|
|
பழனிவேலின் “உபசரிப்பு”...
என் வீட்டின் சிறியதொரு நூலகத்தில் ஏதோ அவசரத் தேடலில்
திளைத்திருந்தேன். கவிஞர் பழனிவேலின் தவளை வீடு கவிதைத் தொகுப்பு கண்ணில்
பட்டது. பழனிவேல் 1975ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் சின்னயம்பேட்டையில்
பிறந்தார். தமிழ் முதுகலைப் பட்டம் பெற்ற பழனிவேல் வேளாண்மைத் துறையில்
ஈடுபட்டுள்ளார். 1996ஆம் ஆண்டிலிருந்து எழுதிவரும் இவரது கவிதைகள் புது
எழுத்து, ஆதி, தீராநதி, காலச்சுவடு, உயிர்மை, வனம் ஆகிய இதழ்களில்
வெளிவந்துள்ளன. தவளை வீடு இவரின் முதல் கவிதைத் தொகுப்பாகும்.
ஒரு
வேளாண்மையாளர் என்பதன் வெளிப்பாடு இவரின் கவிதைகள் பலவற்றில்
காணக்கூடியதாய் இருக்கின்றது. இவரின் கவிதைகளில் செடிகளும் விதைகளும்
முளைத்தபடியும் நிலங்கள் உழுதபடியும் இருக்கின்றன. சில வேளைகளில் பழங்கள்
அழுகிப் போய் கிடக்கின்றன. கவிஞர் பழனிவேலின் தவளை வீடு கவிதை
தொகுப்பிலிருந்து “உபசரிப்பு” என் கவிதையோடு இம்மாத வல்லினத்தில்
சுவடுகளின் பயணம்...
என் பால்ய வயதின் மிக அருமையான பதிவுகளாய் இடம்பெற்றிருப்பது எங்கள்
வீட்டில் மின்சாரம் இல்லாமல் போகும் அந்த அற்புதத் தருணம். மெல்லியதொரு
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எல்லாரும் ஒரே இடத்தில் கூடி இருப்போம்.
மூலைக்கொன்றாய் எதையாவது செய்தபபடி இருக்கும் நாங்கள் அந்த மின்சாரம்
தொலைத்த பொழுதுகளில் மட்டும் மூலைகளை இருளில் அமிழவிட்டு ஒரு மெல்லிய
வெளிச்சத்தின் அருகே குவிந்திருப்போம். வீட்டின் இன்னபிற அறைகளுக்கும்
கழிப்பறைக்குச் சென்று வருவது கூட மிக கணிசமாகவே நடக்கும்.
குளிர்சாதனப் பெட்டியிலிருக்கும்
பொருள்களை
மின்சாரம் வரும்வரை
மனதிலே வைத்துப் பாதுகாக்கலாம்.
ஆனால் சிறிது சிறிதாய் அழுகும்
மலர்களையும் பழங்களையும்
ஒவ்வொன்றாய் ஜன்னல் வழியே எறிய
அது ஒரு தேர்ந்த விளையாட்டு
மின்சாரம் தொலையும் அந்தப் பொழுதில் குளிர்சாதப் பெட்டியில் இருக்கும்
பொருள்களின் ஆயுள் குறித்து எந்தவொரு கவலையும் எனக்கிருந்ததில்லை. அது
குறித்து அலட்டிக் கொண்டிருக்கும் அம்மாவையும் அண்ணியையையும் நான்
ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை. நேற்றுவாங்கி நாளை குழம்பு வைக்க
வைத்திருக்கும் மீனின் ஆயுள் குறித்தும், காய்கறிகள் பழங்களின் எதிர்காலம்
குறித்தும் அவர்களின் கவலைகள் நீண்டபடி இருக்கும். அதுகுறித்து தொடர்ந்து
அலட்டியபடியே இருப்பார்கள். “ஆதி மனிதன் என்ன 'ஐஸ்பெட்டியா'
வைத்திருந்தான்” என்கிற அறிவுப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலாய் வரும்
அவர்களின் முறைப்பு அந்த இருட்டில் பெரிதாய் எனக்குத் தெரிந்ததில்லை. ஒரு
இரண்டு நாள்களுக்கு மின்சாரம் இல்லாமல் போனால், பெட்டிக்குள்ளிருக்கும்
பொருள்கள் வெளியே வந்திருக்கும். சிலவற்றை வீசியிருப்பார்கள். சிலவற்றைப்
பயன்படுத்தலாம் என்ற நோக்கில் வைத்திருப்பார்கள்.
தொலைக்காட்சிக்குப் பதிலாக
சுவாரசியமான சிறு சண்டைகள்
பொழுதைப் போக்கும்
நாம் என்ன செய்ய முடியும்
மின்சாரம் தொலையும் பொழுதுகளில்தான் தொலைக்காட்சி பெட்டிக்கு விடுமுறை
கிடைக்கும். அது ஒரு மெல்லிய சோம்பலோடு தீண்டுவாறின்றி தனது இருப்பிடத்தில்
அமைதியாய் தரித்திருக்கும். இதுவரை பேச மறந்துபோன வாழ்வின் மிக சுவாரசியமான
செய்திகள் அங்கே பேசப்பட்டு கொண்டிருக்கும். அப்பா அம்மாவின் காதல்
திருமணம் குறித்தும் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மிக முக்கியமான
செய்திகள் குறித்தும் வரையரையின்றி விவாதங்கள் தொடரும். பள்ளியில் அண்ணன்
செய்யும் 'சேட்டைகள்' குறித்து போட்டுக் கொடுப்பது கூட இப்படியான வேளைகளில்
நடப்பதுண்டு. எல்லாவற்றையும் மிக அமைதியாய் கேட்டபடி இருள் எம்மை
சூழ்ந்திருக்கும். இயல்பாகவே மின்சாரம் இல்லாத பொழுதுகள் எந்தவொரு செயற்கை
ஒலிகளும் இன்றி நிசப்பதத்தில் ஆழ்ந்திருப்பதை நாம் உணரலாம்.
மின்சாரம் குடிசை தொழிலல்லாதபடியால்
கணத்திற்கு கணம்
புளித்துக் கொண்டிருக்கும் மாவு
இனிப்பு வகைகள் இறைச்சித் துண்டுகள்
பால் பொருள்கள்
நல்லவேளை மின்சாரம் நின்ற உடனே அதனை உடனடியாக உற்பத்தி செய்து கொள்ளும்
திறன் அனைவருக்கும் வாய்க்கவில்லை. யாராவது ஒரு சிலரது வீட்டில் மட்டும்
மின்சாரம் இல்லாமல் போன உடனே ஜெனரேட்டர்கள் இயங்கத் தொடங்குவதுண்டு. அந்த
மெல்லிய இரவின் அல்லது பகலின் அமைதியை சிதைக்கும் ஜெனரேட்டரின் சத்தங்கள்
நம்மை தொல்லை செய்தபடியே இருக்கும். தோசைக்கு அரைத்து வைத்திருக்கும்
மாவும், இனிப்புகள், இறைச்சித் துண்டுகள், பால் பொருள்கள் எல்லாம் சிறிது
சிறிதாய் கெடத் தொடங்கும்.
நண்பர்கள் பல காலம் பேசும்படி
புளித்த இட்லிகளைத் தந்து
நட்புப் பாராட்டலாம்
கிண்டல் செய்ய வேண்டாம் தயவு செய்து
யாரும்
தெய்வாதீனமாய் எடுத்துக் கொள்ளலாமே...
புளித்த இட்லிகளை நண்பர்களுக்குத் தந்து நட்பு பாராட்டுவது ஒரு பக்கம்
இருக்கட்டும். நமக்கும் சில வேளைகளில் அந்த புளித்த இட்லிகள் தான் உணவாகக்
கூடும். “காலையில இட்லிக்கு அரைச்சு வைச்சுட்டேன் - மத்தியானத்திலிருந்து
‘கரண்ட்’ இல்ல. அதான் மாவு கொஞ்சம் புளிக்குது. இவ்ளோ மாவையும் கீழேயா
கொட்ட முடியும்” அம்மாவின் அக்கறையான பேச்சுக்கு முன் புளித்த இட்லிகள்
வாழ்வு பெற்றிருக்கும். பெரும்பாலும் மின்சாரம் இல்லாத பொழுதுகளின் அம்மா
எங்களுக்குச் சாப்பாடு ஊட்டிவிடும் நிகழ்வுகள் கூட நடப்பதுண்டு.
எல்லாருக்கும் தனித் தனியாக சாப்பாடு போட்டு கொடுப்பதை அன்று பெரும்பாலும்
தவிர்த்துவிடுவார். மின்சாரம் எப்போதாவது இல்லாமல் போது ஒருவகையில்
தெய்வானதீனம்தான்...
நல்லவேளை
மின்சாரமின்றியும்
தொலைப் பேசி இயங்குவது
மணி அடிக்கிறது
மின்சாரம் நின்ற நண்பர்களின்
வீடுதோறுமிருந்தும்
புளித்த அழைப்புகள்.
ஒருவருக்கு ஒருவர் மின்சாரம் இல்லாமல் போன துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள
தொலைப்பேசிகள் இயங்கிபடி இருக்கிறது. எங்கெல்லாம் மின்சாரம் இல்லை -
எப்போது மின்சாரம் வரும் என்பதுதான் ஒரே உலகப் பிரச்சனையாக அப்போது
பேசப்பட்டுக் கொண்டிருக்கும். குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் மீன்
இறைச்சி பற்றியும், புளித்த மாவு குறிக்கும், மீந்திருக்கும் மாவையோ அல்லது
இட்லியையோ அவர்களுக்குத் தருவது குறித்தும் உரையாடல் தொடர்ந்தபடி
இருக்கும். காற்றாடி இல்லாமல் இன்றைய இரவை சமாளிப்பது எப்படி என்பது
மட்டும்தான் மின்சாரம் இல்லாமல் போகும் பொழுதுகளில் என்னை பயமுறுத்தும்
இன்றைய ஒரே சிக்கல்... தொலைப்பேசிக்குப் பதிலாக காற்றாடியை இயங்க
வைத்திருக்கலாம்...
|
|