முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 31
ஜுலை 2011

  பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்
 
 
நேர்காணல்:

“முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்”

மஹாத்மன்



பத்தி:

வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.

ரஜினியின் தற்கொலை
ம. நவீன்

பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவா



வல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்

கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்


புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்


புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்



சிறுகதை:

பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்



புத்தகப்பார்வை:

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



பெற்றோல் - (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21

தேனு

தர்மினி

அதீதன்

நித்தியா வீரராகு

இந்தக் கதை சொல்லப்படுவதற்கோ வாசிக்கப்படுவதற்கோ அல்ல. இது பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. ஆகையால் இக்கதையில் சேர வேண்டியவை - சொல்லப்படவேண்டியவை - வாசிப்பின் சிரமங்கள் பற்றிய வேதனைகள் - வசிக்க முடியாதுள்ள குறைபாடுகள் - குறிப்புகள் - திட்டுகள் - சித்திரங்கள் - படங்கள் - என்று அனுப்பக்கூடியதுகளை அனுப்புங்கள். எல்லாம் இக்கதையில் சேர்த்துக்கொள்ளப்படும். 


இயக்கம் செல்தல்

1.

பின் வாங்கிலில் இருந்து மாலதி குசுகுசுத்துக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்;

‘குமுதா இயக்கத்துக்குப் போய்ட்டாளாம்’

இவள் ஓடிப் போய் இயக்கத்தில் சேருவாள் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

‘நினைச்சுப்பார்க்கேலாமக் கிடக்கு. என்ன கெட்டிக்காரி அவள். இப்பிடி அநியாயமாப் போச்சு’ என்று குகனேசன் வாத்தி கூட உருகினார்.

அவளுக்கு மனம் உடைந்து போனது. தன்னை மட்டும் ஏன் திருப்பி இழுத்து வந்து விட்டார்கள் என்று அழுகை அழுகையாக வந்தது அவளுக்கு.

குமுதா இயக்கத்துக்கு போனதற்கு அவளும் காரணமென்று பேசிக் கொண்டார்கள்.

கிளியக்கா இறுக்கிப் பிடிச்ச பிடி அவளுக்கு இப்பொழுதும் இறுக்கி வலித்தது.

2.

குமுதாவால் பொறுக்க முடியவில்லை. இந்தச் சனங்கள் ஏன் இப்படி இன்னும் விளக்கங் கெட்ட சனங்களாக இருக்குதுகள் என்று சினந்து கொண்டாள். அறுவான்களிட்டப்போனா விழும் அடி என்று தெரியும் - தெரிஞ்சும் தப்பிபோகவேணும் எண்டு கிடந்து உலையுதுகள் என்று ஆதங்கப்பட்டாள். இவை ஆமிக்காரனுக்கு கிட்டப் போகமுதல் அவங்கள் இவையின்ட கதைய முடிச்சுப் போடுவாங்கள். அங்க சாகிறவையள் இங்க செத்தா என்ன என்று எண்ணிக் கொண்டாள்.

எல்லாப் பக்கத்தாலும் அடி விழுந்து கொண்டிருந்தது. பொடியள் செய்வதறியாது அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க அவர்களுக்கு மத்தியில் குண்டுகள் விழுந்து வெடித்துச் சிதறின. எரிந்த சதை நாற்றமும் இரத்தக் கவிச்சி மணமும் எங்கும் பரவியது. துண்டு துண்டாகச் சிதறிய மனிதச் சிதிலங்களை மிதித்தபடி சனங்கள் அரக்கப்பரக்க அனைத்துத் திசைகளிலும் ஓடினர். அம்மா... அம்மா என்று அவலக் குரல்கள் பரவின.

குமுதாவுக்கு உடம்பில் உணர்வுகள் செத்துக் கொண்டிருந்தது. வேதனை பொறுத்துக் கொள்ள முடியாதவளாகப் பொத்தென்று விழுந்தாள். விழும்போது கைக்குண்டின் கிளிப்பை இழுத்தபடி விழுந்தாள். குண்டு உருண்டு போய் அவள் காலடியில் வெடித்தது. பக்கத்தில் பதுங்கிப் பதுங்கி ஓடிக் கொண்டிருந்தவர்கள் சிலரின் தலையைச் சிதறிய துண்டுகள் பதம் பார்த்தன. பொத்துப் பொத்தென்று உடல்கள் சரிந்தன. அனைவரும் சிதறி ஓடினர்.

குமுதாவுக்குக் குண்டு வெடித்தது கேட்கவேயில்லை. அதை உணரவும் முடியவில்லை. ஏற்கனவே சிதறிய கால்கள் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகியது.

அவளுக்கு இன்னும் உயிர் போகவில்லை. அவள் கண்கள் வானத்தை விறைத்தது. என்னைச் சாக விடுங்கள் என்று கெஞ்சியது.

இப்படி ஒரு சாவை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. தனது இறப்பைப் பற்றிப் பலதடவை அவள் கனவு கண்டிருக்கிறாள். செத்தவீடு எப்படி நடக்கும் செத்த வீட்டில் யார் யார் அழுவார்கள்? என்பதெல்லாம் கூட நினைத்துப் பார்த்திருக்கிறாள். யாருமற்ற அனாதையாகப் போவோமென்று எண்ணியிருக்கவில்லை. தான் செத்தது யாருக்கும் தெரியப்போவதில்லை என்று அவளுக்குத் தெரியும்.

குய்யோ முறையோ என்று கத்தி ஓடிக்கொண்டிருந்தவர்களின் சந்தடி அவளுக்கு எட்டவில்லை.

ஓடிக்கொண்டிருந்த ‘ச’ அவள் பக்கத்தில் வந்து குனிந்தாள். இரத்தத்துக்குள்ளால் சர் புர் என்றபடி அவளுக்கு மூச்சு வந்து கொண்டிருந்தது. அவளது முகத்தைத் தடவி மூச்சு விட வழியேற்படுத்த முயற்சித்தார் ‘ச’.

‘உன்ர உயிரப்பிடிக்கோணுமென்டா நீ முதல்ல ஓடு’ என்று ஒருவன் கத்தினான். அதிர்ச்சியுடன் ‘ச’ எழுந்து ஓடினார். குமுதாவின் கால்ப் பக்கம் சிதறிக ;கிடந்த சில மனிதச் சதைகள் ‘ச’வின் காலில் இழுபட்டு குமுதாவின் உடலை ஒரு பக்கம் திருப்பிவிட்டது- தலை சரிந்தது. தற்போது தன்னைத் தாண்டிச் சனங்கள் தூரத் தூர ஓடிக் கொண்டிருப்பதை அவளால் பார்க்கக் கூடியதாக இருந்தது.

ஓடுபவர்கள் இருகைகளும் நிலத்தில் முட்டக் குனிந்தபடி மிருகங்களைப் போல் ஓடிக் கொண்டிருந்தார்கள். குழந்தை ஒன்றைத் தூக்கிக் கொண்டு ஓடியவர் கங்காரு ஓடுவதை போல் காட்சி தந்தார். தேசியத் தொலைக்காட்சியில் வேலை செய்த நாட்களில் மிருகங்கள் ஓடும் டாக்குமென்றிகள் நிறையப் பார்த்திருக்கிறாள் குமுதா.

தூரத்தில் மின்னி மின்னிக் குண்டுகள் வந்து கொண்டிருந்தன. எப்படியெல்லாம் காதலித்தேன் என்பதை ‘சு’ வுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். நான் செத்துப் போய்விட்டேன் என்று அல்லிக்கும் மாலதிக்கும் இளவேனிலுக்கும் சொல்லுங்கள் என்று மனதுக்குள் கத்திக்கொண்டாள். நான் செத்துப்போய்விட்டேன். நான் செத்துப் போய்விட்டேன் என்று பலதடவை அவள் மனக்குரல் கத்தியது. யாரிடம் இருந்தும் அவளால் விடுதலை பெற முடியவில்லை.

எவ்வளவு நேரம் எத்தனை நாள் மயங்கிக் கிடந்தாள் என்று தெரியவில்லை. அவளை யாரோ தர தரவென்று இழுத்துச் சென்று கொண்டிருந்த பொழுது அரைகுறையாக நினைவு வந்தது அவளுக்கு. கண்கள் திறக்க முடியவில்லை.

அவளை அவர்கள் தூக்கி எறிந்தார்கள். கொஞ்ச நேரத்தில் நெருப்பு அவளையும் பற்றியது. மனம் கத்தியது. உயிர் பதைக்க நெருப்பில் உடல் வெந்தது.

உயிருடன் எரிக்கப்பட்டு குமுதாவின் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

3.

குமுதா இயக்கத்துக்குப் போன பிறகு அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மாலதியை அவளுடன் கதைக்க வேண்டாம் என்று மாலதியின் பெற்றோர்கள் தடை செய்திருந்தார்கள். மாலதி போக முதல் தான் போகவேண்டும் என்று முடிவெடுத்தாள் அவள்.

7டி களுடன் பாஸ் பண்ணிய குமுதாவே இயக்கத்துக்குப்போன பிறகு 2சி யுடுன் பாஸ் பண்ணிய மாலதியும் 4டி 2சி யுடன் பாஸ் பண்ணிய அவளும் எப்படி இயக்கத்துக்குப் போகாமல் இருக்க முடியும். அவளுக்கு 4டி கிடைச்சது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருந்தாலும் அது அவளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. 4டி எடுக்காமலே ‘போடி’ என்று கிண்டல் செய்யும் பொடியள் அவள் 4டி எடுத்த பிறகு சும்மா இருப்பாங்களே. ‘போடி வேசி’ என்று போட்டு ஏதோ பெரிய பகிடி மாதிரி கானாதத கண்டது போல விழுந்து விழுந்து சிரிப்பான்கள். அவள் டொக்டருக்குப் படிக்க வேண்டும் என்று தகப்பன் இரகசியக் கனவு கண்டு வந்தார்.

குமுதா இயக்கத்துக்குப் போய் 6 மாதங்கள் கழித்துத் திரும்பி வந்தாள். தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தாள். அவள் ஆயுதத்துடன் வராவிட்டாலும் கூட வந்தவர்கள் ஆயுதம் வைத்திருந்தார்கள். தனது வீட்டுக்குச் சென்று தாய் தகப்பனைச் சந்தித்த பிறகு அவளையும் பார்த்து விட்டுப்போக வீடுதேடி வந்திருந்தாள்.

அவளின் தாய் பதட்டத்துடன் குசினிக் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றார். ‘தங்கச்சி இருங்க’ என்று தகப்பன் மரியாதையாகக் கதைத்தார். எல்லாரும் குமுதாவை ஒரு மரியாதையுடன் தான் நடத்தி வந்தார்கள். தற்போது அது மேலும் கூடியிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. குசினிக்குள் நின்ற அவள் வெளியே போக முடியாதபடி வாசலை மறைத்தபடி நின்றிருந்தார் தாய்க்காரி.

இவளயும் பாத்துப்போட்டுப் போகலாமெண்டு வந்தனான்’ என்றாள் குமுதா.

‘அவள் இஞ்சால எங்கயோ போய்ட்டாள் போலக் கிடக்குப் பிள்ள’ என்ற தகப்பனைப் பார்த்து சிரித்தாள் குமுதா.

‘அவள் குசினிக்கதான் நிக்கிறாள். எனக்குத் தெரியும். கூப்பிடுங்க.’ என்று சொல்லிக் கத்திக் கத்தி அவளைக் கூப்பிட்டாள். குமுதா சரியான கெட்டிக்காறி என்று அவள் மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

வேறு வழியின்றி தாய்க்காரி குசினிக் கதவிலிருந்து விலத்தித் நிற்கத் தயங்கித் தயங்கிச் சற்று வெட்கத்துடன் குமுதாவிடம் வந்தாள் அவள்.

‘பாத்தியா உன்ன முந்திப்போட்டன்’ என்று சிரித்தாள் குமுதா. தகப்பனுக்குத் தொண்டைக்குள் தண்ணி வறண்டது. கேற்றடியில் ஆயுதங்களுடன் நின்ற பொட்டைகளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துப் போட்டு ‘ஒரு தேத்தண்ணி கொண்டுவா’ என்று மனிசியைப் பார்த்துச் சொன்னார் அவர்.

‘நான் தூரப்போகப் போறன். அதான் வந்து ஒருக்கா எல்லாரையும் பாத்துப்போட்டு போகலாமெண்டு வந்தனான்’ என்றாள் குமுதா.

இது வெறும் பொய் என்று எண்ணிக் கொண்டாள் அவள். இயக்கத்துக்குப்போற எல்லாப் பொடி பொட்டையளும் போய்க் கொஞ்ச நாளைக்குப் பிறகு விலாசம் காட்ட வீட்டுக்கு ஒருக்கால் வந்துபோவினம். அதப்போலதான் குமுதாவும் வந்திருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டாள் அவள்.

‘இனி எப்ப பார்ப்பனோ தெரியாது. நீயாவது நல்லாப்படி’ என்று இறுகிய முகத்துடன் பேசினாள் குமுதா. ஒரு ஆறு மாசத்துக்குள் என்ன மாற்றம் என்று ஏங்கிப் போனாள் அவள். நீண்ட ‘காற்சட்டை’ - மேல் பட்டின் பூட்டப்படாமல் மார்பகங்களில் ஸ்டைலாக தவளும் ‘சேர்ட்டு’ – பெரிய பெல்ட்டு – தலைமயிர் ஒட்ட வெட்டி காதாவடிப்பக்கம் சேவ் செய்யப்பட்டு பளிச்சிட்ட ‘தலை’ – என்று குமுதா நிமிர்ந்து நின்றதை அவளால் மறக்க முடியவில்லை.

தன்னைப் பார்க்க குமுதா வந்த அந்த சம்பவத்தை அவளால் மறக்க முடியாது. மனம் என்ன பாடு பட்டது. புதுக்காதல் போல் குறுகுறுத்தது. பெருமிதத்துடன் அடுத்த நாள் பாடசாலை சென்றது என்று குமுதாவை அவளால் மறக்க முடியாது.

4.

மாலதியை இந்தியாவுக்கு அனுப்பி விட்டார்கள். அவளின் ஒன்றுவிட்ட தமையன் அவளையும் அவளின் தாயையும் இந்தியாவுக்கு வரும்படி இங்கிலாந்தில் இருந்து ஒரே தொல்லை. அவளுக்கு இங்கிலாந்தில் கலியாணம் பேசுவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

6.

அவள் தானும் இயக்கத்துக்குப் போகப்போவதாகத் தகப்பனுக்குச் சொன்ன பொழுது அவர் முகட்டில் நின்று காலை விட்டேர். குய்யோ முறையோ வென்று தாய் கத்தினார். அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இரண்டு நாளாக சமையலின்றி செத்தவீடாக கிடந்தது வீடு. ஒரே ஒப்பாரி வைத்து வைத்து சோர்ந்து போய்க கிடந்த தாய் அவள் தனது துணிமணிகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வர ஓடிவந்து கட்டிப்பிடித்து கிடந்த சக்தியைத் திரட்டி மேலும் ஒப்பாரி வைத்தார்.

‘என்ர குஞ்சு ரண்டு நாளா நீ சாப்பிடேல்ல. டக்கென்று சமைக்கிறன் சாப்பிட்டிட்டாவது போ’ என்று விக்கி விக்கி அழுதார். அவளும் தாங்க முடியாமல் மூக்கைச் சீறிச் சீறி அழுதாள். வெளியில் தகப்பன் விம்மும் சத்தம் கேட்டது. தம்பி களைப்பில் நித்திரை கொண்டுவிட்டான்.

‘சரி அம்மா. சமை கெதியெண்டு’ என்று சொல்லிக்கொண்டு அழுதபடி அவள் நிலத்தில் குந்தினாள். தாயார் பதறியடிச்சுக் குசினிக்குள் ஓடினார். களைப்பில் மயக்க சுபாவமாக இருந்தாலும் விடாப்பிடியாக சமையலில் இறங்கினார்.

‘யோசிச்சுப் பாத்தியாம்மா. எங்கட நிலை என்ன? இப்பிடி விட்டுப்போட்டு போறன் எண்டு நிக்கிற. உன்ர கொம்மாவப் பார். மனிசி நாளைக்குச் செத்துப்போயிடும் போல கிடக்கு’ என்று சொன்னபடி தகப்பன் உள்ள வந்து குந்தி இருந்தார்.

நிலத்தில் குந்தியிருந்தபடி மென்மையான குரலில் தகப்பனும் மகளும் அன்று கதைத்தது போல் என்றும் நிகழ்ந்ததில்லை. பாசத்தால் அவர் மனம் உருகிப் போயிருக்கவேண்டும். அவள் எதைச் சொன்னாலும் செய்ய அவர் தயாராக இருந்தார். எப்படியாவது அவள் தன் மனதை மாற்ற மாட்டாளா என்று ஏங்கித் தவிப்பது அவரின் ஒவ்வொரு உடல் அசைவிலும் தெரிந்தது. தகப்பனும் மகளும் மாறி மாறி அழுதுகொண்டார்கள்.

மூக்கைச் சீறி நடுவீட்டில் எறிந்துபோட்டு என்ன மன்னிச்சுப் போடும்மா என்று அவர் தளுதளுத்தது அவள் இதயத்தை துளைத்தது. ‘என்னப்பா சும்மா விசர்க்கதைகள் கதைக்கிறத விடுங்க’ என்று அவளும் தளுதளுத்த குரலில் சொன்னாள்.

‘நான் என்னதான் படிச்சாலும் - என்னதான் செய்தாலும் எங்கள் இந்த நாட்டில சுதந்திரமா இருக்க விடமாட்டாங்கள் அப்பா’ என்று அவள் சொன்னாள். ‘தம்பி இருக்கிறான் கவலைப்படாதீங்க’ என்று ஆறுதல் சொன்னாள்.

அன்றைய சாப்பாட்டை என்றும் அவளால் மறக்க முடியாது. அந்தக் கட்டம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்த ஒன்று.

ஒரு பக்கம் தகப்பன் குந்தியிருக்கிறார். மறுபக்கம் தாய் சம்பாணங் கட்டியிருந்து கொண்டு கண்ணீர்த் துளிகள் விழ விழச் சோற்றைக் குழைத்துக் குழைத்து அவள் கையில் வைத்துக் கொண்டிருந்தார். தம்பி அவள் நாரியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முதுகுப்பக்கம் முகம் பதித்தபடி இருந்தான். அவனில் சற்றுச் சாய்ந்தபடி இருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. ஒரு கையால் கனத்த தலையைத் தாங்கியபடி தகப்பன் என்னென்னெல்லாமோ பேசிக்கொண்டிருந்தார். தாய் அவளுக்குச் சிறு குழையைத் தீத்த முனைய ‘அம்மா விடுங்கம்மா’ என்று அவள் சிணுங்க ‘விடு மோனை ஆசைக்குத் தீத்தட்டும் விடு மோனை’ என்று தகப்பன் சொல்ல – எல்லாரும் கண்கலங்கி அழுதனர்.

அவள் பெருமையுடன் இயக்கத்தில் சேரப்போனாள்.

...தொடரும்

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768