|
|
இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை
editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது.
ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன.
இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன?
பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது
கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது.
இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான அளவுகோல்கள் எதுவுமில்லை. ஒவ்வொரு
உயிரியுடைய வாழ்வியல்/ அரசியல் தன்னிலைகளே இலக்கியம் குறித்த வித்தியாசம்
வித்தியாசமான அளவுகோல்களை தம்மளவில் உருவாக்குகின்றன. எல்லோருக்குமான
மகத்தான இலக்கியம் என்று இங்கே எதுவுமில்லை. எடுத்துக்காட்டாக நவீன தமிழ்
இலக்கியத்தின் முதன்மையான முகங்களில் ஒன்றாக சுஜாதாவை இப்போது தூக்கி
நிறுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் சுஜாதாவின்
இலக்கியம் நவீன இலக்கியமல்ல, அது நச்சு இலக்கியம். சுஜாதா
சுயசாதிப்பற்றுடன் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டது
இவர்களுக்கு வெறும் செய்தியாக மட்டுமேயிருக்கலாம். சுஜாதா உரையாடல் எழுதிய
திரைப்படங்களில் ஆண்திமிர் வக்கிர வசனங்களை எழுதியதும், விளிம்புநிலை
மக்கள் மீதான காழ்ப்பு நிறைந்த சொல்லாடல்களை உமிழ்ந்ததும் இவர்களிற்கு
புறக்கணிக்கப்பட கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மதவாத,
சாதியவாத பிற்போக்குத்தனங்களின் விளைவுகளாகவே இவற்றை நான் எச்சரிக்கையுடன்
அணுகுவேன். அவரது அதே பிற்போக்குத்தனம் அவரது எழுத்திலுமிருந்தது. அவரது
எழுத்து வெகு சாதாரணமான வணிக எழுத்து. வணிக எழுத்தில்கூட சுஜாதாவைக்
காட்டிலும் பாலகுமாரன் சற்றே ஆழமானவர் என்றே நான் சொல்வேன். பாலகுமாரனுக்கு
எப்போது நவீன இலக்கிய முகத்தைப் பொருத்தப்போகிறார்களோ தெரியவில்லை. நவீன
இலக்கியத்திற்கு சுஜாதாவின் பங்களிப்பாக ஒரே ஒரு புத்தகத்தை இவர்கள்
துணிந்து சொல்லட்டும் பார்க்கலாம். நா. முத்துக்குமாருக்கும் கனிமொழிக்கும்
'கணையாழி' இதழில் அறிமுகம் கொடுத்தார் என்பதற்காக சுஜாதா நவீன
இலக்கியத்தின் முகமென்றால் வாழ்நாள் முழுவதும் எழுதுபவர்களை
உற்சாகப்படுத்துவதையே இயக்கமாகக்கொண்டிருக்கும் அய்யா தி.க.சியை
என்னவென்பது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் சுஜாதாவை உச்சமாகக்
கொண்டாடுவது ஒரு போக்கு எனில் அதை கடுமையாக நிராகரிக்கும் போக்கும்
சமாந்தரமாகவே நிகழ்கிறது. அசோகமித்திரனை இலக்கிய உச்சமாகக் கொண்டாடும்
தரப்பு இங்கே வலுவாகயிருக்கிறது. ஆனால் என்னை அசோகமித்திரனது ஒருவரி கூடக்
கவருவதில்லை. கே. டானியலின் நாவல்களை நான் பக்கம் பக்கமாக மனப்பாடமாக்கி
வைத்துள்ளேன். ஒருவரது வாழ்நிலை / அரசியல் கருத்துநிலை போன்றவையே
இலக்கியத்தில் அவரது மனதுக்கு நெருக்கமான பிரதிகளை வரித்துக்கொள்கின்றன.
நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல்
இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள்
சார்ந்து இயங்காதபோதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்தும் அரசியலில் தீவிர
அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன்.
அதிலிருந்துதான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான்
உருவாக்கிக்கொள்கிறேன்.
நான் அடிக்கடி சொல்வதுதான்: என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப்
பிரசுரங்கள்.
உங்கள் ஆரம்பகால படைப்புகள் எந்த இதழில் பிரசுரமாயின? முதல் முயற்சிகள்
தொகுக்கப்பட்டுள்ளதா?
எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் புலிகள் அமைப்பில் நான் இருந்தகாலத்தில்
நிகழ்ந்தவை. இயக்கத்தின் கருத்தியல் சார்ந்தே சில கவிதைகளை 1984- 1986
காலப்பகுதிகளில் எழுதியிருக்கிறேன். அவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான
'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. நாடகங்கள்
எழுதி நடத்தியிருக்கிறேன். இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பு நீண்ட
இடைவெளி. 1997ல் பாரிஸில் 'அம்மா' என்ற சிறுபத்திரிகையை தோழர் மனோ
தொடக்கியபோது முதல் இதழிலிருந்து கடைசி இதழ்வரை (13 இதழ்கள்) தொடர்ச்சியாக
எழுதினேன். 1999லிருந்து 'எக்ஸில்' பத்தரிகையில் தொடர்ச்சியாக எழுதினேன்.
அவற்றில் எழுதிய கதைகள் எல்லாம் 'தேசத்துரோகி' தொகுப்பில் வெளியாகியுள்ளன.
கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை.
இன்று புத்தகங்களைச் பெரிய அளவில் சந்தைப்படுத்தும் உயிர்மை, காலச்சுவடு
போன்ற நிறுவனங்கள் இருக்கும் போது நீங்கள் 'கருப்பு பிரதி'யில்
பதிப்பிக்கின்றீர்கள். என்ன காரணம்?
பெரிய அளவில் சந்தைப்படுத்துவதுதான் நோக்கமெனில் காலச்சுவடையும்
உயிர்மையையும் அணுகியும் பிரயோசனமில்லை. நேராகவே 'கிழக்கு' பதிப்பகத்தை
அணுகவேண்டியதுதான். ஆனால் இந்த சந்தைப்படுத்தல் 'டெக்னிக்' தீவிர இலக்கிய /
அரசியல் நூல்களிற்கு பெருமளவில் உதவுவதில்லை. பதிப்பகத்திற்கும்
சந்தைப்படுத்தலிற்கும் அப்பால் நூலின் தன்மையே விற்பனையை நிர்ணயிக்கும்
காரணியாகச் செயற்படும் நிலையே தமிழில் இன்னும் இருப்பதாகக் கருதுகிறேன்.
'கருப்புப் பிரதிகள்' நீலகண்டன் நீண்டகாலமாக எனது அரசியற் தோழர். அவர்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை
தோழர்களுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கையில் எனக்கு அறிமுகமானவர்.
பெரியாரியல் எங்கள் இருவரையும் நெருக்கமாக்கியது. தொடர்ச்சியான
உரையாடல்களின் ஊடாகவும் அவ்வப்போதான செயற்பாடுகள் மூலமாகவும் நாங்கள்
இருவரும் நெருங்கிய தோழர்களாயுள்ளோம். ஈழத்து எழுத்துகளின் மீதும்
புலம்பெயர்ந்த எழுத்துகளின் மீதும் அவர் தீவிர ஈடுபாடுடையவர். புலம்
பெயர்ந்தவர்களின் சில புத்தகங்களையும் அவர் சிறப்பாக வெளியிட்டுள்ளார்.
இவையே என்னையும் கருப்புப் பிரதிகளையும் இணைத்துவைத்துள்ளது.
நீலகண்டனிடம் பெரியளவில் முதலீடும் பிற வசதிகளும் இல்லாதபோதும் அவர்
பதிப்பிக்கும் நூல்களை மட்டுமல்லாது 'விடியல்' போன்ற வேறு பதிப்பகங்கள்
வெளியிடும் அவரது அரசியலுக்கு உடன்பாடான நூல்களையும் 'தலித் முரசு' போன்ற
இதழ்களையும் சுமந்துசென்று தமிழகம் முழுவதும் இலக்கியக் கூட்டங்களிலும்
அரசியல் நிகழ்வுகளிலும் விற்பனை செய்து வருபவர் நீலகண்டன். அவருக்கு
நூற்பதிப்பு என்பது ஓர் அரசியல் செயற்பாடே தவிர வியாபாரமல்ல. எனக்கு
இவ்வாறான ஒரு பதிப்பாளரே பொருத்தமானவர்.
இலக்கிய சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தால்தான் என்ன? எவ்வகையான
சர்ச்சைகளை விமர்சனங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்?
இலக்கிய சர்ச்சைகளில் எல்லாம் நான் இறங்குவதில்லையே. ஏனெனில் இலக்கியம்
சார்ந்த எனது கோட்பாடு அறிவு மிகக் குறைவானது. ராஜ்கவுதமன், எம்.ஏ.
நுஃமான், அ.மார்க்ஸ், தமிழவன், ராஜன்குறை, ஜெயமோகன், பிரேம், பிரம்மராஜன்
போன்ற இலக்கிய விமர்சகர்கள் விரிந்தளவு இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள்.
அவர்களைப் போன்றவர்கள் இருக்கும் இலக்கிய விமர்சன உலகில் எனக்கென்ன வேலை.
இங்கே நான் குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் நான் தீவிரமாகப் பின்தொடர்ந்து
பயிலும் ஏராளமான தீவிரமான இலக்கிய விமர்சகர்கள் நம்மிடையே உண்டு. என்னுடைய
வேலை இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவதல்ல. இவர்களைப் பயில்வதும் பயின்றதை
என்னில் உரசிப்பார்ப்பதுமே என்னுடைய வேலை. அதன்வழியே என்னுடைய இலக்கிய
எழுத்துகளை நெறிப்படுத்திக்கொள்வதே எனது குறி.
எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் இலக்கியம் குறித்து ஏதாவது
குறிப்பிட்டிருந்தால் அந்தக் கருத்து இலக்கியத்தை மையப்படுத்தியதாக
இருக்காது. அதாவது இலக்கியத்தின் உள்ளேயிருக்கும் படைப்புத்திறன் சார்ந்த
நுண் அலகுகளை நான் பேசியிருக்கமாட்டேன். ஏனெனில் அது எனக்குத் தெரியாது.
அரசியலுக்கும் இலக்கியத்துக்குமான ஊடாட்டங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்தே
பேசியிருப்பேன். மலேசியாவில் 'வல்லினம்' ஏற்பாடு செய்த கூட்டத்தில் நவீன
இலக்கியம் என்ற தலைப்பில் பேசுங்கள் எனச் சொல்லிவிட்டீர்கள். நான்
தலைப்பையே தலைகீழாக்கி 'தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?' என்று
பேசினேன். இலக்கியப் பிரதிகளிற்குள் இருக்கும் அரசியலைப் பேசினேன்.
படைப்புத்திறன் சார்ந்த ஏரியாவிற்குள்ளேயே நான் நுழையவில்லை.
நான் அரசியல் விவாதங்களில் முனைப்பாக ஈடுபடுவதைத்தான் நீங்கள்
கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எவ்வகையான 'சர்ச்சை'களைக் கவனத்தில்
எடுத்துக்கொள்கிறேன் என்றால் எதையும் விட்டுவைக்க விரும்பவில்லை. நேரம்
ஒத்துழைக்கும்வரை முடிந்தளவு எல்லாவித அரசியல் விவாதங்களிலும் எனது
கருத்தைப் பதிவு செய்துவிடவே விரும்புகிறேன். சர்ச்சைகளும் பதில்களும்
என்று ஏன் பார்க்கிறீர்கள்? அதை உரையாடலாகப் பாருங்கள். சுதந்திரமான
அரசியல் உரையாடலின் அருமையை ஈழத்தவர்கள் போல உணர்ந்தவர்கள் வேறுயாருமில்லை.
ஏனெனில் அது அவர்களிற்கு அகத்திலும் புறத்திலும் கடுமையாக
மறுக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதால் எனது படைப்புத்திறன் நாசமாகப் போவதெனில்
அது அப்படியே போகட்டும். அரசியல் விவாதங்களாலும் உரையாடல்களினாலுமே எனது
அரசியல் நிலைப்பாட்டை நான் செம்மை செய்து கொள்கிறேன். அந்த
நிலைப்பாட்டிலிருந்துதான் என்னுடைய இலக்கிய எழுத்துகள் உருவாகின்றன.
அரசியல் உரையாடலகளும் விவாதங்களும் இல்லையெனில் எனது எழுத்தும் இல்லை.
சரி அவதூறுகளிற்கும் வேலைமெனக்கெட்டுப் பதிலளித்துக்கொண்டிருக்க வேண்டுமா
என நீங்கள் கேட்கக்கூடும். அது யார் அவதூறு சொல்கிறார்கள் என்பதைப்
பொறுத்திருக்கிறது. வெறுமனே வம்புக்கு கணனியில் நாலெழுத்தைத் தட்டி நம்மை
வம்புக்கு இழுப்பவர்கள் குறித்துக் கவலையில்லை. அதைப் புறக்கணிக்கலாம்.
ஆனால் 'வினவு' இணையத்தளம் அல்லது 'கீற்று' இணையத்தளம் போன்று
தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளில் இருப்பவர்கள் நம்மீது அவதூறு
செய்யும்போது அவற்றிற்குப் பின்னே இருப்பது வெறும் வம்பளப்பு மட்டுமே என
நான் கருதமாட்டேன். நமது கருத்துநிலைகளை அவர்கள் அவதூறுகளால் தகர்க்க
நினைக்கும்போது அதற்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். அவ்வளவு வலுவான
எய்ட்ஸையே எதிர்த்துக் கட்டுப்படுத்துகிறார்கள், இந்த புகைபோன்ற
அவதூறுகளைத் தோலுரித்துக்காட்ட முடியாதா என்ன!
உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்ச்சூழலில் எவ்வகையான ஆரோக்கியமான
விமர்சனங்கள் எழுந்துள்ளன? தமிழ்நாட்டில் பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்களை
மறுக்கும் மனம் உண்டு. உங்களுக்கு அது நிகழ்ந்ததா?
"தமிழ்நாட்டில் பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்களை மறுக்கும் மனம் உண்டு"
என்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது மிகவும் மேலோட்டமான ஒரு
குற்றச்சாட்டு. எல்லா இடங்களிலும் உள்ளதைப் போலவே தமிழகத்து
இலக்கியத்திலும் வெவ்வேறு கருத்துநிலை சார்ந்து இலக்கியத்தரப்புகள் உள்ளன.
இந்தத் தரப்புகள் தமிழகத்திற்குள்ளேயே ஒரு தரப்பை மறுப்பதும் இன்னொருதரப்பை
ஆதரிப்பதும் உள்ளன. சுந்தர ராமசாமியையும் அசோகமித்திரனையும் முற்றாக
நிராகரிக்கும் தரப்புகள் அங்கு உள்ளன. தலித் இலக்கியத்தை வெறும் பிரச்சார
இலக்கியமென வம்படியாகப் பேசுபவர்கள் அங்கிருக்கிறார்கள். பெண்ணிய
எழுத்துகளைக் கடுமையாக நிராகரிக்கும் தரப்பைக்கூட நாம் அறிவோம். இதுபோலவே
புலம்பெயர்ந்த இலக்கியத்தின் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை
மறுப்பவர்களும் இதற்கு எதிர்மாறாக மறுக்கப்படும் தரப்பை ஆதரிப்பவர்களும்
அங்குண்டு. இங்கே தமிழகம் / தமிழகத்திற்கு வெளியே என்ற அளவுகோல்கள்
உபயோகிக்கப்படுவதில்லை. அரசியல் - கலை மீதான அவரவரது சொந்த கருத்துநிலைகளின்
அடிப்படையிலேயே இந்த மறுப்புகளும் விருப்புகளும் இயங்குகின்றன என்றேதான்
நான் கருதுகிறேன். இது தவிர்க்க முடியாதது.
எனக்கு மறுப்பு நிகழ்ந்ததா எனக் கேட்டிருந்தீர்கள். எனது அரசியல்
நிலைப்பாடு சார்ந்து எனது எழுத்துகள் தமிழ்த் தேசிய அணிகளால் கடுமையாக
விமர்சிக்கப்படுகின்றன. அதேவேளையில் அவர்கள் என்னைத் தொடர்ந்து
படிக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்வைத் தருவது. தமிழகத்து
சிறுபத்திரிகைகளும் இலக்கிய விமர்சகர்களும் மட்டுமல்லாமல் தமிழகத்து வணிகப்
பத்திரிகைகளும் 'கொரில்லா' நாவல் வெளியான நாளிலிருந்து இன்றுவரை என்னை
எப்போதும் உற்சாகப்படுத்தியே வருகிறார்கள். ஈழத்தவன் எனபதால் புறக்கணிப்பை
நான் பெறவில்லை, மாறாகச் சற்றுத் தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தையே
அவர்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன்.
இங்கே இன்னொரு விடயத்தைக் குறிப்பிட என்னை அனுமதியுங்கள். கடந்த மாதம்
நோர்வேயில் தமிழ்த் திரைப்பட விழாவொன்று நடைபெற்றிருந்தது. விழாவை
நடத்தியவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள். திரையிடலுக்கு நான்
திரைக்கதையில் பங்களித்து உரையாடல் எழுதிய செங்கடல் படமும் தேர்வானது.
திரைப்பட விழாவிற்கு நோர்வேக்கு தயாரிப்பாளர் செல்வதாகயிருந்து அது இறுதி
நேரத்தில் ரத்தாக என்னை திரைப்பட விழாவிற்கு அழைக்கும்படி இயக்குனர்
திரைப்பட விழாக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் என்னை அழைப்பதற்கு
விழாக்குழுவினர் மறுத்துவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: "ஷோபாசக்தி
புலிகளிற்கு எதிரானவர் அதனால் அவர் வருவதை நாங்கள் விரும்பவில்லை" என்பதே.
புறக்கணிப்பு எப்படியெல்லாம் செயற்படுகிறது பார்த்தீர்களா. நான் எழுதிய,
நடித்த திரைப்படம் அவர்களிற்குத் தேவை, ஆனால் நான் தேவையில்லை.
இவ்வளவிற்கும் செங்கடல் திரைப்படம் இலங்கை - இந்திய அரசுகளை நேரடியாக
விமர்சிக்கிறது எனக் காரணம் சொல்லி அந்தப் படம் கடந்த ஆறுமதங்களாக இந்தியத்
திரைப்படத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டிருக்கிறது. மறுப்பு
அயலிலிருந்துதான் வருமென்பது இல்லை. அது நம்மிடையேயிருந்தும் வரும்.
|
|