|
|
இந்திய அரசியல் அரங்கை இப்போது ஒரு முழக்கம் ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கிறது. ஊடகங்களால் ஆயிரம் ஆயிரம் மடங்காகப் பெருக்கப்பட்டு
வேறெந்த சப்தமும் நம் காதுகளை எட்ட முடியாத அளவுக்கு ஒலிக்கிறது அந்த
முழக்கம். ‘ஊழலை ஒழிக்கவேண்டும்’ – இதுதான் இன்று நம்மை
மூழ்கடித்துக்கொண்டிருக்கும் அந்த முழக்கம். இது இந்திய அரசியலில் இதுவரை
பேசப்படாத விஷயமல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் பேசப்பட்டுவரும்
பிரச்சனைதான். அதிலும் நேரு காலத்திலிருந்தே காங்கிரஸ் அரசாங்கங்கள்
எதிர்கொண்ட குற்றச்சாட்டுதான். ஆனால் இப்போது இந்த அளவுக்கு இது ஓங்கி
ஒலிக்கக் காரணம் ஊடகங்கள்தான். அதிலும் காட்சி ஊடகங்கள். அவற்றின்
சங்கீதத்துக்கு ஏற்ப நடனமாடக்கூடிய அரசு மத்தியில் இருக்கும்போது அவை
சும்மா இருக்குமா என்ன?
’ஊழல் ஒழிக்கப்படவேண்டும்’ என்று சொல்வது ’எல்லோரும் படிக்கவேண்டும்’ என்று
சொல்வதைப்போன்று பொதுப்புத்திக்கு உகந்த ஒரு நிலைப்பாடுதான். ஊழல் என்று
சொல்லும்போது நம் பொதுப்புத்தி அதை பொருளாதாரம் தொடர்பான பிரச்சனையாக
மட்டுமே வரையறுத்துக்கொள்கிறது. கலாச்சார ஊழலை அது கணக்கில் கொள்வதில்லை.
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் ஒரு கோட்பாடு, அந்தக்
கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்ட ஒரு மதம், அந்த மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்
பெரும்பான்மையினராக இருக்கும் ஒரு நாடு – அதுதான் இந்தியா. இங்கே அரசாங்கம்
இருக்கிறது, அரசியல் கட்சிகள் இருக்கின்றன, ஆனால் ”இங்கே சமூகம் என்பது
இல்லை” என்று அம்பேத்கர் சொன்னார். அதற்காகத்தான் அரசியல் அமைப்புச்
சட்டத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். இன்று அண்ணா அசாரேவின்
குழுவினர் ஒரு மசோதாவைத் தயாரித்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் தலித்
சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறவில்லை. அரசாங்கம் அமைத்த குழுவிலும்
கூட அப்படி எவரும் சேர்க்கப்படவில்லை. அதற்கான கோரிக்கை
முன்வைக்கப்பட்டபோது அதை அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை, அண்ணா அசாரேவும்
பொருட்படுத்தவில்லை.
அண்ணா அசாரேவின் உண்ணாவிரத அச்சுறுத்தலால் இப்போது இந்தியாவில்
ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழல் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி
தகர்க்கப்பட்டதற்கு முன்பு நிலவிய சூழலைத்தான் நினைவுபடுத்துகிறது. அன்று
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லை. தன்னை மதச்சார்பற்ற கட்சி என்று
கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தான் ஆண்டுகொண்டிருந்தது. அன்றைய பிரதமர்
நரசிம்மராவ் அடிப்படைவாத சக்திகளை ஊக்குவிக்கும் விதமாக நடந்துகொண்டார்,
நீதித்துறையும் அதற்கு ஒத்திசைவாக இருந்தது. இதேபோலத்தான் கும்பல் சேர
அனுமதித்து அதன்பிறகு அந்தக் கும்பலின் தாளத்துக்கு ஏற்ப அரசாங்கம் ஆட்டம்
போட்டது. அதன் தொடர்ச்சியாக நடந்த ரத்தக் களறி எவருக்கும் மறந்திருக்காது.
அப்போது ராமனின் பெயரை உச்சரித்த உதடுகள் இன்று காந்தியின் பெயரை
ஓதுகின்றன. அதுதான் வித்தியாசம். இரண்டு கூட்டமும் ஒரேவிதமான வலதுசாரி
மனோபாவம் கொண்டவைதான். சமூகநீதிக்கு எதிரானவைதான்.
பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித்துகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது
என வெளிப்படையாகவே வாதாடுபவைதான்.
அண்ணா அசாரே குழுவால் உருவாக்கப்பட்டிருக்கும் மசோதா என்ன சொல்கிறது என்பதே
பெரும்பாலோருக்குத் தெரியாத நிலையில் இந்தியர்கள் அனைவரும் அதற்கு
ஆதரவளிப்பதுபோல ஒரு தோற்றத்தை இன்று ஊடகங்கள் உருவாக்கிவருகின்றன. இந்த ஊடக
இரைச்சலில் பல முக்கியமான குரல்கள் மூழ்கடிக்கப்படுகின்றன. இலங்கையில்
நடந்த இனப்படுகொலைக்குக் காரணமான ராஜபக்ச மீது ஐ.நா மன்ற அறிக்கைக்
கூறியிருப்பதுபோல போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்று
வலியுறுத்தி இந்தியப் பாராளுமன்றத்தில் விவாதிக்க விடுதலைச் சிறுத்தைகள்
கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் பலர் நோட்டீஸ்
கொடுத்திருந்தனர். பதினைந்து நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு தி.மு.க;
அ.தி.மு.க வி.சி.க என அனைவரும் சேர்ந்து கடுமையாகப் போராடிய பிறகே அதற்கு
அனுமதி தரப்பட்டது. ஆனால் அதை ஊடகங்கள் அவ்வளவுதூரம் முக்கியமாகக்
கருதவில்லை. இன்று பேரறிவாளன், சாந்தன்,முருகன் என மூவரது கருணை மனுக்கள்
குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து தமிழகமெங்கும்
பல்வேறுவிதமான போராட்டங்கள் நடந்துவருகின்றன. அவற்றையும் ஊடகங்கள்
கண்டுகொள்ளவில்லை.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி
தூக்கில் போடுவதெனத் தமிழக அரசு தேதி குறித்திருக்கும் நிலையில் அவர்களது
மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என்ற குரல்கள் இப்போது தமிழகமெங்கும்
ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும்
போராடுகிறார்கள். வழக்கறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத்
துவக்கியிருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மனிதசங்கிலிப்
போராட்டங்கள் என ஒவ்வொருநாளும் தமிழ் மக்கள் தமது உணர்வை
வெளிப்படுத்திவருகிறார்கள். ஆனால் அண்ணா அசாரேவின் போராட்டத்துக்குக்
கிடைக்கும் ’விளம்பரம்’ மரண தண்டனையை எதிர்த்த இந்தப் போராட்டங்களுக்குக்
கிடைக்கவில்லை. அது ஏன் என்பதைப் பார்க்கவேண்டும்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களின் கருணை மனுக்களை குடியரசுத்
தலைவர் நிராகரித்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது “கருணை
என்பது இப்போது கிழங்குவகைகளில் ஒன்று என ஆகிவிட்டது” என்று
புதுமைப்பித்தன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. பதினோரு ஆண்டுகளாக
அவர்களுடைய கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் பார்வைக்காகக் காத்துக்
கிடந்தன. இதற்குமுன் குடியரசுத் தலைவர்களாக இருந்த
திரு.கே.ஆர்.நாராயணனைப்போல, திரு. அப்துல் கலாமைப் போல திருமதி பிரதிபா
பாட்டிலும் அந்த மனுக்களைக் கிடப்பில் போடுவார் என்றுதான் எதிர்பார்த்தோம்.
ஆனால் அதற்கு மாறாக அவற்றை அவர் நிராகரித்திருக்கிறார். உள்துறை அமைச்சகம்
கொடுத்த பரிந்துரைகளை அப்படியே அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இது மிகவும்
துரதிர்ஷ்டவசமானது.
’மானுடர் ஆன்மா மரணம் எய்தாது’ என்றும், அது மறுபடியும் பிறக்குமென்றும்
நம்புகிற கலாச்சாரம் இந்துக்களுடையது. அதுமட்டுமின்றி ‘மேனியைக் கொல்வது
தர்மங்களில் ஒன்று’ என உபதேசம் செய்கிற கலாச்சாரம் அது. இந்த
கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்டிருக்கும் பொதுப் புத்தியில் மரண தண்டனைக்கு
எதிரான ஒரு கருத்தைப் பதிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. உலகத்தில் 139
நாடுகளில் மரண தண்டனை இப்போது நடைமுறையில் இல்லை என்று சொல்லி இங்கேயும்
மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என நாம் வாதாடினாலும் அவ்வளவு எளிதாக அது
நடந்துவிடாது.
தற்போது 286 பேர் மரண தண்டனையை எதிர்பார்த்து இந்தியாவின் பல்வேறு
சிறைகளில் இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. அவர்களுள் 44 பேர்களின்
கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரிடம் இருந்தன. தற்போது
நிகழ்ந்துவருபவற்றைப் பார்த்தால் அந்தக் கருணை மனுக்கள் எல்லாமே
நிராகரிக்கப்படலாம் என்றே தோன்றுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலை
மனதில் வைத்தும், வளர்ந்துவரும் பா.ஜ.க வின் செல்வாக்கை மட்டுப்படுத்தும்
நோக்கத்தோடும்தான் இத்தகைய செயல்களைக் காங்கிரஸ் அரசு செய்கிறது என்று
சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதன் பின்னாலிருக்கும் அரசியல் எதுவாக
இருந்தாலும் மனித குலத்துக்கே எதிரான மரண தண்டனை முறையை எதிர்ப்பது நம்
கடமை.
மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சனை இன்று நேற்றல்ல, இந்தியாவின்
அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குகிற நேரத்திலேயே விவாதிக்கப்பட்ட
ஒன்றுதான். அந்த விவாதத்தில் பங்கேற்ற பல உறுப்பினர்கள் மரண தண்டனை
வேண்டாம் என்றுதான் வாதிட்டார்கள். சாட்சியங்களை மட்டுமே பெரிதும்
சார்ந்திருக்கிற இந்திய நீதி அமைப்பில் அப்பாவிகள்கூட தண்டிக்கப்படுவதற்கு
வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர்கள் விரிவாக எடுத்துக்கூறினார்கள். எனவே
மரண தண்டனை விதிக்கப்படும் வழக்குகளில் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு
செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும் என்று அவர்கள் ஆலோசனை
தெரிவித்தார்கள். அந்த விவாதத்தின் இறுதியில் பேசிய டாக்டர் அம்பேத்கர்
அவர்கள், ‘‘உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதைவிடவும் மரண தண்டனையை
முற்றாக ஒழித்து விடுவதையே நான் ஆதரிப்பேன். இந்தப் பிரச்சனைக்கு அதுதான்
சரியானத் தீர்வாக இருக்கும். நமது நாடு அகிம்சையைக் கொள்கை அளவில்
ஏற்றுக்கொண்ட ஒரு நாடாகும். நடைமுறையில் அதை முழுமையாக
பின்பற்றாவிட்டாலும்கூட அகிம்சையை இயன்றவரை நாம் பின்பற்றுவதுதான் சரி.
அப்படிப் பார்த்தால் மரண தண்டனை என்பதையே முற்றாக ஒழித்துவிடுவதுதான்
சரியானதாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டார். அம்பேத்கரின் கருத்தை
விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட அரசியல் நிர்ணய சபை மரண தண்டனையை ஒழிப்பதா?
வேண்டாமா? என்று முடிவு செய்யும் அதிகாரத்தை எதிர்கால நாடாளுமன்றத்திடம்
விட்டுவிடுவது எனத் தீர்மானித்தது.
அம்பேத்கர் மட்டுமல்ல 1937ஆம் ஆண்டிலேயே காந்தியும் மரண தண்டனைக்கு
எதிராகப் பேசியிருக்கிறார். ‘‘மரண தண்டனை என்பது அகிம்சைக்கு எதிரானதாகும்.
உயிரை உருவாக்கியவர்தான் அதை எடுத்துக்கொள்ள முடியும். அகிம்சையின்
அடிப்படையில் ஆட்சி நடத்தும் ஒரு அரசு கொலையாளியை மனந்திருந்தச்
செய்வதற்கான வழிகளைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றங்கள் என்பவை நோய்களைப்
போன்றவை. அதனால் பீடிக்கப்பட்டவர்களை நோயாளிகளாகக் கருதி வைத்தியம் செய்வதே
சரியானதாகும்’’ என்று காந்தி தெளிவாகக் கூறியிருக்கிறார்..
இந்தியாவின் நீதி அமைப்பு சாட்சியங்களையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டது.
பொய் சாட்சிகளால்கூட ஒருவருக்கு தண்டனை வாங்கித் தந்துவிட முடியும். அப்படி
இருக்கும்போது உயிர்களைப் பறிக்கிற தண்டனையை நாம் எப்படி ஆதரிப்பது? மரண
தண்டனை எல்லோருக்கும் கொடுக்கப்படுவதில்லையே. அரிதினும் அரிதான
வழக்குகளில்மட்டும் தானே மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று சிலர்
கேட்கலாம். ஆனால் அது உண்மையல்ல. 1950ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை
உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்புகளை ஆராய்ந்து
ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பும், மக்கள் சிவில் உரிமை கழகமும் (பியுசிஎல்)
நூல் ஒன்றை வெளியிட்டுள்ளன. இந்தியாவில் வழங்கப்படுகிற மரண தண்டனைகள்
அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படவில்லை. மாறாக ஒவ்வொரு
நீதிபதியும், ஒவ்வொரு கோணத்தில் தண்டனையை வழங்கியிருக்கிறார்கள் என்பதை
இந்த ஆராய்ச்சி நூல் அம்பலப்படுத்தி இருக்கிறது. தலித் சமூகத்தைச்
சேர்ந்தவர்கள் கொலை செய்யப்படுகின்ற வழக்குகளிலும், சிறுபான்மை மதத்தவர்
கொல்லப்படுகிற மதவாத வன்முறை சார்ந்த வழக்குகளிலும் குற்றவாளிகளுக்குப்
பெரும்பாலும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. அதுபோலவே அரசியல் கட்சிகள்
சார்ந்த வழக்குகளிலும்கூட நீதிமன்றம் தாராளமாகவே நடந்து கொண்டிருக்கிறது
என்று இந்த ஆராய்ச்சி நூலில் ஆதாரப்பூர்வமாக
எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் தமிழக
அரசு நினைத்தால் அவர்களது உயிர்களைக் காப்பாற்ற முடியும். அதற்கான அதிகாரம்
தமிழக அரசுக்கு இருக்கிறது. இதற்கு முன்னுதாரணங்களும் இருக்கின்றன. இந்த
மரண தண்டனைகளைத் தடுத்து நிறுத்தி அவர்களது தண்டனையை ஆயுள் தண்டனையாக
மாற்றுவது மட்டுமல்ல, இந்திய சட்டப் புத்தகங்களிலிருந்து மரண தண்டனையை
முற்றாக நீக்குவதற்கும் மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்திய தண்டனை
சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில்
இடம்பெற்றிருக்கும் மரண தண்டனை வழங்கும் பிரிவுகளை நீக்கி சட்டத் திருத்தம்
கொண்டுவர மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தைப்
பயன்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
அண்ணா அசாரே சொல்வதுபோல ஒரு லோக்பால் அமைப்பு உருவாக்கப்பட்டாலும் ஊழலை
ஒழிப்பது உறுதியல்ல. ஆனால், மரண தண்டனையை முற்றாக ஒழித்துவிட முடியும்.
இன்று உலகில் 139 நாடுகளில் மரண தண்டனை நடைமுறையில் இல்லை. அந்தப்
பட்டியலில் இந்தியாவும் இடம்பெறவேண்டும். அதை சாதிப்பதற்கான முதல் படியாக
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையைத் தடுக்கும்
போராட்டம் அமையட்டும்.
|
|