|
|
அமைப்பியலின் மேல் கேள்விகளை அடுக்கியவர்கள் அமைப்பியல்வாதிகளாக
இருந்தவர்கள்தான். எனவே, அமைப்பியலின் மேல் அவர்கள் எழுப்பிய கேள்விகளை
சுயவிமர்சனம் என்றும் சொல்லலாம்.
தொல்காப்பியம் முதல் உலகில் உள்ள அனைத்து மொழி இலக்கணங்களும் ஒரு சொல்லும்
அதற்கான பொருளும் நிலையானது என்று நம்பின. சொல்லுடன் அதற்கான பொருளையும்
இணைத்து ஒரு கயிற்றால் கட்டி வைத்தன. அதன் அடிப்படையில் அமைப்பியம்
இயங்கியது.
சொல்லையும் அதன் அர்த்தத்தையும் குறித்துக் காலங்கள் தோறும் மக்கள்
சிந்தித்தே வந்திருக்கின்றனர். மரபும் சரி, நவீனத்துவமும் சரி இது குறித்து
நிறையவே யோசித்திருக்கின்றன.
சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நீ நின் குணங்கள் சொல்ல வல்லரே
என்று சொல்லையும் பொருளையும் குறித்து நாலாயிர திவ்யப்பிரபந்தம் பேசுகிறது.
‘அர்த்தம் என்பது சொல்லப்பட்ட சொற்களையும், அச்சொற்கள் சொல்லப்பட்ட
சந்தர்ப்ப சூழ்நிலையையும் ஒட்டிப் பொருள் கொள்ளப்படும்’ என்பது நவீனத்துவ
சிந்தனை. வடமொழியோ சொல்லையும் பொருளையும் பற்றிப் பேசும் போது,
‘பதார்த்தம்’ (சொல்) ‘பதார்த்த குணம்’ (பொருள்) என்று பேசுகிறது.
நகுலனைப் போன்ற நவீனத்துவ இலக்கியவாதிகள், ‘கலையில் அர்த்தத்தைக் காண்பது
அர்த்தமற்ற செய்கை’ என்று தங்கள் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல
உபதேசிப்பதுண்டு. பின்பு கொஞ்சம் குழம்பி, ‘உருவம் உருவாகிற அளவுக்கே இங்கு
அர்த்தம் உருவாகிறது’ என்று விளக்கம் சொல்வதும் உண்டு. அமெரிக்கக் கவிஞரான
எமிலி டிக்கின்ஸன், ‘சொல்லற்ற சாகரத்தின் சின்னம்’ குறித்து ஆத்ம
விசாரப்படுகிறார். இத்தகைய சூழலில்தான் அமைப்பியம் வந்து குதித்துத் தன்
பாய்ச்சலை நிகழ்த்தியது.
அமைப்பியம் என்பது யதார்த்த அறிவை உணர்த்தும் கோட்பாடு ஆகும். நம்மைச்
சுற்றி இருக்கும் நடப்பியல் உலகு எவ்விதம் நமது உணர்வின் பகுதியாக
மாறுகிறது; எவ்விதம் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுகிறது என்பது குறித்துப்
பேசுகிறது. மேலும் மொழி என்பது குறியியல் பிரிவைச் சேர்ந்தது என்கிறது
அமைப்பியல். இந்தக் குறிகளே பொருள்களின் அர்த்தங்களை நிறுவுகின்றன. பொதுவாக
அமைப்பு என்பது உருவத்தைக் குறிக்கும். ஆனால், அமைப்பியம் சொல்லும் அமைப்பு
உருவமற்றது. உருவமற்ற இந்த மொழி என்ற அமைப்பு இரண்டு விதமான தன்மைகளால்
ஆனது. ஒன்று: குறிப்பான். இரண்டு: குறிப்பீடு.
நம் சிந்தனையில் தோன்றும் ‘புலி’ என்ற சிந்தனை குறிப்பான் ஆகும். அந்தச்
சிந்தனையை சொல்லாக மொழிபெயர்க்கும் போது கிடைக்கும் சொல்லான ‘புலி’ என்பது
குறிப்பீடு ஆகும். புலி என்ற குறிப்பானுக்கு ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறான
குறிப்பீடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, புலி என்ற குறிப்பானுக்கு
இந்தியில் ‘ஷேர்’ என்றும் ஆங்கிலத்தில் ‘tiger’ என்றும் குறிப்பீடுகள்
உள்ளன. இந்தக் குறிப்பீடுகளின் தொகுதியே மொழி என்று அழைக்கப்படுகிறது.
அமைப்பியம் சொல்லையும் அதற்கான பொருளையும் சேர்த்து வைத்தே பார்த்தது. அந்த
நிலவரத்தை வைத்தே மொழியின் மீதான விசாரணையை மேற்கொண்டது. பின்
அமைப்பியம்தான் சொல்லையும், அதன் பொருளையும் ஒன்று சேர்த்து கட்டி வைத்த
கயிற்றை அறுத்து எறிந்தது.
சொல்லும் அதற்கான அர்த்தமும் நகமும் சதையும் போன்று ஒன்றொடொன்று சதா
இணைந்திருப்பது அல்ல. மாறாக அது நகக்கண்ணையும் வளரும் நகத்தையும் போன்றது.
வெட்டிப் பிரிக்க முடியும். வெட்ட வெட்டத் துளிர்க்கவும் செய்யும்.
அர்த்தம் நிலையற்றது. ஒவ்வொரு சொல்லும் தனது அர்த்தத்துக்காக இன்னும் பல
சொற்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. வந்து சேரும் புதிய
சொற்களும் இன்னும் பல புதிய சொற்களைக் கோரி நிற்கின்றன. அகராதியைத் திறந்து
பார்த்தால், ‘படி’ என்ற ஒற்றைச் சொல்லுக்கு ‘படித்தல்’, ‘படிக்கட்டு’,
‘படிப்படியாக’, ‘படியச்செய்தல்’ போன்ற பல அர்த்தங்கள் கிடைக்கின்றன. இந்தச்
சொற்களைத் தனித்தனியே பார்க்கும் போது இவையும் இன்னும் பல புதிய சொற்களை
அர்த்தங்களாக முன் வைக்கின்றன.
மொழியைப் பற்றி மட்டுமே பேசிய அமைப்பியல் அந்த மொழியைப் பயன்படுத்தும்
மனிதனைப் பற்றிப் பேசவில்லை என்பது கவனத்துக்குரியது. மொழி என்பது தனித்த
பொருள் அல்ல. அது பயன்பாட்டுக்குரியது. அதைப் பயன்படுத்த மனிதன் தேவை. அந்த
மனிதனுக்கு ஒரு சுயம் உண்டு. ஆக, மொழியைப் பயன்படுத்தும் மனிதனின் ‘சுயம்’
அதாவது, ‘நான்’ பற்றி அமைப்பியல் என்ன சொல்கிறது?
ஒன்றும் சொல்லவில்லை.
குறிப்பானையும், குறிப்பீட்டையும் பயன்படுத்துபவன் மனிதன். அவற்றைக்கொண்டு
வாக்கியங்களை உருவாக்கிப் பேசவும், எழுதவும் செய்பவன் அவனே.
குறிப்பான்களையும் அதன் விளைவான குறிப்பீடுகளையும் வைத்துக்கொண்டு
வாக்கியங்களை உருவாக்குமாறு அவனைத் தூண்டுவது எது? அது அவனது தனிப்பட்ட
சிந்தனையே அல்லாமல் வேறென்ன? இதைப் பற்றி அமைப்பியல் சொல்லும் சேதி என்ன?
ஒன்றும் இல்லை.
சரி. மொழி என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல. அது இருவர் சம்பந்தப்பட்டது.
பேசுபவன் X கேட்பவன்
எழுதுபவன் X வாசிப்பவன்
பேசுபவன் பேசும் ஒரு வார்த்தையைக் கேட்பவன் வேறு மாதிரி புரிந்து
கொள்ளக்கூடும். அதே போல், எழுதுபவன் எழுதும் ஒரு வார்த்தையைப் படிப்பவன்
வேறு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே, அமைப்பியல் சொல்லும்
குறிகளின் அர்த்தம் என்பது குறிப்பீடுகளில் இல்லை. பொருள்படுத்திக்
கொள்வதில்தான் இருக்கிறது. அந்தப் பொருள் படுத்திக் கொள்ளும் அர்த்தம் கூட
நிலையானதல்ல. சதா மாறிக் கொண்டே இருக்கிறது.
இச்சூழ்நிலையை பின் அமைப்பியல்வாதியான லக்கான் கீழ்வருமாறு
விளக்குகிறார்.சசூரின் ‘குறிப்பான்’ > ‘குறிப்பீடு’ > ‘அர்த்தம்’ என்ற சொல்
இணைகளை நனவிலிக் கொள்கையின் அடிப்படையில் அவர் விளக்குகிறார்.
S/s
மேற்கண்ட சமன்பாட்டில் S என்ற ஆங்கில எழுத்து இரண்டு விதமாக
அமைக்கப்பட்டுள்ளது. பெரிய S மேலேயும், சிறிய s கீழேயும் உள்ளன. இடையே
இருக்கும் ஒரு சிறு கோடு இவற்றைப் பிரிக்கிறது.
இந்தச் சமன்பாட்டில் அமைப்பியல்வாதியான சசூர் சொல்வது போல் குறிப்பானும்
அர்த்தமும் ஒன்றல்ல என்பது இங்கே நிரூபணமாகி இருக்கிறது. அர்த்தம் நழுவி
கீழே போய்விட்டது.
குறிப்பான் கண்ணுக்குப் புலப்படுகிறது. ஆனால், அது தரும் அர்த்தம்தான்
நிலையற்றதாக இருக்கிறது. அர்த்தத்தை விட (சிறிய எழுத்து) குறிப்பான் (பெரிய
எழுத்து) திடமானது.
இது அமைப்பியலுக்கு எதிரான கொள்கையாகும்.
மிஷல் ஃபூக்கோ சொல்லாடலை மனித மூளையின் முக்கியமான செயல்பாடாக முன்
வைத்தார். சொல்லாடல் என்பது வெறும் பிரதி அல்ல. அது அர்த்தப்படுத்திக்
கொள்ளப்படவேண்டிய சொற்கடல் என்றார் ஃபூக்கோ. இதுவும் அமைப்பியலுக்கு எதிரான
கருத்தே. இப்படி அமைப்பியம் என்ற கோட்பாட்டைப் பின் அமைப்பியம் ஒரு
அனுமானமாக மாற்றிப் போட்டுக் கொண்டிருந்த போது, ஒரு கலாசாரப் பேரலை
விரைந்து வந்து கொண்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அது தன் கண்ணில் பட்ட
அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்தது. இதுவரை அறியப்பட்டிருந்த அனைத்துக்
கோட்பாடுகளும் அனுமானங்களே என்பதை உலகின் கண் முன் உயர்த்திப் பிடித்தது.
அதன் பெயர் பின் நவீனத்துவம்.
(தொடரும்)
|
|