|
|
கோகுலக்கண்ணனின் தேவதைகள்...
கோகுலக்கண்ணனை எனக்குப் பெரிதாய்த் தெரியாது. அவரைப் பற்றிய பரிட்சயமும்
இல்லை. உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடான அவரின் 'இரவின் இரகசியப் பொழுது'
கவிதை தொகுப்பைப் பலமுறை புரட்டி இருக்கிறேன். மிக மெல்லிய சொல்லாடல்கள்
மூலம் வாழ்வின் ஆழ்நிலை பிம்பங்களை இயல்பாக பேசிச் செல்லும் தன்மையைக்
கொண்டவை அவரது கவிதைகள். நம்மோடு நம் வாழ்வில் பயணிக்கும் எல்லாம் அவரது
கவிதையின் கருப்பொருளாய் வெளிப்படும். எந்தவொரு பாசாங்குமின்றி, மிகை
ஒப்பனைகளின்றி அவரின் கவிதைகள் இயல்பாய் பேசும். கோகுலக்கண்ணனின் இரவின்
இரகசியப் பொழுது கவிதை தொகுப்பிலுள்ள ‘தேவதைகள்’ கவிதையில்தான் இம்மாத
சுவடு பதிகிறது.
முதலில்
தேவதைகள் இருக்கிறார்கள்
என்பதை நம்பவேண்டும்.
தேவதைகள் குறித்த நம்பிக்கை எனக்கும் ஒரு காலத்தில் தோன்றி இருந்தது.
'மரம்வெட்டியும் தேவதையும்' என்ற கதையை பள்ளியில் படித்த காலத்தில் பலமுறை
தேவதைகள் வந்து போயிருக்கின்றனர். “ஓர் ஊரில் ஏழை மரம்வெட்டி ஒருவன்
இருந்தான்” என்ற தொடங்கும் அந்தக் கதையில் ஆற்றில் விழுந்த கோடரிக்குப்
பதிலாக தங்க, வெள்ளி கோடரிகள் கொடுத்து தேவதை ஏழை மரம்வெட்டியை
மகிழ்விப்பாள். தேர்வுக் காலங்களிலெல்லாம் திடீரென தேவதைகள் வந்து சரியான
பதிலைக் கொடுத்துச் செல்லாதா என்றெல்லாம் யோசித்ததுண்டு. கடவுள்
இருக்கிறார் என்று நம்புபவர்கள் மட்டும் அதன் இருப்பை உணர்வதுபோல்
எப்போதும் ஒன்று இருக்கிறது என்று நம்பினால் மட்டுமே அதன் இருப்பு குறித்த
தெளிவு நமக்கு இருக்கும். தேவதைகளின் வாசமும் அப்படியானதுதான்.
தேவதையின் சிறகுகள்
மென்மையானவை
சுவர்களில் மோதினால்
வலியின் ரீங்காரத்தை
சுவர்களிலிருந்து விடுவிக்க முடியாது...
என் வீட்டில் எப்போதும் தொலைக்காட்சி பெட்டி எனக்கும் என் அண்ணிக்கும்
உரிமையானது அல்ல. அவை என் அண்ணாவின் இரு குழந்தைகளின் கைகளில்
ஒப்படைக்கப்பட்டு நீண்ட நாள்களாகிவிட்டது. எப்போதாவது அபூர்வமாய்
வாய்க்கும் சில தருணங்களில் மட்டுமே சில நிகழ்ச்சிகள் நாங்கள் பார்ப்பதற்கு
வாய்ப்புண்டு. இல்லையேல் அவர்கள் இருவரும் தூங்கிப் போயிருக்க வேண்டும்.
முழுநேரமும் கார்ட்டூன்கள் ஆக்கிரமித்திருக்கும் தொலைக்காட்சியை சிலவேளை
அவர்களோடு அமர்ந்து நானும் கார்ட்டூன் பார்ப்பதுண்டு. அதில் மிக
சுவாரசியமானது தேவதைகள் குறித்த கார்ட்டூன். மிக மெல்லிய உடலமைப்பில்,
இதுதான் வண்ணமென கணிக்க முடியாததொரு வண்ணத்தில், நெடுகிலும் இறக்கைகளை
அசைத்தபடி பறந்தபடியிருக்கும் தேவதைகள். தேவதைகளுக்கு ஆபத்து வருகிற
போதெல்லாம் பிள்ளைகள் இருவரின் முக உணர்வுகள் மாறும். ஏதாவது மிருகங்களாலோ
அல்லது மனிதர்களாகவோ வதைக்கப்படும் தேவதைகளின் வலியை நாமும்
உணரத்தொடங்குவோம்.
தேவதைகளின் உருவங்கள்
மாறக்கூடியவை
புழுவாகவோ
பறவையாகவோ
கிழவியாகவோ
குழந்தையாகவோ
காற்றாகவோ
மின்னலாகவோ
உள்ளே நுழைய நேரிடலாம்
தயாராக இருங்கள்
மழையாகவோ காற்றாகவோ இன்ன பிற இயற்கை சார்ந்த நிகழ்வுகளாக மாறும் வரம்
பெற்றவை தேவதைகள். ஆனால் மனிதன் அப்படியன்று. நல்லவன், கெட்டவன்,
ஏமாற்றுபவன், கொடியவன் பண்புசார்ந்து அவன் மாற்றம் பெறுகிறான். தேவதைகளின்
மாற்றம் என்பது தன் சுயபாதுகாப்புக்காக அல்லது பிறரின் நன்மைக்காக நடப்பதாக
என் புரிதல் இருக்கிறது. மனிதனின் மாற்றம் தனது சுயநலத் தேவைகளை
முன்னிறுத்திய ஒன்றாக இருக்கின்றது. எப்போதும் நாம் நமது வீட்டில்
தேவதைகளின் வரவை எதிர்ப்பார்த்தபடிதான் இருக்கிறோம்.
தேவதைகள் நுழைவதுபோல
வெளியேறவும் வழிகள் திறந்திருப்பது
அவசியம்
தடுப்பதின் துக்கம்
அனுமதிப்பதின் துக்கத்தைவிடக் கொடியது
தேவதைகள் நமக்கு மிகப் பிடித்தமானவை. அதன் வருகையை எதிர்ப்பார்க்கும் நாம்
அதன் பிரிவை பெரிதும் விரும்புவதில்லை. உள்வரும் தேவதைகளை பிடித்து
சன்னல்களை இருக்க மூடி அதனை நம்மோடு வைத்துக் கொள்ளவவே விரும்புகிறோம்.
சுதந்திரமாக பறந்து திரிவதற்காகவே தேவதைகள் வாழ்கின்றன என்பதை மறந்து
விடுகிறோம். நம்மைத் தேடி தேவதைகள் வராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகக்
கூட இருக்கலாம். நம்மோடு இருந்தால் சுதந்திரம் தொலைவதாய் உணரும் தேவதைகள்
இப்போதெல்லாம் நம்மை வந்தடைவதில்லை. வாழ்வின் இயல்புநிலை இதுதான். எதையும்
எதற்காகவும் அடைத்து வைத்திருக்க முடியாது. எல்லாவற்றையும் தன்பாட்டில்
இயங்க விடுவதுதான் இயல்பு.
தேவதைகள் வர
அல்லது
தேவதைகளை அறிய
வெகுகாலம் ஆகலாம்...
தேவதைகளின் வரவு எப்போதும் நிகழக் கூடிய ஒன்றல்ல. அது வாழ்வின் நிரந்தர
மகிழ்ச்சியைப் போன்றது. நிரந்தர மகிழ்ச்சி என்பது எப்படி எப்போதும்
கிட்டாததோ அது போலத்தான் தேவதைகளின் வரவும். சில வேளை இதுதான் தேவதை என
உணர்வதற்கான அறிவு நமக்கு இருக்கிறதா என்பதும் எண்ணிப் பார்க்கக்கூடிய
ஒன்று. தேவதைகளின் வரவு நமது காத்திருப்பை பொறுத்தது. இன்றேனும் நாளையேனும்
நாளை மறுநாளேனும் அதற்கு அடுத்த நாளேனும் தேவதைகள் வரலாம் என்ற
காத்திருப்பை பொறுத்தது.
காத்திருப்பதை
தனிமையை விளையாட்டாக்கும் குழந்தைகளிடமிருந்து
கற்றுக் கொள்ளுங்கள்
தேவதைகளுக்கான காத்திருப்பு என்பது தவம் போன்றது. தேவதைகள் ஒரு குறியீடு.
அதனை எவ்வகையானதாகவும் நாம் உருவகப்படுத்திக் கொள்ளலாம். காத்திருப்பதை
எப்போது ஒரு குழந்தையின் மனப்பான்மையோடு நாம் ஏற்றுக் கொள்கிறோமோ
அந்ததருணத்தில் வந்தடையலாம் ஒரு தேவதையின் வாசம்...
|
|