|
|
அறிவுரைத் திலகங்கள் பொட்டிழந்த கதை
இந்தப் பொது வாழ்க்கையில் அதுவும் குறிப்பாக எழுத்துத்
துறை பொருத்தமட்டில் இரு வகை ஆசிரியர்க் கூட்டத்தினரைச் சந்திக்க
நேர்கிறது. அநேகமாக எல்லோருக்கும் இதே கருத்தோட்டம் இருக்கும் என
நினைக்கிறேன். அப்படிப்பட்ட நேரத்திலெல்லாம் ஆசிரியர் என்றும் பாராமல் வயது
பேதமின்றி வாய்க்கு வந்தபடி திட்டியும் தீட்டியும் விடுகிறேன். அவர்கள்
மீது சமூகம் கட்டமைத்திருக்கின்ற புனிதம் சிதைந்துவிட, அதனைத் தவறென்று
ஒப்புக்கொள்ள இந்த மரமண்டை இந்த வினாடிவரை அடம் பிடிக்கிறது. இரு வகை
ஆசிரியர் வகையினர் என்று சொன்னேனல்லவா... ஒன்று, ஏன் உங்கள் எழுத்துகளைப்
பார்க்க முடிவதில்லை என்று கேட்கின்ற கூட்டம். மற்றொன்று, ஊருக்கு உபதேசம்
செய்தது போதும், நிறுத்துங்கள் என்று சொல்கின்ற கூட்டம்.
முதல் வகைக் கூட்டத்தின் இயல்புகளை அவர்களின் பாணியிலேயே எழுதினால்தான்
சீக்கிரம் விளங்கிக்கொள்வார்கள்:
• பொதுவில் ஊர் வம்புக்குப் போகாத நல்லவர்கள்.
• உருப்படியாய் வாசிக்கின்ற பழக்கமில்லாத கூட்டத்தினர்.
• கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படித்ததோடு மூட்டை கட்டிய கூட்டத்தினர்.
• கல்லூரிகளில் எழுதிய கடைசிக் கவிதை அல்லது கதையைப் பற்றி அடுத்த
பிறவியிலும் பேசுபவர்கள்.
• வக்கின்றி ஆசிரியர்ப் பணிக்கு வந்து சேர்ந்தவர்கள்.
• குறிப்பிடுமளவுக்கு யாப்பிலக்கணம் அறிந்தவர்கள்.
• அது தங்களுடைய சொத்தாகக் கருதி யாரிடமும் தாரை வார்க்காதவர்கள்.
• ஆடை அணிகலன்களிலும் மடிப்புக் கலையாத உடையணிவதிலும் உறுதியைக்
கடைபிடித்து, ஆள் பாதி ஆடை பாதி என்பதை அடிக்கடி
ஞாபகப்படுத்திக்கொள்கிறவர்கள்.
• ஏதாவது ஒரு தினசரியை மட்டும் வாசிக்கின்றவர்கள்.
• குறிப்பிட்ட அரசியல், சமூக நடப்புகளை மட்டும் மேலோட்டமாக வாசிக்க
விரும்புகிறவர்கள்.
• இலக்கிய நாட்டமின்மையை நாட்டமுள்ளவர் போல் காட்டிக்கொள்ளுதல்.
• அறிவுரைகளை வாரி வழங்குபவர்கள்.
• ஏற்கெனவே, எப்படியோ ‘தோக்கோ குரு’ (ஆசிரியர் திலகம்) எனும் மூவுலகின்
உயரிய விருதைப் பெற்றவர்கள்.
• மு.வ, ந.பா, அகிலன், சாண்டில்யன், கல்கி போன்றவர்களோடு ஒரே தட்டில் உண்டு
வாழ்ந்தது போல பேசுபவர்கள்.
• இலக்கிய விழாக்களிலிருந்து முற்றாய் விலக நிற்பவர்கள்.
• நூல் வெளியீடுகளுக்குச் சென்று பணம் கொடுத்து வாங்கத் தயங்குபவர்கள்.
• பள்ளியில் கற்பிக்கப்படும் தமிழும் எழுத்தாளர்கள் படைக்கின்ற புனைவு
இலக்கியமும் வெவ்வேறானவை என்று பிடிவாதமாய் நம்புபவர்கள்.
• கற்றது கைமண்ணளவு என்று கூறிக்கொண்டு தங்களுக்குத் தெரிவது பிறருக்குத்
தெரியாது என்று எண்ணுபவர்கள்.
• எழுதினால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று முன்கூட்டியே தெரிந்து
வைத்துக்கொள்ளுதல்.
• புத்தகத்துக்கும் சஞ்சிகைக்கும் பணம் இறைக்க பலமுறை சிந்திப்பவர்கள்.
• பள்ளி நூலகத்தில் முடிந்தால் கை வைத்து வீட்டில் சேர்ப்பவர்கள்.
• ஆலய வழிபாட்டிலும் தேவார, திருவாசகம் ஓதுவதிலும் காட்டும் ஆர்வத்தை
இலக்கியம் வாசிப்பதிலும் மொழி வளர்ப்பதிலும் பற்றற்றவர்கள்.
• தான் உண்டு தன் வீடுண்டு எனும் போக்குடையவர்கள்.
• பல விடயங்களில் கோழைத்தனம் கொண்டவர்கள்.
• பெண்களின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள்.
இரண்டாம் வகையறாக்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் இயல்புகள்:
• உலகின் முதல் நிலை சுயநலக்கூட்டம்.
• தங்கள் அளவில் தரத்தை முன் காட்டிக்கொள்கிறவர்கள்.
• தன் குடும்பம் மட்டும் கரையேறினால் போதும் என நினக்கின்ற கூட்டம்.
• மாதம் முடிந்தால் சம்பளம் வந்தால் போதும் என நினைப்பவர்கள்.
• ஊருக்கு உபதேசம் செய்தது போதும் என்று நிர்ப்பந்திப்பவர்கள்.
• இலக்கிய நிகழ்வுகள் வருவாயைக் கொண்டு வராது என்ற உறுதிப்பாட்டைக்
கொண்டவர்கள்.
• மருந்துக்கு ஒரேயொரு தமிழேட்டை வாங்குபவர்கள்.
• எழுத்தாளர்களின் மீது ஒரு வகைக் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள்.
• அதிக புத்தகங்கள் உள்ள வீடு கரையான்களின் இருப்பிடம் எனும் கருத்தோட்டம்
கொண்டவர்கள்.
• புத்தகங்களைக் குப்பைத் தொட்டியில் வீசுவதின் மூலமாக அல்லது குப்பையோடு
குப்பையாய்ப் போட்டு எரிக்கவும் தயங்காதவர்கள்.
இப்படியாக இரு மாறுபட்ட சூழ்நிலையில் நமதாசிரியர்கள் இருக்கின்றனர் என்று
சொன்னால் வியப்பாக இருக்கும். இந்த ஐம்பதாண்டு கால வெளியில் தமிழ்
நெடுங்கணக்கையும் வரையறுக்கப்பட்ட மொழியணிகளையும் மட்டும் கொண்டு
சென்றுள்ளனர் என்பதைத் தவிர வேறென்ன செய்தார்கள்? மொழியின் நீட்சிக்குரிய
இலக்கிய ஆக்கங்களுக்கு எந்த அளவு முகாமை கொடுத்தார்கள்? தமிழ்
மாணவர்களுக்கு இதனால் இலக்கிய ஆர்வம் அல்லது குறைந்த பட்சம் இலக்கிய
வாசிப்பை வளர்த்துக்கொள்ள முடிந்ததா? மாணவர்களுக்கு நாளைய இலக்கியச்
சவால்களுக்கு முன் எந்த வகையிலாவது தயார்நிலை செய்தார்களா?
இன்றையக் கல்வித் திட்டங்களும் பாட நோக்கங்களும் தேர்வை மட்டுமே இலக்காகக்
கொண்டிருப்பதால் அவ்வப்பொழுது சில உயிர் எழுத்துகள் உதிர்வதைத் தெளிவாகக்
கேட்கமுடிகிறது. அதை வெற்றிகரமாகத் தொடக்கி வைத்தவர்கள்,
வைத்துக்கொண்டிருக்கிறவர்கள் இந்த வகையறாக்களைச் சேர்ந்த ஆசிரியர்களேயாவர்.
விளைவு:
• தமிழ் ஆர்வமற்ற சமுதாய உருவாக்கம்.
• ‘அ’ னா, ‘ஆ’ வன்னாவோடு நின்ற கூட்டத்தின் அதிகரிப்பு.
• பெற்றோர்களிடமிருந்து எதிர்மறையான பார்வை.
• தாங்கள் மேலெனக் கருதுகின்ற புனித இலக்கியங்களின் பிரசவத்திற்கு இவர்களே
முட்டுக்கட்டையாகுதல்.
• இலக்கண இலக்கிய அறிவு படர்ந்து பரவாத நிலை உருவாகுதல்.
• ஒருவித மனநோய்க்காட்பட்டு இறுதி காலத்தில் புலம்புதல்.
• தமிழால் வாழ்ந்து தங்களது குடும்பத்திலேயே தமிழைக் கொண்டு செல்லாத
தலைமுறையை உருவாக்கிய துரோகத்துக்கு ஆளானவர்கள்.
இன்று மலேசிய மண்ணில் தமிழ்ச் சூழல் ஓரளவு
நிலைநாட்டப்பட்டுக்கொண்டிருப்பதற்கு மூல காரணம் தமிழாசிரியர்கள் அல்லர்.
வெள்ளந்தியாகத் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்குச் சாத்வீகத்தோடு
அனுப்பிய தமிழ்ப்பாட்டாளிகளின் கருணையில்தான் இங்கு தமிழ்
உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது! இந்த நாட்டில் தமிழைப் பற்றிப்
பேசுவதற்கு முழுத் தகுதியும் உள்ளவர்கள் இவர்கள்தான். ஆனாலும் பேசியதில்லை;
அதுவாக வாழ்பவர்கள்!
|
|