|
|
தேவதச்சனின் குட்டிக் குதிரைகள்
“கடைசி டினோசர்” என்ற கவிதைத் தொகுப்பை
படித்தவர்களுக்குத் தேவதச்சனின் கவிதைகளின் தாக்கம் சிறிதாவது
இருந்திருக்கும். வாழ்வின் நொடிதோரும் தான் எதிர்கொள்கிற வாழ்வின் மிகச்
சாதாரண தருணங்களின் விநோதங்கள் அவரின் கவிதை முழுக்க விரவிக் கிடக்கும்.
தேவதச்சன் என்ற பெயரில் எழுதிவரும் எஸ். ஆறுமுகம் 1952ஆம் ஆண்டு பிறந்தவர்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் 'கசடதபற', 'ழ' இதழ்களில் எழுதத் தொடங்கினார்.
‘அவரவர் கைமணல்’ (1982), ‘அத்துவான வேளை' (2000) தொகுப்புகளில் உள்ள
கவிதைகளில் விரிவான பதிப்புதான் அவரது “கடைசி டினோசர்” கவிதைத் தொகுப்பு.
டிசம்பர் 2004 உயிர்மை பதிப்பக வெளியீடாக இத்தொகுப்பு வெளிவந்தது. அதற்கு
பிந்தைய கவிதைகளின் தொகுப்பு “யாருமற்ற நிழல்” என்ற தலைப்பில் டிசம்பர்
2006ஆம் ஆண்டு வெளிவந்தது. அத்தொகுப்பில் இடம்பெற்ற குட்டிக் குதிரைகள்
என்ற கவிதையில் தொடர்ந்து சுவடு பதிப்போம்.
என்னிடம் இரகசியம் என்று
ஏதுமில்லை, என்னுடைய
குருட்டு நம்பிக்கைகள் தவிர...
மாந்த வாழ்வு நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறது. இன்று உறங்கி நாளை
எழுவோம் என்ற நம்பிக்கைதான் நாளை குறித்தும் அதைத் தொடரும் நாட்கள்
குறித்தும் நமது எதிர்ப்பார்ப்பை வலுவாக்குகின்றது. நம்பிக்கையினால்
இயங்கும் வாழ்வில் பிற மனிதர்களை விட வேறுபட்ட இன்னபிற நம்பிக்கைகள்
ஒவ்வொரு மனிதனின் உள்ளமெங்கும் விரவிக் கிடக்கின்றன. தனிமனித நம்பிக்கைகள்,
இன மத சமய நம்பிக்கைகள், ஆண் பெண் என பால் சார்ந்த நம்பிக்கைகள், நாள்
கிழமை நேரங்கள் கிழித்து வைக்கும் நம்பிக்கைகள், பிறரால் நம்ப மறுக்கும்
குருட்டு நம்பிக்கைகள் என பல பரிணாமங்களில் நம்பிக்கைகள் விரிந்து
கிடக்கின்றன. பல வேளைகளில் பிறரால் கேலிக்கூத்தாக்கப்படும் அல்லது
விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் என்ற பயத்தில் பலரது நம்பிக்கைகள் குருட்டு
நம்பிக்கைகளாக அவரவர் மனதில் பூட்டி வைக்கப்படுகின்றன. என்ன இருந்தாலும்
என்னிடம் எந்த இரகசியமும் இல்லை என் குருட்டு நம்பிக்கைகளைத் தவிர என்று
சொல்வதற்கு ஒரு அசாத்திய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் எல்லாருக்கும்
கிட்டுவதில்லை.
எனது ஒன்பது வயதில் நானாக
ஒரு குருட்டு நம்பிக்கையை
கண்டுபிடித்தேன்
சிறுவயதில், தொலைவில் நின்று ஒரு மின்கம்பத்தை
நோக்கி
கல் எறிந்தேன், தேர்வில் வெற்றி பெறுவேனா என்று...
நம்பிக்கைகள் தனி மனிதனின் மன இயல்பு சார்ந்தது; வயது சார்ந்தது; வாழ்வு
சார்ந்தது. காகம் கரைந்தால் விருந்தாளி வருவார்கள் என்பது கிராமப்புற
நம்பிக்கை. அங்கு காகம் கரைகிற நேரத்தில் விருந்தாளிகள் வரலாம். காகத்தைப்
பார்த்தறியாத நகர்ப்புற குழந்தைகளுக்கு இந்த குருட்டு நம்பிக்கையின் சுகம்
கிட்டுமா... இரண்டு வெவ்வேறு வண்ண பூக்களைப் போட்டு மனதில் நினைக்கும்
வண்ணப் பூ வந்தால் நல்லது நடக்கும் என நினைப்பது, சில்லறைக் காசுகளைச்
சுண்டி போட்டு பூவா தலையா பார்ப்பது, கல்லெறிந்து பார்ப்பது இப்படி
கொட்டிக் கிடக்கும் குருட்டு நம்பிக்கைகளால்தான் வாழ்வு இன்னும் விழித்துக்
கொண்டு கிடக்கிறது போலும். சிலவேளைகளில் இந்த நம்பிக்கை நமக்கு மட்டும்தான்
இருக்கிறதா! பிறருக்கும் இருக்குமா என்று கூட மனம் யோசிக்க விழையும். நம்
வயதையொத்த நண்பர்களோடு அளவளாவும் சில தருணங்களில் நமது நம்பிக்கைகளை
ஒத்திருக்கும் அவர்களின் நம்பிக்கைகள் பதிவு செய்யப்படும்போது மிக ஆர்வமாய்
அந்த நம்பிக்கையை நாம் வழிமொழிவோம்...
என் குருட்டு நம்பிக்கை என் உள்ளங்கை
தண்ணீர்போல.
அது ஆழமானது அல்ல. அதில் என்
ரேகைகள் படிந்து அழுக்காகத்தான்
இருக்கிறது.
உள்ளங்கை தண்ணீர் எப்படி ஆழமானதில்லையோ அது போல் நிரந்தமானதும் இல்லை.
விரல் இடுக்குகளில் வழிந்தோடிவிடும் தயார் நிலையில்தான் அந்த தண்ணீர்
இருக்கும். கையை தவறி அசைக்கும் பட்சத்தில் கூட தண்ணீரின் பெரும்பகுதி கீழே
சிந்தி விடலாம். நமது வாழ்வெங்கும் சிதறிக் கிடக்கும் குருட்டு
நம்பிக்கைகள் இந்தத் தண்ணீர் போன்றதுதான். எந்த நேரத்திலும் சிந்திவிடும்
தயார் நிலையில்தான் அவை இருக்கின்றன. நம் கையிருந்து நீர் சிந்திவிடும்
பட்சத்தில் பெரும்பாலும் நீரோடு நீராய் போய் விடுகின்றன. சில குருட்டு
நம்பிக்கைகள் மட்டும் வேறாரு பரிமாணத்தில் விரல் பிடித்து உடன் வருகின்றன.
அதில் மிதந்து மிதந்து
தண்ணீரைக் கடக்காமல்
கரையை அடைகிறேன்.
எப்போதும் ஏதாவதொரு குருட்டு நம்பிக்கைகளில் மிதந்தபடிதான் நம் வாழ்வு
இருக்கிறது. ஒரு நம்பிக்கை மறையும்போது புதிதாய் இன்னொரு நம்பிக்கை
பிறக்கிறது. வயது ஏற வாழ்வு மாற நம்பிக்கைகளும் மாற்றம் பெறுகின்றன. இளம்
பெண்ணும், புதிதாய்த் திருமணமான பெண்ணும், ஒரு தாய்க்குமான குருட்டு
நம்பிக்கைகளில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாளாந்தர வாழ்விலிருந்து
பிரித்தெடுக்க முடியாத ஒன்றாக குருட்டு நம்பிக்கைகள் வடிவம் பெற்றுள்ளன.
அவைகளிடமிருந்து, அவ்வப்போது
திரும்ப நினைக்கிறேன்.
திரும்புகிறேன். எனினும்
ஒரு நிமிடத்தில் அவை கூப்பிட்டுவிடுகின்றன.
என் வாழ்வின் பூத்துக் கிடக்கும் குருட்டு நம்பிக்கைகளை பட்டியலிடத்
தொடங்குகிறேன்... 1, 2, 3 என மிக நீளமாய் நீள்கிறது என் குருட்டு
நம்பிக்கைகளின் பட்டியல்...
|
|