|
|
புதிய மொழியாடல்
விடுதிக்கு வந்து சேர்ந்த முதல் நாளே வேண்டிய
விபரங்களைத் தாளில் அச்சடித்து ஒவ்வொருவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
அவற்றையும் கையோடு எடுத்து கொண்டு அந்த மண்டபத்துக்குள் சென்றோம். வழக்கம்
போலவே வரவேற்புரை, சிறப்புரை, முக்கிய பிரமுகர்களின் அறிமுகம், குழு
பிரிப்பு நடைபெற்றது.
நேர விரயமின்றி, இரவு 8 மணிக்கு நிகழ்வு ஆரம்பிக்கப்படும் என்று சொன்ன
மாதிரியே ஆரம்பிக்கப்பட்டது. எங்களில் பலர் தாமதமாக வந்ததால் வெளியே நிற்க
வேண்டியதாய் போய்விட்டது. ஒரு வகையில் இதுவும் ஒரு நல்ல படிப்பினைதான்.
நாங்கள் அனைவரும் அங்கிருந்த அதிகாரிகளின் பிள்ளைகளின் வயதை ஒத்திருந்ததால்
எங்களை எல்லாரும் ரொம்பவும் பாசமாகவே நடத்தினார்கள். அங்கிருந்த முழு
நேரமும் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருப்பது போன்ற எண்ணம்
குறைவாகவே இருந்தது. அந்த இரவு முழுவதுமாக சரவாக் பற்றிய பல விபரங்கள் பகிர
பட்டன.
சரவாக் முழுவதுமாக மொத்தம் 11 மாவட்டங்கள் உள்ளன. அவை பின் வருமாறு:
கூச்சிங், மீரி, சிபு, ஸ்ரீ அமான், லிம்பாங், சரிகேய், கப்பிட், பிந்துலு,
சமரஹான், முக்காஹ், பெத்தோங்.
சரவாக்கில் மட்டுமே 183 இடைநிலை பள்ளிகளும், 1265 ஆரம்ப பள்ளிகளுமாக
மொத்தம் 1448 பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை ஊரக பகுதியில்
இருகின்றன. இடைநிலை பள்ளிகளை எடுத்துகொண்டால் பெருமளவு பள்ளிகள் கூச்சிங்
பகுதியில் உள்ளன. மற்றபடி எல்லாம் ஊரக பகுதிதான்.
இதை தவிர்த்து இங்கே மொழி கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். ஒவ்வொரு
பகுதியிலும் இன குழுமத்துக்கேற்ப ஒவ்வொரு மொழி பேசபடுகின்றன. இருப்பினும்
அதிகம் பேசப்படுவது சரவாக்கிய மலாய் மொழிதான். அதை தவிர்த்து இங்கே
இருக்கிற மொழிகளில் முதன்மை வகிப்பது ஈபான் மொழி. அடுத்து பிடாயு மொழி.
இந்த மொழிகளுக்கு எழுத்துக் கட்டமைப்பும் உண்டு. அவற்றுக்குப் பரிட்சையும்
உண்டு. ஆனால் அவை ஆரம்பப்பள்ளிகளிலேதான் அதிகம் போதிக்கப்படுகின்றன.
நாங்கள் வந்து சேர்ந்த முதல் நாளிலிருந்து பல பதங்களை கேட்டவாறு இருந்தோம்.
அவை எல்லாம் சரவாக்கிய மலாய் சொற்கள்.
சற்றுமுன் நான் சொன்ன அறிமுக நிகழ்வில் இதை பற்றி மிகவும் முக்கியபடுத்தி
உரையாற்றபட்டது. அதாவது சாதாரண மலாய் மொழியில் பயன்படுத்த படும் சொற்கள்
இந்த மொழியில் மாறு பட்ட பொருளை தரும். சில சமயங்கள் அவை உணர்ச்சியை
தூண்டுவதாக கூட இருக்கலாம். எனவே இந்த விசயத்தில் அதிகாரிகள் முன்னேற்பாடாக
சில சொற்களையும் அவற்றின் அர்த்தங்களையும் அனைத்து பயிற்சி
ஆசிரியர்களுக்கும் கொடுத்திருந்தார்கள். உதாரணத்துக்குச் சரவாக்கிய மலாய்
மொழியில் 'காமெக்' என்றால் 'நான்', 'சிதொக்' என்றால் 'இந்த' அல்லது 'இங்கு'
என எடுத்துக்கொள்ளலாம். இப்பொழுது தெரிந்திருக்குமே தலைப்பின் அர்த்தம்.
இன்னும் 'ஆமாம்' என்ற சொல்லை 'அவுக்' என்றும், 'தற்பெருமை' என்பதற்கு
'லாவா' என்றும், 'கோழிக்கு' 'மனோக்' என்றும், 'இல்லை' என்பதற்கு 'சிக்'
என்றும் கூறுவார்கள். இதுவே ஈபான் மொழியில் பார்த்தோமானால் நான் - அக்கு,
நீ - நூவான், ஆமாம் - அவுக், அழகு - மனா கமால், தற்பெருமை - பாமா என்றும்
இருக்கும். அப்படியே வாக்கியங்களை எடுத்துக்கொண்டால் எல்லா மொழிகளில்
இருப்பது போலவே சில மாறுதல்களும் உண்டு.
எடுத்துக்காட்டாக "அந்த பையன் மிகவும் குறும்புக்காரன்" என்பதை சரவாக்கிய
மலாய் மொழியில் "நம்பியாக் யா பெரோலா" என சொல்வார்கள். "நீங்கள் எங்கு
செல்கிறீர்கள்?" என்பதற்கு "கித்தாக் நாக் பெகி சினே?" என்பார்கள். அதுவே
"அவர் மிகவும் அழகு என இவர் சொன்னார்" என்பதை "ஞா மாடா ஓராங் யா காச்சாக்
கீலாக்" என்பார்கள். இப்படி பல விபரங்கள் தரப்பட்டன. எதோ மொழியியல்
வகுப்பில் இருப்பது போன்ற உணர்வு. இருந்தாலும் புது அனுபவமாக இருந்தது.
இப்படியே அந்த இரவு கழிந்தது.
மறுநாள் காலையிலிருந்து மாலை வரை எங்களின் வேலைக்கான பல அலுவலக விபரங்களை
அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அதன் பின் அந்த இரவு எங்களின் வேலையிடம்
தெரிவிக்கப்பட்டது. அதுவும் கடைசி நேரத்தில் தான் அறிவிக்கப்பட்டது. ஏன்
இப்படி அறிவிக்கிறீர்கள் என்று கேள்விக்கு நிறைய பேர் ஊரக இடங்களுக்கு போக
மறுக்கின்றார்கள் என பதில் வந்தது. இதற்கு ஆறுதலாக எவ்வளவுக்கு எவ்வளவு
உள்ளே கிடைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சம்பளமும் அதிகமாக இருக்கும். பொதுவாக
பெண்களை பாதுகாப்பு கருதி ஊரக பகுதிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். ஆண்களே
அங்கே அதிகம் அனுப்பபடுவார்கள். எனது பெயர் 'கூச்சிங்' மாவட்டத்திலும்
மித்ராவின் பெயர் 'சிபு' மாவட்டத்திலும் இடம் பெற்றிருந்தது. என்ன செய்வது?
அதன் பின் நாங்கள் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எங்களுக்கு தெரிவித்த பின்
மறுநாள் எங்கள் இடங்களுக்கு செல்லவேண்டிய பேருந்துக்கு வர வேண்டிய
நேரத்தையும் சொல்லிவிட்டார்கள். அதன் பின் இந்த விபரத்தை
குடும்பத்தினருக்குத் தெரிவிப்பதற்காக ஒவ்வொருவரும் கைபேசியும் கையுமாக
இருந்ததை பார்த்து நானும் தொலைபேசியில் ஆழ்ந்தேன். எனது வாழ்வின் இன்னொரு
அத்தியாயம் நாளை தொடங்கபோவதை எண்ணி கட்டிலின் மேலே கனவுகளோடு உறக்கத்தில்
ஆழ்ந்தேன்.
|
|