|
|
சிங்கப்பூரின்
வளர்ச்சிக்கு நேற்று இன்றல்ல, பன்னெடுங்காலந்தொட்டே முக்கிய முனையமாக
விளங்கி வருவது கப்பலும் அது சார்ந்ததொழில்களும். வாஸ்கோடகாமா, 20 மே
1498ல் கள்ளிக்கோட்டைக்கு வந்தடைவதற்கு பல ஆண்டுகாலம் முன்னர்,
சீனப்பட்டும் காகிதமும் இந்திய தங்கமும் தந்தமும் மலாய ரப்பரும் தகரமும்
அரபு அழகிகளுமாய் சிங்கப்புரத்தின் வழி பல பண்டமாற்று வியாபாரம்
நடைபெற்றிருக்கின்றன.
சிங்கப்பூரின் புவிஅமைப்பும் ஆழமான கடல் பகுதியும் உலக
கடற்போக்குவரத்துக்கு ஏற்ற ஒரு இடமாக இதை அமைத்திருக்கின்றன.
சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைப் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. வளம்
என்ற ஒன்று இல்லாத நாட்டில் எல்லாமே மக்களுக்குக் கிடைக்கிறதென்றால்
இறக்குமதியின் செயல்பாட்டை நாம் சொல்லாமலே அறிந்துகொள்ளமுடியும்.
ஆனால், நான் சொல்ல வந்தது, இறக்குமதியைப் பற்றி அல்ல. சிங்கப்பூரில்
நடக்கும் கப்பல் கட்டும் தொழிலும் அது சார்ந்த உலகமும் பற்றி.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒட்டுமொத்த உலக சமுத்திரத்தில், கடலின் மீது
மிதந்து, அல்லது கால் ஊன்றி, எண்ணெய் உறிஞ்சி , சுத்தப்படுத்தி, சேமித்து
கப்பலுக்கு மாற்றித்தரும் கப்பல்கலன்களில் 70 சதவீதம் சிங்கப்பூரில்
உருவாக்கப்பட்டதுதான்.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சியில் 10 சதவீதம் கப்பல் கட்டும்
பணியிலிருந்து வருகிறது. கப்பல் கட்டும் துறை கடந்த ஐந்தாண்டுகளில் 18
சதவீத குழும வளர்ச்சியை அடைந்திருக்கிறது. 2009 ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச
பொருளாதார மந்தநிலையிலும், கப்பல் கட்டுமானத்துறையில் சிங்கப்பூருக்கு
கிடைத்த வருமானம் ஏறக்குறைய 20 பில்லியன் வெள்ளிகள்.
1963ல் சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ கப்பல்பட்டறை ஜூரோங்கில் (Jurong
Shipyard Limited) தொடங்கப்பட்டது. இதுவே தற்போது செம்ப்கார்ப் மெரீன்
(SembCorp Marine) எனப்படுகிறது. செம்ப்கார்ப் மெரீன் (SembCorp Marine)
நாட்டின் ஒட்டுமொத்த கப்பல் கட்டுமானத்தில் 30 சதவீத இடத்தை
அடைந்திருக்கிறது.
செம்பவாங்க், ஜூராங், துவாஸ் எனப் பல இடங்களில் இடம்பெற்றுள்ள செம்ப்கார்ப்
மெரீன் சார்ந்த 7 கப்பல் பட்டறைகளை மொத்தமாக இடம் மாற்றி ஒருங்கிணைந்த
செம்ப்கார்ப் கப்பல் கட்டுமானத்தளமாக ’மேற்கு துவாஸ்’ பகுதியில் நிறுவ
ஏற்பாடுகள் துவங்கப்பட்டுள்ளன.
1848ல் சிங்கப்பூருக்கு வந்த ஆங்கிலேய மாலுமி ’கேப்டன் ஹென்றி கெப்பல்’
நினைவாக பெயரிடப்பட்ட ’கெப்பல் ஷிப்யார்டு’ சிங்கப்பூரின் முக்கிய கப்பல்
கட்டும் தளங்களுள் ஒன்று. 1968ல் முறையான ஒரு நிறுவனமாக உருப்பெற்ற இது,
இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் தனது கிளைகளைப் பரப்பி அசைக்க முடியாத ஒரு
நிறுவனமாக கப்பல் கட்டுதலில் சிறந்து விளங்கிவருகிறது.
2013க்குள் கட்டி முடிக்க வேண்டி சுமார் 5 பில்லியன் வெள்ளி மதிப்புக்கு
கையில் ’ஆர்டர்’ இருக்கின்றதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பிரேஸில் மற்றும் ஆசியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கப்பூர் கப்பல்
கட்டுமான நிறுவனங்கள் கால்பதித்துள்ளன. கத்தார் மற்றும் அரபுப்பகுதிகளில்,
குறிப்பிடத்தக்க வளர்ச்சியை, அண்மையில் கப்பல் கட்டுமான நிறுவனங்கள்
அடைந்துள்ளன.
அனைத்துலக எரிபொருள் நிறுவனத்தின் கணிப்புப்படி (International Energy
Agency) உலக எண்ணெய்த் தேவையானது வருடத்திற்கு ஒரு சதவீதம் என விரிவடைந்து,
தற்போதுள்ள (2008) நிலவரப்படி ஒருநாளைக்கு 85 மில்லியன் பேரல்கள்
என்பதிலிருந்து 105 மில்லியன் பேரல்களாக 2030ல் விரிவடையும். இத்தகு
நிலையில் எண்ணெய் உறிஞ்சும் அல்லது விற்பனை செய்யும் நாடுகளும்
நிறுவனங்களும் எண்ணெய் வியாபாரத்தில் தொடர்ந்து இயங்க, கப்பல்
கட்டுதலிலும், ”ரிக்” எனப்படும் கடலிலிருந்து பெட்ரோலியத்தை உறிஞ்சும்
கலன்களையும் தொடர்ந்து உற்பத்தி செய்யும். அத்தகு உற்பத்தில், உலகின்
நாயகனான சிங்கப்பூர், தொடர்ந்து வேலைவாய்ப்பையும் முதலீட்டையும்
லாபத்தையும் அடையும்.
பெட்ரோலியத்தின் விலை உயர உயர கப்பல் கட்டுமானமும் அதிகரிக்கும். அதே
சமயம், எண்ணெய் நிறுவனங்கள் சரிந்தால் இத்தொழிலும் சரியும். உதாரணம்,
அண்மையில் மெக்ஸிகோ வளைகுடாவில் பிபி (BP)யின் எண்ணெய் உறிஞ்சு குழாயில்
ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக, உருவான பல பில்லியன் வெள்ளி இழப்பானது,
சிங்கப்பூரில் கட்டப்பட்டு வந்த அந்நிறுவனத்தின் சில கப்பல்களைத்
தாமதமாக்கின என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
0 0 0
சிங்கப்பூரின் கப்பல் கட்டுமான வரலாற்றில், ஏன், ஒட்டுமொத்த
(போருக்குப்பிந்தைய) சிங்கப்பூர் வரலாற்றில், பல உயிர்களைக் காவு வாங்கிய
மிகமோசமான விபத்து 1978 அக்டோபர் 12ல் நடந்தது. ’ஜூரோங் ஷிப்யார்டில்’
பழுதுபார்ப்பதற்கென்று வந்த ”ஸ்பைரஸ்” (Spyros) எனப்படும் கிரேக்க நாட்டு
எண்ணெய் டாங்கரில் விழுந்த ஒரு தீப்பொறி, 76 உயிர்களைக் காவு
வாங்கிவிட்டது.
ஜப்பானின் மிட்சுபிஷியால் 1964ல் உருவாக்கப்பட்ட அக்கப்பலானது, அக்டோபர் 6,
1978 அன்று ஜூரோங் கப்பல்பட்டறைக்கு வந்து சேர்ந்தது.
மதியம் 2.15 மணியளவில், ஏறக்குறைய 150 பேர் மதிய உணவை முடித்துவிட்டு
கப்பலின் உள்ளே சென்றுகொண்டிருக்கும்பொழுது இவ்விபத்து நடந்தது. 32 கப்பல்
சிப்பந்தியாளர்களும் உள்ளே இருந்தனர்.
பெட்ரோலியம் ஏற்றிவந்த அந்த டாங்குக்குள், வாயுவை வைத்து இரும்பை வெட்டும்
(cutting torch) வேலையின் போது, ஒரு தீப்பொறி தவறி விழ, எண்ணெய்-காற்று
அடர்ந்திருந்த அந்த டாங்குக்குள் தீப்பிடித்து, வெடித்து, 100 மீட்டர்
தூரத்திற்கு சிதறி விழுந்தன துகள்கள். வெப்பமும் தீயும் புகையும் மண்டிய
நிலையில் பரிதாபமாய்ச் செத்தனர் 76 பேர்.
இறந்த ஒவ்வொரு ஜூரோங் கப்பல் நிறுவன ஊழியர்களுக்கு $2000 வெள்ளியும்
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு $1000 வெள்ளியும் கப்பல் கட்டுமானத் தளத்தின்
மூலம் வழங்கப்பட்டன.
அக்டோபர் 14ல் நடந்த, தினசரி சம்பள வேலையாட்களின் மாநாட்டில் பேசிய
அப்போதைய தேசிய தொழிற்சங்க கூட்டமைப்புகளின் பொதுச்செயலாளர் திரு. தேவன்
நாயர், முதலாளிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாளவில்லை எனில்
ஒருவர் கூட வேலைக்குச்செல்லாத நிலை கொண்டுவரப்படும் என்று பகிரங்கமாக
அறிவித்தார். மேலும், பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்யும் எவரையும்
தொழிற்சங்கம் அனுமதிக்காது என்றும் சொன்னார்.
இதற்குப்பிறகு பாதுகாப்பு கூட்டங்களும் மன்றங்களும் இன்னும் முக்கியத்துவம்
பெற்றன.
இதுபோல இன்னும் சில பெரிய விபத்துக்கள் சிங்கப்பூர் கப்பல் பட்டறையில்
நடந்தன. அண்மைய ஒன்று, 2004 மே 29 அன்று ’அல்முடயானா’ என்ற எண்ணெய்
டாங்கருக்குள் பிடித்த தீ.
கெப்பல் ஷிப்யார்டின் ’பினாய்’ தளத்தில் நின்றிருந்த அக்கப்பலில் விழுந்த
ஒரு தீத்துண்டு அடியில் கிடந்த எண்ணெய்க்கசடுகளை வெப்பமேற்றி
தீப்பிடித்ததில் 7 பேர் மாண்டார்கள். இருவர் மலேசிய சீனவர். ஐவர் இந்திய
தொழிலாளர்கள்.
2008ஆம் ஆண்டில் ஜூன் மாதத்தில் மட்டும் இரண்டு விபத்துக்கள் நடந்தன.
அவற்றில் ஒன்றில் (Pacific Ataawhai) இருவர் மாண்டனர்; ஐவர் காயமடைந்தனர்.
ஆக எழுவரும் இந்தியர்கள். இதற்கு ஒருவாரம் முன் நடந்த இன்னொரு விபத்தில்
(Rainbow Star) ஒரு இந்தியர் மாண்டார்.
0 0 0
கப்பல் கட்டுமானத்துறையை பொருத்தவரை மூன்று விஷயங்களை எப்போதும்
சொல்வதுண்டு. அவை ஆங்கிலத்தில் 3D எனப்படுவதாகும். அதாவது அழுக்கான வேலை
(Dirty), ஆபத்தான வேலை (Dangerous) ஆனால் எப்போதும் உள்ள வேலை (Demand).
கப்பலில் நடக்கும் விபத்துகளில் பெரும்பான்மையானவை தீ மற்றும் பிராணவாயு
பற்றாக்குறையால் ’இருளறைக்குள்’ (Confined space) நடப்பதாகும். ஏனெனில்
கப்பல் என்பதே இருளறைகளால் ஆன ஒரு இரும்பு வீடு தானே!
இந்த இரும்பு வீட்டுக்குள்ளே நுழையும் முன் செய்யவேண்டிய முக்கியமான விஷயம்
வெளிக்காற்றைப் புகுத்தி உள்ளேயிருக்கும் கழிவுக்காற்றை வெளியாக்குதல்
ஆகும். இதனைச் செய்யாது மூன்று பேரை உள்ளே அனுப்பியதால், கடந்த வருடம், ஒரு
கம்பெனியின் மேலாளருக்கு 150,000 வெள்ளி அபராதமும் அந்த நிறுவனத்திற்கு
250,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. காற்றுப்பை போடாததற்கு இவ்வளவு
பெரிய அபராதமா என்று நினைக்காதீர்கள். பிராணக்காற்றின் பற்றாக்குறையால்
உள்ளே சென்ற மூவரும் பிணமாக வெளிக்கொண்டுவரப்பட்டார்கள். ஆமாம், மூன்று
வெளிநாட்டுத்தொழிலாளிகளும் இறந்து போனார்கள்.
அடுத்தது உயரத்திலிருந்து விழுதல். ஏனெனில் 30மீட்டர், 40 மீட்டர்
என்பதெல்லாம் சாதாரண கப்பலின் உயரம். இதுவே ‘ஆயில் ரிக்’ எனப்படும் எண்ணெய்
உறிஞ்சும் மிதவைக்கலனாக இருந்தால் 80, 100 மீட்டர் உயரம் சாதாரணம்.
அங்கிருந்து விழுந்தால் என்ன ஆகும். உள்ளே மூழ்கி முத்தெடுக்கலாம் அல்லது
மீன்பிடிக்கலாம், உயிரோடிருந்தால்.
0 0 0
கப்பலைப் பற்றி எனக்கு ஏகப்பட்ட சந்தேகம் இருந்தாலும், ஒண்ணே ஒண்ணு மட்டும்
கேட்டுக்கிறேன். ‘டைட்டானிக்’ படத்துல ஜாக்கும் ரோஸும் கிஸ்
அடிச்சுப்பாங்களே அந்த இடம் பேர் என்ன? இப்படி ஒரு சந்தேகம் உங்களுக்கு
இருக்கா? அல்லது கப்பலுக்கு எது கால், கைன்னு எப்படி பெயர் வைப்பாங்கன்னு
யோசிக்கிறீங்களா? ஒரு பிரச்சனையும் இல்லை. ரொம்ப சுலபம் தான். ஜாக்கும்
ரோஸும் கிஸ் அடிச்ச இடத்துக்கு பேர் தான் ’வாய்’, அப்படின்னு சொன்னா,
இல்லேன்னா சொல்லப்போறீங்க? சரி விஷயத்துக்கு வருவோம்.
கப்பலோட மேல் தளத்துக்குப் போய், ’டெக்’ ன்னு சொல்ற, கட்டுப்பாட்டு அறை
நடுவுல நின்னுக்கிட்டு, இரண்டு காலுக்கும் இடையில் கோடு போடுங்க.
உங்களுக்கு இடது பக்கம் இருக்குறது அதாவது கப்பலோட இடது பக்கம் போர்ட்
(Port), வலது பக்கம் ஸ்டார்போர்டு (Starboard). இந்தப்பெயர் எப்படி
வந்ததுன்னுல்லாம் கேட்கக்கூடாது.
கப்பலுக்கு முன்பக்கம் கூம்பு மாதிரி, அதுக்குப்பெயர் “போ” (Bow) (முன்னாடி
போறதனாலயா?), பின்பக்கம் ஸ்டெர்ன் (Stern). அப்புறம் கப்பலோட
நடுப்பகுதியிலிருந்து முன்னாடி உள்ளதெல்லாம் Fore எனவும் பின்னாடி உள்ள
பகுதிகளையெல்லாம் Aft எனவும் சொல்வார்கள். ஆக, ஜாக்கும் ரோஸும் நின்று,
வாய் மேல வாய் வெச்ச இடம் Forepeak டாங்க் மேல உள்ள Bow railing
பக்கத்தில்.
0 0 0
அண்மையில் நான் கலந்துகொண்ட ஒரு கப்பல் தொழிட்நுட்ப கருத்தரங்கில்
பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயம் என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது. அது,
கப்பலின் மேற்பரப்பை சுத்தப்படுத்தவும் துரு நீக்கவும் காலங்காலமாய்ப்
பயன்படுத்திய ”பிளாஸ்டிங்” (இரும்புத்தூள் (அ) மண்ணுடன் காற்றைச் சேர்த்து
அடித்து சுத்தப்படுத்துதல்) அல்லது ”ஹைட்ரோ ஜெட்டிங்” (அதிக அழுத்த
தண்ணீரைக்கொண்டு துருநீக்குதல்) போன்றவற்றிற்குப் பதில் கத்தியின்றி
ரத்தமின்றி வரும் புரட்சியைப் போல, வெறும் ”லேசர்” ஒளிக்கற்றையை வைத்து
கப்பல் மேற்பரப்பை சுத்தப்படுத்துதல் மற்றும் ”இண்டக்ஷன்” எனப்படும்
ஊடுறுவும் வெப்பத்தை வைத்து அந்த வேலையச் செய்தல். இவையெல்லாம் சிங்கப்பூர்
போன்ற நாடுகளில்அண்மைக்காலங்களில் என்பன போன்ற புதுமை புரட்சிகள் மாற்றம்
கண்டு வருகின்றன.
இதன்மூலம் இயற்கைக்கு எதிரான பல தூய்மைக்கேட்டை நாம் தவிர்க்கமுடியும்
என்பதும் இவ்வேலையைச் செய்யும் தொழிலாளர்களின் உடல் நல சீர்கேட்டை தடுக்க
முடியும் என்பதும் மிக முக்கிய பயன்பாடுகளாகும்.
0 0 0
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் (GDP) 2005ல் 0.74 சதவீதமாக இருந்த
கப்பல் கட்டுமானத்துறை, 2008ல் 1.3 சதவீத மாக வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல
ஒட்டுமொத்த வருமானமானது 2004ல் 5.3 பில்லியனில் இருந்து 15.4 பில்லியனாக
(ஏறக்குறைய மூன்றுமடங்கு) 2008ல் அதிகரித்துள்ளது. 2005ல் 82,600 பேர்
வேலைபார்த்த இத்துறையில் 2008ல் ஏறக்குறைய 116,900 பேர். அதாவது
சிங்கப்பூரின் மனிதவளத்தில் 4.8 சதவீதம் பேர் இத்துறையில் இயங்குகின்றனர்.
கணிசமான வேலைவாய்ப்பையும் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை நிற்கும்
இத்துறையில் அதிகம் பணிபுரிவது வெளிநாட்டுத் தொழிலாளர்களே.
2009ல், ஒட்டுமொத்த சிங்கப்பூரின் வேலையிடத்து விபத்தில் உயிர்நீத்தவர்களான
70 பேரில், 13 பேர் கப்பல் கட்டுமானத் துறையைச் செர்ந்தவர்கள். (அதிகம்
இறப்பவர்கள் கட்டிட கட்டுமான துறையைச் சேர்ந்த தொழிலாளர்கள்) இறந்த 13
பேரில், பாதிப்பேர் உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்கள். அடுத்து,
மேலிருந்து கீழே விழுந்த பொருளால் இறந்தவர்கள்.
’இறப்பு விகிதம்’ எனப்படுவதாவது யாதெனின் 100,000 வேலையாட்களில் எத்தனை
பேர் மாண்டனர் என்பதாகும். அதன்படி கப்பல் துறையில் 2009ல் 11.1 பேர்
மாண்டனர். இதை 2013க்குள் 4.6 ஆக குறைக்க, மனித வள அமைச்சு பலவகைகளில்
முயற்சி செய்கிறது. 4.6ஐ, அதற்குப்பிறகு, 2018க்குள் 1.8ஆக்க அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது.
ஆக, கப்பலில் வேலை செய்யும்போது கவனம் மிக அவசியம். இல்லையேல் கப்பலுக்குப்
போன மச்சான் கப்பலோடு போக வேண்டியதுதான்.
எழுத உதவிய தரவுகள்:
http://infopedia.nl.sg/articles/SIP_806_2004-12-30.html
The Association of Singapore Marine Industries
Implementing WSH 2018 for Marine Sector in Singapore
|
|