|
|
தர்மினியின்
கவிதை தொகுப்பான சாவுகளால் பிரபாலமான ஊர் பற்றி எழுதுவதே எனக்கு பெரிய
சவாலாக இருந்தது. முதலில் தொகுப்பின் தலைப்பே என்னை அதனுள் நெருங்க விடாமல்
பயமுறுத்தியது. ஒவ்வொரு முறையும் எப்படித் தொடங்கலாம் என்று தொடங்கி
தொடங்கியே பல காகிதங்கள் கசக்கி எறியப்பட்டன. கவிதைப் பற்றிய விமர்சனத்தை
எழுதுவது இது எனக்கு முதல் முறை இல்லை. எனினும் தர்மினியின் கவிதைகளை
அத்தனை சுலபமாக என்னால் விமர்சித்து விட முடியவில்லை. அதை எழுதுவதற்கு
சரியான சொற்கள் தேவைபடுகிறது. அவ்வாறான சொற்களை சரியான இடத்தில் பயன்
படுத்திக்கொள்ள எனக்கு பொறுமை தேவைப் படுகிறது. அனைத்துக்கும் மேலாக
அக்கவிதைகளை கிரகித்துக்கொள்ள எனக்கு வலிமை தேவைப்படுகிறது.
சாவுகளால் பிரபாலமான ஊர், இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால்,
மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான
மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை.
எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள்.
எப்படியெல்லாம் பிணமாகக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்த்திக்காட்டிய
கொடூரங்களுக்குப் பெயர் போன ஊர். வன்கொடுமையையும், வக்கிரத்தையும் அப்பாவி
பொதுமக்கள் மீதும் விடுதலை போராளிகள் மீதும் பிரயோகித்து பிணங்களை
சம்பாதித்து பிரசித்திப்பெற்ற ஊர்.
அந்த ஊரில் பிறந்து வளர்ந்து போரின் கசப்பான அனுபவங்களோடு பிரான்ஸ்
நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் தர்மினி தன் இறந்த காலங்களுக்கு உயிர்
கொடுத்து கவிதை வடிவில் உருவம் தந்திருக்கிறார். போரின் ஆறாத காயங்கள்,
நட்பு, காதல், ஆணாதிக்கம், அரசு திட்டங்கள் என அதனதனில் பட்ட காயங்களை
கவிதையாக சமைத்து நமக்கு உண்ண கொடுத்திருக்கிறார். 50 கவிதைகள் கொண்ட
இந்தத் தொகுப்பில் பக்கத்துக்கு பக்கம் வெறுமையும், துயரமும் அவரின்
கோபமும் போர் சூழலையே பேசிக் கொண்டிருக்கின்றன.
யுத்தத்தில் பாதிக்கப்படும் உடைமைகளையும் சொத்துக்களையும் உயிரைக்கொண்டு
மதிப்பிட முடியாது. ஆனால் யுத்தங்கள் தின்று தீர்க்கும் வீடுகளைப் பற்றிய
கவலையோடு ஓடுபவர்கள் நத்தையின் கூடு போன்ற வீடொன்று முதுகில் இருந்தால்
எளிதாக இருக்கும் என்று வெம்புகிறார்கள்.
குண்டுகள், துப்பாகிகள்,
வேவுக்கண்கள் சொல்லுகின்றன
வீடுகள் பாதுகாப்பற்ற மரணக்கிடங்குகள்
..................................
நத்தையின் கூடு போன்ற
வீடொன்றை நினைத்து வெதும்பியபடியே
ஏதோ ஓரிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருப்பார்கள்.
வீடுகளில் சுகமாக வாழ்ந்து பழகி விட்ட நமக்கு நத்தை போன்றதொரு
வீட்டையெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் பாதுகாப்புக்கூட
துணை நில்லாத வீடுகளைப் பற்றிய துயரமே எவ்வகையான கவிதைக்குக் காரணமாக
இருந்திருக்கிறது.
அடக்கம் செய்ய முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் பிணங்களை தூக்குவதற்கு
ஆட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் பெரியவர்களின் குமுறல்களை
வார்த்தையால் சொல்லிவிட முடியாது. ஆனால் கவிதையாய் சொல்கிறார் தர்மினி
இப்படி.
சுடுகாற்றுத் தாழைகளிலிருந்து
நாகங்கள் தப்பித்தோடியிருக்க
கல்லறைப் பூவரசுகளின் நிழலில்
அடையாள அட்டைகளைக் கைகளிற் பொத்தியபடி
பிணந்தூக்க எவருமற்று
கிழவர்களும் கிழவிகளும் கால் நீட்டிக்காத்திருப்பர்.
சிதைவடைந்த ஊரில் செழித்துக்கிடைப்பவையே சுடுகாடும் இடுகாடும் என்று
இருக்கும் போது பிணங்களும் நிம்மதியற்றுதான் இருக்கின்றன.
பெண்ணியம் பேசும், பெண்கள் எழுதும் கவிதைகள் அவர்களின் உறுப்பைக்
கொண்டாடியபடியே இருக்கிறன. அதைத்தாண்டி இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர்
வெவ்வேறு பாடுபொருள் கொண்டு கவிதை வரைந்தாலும் ஒட்டுமொத்தமாகத் தன்
சுயத்தைதான் பாடுகிறார்கள் என்ற பொது கருத்து ஒன்று பெண் கவிகள் மீது
உண்டு. தொகுப்பில் தர்மினியும் உறுப்பை பேசுகிறார் இப்படி...
சொறி பிடித்த தொடைகள்
மலமாய் நாறும் வாய்கள்
அழுக்காக மடிந்த வயிறுகள்
நெளிந்த குறிகள்
உங்கள் நிர்வாணங்களை ஒரு தடவை பார்த்து வெட்கி
மற்றுமொருத்திக்குக் காட்டாது
பொத்தி வையுங்கள்...
என்று முடிகிறது கவிதை. இராணுவச் சிப்பாய்கள் ஈழத்து சகோதரிகளுக்கு செய்த
வன்கலவிக்கும், சித்திரவதைகளுக்கும் கொடூரக் கொலைகளுக்கும், அழிக்கமுடியாத
சாபத்தைச் சுமந்துக்கொண்டுதான் வாழ நேர்ந்திருக்கிறது. செத்துப்போன கன்றைச்
சுற்றி நின்று பிய்த்து தின்னும் ஓநாய்களாகவும் மரபு அற்றவர்களாகவும்
அவர்களை சீறுகிறார் தர்மினி. சிங்கள சிப்பாய்களின் குடும்பத்துப் பெண்கள்
தன் வீட்டு ஆணின் வருகையை எதிர்ப்பார்ப்பதை இப்படி விவரிக்கிறார். ஒருத்தி
தன் சகோதரனின் நலம்விசாரித்து கடிதம் எழுதுகிறாள். பிரிவை தாங்க முடியாமல்
காதலி கண்ணீர் வடிக்கிறாள். தன் காதலைச் சொல்வதற்காக மற்றொருத்தி
சிப்பாயின் விடுமுறையை எண்ணி வாசலையே பார்த்துக்கொண்டிருகிறாள். அவனின்
மகள் அப்பன் கொண்டு வரும் பரிசு பொருட்களையே நினைத்துக்கொண்டிருக்கிறாள்.
மனைவி நித்திரையற்ற தன் இரவுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறாள். அவனின் தாய்
சாவுக்காவது வருவானா என்று கலங்கிய படி இருக்கிறாள். அந்தச் சமயத்தில் அவன்
போரில் ஏதோ ஒரு பெண்ணை வன்கலவிச் செய்து கொன்று மண்ணை போட்டு மூடி
இருக்கலாம். உண்மையில் சிங்களச் சகோதரிகளின் அன்புக்கும் நேர்மைக்கும்
பாத்திரமற்றவர்கள் இவர்கள். நம்பிக்கை துரோகிகள் என்றும் இவர்களை
சொல்லலாம்.
ஈழப் போர் ஆரம்பித்த நாள் முதற்கொண்டு மற்றவர்களை விட அதில் பெரும்
பாதிப்படைந்தவர்கள் குழந்தைகள்தான். அவர்களின் சிரிப்பும், குழந்தை தனமும்,
குழந்தை பருவமும் அநியாயமாகப் பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களின்
விளையாட்டுகள் பலவந்தமாக களவாடப்பட்டிருக்கிறது. புத்தகம் ஏந்தும் கைகளில்
ஆயுதங்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. கருவறையில் வளரும் குழந்தைக்கும் போர்
பற்றிய பயம் அல்லது எதிர்காலத்து போராளி நீ என ஆருடம் ஊட்டப்படுகிறது. இந்த
விடயத்தை பேசுகிற கவிதை தர்மினியின் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானது.
ஐந்து மாதக் கருவும் போருக்குத் தேவையாம்
இனி எம் கர்ப்பங்கள் கண்காணிக்கப்படும்
..................................
சில மாதங்களான குழந்தைகளை நோக்கியும்
சில வருடங்களான சிறுவர்களைக் குறிவைத்தும்
தாயின் கதறலை வென்ற
துப்பாக்கிகளின் ஓசைகள்
என்று தொடர்கிறது கவிதை. அதிகாரம் கொண்ட வெறி கொண்டவர்கள் கிழக்கிலும்
மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் தீவின் திசை எங்கும் வெறி கொண்டவர்களாகவே
அலைவதை கவிதையில் காணப்படுகிறது. ஓடி விளையாடுப் பாப்பா என்று பாரதி சொன்ன
கவிதைக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. செய்து முடி. அல்லது செத்து மடி
என்பதுதான் எழுதாத
விதியாக உள்ளது
கடிதம் எழுதாத நண்பனுக்கு முகவரி கொடுக்கும் கவிதையும் (பக்கம் 26),
தீர்ந்து போகாத காதலைப்பற்றி பேசும் பெண்ணின் மனநிலையிலான கவிதையும்
(பக்கம்30) மீண்டும் மீண்டும் போரினால் மாறிப்போன பிம்பங்களையே நம் கண்முன்
நிறுத்துகிறது. இவரது கவிதைகள் ஆதங்கங்களை மட்டும் அல்ல வரலாற்று
பதிவுகளும் அவற்றுடனான அவரின் இருப்பையும் இணைத்திருக்கிறார். கணவனின்
ஆணாதிக்கத்தை ஆற்றாமையுடன் தனக்குள்ளோ அல்லது பயந்து பயந்து மற்றவருடமோ
கேள்விக்கேட்கும் பெண்கள் எங்கும் உண்டு. எல்லாரது பெண்கள் வாழ்க்கையிலும்
சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வுதான் இது. மேலோட்டமாக இதை பார்க்கும் போது
சாதாரணமாகத்தான் தெரியும். ஆனால் அதனால் ஏற்படும் மனஉளைச்சலையும்,
மனஅழுத்தத்தையும் திரண் இல்லாத பெண்கள் எங்கு கொண்டுபோய் கழுவ முடியும்?
சுற்றியிருக்கின்ற நான்கு வீடுகளும்
சற்றுக் கதவு திறந்து பார்த்தன.
..................................
கணவன் என்னைத் திட்டிக்கொண்டிருக்கிறான்
காதடைக்க வாயடைத்து நின்றேன்.
..................................
மறுநாள் மெதுவாக வந்தானவன்
..................................
இன்று உரத்துக் கத்திட முடியாதவன் போல
மெல்லச் சொன்னான்
மன்னித்து விடு
என் ஒரு காதுச்சவ்வும் அதிராத அவ்வசனம்
எட்டிப் பார்த்த அத்தனை வீடுகளுக்கும் எப்படி கேட்கும்?
என்று முடியும் இந்த கவிதை தர்மினியின் துல்லியமான பெண்ணியப் பார்வையை
காட்டுகிறது.
இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த கவிதையாக 'அகமும் புறமும்' என்ற
கவிதை உள்ளது. நான் எத்தனை பலவீனமானவள் என்று என்னை சுட்டிய கவிதை அது.
மன்னித்தலும் மறத்தலும் மனித மாண்பு எனப் படும்போது, மறக்கவும் முடியாமல்
நினைக்கவும் முடியாமல், சதாக் கொல்லும் போரின் நினைவுகளை எப்படி
உரித்துப்போடுவது? எங்கு போனாலும் எப்படி இருந்தாலும் சாவுகளால் பிரபலமான
ஊரில் இருந்து வந்தவர்கள் என்ற அடையாளம் பின்தொடர்வதை யாராலும்
அறுத்துப்போட முடியாது.
எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்…
நீரால் நிலத்தால் பிரிந்த துயரில்
வேலை முடிந்து வெந்நீரிற் குளித்து
நேரம் ஒதுக்கிப் பேச
மதுவை ஊற்றி மேசை நிறைத்து
மசாலாவுடன் மாமிசங்கள் மற்றும் மலர்க்கொத்துக்களுடன்
அவ்வப்போது வாதங்களைக் குரோதங்களை வீசி
முடிவிற் சில பாடல்களாற் தீர்ந்திடும்
எம் நிலமெங்கும் பிணங்கள் கிடக்குது
நானுணர்வேன்
நிணமும் பிணமும் உண்ணும் பேய்கள் உலாவழும்
நானறிவேன்
ஆயினும் நானின்று உயிரோடுள்ளேன்...
ஈழத்துப்போரின் அவலங்களை விதவிதமாக பேசியாகிவிட்டது. பக்கம் பக்கமாக
எழுதியாகியும் விட்டது. நாளுக்கொரு காணொளியாக வந்த வண்ணமே உள்ளது.
பாதிப்படைந்தவர்களை விட மற்றவர்க்கு அது ஒரு சேதிதான். அச்சச்சோ என்று
வேதனையைத் துப்பிவிடும் சேதிகள். அதிக பட்சமாக பண உதவியோ அல்லது இலங்கை
அரசுக்கு எதிராக இணையத்தில் வாக்குகளோ.... அல்லது.... இங்கிருந்தபடி
விடுதலை போராளிக்கான நியாயங்களை கூட்டம் போட்டு பேசவோ மட்டும்தான் எங்களால்
முடியும். சாவுகளால் ஒரு ஊர் பிரபலமாகிக்கொண்டிருக்கும் போது நாங்களும்
திராணியற்று சுடச்சுடச் சேதிகளை எதிர்பார்த்துக்கொண்டு உயிரோடுதான்
இருந்தோம்.
|
|