|
|
அடிமைகளின் குரல்!
எனக்கு எப்போதுமே கவலைப்பட வேறு விஷயங்கள் இருக்கின்றன
பள்ளியில் எனக்கு ஆண் நண்பர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களையும்
பள்ளியைத் தாண்டி வெளியில் எங்கு காண நேர்ந்தாலும் இவன் என் நண்பன் என்பதை
மனது சொல்லிக் கொள்ளுமே தவிர கண்கள் பார்க்காதப் படிதான் போக வேண்டும்.
அப்பாவின் மேல் உள்ள பயமும் அவரின் இடைவாரும் அவ்வாறு எனக்குள் எப்போதும்
அசைந்துகொண்டே இருந்தது.
அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவர் போட்டு வைத்த இறுக்கமான முடிச்சுகள்
கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்தபடியே இருந்தன. அப்பா வரைய கற்றுக்கொடுத்த
வாழ்க்கை சித்திரத்தை நாங்கள் எங்களுக்குப் பிடித்த மாதிரி கொஞ்சம் மாற்றி
வரைந்துக்கொண்டோம். அதற்காக எந்தக் குற்ற உணர்ச்சிக்கும் நாங்கள்
ஆளாகவில்லை.
தலைநகரில் பாதுகாவலர் வேலைக்கு ஆப்பு வந்த பின் துணிமணிகளை தூக்கி கொண்டு
மீண்டும் கம்பத்திலேயே சரணடைந்தேன். இந்த முறை வேலைத் தேடும் படலத்தில்
அதிக சிரமப்படவில்லை. காரணம் என் பெரியம்மா வேலை செய்யும் தொழிற்சாலையில்
தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருந்ததால் தற்காலிகமாக வேலைக்கு வருமாரு
அழைத்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் பெரியம்மா அந்த
தொழிற்சாலையில்தான் வேலை செய்தார்.
தேங்காய் எண்ணை மற்றும் அரைத்த தேங்காய் பூவைப் பதப்படுத்தும் தொழிற்சாலை
அது. 300 முதல் 400 ஆட்கள் வரை வேலை செய்த தொழிற்சாலையில் கால
மாற்றத்துக்கும் நவீனமயத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சுருங்கி சுருங்கி
20 முதல் 30 ஆட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய இடமாக மாறியிருந்தது. எண்ணை
கிடங்குகள் அக்கு வேர் ஆணி வேராக பெயர்க்கப் பட்டு பழைய இரும்பு
சாமான்களுக்குப் போடப்பட்டது. தேங்காய் பூவைப் பதப்படுத்தும் ஆலை மட்டும்
தனித்து இயங்கிக்கொண்டிருந்தது.
பள்ளி விடுமுறையில் பெரியம்மாவை பார்ப்பதற்காக அந்தத் தொழிற்சாலைக்கு
போய்வந்திருக்கிறேன். தேங்காயின் புளித்த நாற்றம் நாசியை எதிர்க்கொள்ளாமல்
தாக்கும். மூக்கை மூடிக்கொண்டுதான் தொழிற்சாலையின் உள்ளேயும் வெளியேயும்
பிறவேசிக்க முடியும். அவ்வப்போது நான் அந்த தொழிற்சாலைக்குப் போய் வந்துக்
கொண்டிருந்ததால் நாற்றம் எனக்கு பழகி விட்டிருந்தது. அங்கு வேலை
செய்முறைப்பற்றியும் ஒருவாராக நான் அறிந்து வைத்திருந்தேன்.
பெரியம்மா அங்கு விசுவாசமான தொழிலாளியாகவும் முதலாளியின் நம்பிக்கைக்குரிய
ஊழியராகவும் இருந்தார். என் சிற்றன்னைகளும் மாமாவும்கூட அங்கே வேலை
செய்துக்கொண்டிருந்ததால் அது எங்களின் குடும்ப கம்பனி என்று பலரின்
நையாண்டிக்கு ஆளாகி இருந்தது.
நோன்பு பெருநாளுக்காக அரபு நாடுகளிலிருந்து கம்பனிக்கு ஆர்டர்கள்
குவிந்திருந்தது. 24 மணிநேரமும் மனிதர்களும் இயந்திரங்களும் இயங்கினாலே
ஒழிய ஆர்டர்களை முடிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. எத்தனையோ
ஆண்டுகளுக்குப் பிறகு நிறைய ஆர்டரும் ஓவர் டைமும் கிடைக்கப் போகிறது என்ற
சந்தாஷத்தையும் மீறி 24 மணிநேரம் யாரால் வேலை செய்ய முடியும் என்ற கவலையே
பலருக்கு இருந்தது. குடும்பஸ்தர்களாக அல்லாமல் இளைஞர்களாக இருந்தால் நேரம்
காலம் பார்க்காமல் உழைப்பார்கள் என்ற நம்பிக்கையை வைத்து தற்காலிக வேலைக்கு
ஆட்களை தேடினார்கள். நான் உட்பட ஒன்பது பேர் வேலையில் சேர்ந்தோம். நாங்கள்
அனைவரும் ஒரே வயது வரிசையில் இருந்த காரணத்தால் ஓரிரு நாட்களிலேயே சகஜமாக
பேசி நண்பர்கள் ஆனோம். எங்களின் வேகமும் சுறுசுறுப்பும் இதற்கு முன்பு வேலை
செய்தவர்களை அசர வைத்தது.
சிலமணி நேரம் மட்டுமே தூங்கி விட்டு 20மணிநேரம் வரையிலும் அதே
உற்சாகத்துடன் வேலை செய்தோம்.
எங்களில் சிலர் ஒரே தெருவில் குடியிருந்ததால் அவர் அவர் குடும்பத்தினர்
அறிமுகமும் எங்களுக்கு இருந்தது. நடு இரவில் வேலை முடிந்தால் கூட
நண்பர்களில் எவனாவது மோட்டார் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவான். நான்
உணவு வேளைக்கு வீட்டுக்கு போனால் கையோடு அவனவன் வீட்டில் உணவு அடுக்குகளை
கேட்டு சேகரித்து வந்து கொடுப்பேன். இப்படி நாங்கள் ஒருவருக்கொருவர் உதவி
செய்துக்கொண்டோம்.
“டேய் முரளி சாப்பாடு எடுத்து வந்திருக்கேன்டா”. “குமார் உன்னை பார்த்து
ரெண்டுநாள் ஆச்சினு உங்க அம்மா கவலையா இருக்காங்கடா”. "டேய் ரவி இந்த வாரம்
யார் ஓவர் டைம் அதிகமா செய்றதுனு போட்டி வச்சிக்கலமா?" குளிக்கையாவது
வீட்டுக்கு போங்கடா” என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு டா போட்டுதான்
பேசுவேன். எவனும் என்னிடம் கோபித்தது இல்லை.
எனக்கு பிரச்சனையே அங்கு வேலை செய்த பெண்களால்தான் வந்தது. “இவளுக்கு
ஆம்பளைங்களைத்தான் பிடிக்கும் போலிருக்கு” “இவகிட்ட என்னாத்த
பார்த்தானுங்களோ“ “இந்த வயசுலையே ஆம்பளை கேட்குது” என்று கண்டபடியாக
அவதூறுகள் எனக்கு பின்னால் பேசப்பட்டது. என் பெரியம்மாவுக்குப் பயந்து
வெளிப்படையாக பேசாமல் கிசுகிசுவை மூட்டி விட்டனர். என்னிடம் நல்ல
படியாகவும் எனக்கு பின்னால் அவதூறும் பேசியதற்கான காரணத்தை இன்றைக்கும்
என்னாள் யூகிக்க முடியவில்லை.
இந்தச் சங்கதி எனக்கு தெரியும் முன்பே நண்பர்களின் காதுகளுக்கு
எட்டியிருந்தது. அரசியல் சந்திப்பை நிகழ்த்தப்போகும் தோரணையில் ஒரு
ஞாயிறுக்கிழமை ஒன்பது பேரும் வீட்டுக்கு வந்தனர். “யோகி இப்படி
பேசிக்கொள்கிறார்கள். உனக்கு தெரியுமா?” என்றனர். முகம் வெளிரிப் போனது
எனக்கு. 'ஏன் என்னை பற்றி அப்படிப் பேசனும். நான் என்ன செய்தேன்' என்று
குழம்பினேன். பெரியம்மாவுக்கு மண்டை காய்ந்து ஆரம்பித்தார் வசையை. "நாளை
அவளுங்களின் சிண்டை பிடித்துவிடுகிறேன் பார். என்னிடம் பேச தைரியமில்லாத
காட்டுப்பூச்சிகள். அதான் உன்னிடம் மோதுகின்றன" என்று வார்த்தைகளை கொட்ட
ஆரம்பித்தார். அவருக்கு ஆத்திரம் எல்லையை தாண்டும் போது கைகால்கள் உதறல்
ஏற்பட்டு சொற்கள் உடைய ஆரம்பிக்கும். அவரை சமாதானப்படுத்தி உட்கார
வைத்தேன்.
வானத்தில் நட்சத்திரங்கள் அழகாகப் பூத்துக்கிடந்தன. முழு நிலவு வரும்போதும்
வானம் அழகாகக் காட்சிக்கொடுக்கும். அந்தச் சமயங்களில் மனதில்
மகிழ்ச்சியும் இனம் புரியாத நிம்மதியும் ஏற்படும். அன்றும் அப்படிதான். என்
ஒழுக்கத்தையும் நடத்தையையும் ஏலம் போடுகிறார்கள் என்று தெரிந்தும்
கோபத்தையும் அழுகையையும் அடக்கிக் கொண்டேன். நண்பர்கள் முன்பு அழுது
அவமானப்படவில்லை. மேலும் என் அழுகை அவர்களையும் சங்கடப்படுத்தலாம்.
வானத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். 'வானம் ஒரு போதிமரம்' என
எங்கோ படித்த ஞாபகம்.
பாலர் பள்ளியில் பயிலும் என் கடைசி தங்கை பள்ளியில் ஏதோ கட்டணம் செலுத்த
நாளை இறுதிநாள் பணம் வேண்டும் என்று என் மௌனம் கலைத்தாள். என்னையும் மீறி
வந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளைப் பார்த்து
சிரித்தேன். என் தங்கை தேவதைப் போல் அழகு. 'பணம் தருகிறேன்' என்றதும் போய்
விட்டால். அரசியல் பேச்சு சூடு பிடித்திருந்தது. என்னை
பழித்துப்பேசியவர்களின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டிருந்தார்
பெரியம்மா. நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தியபடியே இருந்தனர். பெரியம்மா என்
மீது அதிக பாசமாக இருந்ததால் என் மீது விழுந்த கறையை அவரால் சகிக்க
முடியவில்லை. கறையை துடைப்பதைக்காட்டிலும் கறை அப்பியவர்களைத் தூர்வாரவே
நினைத்தார்.
நான் பேசத்தொடங்கினேன். "தற்காலிக வேலையில் இருக்கும் நம்மை நாளைக்கு
வேலைக்கு வர வேண்டாம் என்று முதலாளி கூறி விட்டால் அவர் அவர் வேலையைப்
பார்த்துக்கொண்டு போகப் போகிறோம். அப்போது நம்மைப்பற்றி பேசவும்
நினைப்பதற்கும் அவர்களுக்கு நேரமும் சந்தர்ப்பமும் இருக்காது. தவிரவும்
நாளை வேறொரு கதை கிடைத்தால் இந்தக் கதையை மறந்து விடுவார்கள். எனக்கு
யோசிக்கவும் வருத்தப்படவும் வேறு காரணங்கள் இருக்கின்றன. இதை நெஞ்சில்
ஏற்றிக்கொள்ள வழுவில்லை", என்று என்னால் முடிந்த அளவுக்கு நண்பர்களையும்
பெரியம்மாவையும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். யாரும் சமாதானம் ஆவதாக
இல்லை. இந்தப் பிரச்சனையால் வேலைக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமா என்ற
கவலையே எனக்கு பெரிதாக இருந்தது.
பாவ புண்ணியங்களைப் பார்க்காமல் நாளை கச்சேரியை நடத்த வேண்டியதுதான்
என்றார்கள் நண்பர்கள். "காலி டப்பாதான் அதிக சத்தம் போடும். அவர்கள்
அறிவில்லாத காலி டப்பாக்கள். நமக்கும் அறிவில்லையா?" என்றேன். நண்பர்கள்
அமைதியானார்கள். பெரியம்மாவின் கண்கள் கலங்கி இருந்தது. அவர் என்னை கட்டி
அணைத்துக்கொண்டார். எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் வானத்தை பார்த்தேன். 'நான் போட்ட
முடிச்சுகளைத் தளர்த்தியதற்கு நன்றாக அனுபவி' என்று அப்பா வானத்தை
கிழித்துக்கொண்டு ஆதங்கம் பட்டுக்கொண்டிருந்தார். மனது முழுதும் ஏதோ
தவிப்பு கௌவி இருந்தது. முதல் முறையாக குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி நின்றேன்.
கம்பனியில் பிரச்சனை வேண்டாம் என்று கூறினாலும் அடி தொண்டையில் வாய்விட்டு
எல்லாத்தையும் பார்த்து கத்த வேண்டும் போல் இருந்தது. வானம் என்னைச் சற்று
நேரத்திற்கெல்லாம் அமைதியாக்கியது. என்னைப் பற்றி பேசிய பெண்களை ஒருதரம்
நினைத்துப்பார்த்தேன். பாவமாக இருந்தது. அவர்களை அவ்வாறு பேச வைத்தது எது
என்று யோசித்தேன். அடிமைப்படுத்தப் படுபவர்களுக்கு ஆறுதலுக்காவது சில
அடிமைகள் தேவைப்படுகிறார்கள் என்று பட்டது. 'அடிமைகள்... அடிமைகள்...' என
சொல்லிப்பார்த்தேன்.
"அக்கா நாளை பள்ளி பேருந்துக்கு கட்டணம் செலுத்த வேண்டும்” என்று பெரிய
தங்கை நிகழ்காலத்துக்குக் கொண்டுவந்தாள். எனக்கு கவலைப்பட வேறு விஷயங்கள்
இருப்பது நினைவுக்கு வந்தது.
|
|