|
|
"என்னைப் பொருத்தவரை நாம் நேர்மையாக இருத்தல்
வேண்டும். இந்நாட்டில் லஞ்சம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது முற்றாக
அழிக்கப்பட வேண்டும். தேர்தலில் பணம் நுழையும் போது அது ஆரோக்கியமற்ற சூழலை
உருவாக்குகிறது. பணமிருப்பவனை அதிகாரமிக்கவனாக காட்டுகிறது. ஆனால்,
ஜனநாயகமும், சுதந்திரமும் எல்லாருக்கும் பொதுவானதாகும்"
-தேசிய இலக்கியவாதி சமாட் சைட்-
சமாட் சைட். மலாய் கவிஞர். மலேசிய தேசிய
இலக்கியவாதிகளுள் ஒருவர். அண்மையில் மலேசியாவில் பொதுத்தேர்தல் நடைமுறை
நேர்மையாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி
மேற்கொள்ளப்பட்ட அமைதிப்பேரணியில் (பெர்சே 2.0 - Bersih 2.0) தனது
வயோதிகத்தையும் பொருட்படுத்தாமல் முழுமையாக தன்னை இணைத்துக்கொண்டு
போலிசாரின் நெருக்குதலுக்கு உள்ளானவர். வல்லினம் வாசகர்களுக்காக அவருடைய
நேர்காணல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இங்கு வெளியிடப்படுகிறது.
கே: பொது இடத்தில் கவிதை வாசித்ததற்காகப்
போலிசார் உங்களை விசாரணைக்காக மாவட்ட காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்தது
பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: அந்த விசாரணையில் நான் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. என்னைப்
பிரநிதித்தது எனது இரு வழக்கறிஞர்கள்தான். நான் போலிசாரிடம் எனது பதில்களை
நீதிமன்றத்தில் கூறுவதாகச் சொல்லிவிட்டேன்.
கே: பாக் சமாட், கவிதை வாசிப்பது எவ்வாறு தேச நிந்தனை சட்டத்தின்
கீழ் குற்றமாகும்?
ப: அதுதான் எனக்கும் தெரியவில்லை. ஒருவேளை எனது கவிதையின் சாராம்சம்
பாதிப்பை ஏற்படுத்தலாம் அல்லது தற்சமயம் கொதித்துக்கொண்டிருக்கும் சூழலை
கொந்தளிக்க வைத்துவிடலாம் என எண்ணியிருக்ககூடும்.
கே: தகவல் சாதனங்கள் எழுப்பும் கேள்விகளில் தாங்கள் இந்தக் கவிதையை
வாசித்தற்காக பணம் வாங்கியிருக்கிறீர்களா என கேட்கப்படுவது குறித்து?
ப: அத்தகைய கேள்வியைப்பற்றி எனக்கு நினைவில்லை. ஆனால் சிலபேர் பணத்திற்காக
தான் நான் இவ்வாறு செயல் பட்டேனா என வினவியதுண்டு. இதனை ஒரு புனித
போராட்டமாக நான் நம்புவதால்தான் அந்த கவிதையை எழுதினேன். இந்தப் பேரணியை
ஆதரிக்க வேண்டும் என நான் நினைத்ததும் ஒரு காரணமாகும். நான் ஒரு கவிஞன்
என்பதால் கவிதை வடிக்கிறேன். யாரும் சொல்லியோ அல்லது பணம் கொடுத்தோ நான்
கவிதை எழுதவில்லை. பணம் கொடுத்ததால்தான் எழுதினேனா என வினவுவது
இழிவுபடுத்துவதாக உள்ளது.
கே: பாக் சமாட், நீங்கள் 50-ஆம் ஆண்டு தொடங்கி உங்கள் எழுத்துக்களை
இந்த சமுதாயத்திற்காகப் படைத்து வருகிறீர்கள். கலை சமுதாயத்தின் சிந்தனையை
வளர்க்கிறது. ஆனால் நாட்டின் இன்றைய சூழ்நிலை அத்தகைய இலக்கிய
சிந்தனைகளுக்கு நெருக்குதல் அளிக்கிறதா?
ப: நான் ஐம்பது, ஐம்பத்து நான்காம் ஆண்டு தொடங்கி எழுதுகிறேன். அந்தக்
காலகட்டம் தொடங்கி இன்றுவரை என்னுடைய பல கவிதைகள் சமுதாயத்தில் தொடர்ந்து
நடக்கின்ற நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றன. சுதந்திரதிற்கு முன்பான எனது
கவிதைகள் சுதந்திர போரட்டத்தினை வலியுறுத்துவதாக அமைந்தன. சுதந்திரத்திற்கு
பிறகு எனது கவிதைகள் அந்த சுதந்திரத்தை நிரப்புவதற்கான கேள்விகளாக அமைந்தன.
என்னுடைய பல கவிதைகள் தேசிய மொழியை நிலைநிறுத்தும் போராட்டத்தில்
பங்காற்றியுள்ளன. ஆனால் நான் கடைசியாக எழுதிய கவிதைதான் இந்தளவு
சர்ச்சைக்குறியதாகியுள்ளது. ஒரு வேளை தற்கால அரசியல் சூழ்நிலை மிகவும்
மோசமடைந்ததுள்ளது அதற்கு காரணமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை ஓர்
இலக்கியவாதி கண்டிப்பாக தனது மனப்பாங்கினை வெளிப்படுத்த வேண்டும் என்றே
கருதுகிறேன்.
கே: ஐம்பதாம் ஆண்டுகளில் இது போன்ற நெருக்கடியான சூழ்நிலைகள்
இருந்ததுண்டா?
ப: நிகழ்கால சூழல்தான் மிகவும் மோசமானதென்று நினைக்கிறேன். முன்பு
சுதந்திரத்திற்காகப் போராடினோம். நாட்டில் ஒற்றுமையை நிலைநாட்ட மொழி பெரும்
பங்காற்றும் என நம்பினோம். ஆனால் இப்போது அப்படியல்ல. நாட்டின் சட்ட
திட்டங்கள் மாறுபட்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஏழு பேரை கைது செய்ய
என்பது போலீஸ்காரர்கள் குவிக்கப்படுகிறார்கள். உண்மையில் இவையனைத்தும்
மற்றவர்களை அச்சுறுத்தவேயாகும். நமது நாடு நாளுக்கு நாள் போலீஸாரின்
ஆதிக்கத்தை நோக்கி போய்கொண்டு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான விஷயமாகும்.
கே: இவ்வாறான நிலையில் கலைஞர்களின் பங்கு என்ன?
ப: இலக்கியவாதிகள் நடக்கின்ற எல்லாவற்றையும் பதிவு செய்திட வேண்டும். பதிவு
செய்வதோடு நின்று விடாமல் தன்னுடைய மனப்பாங்கினையும் வெளிப்படுத்த
வேண்டும். சில நாட்களுக்கு முன்பு கமிலா என்ற புதிய இலக்கியவாதி நான்
எனக்கு கிடைத்த அங்கீகாரத்தை கொண்டு மக்களை பிளவு படுத்த முயல்வதாக குற்றம்
சாற்றியிருந்தார். அது ஒரு வளமான கற்பனையாகவே நான் கருதுகிறேன். காரணம் என்
வாழ் நாளில் இது வரையிலும் நான் இனதுவேஷமான கருத்துக்களை வெளியிட்டதில்லை.
நான் மக்களின் ஒற்றுமையை விரும்புபவன். ஒரு பக்கம் நமது பிரதமர் 1மலேசியா
கொள்கை குறித்து முழக்கமிடும் அதே வேளையில் மலாய்காரர்களுக்கு ஆபத்து என
அம்னோ ஆதரவாளர்கள் எச்சரிக்கின்றார்கள். நாட்டில் கம்யூனிசம் உருவாவதாகவும்
இதனால் மலாய்காரர்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பதைப் போன்ற
தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். பிரதமர் 1மலேசியா என்கிறார் ஆனால் அவரின்
ஆதரவாளர்கள் மலாய்கார்களுக்கு ஆபத்து என்கின்றனர். ஓன்று உண்மையான மலேசியன்
மற்றொன்று மலாய் இனவாதம்.
கே: ஒரு கலைஞன் யார் பக்கம் நிற்க வேண்டும், யாரை பின் பற்ற
வேண்டும்?
ப: ஒர் இலக்கியவாதி உண்மைக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய
எண்ணம். ஆனால் அது அத்துணைச் சுலபமல்ல. இலக்கியவாதி அரசாங்க தொடர்பாளனாக
செயல் பட கூடாது. கலைஞர்களுக்கிடையே இது பிளவை ஏற்படுத்திவிடும்.
கே: எழுத்தாளர் சங்கத்தைப் பற்றி?
ப: இந்நாட்டில் எழுத்தாளர் சங்கங்கள் மௌனித்து போய் இருப்பதைக் கண்டு நான்
வருத்தப் படுகிறேன். மௌனம் சம்மதம் என்பார்கள். நான் அரசாங்கத்தை முழுமையாக
குற்றம் சாற்றவில்லை. ஆனால் தவறான பாதையை நோக்கி பயணிப்பதைதான் நான்
எதிர்க்கிறேன்.
கே: தாங்கள் பி.பி.எஸ்.எம்.ஐ எனப்படும் கணிதமும் அறிவியலும்
ஆங்கிலத்தில் கற்றல் கற்பித்தல் திட்டதிற்கு ஆதரவு வழங்கிய பிறகுதான்
பலரும் உங்களைப் பின் பற்றி தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். இப்போது நீங்கள்
பெர்சேவிற்கு ஆதரவு தெரிவித்திருப்பதினால் அதே நிலமை மீண்டும்
தலைதூக்கிவிடும் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு வந்திருக்குமோ?
ப: உண்மையில் நான் எவ்வளவு வலிமை மிக்கவன் என்பது எனக்கு தெரியாது. ஒருவேளை
எனது பங்களிப்பு அவர்களுக்கு ஒரு கலைஞனின் கடமை வெறுமனே படைப்புகளை
படைப்பது மட்டுமல்ல என்பதனை உணர்த்தியிருக்க கூடும். அறிவார்ந்த,
தெளிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதும் ஓர் இலக்கியவாதியின் கடமைதான்.
இன்னும் சொல்லப் போனால் இப்பொழுது பெருகி வரும் கொடுமைகளைக் காணும்போது
இலக்கியவாதிகள் தங்களுடைய கடமையை உணர வேண்டும்.
கே: பாக் சமாட், உங்கள் கண்ணோட்டத்தில் பெர்சேவால் என்ன
சாதித்துவிட முடியும்?
ப: பெர்சேவிற்கு நோக்கமுண்டு. ஜனநாயக சீர்திருத்தங்களை அது கோருகிறது.
அவர்களின் போராட்டம் புனிதமானது. அதற்கு ஆதரவளிக்க வேண்டும் மாறாக எதிர்க்க
கூடாது. மதிப்பளிக்க வேண்டும் கண்டனம் தெரிவிக்க கூடாது.
கே: பாக் சமாட், இந்நாட்டில் நீங்கள் எவ்வாறான ஜனநாயக சூழலை
எதிர்ப்பார்க்கிறிர்கள்?
ப: என்னைப் பொருத்தவரை எல்லாருமே நேர்மையாக இருத்தல் வேண்டும். இந்நாட்டில்
லஞ்சம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் அல்லது முற்றாக அழிக்கப்பட வேண்டும்.
தேர்தலில் பணம் நுழையும் போது அது ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்குகிறது.
பணமிருப்பவனை அதிகாரமிக்கவனாக காட்டுகிறது. ஆனால், ஜனநாயகமும்,சுதந்திரமும்
எல்லாருக்கும் பொதுவானதாகும்.
கே: இளையோர்களைப் பற்றி உங்களின் மதிப்பீடு என்ன?
ப: இப்போது உள்ள இளைய தலைமுறையினர் அரசியல் அதிகாரம் ஒரு சாராரிடமே உள்ளது
குறித்து விழிப்படைந்துள்ளனர். இப்போதைக்கு இவர்களில் சிலர் தைரியசாலிகளாக
இருக்கலாம் சிலர் அஞ்சலாம் ஆனால் நேரம் வரும் போது இவர்கள் அனைவரும் ஒன்றாக
புதிய எழுச்சியை ஏற்படுத்துவார்கள். அச்சமயம் விளைவுகள் மோசமானதாக
இருக்கும்.
கே: இலக்கிய உலகில் இளைய தலைமுறையினர் புதிய எழுச்சியை
ஏற்படுத்தியுள்ளனரா?
ப: இருக்கிறது. ஆனால் தகவல் ஊடகங்கள் அவற்றை அனுமதிப்பதில்லை. முக்கியமாக
அரசாங்க தகவல் ஊடகங்கள் தங்களின் அதிகாரத்தை கொண்டு இத்தகைய புரட்சிகரமான
படைப்புகளை தடுக்க மும்முரம் காட்டுகின்றன. நம்மிடம் இப்போதைக்கு
ஹராக்காவும், சுவாரா கெஅடிலானும் மட்டுமே உள்ளன ஆனாலும் அவற்றிக்கும்
எதிர்ப்பு கிளம்பிய வண்ணம் இருக்கிறது.
நன்றி : ஹராக்கா
மலாய் மூலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு : கவிதா ஜெகதிசன்
|
|