|
|
Up : காதலின் சாகசம்
ஒரு தற்கொலை ஏன் நிகழ்கிறது? நம்மில் சிலர் ஏன் சதா
எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க விரும்புகிறோம்? குடும்ப மாதர்களுள்
பலர் ஏன் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கி கிடக்கின்றனர்? தோற்றுப் போனக்
காதலை ஏன் ஓர் இளைஞன் கவிதைகளில் எழுதி தீர்க்கிறான்? இந்தச்
செயல்களுக்கெல்லாம் மேலோட்டமாய் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இவை
அனைத்துக்கும் ஆதாரமாய் ஒரு தூண்டுதல் இருப்பதாய் மனோவியல் கூறுகின்றது.
‘Escapism’ அதாவது ‘தப்பித்தல் மனோபாவம்’ என்பது ஒரு மனிதன் நிதர்சனத்தை
ஏற்க முடியாமல் போகும்போது அதனிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேறு ஒரு
விசயத்தில் தன் கவனத்தைத் திசை திருப்ப எத்தனிக்கும் செயலாகும். ஒரு
பிரச்சனையைச் சந்திக்கும்போது மனிதர்கள் மூன்று விதமான எதிர்வினையை அல்லது
துளங்குதலை வெளிப்படுத்துவதாக Walter Bradford Cannon என்ற அமெரிக்க
உளவியல் நிபுணர் கூறியுள்ளார். இதனை அவர் fight-or-flight-or-freeze
response என அழைக்கிறார். அதாவது ஒரு பிரச்சனையை எதிர்த்துப் போராடுதல்,
பகிரங்கமாகக் கோபத்தை வெளிப்படுத்துதல் என்பது முதலாவது எதிர்வினை (fight);
அந்தப் பிரச்சனையை விட்டு தப்பித்து வேறோரு செயல்பாடுகளுக்குத் தாவுதல்
இரண்டாம் வகை (flight), அந்தப் பிரச்சனைக்கு உடன்பட்டோ எதிராகவோ எந்தச்
செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாமல் இறுகிப்போய் இருத்தல் மூன்றாவது வகை
எதிர்வினையாகும் (freeze).
இதில் தப்பித்தல் என்பதே மிக சாதரணமாகப் பலராலும் வெளிப்படுத்தப்படும்
எதிர்வினை அல்லது மனோபாவம். இந்த மனோபாவத்தின் அளவு ஆளுக்கு ஆள் மாறுபடுமே
தவிர நம் அனைவருக்குமே இத்தகைய மனநிலை வாய்த்திருக்கின்றது என்பதே உண்மை.
இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொரு மனிதனும் ஒரு மனநோயாளிதான் ஆனால், நோயின்
தீவிரத்தன்மை குறைந்து காணப்படுவதால் நாம் இன்னும் நம் உண்மை நிலையை
ஒளித்துக் கொண்டிருக்க முடிகிறது.
தப்பித்தல் மனோபாவம் நம்மை முடக்கவும் செய்யும்; முடுக்கவும் செய்யும்.
ஒருவன் தன்னைச் சுற்றி உள்ளவரோடு நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளத் தவறும்
போதும், அவனின் சுயம் கேள்விக்குட்படுத்தப்படும்போதும், அவன் குற்ற
உணர்வால் நிறையும் போதும், ஒரு தருணத்தில் அவன் இருப்பு அர்த்தமற்றுப்
போவதாய் உணரும்போதும் அவன் அந்தச் சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக்
கொள்ள போதைப்பொருள், குடிப்பழக்கம் மற்றும் இன்னப் பிற பழக்கங்களில் தன்னை
ஈடுபடுத்தித் தனக்கான சவக்குழியைத் தானே தோண்டிக் கொள்கிறான். இதற்கு மாறாக
ஓர் ஓவியனின் தப்பித்தல் முயற்சி உயர்ந்த கலையை உருவாக்குகிறது; ஒரு
கவிஞனின் தப்பித்தல் காவியமாக உருவாகின்றது.
Pixar நிறுவனம் தயாரித்து Walt Disney வெளியிட்ட ‘Up’ என்னும் திரைப்படம்
இந்தத் தப்பித்தல் மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இது
3D Computer Generated Imagery (CGI) தொழிற்நுட்பத்தைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட முழுநீல சிறப்புப் பண்பியலுடைய இயக்கவூட்டத் திரைப்படம்
(Full Length Feature Animated Film) ஆகும். 3 Dimensions என்பது 3
பரிமாணங்களைக் குறிக்கிறது. ஒரு பொருள், நீளம், அகலம் மற்றும் உயரம் என
மூன்று அளவுகளைக் கொள்ளும்போது அது 3 பரிமாணங்களைப் (3D) பெருகின்றது.
இந்தப் பரிமாண வேறுபாட்டை இன்னும் எளிமையாக இப்படியும் புரிந்து கொள்ளலாம்.
ஓர் ஆப்பிள் கற்பனையில் இருக்கும்போது அது ஒற்றைப் பரிமாணத்தை அடைகிறது.
அந்த ஆப்பிள் ஒரு தாளில் வரையப்படும்போது அது 2 பரிமாணங்களை அடைகிறது.
அதுவே நிஜமாய் ஓர் ஆப்பிளைக் கையில் பிடித்துக் கொள்ளுகையில் அது மூன்று
பரிமாணங்கள் உடையதாய் இருக்கிறது. நமக்குச் சமமான அல்லது அதற்கும் குறைவான
பரிமாணங்களை நம் கண்களால் காண முடிகிறது. நம்மைவிட அதிக பரிமாணங்கள் உடைய
பொருள்கள் இருப்பின் அதை நம்மால் காணமுடியாது என்கிறது அறிவியல்.
அதனால்தான் அடுத்த கணத்திற்கான இரகசியங்களைக் காக்கும் 4 பரிமாணங்கள் கொண்ட
காலமானது, நம் கண்களுக்குத் தெரியாத மர்மங்களை உள்ளடக்கியப்படியே
நகர்கின்கிறது.
நம் கையில் பிடித்திருக்கும் ஆப்பிள் நம் கண்களுக்கு எவ்விதமாய்
தோன்றுகின்றதோ அது போலவே திரையில் உள்ள பொருள்கள் நமக்கு மிக அணுக்கமாய்
இருப்பது போல் ஒரு மாயத்தோற்றத்தை (illusion) 3D CGI இயக்கவூட்டத்
தொழிற்நுட்பம் உருவாக்குகின்றது. இது, சூரியக் குடும்பத்தில் சுற்றிவரும்
ஒரு முரண்கோள் (Asteroid) திரையில் வெடித்துச் சிதறும் போது அதன் துகள்கள்
நம் மடியில் விழுந்திடுமோ என்ற உணர்வைத் தரக்கூடும்; மழையில் நனைந்த பேசும்
ரோஜா திரையில் தலையசைக்கும் போது அதன் நீர் தெரிப்புகள் நம் முகத்திலும்
பட்டுவிடுமோ என நம்மை எட்டி நிற்கச் செய்யும். இதுபோன்ற 3 பரிமாண
உருவங்களையும் படக்காட்சிகளையும் உருவாக்க அதற்கான மென்பொருள் (software)
பயன்படுத்தப்படுகிறது. இந்த மென்பொருள் கணினியால் உருவாக்கப்பட்ட பொருளின்
தோற்றத்தில் நீள அகல உயரத்தின் ஆற்றலை (depth perception)
அடர்த்தியாக்குகின்றது. மேலும் இவ்வகை இயக்கவூட்டத் திரைப்படங்களைத்
திரையரங்குகளில் காணும்போது ‘Polarized 3D Glasses’ எனும் சிறப்பு மூக்குக்
கண்ணாடியைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். இந்த மூக்குக் கண்ணாடி, அதன்
சிறப்புத் தன்மையினால் ஒளிக்கதிர்களை ஏற்றவாறு சீர்ப்படுத்தி நம்
கண்களுக்கு முழுமையான 3 பரிமாண அனுபவத்தைத் தரவல்லது.
2009 ஆம் ஆண்டு Up என்ற இந்த இயக்கவூட்டத் திரைப்படத்தைத் திரையரங்கில்
பார்க்கும் ஒரு வாய்ப்பில் மேற்கூறிய அனைத்தையும் என்னால் அனுபவிக்க
முடிந்தது.
இயக்குனர் Pete docter பறக்கும் வீடு ஒன்றைத் தப்பித்தல் மனோபாவத்தின்
குறியீடாக இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும்
உடன் இருந்து, காதல் தந்து, இன்பத் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட மனைவியை
இழந்த ஒரு வயோதிகரின் தனிமையை எதைக் கொண்டும் ஈடுகட்டவோ சரிசெய்யவோ
முடிவதில்லை. இந்தக் கதையின் நாயகன் கார்ல் (Carl Fredricksen) என்ற
வயோதிகரும் இத்தகையதொரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். உலகத்தினிலிருந்து
தன் அத்தனை உறவுகளையும் தொடர்புகளையும் அவர் துண்டித்துக் கொள்கிறார்.
இருவர் வாழ்ந்த வீட்டில் ஒருவர் மட்டுமே உண்டு உறங்கி பின் விழித்து
வாழ்க்கையை வெறுமையாய் கடத்துகிறார். வெறுமையில் அந்தப் பெரியவர் இப்படியே
முடங்கி கிடக்க, அவரைச் சுற்றி ஒரு நகரம் வளர்ந்திருந்தது. நகரத்தின் துரித
வளர்ச்சியாலும், மனிதம் சரிவுற்ற மனிதர்களாலும் பெரும்
தொந்தரவுக்குள்ளாக்கப்படும் அவர், தான் வாழும் சூழ்நிலையிலிருந்து தப்பிக்க
நினைக்கிறார். இதன் உச்சக்கட்ட வெளிபாடாய் ஒருநாள் நூற்றுக்கணக்கான helium
பலூன்களின் துணையுடன் தன் வீட்டைப் பெயர்த்தெடுத்து வீட்டோடு
பறந்துவிடுகிறார். ஆனால் கார்லின் இந்தத் தப்பித்தலுக்கு ஒரு நோக்கம்
இருந்தது.
சிறுவனாக இருக்கும்போது கார்ல் ஓர் ஆராய்ச்சியாளனாய் ஆவதை இலட்சியமாகக்
கொண்டிருந்தார். மன்ஸ் (Charles F. Muntz) என்ற ஆராய்ச்சியாளர் தன்
கண்டுபிடிப்புகளாலும், சாகசங்கள் நிறைந்த தன் ஆய்வுப் பயணங்களாலும்
கார்லின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்து இருந்தார். மன்ஸின் துணிகரச்
செயல்பாடுகளைப் பார்த்துக் கார்ல் பெரிதும் வியக்கிறான். இப்படி
இருக்கையில் ஒரு நாள், தென் அமெரிக்காவில் இருப்பதாய் கூறப்படும் ‘Paradise
Falls’ என்ற இடத்திற்குச் பயணம் மேற்கொண்டு திரும்பிய மன்ஸ் ஒரு ராட்சசப்
பறவையின் எலும்புக் கூட்டை உடன் கொண்டு வருகிறார். தனது கண்டுபிடிப்பைப்
பிற ஆராய்ச்சியாளர்களுக்குக் காண்பிக்கும் ஒரு நிகழ்வில் அந்த எலும்புக்
கூடு போலியானதென குற்றம்சாட்டப்பட்டு மன்ஸ் தனது சிறந்த ஆய்வாளருக்கானப்
பதக்கத்தை இழக்க நேரிடுகிறது. இதனால் அவமானம் அடையும் மன்ஸ் தனக்கு ஏற்பட்ட
கலங்கத்தைத் துடைக்க எண்ணி, அந்த ராட்சசப் பறவையை நேரில் கொண்டு வர
மீண்டும் தென் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பறவை
கிடைக்காத பட்சத்தில் அவர் திரும்பப் போவதில்லை என்று சபதம் எடுத்துக்
கொண்டு தன் பிரமாண்ட வான்கலத்தில் பயணப்படுகிறார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் சிறுவன் கார்ல், மன்ஸின் மீது தான்
கொண்டுள்ள பற்றினைக் குறைத்துக் கொள்ளவில்லை. மாறாக தானும் மன்ஸைப் போல்
துணிச்சலான ஆய்வாளராகும் கனவுக்கு மேலும் மேலும் வலு சேர்த்துக்
கொண்டிருந்தான். இப்படி ஒரு காலக்கட்டத்தில்தான் கார்ல் தனது மனைவி
எல்லியைச் (Elizabeth Docter) சந்திக்கிறான். எல்லி மிகவும் துடுக்கான
சிறுமியாக இருக்கிறாள். அவளும் கார்லைப் போல் அறிவியலிலும்
ஆய்வுப்பயணங்களிலும் ஆர்வம் கொண்டவளாய் இருக்கிறாள். மேலும் எல்லியும்
ஆய்வாளர் மன்ஸ் மீது பற்றுடையவளாய் இருக்கிறாள். கார்லின் சட்டைப்பையின்
மேல் தானே தக்கையால் உருவாக்கியிருந்த ஆய்வாளர் பதக்கத்தைக் குத்தி
விடுகிறாள். அந்தக் கணமே கார்ல் எல்லியிடம் மனதை இழக்கிறான். ஒரு முறை, ஓர்
இரவில் சிறுமி எல்லி, ஜன்னல் வழியாக கார்லின் படுக்கையறைக்குள்
குதிக்கிறாள். அவள் கையில் தன் கனவுகளை எல்லாம் குறித்து வைத்திருந்த ஒரு
புத்தகத்தை வைத்திருக்கிறாள். எல்லியும் ஆய்வாளர் மன்ஸ் தற்போது இருக்கும்
‘Paradise falls’ என்னும் இடத்திற்குச் சென்று அங்கே கற்மலை நீரூற்றின்
அருகே ஒரு வீடு கட்டி ஒரு நாளேனும் வாழ ஆசைப்படுகிறாள். அந்தக் கனவுப்
புத்தகத்தில் ‘Paradise falls’ இன் படத்தை ஒட்டியப் பிறகு அதற்கு அடுத்ததாக
உள்ள மற்றப் பக்கங்களைக் காலியாக விட்டிருக்கிறாள். அவளின் இந்தச் செயலை
வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்லிடம், ‘Paradise falls’ க்குச்
சென்ற பிறகு, தான் செய்யவிருக்கும் சாகசங்களையும் அதன் தொடர்பான
அனுபவங்களையும் குறித்து வைப்பதற்காகவே அப்பக்கங்களைக் காலியாக
விட்டிருப்பதாகக் கூறுகிறாள் எல்லி.
கார்ல் எல்லியின் கனவுகளை நிறைவேற்றுவதாக வாக்குக் கொடுக்கிறான். இதன்
விளைவாகத்தான் பின்னாளில் வயோதிகர் கார்ல் தனது வீட்டைப் பெயர்த்தெடுத்துத்
தென் அமெரிக்காவை நோக்கி பறக்கிறார்.
சிறுவன் கார்லும் சிறுமி எல்லியும் வளர்ந்து இளைஞர்களாகின்றனர் இருவரும்
திருமணம் செய்து கொள்கின்றனர். கார்ல் ஒரு பலூன் வியாபாரியாகவும், எல்லி
ஒரு விலங்ககத்தின் உதவியாளராகவும் பணிபுரிகின்றனர். ‘Paradise falls’
க்குச் செல்ல இருவரும் சிறுக சிறுக பணம் சேர்த்து வைக்கின்றனர். எனினும்,
ஒவ்வொரு முறை உண்டியல் நிறையும் போதும் அந்தப் பணத்தைத் தங்கள்
வாழ்க்கையின் மற்ற முக்கியத் தேவைகளுக்காக பயன்படுத்திவிடும்
கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இப்படியே நாட்கள் செல்ல கார்லும்
எல்லியும் மூப்படைகின்றனர். அதன் பிறகு ஒரு நாள் கார்ல் வெற்றிகரமாக தென்
அமெரிக்கா செல்வதற்கான விமானச்சீட்டை வாங்கி வருகிறார். ஆனால், அந்தத்
தருணம் எல்லி நோய்வாய்ப் பட்டு இறந்துபோகவே எல்லியின் ‘paradise falls’
கனவினை நிறைவேற்றும் இறுதி வாய்ப்பினையும் இழக்கிறார் கார்ல்.
ரஸ்ஸல் (Russel) என்ற சிறுவன் இந்தத் திரைப்படத்தின் மற்றுமோர் முக்கிய
கதாபாத்திரம் . எல்லியின் மறைவிற்குப் பின் கார்லின் வாழ்க்கைக்கு ஓர்
அர்த்தத்தைக் கொடுத்தவன். அமெரிக்காவின் தேசிய இளம் சாரணியர் இயக்கத்தின்
உறுப்பினரான ரஸ்ஸல் பல சாதனைகள் செய்து தான் பெற்ற பதக்கங்களை எல்லாம் ஒரு
பட்டையாகத் தன் சீருடையோடு அணிந்திருப்பவன். ஆனால், அவனுக்கு
‘வயோதியர்களுக்கு உதவுதல்’ என்ற பண்பிற்கான பதக்கம் இன்னும் கிடைக்காமல்
இருந்தது. அதற்காகத் தான் ரஸ்ஸல் கார்லைச் சந்திக்க பலமுறை முயற்சி செய்து
தோற்றிருந்தான். கார்லின் வீடு பெயர்க்கப்பட்டுப் பறக்கும் தருணத்தில்
சற்றும் எதிர்ப்பாராத விதமாக ரஸ்ஸலும் அந்த வீட்டில் மாட்டிக் கொள்கிறான்.
கார்ல் ரஸ்ஸலை மறுபடியும் பூமிக்கு அழைத்துச் செல்ல நினைத்தும், புயலுடன்
கூடிய ஓர் அடர் மழை அம்முயற்சியைத் தடுத்திருந்தது.
கார்லின் பறக்கும் வீடு மழையில் நனைந்து, புயலில் தத்தளித்து ஒரு வழியாக
காடு ஒன்றில் தரையிறங்குகிறது. அதிர்ஷ்டவசமாக அந்தக் காடு கார்ல் செல்ல
வேண்டிய தென் அமெரிக்காவின் காடாக அமைகிறது. மேலும் எல்லியின் கனவு ஊற்றான
‘Paradise Falls’ கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தெரிகிறது. அங்கே
திரைக்கதைப் பல திருப்பங்களைச் சந்திக்கின்றது. பல ஆண்டுகளுக்கு மன்ஸ்
ஆய்வாளர் தேடிச் சென்றிருந்த ராட்சசப் பறவை ஒன்று ரஸ்ஸலின் கண்களில்
படுகிறது. அதற்குப் கெவின் (Kevin) என்று பெயர் வைத்து ரஸ்ஸல் அதனுடன்
நட்புக் கொள்கிறான். எப்படியாவது ‘Paradise Falls’-இல் தன் வீட்டை
நிறுத்துவதைத் தவிர வேறு எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாததால் ரஸ்ஸல்
மற்றும் கெவினின் இருப்பு கார்லுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. வேறு வழி
இல்லாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு, ஒரு கயிறு கட்டி தன் வீட்டை
இழுத்துக் கொண்டு கார்ல் தன் பயணத்தைத் தொடர்கிறார். அப்போது உடன் வரும்
கெவின் பறவையினால் ஒரு பேராபத்துக் காத்திருப்பதை கார்ல்
அறிந்திருக்கவில்லை.
இதற்கிடையில் மன்ஸ் ஆய்வாளர் பல ஆண்டுகளுக்கு முன்னால் தான் பயணப்பட்ட
வான்கலத்திலேயே நூற்றுக்கணக்கான நாய்களுடன் ஒரு மர்ம சாம்ராஜ்யத்தை நடத்தி
வருகிறார். அந்த நாய்கள் சிறப்புக் கழுத்துப் பட்டைகள் அணிவிக்கப்பட்டு
பேசும் ஆற்றலைப் பெற்றிருகின்றன. தனக்குச் சேவை செய்யவும், தனக்கு
ஏற்பட்டிருக்கும் கலங்கத்தைத் துடைக்க உதவவிருக்கும் கெவின் பறவையை
உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்துத் தருவதற்கும் அந்த நாய்களுக்குச்
சிறப்புப் பயிற்சி அளித்திருந்த மன்ஸ், தானும் ஒரு வேட்டை நாயாக
மாறியிருந்தார். அனைத்து நாய்களும் பறவை வேட்டையில் ஈடுபட்டிருக்க, டக்
(Dug) என்னும் நாய் மட்டும், கார்ல் ரஸ்ஸல் கூட்டணியில் சேர்ந்து
கொள்கிறது. இதனால் கெவின் பறவை இருக்கும் இடம் டக் அணிந்திருந்த தடமறிக்
கருவியின் உதவியால் மன்ஸுக்குத் தெரிய வருகிறது. கெவின் பறவை மட்டும்
கூரையில் ஒளிந்து கொள்ள வீட்டுடன் சேர்த்துக் கார்லின் மொத்தக் கூட்டணியும்
மன்ஸின் சாம்ராஜ்யத்திற்குக்குள் அழைத்து வரப்படுகிறது.
தனது இளம்பிராயத்தில் தான் மிகவும் மதித்த மன்ஸ் ஆய்வாளரை மீண்டும்
காண்பதில் கார்ல் மகிழ்ந்தாலும் சில நிமிடங்களில் மன்ஸின் குரூர எண்ணத்தைப்
புரிந்துகொண்டு, கெவின் பறவை, ரஸ்ஸல் மற்றும் டக் என மூவரையும் காக்கும்
முயற்சிகளில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் மன்ஸ் கார்லின் வீட்டுக்குத்
தீயூட்ட, கார்ல் தன் வீட்டைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி கெவின்
பறவையை விட்டுக் கொடுக்கிறார். கார்லின் இந்தச் செய்கை ரஸ்ஸலுக்கு
விரக்தியையும் கோபத்தையும் கொடுக்கிறது. தான் அணிந்திருந்த சாரணியர்
இயக்கப் பதக்கங்களைக் கழற்றி எறிகிறான். ஏதும் செய்வதறியாது கார்ல் தன்
வீட்டினுள் சென்று அமர்கிறார். அப்போது அவர் கையில் எல்லியின் சிறு வயது
கனவு புத்தகம் தட்டுப்படுகிறது. மிக கணமான மனநிலையோடு அதைத் திறந்து
பார்க்கிறார். ‘Paradise Falls’ இன் படம் முதல் பக்கத்தில் ஒட்டி
இருப்பதைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்து பெருமூச்சி விடுகிறார். தன்
மனைவிக்குக் கொடுத்த வாக்கை நினைத்துக் கொள்கிறார். காலி பக்கங்களாய்
இருக்கும் என்ற நினைப்போடு அடுத்தப் பக்கத்தைத் திருப்பியவருக்குப் பெரும்
அதிர்ச்சி. எல்லி ‘Paradise Falls’- இல் வாழப் போகும் காலங்களில் தான்
சந்திக்கவிருக்கும் சாகசங்களைப் பற்றி குறித்து வைக்கப் போவதாய்க் கூறியப்
பக்கங்களில் எல்லாம் கார்ல் எல்லியின் புகைப்படங்கள் ஒட்டி
வைக்கப்பட்டிருந்தன. கார்ல் எல்லி திருமணம் முதல் அவர்களின் வாழ்க்கையில்
நிகழ்ந்த ஒவ்வொரு முக்கியத் தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எல்லி
ஒட்டி வைத்திருப்பதைப் பார்த்தக் கார்ல் மனம் நெகிழும்போது என் கன்னங்களும்
நனைத்திருந்தன. இந்தக் காட்சியில் கார்ல் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை.
கார்ல் என்ற கதாபாத்திரத்தை யாருமேற்று நடிக்கவுமில்லை. அந்தப்
பாத்திரத்தின் முகபாவங்கள் உடல் அசைவுகள் அனைத்தும் தொழிற்நுட்பத்தின்
துணையுடன் பதியப்பட்டவை. நான் பார்ப்பது வெறும் கணினி உருவாக்கக்
கதைப்பாத்திரங்கள் நடிக்கும் இயக்கவூட்டத் திரைப்படம்தான் என்ற
பிரக்ஞையற்று காட்சிகளில் என்னைத் தொலைத்திருந்தேன். இந்தக் காட்சியைப்
பார்த்து நான் உருகியபோது காதல் என்ற ஒன்று இந்த உலகத்தில் இருப்பதாய்
நம்பிவிடத் தோன்றியது.
எல்லி தான் வாழ்நாள் முழுவதும் நிகழ்த்த வேண்டியதாய் நினைத்த சாகசங்கள்
‘Paradise Falls’-இல் இல்லை என்பதையும் அவள் தன்னோடு வாழ்ந்த மொத்த
வாழ்க்கையைத்தான் சாகசங்களாய் கருதி வாழ்ந்து முடித்திருக்கிறாள்
என்பதையும் கார்ல் புரிந்து கொள்கிறார். எல்லிக்குத் தான் கொடுத்திருந்த
வாக்குறுதியை ஏற்கனவே நிறைவேற்றி விட்டதாய் அமைதி அடைகிறார். தொடர்ந்து
ரஸ்ஸலுக்கும் கெவினுக்கும் உதவ முடிவெடுக்கிறார். தன் வயதையும் மீறி ஒரு
மாவீரன் போல் பல போராட்டங்களுக்குப் பிறகு கெவின் பறவையை மன்ஸிடமிருந்து
மீட்டு அதன் குடும்பத்துடன் சேர்க்கிறார். கார்லின் வீடு வேறு திசை நோக்கி
பறந்துவிடவே, ரஸ்ஸலும் கார்லும் மன்ஸின் வான்கலத்தில் நாடு
திரும்புகின்றனர். அதன் பின்னர் சாரணிய இயக்க பதக்கம் வழங்கும் விழாவில்
ரஸ்ஸலின் தந்தை வர முடியாமல் போகவே கார்ல் மிகப் பெருமையுடன் சிறு வயதில்
எல்லி தனக்குக் அணிவித்த தக்கையினால் ஆனப் பதக்கத்தை ரஸ்ஸலுக்கு
அணிவிக்கிறார். அதே சமயம் கார்லின் பறக்கும் வீடு எல்லி கனவு கண்டபடி
‘Paradise Falls’ நீரூற்றின் அருகிலுள்ள கற்மலையில் அமர்வதாய் படம்
நிறைவடைகிறது.
2009ஆம் ஆண்டில் இந்தத் திரைப்பட்டம் உலகம் முழுக்கத் திரையிடப் பட்டபோது
இது 731 கோடி அமெரிக்க டாலர் வரை வசூலித்தது. Pixar நிறுவனம் தயாரித்து
வர்த்தக ரீதியாக சாதனை செய்த Toy Story 3 மற்றும் Finding Nemo போன்ற
இயக்கவூட்டப் படங்களுடன் ஒப்பிடுகையில் Up மூன்றாம் நிலையைப் பிடிக்கிறது.
ஆஸ்கார் விருதளிப்பில் மிக அதிகமான பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட
இரண்டாவது இயக்கவூட்டத் திரைப்படம் இதுவே. இந்தப் படத்தின் வெற்றிக்கு
முதல் காரணம் இது ஒரு 3D CGI இயக்கவூட்டத் திரைப்படமாய் இருப்பதே. பறக்கும்
வீடு, பிரமிக்கவைக்கும் வான்கலன், ராட்சசப் பறவை போன்றவற்றைத் தத்ரூவமாக
திரையில் காண்பிக்கக் கணினி தொழிற்நுட்பத்தால் மட்டுமே சாத்தியமாகிறது. இது
போன்ற மாயாஜால அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள சிறார்களோடு சேர்ந்து
பெரியவர்களும் திரையரங்குகளை ஆக்கிரமிக்கின்றனர். அதைத் தவிர்த்து
உணர்வுப்பூர்வமான திரைக்கதை, அதற்கேற்றாற் போல வடிவமைக்கப்பட்ட நடிகர்களும்
இந்தக் கதையின் பலம். மேலும் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவகையில் அமைந்த
பின்னனி குரல் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாகும். இந்தத்
திரைப்படத்தின் இசை இயக்குனர் Michael Giacchino ஆவார். இவர் Mission
Impossible III, The Incredibles, Star Trek போன்ற புகழ்ப்பெற்ற
திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர். இவர் இசையால் படம் முழுவதும் உணர்வைப்
பரவவிட்டிருக்கிறார். வசனங்கள் இல்லாத காட்சிகளிலும் இவரின் இசை பேசுகிறது.
இயக்கவூட்டத்திற்கு ஆதாரமாய் விளங்குவது வரைகலையே ஆகும். கணினி
தொழிற்நுட்பம் வளர்ச்சியடைவதற்கு முன்னால் ஓவியர்கள் நூற்றுக்கணக்கான
படங்களை வரைந்தேதான் இயக்கவூட்டத்தை உருவாக்கியுள்ளனர். புகழ்ப்பெற்ற
ஓவியர் Leonardo da Vinci தனது Anatomical Studies of the Muscles of the
Neck, Shoulder, Chest, and Arm எனும் ஒவியத் தொகுப்பில் உடலின்
மேற்பகுதியின் அசைவைத் தொடர்படங்களாக, மிகத் துள்ளியமாக வரைந்தது இரண்டு
கோப்புகளுக்கு மேலும் சேகரிக்கப்பட்டுள்ளதாம். மனிதன் வாழும் எல்லாக்
காலக்கட்டங்களிலும் இயக்கவூட்டத்திற்கான தேவை இருந்திருப்பதை இதன் மூலம்
அறியலாம். இந்தத் தேவைக்கான உந்துதலின் விளைவாகத்தான் இன்று நாம் திரையில்
3 பரிமாணத்தில் இயக்ககவூட்டத்தைப் பார்க்க முடிகிறது. எல்லியின் கனவு
புத்தகத்தில் காலியாய் விடப்பட்ட பக்கங்கள் போல் தொழிற்நுட்பத்தின் கனவு
புத்தகத்திலும் இன்னும் நிறையப் பக்கங்கள் காலியாய்தான் இருக்கின்றன.
வருங்காலத்தில் இயக்கவூட்ட தொழிற்நுட்பத்தின் என்னென்ன சாகசங்கள் அந்தப்
பக்கங்களில் குறிக்கப்படுமோ என்பது யாருக்குமே தெரிவதில்லை. அதுவரை
இயக்கவூட்டத்திற்கானத் தேவையும் அதற்கான தொழிற்நுட்பத்தை உருவாக்க மனிதனின்
தேடலும் தொடரும்.
|
|