|
|
சுரண்டல்களும் காலந்தாழ்த்தி வந்த சுய
உணர்வும்
வேலை தேடுவதே எனக்கு பெரிய வேலையாக இருந்தது. ஒரு
நிரந்தரமான வேலை அமைந்துவிடாதா என்ற எண்ணமே என்னை பெரும் துயரத்தில்
ஆழ்த்திக்கொண்டிருந்த காலம் அது. எனக்கு ஏற்ற வேலை எது என்றே எனக்கு
தெரியவில்லை. கிடைக்கும் வேலைகளை நேர்மையுடன் செய்து வந்தாலும் என்னால்
எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை.
இந்நிலையில் நான் தலைநகருக்கே மீண்டும் திரும்பி வந்தேன். இங்கேயும் வேலை
தேடும் படலம் நீண்டது. குறைந்தது ஒன்றரை மாதத்துக்குப்பிறகு 'கிராண்ட்
பசிப்பிக்' தங்கும் விடுதியில் சமையல்கூட உதவியாளராக வேலை கிடைத்தது. அங்கே
வேலை செய்த நான்கு வருட காலமும் என்னுடைய வாழ்நாட்களில் மிகமுக்கியமான
நாட்களாக வரையருக்கலாம். அவை எனக்கு புதிய முகவரியை தேடித்தந்தன. தங்கும்
விடுதியில் வேலைக்கு சேர்ந்த முதல்நாள் அனுபவத்தை பற்றியும் வேலையை பழகின
விதத்தையும் முன்பே வல்லினத்தில் எழுதிவிட்டதால் (காண்க வல்லினம் டிசம்பர்
2007) மீண்டும் அதைப் பற்றியே பேச வேண்டியதில்லை.
அங்கே வேலை செய்துக்கொண்டேதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ்
பத்திரிக்கைகளுக்கு எழுத ஆரம்பித்தேன். தென்றல், வானம்பாடி, நயனம், இதயம்,
மன்னன் போன்ற வாரமாத இதழ்களில் எனது படைப்புகள் பிரசுரம் கண்டன. மனதில்
தோன்றியது எல்லாம் கிறுக்கப்பட்டு அச்சில் ஏறி கொண்டிருந்தன. எதையெல்லாம்
எழுத்தாக்கலாம் என்று தெரியாமலேயே மிகவும் பரபரப்பாக
எழுதிக்கொண்டிருந்தேன். முகம் தெரியாத நண்பர்களும், சில பத்திரிகை
ஆசிரியர்களும் எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே அறிமுகமானார்கள்.
'யோகி' என்ற பெயர் பரவலாகப் பத்திரிகைகளில் அறியப்பட்டது. அதன் நீட்சியாக
மன்னன், தென்றல், இதயம் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் என்னை அவரவர்
பத்திரிகைகளில் நிருபர் ஆவதற்கு கேட்டுக் கொண்டனர். எனக்கு 'இதயம்'
பத்திரிக்கையின் ஆசிரியர் எம். துரைராஜ் அவர்கள் நிருபருக்கான பயிற்சியை
வழங்கினார். ஆனால் நான் 'மன்னன்' பத்திரிகையில் நிருபர் ஆனேன். இருப்பினும்
மற்ற பத்திரிகையின் ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் அவ்வப்போது
ஏதேனும் படைப்புகளை வழங்கினேன். சமையல் வேலைக்கு எந்த பாதிப்பையும்
ஏற்படுத்திக்கொள்ளாமல் ஓர் அட்டவணையைச் செய்துக்கொண்டு பகுதி நேரமெல்லாம்
எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கே தெரியாமல் மிகவும் பரபரப்பாக
இயங்கிக்கொண்டிருந்தேன். அது எனக்கு பிடித்தும் இருந்தது.
சிறந்த நிருபர் ஆக வேண்டும் என கருதி நேரம் காலம் பாராமல் பேட்டிகளை
எடுப்பதும் படங்களை பிடிப்பதும் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு நடப்பதும் என
இருந்த எனக்கு மிகவும் காலம் தாழ்த்தியே ஒன்று உறைக்க ஆரம்பித்தது. என்
முழு நேர வேலையில் கிடைத்த சம்பளத்தில் ஒரு பகுதி புத்தகங்கள்
வாங்குவதற்கும், பேட்டியின் போது எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதை
டெவலப் செய்வதற்கும் செலவழிந்துகொண்டிருந்தது. போக்குவரத்து மற்றும்
கைத்தொலைபேசிக்கும் என் பணம் விரையமாகிக்கொண்டே இருந்தது.
ஆனால் நான் பகுதி நேரமாகப் பார்த்த நிருபர் பணியில் இருந்து எந்த
வருமானமும் பெறவில்லை. அங்கே இருந்து எதுவும் வராது என்று அறிந்துக்கொள்ள
எனக்குத் தாமதமாகி இருந்தது. ஆனால் 'மன்னன்' பத்திரிகை ஆசிரியர் எஸ்.பி.
அருண் என் படைப்புகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பிரசுரித்தார். எனக்கு
இலவசமாகப் பல நல்ல ஆலோசனைகளும் வழங்கினார்.
இயக்குநர் எஸ்.ஜெ. சந்திரசேகர் நடிகர் சத்தியராஜை வைத்து ஒரு படம் இயக்கி
இருப்பார். அதில் சத்தியராஜ் பத்திரிகை நிருபராக நடித்திருப்பார். ஒரு
பேனாவை வைத்துக்கொண்டு அவர் பேசிய வசனங்கள் யாரையும் உசுப்பிவிடும்
அளவுக்கு தீவிரமானவை. அது என் இரத்தத்தை சூடாக்கி விட்டதில் எந்த
ஆச்சரியமும் இல்லை. நானும் அந்த மாதிரி தீயாக இருக்க வேண்டும் என்று
நினைத்தேன். அநியாயங்களை நேர்மையுடன் எழுத வேண்டும் என்று துடித்தேன்.
ஆனால் எனக்கு அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அதை பெறுவதற்கான
வழியும் எனக்கு தெரியவில்லை. பத்திரிகைச் சுதந்திரம் என்ற ஒரு மண்ணும்
இங்கே இல்லை. எங்கும் எதிலும் சர்வாதிகாரம்தான். எதை எழுதினாலும் எடிட்
செய்யப்பட்டு குத்துயிருமாய் குலைஉயிருமாய் பிரசுரமானது. அதற்கான
காரணங்களையும் பத்திரிகை ஆசிரியர்கள் வைத்திராமல் இல்லை. இருப்பினும் என்
சந்தோஷத்துக்காக என்னை பாராட்டுகிறார்களே என்ற அற்ப ஆசைக்காகத் தொடர்ந்து
எழுதிக்கொண்டிருந்தேன்.
அதன் விளைவாக எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. நான் பேட்டி எடுப்பதையெல்லாம்
கணிசமாகக் குறைத்துக்கொண்டே வந்தேன். மலேசிய நண்பன் நாளிதழின் ஆசிரியர்
திரு. ஆதி. குமணன் மறைவிற்குப் பிறகு 'இதயம்' மாதப்பத்திரிகை சில
காரணங்களுக்காக மூடப்பட்டது. அதன் ஆசிரியர் எம். துரைராஜ் மக்கள் ஓசை
பத்திரிகையில் புதிய பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருந்தார்.
என் திறமையை அந்நாளேட்டில் பயன்படுத்திக்கொள்ள அவர் மக்கள் ஓசை பத்திரிகை
நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார். நான் தென்றலில் வேலை
செய்துக்கொண்டிருந்த சந்துருவை துணைக்கு அழைத்துக்கொண்டு மக்கள் ஓசை
அலுவலகத்துக்குப் போனேன்.
அந்தச் சமையத்தில் ஞாயிறு பதிப்பின் ஆசிரியராக இருந்த ராஜேந்திரனிடம்
நேர்முகத் தேர்வுக்கு எம். துரைராஜ் அனுப்பி வைத்தார். சந்துருவை என்னுடன்
இணைத்துப் பார்த்தவர் எங்கள் உறவை விசாரித்தார். விரைவில் திருமணம்
செய்துக்கொள்ளப் போகிறோம் என்றேன். அப்படியானால் உங்களை இங்கே வேலைக்கு
ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். எனக்கு விளங்காமல் குழப்பத்தில் இருந்தேன்.
பிறகுதான் தெரிந்தது 'தென்றல்' வார இதழின் ஆசிரியர் வித்தியாசாகருக்கும்
ராஜேந்திரனுக்கும் ஏதோ தீராத மனஸ்தாபம் என. அதனால் சந்துரு ஆகாதவர்.
சந்துருவை திருமணம் செய்துக்கொள்ளும் நானும் ஆகாதவள் ஆனேன். பத்திரிகை
தர்மம் என்னை அசரவைத்தது. என்ன ஒரு தார்மீகம்?
சொந்த விருப்பு வெறுப்புக்கு நடக்கிற பத்திரிகைகள்தான் மலேசிய மண்ணில்
மலிந்து கிடக்கின்றன. தன் துதிபாடுவதற்கே சில ஆசிரியர்கள் பத்திரிகை
நடத்துகிறார்கள். ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் நிருபர்கன் பெயர்கள் அங்கீகாரம்
என்ற பெயரில் கண்துடைப்புக்காகப் போடப்படுகிறது. தங்களுக்கு வேண்டியதை இந்த
மாதிரி நிருபர்களை வைத்தே சாதிக்க முனைகிறார்கள். மிகப்பெரிய சுரண்டலை
யாரும் அறியாமல் இது போன்ற இதழ் ஆசிரியர்கள் அழகாக நிகழ்த்திவிடுகிறார்கள்.
இந்த நிலை தீராத தொடர்கதையாக இன்றும் தொடர்வதுதான் சாபக்கேடே.
யானை பசிக்கு சோளப் பொறி போதுமா? எனக்கு ஏற்ற தளம் அதுவல்ல என எனக்கு புரிய
வைத்தவர் சந்துருதான். என்னை எழுத்தில் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுச்
செல்ல போதுமான ஆலோசனைகளையும், புத்தகங்களையும் வழங்கினார். இலக்கிய
நண்பர்களை அறிமுகப் படுத்திவைத்தார். ஒரு கட்டுக்குள் சிக்கி இருந்த என்னை
சிக்கலில்லாமல் வெளியேற்றினார். சரியான வழிகாட்டலை வழங்கிய கரங்களைப் பற்றி
நான் மேலே வரத்தொடங்கினேன்.
|
|