முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 32
ஆகஸ்ட் 2011

  ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...8
கே. பாலமுருகன்
 
 
       
நேர்காணல்:

"இலக்கியவாதிகள் உண்மைக்குக் குரல் கொடுக்க வேண்டும்"

சமாட் சைட்



பத்தி:

யார் இந்த அம்பிகா சீனிவாசன்?

கே. பாலமுருகன்

சுரண்டப்படும் மலேசிய எழுத்தாளர்கள்

ம. நவீன்



கட்டுரை:

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி : ஆளுமைகளின் சேர்க்கை
லதா

நான் உதவ முடியாது!
அ. முத்துலிங்கம்

உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
சிவா பெரியண்ணன்



சிறுகதை:

கனவைக் கொல்வது அல்லது கனவுக்குள் சாவது
கே. பாலமுருகன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...14
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...22

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

கடவுளின் நகரம் – பிரேசில் சினிமா
(City of God)

ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா போன்ற நாடுகளிலிருந்து தப்பிய வந்தேரிகளின் மூலம் உருவானதுதான் பிரேசில். புறநகர் குடியிருப்பில் சொந்தமாக ஒரு நிலம்கூட இல்லாமல், ஏழ்மையில் தவித்து வீடுகளை இழந்து, வருமானங்களை இழந்து, நகர் நகராகக் குடிப்பெயர்ந்து நகர்ந்துகொண்டிருக்கும் பிரேசில் அடித்தட்டு மக்களை கடற்கரையோரங்களில் பார்க்கலாம். முறையான கல்வியும் வசதியும் இல்லாத பெரும்பாலான குழந்தைகள் வீதியில் விடப்பட்டு அநாதையாக்கப்பட்டுள்ளனர். பிரேசில் சூழலை மிகவும் கவித்துவமாகவும் அரசியல் அணுகுமுறைகளுடனும் வெளிப்படுத்தியப் படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ‘city of god’. ஒரு நகரத்தின் அத்தனை விளிம்புநிலை வாழ்க்கையையும் அதன் அபாரமான சமூகக் கட்டமைப்பையும் ஒரே படத்தில் காட்ட முடியும் என்கிற கலை சாத்தியத்தை உலகிற்குக் காட்டியம் படம் இது.

கடவுள் இல்லாத நகரம்

சிறந்த புகைப்படக்காரனாகத் தன்னை நினைத்துக்கொண்டு தன் இலட்சியத்தை அடைய துடிக்கும் ரோக்கெட்டின் (கதையில் வரும் சிறுவன்) கதையைத்தான் இப்படம் மையமாகப் பேசுகிறது. அவனைச் சுற்றி நிகழும் வாழ்க்கையை இப்படம் பதிவு செய்வதன் வழி ஒரு நகரத்தின் அடித்தட்டு மக்களையும் அவர்களின் குடியிருப்பையும் காட்டுகிறது. ரோக்கெட்டின் இரு வேறு காலக்கட்டத்தையொட்டி நகரும் திரைப்படம், அங்கு வாழ்ந்த இரு வேறு காலங்களில் சிதைந்துபோன சிறுவர்களையும் இளைஞர்கள் கூட்டத்தையும் மிகவும் துல்லியமாகப் பதிவு செய்வதுதான் படத்தின் ஆதாரம்.

ஒரு பெரிய திறந்தவெளியில் மலிவு வீடுகள் பல வரிசையாகக் கட்டப்பட்டிருக்கின்றன. 5 பேருக்கு மேல் உள்ளே இருந்தால் இடைவெளி குறைந்து நெருக்கடி நிரம்பும் சிறிய வீடுகளில் குழந்தைகள், வயதானவர்கள் என எண்ணிக்கையைப் பற்றி கவலையில்லாமல் எல்லோரும் வாழ்கிறார்கள். அங்குள்ள வாழ்க்கைமுறையை நாம் இரண்டுவிதமாகப் பிரித்து அறிய முடியும்.

1. கல்வி முறை

சீரான ஒரு கல்வி அமைப்பும் அல்லது அடித்தட்டு மக்களுக்குரிய இலவச கல்வி முறையும் இல்லாத ஒரு சூழல் பிரேசிலின் இருண்ட பகுதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன. அங்கிருந்து வரக்கூடிய பெரும்பாலான குழந்தைகள் கல்வி கற்காதவர்களாகவே இருக்கின்றனர். அவர்களுடைய அதிகமான பொழுதுகள் பெரும்வெளியில் ஏழ்மையை ருசித்தவாறு நகர்கின்றன. தனக்களிக்கப்பட்ட வரட்சிமிக்க பால்யத்தைத் தரிசிக்கும் குழந்தைகள் அதனை வெறுக்கவும் பிறகு பழகிக் கொள்ளவும் செய்கிறார்கள். அப்படி ஏழ்மையையும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாழ்வின் மீதிருக்கும் போதாமைகளையும் அவர்கள் பழகிக்கொள்ளும் தருணம்தான் மிக வன்முறையானது.

பிரேசிலின் கல்வி கொள்கைகள் பின்வருமாறு இருக்கின்றன.

அ. கல்வியை வழங்கி ஒருவனின் குடியுரிமையை மேம்படுத்துவதோடு அவனை வேலைக்குத் தயார்ப்படுத்தி அவனை நல்ல குடிமகனாக மாற்ற வேண்டும்.

ஆ. கட்டாயக் கல்விமுறையை எல்லாம் இடங்களிலும் பிரச்சாரம் செய்து, கல்வி தரத்தை மேம்படுத்தி பிரேசிலின் எல்லாம் மாநிலங்களிலும் அமலாக்கம் செய்ய வேண்டும்.

இ. தனிமனிதனின் சுதந்திரத்தையும் அவனது இலட்சியத்தையும் மதிக்கும் வகையிலான ஒரு சமூக சீர்மையை உருவாக்க வேண்டும்.

ஆனால் இந்த நோக்கங்கள் யாவும் பிரேசிலின் இருண்ட வாழ்வை அணுகவே இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை. அவர்கள் தனக்கான வாழ்க்கையைச் சட்டத்திற்கும் சமூக ஒழுங்கிற்கும் எதிராக உருவாக்கிக் கொண்டு அதன் நியாய தர்மங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வாழத் தொடங்கிவிட்டத்தைத்தான் படம் முழுக்க பதிவாகின்றன. அடிப்படை கல்வியைப் பெறாமல் அவர்களின் குடியிருப்புக்குள்ளேயே தேங்கிவிடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கல்வி கற்காத சமூகம் துவண்டுபோய்விடும் எனச் சொல்வதெல்லாம் சர்வதிகார பேச்சுகள் என நினைக்கிறேன். கல்வி கற்றும் அவர்களை முன்னேறவிடாமல் எல்லா வாய்ப்புகளையும் இன ரீதியில் பிரித்தளிப்பது முதல் கல்வி கற்றவர்களின் மூளையை தனக்கு அடிமையாக்கிக் கொள்வது வரை முதலாளித்துவத்தின் அணுகுமுறைகள் ஒவ்வொருமுறையும் சமூகத்திலுள்ள கல்வி கற்றவர்களைப் பலவீனமடைய செய்வதும் உண்மையே. கல்வி என்பதே முதல் உலக நாடுகளின் உற்பத்திகளை அதிகப்படுத்தி அதற்குக் கூலியாக இருந்து நாட்டின் பொருளாதாரத்தைத் துரிதப்படுத்தும் ஆற்றலை வழங்கும் ஒரு கருவியாகவே பாவிக்கப்படும் மூன்றாம் உலக நாடுகளின் முதலாலியத்துவ சிந்தனைக்கு முன் கல்வி கற்காத சமூகம் பின்னடைவைச் சந்திக்கும் என்பதெல்லாம் சாணக்கிய கருத்தாக்கமே.

பிரேசில் போன்ற வறுமை தேசங்கள் நிரம்பிய நிலப்பரப்பில் கல்வி என்பது வாழ்வாதாரத்திற்கும் அப்பாற்பட்டு அவர்களுக்கு ஓர் ஒழுங்கான சிந்தனையை அல்லது பண்பைக் கற்றுக் கொடுக்கும், அவர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் ஒரு வழிக்காட்டியாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கல்வி கற்றவர்கள் கல்வி கற்காதவர்கள் எனும் பேதங்களை தகர்த்தெறியும் வகையிலேயே இன்றைய பிரேசில் அடித்தட்டு பிரதேசங்கள் வறுமை, சிதைவுண்ட குடும்ப அமைப்பு என உடைந்து கிடக்கின்றன. முதலாம் உலக நாடுகளுக்கும் பிரேசில்லுக்கும் மத்தியில் பொருளாதாரம், பண்பாடு போன்ற வகையில் பெரிய இடைவெளி விழுந்துகிடக்கின்றன.

வறுமை மாநிலங்களிலுள்ள குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வந்த பல அமைப்புகளின் முயற்சிகள் தோல்வியடைவதற்குக் காரணம் அங்குப் பரவிக்கிடந்த சமூகக் குற்றவாளிகளும் போதைப்பொருள் விநியோகத்தின் மூலம் அங்கு உருவாகியிருந்த ஒரு மந்தமான சமூக சூழலும் எனக் கருதப்படுகிறது. 6 வயது முதல் 14 வயதுவரை கட்டாயக் கல்வி இருந்தும் 4 குழந்தைகளுக்கு 3 குழந்தைகள் கல்வி கற்காமல் தேங்கிவிடுவதற்கான காரணத்தை “கடவுளின் நகரத்தை” நோக்கித்தான் ஆராய வேண்டும்.

2. போதைப்பொருள்

பிரேசிலின் வாழ்க்கைமுறையை மாற்றியமைக்கும் இரண்டாவது சக்தி போதைபொருளாகும். போதைப்பொருள் கடத்தல்களும், போதைப்பொருள் விநியோகங்களும் நிரம்பி வழியும் நகரம் அது. எங்குப் பார்த்தாலும் சிறு சிறு அளவில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் முதலாளிகள் இருக்கவே செய்கிறார்கள். இன்னொருவனுடைய தொழிலை இன்னொருவன் அபகரித்து அதைத் தனதாக்கிக் கொள்ளும் நிலை அந்தச் சமூக சூழலில் மிகவும் சாதரணமாக நடக்கும் என்றே சொல்லலாம்.

போதைப்பொருள் அதிகமாகக் கடத்தப்படும் இடமாகவும், போதைப்பித்தர்கள் அதிகமாக உலாவும் நகரமாகவும் Rio De Janerio சொல்லப்படுகிறது. வருடத்திற்கு 6000 போதைப்பித்தர்கள் அங்கிருந்து கண்டறியப்படுவதாகக் கணக்குக் காட்டுகிறது. பெரும்பாலான போதைப்பித்தர்கள் அங்குள்ள குண்டர் கும்பலையும் வழிநடத்தக்கூடியவர்களாவும் சமூகக் குற்றங்களில் ஈடுப்படக்கூடியவர்களாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். போதைப்பித்தர்கள் எங்கும் பரவிக்கிடக்கும் சூழலில் அங்குள்ள அதிகார வர்க்கமும் போதைப்பொருள் கடத்தலிலும் அதைச் சிறைக்கும் எடுத்துப் போவது முதல் எல்லாம் வகையிலுமே கடத்தல் கும்பலுக்குத் துணையாக இருக்கின்றன.

பிரேசலில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பான்மையான ஆய்வுகள் போதைப்பொருள் மூலம் உருவாகும் சமூக சிதைவு, பால்ய காலத்தில் கருவுற்றல் தொடர்பானவையே ஆகும். குறிப்பாக 2007ஆம் ஆண்டு Ana Rute Cardoso மேற்கொண்ட பிரேசில் சமூக ஆய்வு முக்கியமான ஒன்றாகும். நவீன உலகிற்கு பிரேசிலின் சமூகக் கட்டமைப்பையும் அதன் போதைப்பொருள் பாதிப்புகளையும் மிகவும் துல்லிதமாகப் பதிவு செய்துள்ளார். அவரின் ஆய்வுப்படி பிரேசிலின் புறநகர் குடியிருப்புகளில் இருக்கக்கூடிய பெரும்பாலான குழந்தைகள் பள்ளியிலிருந்து நீங்கி, தெருக்களில் சுற்றி அலைந்து முதலில் தன் கல்வியை வீணாக்கிக்கொள்கிறார்கள், அடுத்து போதைப்பொருள் நடவடிக்கைகளில் தன்னை ஈடுப்படுத்திக்கொள்கிறார்கள். போதைப்பொருளை உரியவரிடம் சேர்க்கும் தொழில் தொடங்கி, நகரத்தின் சந்துகளில் போதைப்பொருளை விநியோகம் செய்யும்வரை இத்தொழிலில் சிறுவர்கள் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். பலவீனமான சட்ட அமலாக்கமும், பொருளாதார இடைவெளியும் பிரேசில் நகரத்தின் சிறுவர்கள் இளைஞர்கள் இப்படிப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படவும் தன்னை ஒரு அதிகாரமாக நிறுவிக்கொள்ளவும் வழிவகுக்கின்றன.

மேலும் போதைப்பித்தர்களின் வழியும், திறந்த உடலுறவு வழியாகவும் பிரேசில் முழுவதும் அதிகமான ஏய்ட்ஸ் நோய் பதிவாகியுள்ளது. 1999 ஆம் ஆண்டில் உலகைலேயே இரண்டாவது அதிகமான ஏய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்ட நாடாகப் பிரேசில் வரையறுக்கப்பட்டது. ஆகவே இன்றும் பிரேசிலின் பெரும்பாலான நகரங்களின் மொத்த நடவடிக்கைகளையும் சிதைக்கவும் சீரமைக்கவும் போதைப்பொருளே முக்கியமான ஒன்றாக இருந்தது.

நகரத்தின் கடவுளர்கள்

இந்தப் படத்தில் எப்படிச் சிறுவர்கள் அங்குள்ள சிதைந்த வாழ்வின் மீது பற்றுக்கொண்டு தன்னையும் அதன் ஒழுங்கற்ற வேட்டைக்குள் நுழைத்துக்கொள்கிறார்கள் எனக் காட்டப்படும் இடங்கள் மிகவும் கலைப்பூர்வமாகவும் சினிமாத்தனம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ரோக்கேட்டின் பால்ய காலத்தைத் தழுவி கதைச்சொல்லப்படும் இடத்தில் அங்குள்ள மூன்று நண்பர்கள் எப்படிக் கொள்ளையர்களாக மாறி சமூகத்தைச் சுரண்டுகிறார்கள் எனக் காட்டப்படுகிறது. அதே சமயத்தில் சற்றும் எதிர்ப்பாராத விதமாக எப்படிச் சிறுவர்கள் நகரத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கதைநாயகர்களாக மாறுகிறார்கள் என்பதும் இன்னொரு பகுதியில் காட்டப்படுகிறது.

இரண்டு தலைமுறையாக உடைந்து கிடக்கும் அந்தக் குடியிருப்பின் சிறுவர்கள், வெவ்வேறு வகையில் சமூகத்தின் பாதிப்புகளாகச் செயல்படுகிறார்கள். முதலாவதாக இளமை பருவத்தை எய்துவிட்ட Shaggy – goose- clipper அந்தக் குடியிருப்பின் இளம் குற்றவாளிகளாக இருக்கின்றனர். அங்குள்ள ஒட்டு மொத்த சிதைந்த வாழ்வின் விளிம்பு நியாயங்களைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியை அவர்கள் பெற்றிருக்கின்றனர். பெரும்பான்மையான தந்தைமார்கள் கூலிகளாகவும் கோழைகளாகவும் மட்டுமே இருப்பதால், இந்த இளம் குற்றவாளிகள் நகரத்தின் கடவுள்கள் போல இயங்கத் தொடங்குகிறார்கள்.

இந்த மூவரும் துப்பாக்கிக்கு மிகவும் பழக்கமானவர்கள். அவர்களின் மிக சாதரணமான ஆயுதமாகத் துப்பாக்கி இருக்கின்றது. ஷெக்கி ஒரு பந்தை மேலே உதைத்து அதை வானிலேயே வைத்துச் சுடும் காட்சியில் துப்பாக்கியைக் கையாளும் வித்தையைக் கற்றுக்கொள்வதே அந்த நகரத்தின் கடவுளாக மாறுவதற்கான முதல் தகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. ஏழ்மையும் வரட்சியும் கொன்று தீர்க்கும் அந்தப் பெரும் வெளிக்குள் நுழையும் வண்டிகளை வழிப்பறிக்கொள்ளை செய்து அவர்களின் பணம், பொருட்களைச் சுரண்டுவதை இந்த மூன்று நண்பர்களும் செய்கிறார்கள். ஏழ்மைக்கு முன் அதைக் கடந்து போக அவர்கள் தேர்ந்தெடுக்கும் நியாயமான வழி நகரத்தின் மற்ற பகுதிகளைச் சுரண்டி பிழைப்பதே ஆகும். அப்படி அவர்கள் சுரண்டி அதில் ஏற்பட்ட பரவசமான உணர்வு எப்பொழுதோ அவர்களை ஒரு கடவுளுக்கு நிகராகத் தன்னைக் கற்பித்துக்கொள்ள செய்திருக்கிறது. வாழ்வதற்கான ஆதாரங்களைத் தானே பெற்றுக்கொள்ளும் சுதந்திரத்தின் மீது ஏற்படும் அதீதமான கவனமும் ஈர்ப்பும் அவர்களை வாழ்வாதாரம் என்ற விசயத்தையும் கடந்து இயங்க வைக்கிறது.

ஆகவே நகரத்தை முழுவதுமாகச் சுரண்டி, அதன் அனைத்து செல்வங்களையும் தனதாக்கிக் கொள்வதன் மூலம் ஏழ்மையில் கிடந்த அவர்கள் கடவுளாக மாறிவிடலாம் என்ற ஒரு தீர்மானத்திற்கு ஆளாகிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களைக் கொள்ளையர்களாக மாற்றி எந்த நேரத்திலும் யாரையும் கொள்ளையடிக்கலாம் என்கிற சுதந்திரத்தை அளிக்கிறது. ஆகவே தங்கும் விடுதி, கடைகள் என இந்த மூவரும் துப்பாக்கிகளை ஆயுதமாகக் கொண்டு கொள்ளையடிக்கிறார்கள். அப்படி ஓர் இரவில் மியாமி தங்கும் விடுதி ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்லும் மூவரும் செக்கியின் தம்பியான Lil dice-ஐயும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். அவன் அவர்களை விட சிறுவன் என்பதால் துப்பாக்கி ஒன்றைக் கையில் கொடுத்துவிட்டு மூவரும் உள்ளே நுழைந்து, சல்லாபத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள், வேலையாட்கள், சமையல்காரர்கள் என அனைவரையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து தப்பி ஓடுகிறார்கள்.

பிறகு அங்கிருக்கும் கடை ஒன்றினுள் வாகனைத்தைச் செலுத்தி அதைச் சேதப்படுத்துவதன் மூலம் சிறு முதலாளிகளின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். ஆகவே காவல்துறையினர் உதவியுடன் அந்த மூவரையும் பலி வேட்டைக்காக நகரம் முழுவதும் தேடுகிறார்கள். வெவ்வேறு இடங்களில் அந்த மூவரையும் பிடித்துக் கொல்வதற்காகத் தேடி அலைகிறார்கள். செக்கி தன் காதலியுடன் தப்பி ஓட முயலும் இடத்தில் வைத்துப் போலிசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறான். க்லிப்பர் காட்டுக்குள் தப்பி ஓடும் இடத்தில் திடீரென காணாமல் போகிறான். தன் பக்கத்து வீட்டு பெண்மணியுடன் சல்லாபத்தில் இருக்கும்போது அவரது கணவனால் அடித்துத் துரத்தப்படும் கூஸ், நிர்வாணமாக ஓடி வருகிறான். அதன் பிறகு அவனுடைய தம்பியின் கால்சட்டையை வாங்கி அணிந்துகொண்டு தப்பி ஓடும் கூஸ் என்ன ஆகிறான் என்பது கதையின் அடுத்தப் பகுதியில் சொல்லப்படுகிறது.

நகரத்தின் கடவுளர்களாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த மூவரும் நகரத்திலிருந்து நீங்குகிறார்கள். அவர்களுக்கு அடுத்ததாக இருக்கும் சிறுவர்கள் வளர்ந்து பெரியதாகி அடுத்த கடவுளர்களாக மாறுவது தீர்க்கமாக அங்கு நிறுவிவிட்ட சமூகக் கட்டமைப்பின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.

நகரத்தின் புதிய கடவுள்கள்

கள்ள காதலியின் வீட்டிலிருந்து தப்பி ஓடும் கூஸ்க்கு என்ன ஆகிறது, மியாமி தங்கும் விடுதியினருகே துப்பாக்கியுடன் விடப்படும் சிறுவன் Lil dice என்ன ஆகிறான், சிறுவன் ரோக்கேட் இந்தச் சமூகக் கட்டமைப்பிலிருந்து எப்படித் தப்புகிறான் என்பதுதான் கதையின் அடுத்த பாதி வைத்திருக்கும் மர்மங்கள்.

Lil dice – benny . இந்த இருவரும்தான் ‘city of god’இன் அடுத்த கதைநாயகர்கள். தங்கும் விடுதியினருகே விடப்படும் Lil dice அந்தத் துப்பாக்கியைக் கொண்டு அந்த விடுதியில் இருக்கும் பலரையும் சுட்டு வீழ்த்திவிட்டு மிகவும் நிதானமாக ஆனந்தமாகச் சிரிக்கிறான். ஒவ்வொரு உயிரையும் கொன்றுவிட்டு அவனிடமிருந்து வெளிப்படும் சிரிப்பொலி கொடூரமான பரவசத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அதன் பிறகு தப்பி ஓடி வரும் ரோக்கேட்டின் அண்ணனான கூஸ் என்பவனையும் சுட்டுக்கொல்கிறான். அடுக்காகப் பல கொலைகளைச் செய்து அந்த நகரத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இவனுடைய இந்தச் செயல் ஒரு வறுமை பிரதேசத்தில் பிறந்தவன் எப்படிச் சிறுக சிறுக பெரும் முதலாளிய நிலப்பரப்பை ஆக்கிரமித்து பெரிய கடவுளாக மாறுகிறான் என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது.

Lil dice மற்றும் benny இருவரும் போதை பொருள் கடத்தல், போதை பொருள் கடத்தலைச் செய்து வருபவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என தங்கள் ஆளுமையை மேலும் விரிவாக்குகிறார்கள். நகரத்தில் போதை பொருள் விநியோகம் செய்து வரும் ஏஜேண்டுகளின் நடவடிக்கைகளைக் கவனித்து, அவர்களை அழித்தொழித்து அந்தத் தொழிலைக் கைப்பற்றும் வேலையையும் செய்யத் துவங்குகிறார்கள். நகரத்தை வேட்டையாடி தன் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருகிறார்கள். ஒரு அடித்தட்டு சமூகத்திலிருந்து வரக்கூடிய சிறுவர்கள் இத்தனை துணிச்சலாக அதிகாரங்களை உருவாக்கிக் கொண்டு அதை விரிவடைய செய்து, குற்றங்களை நிகழ்வுகளாக மாற்றி அதையே ஒரு வாழ்க்கை முறையாக மாற்றவும் செய்கிறார்கள் என்பதை சமூக விஞ்ஞானம் சார்ந்த பார்வையோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

இதற்கிடையில் benny இன்னொரு நண்பனின் மூலம் மெல்ல கொண்டாட்டங்களுக்கும் இன்பமயமான வாழ்க்கைக்கும் ஆளாகுகிறான். மேல்தட்டு இளைஞர்களைப் போல உடுத்த வேண்டும், அவர்களைப் போல உல்லாச மையங்களில் மது அருந்தி மகிழ வேண்டும் என ஆசைப்பட்டு நாட்களைக் கடத்துகிறான். ஆரம்பத்திலேயே இவர்களுடன் ஒட்டாமல் தனி இலட்சியத்துடன் வாழ்ந்து வந்த ரோக்கேட்டை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு bennyக்கு ஏற்படுகிறது. இதன் மூலம் ரோக்கேட்டும் பென்னியும் நண்பர்களாகுகிறார்கள். Lil dice-சின் கொடூரமான கொலைக்களத்திலிருந்து மெல்ல இன்பத்தை மட்டும் ருசிக்கும் மனநிலைக்குள் வந்து சேர்கிறான் பென்னி. ‘city of god’-இன் இரு உக்கிரமான கடவுளர்களாக இருந்த ஒருவன் மெல்ல தனது உக்கிரங்களை இழந்து மென்மையாகுகிறான். அடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை மேலும் துரிதப்படுத்த வேண்டும் நம் துரோகிகளைக் கொன்றொழிக்க வேண்டும் எனச் சொல்லும் Lil dice-ஐ பார்த்து உனக்கொரு காதலி வேண்டும் எனப் பதிலளிக்கிறான். தன் நண்பனின் அந்தச் சொல் அவனைச் சலனப்படுத்துகிறது.

நாகரிக உடையை அணிந்துகொண்டு அவனும் இரவு கேளிக்கை மையத்திற்கு ஒருத்தியை மிரட்டி தன் காதலியாக இருக்கும்படி துன்புறுத்துகிறான். அப்பொழுது அங்கு வரும் பென்னி, நான் உன்னை என் நண்பனாக எப்பொழுதும் நேசிக்கிறேன் ஆனால் இந்த வாழ்க்கைக்குள்ளிருந்து வெளியே வந்து எல்லோருக்கும் மத்தியில் வாழப் பழகுவதுதான் எனக்கு முக்கியமாகப் படுகிறது. அதனால்தான் நான் உன்னை விட்டு விலகத் துவங்கியிருக்கிறேன் எனச் சொல்கிறான். அதைக் கேட்டு மேலும் கொதிப்படையும் Lil dice தனது ஆர்பாட்டத்தையும் வன்முறையையும் அந்த இடத்திலேயே செய்யத் துவங்குகிறான். சேரெட் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவனிடம் பிரச்சனையை ஏற்படுத்தியிருந்த Lil dice-ஐ பழித் தீர்க்க எண்ணி, தவறுதலாகப் பென்னியைச் சுட்டுக் கொன்றுவிடுகின்றனர். அதன் பிறகு கெரெட் கும்பலுக்கும் Lil dice கும்பலுக்கும் பெரும் போர் நடக்கிறது. இவர்கள் இருவரின் சண்டையால் நகரம் இரண்டாகிறது.

இதற்கிடையில் புகைப்படக்காரராக இலட்சியம் கொண்டிருக்கும் ரோக்கெட் அவன் வேலைப் பார்த்த பத்திரிகை நிறுவனத்திலேயே புகைப்படக்காரனாக அமர்த்தப்படுகிறான். Lil dice-இன் புகைப்படத்தையும் அவனுடைய கும்பல் படத்தையும் புகைப்படம் எடுத்து அதைப் பத்திரிகையில் பிரசுரம் செய்த பிறகே ரோக்கேட்டிற்கு பெரும் வரவேற்பு கிடைக்கின்றன. இப்படியாக யாருமே உள்ளே நுழையும் தயங்கும் Lil dice கோட்டைக்குள் ரோக்கேட் சென்று புகைப்படம் எடுக்கும் அளவிற்கு அனுமதியும் உரிமையும் கிடைக்கின்றன. அதன் பிறகு மீண்டும் ஒரு பெரும் துப்பாக்கி சண்டையில் கெரட் மற்றும் Lil dice-ஐயும் கைதாகிறார்கள். இருவரையும் கைது செய்து கொண்டு செல்லும் வழியில் Lil dice-ஐ மட்டும் போலிஸ் இறக்கிவிட்டு பணம் கொடுத்து அவனை விடுதலையும் செய்து விடுகிறது. ஆனால் அங்கு வந்து சேரும் ‘city of god’ நகரத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சிறுவர்கள், அவனை அவ்விடத்திலேயே கொடூரமாகச் சுட்டுக் கொல்கின்றனர். நகரத்தின் பெரும் கடவுளாக இருந்த Lil dice உடல் முழுவதும் பல சூடுகள் பட்டு செத்துக்கிடக்கிறான். இவை யாவையும் பார்த்தப்படியே மறைந்திருந்து புகைப்படம் எடுக்கிறான் ரோக்கேட்.

சாக்கடையின் ஓரமாகச் செத்துக்கிடக்கும் Lil diceயின் புகைப்படம் பத்திரிக்கையில் வந்து ரோக்கேட்டிற்குப் மேலும் புகழ் சேர்க்கிறது. புகைப்படக்காரனாக வேண்டும் என்ற ரோக்கேட்டின் கனவு நிறைவேறும் அதே நகரத்தில் மீண்டும் புதிய கடவுளர்கள் தோன்றி போதைப்பொருள் விநியோகத்தைத் தொடங்கிவிட்டதாகப் படம் முடிகிறது.

பிரேசில் எனும் காற்பந்து பிரதேசம்

பிரேசில் என்றதும் ஆசியாவின் பெரும்பாலான மனித மூளைகள் உடனே காற்பந்து எனும் ஒரு குறியீட்டை தன் ஞாபகத்திற்கு கொண்டு வந்துவிடும். பிரேசிலை உலகமே வியந்து பிரமித்துக் கவனிக்கத் துவங்கியது காற்பந்தில் அவர்கள் அடைந்த வெற்றியின் மூலமே. City of god படத்தில் வரண்ட நிலப்பரப்பில் சிறுவர்கள் எப்பொழுதும் காற்பந்து விளையாடிக்கொண்டே இருக்கிறார்கள். வெயில் காய்ந்த மண்ணில் சலிப்பில்லாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது காற்பந்து விளையாட்டு. அடித்தட்டு மக்களான தொழிலாளர்களும் பெரும் கனவுகளுடன் மட்டும் வாழ்ந்து கழிக்கும் எளியவர்களும் அந்த வரிசை வீடுகளின் அடர்த்திக்குள் வெயிலையும் மணல் துகள்களையும் கவனித்தப்படியே இருக்கிறார்கள். வரிசை வீடுகளின் மீது படுத்துக்கிடக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வெக்கையை உதறி தள்ளிவிட்டு சிறுவர்கள் காற்பந்தையே மும்முரமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்த தேகம், எப்பொழுதும் வெயிலின் பளபளப்பு ஊர்ந்த முகம் என, அவர்களின் மீதான வறுமை கோடுகளை அழித்தொழிக்கக்கூடிய சக்தி அந்த உருண்டையான பந்துக்கு மட்டுமே இருப்பதாக உணர வைக்கும் அளவிற்கு அளவில்லாத ஒரு சித்திரமாக அவர்களின் வரைப்படத்தில் வரையப்பட்டிருக்கிறது. அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வியல் பரப்பையே விழுங்கக்கூடிய ராட்டத சக்தியாகக் காற்பந்து சுழன்று கொண்டிருக்கிறது.

பிரேசிலின் நிலப்பரப்பு இரண்டே விசயங்களில் புதைந்திருக்கிறது. ஒன்று காற்பந்து மற்றொன்று போதைப்பொருள் கடத்தல். உலகம் முழுக்கவும் பிரேசில் தனது அபாரமான காற்பந்து விளையாட்டு திறமையின் மூலம் பெரும் புகழ் பெற்றிருக்கிறது. இன்றும் உலக இரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு காற்பந்து விளையாட்டாளர் பிரேசில் நாட்டின் மிகச் சிறந்த நட்சித்திர ஆட்டக்காரராகத்தான் இருப்பார். உலகம் கண்ட காற்பந்து ஆளுமைகளான பேலே, ரோனால்டோ, ரொனல்டினோ, ரொபெர்த்தோ காலர்ஸ் போன்றவர்களை உலகிற்குத் தந்த தேசம் பிரேசில் . சிறுவயது முதல் பிரேசில் காற்பந்து விளையாட்டாளர்களின் படங்களைக் கொண்ட அட்டைகளைச் சேகரித்து வைத்துக்கொள்வது முதல் அவர்களின் படம் கொண்ட ஸ்டிக்கர்களை புத்தகைப் பை, நோட்டுப் புத்தகங்கள், அறைக்கதவு என அனைத்திலும் ஒட்டி வைத்து அழகுப்பார்த்துக்கொள்வது வரை எனக்கும் பிரேசில் காற்பந்து விளையாட்டார்களுக்கும் மிக நீண்ட தொடர்பு இருந்திருக்கிறது.

ரொனால்டோ பிரசிலுக்காக விளையாடிய 1998 ஆம் ஆண்டு தொடங்கி எனக்கு ‘9’ எண் கொண்ட எண் மிகவும் விருப்பத்திற்குரியதாக மாறியிருந்தது. சட்டையில் புத்தகத்தில் வெறும் 9 எண்ணை எழுதிக் கொள்வதன் மூலம் எனது பிரேசிலின் மீதான சிறு ஈடுபாட்டைக் காட்டிக்கொள்வேன். உலகத்தின் அனைத்துவிதமான பிரேசில் நாட்டின் காற்பந்து குழுவின் மீதான கொண்டாட்டமே என்னுடைய ஸ்டிக்கர் சேகரிப்பிலிருந்தும் படங்களின் சேகரிப்பிலிருந்தும் தொடங்குவதாகவே கற்பனை செய்து கொண்டு திரிந்த நாட்கள் உண்டு. ஒரு காலத்தில் காற்பந்தை உதைக்கும்போதெல்லாம் நான் ரொனால்டோவாக மாறியிருப்பேன். எனது கால்கள் தடித்து, வெளுப்பாகி, மயிர் முளைத்துப் பலம் கொள்ளும். ஒன்றின் மீது வரும் அதீதமான விருப்பம் என்னை எப்படியெல்லாம் இழுத்துக் கொண்டு போயிருக்கிறது என்பதற்கான தொடக்கமே ரொனால்டோதான்.

FIFA உலகக் காற்பந்து போட்டியின் வரலாற்றில் அதிகமான வெற்றிகளைக் குவித்து சாதனை படைத்த குழுவாகப் பிரேசில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐந்து முறை உலகக் காற்பந்து கிண்ணத்தை வென்றெடுத்த பிரேசில் முழுக்க முழுக்க காற்பந்தையே சுவாசிக்கும் ஒரு நாடு. அத்துணை வறுமையிலும் சமூக சிதைவிலும் அவர்கள் விடாமல் பிடிமானம் கொண்டிருப்பது திசையறிமால் சுழன்று உலகைக் கடக்க முயலும் அந்த உருண்டையான காற்பந்தின் மீதாகத்தான் இருக்கும். மஞ்சள் சட்டையும் நீல கால்ச்சட்டையும் அணிந்துகொண்டு உலகின் கவனத்தையே ஈர்த்து தனிமனித ஆற்றலையும் வெளிப்படுத்தி உச்சத்தை அடைந்த ஒரே நாடு பிரேசில்.

1958 தொடங்கி 1970 வரை பிரேசில் காற்பந்து விளையாட்டில் தொடர் சாதனைகளைப் படைத்தது மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கியமான குழுவாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்ட காலக்கட்டமாகும். பேலே எனும் மாபெரும் விளையாட்டாளனும் பிரேசிலைப் பிரதிநிதித்து தனக்கான களத்தை உருவாக்கிக்கொண்ட காலமும் அதுதான். இன்றும் உலகக் காற்பந்து கிண்ணப் போட்டியின் போது பிரேசில் இரசிகர்கள், தங்களது முகத்திலும் உடலிலும் பிரேசில் நாட்டுக் கொடியின் சின்னத்தைப் பச்சை குத்திக்கொண்டு பேயாட்டம் ஆடுவதையும், குரலின் கடைசி அதிர்வு சிதறும் வரை கத்துவதையும் பார்க்க முடிகிறது.

பிரேசில் குழு களம் இறங்கும் எல்லாம் போட்டிகளிலும் அவர்களுக்கான இரசிகர்கள் எல்லாம் நாடுகளிலிருந்தும் வந்திருப்பார்கள். தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத பிரேசிலின் மீது இவர்கள் காட்டும் ஆர்வத்திற்குக் காரணமும் காற்பந்துதான். வாழ்க்கை ஒரு சூதாட்டம் என்பதற்கான நடைமுறை உண்மையே இந்தக் காற்பந்து விளையாட்டு என்பதை உலகம் அறிந்து வைத்திருக்கிறது என்றே நினைக்கிறேன். பிரேசில் தோல்வியுறுவதையும் வெற்றியடைவதையும் மீண்டும் கோப்பையை உயர்த்திப் பிடித்து தனது அடைவை உலகத்திற்குக் காட்டுவதையும், தோல்வியுற்று அழுத முகத்துடன் களத்தைவிட்டு வெளியேறுவதையும் சோகமும் மகிழ்ச்சியும் அழுகையும் நிரம்பிய கண்களுடன் உலகம் கவனிக்கத் தவறியதில்லை. பிரேசில் குழுவின் தோல்வி என்பது உலகம் முழுக்கப் பரவியிருக்கும் அதன் பெரும்பான்மை இரசிகர்களின் தோல்வியும்கூட. உலக வரலாற்றில் மறுக்க முடியாத ஒரு இருண்ட வரலாற்றை பிரேசில் கொண்டிருக்கிறது. மேல்தட்டு இனக்குழுக்களின் சர்வதிகாரத்தால் ஒடுக்கப்பட்டு எந்த உரிமையுமின்றி சிதைக்கப்பட்ட சிறுபான்மை இனங்கள் பிரேசிலில் புறநகர் குடியிருப்பை நிரப்பியிருந்தார்கள். வெள்ளம், பசி, வறுமை, சமூகச் சிதைவு என அனைத்துவிதமான துயரங்களுக்கும் ஆளாகி அதையெல்லாம் சகித்துக்கொண்டு வாழ்ந்த பிரேசில் மக்களின் துவண்டுப்போன வாழ்க்கைக்கு புத்தியிர் கொடுத்ததே உலக ரீதியில் அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த காற்பந்து விளையாட்டுக் குழுவிற்குக் கிடைத்த அங்கீகாரமே.

1970க்குப் பிறகு பிரேசிலின் மிக முக்கியமான நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஓய்வு பெறத் தொடங்கியிருந்தனர். குறிப்பாக பேலே 1970இல் பிரேசில் காற்பந்து குழுவிலிருந்து விலகினார். அதன் பிறகு நெதர்லன்ஸ் நாட்டில் 1974ஆம் ஆண்டு நடந்த உலகக் காற்பந்து கிண்ணப் போட்டியில் பிரேசில் முதன் முதலாக தனது உச்சத்தை இழந்து நின்றது. நான்காவது இடத்தை மட்டுமே பெற்று பிரேசில் ஓரங்கட்டப்பட்டது. ஒவ்வொருகாலக்கட்டத்திலும் பிரேசில் வீழ்ச்சியும் எழுச்சியும் என்பது அதன் ஆற்றல் மிகுந்த விளையாட்டார்களின் வருகையாலும் இழப்பாலும் மட்டுமே நிகழ்ந்தது என்றே சொல்லலாம். பேலேவின் இழப்பிற்குப் பிறகு துவண்டுபோன பிரேசில் அணி, ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு நிமிர்ந்து நின்றது.

துரோகமும் கொலையும்

இப்படத்தின் பெரும்பான்மையான பகுதியில் போதைப்பொருள் கடத்தல் எப்படி எதிரிகளையும் துரோகிகளையும் உருவாக்குகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அதிகமான பணம் புழங்கும் இந்தத் தொழிலைக் கைப்பற்ற நினைக்கும் ஒரு சாரார் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். மேலும் வீதி சிறுவர்களாக இருக்கும் பலரும் இளம் குற்றவாளிகளாக மாற இது போன்ற போதைப்பொருள் நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றனர். அந்தத் தொழிலுக்காகவே இறுதியில் Lil dice சிறுவர்களால் கொல்லப்படுகிறான்.

நகரத்தின் கோடியில்கூட இது போன்ற கொலை கும்பலால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் அல்லது வாலிபன் இருக்கவே செய்வான். அவன் இவர்கள் மீது காட்டும் அதிகபட்ச வன்முறையே அவர்களைச் சுட்டுக் கொல்வதுதான். தன் அப்பாவை, அண்ணனை, தம்பியைக் கொன்ற இந்த நகரத்தின் கடவுளர்களைச் சாகடிக்க மட்டுமே அவர்கள் கொண்டு வரப்பட்டனர். City of god வன்முறையை மட்டுமல்ல சுற்றிலும் துரோகத்தையும் விதைத்திருக்கிறது. எளிய மனிதர்கள் அல்லது சமூகக் கட்டமைப்பிலிருந்து துரத்தியடிக்கப்பட்டவர்கள், முன்னேற்றங்களின் எல்லாம் இடங்களிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள இந்தத் துரோகமும் பகைமையும் மட்டுமே ஆதாரச் சக்தியாக இருக்கின்றன. ஒட்டுமொத்த நகர் வளர்ச்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களான ‘city of god’-இல் வாழக்கூடிய சிறுவர்கள் இளைஞர்கள் தனது அதிகாரத்தையும் ஆண்டான்தனத்தையும் தனது சமூகத்தின் எல்லைக்குள்ளே விரித்துப் பார்த்ததன் விளைவாக முளைத்து வேர்விட்டதுதான் இந்தப் பழித் தீர்க்கும் உணர்வும் துரோகமும். துரோகம் சல்லி வேர்கள் போல ‘city of god’மனிதர்கள், சிறுவர்கள், என அனைவரின் மனதிலும் அடர்ந்திருக்கின்றன. அதை அவர்கள் பிரயோகப்படுத்துவதும் பிறர் மீது செலுத்துவதும் பிரேசில் அடித்தட்டு மக்களுக்குள் உருவாகிவிட்ட உள்முரண்/உள்பகைகளின் உக்கிரத்தைக் காட்டுகிறது. துப்பாக்கியையும் போதைப்பொருள் கடத்தலையும் காற்பந்தையும் மட்டுமே சுவாசிக்கப் போகும் ஓர் உயிர் இன்றிரவு ‘city of god’-இல் பிறக்கக்கூடும்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768