முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 31
ஜுலை 2011

  அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்
 
 
       
நேர்காணல்:

“முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்”

மஹாத்மன்



பத்தி:

வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.

ரஜினியின் தற்கொலை
ம. நவீன்

பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவா



வல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்

கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்


புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்


புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்



சிறுகதை:

பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்



புத்தகப்பார்வை:

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



பெற்றோல் - (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21

தேனு

தர்மினி

அதீதன்

நித்தியா வீரராகு

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தது. ஒரு பிரபலமான வெகுஜனப்பத்திரிகையில் இந்த கேள்வி-பதில் இடம் பெற்றிருந்தது.

கேள்வி: பின் நவீனத்துவம் என்றால் என்ன?

பதில்: பின் நவீனத்துவத்தை விளக்க போஸ்ட் ஸ்ட்ரக்சுரலிசம், சிமியாடிக்ஸ் இவற்றை முதலில் விளக்க வேண்டும். மேம்போக்கான கேள்வி பதிலில் இது சாத்தியமில்லை. தனிக்கட்டுரையாக எழுத யோசித்திருக்கிறேன். ஓர் அறிமுகமாக பின் வரும் கூற்றை மட்டும் இப்போதைக்கு யோசித்துப் பாருங்கள்...

உலகில் எல்லாமே சமிக்ஞைகள் (சைகைகள்) தான். அதாவது signs. Semiotics என்கிற இயல், சமிக்ஞைகளின் செய்திகளை ஆராய்கிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு காதில் கடுக்கன் அணிந்திருந்தால் ஒரு செய்தி சொல்கிறீர்கள். இரண்டு காதில் என்றால் வேறு ஒரு செய்தி. டை கட்டியிருந்தால் ஒரு செய்தி. காலர் திறந்திருந்தால் வேறு செய்தி. காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களுக்கெல்லாம் தனித்தனியான செய்திகள் உள்ளன. மூன்றும் சேர்ந்தால் வேறு செய்தி. தேசியக்கொடி, தேசபக்தி, தியாகம் போன்ற இதர செய்திகள் அதிலிருந்து கிளைக்கின்றன. உலகில் அனைத்துமே சமிக்ஞைகள்தாம். மானிடவியல், இலக்கியம், சமூகவியல் எல்லாவற்றிலும் இந்த மாதிரியான சமிக்ஞைகள் தரும் செய்திகளை அலசுகிறார்கள். இதை டி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்பார்கள். பொதிந்துள்ள செய்திகளை அறிதல். இந்த பதிலை நான் எழுதுவதில் உள்ள செய்திகளை கவனியுங்கள். எனக்கு விஷயம் தெரியும் என்கிற மிதப்பும், உனக்குத் தெரிகிறதா என்கிற சவாலும் இதன் செய்திகள் அல்லவா!

மேற்கண்ட கேள்வி - பதிலைப் பிரசுரித்த வெகுஜன வார இதழ் ‘ஆனந்தவிகடன்’. பதில் அளித்தவர் பிரபல வணிக எழுத்தாளரான சுஜாதா.

ஒரு வெகுஜனப்பத்திரிகையில், ஒரு எழுத்தாளர் பின் நவீனத்துவம் பற்றி எழுத விரும்புகிறார்; அதற்கு அந்த இதழும் இடம் தருகிறது என்றால் என்ன அர்த்தம். பின் நவீனத்துவமும் ‘போணி’யாகக் கூடிய சரக்காக மாறிவிட்டது என்பதுதானே பொருள்.

மேற்கண்ட பதிலில் சுஜாதா கொஞ்சம் சரியாகவும் கொஞ்சம் தப்பாகவும் சொல்லியிருக்கிறார். சமிக்ஞைகள் பற்றி அவர் சொன்னது சரி. பின்பு அவர் சொல்லும் குறி, குறியியல், டி-கன்ஸ்ட்ரக்‌ஷன் என்று அடுக்கும்போது அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் என்று எல்லாவற்றையும் கலந்து கட்டி – அவர் பாஷையில் சொல்வதாக இருந்தால் – ஜல்லி அடித்திருக்கிறார்.

ஜெர்மானிய தத்துவ ஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், ஃபிரெஞ்சு சோஷலிஸம் ஆகிய முப்பெரும் சிந்தனைகளின் கூட்டிணைவால் ஆனது மார்க்ஸியம். அதே போல் ழாக் தெரிதா, மிஷல் ஃபூக்கோ, ரொலாண் பார்த், ழாக் லக்கான், ஜூலியா கிறிஸ்தேவா, தெலூஸ் - கத்தாரி போன்றோரின் சிந்தனைகளின் விளைவே பின் நவீனத்துவம்.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பின் நவீனத்துவம் என்ற சொல்லாடல் புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலே, மேற்கோள் காட்டப்பட்ட சுஜாதாவின் பதிலைப் போல ஒவ்வொரு மேற்கோள் காட்டலின் போதும் மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இவற்றில் எதுதான் பின் நவீனத்துவம் என்ற குழப்பத்தை வாசகனுக்குத் தந்தபடியே இருக்கிறது.

பின் நவீனத்துவத்தை ஒரு யானையுடன் ஒப்பிடலாம். அதன் காதைத் தொட்டுப் பார்த்துவிட்டு, யானை முறத்தைப் போல் இருக்கிறது என்று அ. மார்க்ஸ், ரவிகுமார் போன்றோர் புரிந்து கொள்கின்றனர். அதன் வயிற்றைத் தொட்டுப் பார்த்துவிட்டு யானை சுவரைப்போல் இருக்கிறது என்று சாரு நிவேதிதா போன்றோர் வாதிடுகின்றனர். யானையின் வாலைத் தொட்டுப் பார்த்துவிட்டு யானை கயிறு போலத்தான் இருக்கிறது என்று கோணங்கி போன்றோர் சாதிக்கின்றனர். யானை ஒரு நீண்ட ரப்பர் குழாய் போன்றது என்பது ரமேஷ் - பிரேமின் வாதம். யானையின் தும்பிக்கையைத் தொட்டுத் தடவிப் பார்த்தபின் அவர்கள் எடுத்திருக்கும் முடிவு இது.

பின் நவீனத்துவம் என்பது அரசியல் நிலைப்பாடு என்பது அ. மார்க்ஸ் போன்றோரின் நிலைப்பாடு. ஆனால் அது மட்டுமே பின் நவீனத்துவம் அல்ல. அதுவும் ஒரு கூறு மட்டுமே. பின் நவீனத்துவம் என்பது நவீனத்துவம் போதிக்கும் ஒழுக்கம், கட்டுப்பாடுகளை மீறுவதுதான் என்பது சாரு நிவேதிதாவின் கொள்கை. இந்தக் கொள்கையை எதிர் நவீனத்துவம் என்றுதான் சொல்லலாமே தவிர பின் நவீனத்துவம் என்று கதைக்க முடியாது. கோணங்கி போன்றோர் புரியாத மொழியில் எழுதி வாசகனை பயமுறுத்துகிறார்கள். பின் நவீனத்துவம் எழுத்தாளனுக்கு கட்டுத்தளைகளில் இருந்து விடுதலை தருகிறது. புரியும் விதமாகவும் எழுதலாம். புரியாதபடியும் எழுதலாம். அது ஆசிரியனின் சுதந்திரம். இந்த அடிப்படையில் பார்த்தால் கோணங்கி எழுதுவதைப் பின் நவீன எழுத்தாக அங்கீகரிக்க முடியும். அதே சமயம் பின் நவீனத்துவம் வாசிப்பு ஜனநாயகத்தைக் கோருகிறது. வாசிப்பு இன்பத்தைக் கோருகிறது. அந்த அளவுகோளின்படி பார்த்தால் கோணங்கியின் பிரதியை பின் நவீனப்பிரதியாக ஏற்க முடியாது.

ஆக, தத்துவம், கலை-இலக்கியம், அரசியல், மானிடவியல், கட்டடக்கலை, இசை, திரைப்படம் என்று இதெல்லாமும் சேர்ந்ததுதான் பின் நவீனத்துவம். பின் நவீனத்துவம் என்பதை ஒருவிதமாக ஒற்றைத்தன்மை கொண்டதாக வகைப்படுத்தி, அவரவர் தேர்வுக்கு ஏற்ப அதை ஒரு சட்டகத்துக்குள் போட்டு அடைக்கும் போது இது போன்ற அபத்தங்கள் நேர்கின்றன.

சரி, நவீனத்துவத்தின் கதை என்ன?

நவீனத்துவம் 1890ஆம் ஆண்டு தோன்றியது. இது வரை வரலாற்றில் ஒவ்வோர் காலக்கட்டத்திலும் நிகழ்ந்த புரட்சிகளை எல்லாம் விட நவீனத்துவம் என்று அழைக்கப்படும் காலக்கட்டத்தில் நடந்தவை மகத்தானவை. வான்கோவும், பிக்காஸ்ஸோவும் ஓவியத்தில் நிகழ்த்தியது ஒரு பாய்ச்சல் என்றால், காஃப்காவும், ஜேம்ஸ் ஜாய்ஸூம் இலக்கியத்தில் நிகழ்த்தியது இன்னொருவிதமான பாய்ச்சல். ஃபிரெஞ்சு எழுத்தாளரான ஆந்திரே மால்ரோ, ’நவீனத்துவ யுகம் என்பது கற்பனாவாதத்தின் அருங்காட்சியகம்’ என்கிறார்.

நவீனத்துவ அனுபவம் என்பது புதிரானது அல்ல. அது தெருக்களில், வீடுகளில், தொழிற்சாலைகளில் தரிசிக்கப்பட்டது. நவீனத்துவ வாழ்க்கை இது என்றால், நவீனத்துவ கலையோ கோபத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்துவதாக இருந்தது. தற்போது பின் நவீனத்துவம் எதிர்கொள்ளும் வரவேற்பையும், எதிர்ப்பையும் நவீனத்துவமும் சந்தித்தது. பின் நவீனத்துவத்தைப் போலவே, நவீனத்துவமும் தனது காலத்தில் வசீகரமானதாகவும், ஒடுக்கப்பட்டதாகவும் இருந்த்து.

நவீனத்துவம் ஒரு புறம் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை உற்பத்தி செய்தது. மறுபுறம் ரகசியமாகப் படிக்கப்பட வேண்டிய புத்தகங்களையும் உருவாக்கியது. பகிரங்கமாகப் படிக்க வேண்டிய புத்தகங்கள், ஒளித்துவைத்துப் படிக்க வேண்டிய புத்தகங்கள், தடை செய்யப்பட வேண்டிய புத்தகங்கள், எரிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் என்று பலவிதமான புத்தகங்கள் நவீன யுகத்தில் உருவாயின என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

நவீன யுகத்தில்தான் தொழிற்புரட்சி தோன்றியது. அதன் விளைவாக தொழிற்சாலைகள் தோன்றின. இன்னொருபுறம் தொழிலாளர் வர்க்கம் தோன்றியது. தொழிற்புரட்சி தோன்றிய இடம் ஐரோப்பா என்பதால் ஐரோப்பா செழித்து வளர்ந்தது. உலகின் இதர நாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளவுக்கு அது அசுர வளர்ச்சி அடைந்தது. உலகச் சந்தையின் தேவையின் பெரும்பகுதியை ஃபிரான்ஸும், ஜெர்மனியும் பகிர்ந்து கொண்டன. நவீனத்துவம் போட்ட குட்டிதான் முதலாளித்துவம். அது ஒரு பூதமாக வளர்ந்தது. முதலாளி – தொழிலாளி என்ற இரு புதிய வர்க்கங்களைத் தோற்றுவித்தது. சந்தைகள் பெருகின. போட்டிகள் வலுத்தன. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகள் ஆனார்கள். ஏழைகளின் பெருக்கம் சேரிகளை உருவாக்கியது. ஐரோப்பா இரு அணிகளாகப் பிரிந்தது. ஃபிரான்ஸும், ரஷ்யாவும் ஓர் அணியிலும் இதர நாடுகள் வேறு அணியிலும் சேர்ந்து கொண்டன. இச்சூழல் ஓர் உலகப்போரை நோக்கி நகர்த்தியது. சராசரி மனிதனின் மனத்தில் சுயப்பிரக்ஞை, தன்னம்பிக்கை, துணிவு போன்ற உணர்வுகள் சிதைந்தன. பதற்றம், பயம், அற்புதங்கள் மீதான நம்பிக்கை, குற்ற உணர்வு என்று பலவிதமான உணர்வுகள் தோன்றின. இந்த உணர்வுகள்தான் அக்காலத்திய கலை-இலக்கியங்களில் பிரதிபலித்தன.

பொதுவாக, நவீனத்துவம் என்று சொல்லப்படுவது பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரொப்பாவில் கால்கொண்ட அறிவொளி மரபு இயக்கத்தைக் குறிக்கும். வளர்ச்சி, நன்னம்பிக்கை, பகுத்தறிவு, பூரண அறிவைத்தேடும் முயற்சி, உண்மையான சுயத்தை அறியும் ஞானம் என்பன அறிவொளி மரபின் சிந்தனைகள் ஆகியவற்றின் நீட்சியே.

அறிவொளி மரபின் செயல்திட்டமே நவீனத்துவத்தின் செயல் திட்டமும் ஆகும்.

நவீனத்துவம் ஒரு புறம் மனித உரிமைகளைக் கொண்டாடி, ஃபிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது. அமெரிக்க ஜனநாயகம், ரஷ்யக் கம்யூனிசம் போன்ற கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. ஒரு புறம் ஜனநாயகம் பேசியது. மறுபுறம் வெட்கமின்றி பிற நாடுகளை காலனியாதிக்கத்துக்கு உட்படுத்தியது. ஒரு புறம் மனித உரிமைகளைப் பேசியபடியே, மறுபுறம் போராளிகளை சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தது.

இதன் விளைவாகவே, நவீன யுகம் தனது மதிப்பீடுகளைத் தொலைத்த யுகமாகிவிட்டது. இதனால், ஜனநாயகம், பாராளுமன்றம், சுதந்திரம், நீதிமன்றம் போன்ற சொற்கள் அர்த்தம் அற்ற வெற்று வார்த்தைகளாக மாறிவிட்டன.

சோர்வு, அவநம்பிக்கை, பகுத்தறிவின் மீதான அலுப்பு, பூரண அறிவின் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவை பக்க விளைவுகளாகத் தோன்றிவிட்டன.

எனவேதான் பின் நவீன சிந்தனையாளர்கள் நவீன யுகத்தின் போதாமை குறித்து மட்டுமல்ல; இதற்கு முந்தைய இரண்டாயிரம் ஆண்டுக் காலமாகக் கால் பரப்பி நின்ற எல்லா மதிப்பீடுகள் குறித்தும் சந்தேகம் எழுப்புகிறார்கள். ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளைப் புரட்டிப் போடுகிறார்கள்.

அதனால்தான்,

‘உன்னையே நீ அறிவாய்’ என்று சாக்ரட்டீஸ் சொன்னதை ‘உன்னையே நீ தகர்த்துக் கொள்வாய்’ என்று மாற்றிப் போடுகிறார்கள்.

நவீனத்துவ யுகத்துக்கு முந்தைய யுகத்தைச் சேர்ந்த ஷேக்ஸ்பியர் ‘உலகமே நாடக மேடை; நாம் அனைவரும் நடிகர்கள்’ என்றார். அதற்குப் பின் வந்த நவீன யுகத்தைச் சேர்ந்த சார்த்தரோ, ‘உலகம் ஒரு நாடக மேடைதான். நாம் அனைவரும் நடிகர்கள்தான். நாம் அனைவரும் தர தர என்று மேடைக்கு அழைத்து வரப்பட்ட நடிகர்கள். நமக்கான வசனத்தை நமக்காக எழுதித் தர யாருமே இல்லை. சொல்லித் தரவும் ஆள் இல்லை. நமக்கான வசனத்தை நாமேதான் பேசிக் கொள்ளவேண்டும். நாம் சுதந்திரமாக இருக்குமாறு சபிக்கப்பட்டவர்கள்’ என்றார். நவீன யுகத்துக்குப் பின் வந்த பின் நவீனவாதியான மிஷல் ஃபூக்கோவோ, ‘நாம் சுதந்திரமானவர்கள் அல்ல. அதிகாரத்தின் நுண் அரசியலால அடக்கி ஆளப்படுபவர்கள். நாம் வகிக்க வேண்டிய பாத்திரங்களை அதிகாரம் நிர்ணயிக்கிறது’ என்றார்.

இது போல காலங்கள் தோறும் பழைய அலையைப் புதிய அலை புரட்டிப் போடுவது போல பழைய சிந்தனையைப் புதிய சிந்தனை புரட்டிப் போட்டபடியே இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே என்று உரத்துப் பேசுகிறது.

(தொடரும்)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768