|
|
ஒரு காலத்தில் மொழியை வகுக்க மொழியியல் என்ற துறை உருவானது. சசூரின்
அமைப்பியல் மூலம் குறிப்பான் = குறிப்பீடு என்ற கருத்தாக்கம் பிறந்தது.
பிறகு பின் நவீனத்துவத்தின் வருகைக்குப் பின் மொழிக்கென ஒரு புதிய துறை
தோன்றியது. அதன் பெயர் குறியியல்.
மொழியியல் (Linguistics) என்பது மொழியின் மீதான ஆய்வை முன் வைக்கிறது
என்றால், குறியியல் (Semiotics) என்பது மொழியை ஒரு குறியாக, குறியின்
தொகுதியாகப் பார்க்கிறது எனலாம்.
மொழியியல் என்பது மொழியின் வடிவம், அர்த்தம், மொழி பிரயோகிக்கப்படும்
சந்தர்ப்ப சூழ்நிலை ஆகியவை குறித்துப் பேசுகிறது. குறியியலோ மொழியை ‘குறி’
யாக (sign) அதாவது சமிக்ஞையாகப் பார்க்கிறது. குறி என்ற சொல் இலக்கு,
அடையாளம், சமிக்ஞை, பிறப்புறுப்பு போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டு
இருப்பதால் குறி சொல் குழப்பம் தரக்கூடும். எனவே, குறி என்பதற்கு சைகை என்ற
சொல்லை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொழி எவ்விதம் செயல்படுகிறது?
மொழி ஒரு சைகையைப் போலவே செயல்படுகிறது.
நாம் நமது வலது கையை உயர்த்தி உள்ளங்கை வெளித்தெரியுமாறு காட்டுகிறோம்
என்று வைத்துக் கொள்ளலாம். அந்தச் சைகைக்குப் பல பொருள்கள் கொள்ள முடியும்.
‘நில்’, ‘பொறு’, ‘நானிருக்க பயமேன், இஸ்லாமிய மதச்சின்னம், என்று
பலவிதமாகப் பொருள்படுத்திக் கொள்ள முடியும். அதே போல் நாம் நமது கையை
உயர்த்தி இட வலமாக அசைத்துக் காட்டினால், அதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட
அர்த்தங்கள் உண்டு. அந்த சைகையை ‘வேண்டாம்’, என்றோ ’டாட்டா, பை பை, என்றோ
பொருள் படுத்திக் கொள்ள முடியும்.
மொழியும் அப்படித்தான். மொழியின் ஒவ்வொரு சொல்லும் ஒரு சைகையே. ஒவ்வொரு
சைகைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. சொற்கள், டிராஃபிக் சிக்னல்
விளக்குகள், கதை, கவிதை, மத இலக்கியங்கள் எல்லாமே சைகைகள்தான். எல்லாமே
ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தம் கொண்டவையே.
சசூரின் ’சைகை’ கோட்பாடு அதன் குறைகள் களையப்பட்டு பின் அமைப்பியலாக
உருப்பெற்றது.
பின் அமைப்பியல்வாதிகளில் ஒருவரும், ஃபிரெஞ்சு சிந்தனையாளருமான தெரிதா, இது
வரை எழுதப்பட்ட மேற்கத்திய தத்துவ நூல்களைப் படித்துப் பார்த்து அதில்
ஒளிந்திருக்கும் ‘சைகை’களைக் கண்டறிந்தார். அவரது பாணிக்கு ‘கட்டவிழ்ப்பு’
(Deconstruction) என்று பெயர். ‘ஒரு பிரதி மொழியால் ஆனது. மொழி என்பதோ
குறிகளாலும், சமூக கலாசார பிம்பங்களாலும் கட்டமைக்கப்பட்டது. இதைத் தாண்டி
ஒரு பிரதிக்கு வெளியே தூய அறிவு, தனித்த சிந்தனை என்று எதுவும் இல்லை’
என்றார் அவர்.
ஒரு பிரதியில், ‘கதவைத் திற; காற்று வரட்டும்’ என்று எழுதி இருக்கிறது
என்று வைத்துக் கொள்வோம். இந்த வாக்கியத்தைக் கட்டவிழ்த்து அதில் பொதிந்து
இருக்கும் ‘சைகை’ என்ன என்று பார்ப்போம்.
இந்த வாக்கியத்தில் இருக்கும் நேரான பொருள் இதுதான். ’நாம் இருக்கும்
இட்த்தில் ஒரே புழுக்கமாக இருக்கிறது; கதவைத் திறந்தால் வெளியில் இருந்து
காற்று வரும். புழுக்கம் இல்லாமல் இருக்கும்’ என்பதே.
இதே வரிகளை ஒரு எழுத்தாளன் எழுதி இருந்து அதை ஒரு சர்வாதிகாரி படிக்க
நேர்ந்தால் தன்னுடைய ஆட்சியில் சுதந்திரம் இல்லை என்பதால்
சுதந்திரக்காற்றைப் பெறுவதற்காகக் கதவைத் திற - அதாவது புரட்சி செய் -
என்று அந்த ஆசிரியர் ‘சைகை’ காட்டுவதாகப் புரிந்து கொள்வான்.
ஒரு வாசகர், அயல் மொழிக்கதைகளை மொழிபெயர்ப்பு என்ற ஜன்னல் ’கதவைத் திறந்து’
வைப்பதன் மூலம், புதிய ‘காற்றாக’ புத்திலக்கியம் வந்து சேரும் என்று ஒரு
‘சைகை’யைக் கண்டறிவார்.
விவாதத்தின் போது பல புதிய கருத்துகளை வரவேற்க வேண்டும்.அப்போதுதான் ஒரு
நல்ல முடிவை அடைய முடியும். எனவே, புதிய கருத்துகளுக்கான மனக்கதவைத்
திறந்து வைக்க வேண்டும் என்பதாக ஒரு சிந்தனையாளன் புரிந்து கொள்ளக்கூடும்.
இதுதான் தெரிதாவின் கட்டவிழ்ப்புச் சிந்தனை.
கட்டவிழ்ப்பு செய்யப்பட்ட அந்தச் சிந்தனையின் பெயர் என்ன?
அதற்கு உரையாடல் என்று பெயரிடுகிறார், இன்னொரு பின் நவீனத்துவ வாதியான
மிஷல் ஃபூக்கோ. அந்த உரையாடலை நிகழ்த்துவது அதிகாரம். ‘அதிகாரம் தனது
உரையாடலை நிகழ்த்துகிறது.அதிகாரம் என்பது அறிவு என்ற அமைப்பின்
செயல்பாட்டால் வருவது. அது சமூக ரீதியாக முறைமைப் படுத்தப்பட்டிருப்பதால்,
அது சட்டமாகவும், சட்ட்த்தை அமல்படுத்தும் நிறுவனமாகவும் மாறிவிடுகிறது’
என்பது ஃபூக்கோவின் சிந்தனை.
நான் என்பது எனது சுயம். எனது சுயம் இயல்பானது என்று எனக்குப் படுகிறது.
உண்மையில் எனது சுயம் என்பது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டு என் மேல்
திணிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரம் என்னை ‘நீ ஒரு அரசு ஊழியன்’; ‘நீ ஒரு
போலீஸ்காரன்’; ‘நீ ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினீயர்’ என்றெல்லாம் என் மேல் தனது
கட்டளைகளைப் பிறப்பித்து என்னுடைய சுயத்தைக் கட்டமைக்கிறது. என்னுடைய சுயம்
இயல்பில் கவிஞனாக இருப்பது என்று நான் விரும்பினால், அது அதிகாரம்
சம்மதித்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இதைத்தான் ஃபூக்கோ ‘சுயமான முழு மனிதன் என்று யாரும் இல்லை. அதற்கான
சாத்தியமும் இல்லை. அதிகாரம் சதா அவனது சுயத்தை முறைப்படுத்திக் கொண்டே
இருக்கிறது.’ என்கிறார்.
அதிகாரம் இரண்டு நுனிக்ள் கொண்டது. ஒன்று செலுத்தப்படும் நுனி. இன்னொன்று:
பெறும் நுனி. இரண்டு நுனிகளிலும் இருப்பவர்களை அதிகாரம் முறைமைப்படுத்திக்
கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, முன்பு மு. கருணாநிதி அதிகாரத்தைச்
செலுத்தும் நுனியில் இருந்தார். தற்போது பெறும் நுனிக்கு வந்திருக்கிறார்.
முன்பு அதிகாரத்தைப் பெறும் நுனியில் இருந்த ஜெயல்லிதா இப்போது செலுத்தும்
நுனிக்கு வந்திருக்கிறார். இவர்கள் இருவரது சுயங்களும்
கட்டமைக்கப்பட்டவையே. சதா முறைமைப்படுத்தப்படுபவையே. இவர்கள் மீண்டும்
தங்கள் நுனிகளை மாற்றிக் கொள்ளும் நிலைமை வரலாம். இது ஒரு விளையாட்டு.
அதிகாரத்தின் விளையாட்டு. அதிகாரத்தின் விருப்புறுதியால் நேரும்
விளையாட்டு. நாம் அனைவரும் இந்த விளையாட்டின் பகடைக்காய்கள்.
அது சரி, எனது சுயம் என்பது எனக்குள் இருக்கிறது. அப்படித்தானே?
அதுதான் இல்லை, என்கிறார் இன்னொரு பின் நவீனவாதியான ழாக் ல்க்கான்.
‘எனது சுயம் என்பது எனக்குள் இல்லை; எனக்கு வெளியே இருக்கிறது’ என்று
அறிவித்ததன் மூலம் சுயத்தைப் பற்றிய மரபார்ந்த கருத்தியல்களை ரத்து
செய்தார் லக்கான்.
ஒரு மனிதனின் சுயம் எப்படி உருவாகிறது?
’ஒரு மனிதனின் சுயம் என்பது அவனது ஆழ்நிலை மனத்திலேயே இயல்பிலேயே
அமைந்திருக்கிறது. ஆதியில் முழுமையாக இருக்கும் அவனது சுயம் – அதாவது ஈகோ
(ego) - அன்றாடப் பிரச்சனைகளில் சிக்குண்டு பல துண்டுகளாக உடைந்து
விடுகிறது’ என்பது உளவியலின் தந்தை என்று போற்ற்ப்படும் சிக்மண்ட்
ஃபிராய்டின் கோட்பாடு.
இந்தக் கோட்பாட்டை லக்கான் ரத்து செய்தார்.
’முழுமையான ஈகோ என்று எதுவும் இல்லை. ஈகோ உருவாகும் போதே துண்டு
துண்டாகத்தான் உருவாகிறது. பிறக்கும் போது ஒரு குழந்தையின் மனம் எழுதப்படாத
ஒரு வெற்றுக் காகிதம் போலத்தான் வெற்றிடமாக இருக்கும். அதற்கு ஆறுமாதம்
ஆகும் போதுதான் முதன் முதலாகத் தன் தோற்றத்தைக் கண்ணாடியில்
பார்க்கும்போதுதான் அந்த பிம்பம்தான் தான் – அதுதான் தன் சுயம் – என்பதைக்
கண்டு கொள்கிறது.'
அதன் பிறகு குழந்தை வளர வளர அதனுடைய சுயத்தை வெளியிலிருந்து பெறப்படும்
கருத்துகள் கட்டமைக்கின்றன.
’என்ன சமத்துக் குழந்தை’
‘அப்பா மாதிரியே கெட்டிக்காரன்’
‘அம்மா மாதிரியே அழகு’
என்றெல்லாம் தொடர்ந்து அந்தக் குழந்தையின் காதுகளில் விழும் சொற்களால்
அதைப்பற்றிய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. இவ்விதமாக சுயம் என்பது துண்டு
துண்டாக உருவாகிறது. சுயம் துண்டாடப்பட்டதே. என்பது லக்கானின் கொள்கை.
ஃபிராய்ட் தனது உலகப் புகழ் பெற்ற கொள்கையான மனம் (ego), ஆழ்மனம் (id), மீ
மனம் (Super ego) என்ற கோட்பாட்டை முன் வைத்தார். இந்த மூன்று மனங்களால்
ஆனதுதான் மனித மனம் என்றார் அவர். ஆழ் மனம் தகாத ஆசைகளைத் தூண்டுகிறது.
அப்போது மீ மனம் அதைக் கண்டித்து அதன் தகாத ஆசைகளை அடக்கி வைக்கிறது.
இதனால்தான் சராசரி மனம் இயல்பாக இருக்க முடிகிறது.
லக்கான் இதற்கு மாற்றாகத் தன்னுடைய கொள்கையை முன் வைத்தார். படிமம் >
குறியீடு > யதார்த்தம் என்பதே அது.
நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அது படிமம். அதை
வாய்மொழியாகத் தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறேன். கேட்ட உடன் தண்ணீர்
வருகிறதா இல்லையா என்று பார்க்கிறேன். இப்போது தண்ணீரை விட அது உடனே
வருகிறதா இல்லையா என்பது தலையாய பிரச்சனை ஆகி விடுகிறது. இதில் தண்ணீர்
என்று நான் மனதில் நினைத்தது படிமம். மனத்தில் இருந்த தண்ணீர் என்ற படிமம்
தண்ணீர் என்ற சொல்லாக மாறி தண்ணீருக்கான குறியீடாக மாறுகிறது. பின்பு
தண்ணீர் வருகிறதா இல்லையா என்று எதிர்பார்க்கும் போது, அது தாகம் என்பதைத்
தாண்டி வேறொரு பிரச்சனையாக மாறி விடுகிறது. அதை ஒட்டி உளவியல் பிரச்சனைகள்
தோன்றுகின்றன. இது தான் மனித மனம் இயங்கும் விதம் என்றார் ல்க்கான்.
விரைவிலேயே உளவியலில் சிக்மண்ட் ஃபிராய்டிய பள்ளிக்குப் போட்டியாக
லக்கானியப் பள்ளி தோன்றியது.
ஃபிராய்டுடன் முரண்பட்ட போதிலும் ஃபிராய்டின் அடிப்படைக் கொள்கையான ஈடிபஸ்
சிக்கல் என்ற கோட்பாட்டில் லக்கான் முரண்படவில்லை. அதை ஏற்றுக் கொண்டார்.
அதன்படி உளவியல் அடிப்படை என்பது ஆணின் மனம் சார்ந்த்தாக இருந்த்து. இந்தத்
தவறைக் கண்டு பிடிக்க ஒரு பெண் உளவியலாளர் வந்து சேர்ந்தார். அவர் பெயர்
ஜூலியா கிறிஸ்தேவா. இதுவரை வழக்கில் இருந்து கொண்டிருக்கும் உளவியல்
ஆணாதிக்கம் சார்ந்த உளவியலே. பெண்களுக்கான உளவியல் இனிமேல்தான் கண்டு
பிடிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவித்த போது உலகம் மலைத்தது. பெண்ணியம்
சார்ந்த உளவியல், ஊடிழைப் பிரதி, பெண்மொழி போன்ற பல சொல்லாடல்களை அவர்
உருவாக்கப் போகும் அதிசயம் அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
(தொடரும்)
|
|