|
|
அவுஸ்திரேலியா பல்லின மக்கள்
வாழும் நாடு. அவரவர் கலாசாரம், பண்பாடுகளை மதிக்கும் நாடு.
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் 'டியர் பார்க், ஓக்லி' நூல்
நிலையங்களில் (Deer Park, Okleigh) தமிழ்ப்புத்தகங்களை
வைத்திருக்கின்றார்கள். ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சமீபமாக இருக்கும் பெண்
ஒருவர், சுமக்க முடியாமல் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை நூல்
நிலையத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் கண்டேன்.
"என்ன நிறைய தமிழ்ப்புத்தகங்கள் படிக்கின்றீர்கள் போல?"
"அப்பிடியென்றில்லை! அம்மா அப்பாவை இலங்கையிலிருந்து வந்திருக்கினம்.
அவைக்கு தமிழ்ப்புத்தகங்கள் என்றால் சரியான விருப்பம்" என்றார் அவர்.
அவுஸ்திரேலியாவில் வதியும் இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகள் கொண்ட
தொகுப்பு 'உயிர்ப்பு.' இதை அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியக் கலைச்சங்கம்
வெளியிட்டிருந்தது. என்னிடம் சில பிரதிகள் விற்பனைக்காக இருந்தன. அதை
எடுத்துக் கொண்டு எனக்குச் சமீபமாக இருக்கும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச்
சென்றேன். அவர்களது பெற்றாரையும் பார்த்ததாக இருக்கும். உயிர்ப்பு பிரதி
ஒன்றின் விலை 10 அவுஸ்திரேலியா டொலர்கள்.
அரை மில்லியியன் பெறுமதி கொண்ட அந்த வீட்டிற்குள், அந்தப் புத்தகத்தை
எடுத்துக் கொண்டு போவதில் எனக்கு சிறிது தயக்கம்.
"இந்தப் புத்தகத்தில் ஒன்றை எடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு உங்களால் உதவ
முடியுமா?" என்று அவர்களிடம் கேட்டு வாய் மூடவில்லை.
"எப்படியும் 'டியர் பார்க்' லைபிரறிக்கு இந்தப் புத்தகம் வரும்தானே! அப்ப
வாசிப்பம்" என்றார்கள் அவர்கள். அவர்கள் இலவசமாக புத்தகங்கள் படிப்பவர்கள்
என்பதை அறிந்தேன். எனக்கு இலவசமாக புத்தகத்தைக் கொடுப்பதில் உடன்பாடில்லை.
அவர்களை வற்புறுத்தவில்லை. திரும்பி விட்டேன்.
இது நடந்து ஏறக்குறைய நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. நேற்று நான் 'டியர்
பார்க்' நூல்நிலையத்திற்குச் சென்ற போது 'உயிர்ப்பு' சிறுகதைத் தொகுதியை
அங்கே தமிழ்ப்பிரிவில் காணக்கூடியதாக இருந்தது. புத்தகம் வந்த செய்தியை
அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அப்படியாதல் வாசிக்கட்டும்.
இடைவெளி
எனது அண்ணன் இலங்கையில் இறந்து போன சமயம் இது நடந்தது. சிலர் வீட்டிற்கு
வந்து துக்கம் விசாரித்துச் சென்றார்கள். சிலர் டெலிபோனில் கதைத்தார்கள்.
எனக்குத் தெரிந்த குடும்பம். ஊரவர். வரவில்லை. விசாரிக்கவும் இல்லை.
அவர்கள் பெரியதொரு வீடு கட்டி இருந்தார்கள். நாட்டில் நடந்த பிரச்சினைகளால்
வீடு குடிபுகும் விழாவை பின்தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். எப்பவடா
பிரச்சனை தீரும் - விருந்து வைச்சுக் கொண்டாடலாம் என்று காத்துக்
கொண்டிருந்தார்கள். நாட்டில் அவலங்கள் முடிந்து இரண்டு மாதங்கள்
கழிந்திருக்கும். எமக்கு ரெலிபோன் வந்தது.
"இந்தச் சனிக்கிழமை பார்ட்டி வைக்கின்றோம். வாருங்கள்" மறுபுறத்திலிருந்து
ஒலித்தது குரல்.
"இன்னமும் சிலர் செத்தவீட்டிற்கு வந்து கொண்டிருப்பதால் வருவதற்கு
செளகரியப்படாது" என்று சொன்னோம்.
"உங்கடை ஹஸ்பனிற்கும், அவருடைய இறந்த அண்ணாவிற்கும் இடையே நிறைய வயது
வித்தியாசமாமே! அதாலை அவருக்குக் கவலை இருக்காது எண்டு நினைத்தோம். அதுதான்
பார்ட்டிக்குக் கூப்பிட்டனாங்கள். குறை நினைக்காதையுங்கோ. பிறகு ஒருநாள்
ஆறுதலாக வசதியாக இருக்கேக்கை உங்கடை வீட்டை வாறம் என்ன!" என்று
சொல்லிவிட்டு ரெலிபோனை வைத்தாள் அவள்.
சொல்லிப் போக வேண்டும் சுகத்திற்கு; சொல்லாமல் போக வேண்டும் துக்கத்திற்கு
என்று சொல்வார்கள். இந்தப் பழக்கம் இப்பொழுது அருகி வருவது போல்
தெரிகின்றது. சமீபத்தில் எமது நண்பர் ஒருவரின் தந்தையின் செத்தவீட்டிற்குச்
சென்றிருந்தோம். எண்ணி எழுபது எண்பது பேர் மட்டில் வந்திருந்தார்கள். ஆனால்
கடந்த வருடம் நடந்த நண்பரின் குழந்தையின் பிறந்ததின விழா கொண்டாட்டத்தின்
போது இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள்.
பூமராங் (Boomerang)
பண்டைய தமிழர்கள் ஓடித் தப்பிப்பவர்களைப் பிடிப்பதற்கு 'வளரி' என்ற
ஆயுதத்தைப் பாவித்தார்கள். சங்க கால இலக்கியமாகிய புறநானூற்றுப்
பாடல்களில்(பாடல் எண் 347, 233) வரும் 'திகரி' என்னும் பதம் இந்த
'வளரி'யையே குறிக்கின்றது.
இந்த வளரியைப் போன்று அவுஸ்திரேலியா ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட
ஆயுதம் 'பூமராங்'. தமிழில் இதை 'வளைதடி' என்பார்கள். இது ஒருமுனை கனமாகவும்
மறுமுனை இலேசாகவும் கூராகவும் ஒரு பிறை வடிவில் மரத்தினால் அல்லது
உலோகத்தினால் செய்யப்படுகிறது. இதை ஆதிவாசிகள் ஒரு இலக்கை நோக்கி
எறிவார்கள். இலக்கு தவறும் பட்சத்தில் அந்த பூமராங் எறிந்தவரின்
கைகளுக்குத் திரும்பி வந்து விடும். இதை ஆதிவாசிகள் வேட்டையாடுவதற்கு
உபயோகித்தார்கள்.
புராண இதிகாசங்களில் வரும் நாகாஸ்திரமும் இதன் தத்துவத்தைக் கொண்டதுதானோ?
|
|