|
|
வரலாற்றில்
வந்து போன நம் மூதாதையர்களின் வாழ்வு என்றுமே நம் வாழ்க்கையில் இனித்துக்
கொண்டிருப்பவை. நம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டமானது அறிவியலுடன்
இணைந்திருக்கும் வேளையில் மூதாதையர்களின் காலம் மனித உள்ளங்களோடு பின்னிப்
பிணைந்திருந்தது. கோ.முனியாண்டி அவர்களின் கதைகளில் ஒன்றான ‘செட்டியப்ப
தாத்தாவும், பாரிஜாதப் பூ பறித்த ஏழு கடல்களும்’ என்ற கதையும்
அக்காலக்கட்டத்தில் மிளிர்ந்த ஒரு வாழ்க்கைப்பகுதியையே நம் முன்
வெளிப்படுத்துகின்றது. நம் நாடு மலேசியா 1957ல் சுதந்திரம் அடையும் முன்னர்
இருந்த சூழலின் ஒரு காட்சியே இக்கதையின் தளமாகின்றது.
கதாப்பாத்திரங்கள், சூழலுடன் சேர்ந்த மொழியுடன் உலவும்போது கதையைத்
தொடங்கும்போதே ஆர்வம் எழுந்துவிடுகின்றது. மரம் சீவும் தொழிலாளியான
செட்டியப்ப தாத்தா, கதை சொல்வதையும் தன் அன்றாட பணிகளில் ஒன்றாக
கருதுகின்றார். அவர் கதை சொல்லும்போது சிலோனியா தோட்டத்து மக்களே மெய்
மறந்து போகின்றனர். தேசிங்குராஜன், காத்தவராயன், விக்கிரமாதித்தன், வீர
அபிமன்யு, பட்டினத்தார், பஞ்சபாண்டவர், ராமாயணம், கோவலன் கண்ணகி,
மதனகாமராஜன் என அவரது கதைப்பட்டியல்கள் நீள்கின்றன. தாத்தாவின் மகன்
சம்முவம் (சண்முகம்) கம்னியூஸ்டுகாரர்களுக்கு உணவு பொருள் அளிப்பதாக
காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டதால் சந்தேகத்தின் பேரில் சம்முவம்
காவல்துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். அதன்
பின்னர் செட்டியப்ப தாத்தா தன் பிள்ளைகளுடன் வீடு மாறி செல்கின்றார். சில
வருடங்களுக்குப் பின் தாத்தாவும் கதைசொல்லியும் மருத்துவமனை வார்டில்
தங்கும்போது மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். தாத்தாவின் கதை சொல்லும்
பயணம் அங்கும் தொடர்கின்றது. கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே தாத்தாவுக்கு
நெஞ்சுவலி ஏற்படுகின்றது. தாத்தாவின் பிரிவை அவர் மகன் கதைச்சொல்லியைத்
தழுவி அழும்போது நமக்கும் புரியவே செய்கின்றது.
இக்கதை நடந்தது 1955 மற்றும் அதற்குப் பிந்திய சில ஆண்டுகளில். ஏறக்குறைய
ஐம்பத்தாறு ஆண்டுகளைக் கடந்து வந்து விட்ட பின்னர் கதையில் தென்படும் சூழல்
முற்றாக மாறிவிட்டது. கதை சொல்லும் வழக்கத்தைப் புறந்தள்ளிவிட்ட பெருமை
சின்னத்திரை தொடர்களுக்கு என்றும் உண்டு. செட்டியப்ப தாத்தாவின் கதைகளில்
வந்து போன மாந்தர்கள் அன்றைய மனிதர்களின் உள்புகுந்தனர். சின்னத்திரை
தொடர்களில் வரும் வில்லிகளும் இன்றைய மனிதர்களின் உட்புகுந்து
மனிதத்தன்மையை அழித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அவலத்தைக் காணும்போது
மனம் வேதனையடைந்தாலும் நம் முன் இன்னும் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கும்
காலத்தைச் சற்றே எண்ணிப்பார்க்கையில் கேள்விக்குறிகள் மனதினுள் தேங்கி
நிற்கின்றன.
செட்டியப்ப தாத்தாவுக்குக் கதை சொல்வதில் ஓர் ஆழ்ந்த திருப்தி கிடைத்து
வந்திருக்கின்றது. மற்ற மனங்களைப் புண்படுத்தாத, காயப்படுத்தாத ஓர் ஆத்ம
திருப்தி அது. இன்றைய பொருளியல் வாழ்க்கையில் தொலைந்து போயிருக்கும் அவ்வித
திருப்தியை எண்ணி மனம் ஏங்கவே செய்கின்றது. கதையின் மூலம் உடலைப்
பற்றிக்கொள்ளும் ஏக்க உணர்வு கதையை கடந்து திருப்தியின் தேடலைத்
தொடங்குகின்றது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சொந்த குரல்’ கதையில் வரும் சோமாவின்
அம்மாவோ தனக்குள்ளாகவே கதை சொல்லிக் கொள்கின்றார். இவ்விரு கதைகளின்
கதாப்பாத்திரங்கள் நடமாடிய ஆண்டு வரிசைகள் நெருக்கமானவை. சோமாவின் அம்மா
கடந்து வந்த எழுபத்து மூன்றாண்டுகளின் கதை அது. வற்றிய பாலைவனமாகிவிட்ட
அவரது வாழ்க்கையினுள் மறைந்திருக்கும் ஈரம் கதை தொடங்கி முடியும் வரை நம்
கண்களில் ஒரு கட்டதிலாவது புகுந்து கொள்கின்றது. கணவர், பிள்ளைகள் என்ற
வட்டத்தில் சராசரி பெண்ணாக வாழ்ந்தவரின் வாயாலேயே வெளிப்படும் கதைகள்
ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையையும் கூர்ந்து கவனிக்க செய்கின்றது. 1952ம்
ஆண்டு அப்பெண் எழுதிய கதை ஒன்று இதழில் பிரசுரமாகின்றது. அப்பொழுது
திருமணம் செய்து மூத்த மகனுக்குத் தாயாகிவிட்டிருந்தாள். கணவருக்குத்
தெரியாமல் அருகிலிருந்த நூல்நிலையத்தில் புத்தகங்களைப் படித்தவளுக்கு கதை
உருவாகின்றது. அதை எழுதி நூல்நிலைய அதிகாரி தந்த முகவரிக்கு
அனுப்புபிவிட்டிருந்தாள். அதுதான் பிரசுரமான கதையின் பின்னணி. அச்சில் வந்த
கதையைப் பார்த்து சந்தோஷப்பட்டு கணவரிடம் காட்டுகின்றாள். கோபத்தின்
உச்சிக்குச் செல்கின்றார் கணவர். அவர் கோபத்தைத் தணிக்க அவள் அப்பா
கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றார். அதன் பின்னர் அவள் கதை
எழுதுவதில்லை. ஆனாலும் அவளுள் ஒரு கதை உருவாகிக்கொண்டுதான் இருந்தது. அதை
அவளால் தடுக்க முடியவில்லை. அவள் கணவனும் அறிந்திருக்கவில்லை.
‘இருட்டு பழகிப்போச்சுடா சோமா. இருட்டை என்ன இன்னைக்கு நேத்தா
பாக்குகிறேன். இருட்டு பழக ஆரம்பிச்சி எழுபது வருசம் போயிருச்சி.’
‘நீ உன் தங்கச்சி, உங்க தம்பி எல்லாம் என் உடம்புல கொஞ்சம் பிச்சி
எடுத்துட்டு பிறந்தவங்க தானே. எனக்குக் கை கால் வலிக்குன்னா யாராவது வந்தா
சொல்றாங்க. நானா தெரிஞ்சிகிடுறது இல்லை... அப்படி தான் உங்க கஷ்டம்
வலியும்.’
‘ஆனா அவருக்கு நான் ஒரு துணையாள். அவர் அதிகாரத்துக்கு கட்டுபடுற நல்ல
வேலையாள்.’
என்ற வலிகளைச் சுமந்த வரிகள் அதன் சுமையை நம்மீது இறக்கி வைக்கின்றன. என்றோ
மனதினுள் அமிழ்ந்து போயிருக்கும் ஆணாதிக்கம், அதிகாரத்தின் வெளிப்பாடாக
அமைந்துள்ளது. தனியே ஒரு புறமிருந்து சோமாவின் அம்மா கடந்து வந்த பாதையைத்
திரும்பிப் பார்த்தால் எதுவும் பெரிய சிக்கலாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால்
சோமாவின் அம்மா கடக்கும்போது அவருக்கு ஏற்பட்ட தாக்கம் இறுதி மூச்சு
வரையிலும் இருப்பது அவர் அடைந்த வேதனை, துக்கம், வெறுமை என அனைத்தையும்
தெளிவாக்குகின்றது. இன்னும் பல சொந்த குரல்கள் ஆங்காங்கே நம் காதுகளில்
விழாமல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பது நினைவுக்கு வருகின்றது.
வயோதிக உள்ளங்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைக் கதையாக்கிக் கொள்வதில்
திறன் வாய்ந்தவை. ஆணவம், பெருமை அற்ற அவர்களின் கதை மொழியில் வாழ்க்கையின்
எதார்த்தத்தைச் சுயத்தன்மையோடு உணர முடிகின்றது. முதிய மனங்கள் சொல்லும்
கதைகளில் வாழ்க்கைப்புதிர்கள் நிரம்பி ஒளிந்திருக்கின்றன. பெரும்பாலான
சமயங்களில் அவை நம் கண்களுக்குத் தெரிவதுமில்லை; புரிவதுமில்லை.
|
|