|
|
வல்லினம் கலை, இலக்கிய விழா 3 புகைப்படங்கள்
வல்லினம் பதிப்பகம்
ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கலை இலக்கிய விழா இவ்வாண்டு
'வரலாற்றை மீட்டுணர்தல்' எனும் தலைப்பில் கடந்த 5.6.2011-ல் நடைப்பெற்றது.
இம்முறை இந்நிகழ்வு செம்பருத்தி இதழ் ஆதரவுடன் நடைபெற்றது. நிகழ்ச்சி
அறிவிப்பாளராக எழுத்தாளர் மற்றும் மின்னல் எஃப்.எம் வானொலி அறிவிப்பாளர்
தயாஜி சிறப்பாகத் தம் பணியைச் செய்தார்.
தனது வரவேற்புரையில் 'வல்லினம்' இதழ் ஆசிரியர் ம. நவீன் செம்பருத்திக்குத்
தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டதோடு இவ்விரு இதழ்களும் இணைந்து பல்வேறு
கலை, இலக்கிய நகர்வுகளுக்கு வித்திட வேண்டும் என்ற தனது ஆவலைக் கூறினார்.
நிகழ்வு நடத்தப்படுவதற்கான நோக்கத்தையும் வரலாற்றை மீட்டுணரும் அதே வேளை
எழுத்தாளர்களையும் மீட்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார்.
நிகழ்வில் தலைமையுரை ஆற்றி தொடக்கி வைத்தார் கா. ஆறுமுகம். செம்பருத்தியின்
முதன்மை ஆசிரியரான அவர் மலேசியத் தமிழர் வரலாறு குறித்த தனது பார்வையை
முன்வைத்தார். தற்கால அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கு
வரலாற்றுப்பார்வையின் அவசியத்தை உணர்த்துவதாக அவர் உரை இருந்தது.
இந்நிகழ்வில் எழுத்தாளர் ஆ. ரெங்கசாமியின் இரு நூல்கள் வெளியீடு கண்டன.
முதலாவது 'விடிந்தது ஈழம்' என்ற இலங்கை தமிழர் வரலாற்றைச் சொல்லும் சிறு
நூலும், இரண்டாவதாக 'இமையத் தியாகம்' என்ற வரலாற்று நாவலும் வெளியீடு
கண்டன. 'விடிந்தது ஈழம்' எனும் வரலாற்று நூல் குறித்த தனது பார்வையைச்
செம்பருத்தி இதழ் ஆசிரியர் சு. யுவராஜன் பகிர்ந்து கொண்டார்.
(இம்மாத
வல்லினத்தில் விரிவாக). அதை தொடர்ந்து ம. நவீன் 'இமையத்தியாகம்' நாவலை
தனது வாசிப்பின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டார்.
(இம்மாத
விருந்தாளிகள் விட்டுச்சென்ற வாழ்வு பகுதியில் விரிவாக)
இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்ற செம்பருத்தி ஆலோசகரான திரு. பசுபதி தனது
சிற்றுரைக்குப் பின் இவ்விரு நூல்களையும் வெளியீடு செய்தார். விடிந்தது
ஈழம் நூலை வழக்கறிஞர் திரு. பசுபதி வழங்க கவிஞர் பூங்குழலி வீரன்
பெற்றுக்கொண்டார். அதேபோல இமையத்தியாகம் நாவலை எழுத்தாளர் கே. பாலமுருகன்
பெற்றுக்கொண்டார். மேலும் 'விடிந்தது ஈழம்' என்ற நூல் மலேசியாவில் உள்ள
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் இலவசமாகவே
வழங்கப்பட்டது. அடுத்தத் தலைமுறைக்கு ஈழ வரலாறு தெரிய வேண்டும் என்பதே
வல்லினம் - செம்பருத்தி குழுவினரின் நோக்கமாக இருந்தது.
நூலாசிரியரான ஆ. ரெங்கசாமி தான் எழுதிய ஐந்து நாவல்கள் தொடர்பாகத் தன்
கருத்துகளை முன்வைத்தார். 'விடிந்தது ஈழம்' எழுத நேர்ந்த சூழலையும்
விளக்கினார். அவர் உரைக்குப் பின்னர் இரண்டாம் அமர்வு தொடங்கியது.
இவ்வமர்வுக்குத் தலைமையேற்ற 'வல்லினம்' ஆலோசகர் டாக்டர் மா. சண்முகசிவா,
முத்தம்மாள் பழனிசாமி எழுதிய 'நாடு விட்டு நாடு' என்ற தன்வரலாற்று நூல்
குறித்த தனது கருத்துகளை முன்வைத்தார். இலக்கியச் சுவையுடன் அவர் உரை
இருந்தது. பின்னர் முத்தம்மாள் பழனிசாமி எழுதிய 'நாடு விட்டு நாடு' மற்றும்
'நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்' என்ற நூல்களை அவர் வெளியிட்டார்.
'நாடு விட்டு நாடு' எனும் தன்வரலாற்று நூல் குறித்த எண்ணங்களை சிவா
பெரியண்ணன் பகிர்ந்து கொண்டார். அந்நூலில் உள்ள சில சுவாரசியமான,
வரலாற்றுப்பூர்வமான விடயங்களை அவையின் முன்வைத்தார். அவரைத் தொடர்ந்து
எழுத்தாளர் கே. பாலமுருகன் 'நாட்டுப்புறப் பாடலில் என் பயணம்' என்ற
மலேசியத் தோட்டப்புற பாடல்கள் குறித்தான ஆவண நூலை ஒட்டி உரையாற்றினார்.
(இம்மாத
வல்லினத்தில் விரிவாக). அதில் சில சுவாரசியமானப் பாடல்களையும்
பாடிக்காட்டினார்.
இவ்வமர்வுக்கு முத்தாய்ப்பாக, திருமதி முத்தம்மாள் பழனிசாமி உரையாற்றினார்.
அவர் தான் எழுத வந்த சூழலை அவையினரிடம் விளக்கினார். தன் பங்குக்குச் சில
பாடல்களையும் பாடிக்காட்டினார். இதனைத்தொடர்ந்து மூன்றாவது அமர்வு
தொடங்கியது.
இதில் 'மலேசியத் தமிழர்களின் இக்கட்டான நிலை' நூலை எழுதிய மா. ஜானகிராமன்
அவர்கள், மலேசியத் தமிழர் வரலாறு குறித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
வரலாற்றுக்கு முன்பிருந்து தொடங்கி, இன்றைய சூழல் வரை எவ்வாறெல்லாம்
தமிழர்களின் வரலாறு மாற்றப்படுகிறது எனும் ஆதங்கம் அவர் உரை முழுதும்
நீண்டது. பல்லூடகக் காட்சியின் மூலம் பல அரியப் படங்களைக் காட்டிய
ஜானகிராமனின் உரை பலரையும் கவர்ந்தது.
5.30 க்குத் தொடங்கிய நிகழ்வு சரியாக 9.30க்கு நிறைவு கண்டது. சுமார் 120
பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வு மலேசியத் தமிழர்கள் தங்கள் வரலாற்றைத்
திரும்பிப்பார்க்கும் ஒரு வாய்ப்பினை வழங்கியது. நிகழ்வில் வெளியீடு கண்ட
நூல்களின் விற்பனை தொகை அனைத்தும் செம்பருத்தி பதிப்பகத்திற்கு
வழங்கப்பட்டது. எழுத்தாளர்களால் எழுத்தாளர்களுக்கு நடத்தப்படும் மற்றுமொரு
வல்லினம் நிகழ்வாக கலை இலக்கிய விழா 3 அமைந்தது.
|
|