|
|
மண்ணும் மனிதர்களும் - 2
ஆதர்ச எழுத்தாளர் என்று ஒருவரை ஏற்று, அவரை விதந்தோதுவது என்பதை
பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். வீர வணக்கம் என்பதெல்லாம் சுத்தமாகக்
கிடையாது. எல்லாப் படைப்பையும் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகி,
தாண்டிச் செல்வதுதான் சரியான வாசிப்புமுறை என்பதாக நானே இலக்கிய நுகர்ச்சி
பாலிசி ஒன்றை வைத்துள்ளேன்.
விமர்சனக் கண்ணோட்டம் என்றவுடன் academic-ஆக எதுவும் கற்பனை
செய்துகொண்டுவிடாதீர்கள். என் இலக்கிய அறிமுகம் என்பது மிக சாதாரணமான,
மலேசிய கல்விமான்கள் அறிமுகப்படுத்திய புத்தகங்கள் மட்டுமே படித்து,
அதுதான் இலக்கிய உலகம் என்று எல்லோரையும் போலவே இலக்கிய அறிமுகம் பெற்றேன்.
ராணி முத்து, குமுதம், விகடன், மாயாவி காமிக், சாண்டில்யனின் 'சரித்திரப்'
புதினங்கள் என்று ஒரு 'chronological order'-ல் தான் என் வாசிப்பனுபவமும்
அமைந்தது. மலேசிய மண்ணின் ஆஸ்தான எழுத்தாளர்களான அகிலன், மு.வ, ஜெயகாந்தன்,
ஆகியோரைப் படிக்காமல் உங்கள் இலக்கியப் பயணம் 'take-off' பண்ணாது. அதிலும்
அகிலன். மு.வ எல்லாம் படித்தே ஆகவேண்டிய ஆளுமைகள். இல்லாவிட்டால் மலேசியத்
தமிழ் இலக்கியத்தில் `A` போட முடியாது! (மலேசிய ஆசிரியர் பயிற்சிக்
கழகங்களில் இன்னமும் மூட்டைப் பூச்சியின் முகாரியும், உலகப் பேரேடும் பாடப்
புத்தகங்களாக இருப்பதாகக் கேள்வி. தாங்க முடியலடா, சாமி!!)
மலாயாப் பல்கலைக் கழகத்தில் தற்கால இலக்கியம் பயின்ற காலத்தில் டாக்டர்
தண்டாயுதம் புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். முக்கிய ஆளுமைகள்
பாரதியும், புதுமைப்பித்தனும். ஆயினும், இலக்கியப் பிரதியின் அடிப்படைக்
கட்டமைப்புகள் பற்றியே மொத்த பார்வையும் மையமிட்டிருந்தது. மிகவும்
சுவையான, நாங்கள் அதிகம் எதிர்ப்பார்த்திருக்கும் வகுப்பு அவரதுதான்.
ஆனால், மலாய் இலக்கிய வகுப்புகளில் கிடைத்த பரந்துபட்ட இலக்கிய ஆய்வு
அணுகுமுறைகள் கிடைக்கவில்லை.
மலாய் இலக்கியத்தில் வாசிக்கக் கிடைத்த அற்புதமான புத்தகங்கள் (குறிப்பாக
இந்தோனேசிய இலக்கிய ஆக்கங்கள்) மலேசிய தமிழ் இலக்கியத்தின் போதாமையை மிகத்
தெளிவாக உணர்த்தின. நமது இலக்கியத்தின் மிக முக்கிய பலமாக நாம் கருதுவது
'மலேசிய மண்ணில்' நிலைக்கொள்ளும் கதைக் கருதான். அது மட்டும்தான். ஆனால்
'மண் வாசனை' மட்டுமே நல்ல இலக்கியத்தை தந்துவிடாது அல்லவா! கூறும் முறை,
உரைநடையில், சொல்லாடலில் புதுமை, கனம், மௌனமாய்க் கடந்து செல்லும்
எண்ணங்களை மொழிபெயர்க்கவல்ல சொல் ஆளுமை / வளமை (கலைச்சொற்கள்), தட்டையான
இலக்கிய விமர்சனம் அல்லது ரசனையை தவிர்க்க உதவும் புதிய பல்துறை சார்ந்த
அணுகுமுறைகள் போன்றவை முதன்மைப் படுத்தப்படவில்லை. இன்னும் தெளிவாகக்
கூறினால், புதிய எழுத்தாளர்களையோ, விமர்சகர்களையோ உருவாக்கக் கூடிய
வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
இன்றைக்கும் நிலைமையில் அங்கு பெரிய மாற்றம் இருப்பதாகக் தெரியவில்லை.
மலாயாப் பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணன் மணியன் கோட்பாடுகள் பற்றி கொஞ்சம்
பேசுகிறார். அவரும் அடிப்படைத் தகவல்கள் மட்டும்தான் தருவார். எங்குப்
பேசினாலும் அதே உதாரணம். ஆனாலும் பேசினார். சபாபதி, (மலேசிய தமிழ்
எழுத்தாளர் சங்கத்தின் முதன்மை இலக்கிய ஆசான்!) மிகச் சாதாரணமான,
மேலோட்டமான, இலக்கிய கட்டுரைகள் (பெரும்பாலும் சிறுகதைப் போட்டி
நீதிபதியின் ஒரு `பறவைக் கண்` பார்வை - bird eye view) மூலமாகத்தான்
அறியப்படுகிறார். கதைக் கரு, பாத்திரப் படைப்பு, உத்திகள், கதைச் சொல்லும்
கருத்து என்பது போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் பற்றியே அவர் 'ஆய்வு'
மையமிட்டிருக்கும். அவர் கலந்துகொண்டு கட்டுரை வாசித்த நிகழ்ச்சிகளில்
தொடர்ந்து வலியுறுத்தப்படும் ஒரு கருத்து, 'மலேசிய வளரும்
எழுத்தாளர்களுக்கு இத்தகு கருத்தரங்குகள் மிகவும் அவசியம்' என்பதே.
பிரச்சனை என்னவென்றால் அவர் (எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்யும்
நிகழ்ச்சிகள்தான்) வழி நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பல
எழுத்தாளர்கள் ரொம்பவும் 'பழையவர்களாக' இருப்பதுதான்!
பிறகு எப்படி சு.ரா, கி.ரா, அசோகமித்திரன் என்ற பெயரெல்லாம்... வாய்ப்பே
கிடையாதே..?
வாசிப்பு பழக்கம்தான்!
நீடித்த வாசிப்பிற்கு திருப்தியின்மையும், தொடர் தேடலும் அவசியம். நல்ல
படைப்பை உள்வாங்க விரிவான வாசிப்பனுபவமும், விமர்சனப்பூர்வமான
அணுகுமுறையும் அவசியம் என்றே கருதுகிறேன். சரியான புத்தகங்களைத் தேர்வு
செய்வதற்குக்கூட பயிற்சி தேவை. வாசிப்பின் முழுப்பயனையும் அடைய
வாசகனுக்கும் சில முஸ்தாயிபுகள் தேவை. அது எழுத்தாளனுக்கு நாம் செய்யும்
மரியாதையும் கூட. இல்லையெனில், காலத்துக்கும் சராசரிகளுடன் சமரசம்
செய்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.
எழுத்தாளர்களுடனான தொடர் விவாதமும் நல்ல வாசிப்பிற்கு வழிவகுக்கக்கூடும்.
நம் நாட்டில் எப்போதுமே தீவிர இலக்கியத்தில் கவனம் செலுத்திவரும்
எழுத்தாளர்கள் / விமர்சகர்கள் / வாசகர்கள் இருந்தே வருகிறார்கள். ஆனால்,
இவர்களை அடையாளம் காண்பதுதான் பெரிய பிரச்சனை. முக்கிய காரணம், இத்தகையோரை
இணைக்கும் களமோ, வாய்ப்போ ரொம்ப நாளாகவே இல்லை. எல்லோருமே தனித்தனி
தீவுகளாக இயங்கி வந்தனர். சு.ரா.வை மலேசியாவிற்கு வரவழைத்து, இலக்கியம்
பேசிய மூத்த எழுத்தாளர்கள் நம்மிடையே இன்னும் இருக்கின்றனர். ரெ.
கார்த்திகேசு, அன்புச்செல்வன், சை. பீர்முகம்மது, சாமிமூர்த்தி, சீ.
முத்துசாமி, அரு.சு. ஜீவானந்தம், அமரர் எம்.ஏ. இளஞ்செல்வன் (இன்னும் நிறைய
பேர் இருக்கலாம். உடனே நினைவில் தோன்றியவர்களைக் குறிப்பிட்டுள்ளேன்)
போன்றோரின் படைப்புகள் கனமானவையே.
ஆரம்பத்தில் இவர்கள் யாரையுமே தேடிச்சென்று இலக்கியம் பேசியதில்லை. அப்படி
ஓர் எண்ணமே ஏற்படாமல் இருந்ததற்கான காரணம் என்னவென்றும் அறுதியாகக்
கூறுவதற்கில்லை; தெரியாது! ரெ.கா.விடம் மட்டும் கொஞ்சமாகப்
பேசியிருக்கிறேன். அவர் என் நண்பன் ரமணியின் மாமா என்பதால். ஆழமான
வாசிப்பும், நல்ல கதைகளும் எழுதிய, பழகுவதற்கு இதமானவராகவும் இருந்ததால்.
இந்தச் சமயத்தில்தான் எங்கள் இந்தியப் பயணம் வாய்த்தது.
மலிவான விலையில் ஏராளமான புத்தகங்கள் வாங்கலாம் என்பது மட்டுமே எங்கள்
பயணத்தின் 'இலக்கியத் தேடல்'. மற்றபடி நோக்கமெல்லாமே நன்றாக ஊர் சுற்றுவது
மட்டும்தான்.
நக்கீரன்தான் சொன்னார். முதலில் புத்தகங்கள் வாங்கி அனுப்பிவிடுங்கள்.
கப்பல் தபாலில் அனுப்பினால் நீங்கள் நாடு திரும்பும்போது உங்களை வந்தடையும்
என்று. அவரே மயிலாப்பூரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஆறடிக்குமேல், கொழுகொழுவென, வெள்ளையாய் ஒரு வட இந்தியர் புத்தகக்
குவியலுக்கு நடுவில் அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். பார்ப்பதற்கு
கொஞ்சம் 'பாவமாககூட' இருந்தது. (பிறகு எங்களுடன் இலக்கியம் பேசியபோது
நிச்சயம் அவர் எங்களைப் பார்த்து 'பாவப்'பட்டிருப்பார்!)
'இவர்தான் திலீப்குமார்,' நக்கீரன்.
'ஓ,' தமிழ்மாறனும், நானும்.
வேறு என்ன சொல்ல. இதற்குமுன் இவர் படைப்புகள் எதுவும் படித்த ஞாபகமே இல்லை.
இந்தப் 'பாய்' ஏன் இங்கு இருக்கிறார் என்றுதான் நான் யோசித்தேன். ஆனால்,
அந்தச் சந்திப்பு பெரிய நன்மைகளைக் கொண்டு வந்தது. முதலாவதாக, சிற்றிதழ்
தொடர்புகளை அவர்தான் ஏற்படுத்திக்கொடுத்தார். நல்ல இலக்கிய (ஆனால் அதுவரை
கண்டுகொள்ளாமல் விட்டிருந்த) படைப்புகளை எங்களுக்கு அறிமுகம் செய்தார்.
ஆளுக்கு ஆயிரம் வெள்ளி அளவுக்கு புத்தகங்கள் வாங்கினோம். பழகுவதற்கு
இனிமையானவர்; மற்ற எழுத்தாளர்களைப் பற்றி தவறியும் தப்பாக எதுவும்
சொல்லவில்லை! நம் நாட்டு எழுத்தாளர்களில் டாக்டர் சண்முகசிவா பற்றி மட்டும்
குறிப்பிட்டுக் கூறினார்.
அவரும், கவிஞர் கலாப்பிரியாவும் மலேசியா வந்திருந்தபோது மீண்டும்
சந்தித்தேன். (அன்றைய நிகழ்வில்தான் திலீப்குமாரிடம் நம் நாட்டு முன்னனி
எழுத்தாளர் ஒரு கேள்வியை முன்வைத்தார் - 'சிறுகதை என்றால் என்ன?' -
ஏறக்குறைய ஒரு மணி நேரம் சிறுகதையின் 'உள்ளே-வெளியே-நடுவே-பக்கவாட்டில்' என
அனைத்து தகவல்களையும் அலசி ஆராய்ந்துவிட்டு திலீப்குமார் அப்போதுதான்
உட்கார்ந்தார். அப்போது திலீப்குமாரைப் பார்க்க ரொம்பப் பாவமாகவே
இருந்தது).
சிற்றிதழ்களின் பரிட்சயம் கிடைத்தபிறகுதான் பல `கனரக` எழுத்தாளர்களின்
படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,
சாருநிவேதிதா, வண்ணதாசன், வண்ணநிலவன் எல்லாம் 2001-க்குப் பிறகே எனது தீவிர
கவனிப்புக்கு வந்தார்கள்.
இப்படியாக, எழுத்தாளர்களின் அறிமுகம் என்பது அவசியமான ஒன்றுதான் என்ற
புரிதல் ஏற்பட்டது.
இல்லையேல், திலீப்குமாரின் 'கடவு' சிறுகதைத் தொகுப்பை வாசிக்க
வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
|
|