராணுவப் பதிவிலக்கத்தைக் கைகளில் பிடிக்கச்சொல்லி புகைப்படம் எடுத்தார்கள். பின்னர் தறப்பாள் ஒன்றைத் தந்து கூடாரம் அமைத்திருக்கும்படி எங்கள் காணிக்குக் கொண்டு வந்து விட்டார்கள். தறப்பாள் கூடாரம் ஒன்றில்தான் வாழ்க்கை கழிகிறது. எங்களுக்கு பன்னிரண்டு தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அழிந்த வீட்டை கட்டித் தருவார்கள் என்று காத்திருந்து காத்திருந்து வெயிலிலும் மழையிலும் சித்திரவதைப்படுகிறோம். வீட்டை மீளக் கட்டித்தருவார்கள் என்று எதிர்பார்த்த தருணத்தில் எங்கள் காணி நிலங்களை அபகரிக்க நின்றார்கள். நிலப்பிரச்சினை பெரும் போராட்டமாகவே எங்கள் கிராமத்தில் வெடித்தது. அதனால் எங்கள் மக்கள் அடைந்த அவலம் மிகவும் கொடுமையானது.

இன்றுவரை எங்கள் கிராம மக்கள் எல்லோரும் தறப்பாள் கூடாரத்திலேயே வாழ்கிறார்கள். கிளிநொச்சி நகரத்தின் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கிற இந்த நடவடிக்கையை மீள்குடியேற்றத்திற்கு ஒரு உதாரணமாக அதை சாட்சியாக நின்று குறிப்பிட விரும்புகிறேன். அரசு மீள்குடியேற்றம் என்று சொல்லிக் கொண்டு மக்களின் காணிநிலங்களை அபகரிக்கிறது. புத்தர் சிலைகளை பெருக்குகிறது. இராணுவ முகாம்களையும் காவலரண்களையும் பெருக்குகிறது. எங்கள் நிலத்தை வந்து பாருங்கள்! என்ன குடியேறியிருக்கிறது என்று. இராணுவ நினைவுத்தூபிகளும் இராணுவங்களும்தான் குடியேறியிருக்கின்றன. மக்களின் மீள்குடியேற்றம் தறப்பாள் கூடாரங்களில் அரசாங்கத்தின் வெற்றிகர நடவடிக்கையாக நடத்தப்படுகிறது.

மீள்குடியேற்றம் பற்றிய தகவல்களையும் அந்த மக்களின் நிலவரங்களை அறிவதிலும் வெளியிடுவதிலும் தடைகள் உள்ளன. உறவினர்கள் அல்லது புதியவர்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்கள் இராணுவத்தின் அனுமதி பெற்ற பின்னரே தங்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சாப்பாட்டுப் பொதியைக் கொடுப்பதாக இருந்தாலும் அதற்கு இராணுவத்தின் அனுமதி பெற வேண்டும். அல்லது அதையும் இராணுவம் வந்து தடுத்து நிறுத்தி விடும். அதற்காக விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கும்.

கேள்வி: புலிகளின் தமிழீழ தொலைக்காட்சியில் பணியாற்றியிருப்பதாக அறிகிறேன். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு ஊடகவியலளராக புலிகளுடன் இணைந்து எப்படிப் பணியாற்றினீர்கள்? என்ன துறையில் பணியாற்றினீர்கள்?

பதில்: நான் முதன் முதலில் தேசியத் தொலைக்காட்சி என்ற ஊடகத்திலேயே பணியாற்றியிருக்கிறேன். எனக்கிருந்த எழுத்து ஈடுபாடுகளின் நிமித்தம் அந்தத் தொலைக்காட்சியில் பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. செய்மதி ஊடக அந்தத் தொலைக்காட்சி அய்ரோப்பிய நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. போர் அவலங்களையும் மக்களின் இடப்பெயர்வுகளையும் மக்களற்ற கிராமங்களையும் போராளிகளின் சமர்களையும் பதிவு செய்து வீடியோ சஞ்சிகையை மாதம் தோறும் வெளியிட்டு வந்த நிதர்சனம் என்கிற பிரிவு ஒரு தொலைக்காட்சிச் சேவையை நடத்தும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தது.

ஊடகம் தொடர்பிலும் காட்சி ஊடகமான தொலைக்காட்சி தொடர்பிலும் முன் அனுபவங்களும் பயிற்சிகளும் இல்லாத நிலையில் அங்குப் பணியாற்றி இணைந்த பொழுது பெற்ற அனுபவங்களும் பயிற்சிகளும் எனக்கு பலமான தளத்தைத் தந்தது. அங்கு நான் பிரதிகளை எழுதுகிற பங்கைத் தொடக்கத்தில் வகித்த பொழுதும் பின்னர் இயக்கம், வீடியோ, படத்தொகுப்பு போன்ற விடயங்களையும் கற்றுக் கொண்டேன். வன்னியில் இருந்த சூழலில் அதுவரை இருந்த சூழலில் அப்படி ஒரு அனுபவம் எனக்கு கிடைத்ததைச் சிறந்த வாய்ப்பாகக் கருதுகிறேன். மிக இளம் வயதில் பாடசாலைப் படிப்பில் இடைவிலகியவர்கள்கூட தொலைக்காட்சித்துறையில் மிகுந்த ஆளுமையைக் கொண்டவர்களாக வளர்ந்தார்கள். வடக்கு கிழக்கை சேர்ந்த பல கலைஞர்கள் பணியாற்றினார்கள்.

நான் ‘அறிவுத்தேடல்’ என்ற கல்வி நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தேன். அந்த நிகழ்ச்சி வன்னியின் பாடசாலைகள் பற்றிய விடயங்களை ஆவணப்படுத்துவதுடன் போர்ச் சூழலில் இயங்கும் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் மனப்பதிவுகள், நெருக்கடிகள், போராட்டங்களைப் பதிவு செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டது. குறிப்பாகப் பதுங்கு குழிகளில் கல்வி கற்கிற அச்சமான காலத்தில் மாணவர்களின் கல்வி குறித்த நிலைகளையும் ஆர்வத்தையும் நெருக்கடிகளையும் அது வெளிப்படுத்தியிருந்தது. பாடசாலைகளின் வரலாற்றை ஆவணப்படுத்துவதுடன் போர்ச் சூழலில் இயங்கும் பாடசாலை மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குரிய கருத்துக்களும் பகிரப்பட்டன. அத்தோடு கணினி, சுயதொழிற் பயிற்சிக் கல்வி போன்ற வௌவ்வேறு துறைகள் பற்றியும் தயாரிக்கப்பட்டன.

அந்தத் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றிய போராளிக் கலைஞர்கள், படைப்பாளிகள் பலர் கடந்த காலம் போர்க்களங்களில் போரிட்டு அங்கங்களை இழந்து நலிவுற்றவர்கள். காட்சியூடகத் துறையில் அவர்களின் ஆளுமை மிகவும் பிரமிப்பாக இருந்தது. அவர்களிடம் பெற்ற அனுபவங்கள் பயிற்சிகள் எனக்கு மிகப் பெரியளவில் உதவின. நமது போராட்டச் சூழலில் அவசியமான துறையில் பணியாற்றுவதையும் உணர்ந்தேன். அங்கு இணைந்து பணியாற்றிய பல போராளிகள் மறக்க முடியாதவர்கள். எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

எங்கள் ஒவ்வொருவரது சுய தளங்களிலிருந்தும் அடிப்படைகளிலிருந்தும் தேசிய காட்சி ஊடகம் ஒன்று எதிர்பார்க்கிற படைப்புக்களை அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருந்த எனக்கு மாணவர்களின் பிரச்சினைகள் அதை வெளிக் கொணரும் தன்மைகளில் ஈடுபாடு இருக்கலாம் என்ற அடிப்படையில் என்னை முக்கியமான காலத்தின் பதிவுகளைச் செய்கிற விவரணப் படைப்பாக்கத்துறையில் பணியாற்ற இடமளித்தார்கள். அந்த வீடியோப் பிரதிகள் எல்லாமே யுத்தத்தில் அழிந்து விட்டன என்பதுதான் தாங்க முடியாத சோகம்.

கேள்வி: இன்று ஈழத்து மக்கள் எதிர்க்கொள்ளும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக எழுதி வருகிறீர்கள். இந்தப் பிரச்சனையைப் போர்க் காலத்திலும் போருக்குப் பிந்தைய இந்தக் காலக் கட்டத்திலும் உங்கள் பார்வையிலிருந்து எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்? அவர்களின் வாழ்விலும் போராட்டத்திலும் இந்த நிலப் பிரச்சனைகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்ன?

பதில்: நிலக் கொள்ளைத்தனம் மிக்க போரை நடத்திய இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்தின்மீதும் தனது குறியை வைத்திருக்கிறது. போரால் முழு நிலத்தையும் சுற்றி வளைத்துள்ள பொழுதும் நிலத்தின் அடையாளங்களை அழித்து அதனையும் அதன் அதிகாரத்தையும் கையகப்படுத்த துடித்துக் கொண்டு சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. நில விடயத்தில் எமது மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது முக்கியமான விடயம் என்று கருதுகிறேன். நிலத்திற்காகப் போராடி வருகிற மக்கள் அந்த நிலத்தின்மீது எத்தகைய பிரக்ஞையை வைத்திருக்கிறார்கள் என்பதும் இன்று அரசுக்கு புரியவைக்கப்படுகிறது.

வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களில் நிலங்களைக் கொள்ளையடிக்கிற திட்டங்களைப் பல விதமாக அரசு திணிக்கிறது. அதற்குரிய வகையில் நடவடிக்கைகளையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. கிழக்கில் திருமலை நிலம் என்கிற தமிழர்களின் தலைநிலம் பல கிராமங்களையும் பிரதேசங்களையும் இன்று சிங்களவர்களிடம் இழந்திருக்கிறது. மட்டக்களப்பு, வன்னி, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற மாவட்டங்களிலும் இந்த அபாயங்கள் தலைமுறைகளை அச்சுறுத்துகின்றன.

வன்னியில் நிலங்களை ஆக்கிரமிக்க அரசின் சட்டங்களும் தந்திரங்களும் முனைந்த பொழுது அது தொடர்பில் மக்களின் வாக்குமூலங்களையும் கதைகளையும் தொடர்ச்சியாக எழுதியிருந்தேன். அவை முழுக்க முழுக்க மக்களிடமிருந்து வெளிப்பட்ட கதைகளும் போராட்டமும்தான். அதை அப்படியே ஊடகங்களில் வெளியிட்டு மக்களின் நிலவரங்களை அறிய வைக்க வேண்டியது ஒரு ஊடகவியலாளனின் கடமையாகிறது. அதற்காகப் பல சவால்களையும் நான் கடக்க வேண்டியிருந்தது.

சாந்தபுரம், இந்துபுரம், வசந்தநகர், பொன்னகர், இரத்தினபுரம் போன்ற பல கிராமங்கள் நிலக்கொள்ளைக்காகக் குறி வைக்கப்படிருந்த நிலங்கள் இன்று மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. அதற்குப் பிரக்ஞையுடன் மக்கள் போராடியதே காரணம். நம்பிக்கையும் காத்திருப்பும் எதிர்பார்ப்பும் மிக்க அந்தப் பிரக்ஞையை வெளிக் கொணர்வதே எனது பணியாக இருந்தது. குறித்த விடயத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள் மத்தியில் பல ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மக்களின் நிலவரங்களை வெளிக் கொணர்ந்திருந்தன என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

நிலம் வாழ்வுக்கு அடிப்படையானது. நிலமற்ற வாழ்வு எத்தகைய கொடியது என்பதை நிலம் வாழும் உயிரினங்கள் எல்லாமே புரிந்து கொள்ளும். ஈழப்போராட்டத்தில் எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என்கிற வலிமையான கோரிக்கை அடங்கியிருக்கிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் வெறும் நிலத்தை நம்பி வாழ வேண்டிய குழந்தைகளுக்காகவே, வாழ வேண்டிய தலைமுறைகளுக்காகவே மக்கள் திரும்பினார்கள். அனுபவத்தையும நிலத்தையும்தான் இன்று தலைமுறைகளுக்காகச் சேகரிக்கிறோம். அந்த நிலத்தை கொள்ளையடித்து ஆக்கிரமித்து அதிகாரக் குறியைத் திணிக்கும் பொழுது போராட வேண்டியது நிலத்து மக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகிறது. நிலத்தில் கையை வைக்கும் பொழுது அது பிரக்ஞை மிக்க பெரிய போராட்டமாக எழும்புகிறது.

கேள்வி: இத்தனை வன்மமான போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்த உங்களுக்குப் புகைப்படத்துறையில் ஆர்வம் வந்ததற்குப் பின்னணியில் போர்ச்சூழல்தான் காரணமாக இருக்கிறதா? இரத்தமும் சதையும் மரணத்தின் நீண்ட வரலாறையும் கொண்ட வன்னி நிலப்பரப்பைப் புகைப்படங்களாக்கும்போது நீங்கள் அடைந்த மனநிலை என்ன? மரணித்த உயிர்களின் சோகத்தையும் போரின் உக்கிரத்தையும் புகைப்படங்களின் தொகுப்பு மூலம் காட்ட முடியும் என்கிற புரிதல் எப்படி வந்தது?

பதில்: புகைப்படங்கள் துயரங்களை அப்படியே பதிவாக்குகிற படைப்பு. புகைப்படங்களைப் பிடிக்கிற ஈடுபாடு, தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய பொழுதே ஏற்பட்டது. அப்பொழுது விவரணப்படங்களை எடுக்கச் செல்லும் பொழுது பிடிக்கப்பட்ட படங்கள் யுத்தத்தில் அழிந்து விட்டன. நான் யுத்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை அதற்காக அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளைப் புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இந்தத் துறையில் ஈடுபடுகிறேன். சாதாரணமான டிஜிட்டல் கேமரா ஒன்றுதான் என்னிடம் இருக்கிறது. அதனை வைத்து இயற்கை ஒளியையும் இருட்டையும் சாதகமாக்கி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறேன். மொழிகளைக் கடந்து வாழ்க்கைச் சித்திரங்களைக் காவிச் செல்கிற ஊடகம் என்கிற வகையில் புகைப்பட ஊடகத்தின் வாயிலாக மக்களின் பிரச்சனைகள் சென்றடையும் பரப்பை விரிவடைய வைக்கலாம்.

சிறிய வயதிலிருந்து வாழ்க்கையில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களைச் சேகரித்து வந்துள்ளேன். முக்கியமாக அண்ணா வீரமரணம் எய்திய பொழுதில் அவன் வளர்ந்த பிறகு எடுத்த புகைப்படங்கள் எங்களிடம் இருக்கவில்லை. எங்கோ ஒரு ஸ்டுடியோவில் அண்ணா புகைப்படம் பிடித்ததை அறிந்து அங்கு போய் புகைப்படச் சுருள்களை பல நாட்களாகத் தேடி அந்தப் புகைப்படங்களை மீட்டிருந்தேன். அந்தச் சுருள்களைக் கழுவி அண்ணாவின் நிறைய புகைப்படங்களைச் சேகரித்திருந்தேன்.

அண்ணாவின் குழந்தைப் பருவம் முதல் அவன் வீரமரணம் எய்தும் வரையான படங்கள், அடிக்கடி பார்த்துக்கொள்ளும் எனது பள்ளிப்படங்கள் என்று பல புகைப்படங்களை யுத்தத்தில் இழந்தது தீராத சோகத்தைத் தருகிறது. அண்ணாவை இழந்த பொழுது ஏற்பட்ட அதே வலி அவனின் புகைப்படத்தை இழந்த பொழுதும் ஏறபட்டது. அண்ணாவின் முகத்தை அழிவுக்குக் கொடுத்து விட்டோம். இனி அந்த முகத்தை எப்படிப் பார்க்க முடியும்? எங்களிடமிருந்த சகல புகைப்படங்களும் அழிந்து விட்டன. இதைப்போல பலரின் வீடுகளில் நடந்திருக்கிறது.

புகைப்படங்கள் முக்கியமான ஆவணங்கள். ஒரு சந்தர்ப்பம் அல்லது காட்சி புகைப்படமாகிற பொழுதே அது மீண்டும் நிகழ்கிற சாத்தியத்தை இழந்து விடுகிறது. ஒவ்வொரு நெருக்கடிகளும் துயரங்களும் அப்படியே பதிவு செய்து அவற்றை உடனடியான நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் காலத்தைப் படிக்கும் பதிவாக்கும் சித்திரங்களாக ஆவணப்படுத்துவதற்கும் அவசியமானது. ஈழத்து மக்கள்மீது நடத்தப்பட்ட கொடும் போரும் அதற்குப் பிறகான தடுப்புச்சிறைகளும் அதற்குப் பிறகான வெறும் நிலத்தில் மீள் குடியேற்ற வாழ்க்கை துயரங்களும் ஈழப்போராட்ட வரலாற்றில் பதிவாக்கப்பட வேண்டிய முக்கிய ஆவணங்கள் என்ற வகையில் புகைப்படத்துறையை அவசியமானதாகக் கருதுகிறேன்.

கேள்வி: போர்க்காலத்தில் புகைப்படக்காரராக நீங்கள் எதிர்க்கொண்ட ஆபத்தான, சவாலான ஒரு பயணத்தைக் குறிப்பிடுங்கள்?

பதில் : புகைப்பட ஊடகத்துறையில் வாயிலாக மக்களின் பிரச்சனைகளையும் வாழ்க்கை நெருக்கடிகளையும் வெளிக்கொணரும் பொழுது அது மிகுந்த தாக்கத்தை எளிதாக ஏற்படுத்துகிறது. நான் வன்னி மக்களின் நெருக்கடிகள் இழப்புக்கள் குறித்து பிடித்த புகைப்படங்கள் பல உள்நாட்டுப் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. மக்களின் பிரச்சனைகளை அரசுக்கும் உள்நாட்டு அதிகாரிகளுக்கும் இடித்துரைக்க வேண்டிய அவசியத்தில் பிரச்சினைகளை எதிர் கொண்ட நிலங்களுக்குச் சென்று புகைப்படங்களைப் பிடித்து வெளியிட்டிருந்தேன். முக்கியமாகத் தினக்குரல் என்ற உள்நாட்டுப் பத்திரிகை ஒன்று எனது புகைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பத்திரிகையின் முன் பக்கத்தில் பிரசுரித்திருந்தது. அவற்றை பிரிசுரித்து பிரச்சனைகளையும் மக்களின் நிலவரங்களையும் கவனப்படுத்தியிருந்தது. 'இருக்கிறோம்' என்ற பத்திரிகை தொடர்ச்சியாக எனது புகைப்படங்களை முகப்புப்படங்களாக வெளியிட்டு வருகின்றது.

படங்கள் சார்பான குறிப்புகளும் அந்தப் புகைப்படத்தில் வெளியாகியிருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடிகள் நிலைமைகளை அந்தப் புகைப்படங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தன என்று கருதுகிறேன். நிலப்பிரச்சினைகளையும் நிவாரணப் பிரச்சினைகளையும் எதிர் கொண்ட மக்கள், போரின் பின்னரான நிலத்தில் குழந்தைகளின் வாழ்க்கை, அவர்களின் மனநிலைகள், பாடசாலைகளின் நிலைமைகள், மாணவர்களின் நிலைமைகள் முதலியவற்றை சித்திரிக்கின்ற புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறேன். உள்நாட்டுப் பத்திரிகைகள் பலவும் எனது புகைப்படங்களை வெளியிட்டிருந்தன.

வன்னியில் போர் நடந்த இடங்கள் எல்லாமே கடுமையான இராணுவக் கண்காணிப்பில் இருக்கின்றன. அந்த இடங்களில் நாம் செய்தி சேகரிக்கவோ புகைப்படங்களைப் பிடிக்கவோ பாதுகாப்பு அமைச்சால் அனுமதி இல்லை. செய்திகளைச் சேகரிக்க ஏதோ ஒரு வகையில் மக்களுடன் உரையாடி விடலாம். புகைப்படம் பிடிப்பதுதான் மிகுந்த நெருக்கடி மிக்கது. எனது உயிரை பணையமாக வைத்தே பல படங்கள் பிடிக்கப்பட்டன. மறைந்தும் அச்சமான சூழலிலும்தான் பல புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. ஒவ்வொரு புகைப்படங்களின் பின்னாலும் இப்படி நிறையக் கதைகள் உள்ளன.

நெடுங்காலப் போரால் பாதிக்கப்பட்ட கடற்கரை பிரதேசமான வடமராட்சிக் கிழக்குப் பகுதிக்கு சென்று அந்தக் கடல் நிலத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று கருதி அந்தப் பகுதிக்குச் சென்று புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இராணுவ உளவாளிகள் வந்து என்னையும் சில ஊடக மாணவர்களையும் கடுமையாக எச்சரித்து விசாரித்தார்கள். அன்றைய நாள் முழுவதும் நாங்கள் தடுத்து வைக்கப்பட்டதோடு அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் முழுவதும் அழிக்கப்பட்டது.

இதைப்போல கிளிநொச்சி நகரத்தில் உள்ள ஓர் ஆற்றை படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது இராணுவம் முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது. புகைப்படம் பிடிக்கப்பட்டதால் தங்களின் முகாமுக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டு என்னைப் பற்றிய சகல விபரங்களைப் பதிவு செய்தது. இதைப்போல கிளிநொச்சி நகரத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுது விசாரணை செய்த இராணுவம் என்னைப் பயங்கரவாதி என்று குறிப்பிட்டு எச்சரித்தது. இவர்களுக்கு மிக உறுதியாக ‘இது எனது நகரம்’ என்று மட்டும் குறிப்பிட்டிருந்தேன்.

வன்னி மக்களின் உண்மையான நிலவரங்கள் புகைப்படங்களாக வெளியிடப்பட்டு அரசுக்கும் படைகளுக்கும் அழுத்தங்கள் ஏற்படும் என்று படைத்தரப்பினர் அஞ்சியிருந்தார்கள். அதனால் மக்களின் வாழ்வு, ஊடகங்களில் கசியாத வகையில் கண்காணிக்க அரசு கட்டளைகளை இட்டிருக்கிறது. பதற்றங்களையும் பரபரப்புக்களையும்விட, புகைப்படங்களின் வாயிலாகப் பதிவு செய்வதுதான் முக்கியமான வேலை என்று நான் கருதுகிறேன். அதனால் பல்வேறு சவால்களின் மத்தியிலும் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.

கேள்வி : போர்சூழலில் வாழும் குழந்தைகளின் உலகை இன்றைய உலக சினிமாக்கள் தீவிரமான கலைத்தன்மையுடன் காட்டி வருகிறார்கள். இது போன்ற இலங்கை போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வைப் பற்றி ஆவணப்படமோ அல்லது குறும்படமோ செய்யப்பட்டுள்ளதா? உங்களின் ஆவணப்படங்கள் எதைப் பற்றியது?

பதில் : ஈழத்துச் சூழலில் குழந்தைகளின் ஏக்கங்களை பதிவாக்கிற ஒரு புகைப்படமும்கூட சிறந்த ஆவணம்தான். உலக சினிமா அளவுக்கு தொழிநுட்பங்கள் சார்ந்த படங்கள் எங்களிடம் இல்லாத பொழுதும் விடுதலைப் புலிகளின் 'நிதர்சனம்' என்கிற திரைப்படப் படைப்பாக்க பிரிவு முக்கிமான பல குறும்படங்களை உருவாக்கியிருக்கிறது. அந்தப் படங்கள் குழந்தைகளின் போர்க்கால ஏக்கங்களை நெருக்கடிகளை மிக இயல்பாக யதார்த்தமாக பதிவாக்கியுள்ளன.

தினமும் விமானத்தாக்குதலை கண்டு அஞ்சி ஒழியும் ஒரு குழந்தை ஒரு முறை விமானம் தாக்குதல் நடத்த வந்த பொழுது விமானத்தை நோக்கி தடியால் சுடுகிறது. சமநேரத்தில் போராளிகள் அந்த விமானத்தை தாக்க விமானம் வீழ்ந்து போகிறது. அதைப் பார்த்த குழந்தை தானே விமானத்தைத் தாக்கியதாக ஆறுதல் படுகிறது. இது மறைந்த இயக்குனர் பொ.தாசனின் படம். இன்னொரு குறும்படத்தில் பழங்களைப் பொறுக்கிற இடத்தில் விமானம் தாக்கியதால் தங்கையை இழந்த அண்ணனான சிறுவன் ஒருவன் விமானங்களை நோக்கி கல்லை எறிகிறான். ‘1996’ என்ற இந்தப் படத்திலும் இடம்பெயர்ந்த சூழலில் குழந்தை பாத்திரத்தின் உணர்வலைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தை இயக்குனர் மகேந்திரனும் முல்லை யேசுதாசனும் எடுத்திருந்தார்கள்.

இந்தக் குறும்படங்களின் வீடியோப் பிரதிகள் பல இன்று கிடைக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஈழப் போரின் இறுதிநாட்கள் வரை இந்தப் படப்பிரதிகள் சேகரிப்பட்டிருந்தன. திரைப்படம் மற்றும் தொலைக்காடசித் துறையில் அதன் ஆவணத்தன்மை கருதி விடுதலைப் புலிகள் முக்கியமான கவனத்தைச் செலுத்தியிருந்தார்கள். சில படங்களை இணையங்களில் இப்பொழுது பார்க்கலாம். பெரும்பாலான ஆவணப்படங்களிலும் விவரணப்படங்களிலும் குறும்படங்களிலும் முழுநீளப்படங்களிலும் குழந்தைகளின் சூழல்கள் மனநிலைகள் மிக யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தம் பற்றிய சோமிதரனின் முல்லைத்தீவு சகா என்ற ஆவணப்படம் ஈழம் பற்றிய முக்கிமான பதிவு எனக் கருதுகிறேன்.

நான் வன்னியில் உள்ள பாடசாலைகள் அந்தப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நெருக்கடிகள் பற்றி பல விவரணப் படங்களை எடுத்திருந்தேன். முக்கியமாகப் போர்ச் சூழலில் பாடசாலைகளும் மாணவர்களும்தான் அந்தப்படங்களின் விடயங்களாக இருந்தன. ‘செஞ்சோலை’ ஆவணப்படம் 25 நிமிடத்தை கொண்டது. செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட மாணவிகள் தொடர்பான ஆவணப்படம் ஒரு முக்கிமான பதிவு என்று நினைக்கிறேன். வசதிகள் வளங்கள் போதாத போர்ச்சூழலில் அந்தப் படத்தை ஒரு நாளிலேயே படப்பிடிப்பு செய்திருந்தேன். வயது குறைந்த கலைஞர்களும் போராளிக் கலைஞர்களும் அதில் பங்களித்திருக்கிறார்கள். தற்போது ‘அக்கராயன்’ என்று ஒரு விவரணப்படத்தை மீள்குடியேற்ற சூழல் பற்றி செய்திருந்தேன். வளங்கள் வசதிகள் அற்ற சூழலில் அந்தப் பதிவு செய்யப்பட்டது.

கேள்வி: ஊடக சுதந்திரமற்ற இலங்கையின் ஆக்கிரமிப்பு சூழலில், சொந்த ஊடகவியாளர்களையே கொன்று குவிக்கும் இலங்கை அரசின் பாசிச அணுகுமுறைக்கு முன், புகைப்படங்கள், நேரடியாகக் களத்தில் இறங்கி தரவுகளைத் திரட்டி பதிவுகளை எழுதுதல் என இலங்கையின் பிந்தைய போர்ச்சூழல் நிலமையை அம்பலப்படுத்துவதில் தீவிரமாக இயங்கி வரும் நீங்கள், களத்தில் இருக்கும்போது எதிர்நோக்கும் ஆபத்துகள், பிரச்சனைகள், சவால்களைப் பற்றி சொல்லுங்கள்.

பதில் : நாங்கள் எதை விரும்புகிறோமோ அதைப் பேசமுடியாத சூழலை உருவாக்குவதன் மூலம் நாங்கள் விரும்புவதை மறுக்கிறார்கள். மக்களின் உண்மை வாழ்க்கை நெருக்கடிகளை மறைத்து அதை அரசியலாக்கி தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். என்னுடைய பெரும்பாலான பதிவுகள் மக்கள் சொன்ன கதைகளை அப்படியே ஊடகங்களுக்கு கொண்டு வந்திருக்கின்றன. எனது அனுபவங்களையும் நான் பார்த்த வாழ்வுக் காட்சிகளையும் எனது அபிப்பிராயங்களையும் தவிர முக்கியமாகக் குரலை எழுப்பி நிற்கும் கருத்துக்கள் மக்களினுடைய வாக்குமூலங்கள்தான். மக்கள் எப்படி வாழ்கிறார்கள், மக்கள் எதைக் கோருகிறார்கள் என்பதைதான் நான் எழுதியிருக்கிறேன்.

முக்கியமாக நிலப்பிரச்சினை சார்ந்த பதிவுகளை அறிக்கையிடும் பொழுது அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன. பொன்னகார் கிராமத்தில் உள்ள காணி நிலங்களை அபகரிக்க நின்ற பொழுது அதைக்குறித்து ‘நிலத்திற்காய் போராடும் பொன்னகர் மக்கள்’ என்றும் ‘எங்கள் பிள்ளைகளுக்கு நிலத்திற்கு எங்கே சொல்வோம்’ என்றும் மக்களின் வார்த்தைகளைத் தலைப்பிட்டும் பதிவுகளை எழுதியிருந்தேன். நன்கு திட்டமிட்ட வகையில் பொன்னகர் நிலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் நடந்த பொழுது என்னைப் போன்ற ஊடகவியலாளர்கள் மிகவும் கவனிக்கப்பட்டார்கள்.

பொன்னகர் மக்களின் தொடர்ச்சியான அவலத்தை வெளிக் கொணர்ந்ததிற்காக ஆளுநரின் ஆட்கள் என்னை வந்து தேடுகிறார்கள் என மக்கள் சொன்னார்கள். என்னை எங்கே சந்திக்கலாம் என்றும் எனது தொலைபேசி இலக்கம் முகவரி போன்றவற்றை தரவேண்டும்; என்றும் கேட்டிருக்கிறார்கள். ஒரு சில மாதங்களாக என்னை அந்தக் கிராமத்திற்கு வராதீர்கள் ஆபத்து உள்ளது என்று மக்கள் தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் அந்த மக்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து ஏதாவது ஒரு வழியில் சென்று வெளிக் கொணர்ந்திருந்தேன்.

அதைப்போல இரத்தினபுரம் என்ற எனது கிராமத்தில் நிலப்பிரச்சினை வந்த பொழுது அதைக் குறித்து செய்திகளைப் படங்களை வெளியிட்டமைக்காக என்னை வந்து தேடினார்கள். ‘மழையும் வெயிலும் கொல்லும் மக்கள்’ என்று மக்களின் உண்மையான அவலத்தைத் தொடர்ந்தும் எழுதினேன். அதனால் சில நாட்கள் வீட்டுக்குச் செல்ல முடியாதிருந்தது. ஒழிந்து மறைந்துத்தான் வீட்டுக்குப் போனேன். அரசு நிலப் பிரச்சினைகளை உருவாக்கியவுடன் அது பலரின் அரசியல் வியாபாரத் தளமாகிறது. அதனால் மக்களின் குரல்களைப் பதிவாக்கி வெளியிடும் குற்றங்களுக்காக அரசு, இராணுவம், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என்று பலரால் அச்சுறுத்தல்களும் விசாரிப்புக்களும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்படுகின்றன.

கேள்வி : பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள் என குழந்தைகளின் துயரங்கள் ஒரு பக்கமும், கிணற்றினுள் இறங்கிய கிராமம், ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம் எனத் தனிமையைத் தின்று தீர்க்கும் போரின் உக்கிரம் ஒரு பக்கமும் உங்கள் கவிதைகளில் தொடர்ந்து இடம்பெறுவதைக் கவனித்து வருகிறேன். குழந்தைகள் வதை செய்யப்படும் இடத்தில்தான் அடர்த்தியான ஒரு தனிமையும் போரின் உக்கிரமும் தொடங்குவதாகப் புரிந்துகொள்கிறேன். இந்தக் கவிதைகள் எழுத நேர்ந்த தருணங்களை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில் : போர் குழந்தைகளைத்தான் உக்கிரமான சூழலுக்குள் தள்ளுகிறது. பொதிகளைச் சுமந்து கொண்டு பதுங்கு குழிகளின்வழி நகர்ந்து கொண்டு காடு மேடுகளெல்லாம் அலைகிறார்கள். இரத்தத்தையும் சதைகளையும் மிதித்துக் கொண்டு காயம் பட்ட பிஞ்சு மனதைச் சுமந்து கொண்டு போகிறார்கள். குழந்தைகளைப் பாம்புகள் இழுத்துச் செல்கின்றன என்ற படிமம் யுத்தத்திற்கும் படையெடுப்புக்களுக்கும் அஞ்சிக் கிடக்கும் குழந்தைகளின் பொழுதுகளினால் தாக்கத்தால் எழுதப்பட்டது. இந்த யுத்தத்தில் 13 வயதுச் சிறுமியான என் தங்கை இந்த உக்கிரத்தை எப்படித் தாங்குவாள் என்ற அச்சம் எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கிணற்றுக்குள் இறங்கிய கிராமம் என்கிற கவிதையின் படிமம் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினால் எழுதப்பட்டது. ஒருநாள் கிளிநொச்சி நகரத்தில் நின்று கொண்டிருந்த பொழுது யுத்த விமானங்கள் சூழ்ந்து தாக்குதலை நடத்திய பொழுது பாதுகாப்பிற்காக அதற்கு முன்பு இடம்பெற்ற யுத்ததால் இடிந்த கிணற்றுக்குள் குதித்துப் பதுங்கினேன். எப்பொழுது யுத்த விமானங்கள் வந்து தாக்குதல்களில் ஈடுபடும் என்று தெரியாத பொழுதில் விமானங்கள் முற்றுகையிடுகையில் தெருக்களில் உள்ள கழிவு வாய்க்கால்களில் எல்லாம் மக்கள் பதுங்கிக்கிடப்பார்கள். சிலவேளை தாக்குதல்களில் கிணறுகளே மூடுண்டு போயிருக்கின்றன.

ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் என்கிற கவிதை புதுக்குடியிருப்பு நகரம் இராணுவத்திடம் வீழந்த பொழுது எழுதப்பட்டது. புதுக்குடியிருப்புக்காய் இலங்கைப் படைகள் பல தடவைகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்தியிருந்தது. பேரழிவுக்கு உள்ளான அந்த நகரத்தை இறுதியில் இலங்கை இராணுவம் கைப்பற்றிய பொழுது ஏற்பட்ட தாக்கத்தால் எழுதப்பட்டது. இராணுவம் ஆட்கள் வெளியேறி நகரங்களை மிகவும் கொடுமையாகத் தின்று நாசப்படுத்தியிருக்கின்றன. அந்த அழிவுகள் புதுக்குடியிருப்பின் அழகைச் சிதைத்து உயிரைக் கொன்றிருக்கிறது. இப்பொழுதும் மக்களற்ற அழிவு நகரமாகப் புதுக்குடியிருப்பு கிடக்கிறது.

எல்லா நகரங்கள் வீழும் பொழுதும் எல்லாக் கிராமங்கள் வீழும் பொழுதும் அந்த நிலங்களின் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் மனங்கள் இடிகிற அளவில் தொடுக்கப்படுகிற யுத்தம் அவர்களைக் கடுமையாக வதைக்கிறது. இந்த உக்கிரங்களில் வாழும் குழந்தைகளின் மனவெளிகளை அதிகம் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் என்ன செய்தார்கள்? என்ற கேள்வியும் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிவார்கள்! என்ற சுய பதிலளிப்பும் எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது.

குழந்தைகளைப் பற்றிய எனது ஏக்கங்கள் என்பது அவர்களுக்குள் இருக்கிற வாழ்வு பற்றிய ஏக்கமாகவே உணருகிறேன். யுத்தத்தின் காயங்கள், எச்சங்கள், அதன் தாக்கங்கள் என்று முற்றிலும் அழிவாலும் ஒடுக்குமுறைகளாலும் குழந்தைகளின் வாழ்வு தள்ளப்பட்டிருக்கிறது. நிகழும் யுத்தம் ஒன்றின் எதிர்கால வடுக்களையும் விளைவுகளையும் அவர்கள்தான் சுமக்கப் போகிறார்கள் என்ற ஏக்கமும் கவிதைகளை எழுத உந்தியிருக்கின்றன. தலைமுறைகள் தவிக்கப் போகும் ஈழம் என்கிற பெரும் தவிப்புத்தான் இங்கு மிகவும் பெரிய தாக்கமாக இருக்கிறது.

யுத்தக் கவிதைகளில் குழந்தைகளின் மரணமும் அவர்களுக்கு ஏற்படும் காயங்களும் அவர்கள் இழக்கிற உலகமும் பதிவு செய்யப்படவேண்டும் என்று நினைக்கிறேன். பதுங்குகுழிகளில், மரணங்களில், இடப்பெயர்வுகளில், சமர்களில், காயங்களில், இழப்புக்களில், அச்சங்களில், பயங்கரங்களில் அவர்கள் எப்படித் தவிக்கிறார்கள் அல்லது கடக்கிறார்கள் என்பதைக் கவிதைகளில் பதிவு செய்யும் பொழுது அவர்களுக்கான உலகத்தையும் அவர்களின் உரிமைகளையும் அவர்கள் கோருவதை உணர்த்த முடியும் என நினைக்கிறேன்.

கேள்வி: சமீபத்தில் மலேசியாவிற்கு வந்த பழ. நெடுமாறன் அவர்கள் 'பிரபாகரன் இன்னும் சாகவில்லை' என்பதை உறுதியாகக் கூறும்போது அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 2000க்கும் மேற்பட்டோர் ஆக்ரோசமாகக் கத்தினர், சிலர் அழவும் செய்தனர். எங்கோ தூரத்துப் பிரதேசத்தில் நிகழும் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை அழிக்கும்பொருட்டு ஒரு இயக்கமாக செயல்பட்ட ஒரு காரணத்தினால் மட்டும்தான் கடல் கடந்து வாழும் தமிழர்களும் பிரபாகரன் மீது இத்துணைப் பற்றுக்கொண்டுள்ளார்கள். இன்று சர்வதேச அளவில் பிரகாரனின் போராட்டத்தின் மீதும் பிரபாகரனின் மீதும் உருவாகியிருக்கும் அடையாளத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகத் தலைவர் பிரபாகரன் போராடியவர். தமிழ் மக்களின் போராட்டத்தின் அடையாளமும் பிரபாகரனின் அடையாளமும் இனத்தை ஒடுக்குபவர்களால் தவறாக ஒரு பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்படடிருந்தது. அப்படியொரு சித்திரிப்பின் பின்னணியில்தான் ஈழம்மீது போர் தொடுக்கப்பட்டது. போரைத் தொடுக்கவே அப்படிச் சித்திரித்தார்கள். விடுதலைப் பெற வேண்டிப் போராடிய ஒடுக்கப்பட்ட இனத்தின் கனவைச் சிதைக்கவும் அதற்கான அடிப்படைகளை அழிக்கவும் இப்படித்தான் காரணம் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இனத்தினதும் வாழ்வினதும் விடுதலை கனவை அவர்கள் வேண்டுமென்றே நிராகரித்திருக்கிறார்கள்.

ஈழத்தில் மட்டுமன்றி ஈழத்து மக்கள் புலம்பெயர்ந்த சூழலில் மட்டுமன்றி தாய்த் தமிழகத்தில் மட்டுமின்றி மலேசியா போலத் தமிழர்கள் வாழுகிற நாட்டிலும் தலைவர் பிரபாகரனதும் ஈழப்போராட்டத்தினதும் நடவடிக்கைகளும் எழுச்சிகளும் கவனத்தை ஈர்த்திருந்தன. தமிழர்கள் நாடற்றவர்களாகவும் அடையாளத்தைப் பாதுகாக்க தவிப்பவர்களாகவும் இருக்கிறபடியால் தமிழ் இனத்தின் அடையாளத்திற்காகப் போராடிய தலைவரையும் ஈழத்து மக்களின் போராட்டத்தையும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் நேசிக்கிறார்கள். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு போராட்டமாக இருந்த பொழுதும் அந்தப் போராட்டத்தின் அடிப்படைகளை மிகத் தெளிவாக அறிந்திருந்த பொழுதும் அந்தப் போராட்டத்தில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்

கேள்வி: இலங்கையும் இந்தியாவும், மலேசியாவும்கூட பிரபாகரனின் போராட்டத்தைத் தீவிரவாதத்துடன்தான் ஒப்பிட்டு கவனப்படுத்துகிறார்கள். இன்று உலகம் முழுக்க விடுதலை புலிகளின் மீதான பார்வை ஒற்றை அடையாளப்படுத்துதலைப் பெற்றிருப்பது போன்ற ஓர் உணர்வு இருக்கிறதா? உங்களுக்கு விடுதலை இயக்கம் மீதும் பிரபாகரன் மீதும் என்ன மனப்பதிவுகள் உள்ளன?

பதில் : ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் துயரங்களையும் கண்டு உலகத் தமிழர்கள் தாங்க முடியாதிருக்கிறார்கள். போராட்டம் இன்று பெற்றிருக்கிற தேக்கமான அல்லது துயரமான நிலை குறித்தே அனைவரும் சதா பேசிக் கொள்கிறார்கள். விடுதலைக்காக வாழ்வுக்காகப் போராடிய இனம் இன்று ஆக்கிரமிப்பிலும் தோல்வியிலும் இருக்கும் பொழுது அதைக்குறித்து உலகத் தமிழர்கள் பேசுகிறார்கள். ஒரு இனத்தின் கனவு, இருப்பு, விடுதலை எல்லாம் படிந்திருக்கும் ஒரு போராட்டத்தை அதன் தலைமையை சதித்தனத்துடன் உலகம் பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தியது. உரிமையை மறுக்கவும் அதிகாரத்தை விரிக்கவும் இத்தகைய அடையாளப்படுத்தல்கள் அதிகாரங்களால் மிக எளிதாகத் திணிக்கப்பட்டு, போராட்டங்கள் சிதைக்கப்படுகின்றன.

இதைப் பற்றி நான் முதல் கேள்வியிலும் பேசியிருக்கிறேன். இனத்தின் உரிமையை மறுப்பவர்கள், ஒரு இனத்தை ஒடுக்கிறவர்கள் இப்படித்தான் காரணங்களைச் சொல்லி தீவிரவாதத்துடன் ஒப்பிட்டார்கள். அவர்களிடம் தீவிரவாதம்! தீவிரவாதம்! என்ற கோஷசங்கள் இருந்ததே தவிர ஏன் இந்த இனம் போராடுகிறது? ஏன் இந்த இனம் குண்டுகளைக் கட்டி வெடிக்கிறது? என்றெல்லாம் புரிந்து கொண்டு ஏற்க முடியவில்லையா? வரலாற்று பூர்வமான வாழக்கையை ஈழத் தமிழ் மக்கள் கோரினார்கள். அடையாள பூர்வமான வாழ்க்கையைக் கோரினார்கள்.

நான் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மிகவும் நேசிக்கிறேன். எனது சிறுவயது முதல் விடுதலைப் புலிகளின் சூழலில், தொடர்ச்சியான போராட்ட சூழலின் மத்தியில் வாழ்ந்து வருகிறேன். யுத்தம் திணிக்கப்பட்ட மக்களிலிருந்தே ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்தே போராளிகள் உருவாகினார்கள். இயக்கத்திற்கும் மக்கள் வாழ்க்கைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பிருந்தது. மக்களும் விடுதலைப் புலிப் போராளிகளும் நெருக்கடிகளுடன் போராட்டத்தைச் சுமந்து பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்திய காலம் எனது மனநிலையை நிரப்பியிருக்கிறது. ஒரு மக்கள் போராட்டத்திற்கான அத்தனை அடையாளங்களையும் பெற்றுச் சாத்தியமடைந்த 1990கள் காலப்பகுதிதான் ஈழப் போராட்டம் தொடர்பில் எனக்கு அதிக மனப் பதிவுகளை உருவாக்கிய காலமாக இருக்கிறது.

தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை அடையாளப்படுத்துகிற வகையில் உலக அரங்கில் கொண்டு சென்றவர். விடுதலை அமைப்பை அதற்குரிய அத்தனை அடையாளங்களுடனும் உருவாக்கி நிமிரச் செய்தவர். ஒரு நிழல் நாட்டை, நிழல் அரசை உருவாக்கி ஈழத்து ஆட்சியின் அடையாளங்களையும் அவசியத்தையும் சாத்தியப்படுத்தியவர். தமிழ் மக்களின் கனவைச் சுமந்து போராட்டத்தைக் கட்டி எழுப்பியவர். தமிழ் மக்கள் அனைவரும் அவர்மீது கொண்டுள்ள குளிர்ந்த அபிமானமும் நேசிப்பும் எனக்கும் இருக்கிறது.

நான் உயர்தரத்தில் தகுதியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிய பொழுது நான் வழங்கிய நேர்காணல் ஒன்றை பார்த்த பொழுது என்னை ஒரு நல்ல மாணவன் என்று தலைவர் குறிப்பட்டிருந்தார். நான் படித்து சித்தயடைந்த எனது வறுமையான வாழக்கைச் சூழலைப் பற்றி நான் பேசியதை அவர் கவனித்துக் குறிப்பிட்டார்.

கேள்வி: சமீபத்தில் நான் பார்த்த ஒரு இலங்கை சினிமாவில், இலங்கை குடும்ப ஆண்களை இராணுவத்தில் வலுக்கட்டாயமாகச் சேர்ப்பதால் இலங்கையில் வசிக்கும் கீழ்த்தட்டு சமூகத்தின் குடும்ப அமைப்பு உடைந்து போவதைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. போர்ச்சூழலில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவவீரர்கள் இலங்கை அரசின் தூண்டுதலால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போர் நிலை தமிழர்களைத் தவிர்த்து இலங்கையின் சிங்கள மக்களை எப்படிப் பாதிக்கிறது? இராணுவ வீரர்களின் மன அமைப்பு எப்படிப்பட்டது?

பதில் : இராணுவத்திற்கு ஆட்சேர்க்க மிகவும் வறுமைப்பட்ட பின்தங்கிய சூழலில் இருந்து ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். அதனால் பல சிங்களப் பெண்கள் கணவன்மார்களை பிரிந்து தவிக்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்து தவிக்கிறார்கள். சகோதரர்கள் ஒத்தாசையின்றி தவிக்கிறார்கள். முப்பதாயிரத்திற்கு மேல் இப்பொழுது இராணுவத்தினருக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இராணுவத்தினரின் குடும்பங்கள் அந்தச் சம்பளத்தை நம்பித்தான் வாழ்கிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்குள் இப்படிப்பிரிவுகளும் சிதைவுகளும் உடைவுகளும் உள்ளன.

தங்கள் ஊதியத்தை அனுப்பி தொலைபேசியில் பேசி உருகிக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் பலரை நான் தினமும் இங்குள்ள வங்கிகளில் பார்க்கிறேன். தவிர நாங்கள் பயணிக்கும் பேருந்துகளில் சீருடையணியாத இராணுவத்தினர் தெற்கில் உள்ள வீடுகளுக்கு விடுமுறையில் செல்வதையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் போகும் பொழுது உள்ள மகிழ்ச்சியும் வரும் பொழுதுள்ள சோகமும்கூட தினம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அவர்களை இலங்கை அரசு தனது அதிகார வெறித்தனமான யுத்தத்திற்காகப் பலியாக்குகிறது என்றும் அது அவர்களில் தவறில்லை என்றும்கூட நமது சூழலில் சிலர் வாதிடுகிறார்கள். விடுதலைப் புலிகள்கூட குடும்பங்களைப் பிரியும் இராணுவத்தினரின் மனநிலை பற்றியும் யுத்தகள இராணுவத்திரின் மனநிலை பற்றியும் சில குறும்படங்கள் எடுத்திருந்தார்கள். இயக்குனர் பிரசன்ன விதானகேன கூட தனது படங்களில் இந்த விடயத்தை சித்திரித்திருக்கிறார்.

சாதாரணமான சிங்கள மக்களிடத்திலேயே இன்று அரசு தமிழ் இனத்திற்கெதிரான இன வெறியை ஊட்டி வைத்திருக்கிறது. அதைவிடவும் படுகொலைகளுக்கும் வன்புணர்வுகளுக்கும் இன்னும் பிற கொடுஞ்செயல்களுக்கும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்டு நன்கு புத்தியூட்டப்பட்டுத்தான் படைகள் எமது மண்ணில் திரிகிறார்கள். சீருடை அணிந்த படைகளைப் பார்க்கும் பொழுது, எங்களுக்கு மிருகங்களாகவே தெரிகிறார்கள். அப்படித்தான் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மண்ணில் நடமாடும் பொழுது எதையும் செய்யலாம் எப்படியும் செய்யலாம் என்கிற ஒடுக்குமுறை மற்றும் இன அழிப்புப் புத்தி அவர்களுக்குள் நிறைந்திருக்கிறது. துப்பாக்கியும் இராணுவத்தொப்பியும் பதவி நட்சத்திரங்களும் அதிகாரங்களைக் கொடுக்கிறது. அதனால் அவர்கள் எங்கள் நிலத்தில் எங்கள் மங்களுக்கு நிகழ்த்திய அழிவுகள் தந்த துன்பங்கள் கொஞ்ச நஞ்மல்ல என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கேள்வி: இலங்கையில் இதற்கு முன் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் இருந்தும் எந்த மாற்றமும் சமரச பேச்சுகளும் தடைப்பட்டு போனதற்கு இலங்கையின் இராணுவ ஆட்சிதான் காரணமா? அல்லது மகிந்தாவின் தனிமனித அரசியலா? இப்பொழுது இலங்கையில் இராணுவ ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறதா? பிறகெதற்கு அங்குத் தேர்தலும் அரசியல் அமைப்புகளும்?

பதில் : இலங்கையில் ஈழப் பிரச்சினையில் சர்வதேச நாடுகள் காட்டிய தலையீடுகள் என்பது ஈழத்தில் சமரசத்தையோ சமாதானத்தையோ உருவாக்குகிற எண்ணத்தை அல்லது இலக்கை கொண்டிருக்கவில்லை. அவை அந்நிய தேசத்தின் ஆதிக்கத்தையும் அவர்களின் தலையீடுகளையும் நுழைக்கிறதை அடிப்படையாகக் கொண்டவை. அந்த அடிப்படையில்தான் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் அமைந்திருந்தன. செப்டம்பர் 2001 இதற்கு பின்னரான சர்வதேச அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப விடுதலைப் புலிகள் தமது இயக்கத்தை சர்வதேச ரீதியாக நட்புறவுகளுக்கும் புரிதல்களுக்குமான களமாகவே சமரப் பேச்சு வார்த்தைகளுக்குச் சென்றார்கள்.

இலங்கையின் ஆட்சி வரலாறு முழுக்க இராணுவ மனோநிலை சார்ந்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. இலங்கையை ஆண்ட பிதாமர்களும் ஜனாதிபதிகளும் இந்த மனோ நிலையில்தான் உள்நாட்டுப் பிரச்சினையை அணுகித் தூண்டினார்கள். ‘சமாதானம் என்றால் சமாதானம் யுத்தம் என்றால் யுத்தம்’ என்று யுத்தத்தை விரும்பி அழைத்த ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் ‘மனிதாபிமான யுத்தத்தை நடத்தி பயங்கரவாதிகளைத் துடைப்பேன்’ என்ற மகிந்தராஜபக்ஷேவும் யுத்தத்தில் மிகத் தீவிரமானவர்கள். இதனால் தமிழர்களும் யுத்த தீர்வுகளுக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள். வன்னி யுத்தம் தொடங்கும் முன்பே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சமாதான வழிகளுக்குச் செல்ல பல தடவைகள் அழைத்தார்கள். ஆனால் அரசு யுத்தம் மூலமாகத் தமிழர்களிடம் இருக்கிற சகலத்தையும் துடைத்தெறிய வேண்டும் என்று கங்கணம் கட்டியிருந்தது.

சமரசத்தை முறித்துக் கொண்டு யுத்தத்தைத் தொடங்கி அதன் அரசனாக சிங்கள மக்கள் மத்தியில் திகழ வேண்டும் என்கிற மகிந்தவின் அவசியத்தில் யுத்தம் அவரது தனிமனித அரசியலானது. அவரது தனிமனித அரசியலுக்காகவே பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு, நிலம் அழிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது. இதனால் ஆட்சியையும் பதவிகளையும் அதிகாரங்களையும் மகிந்த ராஜபக்சவின் குடும்பம் தக்க வைத்திருக்கிறது.

இந்த அடிப்படையில் தொடர்ந்தும் தன்னை இராஜாவாகக் காட்டிக் கொள்ள இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராணுவ ஆட்சியைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார். வடக்கு கிழக்கு முழுவதும் இராணுவம்தான் நிறைக்கப்பட்டுள்ளது. மக்களின் நடவடிக்கைகள், மனநிலைகள் போன்றவற்றை கண்காணித்து அவற்றில் கட்டுப்பாடுகளை இராணுவம் செலுத்திக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் விட மக்களுக்குரிய பல சிவில் நடவடிக்கைகளைகூட இராணுவம்தான் செய்து கொண்டிருக்கிறது. யுத்தம் செய்ய வந்த இராணுவத்தினர் வடக்கு கிழக்கில் காலூன்றி இராணுவ ஆட்சியைத் தழைக்கப் பண்ணுகின்றனர். தேர்தலும் அரசியலும் இலங்கையில் பெறுமதியற்றவை. ஆனால் அந்தத் தேர்தலிலும் அரசியலிலும் தமிழர்கள் இலங்கை அரசுக்கு பாடம் கற்பித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.

கேள்வி: சர்வதேச அமைப்புகள் ஒன்றினைந்து இலங்கையில் கடைசி கட்டங்களில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தப் போவதாகவும், ஒரு பக்கம் அந்தப் போர்க் குற்றங்கள் தொடர்பான தடயங்களை இலங்கை அழித்துக்கொண்டு வருவதாகவும் பேசப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மை நிலவரம் என்ன?

பதில் : யுத்தம் நடந்த வன்னி போர்க்குற்றங்கள் பலவும் புதைக்கப்பட்ட பெருநிலமாகும். இறுதிக் கட்ட யுத்த களத்தில் மக்களையும் போராளிகளையும் மிக கொடுமையாக இராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றிருக்கிறார்கள். போராளிகளினதும் மக்களினதும் குருதியை இராணுவத்தினர் பயங்கரமாக நிலத்தில் வெட்டியும் சுட்டும் கொட்டியிருக்கிறார்கள். போராளிகளைப் பின் பக்கமாக சுட்டுக் கொல்வதையும் போராளிகளை வரிசையாக இருத்தி பின் பக்கமாகக் கைகளைக் கட்டி கொல்வதையும் போர்க் குற்றப் புகைப்படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இசைப்பிரியா என்ற பெண் போராளியைப் பாலியல் வல்லுறவு புரிந்து கொன்று போட்ட படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை அரசியன் யுத்தக் குற்றங்கள் இறுதிக்களத்தில் மட்டும் நடந்தவை அல்ல. தமிழர்களின் நிலத்தில் எப்பொழுது இராணுவத்தினர் நுழைந்தனரோ அன்று முதல் போர் மற்றும் இராணுவக் குற்றங்களான இந்தப் பேரழிவுகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன. யுத்த களத்தில் இருந்தும் மக்கள் சரணடைந்த சோதனை தடுப்பு நிலைகளிலிருந்தும் கொண்டு செல்லப்பட்ட பல ஆயிரக்கணக்கான போராளிகள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை கடத்திச் சென்றதும் அவர்களை என்னவோ செய்து விட்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மறைப்பதும் யுத்தக் குற்றந்தான். பயங்கரங்களை மட்டுமே விரும்புகிற அரசும் அதன் படைகளும் இழைத்தவை எல்லாமே குற்றங்கள்தான்.

இறுதி யுத்த களமான முள்ளி வாய்க்கால் பகுதியில் கிடந்த யுத்தத் தடங்களை யுத்தம் முடிந்து சில நாட்களிலேயே இராணுவத்தினர் அழித்துள்ளார்கள் என்பதை அய்நாவின் புகைப்படங்கள் வெளிகாட்டியுள்ளன. யுத்தம் முடிந்த நாட்களில் இதற்குரிய நடவடிக்கைகளில் படையினர் தீவிரமாக இறங்கியிருந்தனர். தாங்கள் இழைத்த குற்றங்கள் அம்பலமாகக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்காலையே அழித்துப் புதைத்திருக்கிறார்கள். இலங்கை அரசினதும் படைகளினதும் இந்தக் குற்றங்கள் தொடர்பில் அய்நா பரிந்துரைத்திருக்கும் போர்க் குற்ற விசாரணைக்கு சில நாடுகள் ஒப்புதலளித்திருக்கின்றன. சில நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றங்களைப் பாவித்து இலங்கை அரசை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் சர்வதேச அரசியல் அதிகார சமன்பாடுகளைத் தீர்க்கிற நிலைகளை உருவாக்கும் தந்திரங்களை விடுத்து இயன்ற சுயப்புத்தியுடன் அய்நா செயற்பட வேண்டும். ஈழத்தில் வாழும் ஒவ்வொரு மக்களும் போரின் தடங்களாகப் போர்க் குற்ற ஆதாரங்களாகவே வாழ்கிறார்கள். ஒரு கழுத்து இறுக்கப்பட்ட சூழலில் மக்கள் வாழ்கிறார்கள். எதைப் பற்றியும் பேச முடியாத நிலையில் இருக்கிறார்கள். போர்க் குற்ற அறிக்கை மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுத்திருக்கின்றன.

கேள்வி: இன்று இலக்கியங்களில் சமூகப் புறக்கணிப்பு, குடும்பச் சிக்கல் என பல விடயங்களில் காணாமல் போகுபவர்களைப் பற்றி புனைந்தும் எழுதியும் வாசித்தும் வருகிறோம். அவர்களுடையவை வெறும் கதைகளாக அணுக முடியும் என்கிற நம்பிக்கை என்னிடம் இல்லை. ஆனால் இரத்தமும் சதையுமாகப் போர்க்களத்தில் காணாமல் போனவர்களின் மர்மம் நம்மைப் பயங்கரமாக வதை செய்யும் தன்மையுடவை. போர்ச் சூழலிலும் போருக்குப் பிந்தைய நிலையிலும் காணாமல் போனவர்களைப் குறித்துச் சொல்லுங்கள்?

பதில் : யுத்தகளத்தில், இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தில், அரசியல் பிரச்சினைகளில் காணாமல் போதல் மிகுந்த பயங்கரமானது. முக்கியமாக கொலை வெறியும் சித்திரவதையும் நிரம்பிய கணங்களை ஏற்படுத்தும். இன்று வரை இப்படியான பயங்கரமான கணங்களால் நிறைந்த நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போரில் சிக்கியிருந்து காணாமல் போனவர்களில் பலர் எனக்கு நண்பர்களாக உறவினர்களாக இருந்திருக்கிறார்கள். குழந்தைப் போராளியான எனது தங்கை காணாமல் போய் உக்கிர யுத்தம் நடந்த பொழுது ஒரு கொடிய இரவில் எனது அம்மாவின் கையில் ஏதேர்ச்சையாக கிடைத்திருந்தாள்.

இதைப்போல எனது உயிர் நண்பனான கஜானந் யுத்த களத்தில் இறுதியில் காணாமல் போயிருந்தான். காணாமல் போன அவன் கிளிநொச்சியின் நினைவுகளில் எனக்கு மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகிறான். இன்று கிளிநொச்சி வெறுமையாயிருக்கிற மாதிரி இருப்பதற்கு அவன் இல்லாத கணங்களே காரணமாயிருக்கின்றன. அவனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவனின் அம்மா அவன் திரும்பி வருவான் என்றே காத்துக் கிடக்கிறார். உருகி உருகி பார்க்கப் பொறுக்க முடியாத கோலத்தையும் கண்ணீர் நிரம்பிய வாழ்க்கையையும் யுத்தகளம் அவனின் அம்மாவுக்குக் கொடுத்திருக்கிறது.

இதைப்போல சிறிய வயதில் என்னுடன் முதலாம் வகுப்பிலிருந்து படித்த கோபிநாத் என்கிற நண்பனும் காணாமல் போயிருக்கிறான். அவனின் அம்மா ஒரு பைத்திய நிலையை அடைந்து விட்டார். தலையில் முடி உதிர்ந்து கொட்டி விட்டது. புலம்பாத நேரங்களில்லை. காணாமல் போனவர்களுக்கு என்ன கதி நடந்திருக்கும் என்ற இரத்தமும் சதையும் பயங்கரங்களும் கொண்ட கணங்கள்தான் நினைவுகளை வதைக்கின்றன. இரக்கமற்ற இராணுவப் படைகள் அவர்களை என்ன செய்திருக்கும் என்ற தவிப்பும் அவர்களுக்கு எதுவும் நடக்காது திரும்பி விடுவார்கள் என்றும் மனம் சுழன்று கொண்டு சிதைந்தபடியிருக்கிறது. இன்றைய ஈழத்தில் காணாமல் போனவர்களுக்காய் வடியும் கண்ணீரும் தவிக்கும் பொழுதுகளும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன.

கேள்வி: இலங்கையில் தலித்துகளின் மீது சுமத்தப்படும் சாதிய ஒடுக்குமுறைகள் தமிழ் தேசிய உருவாக்கத்தை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது? அதிகமாகப் போர் குறித்த விளைவுகளைப் பற்றி பேசும் மண்ணின் சாதிய ஒடுக்கு முறைகள் குறித்துப் பேசப்பட்டனவா? அதற்கான என்ன நடவடிக்கைகள் இடம்பெற்றன?

பதில் : ஈழத்தில் தமிழ் பேசும் மக்கள் இருப்புக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள். பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தினர் தமக்குள் உள்ள மக்களை ஒடுக்குவது மிகவும் ஆபத்தானது. இது போராடும் இனம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தேசிய உருவாக்கத்தில் பாதிப்புக்களை உருவாக்கக் கூடியது. விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட இனம் என்ற வகையில் சாதிய வேறுபாடுகளைத் துடைத்து மக்களை ஒரு அணியில் திரட்டியவர்கள். ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து போராட்டத்தைக் கட்டமைத்தவர்கள்.

ஈழத்தில் முதலில் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டமே எழுச்சியடைந்தது. முதலில் இனத்திற்குள் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளைத் துடைக்கும் போராட்டம் பின்னர் இனத்தின்மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து வெடித்தது. ஈழப் போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கெடுத்த பலரும் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களே பின்னர் மக்களின் போராளிகளாகவும் தலைவர்களாவும் மாறினார்கள். சாதியத்திற்கு எதிரான எழுச்சி இனத்தைப் பாதுகாக்கிற போராட்டத்தை உருவாக்கிய வகையில் முக்கியம் பெற்றது.

போரையும் அதன் விளைவுகளையும் முதல் நிலையில் வைத்து பேசுவதால் தேசிய இனத்திற்குள் உள்ள பல விதமான நுண் ஒடுக்குமுறைகள் பேசப்படாது போகின்றன. ஆனால் விளிம்பு நிலை மக்களின் கதைகளை பேசும் அதைப் பதிவு செய்யும் நிலைமையும் காணப்படுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வேலைகள் பலவும் ஈழத்தில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இல்லாத இன்றைய சூழலில் சாதிய ஒடுக்குமுறைகள் மீண்டும் தலை தூக்கப் பார்க்கின்றன. இது தேசிய இனத்தின் இலட்சியத்தையும் அதன் அடிப்படைகளையும் பாதிக்கும். குறிப்பாக இன்றைய ஒடுக்குமுறைகள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எழும்புகின்றன. கல்வி, வசதிகள், வாய்ப்புக்கள், அரசியல் போன்றவற்றாலும் ஏற்படுகின்றன. போர் மக்களை வறுமையானவர்களாகவும் நிலமற்றவர்களுமாக்கிய நிலையில் அந்த மக்கள் சில கட்டங்களில் ஒடுக்கப்படுகிறார்கள்.

தொழில் சார்ந்து சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று அந்த ஒடுக்குமுறைகளை வென்றிருக்கிறார்கள். ஈழத்தில் ஏற்பட்ட சாதியத்திற்கு எதிரான எழுச்சி பலமான அடிக் கட்டுமானத்தை இட்டியிருக்கிறது என்ற பொழுதும் மலையக மக்களை அவர்களின் பூர்வீகம் தொடர்பான நிலையில் ஒடுக்கப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது யாழ்ப்பாணம் மற்றும் வன்னி நிலத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதை காண முடிகிறது. இனத்திற்குள்ளான முரண்பாடுகளை ஒடுக்குமுறைகளைத் துடைத்து இனத்தின் இருப்பைப் பாதுகாக்க தேசிய இனத்தைக் காப்பாற்ற ஒன்றினைவது தேசிய உருவாக்கத்தில் மிகவும் அவசியமானது.

கேள்வி : உங்கள் தாயுடனும் தங்கையுடன் மீள்குடியேற்றம் செய்துள்ளீர்கள் என அறிந்தேன்.  உங்களது மீள் குடியேற்றத்தின் நிலை என்ன?

பதில்: அந்த மீள்குடியேற்ற நாளுக்காக எத்தனை காலம் காத்திருந்தோம் என்பது மிகக் கொடுமையானது. தடுப்பு முகாமிலிருந்த எனது அம்மாவும் தங்கையும் மீள்குடியேற்றத்திற்காகக் காத்திருப்பின் விரக்திக் கட்டங்களைக் கடந்தும் காத்திருந்தவர்கள். எங்கள் நிலத்திற்குத் திரும்பி விட்டோம் என்ற ஆறுதல் மட்டுமே எங்களிடம் இருக்கிறது. தறப்பாள் கூடார வாழ்க்கையைக் கடப்பதைப் போல துன்பம் எதுவுமில்லை. இன்னும் அதற்குள்தான் வாழ்க்கை கழிகிறது. கடந்த மாரி மழை காலத்திலேயே தாங்க முடியாத கூடாரம் வரப் போகும் மழைக்கு என்ன செய்யப் போகிறது என்று அம்மா கேட்டார்?

இது எங்கள் அம்மாவுடைய கேள்வி மட்டுமல்ல. இப்படிப் பல அம்மாக்கள், பல சனங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்களது பழைய வீடு மண் வீடுதான். ஆனால் அதைக் கட்டுவதற்கு நாங்கள் மிகுந்த கஷ்டப்பட்டிருந்தோம். இன்று அந்த வீடு இடிந்து மண் மேடாக உள்ள இடத்தில்தான் ஒரு தறப்பாளில் கூடாரம் அமைத்திருக்கிறோம். எங்கள் கிராமமே தறப்பாள் கூடார கிராமம்தான். யாருக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவில்லை. தற்காலிகமான வீட்டைக் கூட அமைத்துத் தரவில்லை. இன்று நாளை என்று ஒரு வருடமாக தறப்பாள் வாழ்க்கை கழிந்து விட்டது. அதேநேரம் யுத்தம் முடிந்து இரண்டு வருடமும் ஆகி விட்டது.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வெறும் காரணங்களையும் அவகாசங்களையும்தான் தருகிறார்கள். ஆனால் அந்தக் கொடுமையான கூடாரத்திற்குள் அவர்களால் சில நிமிடங்கள் கூட குந்தியிருக்க முடியாது. எல்லாவகையிலும் பாதுகாப்பற்ற கூடாரங்கள். நோய்களை உருவாக்கும் ஆபத்துக் கொண்டவை. எங்கள் மக்களால் தாங்களாக ஒரு வீட்டைக் கட்ட முடியவில்லை. எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் எல்லோருமே மலையகத்திலிருந்து வந்து குடியேறிய மக்கள். மிகவும் வறுமைப்பட்டவர்கள். ஒரு ஓலையிலான மண் வீட்டைக் கூட கட்டிக் கொள்ள முடியாத நிலமையில் அந்த மக்கள் இப்பொழுது வாழ்கிறார்கள். இந்தத் துயரங்களைப் பற்றி மக்கள் சொல்லாத இடங்களில்லை. மீள்குடியேற்றம் என்றால் இப்படித்தானிருக்கும் என்பதைப் போல செயலற்ற, முடிவற்ற மௌனமே நீடிக்கிறது.

எமது மக்களின் வாழ்க்கையும் போராட்டமும் இன்று அடைந்திருக்கிற நிலமையைத்தான் இந்தக் கூடாரங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் இதற்குள் மழையை வெயிலை அதன் துயர் செறிந்த காலங்களைக் கடந்து நாங்கள் நம்பிக்கையுடன் உயிருடன் இருக்கிறோம். எத்தகைய துயர சூழலிலும் நெருக்கடியிலும் நாங்கள் நம்பிக்கையைக் கட்டி எழுப்பிக் கொண்டு இவைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. இந்த வாழ்க்கையும் எதிர்காலமும் எப்படியிருக்கப் போகின்றன என்பதை இதே சூழல் நிச்சயமாகத் தீர்மானிக்கும். மீள்குடியேற்றத்தில் மக்கள் மீள நிலமடைந்து வாழ்வது என்பது இப்படித்தானிருக்கிறது.

கேள்வி : வன்னியில் பள்ளிகள் மீண்டும் இயங்குகின்றனவா? எப்படி இத்தகைய சூழலில் இயங்குகின்றன? அங்கு படிக்கும் மாணவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதில் : வன்னியில் பாடசாலைகள் 2010 ஜனவரியில் இருந்து மெல்ல மெல்ல ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான பாடசாலைகள் மீளத் தொடங்கி விட்டன. முல்லைத்தீவில், புதுக்குடியிருப்பில் சில பாடசாலைகள் இன்னும் இயங்காதிருக்கின்றன. யுத்தம் காரணமாகப் பலத்த இழப்புக்களுக்குப் பாடசாலைகள் முகம் கொடுத்திருக்கின்றன. பாடசாலைகள் பௌதீக வளங்களையும் ஆள் வளங்களையும் இழந்திருக்கின்றன. பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்க வேண்டும் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் இயங்கத் தொடங்கியிருகின்றன.

யுத்தத்தின் பின்னரான பல பாடசாலைகளுக்குச் சென்று வருகிறேன். யுத்தத்தில் இடிந்து, கூரையை இழந்து, கட்டிடங்களை இழந்து பல பாடசாலைகள் அழிவின் எச்சமாகியுள்ளன. அந்தக் கட்டிடங்களில்தான் பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். கரும்பலகைகள் இல்லாமல் அழிந்த கட்டிடங்களில் மாணவர்கள் எழுதிப் படிக்கிறார்கள். அழிவோடும் துயரத்தோடும் இருக்கிற சூழலிலும் மாணவர்கள் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எல்லாப் பாடசாலைகளிலும் யுத்தம் காரணமாக அநாதையாக்கப்பட்ட சிறுவர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். வன்னியின் வரண்ட நிலப் பாடசலைகளின் துயரம் மோசமானது. கனகபுரம் பாடசாலை, பூநகரி மகாவித்தியாலம் போன்ற பாடசாலையில் பல பிள்ளைகள் யுத்தத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த நிலையில் படிக்கிறார்கள். இப்படிப் பல பாடசாலைகளில் அநாதையான பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களுக்குப் பாடசாலைச் சூழல் ஓரளவு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அவர்களின் காயங்கள் ஆறுகிற சூழலாகப் பாடசாலை இருக்கிறது.

விவேகானந்த வித்தியாலம் என்ற கிளிநொச்சியில் உள்ள பாடசாலைக்கு அண்மையில் சென்ற பொழுது யுத்தத்தில் தனது தாய் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் ஷெல் தாக்குதலில் இழந்த தமிழ்ச்செல்வி என்ற சிறுமியைச் சந்தித்தேன். அவருக்கு இருக்கும் ஒரே ஒரு உறவான சசோதரன் ஒருவனும் போராளித் தடுப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். தமிழ்செல்வியைப் போல பல சிறுவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

பல மாணவர்கள் அங்கங்களை இழந்த நிலையில் கல்வி கற்கிறார்கள். கைகளை, கால்களை, கண்களை இழந்த பல மாணவர்கள் மீண்டும் கல்வி கற்கத் தொடங்கியிருக்கிறார்கள். போருக்குப் பிந்திய நெருக்கடியான வாழ்க்கையிலிருந்தே அவர்களின் மீள் கல்வி தொடங்கியிருக்கிறது. பாதுகாப்பற்ற வளமற்ற நெருக்கடியான சூழலில் இந்த மாணவர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் இழந்த பொழுதும் இழக்க முடியாத, இழக்கக் கூடாத கல்வியை எமது மாணவர்கள் நம்பிக்கையுடன் கற்கிறார்கள். இடைவிலகிய பலர் கல்வியைத் தொடர்ந்தாலும் சில பிள்ளைகளின் சூழல் கல்வியைத் தொடர முடியாத சோக நிலைக்கு தள்ளுண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

கேள்வி: தமிழ் தேசியம் உருவாக்கத்தில் மார்க்சியத்தின் பங்கு முக்கியமானதா? மக்களைத் தத்துவ ரீதியில் கட்டி எழுப்பாமல் வெறும் போர், ஆயுதம் என்று நகர்த்தப்படுவது சரியா?

பதில் : தமிழ் தேசியத்தில் மார்க்சியத்தின் பங்கு அவசியமானது. இனத்திற்குள் இடம்பெறும் ஒடுக்குமுறைகளை, முரண்பாடுகளை துடைக்க மார்க்கசியம் அவசியமானது. இனத்திற்குள்ளான மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள மிகவும் முக்கியமானது. சாதிய முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் வர்க்க முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் தேசியப் போராட்டத்தை பாதிக்கின்றன.

ஈழப் போராட்டத்தில் இன விடுதலைப் போராட்டம் என்கிற தத்துவ அடிப்படையில் மக்கள் கட்டி எழுப்பட்டார்கள். ஒரு கால கட்டத்தில் வேவ்வேறான தத்துவங்களை அல்லது கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஈழப் போராட்ட அமைப்புக்கள் போராட்டத்தை முன் வைத்திருந்தன. ஆனால் எல்லா அமைப்புக்களினதும் இலட்சியமாக ஈழமும் விடுதலையுமே இருந்தன.

எண்பதுகளின் இறுதியில் அதாவது இந்திய இலங்கை ஒப்பந்தம் நடைபெற்று இந்திய இராணுவத்தின் வருகையுடன் ஏற்பட்ட சூழலிலும், அதன் பின்னரும் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னெடுத்த கொள்கை மக்கள் மத்தியில் முதன்மை பெற்றது. அவர்களின் போக்கிற்கும் நடவடிக்கைகளும் மக்கள் பெரும் ஆதரவை வழங்கினார்கள்.

இலங்கை, இந்திய, சர்வதேச அரசியல் சூழலில் ஈழத்து மக்கள் ஆயுதம் ஏந்தி தொடர்ந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது ஈழத்தின் போர் உக்கிரமான கட்டங்களில் அதிகரித்துச் சென்றது. வரலாற்றடிப்படையில் மக்களின் மனநிலைகளின் அடிப்படையில் போராளிகளின் கொள்கையின் அடிப்படையில் போரே தீர்வாகியது.

ஈழத்தில் முன் வைக்கப்பட்ட தத்துவம் என்பது இனவிடுதலை, நில விடுதலை, மொழி விடுதலை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பன ஈழத்து மக்களால் பெரும்பாண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கையாகும். அந்த அடிப்படையில்தான் ஈழத்து மக்கள் ஒன்றிணைந்தார்கள். அந்த அடிப்படையில்தான் ஈழப் போராட்டம் நடைபெற்றது.

ஈழப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்து இன்று வரை மார்க்கிசக் கொள்கைகள் ஈழத்திலும் தமிழ்ச் சூழல்களிலும் முன் வைக்கப்பட்டு வரப்படுகின்றன. மாற்றுக் கொள்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. பல்வேறு அரசியல் நிலைப்பாடுகள் கருதிய கொள்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் ஈழக் கொள்கையையே தொடர்ந்து அங்கிகரித்து வழியுறுத்தி வருகிறார்கள். அது சிங்கள இனவாத ஆட்சியாலும் அது ஏற்படுத்திய அழிவுகளாலும் உருவாகிய சூழல். எனவே இந்தப் பயணம் என்பதும் இந்தத் திரட்சி என்பதும் மக்களுடையது.

கேள்வி: நீங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது போருக்கு எதிராகத் செயற்பட்டீர்கள் என்கிற குற்றச்சாட்டு உங்கள் மீது வைக்கப்பட்டதா? போர் குறித்தும் அதன் அரசியல் குறித்தும் மாணவர்கள் மத்தியில் உருவான மனநிலைகளைப் பற்றி சொல்லுங்கள். அதில் உங்கள் பங்கு என்ன?

பதில் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஈழப்போராட்டத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஈழப் போராட்டம் தொடர்பான வலுவான கருத்தாடல்களை உருவாக்கிய களம். யாழ் பல்கலைக்கழகம் இலங்கை அரசின் இன அழிப்புப் போரைத் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறது. இன விடுதலைப் போராட்டத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பி வந்திருக்கிறது.

நான் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராகப் பொறுப்பு வகித்தேன். 2008இல் யுத்தம் மூண்ட சூழலில் பல மாணவர்களும் மாணவத் தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் குறித்த பதவியைப் பொறுப்பு வகிக்க மாணவர்கள் அஞ்சிய சூழலில் பொறுப்பேற்றேன். அம்மா வன்னி யுத்தக் களத்தில் துயரப் பாதைகளை ஆபத்தைக் கடந்து கொண்டிருந்ததுவே என்னையும் பல்ககைலக்கழகத்தில் இயங்க தூண்டியது.

நான் பொறுப்பு வகித்த காலத்தில்தான் போர் உக்கிரமாகியது. மிக இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட சூழலிலும் போரை நிறுத்தும்படி தொடர்ந்து குரல் கொடுத்தோம். எமது மக்கள் நாளும் பொழுதும் கொல்லப்பட்டு இரத்தமும் சதையுமாகக் கிடந்த வன்னிப் பெருநிலத்தில், மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்தி, சமாதானப் பேச்சுக்களுக்குச் செல்ல வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம்.

வன்னிப் போரை நிறுத்தும்படியும் வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மௌனப் பிரார்த்தனை என்ற போராட்டத்தை ஒரு மாதகாலமாக இறுதிக் கட்டத்தில் நடத்தினோம். பல தடவைகள் வகுப்புக்களைப் புறக்கணித்து போர் நிறுத்தக் கோரிக்கைகளை முன் வைத்தோம். நாங்கள் கேட்டது எல்லாம் போரை நிறுத்தும்படியும், மக்களின் உயிர்களைக் காப்பாற்றும்படியுமே.

ஈழம் என்கிற அரசியலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்களிப்புடன் இருந்தார்கள். இன அழிப்புப் போரை நிறுத்த வேண்டும். மக்களைக் காப்பற்ற வேண்டும் என்று துடித்தவர்கள். பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களே பதவிகளை விட்டு விலகினார்கள். மாணவர் ஒன்றியத் தலைவரே பதவியை விட்டு ஒதுங்கினார். மாணவர்களுக்கு தலைமை வகிக்க ஒருவர் தேவைப்பட்டார். அதனால் அந்தப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். பதவியை விட்டு நான் விலகவில்லை. போரின் இறுதிக் கணம் வரை எங்கள் குரல்கள் அடங்காது ஒலித்துக் கொண்டுதானிருந்தன.

போரைத் தொடர்ந்து நடத்தி அழிப்பை மேற்கொண்ட சூழலில், போருக்கு எதிரான யாழ் பல்கலைக்கழக மாணவர்களினதும் ஒட்டுமொத்த சமூகத்தினதும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே எங்கள் மீதான குற்றமாக சுமத்தப்பட்டது.

கேள்வி: "இறுதி எச்சரிக்கை" எனும் சுவரொட்டியின் மூலம் உங்களுக்கும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சேர்ந்த சிலருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்திருப்பதை அறிகிறேன். இந்த எச்சரிக்கை ஏன் விடுக்கப்பட்டது? எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் என்ன செய்தீர்கள்?

பதில்: நான் மாணவர் ஒன்றியத்தில் பொறுப்பேற்று பத்து நாட்கள் இருக்குமென்று நினைக்கிறேன். இறுதி எச்சரிக்கை என்ற மரணப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் என்னுடன் 14 பேருக்கு மரண எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. கொலைகள் மலிந்த காலத்தில் மிகச் சாதாரணமாக எங்கள் பெயர்களை அறிவித்திருந்தார்கள். அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டிருந்தார்கள். நான் பேரதிர்ச்சியடைந்தேன். நாங்கள் கொல்லப்படுவதை எங்களுக்கு அறிவிக்கும் நிலையில் அதற்குப் பிறகு வாழும் ஒவ்வொரு கணங்களும் மிகப் பயங்கரமாகக் கழிந்தன.

பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்கள், ஊழியர்கள், மாணவர்கள் என்று யாழ் பல்கலைக்கழகச் சமூகத்தைச் சேர்ந்த 14 பேருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அச்சுறுத்தல் விடுக்கப்பட்டவுடன் சில விரிவுரையாளர்களும் மாணவர்களும் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்கள். சில மாணவர் பிரதிநிதிகள் தமது பதவிகளைத் துறந்தார்கள். அன்றைய சூழலில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவர்களில் வன்னியைச் சேர்ந்த மாணவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு உணவு, நிதி உதவி போன்ற மனிதாபிமான உதவிகளையும் உளவியல் ரீதியாக நம்பிக்கையளிக்கும் ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தோம்.

பல்கலைக்கழக மாணவ நலச்சேவையுடன் இணைந்து, தொண்டு நிறுவனத்தினரிடமும் புலம்பெயர்ந்த மக்களிடமும் பழைய மாணவர்களிடமும் கிடைத்த உதவிகள் மாணவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டன. அவற்றை ஒழுங்குப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் பெரும் வேலையையும் ஒரு கட்டத்தில் தனித்து நின்று செய்து கொண்டிருந்தேன். முக்கியமாக மாணவர்களின் இந்த மனிதாபிமான வேலைகளுக்காக நான் பதவியைத் துறக்காமல் செயற்பட்டேன். கடுமையான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்தும் போருக்கு எதிரான போராட்டங்களும் அறிக்கைகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தேன்.

என்னைச் சுற்றி வளைப்பில் விசாரணை செய்த பொழுது இராணுவம் மிகக் கடுமையாக எச்சரித்திருந்தது. ஈழக் கனவைக் கைவிட வேண்டும் என்று சொல்லியிருந்தது. எனக்கு நாளும் பொழுதுமாக நெருக்கடிகள் தரப்பட்டன. வேவ்வேறு விதமாக அந்த நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டன. அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களிலும் அன்றைய நெருக்கடிக்காலத்தில் செய்ய முடிந்த பணி மட்டுமே ஆறுதலைத் தந்தது. எனது கல்வியைவிட அந்தப் பணிக்கே முதன்மையளித்தேன். எந்தக் கட்டத்திலும் எனது மாணவர்கள் என்னுடன் இருந்தார்கள். எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் அவர்கள் அளித்திருந்தார்கள். அப்பொழுது பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் என். சண்முலிங்கன் மாணவர்களுக்கு ஆற்ற வேண்டிய மனிதாபிமானத் தேவைகள் குறித்து மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.

யுத்தம் முடிந்த நிலையிலும் எச்சரிக்கை அழுத்தங்கள் நீடித்தன. அப்பொழுது தடுப்பு முகாங்களிலும் போராளித் தடுப்புமுகாங்களிலும் அகப்பட்டிருந்த மாணவர்களை மீட்க வேண்டிய வேலையிருந்தது. அந்தத் கட்டத்தில் மீண்டும் மாணவர் ஒன்றியத் தலைவர் பிரசன்னா என்னுடன் இணைந்து கொண்டார். இருவரும் அதற்காகப் பல வகையான முயற்சிகளை எடுத்தோம். அப்பொழுதும் துணைவேந்தரின் கடும் உழைப்பு இருந்தது. இரவு பகல் பாராது முகாம்களிலிருந்து மாணவர்களை விடுவித்து அவர்களை மீண்டும் பல்கலைக்கழக கல்வியைத் தொடர வேலை செய்தோம். ஏற்கனவே கல்வி கற்ற மாணவர்களின் தேவைகளுடன் மேலும் இந்த மாணவர்களின் தேவைகளையும் கவனித்துக் கொள்ளும் முக்கிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. எனது படிப்பின் இறுதிக்கட்டம் வரை, மாணவர் ஒன்றியப் பொறுப்பிலிருந்த இறுதிவரை எனது கடமையைச் செய்தேன். அதுவரை மட்டுமல்ல அதற்குப் பின்னரும் எச்சரிக்கை அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன.



நேர்காணல்: கே.பாலமுருகன்
       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768