|
|
சு.ரா-வைத் தேடி...
நாகர்கோவில் போனால் சுந்தர ராமசாமியைப் பார்க்கலாம் என்று திலீப்குமார்
கூறிய பிறகுதான் சு. ராவைப் பார்க்கலாம் என்று உறுதியாக முடிவெடுத்தோம்.
தமிழ் நாட்டுப் பயணத்தில் இலக்கியத் தேடல் எதுவும் பெரிதாக இல்லைதான்.
ஆயினும் சில படைப்பாளிகளையாவது பார்த்துவரவேண்டும் என்ற அவா இருந்தது.
நக்கீரன் இந்த ஆவலை பெரிதும் தூண்டிவிட்டவர்.
தஞ்சை பெரிய கோவிலை ஒரு மாலைப் பொழுதில் அடையும்படி பயண நிரலை
அமைத்துக்கொண்டதும் இந்த ஆர்வம் காரணமாகத்தான். திடீரென சில பல
எழுத்தாளர்கள் அங்கு கூடுவதுண்டு என்று எங்களுக்கு ஒரு 'build-up'
கொடுத்ததும் அவர்தான். ஆனால் நாங்கள் அங்குப் போனபோது அப்படி ஒரு சந்திப்பு
நடைபெறவில்லை. நல்லதுதான்; கோயிலை திருப்தியாக பார்க்க வாய்ப்பாயிற்று.
தவிர, தமிழ்மாறன் மட்டும்தான் இந்தச் சமாச்சாரங்களில் ஆர்வம் காட்டினார்.
ஆதலால், சு.ராவை சந்திப்பதென்பது ஒரு `மறைமுகமான` ஏற்பாடுதான். மற்ற
நண்பர்களின் பயண இன்பத்தை பணையம் வைப்பதோ, இடையூரான காரியங்களில்
ஈடுபடுவதோ, பட்டியலில் இல்லாத இடங்களை சுயவிருப்பதின் பேரில்
இடைச்செறுகுவதோ கூடாதென்பது எங்கள் பயணவிதிகளில் ஒன்று. அப்படி ஏதாவது
`கேப்பில்-கிடா-வெட்டும்` சங்கதி இருப்பின் சொந்தமாக ஏற்பாடு
செய்துகொள்ளலாம்.
ஒரு குழுவாகப் பயணம் செய்யும் போது இத்தகைய கட்டுப்பாடுகளை ஆரம்பத்திலேயே
ஏற்படுத்திக்கொள்வது பல பின் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். தங்குமிடம்,
போக்குவரத்து இவற்றுடன் பொதுவான கட்டணங்கள் சிலவற்றை மட்டும்
பகிர்ந்துகொண்டோம். உணவு சொந்த விருப்பம். நண்பர்களுக்குத் தலையில் 'மொய்'
வைப்பதைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். 35 நாட்கள் பயணத்தைப்
பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு இப்படியான முன்னெச்சரிக்கையும்,
`உடன்படிக்கைகளும்` அவசியம்தான். குழு பயணங்களில் சில தடாலடியான
முடிவுகளையும் சமயங்களில் எடுக்கவேண்டியிருக்கும். அப்படியான
'donkey-job'-ஐ செய்யவும் குழுவில் ஒருவர் அவசியம். எனக்கு பல சமயங்களில்
இந்தப் `பாத்திரம்` கிடைத்தது. மற்றவர்களுக்குக் கடுப்பாகத்தான் இருக்கும்.
என்ன செய்வது... பயணம் தொடரணுமே! எங்கள் குழுவின் பணப் பட்டுவாடாவையும்
நான்தான் கவனித்துக்கொண்டேன்.
`தமிழ் நாட்டுத் தண்ணிய குடிச்சா அப்பவே ஜன்னி கண்டு கதை முடுஞ்சிடும்`
என்ற கணக்கா அறிவுரைகளை மண்டையில் நிரப்பியிருந்ததால் அகுவா ஃபீனா அல்லது
பிஸ்லேரிதான் எங்களின் குடி நீர். செல்லும் வழியில் லாரிகளை நிறுத்தி
'பிளேக்கில்' நீர் வாங்கியதும் உண்டு. பொது / கம்பெனி கணக்கில் ஒரு
நாளைக்கு 2 லிட்டர் / ஒருவருக்கு. வண்டியில் 'air-con' போட்டா ஒரு கட்டணம்,
இல்லையென்றால் கொஞ்சம் மலிவு. கேரளாவில் பயணம் போகையில் உணவு என்பது 'ஒரு
கடி, ஒரு குடி' என்றளவில் சுருக்கினேன். ('பன்'-ஐ ஒரு கடி கடித்துக்
கொண்டு, ஒரு மிடறு சாயாவை குடிப்பதைதான் எங்கள் டிரைவர் இப்படிக் கூறினார்)
இப்படி `அங்கப் பிடிச்சி, இங்கப் பிடிச்சிதான் செலவை ஈடுகட்டினோம். ஆனால்
மனம் முழுக்க மகிழ்ச்சிதான் ஆக்கிரமித்திருந்தது.'
(நான் ரொம்ப நாளாகப் பொத்திப் பாதுகாத்து வந்த பயணக்குறிப்பைக் காணவில்லை.
ரொம்ப நாளாகவே என் வாசிப்பு அறையின் உள்ளே வந்தாலே மனைவிக்கு இருதயத்
துடிப்பு அதிகரித்துவிடுகிறது. என்னுடைய 'முறையற்ற முறை' பற்றி அவர்களுக்கு
எவ்வளவுதான் விளக்குவது! அவரைப் பொருத்தவரை என் அறையில் மொத்தமும்
மறுபயனீட்டுக்குப் போகவேண்டியவைதான். ஏதோ இணையதில் கொஞ்சம் எழுதுவதாலும்,
சில பல எழுத்தாள நண்பர்களின் தொடர்பு இருப்பதாலும், கொஞ்சம் என்னைப்
பொறுத்துக்கொள்கிறார்கள்! மனைவிக்குத் தமிழ் 'தெமெல்' அளவுதான் என்பதால்
நானும் கொஞ்சம் 'ஓவரான பில்டப்' கொடுத்து ஒப்பேத்துகிறேன். இப்பப் பார்த்து
இந்தக் குறிப்பைக் காணவில்லை. ஜே.ஜே.சில குறிப்புகளை விட முக்கியமானது.
சரி, முடிஞ்ச வரை நினைவில் இருப்பதை மீட்டு எழுதுகிறேன்.)
எப்படியோ, நாகர்கோவிலுக்கு வந்துசேர்ந்தோம். அங்கே 'பாடையின் கீழ்
பதுங்கிபோகும் நாயொன்றையும் நான் காணவில்லை. வாய் கொழுத்து வம்பை விலைக்கு
வாங்கிய டிரைவரை உதைக்கத்தான் ஒரு ஆள் எங்கள் Tata Sumo-வை துரத்தி
வந்தான். தப்பிப் பிழைத்து மீண்டோம். காலச்சுவடைத் தேடித் தேடி கடைசியில்
சுவரில் காலச்சுவடு படம் போடப்பட்டிருந்ததைப் பார்த்து ஒரு வீட்டின் முன்
காரை நிறுத்தினோம். வணக்கம் சொல்லி விஷயத்தைச் சொன்னோம்; உள்ளே இருந்து
நெடு நெடுன்னு ஒருத்தர் வெளியே வந்தார்.
சுந்தர ராமசாமிதான்!
First impression? பக்கத்து வீட்டு தாத்தா போலத்தான் இருந்தார். பச்சை நிற
டி-சட்டை அணிந்திருந்ததாக நினைவு. 'வாங்க' என்றார். போனோம். பேரையும்,
ஊரையும் கேட்டார். சொன்னோம். (தமிழ் மாறனும், நானும்தான். மற்ற நண்பர்கள்
வீட்டை நோட்டமிட்டுக் கொண்டு மற்ற கதைகளில் மூழ்கிவிட்டனர்.)
வந்த விஷயத்தைக் கேட்டார். காலச்சுவடு பதிப்பகத்தில் புத்தகம் வாங்க வந்த
விஷயத்தைச் சொன்னோம். அன்று ஞாயிறு. அடைப்பு.
'இவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு உதவ
முடியாததற்கு வருந்துகிறேன்'
அவரிடமிருந்த ஒரு புளிய மரத்தின் கதையை கையொப்பமிட்டுக் கொடுத்தார். புத்தக
விலைக்குரிய பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டார். கொஞ்ச நேரம் பேசினோம்.
அவ்வளவுதான்.
ஒரு புளிய மரத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
|
|