|
|
இந்தி சினிமா – Taare Zameen Par
உலகை எக்கிப் பார்க்கும் அதிசயம்
“அந்த இல்லாத புலி அந்த இல்லாத பாலைவனத்தைப் பற்றி
கனவு கண்டுகொண்டே இருந்தது” – கற்றது தமிழ்
மேற்கண்ட வசனம் மிகவும் எளிமையானது. ஆனால் அந்த எளிமைக்குள் நுழைவதற்கு நம்
மனம் அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் மிகவும் கடுமையானவை. உலகின் மீது
அறிவியல்பூர்வமான தர்க்க ரீதியிலான கேள்விகளை மட்டுமே
வைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு எளிமையாகி கணமிழந்து போவதைப் பற்றி
எந்தத் தயார்நிலையும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நமக்கருகில்
வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள் உலகத்தையும் தன்னைச் சுற்றியுள்ள
அனைத்தையும் மீட்கிறார்கள், அதிசயமாக்குகிறார்கள். உலகம் விசித்திரமானவை
என்பதை மீண்டும் மீண்டும் குழந்தைகளே நிறுபிக்கிறார்கள்.
நாம் வெறுத்து ஒதுக்கி வரட்சியாக்கும் அனைத்தையும் குழந்தைகள்
ஆச்சர்யத்துடன் கையிலெடுத்து முத்தமிடுகிறார்கள். அதில் தனது எச்சிலை
ஒழுகவிட்டு உயிர்ப்பிக்கிறார்கள். ஒன்றின் உருவாக்கத்திற்குப்
பின்னணியிலுள்ள இயற்பியல் கட்டமைப்பைப் பொருட்படுத்தும் நம்முடைய பார்வைகளை
அகற்றி, அதிலொரு வண்ணத்துப்பூச்சி விட்டுச் சென்ற வர்ணம் இருப்பதைப் பற்றி
பேசுகிறார்கள். குழந்தைகளின் கண்களின் வழியாக உலகைத் தரிசிக்கும்போதெல்லாம்
மனம் சில்லிடுகிறது. திரட்டப்பட்ட ஓர் அதிசயத்தின் முன்
நின்றுகொண்டிருப்பதைப் போன்ற பரவசம் எழுகிறது.
அப்படிப்பட்ட ஒரு பரவசத்தை நமக்குக் கொடுக்க முயல்வதுதான் அமீர் கான்
இயக்கிய தாரே ஷமின் பார் படம். உலகிலுள்ள நாம் கவனிக்கத் தவறிய சில
அதிசயங்களை நோக்கி கூர்மையாகி பரவும் ஒரு மனநிலையை இப்படம் அனுபவமாக
வழங்குகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட இப்படம் இரண்டு முக்கியமான
விசயங்களை அழுத்தமாகப் பேசுகிறது. இன்றும் எல்லா பிரதேசங்களிலும்
நடைமுறையிலிருக்கும் கல்விமுறைமையையும் மாணவர்கள் மத்தியில் அவை
ஏற்படுத்தும் மாற்றங்களையும் விரிவாகப் பேச முயலும் இப்படம், இன்னொரு
பக்கம் பலவகைகளில் பிறந்து வளரும் ஒவ்வொரு குழந்தையையும் மீட்க முடியும்
என்கிற சாத்தியங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.
கல்வி முறையும் உயர்த்தர கூலிகளும்
இன்று ஆசிய முழுக்கவும் சிறு சிறு மாற்றங்களுடன் கையாளப்படும் எல்லா கல்வி
கொள்கைகளுக்கும் ஒரு “வரையறுக்கப்பட்ட தரம்” இருக்கின்றன. அந்த
வரையறைக்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு உருவான பின்காலனிய
வாழ்விற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆசியாவின் ஒரு சில
நாடுகளான இந்தியா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவான கல்வி முறை
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க முதலாளியத்துவ விரிவாக்கத்திற்கு
வலு சேர்க்கும் வகையிலான உயர்த்தர கூலிகளை உருவாக்கிக் கொடுப்பதிலேயே
முக்கியத்துவம் பெற்றன. 1960களில் இந்தியாவில் கடுமையான பொருளாதார சரிவால்
அங்குள்ள கல்வி தரமும் பாதிப்படைந்தன எனும் குறிப்பு இருக்கிறது. இந்தியா
போன்ற மூன்றாம் உலக நாடு பொருளாத்தார சரிவை எதிர்நோக்குவதற்கான காரணம்
என்ன?
உலக சந்தையைத் தீர்மானிக்கும் பெரும் சக்தியாக இருக்கும் அமெரிக்காவின்
பொருளாதார வீழ்ச்சி என்பது உலகத்தின் அனைத்து மூன்றாம் உலக நாடுகளுக்கும்
பெரும் வீழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. ஆகவே, வளர்ந்து வரும் நாடுகளுக்குப்
பெரும் மேற்கோளாக இருப்பதும், முதலீட்டு சந்தையாக இருப்பதும் அமெரிக்கா
போன்ற முதலாம் உலக நாடுகள்தான். சிறுக சிறுக மூன்றாம் உலக நாடுகளிடமிருந்து
தரமான தொழிலாளர்களைப் பெறுவதற்காக அவர்களின் திட்டங்களை அறிமுகப்படுத்தி
அயல் நாடுகளின் கல்வி வரையறைகளை தீர்மானிக்கின்றனர்.
ஆகவே இப்பொழுது ஆசிய நாடுகளின் வழக்கத்திலுள்ள கல்வி முறை என்பது காலனிய
ஆதிக்கத்திற்குப் பிறகு அவர்களுக்கு மேலாதிக்க அரசால் கொடுக்கப்பட்ட கல்வி
முறையைத் தக்கவைத்துக்கொண்டதன் விளைவால் உருவானது. ஒவ்வொரு
காலக்கட்டத்திலும் அதில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் அடிப்படையான
சில விசயங்கள் மாறாமல் இன்னும் தீவிரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஒரு
மாணவனின் தரத்தை நிர்ணயிக்க சோதனை அமலாக்கத்தைச் சார்ந்திருப்பதாகும். அவனை
நேரடியாக புரிந்துகொண்டு மதிப்பிடுவதென்பது மறுக்கப்படும் சூழலில் ஒரு சில
பொதுவான கேள்விகளைத் தயாரித்து பற்பல வகையில் வித்தியாசப்பட்டிருக்கும்
மாணவர்களை ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளைத்தாளில் எழுத வைத்து வரையறுப்பது
ஆரோக்கியமான முறையே கிடையாது.
அண்மையில் மலேசியா சோதனைமுறையில் சில தளர்வுகளை உருவாக்கி வருவது
வரவேற்கத்தக்க முயற்சியாக இருந்தாலும் அதன் நீட்சியும் பயன்பாடும் சில
காலங்களுக்குப் பிறகே உறுதி செய்யப்படும். ஒவ்வொரு ஆசிய நாடுகளும் இன்னமும்
அமெரிக்க மேலாதிக்க அரசின் பினாமிகளாகச் செயல்படுவதிலிருந்து நீங்கி,
தனக்கென தன் மக்களின் கலாச்சாரம் பண்பாட்டின் மாற்றங்களுக்கேற்ப
தனித்துவங்களை உருவாக்கிக்கொள்வது பின்காலனிய மனப்பாவத்திலிருந்து மீளும்
ஒரு வழியாகக் கருதுகிறேன். சோதனை மதிப்பீட்டு முறை பிறப்பால் வளர்ப்பால்
குடும்பப் பின்னணியால் வித்தியாசப்படும் மாணவர்களைப் புரிந்துகொள்ள முடியாத
ஒரு போதாமையை ஏற்படுத்துவதற்கான அனைத்து சாத்தியங்களையும் உடையது.
மேற்கத்திய உயர்த்தர இயந்திரங்களை உருவாக்குவதையும் அந்தத்
தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு அதற்கு வேலை செய்து கொடுக்கும் ஒரு கூலியை
உருவாக்கித் தள்ளிக்கொண்டிருக்கும் சோதனை முறையும் தர நிர்ணயமும் நம்
மாணவர்களின் ஆற்றலைச் சாகடித்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையிடமும்
இருக்கும் தனித்துவங்களை நாம் சோதனை என்கிற ஒன்றின் வழி
மறக்கடித்துக்கொண்டிருக்கிறோம். ஆசியாவின் சந்தைக்கு வந்து சேரும்
மேற்கத்திய உற்பத்திகளைத் தரமாக்குவதற்கான மூளை இருக்கும் அடுத்த தலைமுறை
உழைப்பாளிகள்தான் ஆக உயர்ந்த எதிர்ப்பார்ப்பாக இருக்கிறார்கள். ஆகவே
இங்குக் கல்வியின் மூலம் உருவாக்கப்படும் மாணவனின் மூளை சிறுக சிறுக அந்த
நோக்கத்திற்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இயந்திரங்களை எதிர்க்கொள்ளும்
இன்னொரு மாற்று இயந்திரங்களாகி கொண்டிருக்கும் நம் குழந்தைகள்
எதிர்க்கொள்ளும் கல்வி முறையின் மீதான விமர்சனமாகவும் தாரே ஷமின் பார்
படத்தைக் குறிப்பிடலாம்.
Dyslexia எனும் நோய்க்குறி
Dyslexia எனும் ஒன்றை இன்று கல்வி உலகம் ஒரு நோயாக அடையாளப்படுத்துகிறது.
எழுத்துக்கூட்டி வாசிப்பதிலும் ஓர் எழுத்தை அடையாளம் காண்பதிலும் ஏற்படும்
சிக்கலைக் கொண்ட மாணாக்கர்க்கு இருக்கக்கூடிய ஒரு தடையைத்தான் நோய் எனச்
சொல்லப்படுகிறது. இந்நோய், சொல்லைச் சரியாக அடையாளம் காண்பதில் ஏற்படும்
சிக்கலைக் கற்பதில் ஏற்படும் தடையென புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. வலது
மூளையில் ஏற்படும் விபத்து அல்லது பிறப்பிலேயே வலது மூளை பலவீனமாகச்
செயல்படுவதன் மூலம் இந்த நோயை ஒரு மாணவன் அடையக்கூடும் என நம்பப்படுகிறது.
ஆய்வாளர்கள் பலமாதிரியான ஊகங்களையும் அர்த்தங்களையும் முன்வைத்திருப்பினும்
இந்த நோய்க்கான முழுமையான ஆய்வோ கண்டுப்பிடிப்போ இன்னமும்
தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சிக்கலை வெறும் மூளை சார்ந்தவையாக மட்டும்
புரிந்துகொண்டு மாணவர் உளவியலை வகைப்படுத்துவதோ அறிந்துகொள்வதோ அத்துனைச்
சாதூர்யமானதாகத் தோன்றவில்லை.
இதற்கு முன் ஆசியாவின் கல்வி முறைகள் பற்றி சொல்லப்பட்டதன் மூலம் இங்கு
நடைமுறையில் இருக்கும் ‘கல்வி உலகம்’ என்பதன் ஆழ்மனம் எப்படி
இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அதனால் இனி அதை
ஒரு நோய்க்குறி எனவே கட்டுரையில் குறிப்பிடுகிறேன். இன்றைய கல்வி
கொள்கைகளுக்கு முரணாக ஒரு மாணவனைச் செயல்பட வைப்பதைத்தான் dyslexia எனும்
நோய்க்குறி செய்து வருகிறது. அதாவது உலக சந்தையில் உழைக்கக்கூடிய கூலிகளை
உருவாக்கித் தள்ளுவதில் பெரும் தடையை ஏற்படுத்தக்கூடியதுதான் இந்த
நோய்க்குறியின் தன்மை.
மனிதனின் இரு பக்க மூளைகளில் ஒன்று, பலவீனமாகச் செயல்படுவதைத்தான் இந்த
நோய்க்கான காரணமாகச் சொல்கிறார்கள். மொழியைக் கற்றுக்கொள்வதில் இது போன்ற
நோயுள்ள மாணவர்களுக்கு தடுமாற்றமும் தாமதமும் இருக்கும் என ஆய்வாளர்கள்
குறிப்பிடுகிறார்கள். சொற்குவியலைக் கண்டு மிரளக்கூடிய, பதற்றமடையக்கூடிய
ஒரு சூழல் இந்தப் பாதிப்பிலுள்ள மாணவர்களுக்கு பிரதானமான பிரச்சனையாகச்
சொல்லப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் என் பள்ளியில் இந்த நோய் குறித்து ஆய்வு
செய்ய வந்த பல்கலைக்கழக மாணவர்கள், பள்ளியிலிருந்த மூன்று மாணவர்கள் இந்த
நோய்க்கு ஆளாகியிருந்ததைக் கண்டறிந்தார்கள். மூன்று மாணவர்களிடத்திலும்
நான் கண்ட ஒற்றுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. மூவருமே சொற்களைத்
தரிசிக்கும் விதம் அதிசயமாக இருந்தது. நாம் நேர்த்தியாகப் பார்த்துப்
பழகும் சொற்களை, எழுத்துகளை அவர்கள் எதிர்மறையாகப் பார்த்து
பழகிக்கொள்கிறார்கள்.
மொழிக்குள் இருக்கக்கூடிய முதல்நிலை அடுக்குக்கு எதிரான ஒரு பார்வைத்தான்
இவர்களுடையது. ஒரு முழுமையான நேர்த்தியான வாக்கியத்தை எழுதுவதற்கு
மாணவர்களுக்கு வழக்கமாகக் கொடுக்கப்படும் பயிற்சிகளில் முக்கியமானது,
சொற்களை இடம் மாற்றிகொடுத்து அதை நிரல்படுத்த வைப்பது. அந்தச் சொற்களுக்கான
ஒழுங்குகளை அவனால் கண்டறிய முடிந்தாலே போதுமானதாகும். ஆனால் dyslexia
நோயுடைய மாணவர்கள் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் சொற்களை இடம் மாற்றி
வைத்து அதன் பாரம்பரியமான இலக்கண ஒழுங்குகளைச் சிதைத்துவிடும் ஆற்றலைக்
கொண்டிருப்பார்கள். இதை ஆற்றல் எனக் குறிப்பிடுவதற்கான நோக்கத்தைப் பிறகு
குறிப்பிடுகிறேன். நம் கல்வி கொள்கையின் மரபான சோதனை முறைக்கேற்ப
மாணவர்களைத் தயார்ப்படுத்துவதில் இந்த நோய்க்குறி உடைய மாணவர்கள் பெரும்
தடையாக இருப்பதாக அடையாளப்படுத்துகிறது. ஆகையால் கல்வி உலகம் அதை ஒரு
தவிர்க்க வேண்டிய நோயாகக் கருதி பல்கலைக்கழக மாணவர்களை ஆய்வுக்கு அனுப்பி
தரவுகளைத் திரட்டி அதை எதிர்க்கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயல்கிறது.
இந்த மாதிரியான நோயுள்ள குழந்தைகளுக்கு என்னென்ன விளைவுகள் இருக்கும்
என்பதை இங்குப் பட்டியலிடுகிறேன்:
1. சரளமாகப் பேச முடியாது
2. புதிய எழுத்துகளைக் கற்றுக்கொள்வதில் தாமதமான/மந்தமான நிலை
3. எழுத்துகளை முறையாக ஒலிக்க முடியாது
4. எழுத்துகளைக் கண்ணாடியில் பிரதிபலிப்பது போல எழுதுவது
5. எழுத்தின் ஒலியுடன் எழுத்தை இணைக்கத் தெரியாது
6. எந்தப் பொருளுக்கும் சொற்களின் துணையுடன் பெயரிட முடியாது
7. எழுதப்பட்டிருக்கும் சொற்களைத் தெளிவாக வாசிக்க முடியாது
இது போன்ற குறிப்புகளை இன்னும் மொழி, சொற்கள், எழுத்துகள் சார்ந்து
அடுக்கிக்கொண்டே போகலாம். dyslexia வகையான மாணவர்களின் சிக்கலாக
முன்வைக்கப்பட்டிருக்கும் இவை அனைத்தும் ஆரம்பப்பள்ளி பயிலும்
மாணவர்களுக்கான அடிப்படை திறன்களாகும். ஆகவே இதை அடையத் தடுமாறும்
குழந்தைகள், வரையறுக்கப்பட்ட அடிப்படை திறன்களைப் பெற முடியாதவர்களாகக்
கருதப்படுகிறார்கள். தீர்மானிக்கப்பட்ட கல்வி கொள்கைக்கு எதிரான விளைவுகளை
உடைய அனைத்தையும் ஒரு நோயாக மட்டும் பார்ப்பது சரியான பார்வையா எனச்
சிந்திக்க வேண்டியுள்ளது.
மாற்றுத்திறன் – குழந்தைகளின் ஆற்றல்
அமீர்
கான் இயக்கிய 'தாரே ஷமின் பார்' படம் dyslexia நோயுள்ள மாணவனாகக்
கருதப்படும் அந்தச் சிறுவனுக்குள் இன்னொரு மகத்தான ஒன்று இருப்பதை அடையாளம்
காட்டுகிறது. நோயென கல்வி உலகம் புறக்கணிக்கும் அவனது சிக்கலை மீட்டெடுத்து
அவனுக்கும் வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதற்கே முனைந்துள்ளது. Slow
learner என வகுப்பறையில் ஒதுக்கப்படும் அவனுக்குள் இருக்கும் மாற்றுத்திறனை
அப்பள்ளிக்கு ஓவிய ஆசிரியராக வரும் அமீர் கான் கண்டடைகிறார். அதை ஓர்
ஆற்றலாக அவனை உணரச் செய்து, அவனுக்கான அங்கீகாரத்தைப் பெற வைக்கிறார்.
Maslow தத்துவம் மனிதனுக்குத் தேவையான சில விசயங்களைப் பிரமிட் வடிவத்தில்
முன்வைக்கிறது. அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, பாதுகாப்பு என நீளும்
தேவைகள் மிக முக்கியமானதாக அங்கீகாரத்தைப் பற்றியும் பேசுகிறது. ரஷ்ய
பேரிலக்கியவாதியான தாஸ்தயேவ்ஸ்கி மனிதன் நேசிக்கப்படாமலும்
அங்கீகரிக்கப்படாமலும் போவதனால்தான் குற்றம் புரிபவனாக மாறி வன்முறையில்
ஈடுபடுகிறான் என்கிறார். ஆக இலக்கியமும் தத்துவமும் அங்கீகரிகப்படுவதன்
தேவையை அழுத்தமாகச் சொல்வதை உணர முடிகிறது. கல்வி உலகம் தன் வசதிக்கேற்ப
குறையுள்ள/நோயுள்ள மாணவர்களாக வகைப்படுத்தியவர்களின் தனித்துவத்துவங்களைக்
கண்டறிந்து அங்கீகரிப்பதன் மூலம் அவர்களையும் மற்ற மாணவர்களுக்கு நிகரான
சாதனையாளர்களாகக் காட்ட முடியும் என்கிற நம்பிக்கையை அளிக்கும் மிக
முக்கியமான முயற்சியை படம் முன்னெடுத்துள்ளது.
படத்தில்
dyslexia நோயுள்ளவனாகக் காட்டப்படும் சிறுவனின் மனதின் ஆழத்தில்
மிதந்துகொண்டிருக்கும் கலை உணர்வு மீட்கப்படும் இடங்கள் மனதை நெகிழச்
செய்யக்கூடியவை. அவனுக்கு ஓவியம் கற்பிக்கும் ஆசிரியரான அமீர் கானுக்கும்
அந்தச் சிறுவனுக்கும் படத்தின் இறுதி காட்சியில் ஓவியப் போட்டி
நடத்தப்படும். இருவரும் தனக்கான ஓவியங்களை வரையத் துவங்குகிறார்கள்.
இருவரின் துரிகையும் வரட்சி மிகுந்த இந்த உலகத்தின் எல்லாம் கவனங்களையும்
அழித்துவிட்டு அதன் மீது அற்புதமான வர்ணங்களைப் பூசுகிறது.
இன்றைய கல்வி உலகமும் குழந்தைகளின் தனித்துவமான ஆற்றலும் ஒன்றுக்கு ஒன்று
முரணானதாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆசியாவின் கல்வி கொள்கைக்குகேற்ப
இயந்திரத்தனமான கூலிகளை மட்டும் உற்பத்திக்கப் போகிறோமா அல்லது அவர்களின்
தனித்துவமான ஆற்றல்களைக் கண்டடைந்து அதற்கேற்ப அவர்களை வளர்க்கப் போகிறோமா?
என்பதன் கேள்விகளை முன்வைத்துவிட்டு நகரும் ஒரு முக்கியமான கலை படைப்பு
இப்படம்.
Taree Zameen Par - தோல்வியையும் நோயையும் வென்றெடுத்தல்
படத்தின்
துவக்கக் காட்சி கல்வி உலகத்தின் சிக்கலைக் காட்டுவது போல்
அமைந்திருக்கிறது. கரும்பலகையிலுள்ள எழுத்துகள் இடம் மாறி இடம் மாறி
குதித்து நகர்கின்றன. பிறகு வேகம் கூட அனைத்தும் பெரும் வர்ணக் கலவையாக
மாறி சுழல்கின்றன. இடையிடையே ஆசிரியை ஒருவர் தோன்றி புத்தகத்திலுள்ளதை
வாசிக்க மீண்டும் மறைந்து எழுத்துகளின் அதி வேகமான சிதைவு நிகழ்கின்றது.
இஷானின் அன்றாடம் அவனுக்கு சற்றும் பொருத்தமில்லாத “louder and proper”
என்கிற ரீதியில் மிகவும் வரட்சியுடன் நகர்வதைப் படத்தின் துவக்கம் நமக்கு
காட்டுகிறது. பள்ளிக்கூடங்களும் கல்வி அமைப்புமுறையும் எழுத்துகளை
உச்சரிக்க முடியாத, சொற்களை வாசிக்க முடியாத மாணவர்களை, பலவீனமானவர்கள்,
பின் தங்கியவர்கள் என அடையாளப்படுத்தி ஒதுக்கி அவர்களின் மற்ற ஆளுமைகளைச்
சாகடித்து குறையுடைய படைப்பாக்குகின்றன என்பதை அழுத்தமாகச் சொல்ல
முயல்கிறது படம். தாளிலுள்ளதை மனனம் செய்து அதை அப்படியே பிரதியெடுத்து
பிழையில்லாமல் எழுதுவதைத்தான் மிகச் சிறந்த ஆற்றலாகவும் உயர்ந்த அடைவாகவும்
கற்பிக்கப்பட்டு வருகின்றது. அதிலிருந்து மீண்டு யாரும் கண்டிராத ஓர்
அற்புதமான கார்ட்டூன் உலகை அடைய துடிக்கும் இஷானின் கற்பனை வளம்
அசாத்தியமானது என்பதை யாரும் புரிந்துகொள்ளவில்லை.
3 x 9 = எனும் கேள்வியைப் பார்க்கும் இஷானின் பார்வையிலிருந்து எண்கள்
ஒவ்வொன்றாக தன்னைச் சிதைத்துக் கொள்கின்றன. ஒன்று பெரிய கனவானாக மாறுகிறது
மற்றொன்று மீனாக மாறி நீந்துகின்றது. இஷான் பிரபஞ்ச வெளியில் கப்பலை
ஓட்டிக்கொண்டிருக்க அவனது கப்பலில் இருக்கும் எண்கள் தலைக்கீழாகவும்,
உருவம் மாறியும் சிதறிக்கிடக்கின்றன. கார்ட்டுன் உலகத்தினுள் நுழையும் அவன்
மூளை இறுதியாக 3 எனும் எண்ணில் வந்து சேர்கிறது. அதையே விடையாக எழுதிவிடும்
அவன் , சோதனையில் குறைந்த மதிப்பெண் பெற்று அப்பாவின் கடுமையான வசைக்கு
ஆளாகின்றான்.
மொழி ஆசிரியர் அவனை வாசிக்கச் சொல்ல, அவன் சொற்கள் நடனமாடுகின்றன எனப்
பதிலளிக்கிறான். அதை அவன் செய்ய முயலும் கிண்டல் என நினைக்கும் ஆசிரியர்
அவனைத் தண்டிக்க மட்டுமே செய்கிறார். சொற்கள் நடனமாடுகின்றன என அவன்
சொல்வது மொழி ரீதியில் இயல்பாகவே அவன் அடைந்திருக்கும் பலவீனம். சொல்
இலக்கணம் அதன் ஒழுங்கு போன்றவற்றில் கவனமும் ஆளுமையும் குவியாமல்
விலகிவிடும் நிலைத்தான் அவனுக்கிருப்பது. அதை அடையாளம் கண்டு அவனுக்குள்
இருக்கும் மாற்றுத் திறமையை வெளிக்கொணரும் வாய்ப்புகள் இல்லாமல் போனதுதான்
இன்றைய கல்வி உலகம். சத்தமாகத் திருத்தமாக வாசிப்பதை அல்லது சொற்களை
ஒலிப்பதை மட்டும் மாபெரும் பயிற்சியாக முன்வைக்கும் கல்வி அமைப்பு, கலை
சார்ந்து ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளிருக்கும் ஆற்றலின் முக்கியத்துவங்களை
முன்னிலைத்தப்படுத்துவதில்லை. அதைக் கண்டடைந்து அவனை
அர்த்தமுள்ளதாக்குவதில் பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் தோல்வியடைந்து
வருவதைத்தான் இப்படத்தின் பல காட்சிகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவனுடைய கவனம் ஆசிரியர்களும் பள்ளியும் எதிர்பார்க்கும் வகையில் இல்லாமல்
போவதாலும், அவனுடைய இருப்பு அந்தப் பள்ளியின் ஒழுங்கிற்கு முரணாக
இருப்பதாலும்,. அவனை ஒரு குறையுள்ள மாணவனாக அடையாளம் காட்டுகிறார்கள். ஆகவே
இதற்கெல்லாம் தீர்வாக அவனைச் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்ப்பதாகத்
தீர்மானிக்கப்படுகிறது. அவனை வீட்டிலிருந்து வெளியேற்றி முழுநேரப்பள்ளியில்
சேர்த்து அவனை ஒழுங்குப்படுத்த முடிவெடுக்கிறார்கள். முழுநேரப்பள்ளிக்கு
வந்து சேரும் இஷானிடம் முதலில் உச்சரிக்கப்படுவது “ஒழுக்கம்” என்கிற
சொல்தான். அதைக் கேட்டு அவன் ஆச்சர்யப்படுகிறான்.
இந்தப்
பள்ளியும் அவனை மீண்டும் மீண்டும் அவர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு உகந்த
உன்னத ஒழுக்கமுள்ள மாணவனாக்கவே பயிற்சியளிக்கிறது. ஒவ்வொருமுறையும்
அதற்கெல்லாம் எதிராக அவனது மூளையும் கவனமும் ஆர்வமும் உலகின் மீதும்
இயற்கையயின் மீதும் வர்ணங்களின் மீதும் மட்டுமே பரவியிருக்கின்றன.
இயற்கையிலிருந்து ஓர் அதிசயத்தை களைத்தெடுப்பது போல, எல்லாமும்
பரப்பரப்புடன் இயங்கிக்கொண்டிருக்க அந்த இயக்கத்தையெல்லாம் சலனமே இல்லாமல்
வெறுமனே பார்த்து இரசிப்பது போல, அவன் உலகம் தனித்துக் கிடக்கிறது. அதனைக்
கடப்பவர்கள், அதன் கூர்மையான தரிசனத்தின் யதார்த்தத்தைப் பற்றி
அக்கறைப்படாமல் அதைச் சீரமைக்கவும் சீர்ப்படுத்தவும் மட்டும்
முயல்கிறார்கள்.
அவனை அப்பள்ளியில் விட்டு செல்லும் அம்மாவைப் பார்த்துக் கலங்கிய கண்களுடன்
இஷான் நிற்க பின்னணியில் ஒலிக்கும் பாடல் வரிகள் மிகவும் முக்கியமானவை.
அவனது மனம் கொள்ளும் புலம்பலாகப் பாடல் விரிகிறது. “உனக்கு தெரியுமே
அம்மா... கூட்டத்திற்கு மத்தியில் என்னை விட்டுச் செல்லாதே அம்மா” என
நீளும் பாடல் குழந்தைகள் தவறான தனிமைக்குள்ளாகும் சூழலின் மூலம்
வெளிப்படும் கொடுமையைச் சொல்கிறது. பிறகு சிறுக சிறுக பள்ளியின் சூழலை
உள்வாங்கிக்கொள்ள முயல்வதும் முடியாமல் பதற்றமடைந்து தவிப்பதும் என இஷான்
மெல்ல அவனுக்குள்ளிருக்கும் அதிசயங்களையும் தொலைக்கத் துவங்குகிறான்.
ஓவியத்தில் அவனுக்கிருக்கும் ஆற்றலை அடையாளம் கண்டு வெளிக்கொணரும்
ஆசிரியராக அமீர் கான் வருகிறார். மாணவர்களின் மனதைப் புரிந்துகொண்டு
அவர்களின் உலகை மீட்டெடுத்து அதன் மீது வர்ணங்களைப் பூசி அழகுப்படுத்தும்
தூரிகையைக் கையில் வைத்திருக்கிறார். பள்ளியில் பயிலும் எல்லா மாணவர்களும்
அவரின் வருகைக்குப் பிறகு மகிழ்ச்சியடைகிறார்கள். அறியப்படாத கவனிக்கப்படாத
ஏதோ ஒரு மாணவனின் தனிமையுடன் உரையாட கடவுளின் தூதர் போல சில நல்ல
ஆசிரியர்கள் வந்து சேர்ந்துவிடும் அதிசயம் உலகம் முழுக்க நடந்துகொண்டே
இருக்கின்றன. அப்படியொரு அதிசயம்தான் இஷான் வாழ்விலும் நிகழ்கிறது.
ஓவியத்தில் வழி அவன் தன்னையும் தன் திறமையையும் கண்டடைகிறான்.
2008இல் இந்தியாவின் ஒட்டுமொத்த நம்பிகையையும் பெற்று அடிமனதில் சலனத்தை
உருவாக்கிய இப்படம் 2009 ஆம் ஆண்டு இந்தியாவைப் பிரதிநிதித்து ஆஸ்கார் அயல்
நாட்டு சினிமா பிரிவுக்காக அனுப்பப்பட்டது. அனைவரின் மனதிலும் தங்க மீன்
போல அனைத்து விசித்திரங்களையும் பூசிக்கொண்டு நீந்திக்கொண்டிருக்கின்றது.
தலையை நீட்டி உலகை எக்கிப் பார்ப்பது போல அப்படத்தை ஒட்டிய ஆய்வுகளும்
விமர்சனங்களும் உருவாகியபடியே இருக்கின்றன. உலகில் பிறக்கும் எல்லாம்
குழந்தைகளும் தனித்துவமானவர்கள் என்பதை Taree Zameen Par
நினைவுப்படுத்துகிறது.
|
|