|
|
ம. நவீனின் ‘என் அம்மாவுக்கு ஒரு மணி கிடைத்தது’
சில நாட்களுக்கு முன்னர் நான் படித்த ஆங்கில குறுங்கதை இது. அளவில் சின்ன
கதையாக தோன்றினாலும் சிந்திக்க தூண்டிய அருமையான கதை.
ஒருவன் தன் புதிய காரைப் பாலீஷ் செய்து கொண்டிருந்தபோது, அவனது நான்கு வயது
மகன் கல்லை எடுத்து காரில் சில கோடுகளால் கீறினான். கோபத்தினால் அவன் தன்
மகனின் கையை எடுத்து பலமாய் ஆவேசத்துடன் பல முறை முரட்டுத்தனமாய்
அடித்தான்.
மருத்துவமனையில் எலும்பு முறிவினால் மகன் விரல்களை இழந்தான்.
அவன் தன் தந்தையைப் பார்த்து,
‘அப்பா, என் விரலெல்லாம் எப்ப வளரும்’ என வலியுடன் கேட்டான்.
மனம் வேதனையுற்றவனாய் வார்த்தைகளின்றி தடுமாறினான். நேரே தன் காருக்குச்
சென்று காரைப் பலமுறை எட்டி உதைத்தான். தன் செயலால் மனம் உடைந்து காரின்
முன்னால் அமர்ந்து கீறல்களை உற்றுப் பார்த்தான். அவனது மகன் எழுதிய வரிகள்
கண்ணில் பட்டன. ‘Love You Dad’. மறுநாள் அவன் தற்கொலை செய்து கொண்டான்.
பொருள்கள் பயன்படுத்துவதற்கு, மனிதர்கள் அன்பு செலுத்துவதற்கு ‘Things are
to be used and people are to be loved’. ஆனால் இன்றைய சூழலில் மனிதர்கள்
பயன்படுத்தப்படுகின்றனர். பொருள்கள் மீது அன்பு செலுத்தபடுகின்றது.
மனிதர்களுக்குக் கிடைக்கும் பொருட்கள் சட்டென மிக பெரிய அங்கீகாரத்தைப்
பெற்று சக மனிதர்களைவிடவும் உயர்ந்ததென போற்றப்படுகின்றன. சகோதரர் நவீன்
அவர்களின் கதையிலும் அம்மாவுக்கு அத்தகைய ஒரு மணி கிடைத்துவிடுகின்றது.
எங்கே எப்போது என்ற கேள்விகள் தலையில் ஏறி நிற்கும் முன்னரே
‘காலம்: சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு,
இடம்: கெடா மாநிலத்தில் உள்ள கம்போங் செட்டி கம்பத்தில்’
என கதையின் தொடக்கமே அதன் தகவலைத் தந்துவிடுகின்றது. ஊருக்கு சென்றுவிட்ட
தாத்தாவின் பழைய பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த மணி அம்மாவின்
பக்தி உள்ளத்துக்கு இன்னும் உற்சாகமூட்டுகின்றது. அம்மாவின்
வாழ்க்கைப்பகுதியில் மணி ஓர் உன்னத இடத்தைப் பிடித்துவிடுகின்றது.
கதைச்சொல்லிக்கு மணியின் அறிமுகம் அதற்கு முன்னரே ஏற்பட்டிருந்தது.
கோயிலில் மணியடிக்கும் பணியைச் செய்வதால் அதன் உருவம், ஒலி போன்றவற்றை
உன்னிப்பாக கவனிக்கும் பார்வை கதைச்சொல்லிக்கு உண்டு. கம்பத்தில் ஐஸ்
விற்கும் சீனனுக்கும் மைலோ ஐஸ், அசாம் ஐஸ் விற்கும் கச்சான் தாத்தாவிற்கும்
இரண்டு முக்கிய வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒன்று சீன ஐஸ்காரரிடம் மட்டுமே
இருந்த மணி. மற்றொன்று ஐஸ் விலை. சீன ஐஸ்காரரிடம் இருபது காசு, கச்சான்
தாத்தாவிடம் பத்து காசு. இவையனைத்தும் கதைச்சொல்லிக்கு மணியின் நினைவை
என்றும் பசுமையாக வைத்திருக்க செய்கின்றன.
அம்மாவின் வாழ்க்கையில் புதிய அர்த்தத்தைக் கொண்டு வந்த மணி ஒருநாள்
காணாமல் போகின்றது. அதன் பின்விளைவுகளும் அதனால் ஏற்படும் நன்மைகளும்
நகைச்சுவையாக கதையின் இறுதியில் வெளிப்படுகின்றது.
இக்கதையில் மணி, இன்றைய உலகிலோ ‘மணி’ (Money). பணத்தின் மீது காட்டப்படும்
அன்பும் மரியாதையும் மனித உயிர்களின்பால் காட்டப்படுவதில்லை. ஏன் என்று
ஆராயக்கூட நேரமின்றி பணம் மனிதர்களை சுற்றி வளைத்திருக்கின்றது. பணத்தினால்
உணவை வாங்கலாம்; திருப்த்தியையும் பசியையும் வாங்க முடியாது. பணத்தினால்
மெத்தை வாங்கலாம்; உறக்கத்தை வாங்க முடியாது. பணத்தினால் ஆடம்பர வாழ்க்கை
வாழலாம்; மகிழ்ச்சியைக் கொண்டு வரமுடியாது. இறப்பும் பிறப்பும் கூட
பணத்திற்கு அப்பாற்பட்டதாகவே உள்ளது. பணம் தரும் பொருளியல் வாழ்க்கையை
விடவும் எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கை முழுவதும் கொட்டி கிடக்கின்றன. பணம்
பொருளியல் வாழ்க்கைக்கு முக்கியமானதென்பதை மறுக்க முடியாது. அதன்மீது
காட்டப்படும் அதே அளவு அன்பைச் சக மனிதர்களிடமும் காட்டினால் சிறப்பாக
அமையும் என மட்டும்தான் தோன்றுகின்றது.
பொருளியல் இன்பம் நிரந்தரமற்றது என்ற உணர்வு இல்லாமை மனித அன்பைப்
பெருமளவும் குறைத்து விடுகின்றது. தற்காலிகமாக மனித கைகளில் சிக்கிக்
கொள்ளும் பொருட்கள் வாழ்க்கையில் மாயையை உருவாக்குவதில் வெற்றி காண்கின்றன.
இத்தருணங்களில் பொருட்களின் மீதான ஆசையைத் தகர்க்க முடியாமல் மனித மனங்கள்
பொருட்களின் முன் மண்டியிட்டுவிடுகின்றன. அளவற்ற ஆசைகளின் பின்விளைவுகளும்
மகிழ்ச்சியை உதறித் தள்ளிவிடுகின்றன.
குடும்பத்துடன் கழிக்கும் நேரத்தை விடவும் அம்மாவின் நேரம் பெருமளவும்
மணியிடமே கழிகின்றதைக் கதையில் காண முடிகின்றது. கதைத்தளம் பதினைந்து
ஆண்டுகளுக்கு முன்பு என்பதால் சின்னத்திரை நாடகங்கள் மணிக்கு இடையூறாக
குறுக்கிடவில்லை என்ற காரணத்தால் மனம் ஆறுதல் அடைகின்றது. அம்மா
கதாப்பாத்திரத்தைப் போன்ற இக்கால பெண்கள் சிலர் சின்னத்திரையை மணியைப்
போலவே இறுக்கிப் பிடித்துக் கொள்கின்றனர். அவர்களது உரையாடல், கவனம்,
ஆர்வம் அனைத்துமே சின்னத்திரையின் மீதே சார்ந்திருக்கின்றது. தன் அருகில்
இருக்கும் மனித உயிர்களைவிடவும் சின்னத்திரையில் வேஷத்துடன் உலவும் மனித
கதாப்பாத்திரங்களையே அதிகம் நேசிக்கின்றனர். நிதர்சன வாழ்க்கையை விட்டு
நழுவி பார்த்த வேஷங்களை மனதினுள் நிறைத்து அவ்வாறே செயல்பட தொடங்க
முற்படுகின்றனர். அதன் கூர்மையான பாதிப்புகள் சமுதாயத்தைச் சிறிது சிறிதாய்
பாதித்துக் கொண்டே வருகின்றன. அப்பாதிப்புக்களை எடுத்துணர்த்தும் எவ்வித
கருத்துக்களையும் அவர்கள் ஏற்பதில்லை.
தாத்தா விட்டு சென்ற பழைய பொருள் என்பதும் அம்மாவுக்கு மணியின் மீதான
அன்புக்குக் காரணமாய் இருக்கலாம். முன்னோர்கள் விட்டு சென்ற பொருட்கள்
அற்புதமானவை என்ற உணர்வு தேங்கி கிடக்கும் மனித மனங்களில் முன்னோர்கள்
விட்டு சென்ற பண்புகள், குணங்கள் ஏனோ இடம்பிடிக்க மறுப்பதை இக்கணம் என்
சிந்தனையில் கேள்வியாய் உருவெடுக்கின்றது. மணியின் ஒலி ஒவ்வொன்றும்
காதுகளில் விழும்போது பொருளியல் சார்ந்த கேள்விகளைக் கதையின்போதும் கதை
முடிந்த பின்னரும் அடுக்கிக் கொண்டே செல்கின்றது.
அம்மாவின் மணியின் ஒலி எப்பொழுதும் பொருளியல் வாழ்க்கையில் ஆழ்ந்த
நித்திரையில் இருக்கும் சிந்தனைகளை இடைவிடாது தட்டி எழுப்பிக் கொண்டே
இருக்கும்.
|
|