ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி
பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள்
editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு
அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அரசியல் செயல்பாடுகள்
மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும்
சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை
இருக்கிறதாக கருதுகிறீர்களா?
கார்த்திகேயன்
தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது
இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக்
கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு
வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம்
செய்துகொள்வதற்காக சுஜாதாவின் 'மஞ்சள் இரத்தம்' கதை குறித்து ரவிக்குமாரும்
சுராவின் 'புளியமரத்தின் கதை' குறித்து ராஜன் குறையும் புதுமைப்பித்தன்,
மௌனி பிரதிகள் குறித்து அ. மார்க்ஸ் எழுதிய மறுவாசிப்புக் கட்டுரைகளையும்
இமையத்தின் 'கோவேறு கழுதைகள்' குறித்து ராஜ்கவுதமன் எழுதிய விமர்சனத்தையும்
தேடிப் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சுஜாதா பார்ப்பன சாதிப்பற்றும் அதை வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளும்
திமிரும் உடையவர் என்பது நீங்கள் அறிந்ததே. அசோகமித்திரன் தமிழகத்தில்
பார்ப்பனர்கள் யூதர்களைப் போல அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள்
என ஓர் ஆங்கிலப்பத்திரிகையின் நேர்காணலில் அழுதுவடிந்ததையும் தந்தை
பெரியாரின் 'முரளி பிராமணாள் கபே'க்கு எதிரான போராட்டத்தை கொச்சை செய்து
எழுதியதையும் நீங்கள் படித்திருக்கலாம். இவர்களது இந்தச் சாதியச் சாய்வுகள்
இவர்களது இலக்கியப் பிரதிகள் முழுவதுமே விரவிக்கிடக்கின்றன.
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் மிகச் சிக்கலான பரிமாணங்களைக்
கொண்டவை. 'பார்ப்பனர்' என்ற வார்த்தையைத் தவிர்த்து 'பிராமணர்' என்ற
சொல்லாடலை உபயோகிப்பதே பார்ப்பனியம்தான் என்பார் பெரியார். பார்ப்பனர்களை
'பிராமணர்கள்' என விளிப்பதை பஞ்சமா பாதகங்களில் ஒன்றென வரையறுத்தவர் அவர்.
அன்றாடச் சொல்லாடல்களிலிருந்து கலை - இலக்கியம், அரசியல் வரைக்கும் நமது
சாதிய எதிர்ப்புப் பிரக்ஞை எப்போதும் விழிப்புடனிருக்கவேண்டும். எனவே
இவர்கள் குறித்துப் பேசுவது எனது தார்மீக உரிமை மட்டுமல்ல எனது வரலாற்றுக்
கடமையும் அதுவே.
ஷோபா சக்தி,
உங்கள் நாவல்களும், சிறுகதைகளும்தான் உங்கள் அடையாளம், ஆனால் அதைத்தவிர
மற்றவற்றை மட்டுமே செய்கிறீர்கள் (அரசியல் வேண்டாமென்றில்லை, சமீபகாலமாக
அதைமட்டுமே செய்கிறீர்கள். தத்துவம், அரசியல் பேசினாலும் சீரான இடைவெளியில்
படைப்புகளை எழுதும் ஜெயமோகன்) நீங்கள் இலக்கிய எழுத்தாளர் என்று உங்களுக்கு
தெரியுமா அல்லது அது வாசகர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையா?
இலக்கியம் பக்கம் எப்போது திரும்ப போகிறீர்கள், அடுத்த நாவல் எப்போது?
அரங்கசாமி. K.V
அன்பான அரங்கசாமி,
ஜெயமோகனதும் எனதும் வாழ்க்கைச் சூழல் மட்டுமல்லாது எங்களது இலக்கிய
நுழைவுக்கான வழிகளும் வெவ்வேறானவை. மிக இளமைப்பருவத்திலிருந்தே
எழுத்தாளராவது என்ற உறுதியுடனும் அதற்கான உழைப்புடனும் இருந்தவர் அவர்.
அவரது அக்கறைகளில் எழுத்தே முதன்மையானது. அரசியலை எப்போதும் ஒரு கலைஞனின்
எழுத்தாளனின் உள்ளுணர்வுடன்தான் அணுகுவதாகச் சொல்பவரவர்.
நான் முற்றுமுழுதான இயக்க - கட்சிப் பின்னணியிலிருந்து இலக்கியத்துக்கு
வந்தவன். இலக்கியத்தை, கலையை ஓர் அரசியலாளனின் உள்ளுணர்வோடு எச்சரிக்கையோடு
அணுகுபவன். எனது அக்கறைகளில் இலக்கியம் முதன்மையானதும் அல்ல. எனது
வாசிப்பு, எழுத்து, இயங்குதளம் எல்லாமே நேரடி அரசியலோடு பின்னிப்பிணைந்தவை.
உங்களின் என்மீதான அக்கறைக்கு நன்றி. இவ்வருட இறுதிக்குள் அடுத்த நாவலைக்
கொண்டுவந்துவிடலாம்... அதுவும் எனது அரசியல் துண்டுப் பிரசுரங்களின்
தொகுப்பாகவேயிருக்கும்.
ஷோபா சக்திக்கு வணக்கம். இலங்கைமீது பொருளாதார தடை
கொண்டுவரவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை எடுபடுமா?
நந்தவனம் சந்திரசேகரன், தமிழ் நாடு
எடுபடாது. பொருளாதார தடைவந்தாலும் அதனால்
பட்டினிகிடக்கப் போவது ராஜபக்ச குடும்பமா என்ன. அவர்கள்தான்
பலதலைமுறைக்குக் கொள்ளையடித்து வைத்திருக்கிறார்களே. போததற்கு இப்போது
கேபியும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் மூலதனங்களையும் சொத்துக்களையும்
ஓசைப்படாமல் ராஜபக்ச குடும்பத்திற்கு மாற்றிக்கொடுத்து வருவதாகவும்
செய்திகள் கசிகின்றன. அவ்வாறு இலங்கையின்மீது பொருளாதாரத் தடைவந்தால்
துன்பப்படப்போவது பொதுசனமே. குறிப்பாகத் தமிழ் மக்களே. ஈராக் மீது
பொருளாதார தடைவிதிக்கப்பட்டபோது வறியவர்களும் குழந்தைகளுமே அதிகமாகப்
பாதிக்கப்பட்டார்கள். மருந்தில்லாமல் இறந்த குழந்தைகள் பல்லாயிரம். கியூபா
மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால் கியூபா மக்கள்
அனுபவிக்கும் வறுமையையும் பற்றாக்குறையையும் துயரத்தையும் நான் நேரடியாகவே
பார்த்துள்ளேன்.
ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்றவாளிகள்
(மகிந்த ராஜபக்ச, கொத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா... முதலியவர்கள்) மீது
நடவடிக்கை எடுக்குமாறு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை மிகச் சரியானது. இது
நடைமுறைச் சாத்தியப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லையெனினும் இவ்வாறான
உலகம் தழுவிய பரப்புரை இயக்கம் இலங்கை ஆளும்வர்க்கத்தை அம்பலப்படுத்த
உதவும். எனினும் இன்றைய இலங்கையின் ஆளும்வர்க்கத்தை வேரறுக்கும் சக்தி
இலங்கை மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. அந்தச் சக்தி அலாவுதீனின்
பூதம்போல அற்புத விளக்கில் கட்டுண்டு கிடக்கிறது. அந்தச் சக்தியைத்
தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள
இனத்தின் முற்போக்காளர்களுக்கும் இடதுசாரிகளுக்குமே முதன்மையானதாக
இருக்கிறது. இதைவிட வேறு அரசியல் வழிகள் இலங்கையைப் பொறுத்தவரை
பயன்தரப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன்.
சோபா,
சீமானுடன் என்னதான் நீங்கள் முரண்படுகிறீர்கள். எதற்கு தொடர்ந்து அவரை
கிண்டல் செய்கிறீர்கள்? உண்மை தமிழரை உங்களுக்குப் பிடிக்காதா?
செங்கதிரோன்.
என்ன செங்கதிரோன்! சீமான் உண்மைத் தமிழரென்றால்
நாங்கெல்லாம் என்ன டூப்ளிகேட் தமிழரா? விடுதலைப் புலிகள் விசயத்தில்
உண்மைத் தமிழன் பொய்த் தமிழனாக மட்டுமே இருக்கிறார் என்பதுதான் முதன்மைப்
பிரச்சினை. ஈழப் போரட்டம் குறித்து அவர் பேசுவதில் 99 விழுக்காடனவை
உண்மைக்குப் புறம்பானவையே. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற
கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் முண்டிவிழுங்கி 'அதை ஊகத்திற்கே
விட்டுவிடலாம்' எனச் சொல்பவரின் அரசியல் நேர்மை குறித்து எதைச் சொல்ல.
சீமான் பிரபாகரனை வரலாற்றுப் புருஷனாகவும் தேசியத் தலைவராகவும்
கொண்டாடுபவர். நான், பிரபாகரன் ஒரு விடுதலை இயக்கத் தலைவருக்கான
பண்புகளைக் கொண்டவரல்ல அவர் வெறும் யுத்தப்பிரபுவே (War Lord) எனச்
சொல்லி வருபவன். இதுதான் அடிப்படை முரண். மற்றப்படிக்கு சிங்கள இனவாத
அரசுக்கு எதிராக சீமான் ஒலிக்கும் குரலின் மீது எனக்கு எந்த
விமர்சனமுமில்லை. முதற்தடவையாகச் சீமான் தி.மு.க. அரசால்
கைதுசெய்யப்பட்டபோது அதை நான் கண்டித்து எழுதியிருக்கிறேன். ஆனால் "தமிழ்
மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம்" எனப் பேசும் சீமானின்
'நோன்சென்ஸ்' பேச்சுகளை நான் இரசிப்பதாயில்லை.
ஷோபா சக்தி அவர்களே, உங்களை நீங்கள் என்னவாக அடையாளம்
காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள்?
பசுபதி அப்பண்ணன்
'துரோகி' என்ற அடையாளம்தான் எனது மக்களில்
பெரும்பான்மையானவர்களால் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நானும்
நீண்டநாட்களாக அதை விரும்பிச் சுமந்துகொண்டிருக்கிறேன்.
எனக்காக நான் விரும்பியிருந்த அடையாளம் நாடக நடிகனே. பத்துவயதிலிருந்தே
மேடையேறி நடித்திருக்கிறேன். எனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள்
நடத்திய 'விடுதலைக் காளி' தெருக்கூத்தில் நிலாந்தனின் இயக்கத்தில்
நடித்தேன். கிட்டத்தட்ட 300 தடவைகள் கிராமம் கிராமமாக நடத்தப்பட்ட
நிகழ்வது. அதுவே எனது இறுதி நடிப்பாயும் போனது. பதின்ம வயதுகளில் என்னைப்
போலவே நாடக ஈடுபாடுகொண்டிருந்தவரும், சக இயக்கப் போராளியுமான வாசுதேவன்
இயக்கத்திலிருந்து நீங்கி லண்டன் சென்றதும் அவருக்கு அவைக்காற்று
கழகத்தின்மூலம் வாய்ப்புகள் கிடைத்தன. இன்று அவர் தேர்ந்த, முன்னணி நாடக
நடிகர். எனக்கு 1993ல் தாய்லாந்தில் பிரஞ்சுப் போலிப் பாஸ்போர்ட்
கிடைக்காமல் இங்கிலாந்து போலிப் பாஸ்போர்ட் கிடைத்திருந்து நான் லண்டன்
சென்றிருந்தால் இன்று நாடகத்துறையில் வாசுதேவனுக்கு கடும் போட்டியாளனாக
இருந்திருப்பேன். பிரான்ஸில் அவ்வாறான வாய்ப்புகள் கிடையாது.
லண்டனிலிருப்பது போலவோ கனடாவிலிருப்பது போலவோ தமிழ் நாடக இயக்கம்
ப்ரான்ஸில் இல்லை.
நான் பெற்ற 'அகதி', 'துரோகி' அடையாளங்கள் என்மீது சுமத்தப்பட்டவை. நான்
இழந்த அடையாளம் நாடக நடிகன் என்பது. இதை எங்காவது பதிவு செய்யவேண்டுமென
கனநாளாகத் துடித்துக்கொண்டிருந்தேன். வசமாகச் சிக்கினீர்கள் பசுபதி.
|