|
|
மரணம்
ஒரு மரணத்திற்கு
முன்பான காலக்கட்டத்தில்
இருதயம் படபடத்து
உயிர் வியர்த்திருந்தது
சதா பின்னிக்கொண்டிருந்த
கைவிரல்களை
பிரித்தெடுத்துக் களைத்திருந்தேன்
அகன்றதாய் இருந்த
அமர்ந்திருந்த சோபா
சுருங்கி கொண்டே இருந்தது
காற்று கதகதத்து
கால் விரல்களில் ஏறி
தருணங்களை மிதக்கச் செய்தது
என்னிலிருந்து பிரிந்த
நான்
விழித்து நின்ற பெண்மையை
கரைத்துக் கொள்ள நினைக்கையில்
சட்டென்று அதன்
தலையில் தட்டி
உள்ளிழுத்துக் கொண்டேன்
ஆசைகள் நெருக்கியதில்
ஈரத்தைக் கசித்திருந்தபோதும்
ஆரம்பம் நிகழ்த்த அறியாது
ஆர்ப்பரித்தது மனம்
நீண்ட மெளனத்தின் இடையிடையே
சிரித்தல்கள் ஒலிக்கும்போதெல்லாம்
காக்கப்பட்ட இடைவெளி
அபத்தமாயிருந்தது
எனக்கான இரவு
விரையத்தில் கரைவதை
சகித்துக் கொள்வது
இதற்கு மேலும்
சாத்தியப்படவில்லை
நெடுங்காலம் யாருமறியாது
தனக்குள்ளே
தீக்குழம்புகள் வளர்த்து
வெடிக்கத் துடித்து
காத்திருந்த எரிமலை
மெளனம் உடைத்த போதும்
அதற்கு பிறகான சில பொழுதுகளும்
பிரக்ஞையற்றுக் கடந்தன
மயக்கம் தெளிந்து
விழித்தபோது
உணர்த்தத் தவறிய ஒன்றின்
மரணம் நிகழ்ந்திருந்தது.
|
|