|
|
'Oviyar Raja commit
suicides.'
நண்பர் சந்துருவிடமிருந்து இந்தக் குறுந்தகவலை ஒருதரம் உரக்க வாசித்தபோது
வீடு நிசப்தமானது. அந்நிசப்தத்தினூடே நான் சந்துருவை அழைத்துக் கேட்டபோது,
விவரம் அவர் சொல்லும் வரை எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு
ஆச்சரியப்பட்டார்.
"தெரியாது" என்றேன்.
"தூக்குமாட்டிக்கொண்டு இறந்துள்ளார்" என்றார்.
"அப்படியா!" என்றபோது என் குரலில் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது. எவ்வகை
தத்துவங்களாலும் அகற்ற முடியாத பதற்றம் அது.
இளம் தலைமுறைகளில் ஓவியர் ராஜாவுக்கு அதிக நெருக்கமானவனாக நான் இருந்தேன்.
அதற்கு அவர் என் உறவினராக இருந்தது மட்டும் காரணமல்ல. நான் சதா ஓவியங்கள்
குறித்து அவரிடம் பேசக்கூடியவனாகவும் விவாதிக்கக் கூடியவனாகவும் இருந்தேன்.
ஓவியம் குறித்து பேசுவதில் அவருக்கும் அலாதி இன்பம் இருந்தது. பல
கலைஞர்களிடம் இத்தன்மையை நான் கண்டுள்ளேன். நவீன வாழ்வின் உரையாடல்கள்
அதிகமும் பொருளீட்டும் முறையைதான் மையமிட்டுருக்கின்றன. இவற்றிலிருந்து
தான் சார்ந்த கலைத்துறையின் உரையாடல்களைச் செவிமடுக்கும் ஒருவன் அவ்வப்போது
வேகமாக தன்னை உதறி ஒரு சில நிமிடங்கள் தன் சுயத்தினூடாக ஆழ உள் சென்று
திரும்புகிறான். அது ஒரு பயணம். பயணம் புறத்தில் மட்டும் நிகழ்வதில்லை.
நான் எழுதத் தொடங்கிய காலத்தில்தான் ஓவியர் ராஜா எனக்கு உறவினர் எனத் தெரிய
வந்தது. அப்பாவின் தாய் மாமன் அவர். அப்பா அவரின் 'சிரிப்போ சிரிப்பு' என்ற
கார்ட்டூன் புத்தகத்தை எனக்கு வாசிக்க வழங்கினார். அவரின் பல கார்ட்டூன்களை
அதற்கு முன்பே நான் கோமாளி இதழ்களின் கண்டதுண்டு. கார்ட்டூன் புத்தகம்
என்னைப் பெரிதும் கவர்ந்தது. சில கார்ட்டூன்கள் சிரிக்க வைத்தன.
ஓவியர் ராஜா அப்போது தமிழ் நேசன் நாளிதழில் பகுதி நேரமாகப் பணியாற்றிக்
கொண்டிருந்தார். அதில் அவரது ஓவியங்கள் அவ்வப்போது சிறுகதைகளுக்கு
இடம்பெறும். கெடா மாநிலத்தில் இருந்ததால் அவ்வப்போது நான் அவருடன்
தொலைபேசியில் உரையாடி வந்தேன். இலக்கியம் குறித்து அவரிடம் பேச ஒன்றும்
இல்லாதபடியால் அவருடன் தொடர்ந்து பேசவாவது கார்ட்டூன் வரையும் பழக்கத்தை
ஏற்படுத்திக் கொண்டேன். நான் வரையும் கார்ட்டூன்களை அவருக்கு அனுப்பி
வைத்து கருத்துக் கேட்பேன். முதலில் பாராட்டுவார். பின்னர் சில
குறைபாடுகளைச் சொல்வார். தொலைபேசியில் அவருடன் பேசுவது சுவாரசியமில்லாதது.
கேட்கும் கேள்விகளுக்கு சில வினாடிகள் கடந்தே பதில் வரும். முதலில் அது ஏதோ
தொலைபேசி கோளாறு என்றே நினைத்து வந்தேன். காலம் கடந்தே அது அவரது இயல்பு
எனத் தெரியவந்தது.
கெடாவிலிருந்து கோலாலம்பூருக்கு மாற்றலாகிய பின்னர் நான் அடிக்கடி ஓவியர்
ராஜாவைச் சந்திக்கத் தொடங்கினேன். அவர் அப்போது 'பெக்கெலிலிங் அடுக்குமாடி'
பொது மண்டபத்தில் பொறுப்பாளராக இருந்தார். பெரும்பாலும் மதிய நேரத்திற்குப்
பின் மண்டபம் காலியாகவே இருக்கும். மண்டபத்தின் முழுப் பொறுப்பும் அவரிடம்
இருந்ததால் மாலை வேளைகளில் சில மாணவர்களுக்கு ஓவிய வகுப்பும்
எடுத்துக்கொண்டிருந்தார். தபால் மூலமாக தமிழகத்தில் ஓவியம் பயின்ற அவர் ஏதோ
ஒரு வகையில் தன் கலை மனதைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வது புரிந்தது.
முன்னாள் பிரதமர் மகாதீரின் பல்வேறு வகையான தோற்றங்களை ஓவியமாக வரைந்து
கண்காட்சி வைத்ததும் அவரின் உருவத்தை நாற்பது அடி உயரத்துக்கு வரைந்து
அன்பளிப்பாக அளித்ததும் தன் ஓவிய வாழ்வின் சாதனையாகக் கருதினார். அவருக்கு
தான் ஓவியர் என நிரூபிக்க அது ஒரு முக்கிய சாட்சியாக இருந்தது. அதுகுறித்து
பேசும் போது உற்சாகம் அடைவார். நான் ஓர் ஓவியனாக இல்லாதபோதும் ராஜாவின்
அம்முயற்சிகள் நுட்பமான சூத்திரங்கள் நிறைந்தது என்று மட்டுமே தோன்றியது.
ஒரு கவிஞன் பத்தாயிரம் பக்கங்களுக்கு கவிதைப் புத்தகம் போட்டது போல ஒரு
பிரமிப்பு மட்டுமே அது. ஆனாலும் அதை அடைய அவர் நிதானமான அசைவுகள் எவ்வாறு
நகர்ந்திருக்கும் என எண்ணும்போது மனம் பாராட்டியது.
0 0 0
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பல்வேறு வகையான மரணச் செய்திகளைக்
கேள்விப்பட்டதுண்டு. இயற்கை மரணம், விபத்து, கைகலப்பில் மரணம் என
அச்செய்திகள் எனக்குப் பழக்கமாகியிருந்தாலும் தற்கொலை என்பதை ஏற்றுக்கொள்ள
எனக்கு சங்கடமாக இருந்தது. அதுவும் கார்ட்டூன்கள் மூலம் பலரையும் சிரிக்க
வைத்துக்கொண்டிருந்த ஒரு கலைஞனின் தற்கொலை, வாழ்வின் மீதான கேள்விகளை
நிரப்பிக் கொண்டிருந்தது.
ஈராயிரத்தாம் ஆண்டு தொடக்கங்களில் இலக்கிய நிகழ்வுகளுக்குப் பதாகைகள்
எழுதும் வேலை ஓவியர் ராஜாவுக்குப் பகுதி நேரத் தொழிலாக இருந்தது. பல்வேறு
பாணியில் தமிழ் எழுத்துகளை எழுதத் தெரிந்த அவர் இலக்கிய வட்டத்தில் மிக
முக்கிய பதாகை வரைபவராகப் பவனி வந்தார். பல மாத, வார ஏடுகள் தாங்கள்
நடத்தும் வாசகர் சந்திப்புகளுக்கும், எழுத்தாளர்கள் தாங்கள் நடத்தும் நூல்
வெளியீட்டுக்கும் ஓவியர் ராஜாவையே தேடி வந்தனர். ஓவியர் ராஜா அவர்களுக்கு
பதாகை தயாரிக்கும் தருணம் சுவாரசியமானது.
அவர்கள் கேட்ட அளவுக்கு வெண் துணியைத் தயார் செய்து கொள்வார். அவற்றில்
எழுத்துருவுக்கு ஏற்றாற்போல கோடுகள் கிழிப்பார். பென்சிலால் எழுத்துகளை
அதிக அழுத்தம் கொடுக்காமல் வரைந்து, எந்த எழுத்துக்கு எவ்வர்ணம் என
குறிப்பெழுதி வைத்து விடுவார். அவரின் உதவியாளர் அவ்வெழுத்துகளுக்கு வர்ணம்
இட்டு இரவில் மண்டபத்தின் உள்ளேயே காய வைத்து விடுவார்கள். பொதுவாகவே
இந்தப் பணிகள், நிகழ்வு நாளைக்கு என்றால் முதல் நாள் இரவில்தான் அவசர
அவசரமாக நடக்கும். ஓவியர் ராஜாவுக்கு அவசரப்படத் தெரியாது. மனம் நிறைந்த
அவசரத்தோடும் செயல்பாடுகளில் நிதானங்களோடும் அவர் இரவோடு இரவாக பதாகைகளை
தயார் செய்து முடிப்பது வேடிக்கையாக இருக்கும்.
ஓவியர் ராஜாவிடம் இந்த நிதானத்தை நான் எப்போதும் பார்த்து
ஆச்சரியப்படுவதுண்டு. தான் கடந்து வந்த பாதையில் சந்தித்த துரோகங்கள்,
அவமானங்கள், கீழறுப்புகள் என ஒவ்வொன்றையும் தன் நிதானத்தின் மூலமே
கடந்ததாகச் சொல்வார். அவருக்கு துரோகம் இழைத்தவர்கள் எல்லாம் தொடர்ந்து
அவருடன் பழகுவதும் அதற்கான கட்டற்ற வெளியை அவர் ஏற்படுத்தியுள்ளதையும் ஏற்க
சிரமமாக இருக்கும். ஆச்சரியமாக ராஜாவுக்கும் ஒருமுறை கோபம் வந்தது.
0 0 0
தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எந்த நிமிடத்தில் அவர் எடுத்திருப்பார் என
கணிக்க முடியவில்லை. தூக்குமாட்ட அவர் கயிற்றைத் தயார் செய்யும்போதும் அவர்
நிதானம் அவருடன் இருந்திருக்குமா என்ற கேள்வி இன்றளவும் துளைத்தபடி உள்ளது.
நிதானம் தற்கொலைக்கு ஒத்துப்போகுமா என்றும் தெரியவில்லை. ஆனால் அவர்
கோபத்தின் போதும் நிதானமாகவே காணப்பட்டார்.
அவர் பணியாற்றிய பெக்கெலிலிங் மண்டபத்தில் புதிதாக துணைக்குச் சேர்ந்த இரு
பணியாளர்கள் மண்டபத்தைத் தவறான முறையில் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர்.
மண்டபத்தை மிகக் குறைவான விலையில் வாடகைக்கு விட்டு அரசாங்கத்திடன்
கணக்கில் காட்டாமல் ஏமாற்றி வந்தனர். அக்கால கட்டத்தில் ராஜா அதிக
கோபத்துடன் காணப்பட்டார். ஓரிருமுறை சந்தித்தபோது முன்பு போல மண்டபத்தில்
சுதந்திரமாக வேலை செய்ய முடியவில்லை என்றும், ஆட்களின் வருகை அதிகமாக
இருப்பதாகவும் கூறினார். மற்றுமொரு நாள் ஏதோ சில படங்களைக் காட்டி, அவை
அந்த இளைஞர்கள் மண்டபத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஆதாரங்கள் எனவும்
அரசாங்கத்தை அவர்கள் ஏமாற்றுவது இதன் மூலம் துல்லியமாகப் பதிவாகும் எனவும்
சில பாரங்களையும் காட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓவியர் ராஜா
திடீரென ஜேம்ஸ் பாண்டாக மாறியிருந்தது வியப்பளித்தது.
சில வாரங்களுக்குப் பின் ஓவியர் ராஜாவை மண்டபத்திற்குத் தேடிப்போனபோது அவர்
அங்கிருக்கவில்லை. வேலை மாற்றலாகி 'கம்போங் பண்டான்' மண்டபத்தில்
பணியாற்றுவதாகச் செய்தி வந்தது. எந்தத் தொலைபேசி அழைப்புக்கும் அவரிடம்
பதில் இல்லை. நேராகத் தேடிச்சென்றபோது அவர் முகம் வாடியிருந்தது. அதிக வேலை
என்றார். வழக்கத்தைவிட சொற்களுக்கான இடைவெளி அன்று நீண்டிருந்தது. "இங்க
உண்மைக்கு மதிப்பில்லை. அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நான் தகுந்த ஆதாரங்களோடு
அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதினேன். ஆனால் எனக்கு வேலை மாற்றல் கடிதம்
வந்தது. சட்டம் தமிழர்கள் மீதுதான் பாயும் போல... இங்க பெக்கெலிலிங்
மண்டபம் போல இல்ல. அதிக வேலை. அடிக்கடி நிகழ்ச்சிகள். பேனர் வரைய ஓய்வு
இல்லை. என் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது," என்றார். எனக்கு
என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை. அதற்கான எந்தத் தயார் நிலையிலும்
நான் இருக்கவில்லை.
அடுத்து என்ன செய்யப் போகிறார் என மட்டும் கேட்டேன். கணினி படிக்க வேண்டும்
என்றார். அப்போது சீனர்கள் மத்தியில் மட்டும் பிரபலமாகியிருந்த நெகிழி ரகப்
பதாகை தமிழர்கள் மத்தியிலும் அறிமுகமாகத் தொடங்கியிருந்தது. அதன் விலை
அதிகம் என்பதால் பெரிய பெரிய நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.
கணினியில் அளவெடுத்து வேண்டிய எழுத்துருவில் பதாகையை உருவாக்கி ஒரே நாளில்
அச்செடுத்து வரும் நவீன பதாகை நேர்த்தியாகவும் வர்ணங்களோடும்
காட்சியளித்தது. அதன் வருகையால் தனது பகுதி வருமானம் கணிசமாகப்
பாதிக்கப்படும் என்பதை ஓவியர் ராஜா உணர்ந்தே வைத்திருந்தார். உடனே அந்நவீன
தொழில்நுட்பத்தைக் கற்க முயற்சி செய்து வேலை பளு காரணமாக அதிலிருந்து
பின்வாங்கியிருந்தார்.
'கம்போங் பண்டான்' மண்டபத்திற்குச் சென்ற பின்னர் ஓவியர் ராஜாவைப்
பார்ப்பது குறைந்தது. அது அதிக தொலைவில் இருந்ததாலும் நான் மேற்கல்வி
படிக்கச் சென்றுவிட்டதாலும் இடைவெளி நீண்டிருந்தது. ஆனால் ஓவியர் ராஜா
குறித்து நான் புதிய தகவலை ஒரு விடுமுறைக்கு வந்தபோது கிடைக்கப் பெற்றேன்.
0 0 0
ஓவியர் ராஜாவின் மரணம் குறித்து நான் இதோடு மூன்றாவது முறையாக எழுதுவதாக
ஞாபகம். கவிதையாகவும் சிறுகதையாகவும் அம்மரணத்தை நான் கடக்க முயன்று கொண்டே
இருக்கிறேன். எல்லோரும் சொல்வது போல நீரிழிவு நோயினால் இரு சிறு
நீரகங்களும் பாதிக்கப்பட்ட இயலாமையின் மரணமாக மட்டும் என்னால் கணிக்க
முடியவில்லை. அவர் மரணம் ஓர் எதிர்வினை. யாருக்கான எதிர்வினை என்பதுதான்
புரியவில்லை. அது புரிந்தால் என்னால் அம்மரணத்தைக் கடக்க முடியலாம்.
ஒருவகையில் ஓவியர் ராஜா ரஜினியானதும் தன் எதிர்வினையைச் சொல்லும்
முயற்சிதானோ எனத் தோன்றுகிறது.
அவர் சில இதழ்கள் நடத்தும் ஆண்டுக் கூட்டத்தில் ரஜினிகாந்த் போல வேசம்
அணிந்து ரஜினி பாடல்களுக்கு அபிநயம் பிடிப்பதைக் கேள்விப்பட்டவுடன்
திடுக்கிட்டேன். ராஜாவின் உயரம், முகவாகு, முடி என பலவும் அவருக்கு
ஒத்திருந்தாலும் அவரின் இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் தெரியாமல்
குழம்பினேன். எனக்கு ஏதோ அவமான உணர்வு ஏற்பட்டது. இதழ்களில் அவர் ரஜினி
உருவத்துடன் இருக்கும் புகைப் படங்களைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. ஓர்
ஓவியனின் நிலை இவ்விடத்தில் வந்து நிற்கும் என நான் நினைத்திருக்கவில்லை.
அவரிடம் கேள்வி எழுப்ப முடியாத இடைவெளியில் இருப்பது போன்ற உணர்வு
ஏற்பட்டது.
ராஜாவுக்கு மலேசியத் தமிழ் எழுத்துலகச் சூழல் மேல் தீராத வெறுப்பு
இருந்தது. உழைப்புக்கு ஊதியம் தராமல் சுரண்டும் வர்க்கமாகவே அவர்
இதழாசிரியர்களையும் எழுத்தாளர்களையும் கணித்திருந்தார். ஆனால் அவரால்
அவர்களைவிட்டு நீங்க முடியவில்லை. அவர்களோடு பணியாற்றவே அவர் ஆர்வம்
செலுத்தினார். நெகிழி பதாகைகள் பரவலான பயன்பாட்டுக்கு வந்து விலை மலிவாகக்
கிடைக்கத்தொடங்கிய போது காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியாமல்
நலிந்ததை சரிகட்டவே அவர் ரஜினியானாரோ என சிந்திக்கத்தோன்றுகிறது.
ரஜினியால் எல்லாம் செய்ய முடியும். கடும் வறுமையில் இருந்தாலும் அவருக்கு
எங்கிருந்தாவது பணம் கிடைக்கும். குறைந்த பட்சம் கிராணிட் மலையாவது
கிடைக்கும் என ராஜா நம்பியிருக்கலாம். ரஜினியாவதில் மனதையும் உடலையும்
பிதுக்கும் நோய்மையிலிருந்து தற்காலிகமாக மீண்டு வந்திருக்கலாம்.
0 0 0
ராஜா இறந்த மறுநாள் தமிழ் நேசனில் அது முதல் பக்கச் செய்தியாக வந்தது. ராஜா
மரணத்துக்கு முன் எழுதியிருந்த கடிதம் அதில் இணைக்கப்பட்டிருந்தது. தான்
மரணத்துக்கு யாரும் காரணமில்லை என்றும் அவர் பகுதி நேரமாகச் செய்யும்
மருந்து வியாபாரத்தில் கிடைக்கும் பணத்தை இருவருக்குக் கொடுத்துவிடும்படி
பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இருவருக்கும் தான் கடன்பட்டிருப்பதாகக்
கூறியிருந்தார். வேறு எந்த குறிப்பும் அதில் இல்லை. எழுத்து
ராஜாவினுடையதுதான். நிதானமாக இருந்தது.
ராஜாவுடனான கடைசி சந்திப்பு அந்த மருந்து வியாபாரத்தில்தான் நிகழ்ந்தது.
நீரிழிவு நோய்க்கான மருந்தை அவர் விற்பனை செய்து கொண்டிருந்தார். இயன்றால்
தனக்குக் கீழ் சேரும்படி என்னைப் பணித்தார். நான் புன்னகைத்தேன். அன்று
முழுவதும் அவர் மருந்து குறித்தே பேசினார். ஓவியம், கார்ட்டூன் என
மருந்துக்கும் அவர் வாயில் வராமல் மருந்தென்றே வந்து கொண்டிருந்தது.
விடைபெறும் போதும் உறுப்பினராகும் பாரத்தை என்னிடம் கொடுத்துவிட்டுச்
சென்றார். நான் மௌனமாகப் பார்த்தபடி இருந்தேன். அவருக்கு என் எண்ணம்
புரிந்திருக்க வேண்டும். அவர் ஓவியம் குறித்து ஒன்றும் பேசவில்லை.
தான் வாழ விரும்பும் ஒரு வாழ்வை ராஜா சதா தேடிக்கொண்டிருந்தார். தனது
நிதானத்தினூடே இந்த அவசர வாழ்வை கடந்துவிட அவர் போராடிக் கொண்டிருந்தார்.
அவர் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல அதிராத குரலோடு எல்லாவற்றுக்கு
எளிதாகச் சிரிக்கக் கற்றிருந்தார். கலையின் தீவிரம் குறித்தெல்லாம் அவரிடம்
பிரக்ஞை இருந்ததாய் எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவரிடம் இடையறாத ஒரு தேடல்
இருந்தது. ஒருவேளை அவர் அதை அடையும் போது அதன் பெயர் கலையின் தீவிரம் எனப்
புரிந்துகொண்டிருப்பார்.
|
|