|
|
WALL.E : நாளைய பூமியின் கதை
ஒரு நாள் இந்த பூமி ஓர் இருண்ட கிரகமாய் ஒடுங்கி
கிடக்கிறது. குப்பை மேடுகள் கோபுரங்களாக உயர்ந்து இருக்கின்றன. இங்கே
மருந்துக்கும் மனிதனின் வாடை வீசுவதில்லை. இலைகள் அல்ல அதன் சருகுகளுக்குக்
கூட இங்கே இடமிருக்கவில்லை. பறவைகள் அற்ற வானம் கரும்புகையால் சூழப்படுறது.
உயிரனங்கள் அற்ற இது போன்றதோர் உலகைக் கற்பனை செய்து பார்க்கக் கூட
நடுக்கமாய் இருக்கிறது. ஆனால் இப்படியொரு சூழலை எதிர்கொள்ளும்
பேராபத்தில்தான் இந்தப் பூமி இருக்கிறது என்பதுதான் உண்மை.
உலகத்தில் நிகழும் பல்வகை தூய்மைக்கேடுகளுக்கும் அதனால் நிகழும்
பேரழிவுக்கும் உலக முதலாளிகளான வளர்ச்சியடைந்த நாடுகளே மிக முக்கிய
காரணிகளாக இருந்து வருகின்றன. இன்றைய கணக்கெடுப்பின்படி சீனா, அமெரிக்கா,
உருசியா, மெக்சிக்கோ, ஜப்பான் போன்ற நாடுகள் காற்றுத் தூய்மைக்கேட்டை
நிகழ்த்தும் உலகநாடுகளில் முதன்மை வகிக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின்
இறுதியில் ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்துறை புரட்சியின்போது பல
தொழிற்சாலைகள் திட்டமிடப்படாதக் கழிவேற்றம் செய்தபோதுதான் இந்த உலகம் மிகக்
கடுமையான சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டை முதன்முதலாக எதிர்கொண்டது.
அப்போதுதான் வாந்திபேதி(cholera) மற்றும் குடற்காய்ச்சல்(typhoid) போன்ற
நோய்களும், நச்சுவாயுக்களாலான புகைமூட்டங்களும் பல்லாயிரம் மக்களின் உயிரை
குடித்தன. தொடர்ந்து பல நூறு ஆண்டுகளின் தொழிற்துறை வளர்ச்சி நீர்நிலைகளை
நஞ்சாக்கி, காற்று மண்டலத்தைச் செல்லரித்து, உலக தட்பவெப்பத்தை
மாற்றியமைத்து பல்வகை கேட்டினை விளைவித்திருக்கின்றது. மேலும் ஆரம்ப
காலத்திலேயே அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் மிக சுயநலமாக
தங்களின் கழிவுகளையும் குப்பைகளயும் மூன்றாம் உலகநாடுகளுக்குக்
கடத்திவிடுவதை வழக்கமாக்கிவிட்டன. இதனால் பல மூன்றாம் உலகநாடுகளும் இந்தச்
சுற்றுப்புறத் தூய்மைக்கேட்டிற்கு ஆளாகியுள்ளன.
இதுபோன்ற
தூய்மைக்கேட்டின் விளைவால் உலகம் என்னவாகும் என்பதையே மையமாய் வைத்து
Andrew Stanton தனது வால்.ஈ (WALL.E) திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஓர்
அறிவியல் புனைவான (science fiction) இப்படம், 2008 ஆம் ஆண்டு Pixar
Animation Studios தயாரித்து வெளியிட்ட ஒரு முழுநீல சிறப்புப் பண்பியலுடைய
இயக்கவூட்டத் திரைப்படம் (Full Length Feature Animated Film) ஆகும். பல
விருதுகளை வென்று குவித்த இப்படம் பிரபல TIME பத்திரிகையின்
கருத்துக்கணிப்பின்படி கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்த சிறந்த
திரைப்படங்களின் வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் படத்தின் தளம் எதிர்காலத்தில், சுமார் 700 ஆண்டுகளுக்கு பின்னர்
இந்தப் பூமியில் தொடங்குகிறது. அப்போது இந்த பூமி, உயிரினங்கள் வாழ
தகுதியற்று, நச்சுவாயுக்களால் சூழப்பட்டு வெறும் குப்பைமேடாய் சித்தறிக்கப்
படுகின்றது. இதற்கு முன்னர் ஒரு காலத்தில் பெருமளவில் பொருள்கள்
வாங்குவதையும் பயனீட்டையும் ஊக்குவித்த BnL என்னும் இராட்சசக் கூட்டுறவு
நிறுவனம் பூமியை ஆக்கிரமித்ததில்தான் பூமி தன் முகம் இழந்திருப்பதாகக்
காட்டப்படுகின்றது. ஒரு கட்டத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறவே அக்சியோம்
(Axiom) என்னும் விண்கலத்தில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு
விடுகின்றனர். இதனைத் தொடர்ந்து பூமியைத் தூய்மை படுத்தும் பணியை BnL
நிறுவனம் வால்.ஈ (WALL.E, Waste Allocation Load Lifter, Earth Class)
என்னும் இயந்திரங்களின் பொறுப்பில் விட்டுச் செல்கிறது. பல நூறு ஆண்டுகள்
ஆகியும் துப்புறவு பணி முற்றுப் பெறாததால் மனிதர்கள் விண்வெளியிலேயே தங்கி
விடுகின்றனர். பூமியில் விட்டுச் செல்லப்பட்ட இயந்திரங்கள் எல்லாம்
செயலிழந்த பின் மிகக் கடைசி இயந்திரமாக எஞ்சி இருக்கிறது இப்படத்தின்
நாயகப் பாத்திரமான வால்.ஈ.
வால்.ஈ கணசதுர வடிவிலான அழுக்கேறிய இரும்பு உடலையும், ஒவ்வொரு கையிலும்
இரும்பிலான மூன்று விரல்களையும், ஒரே நேரத்தில் இரண்டையும் பயன்படுத்தி
ஒன்றை உற்றுநோக்கும் தொலைக்காட்டி (binocular) கண்களையும், பீரங்கி போல்
தரையைச் சறுக்கிச் செல்லும் பாதங்களையும் கொண்ட ஓர் இயந்திரம். தனக்குள்
பதியப்பட்ட கட்டளையின்படி குப்பைகளை எல்லாம் தன் வயிற்றுக்குள் அமுக்கி
அவற்றைத் தன் உடலை ஒத்த கணச்சதுரங்களாக மாற்றி பின் கோபுரங்களாக ஒன்றின்
மீது ஒன்றாய் அடுக்கி வைக்கும் பணியை நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய்ச் செய்து
வருகின்றது. சூரிய ஓளியை உள்வாங்கி ஒரு நாளும் சலிக்காமல் துப்புறவு பணியை
மேற்கொள்ளும் வால்.ஈ மனிதனைப் போல எல்லா உணர்வுகளையும்
உணர்ந்துகொள்ளும்படியான ஒர் உணர்வுத் தளத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கி அடுத்த ஐந்து நிமிடங்களில் எனக்கு,
வால்.ஈ ஓர் இயந்திரம் என்ற உணர்வே இல்லாமல் போனது. அந்த அளவுக்கு என்
பரிதாபங்களை எளிதில் சம்பாதித்திருந்த ஒரு மனிதனாய் என்னை நெருங்கி
இருந்தான் வால்.ஈ.
நெடுங்காலம் யாருமற்ற வெளியில் ஒரு பெருஞ்சுழலாய்த் துரத்தி கொண்டிருக்கும்
தனிமையானது வால்.ஈயின் உடலெங்கும் துருப்பிடித்த கரையாய்ப்
படிந்திருக்கிறது. அவன் தனது தனிமையைச் செயற்பாடுகளால் நிரப்பிக் கொள்ள,
குப்பைக் கூளங்களில் தனக்குப் பிடித்தப் பொருள்களை எல்லாம் சேகரித்து தனது
கனவுந்தில் வகைபடுத்தி அடுக்கி வைக்கிறான். தனது இருப்பிடத்தை வண்ண
விளக்குகளால் அலங்கரித்து வைக்கிறான். புதிதாய் தனக்குக் கிடைத்த கரப்பான்
பூச்சி நண்பனை மிக கவனமாய்த் தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்து
உணவளித்துத் தங்கச் செய்கிறான். எப்போதோ தன் கையில் கிடைத்த ஒளிநாடாவை
முடுக்கிவிட்டு, பாடல் காட்சியை இரசித்துப் பார்த்துத் தன் நினைவுத்
தளத்தில் (Memory) பதிவு செய்து கொள்கிறான். பதிவு செய்தப் பாடலை மீண்டும்
மீண்டும் கேட்டுத் தன் மொழியில் முணுமுணுத்துக் கொள்கிறான். ஒரு முறை இரு
காதலர்கள் கைக்கோர்க்கும் காட்சியைத் தன் ஓளித்திரையில் பார்க்கிறபோது தன்
தொலைக்காட்டி விழிகளில் அக்காட்சியை நிரப்பி உணர்வுத் தளத்தில் வழியவிட்டு
நெகிழ்ந்து போகிறான். அந்தத் தருணம் தனது ஒரு கையை மற்றொரு கையில் வைத்துக்
கோர்த்துக் கொள்ளும் வால்.ஈ தன்னோடு யாருமில்லாத வெறுமையை எனக்குள்ளும்
கடத்தி விட்டுச் செல்கிறான்.
இப்படியெல்லாம் வாழ்ந்திருக்கையில் ஒரு நாள், குப்பை கூளங்களில் பல
நூற்றாண்டுக்குப் பிறகு உலகில் முளைத்த ஒரு சிறு தாவரத்தை வால்.ஈ
கண்டெடுக்கிறான். அதை மிக கவனமாய் மண்ணோடு பிடுங்கி ஒரு பழைய காலணிக்குள்
நட்டு வைக்கிறான். இந்த தாவரம்தான் தன் வாழ்க்கையில் ஒரு மிக பெரிய
திருப்புமுணையை ஏற்படுத்தும் என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
இதற்கடுத்தக்
காட்சியில், ஒரு பெரிய விண்கலம் பூமியில் வந்திறங்குகிறது. வால்.ஈ-யால்,
ஈவா என்று அழைக்கப்படும் இந்தப் படத்தின் நாயகி ஈவ் (EVE, Extraterrestrial
Vegetation Evaluator) அந்தக் கலத்திலிருந்து இறக்கப்படுகிறாள். ஈவா பல
நூற்றாண்டுகள் அறிவியல் வளர்ச்சியில் வார்க்கப்பட்ட ஒரு அதி நவீன
இயந்திரம். அப்பழுக்கற்ற வெண்மை நிறமும் முட்டை போன்ற உருவமும், நீல நிற
சீரொளி (laser) கண்களும் கொண்ட ஈவா, பல காலம் கழித்து உலகில் முளைத்த முதல்
தாவரத்தை அக்சியோம் விண்கலத்துக்கு எடுத்துச் செல்லவே வந்திருக்கிறாள் என்ற
உண்மை அறியாத வால்.ஈ அவளைக் கண்டதுமே காதல் கொள்கிறான்.
ஆரம்பத்தில் மிக ஆவேசமாய் தான் சந்தேகிக்கிற அனைத்தையும் சுட்டுத்தள்ளும்
ஈவாவை ஒரு வித பயத்துடன் பின் தொடர்கிறான் வால்.ஈ. மெல்ல மெல்ல அவளை
நெருங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ஒருவர் பெயரை ஒருவர்
உச்சரித்துப் பழகும் இக்காட்சி ஓர் அழகிய கவிதை. ஈவாவைத் தன் கணவுந்துக்கு
அழைத்துச் சென்று தான் சேர்த்து வைத்தப் பொருள்களை எல்லாம் காட்டி
மகிழ்கிறான். தான் ரசித்த காதல் காட்சியை ஒளித்திரையில் காட்டி சற்றே
உணர்ச்சி வயப்பட்டு ஈவாவின் கைகளைப் பிடிக்க முயன்று பின் நடுக்கத்துடன்
விலகுகிறான். இவற்றை எல்லாம் தொடர்ந்து தான் பத்திரப்படுத்தி வைத்த சிறு
தாவரத்தை ஈவாவிடம் காட்டுகிறான். அப்போது சற்றும் எதிர்பாராத வண்ணம் ஈவா
தன் உடலைப் பிளந்து அந்தத் தாவரத்தை உள்ளிழுத்துக் கொள்கிறாள்; உடனே
அக்சியோம் விண்கலத்திற்கு குறிகை (signal) அனுப்பிவிட்டுத் தன் இயக்கத்தை
அணைத்துக் கொண்டு அசைவுற்று கிடக்கிறாள்.
ஈவாவுக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத வால்.ஈ அவளை உயிர்ப்பிக்க பல
முயற்சிகளை மேற்கொள்கிறான். மழையில் நனையாமல் அவளைப் பாதுகாக்கிறான்;
உலோகக் கம்பியால் கட்டி தான் செல்லும் இடமெல்லாம் இழுத்துச் செல்கிறான்.
தன் முயற்சிகள் யாவும் பயன் தராமல் போகவே வால்.ஈ, ஈவாவை சூரியக் கதிர்
படுமோர் இடத்தில் நிறுத்திவிட்டு கவலையுடன் தன் வழக்கப்பணிகளைத்
தொடர்கிறான். அப்போது திடீரென ஈவாவின் விண்கலம் பூமிக்கு இறங்கி அவளைத்
தனக்குள் இழுத்துக் கொண்டு விண்வெளி நோக்கி புறப்படுகிறது. இதைக் கண்ட
வால்.ஈ பதறிப்போய் எதைப் பற்றியும் யோசிக்காமல் ‘ஈவா ஈவா’ என்று அலறியபடி
ஓடிச் சென்று விண்கலத்தின் ஒரு நுணியைப் பற்றி விண்வெளியை அடைகிறான்.
விண்வெளியில், அக்சியோம் கலத்தில் இருக்கும் மனிதர்கள் தங்கள் இயல்பு
நிலையைவிட்டு மாறுபட்டு இருக்கின்றனர். எல்லா பணிகளையும் பல்வகை
இயந்திரங்கள் செய்து விடுவதால் உடலுக்கு எந்தவோர் அசைவும் கொடுக்காமல் உடல்
பருத்தும் விண்வெளியின் மிக குறைந்த ஈர்ப்புத் தன்மையினால் ஒரு வித எழும்பு
நோய்க்கு ஆளாகியும் இருக்கின்றனர். எப்போதும் ஒரு மிதக்கும் மின்
நாற்காலியில் அக்சியோமை வலம் வருகின்றனர். முன்னால் இருக்கும் யாரையும்
எதையுமே கவனிக்கமுடியாதபடி அவர்கள் முன்னால் எப்போதும் ஒரு தொடுதிரை
மிதந்து கொண்டே இருக்கிறது. அந்தத் தொடுதிரை மூலமே சுற்றி இருப்பவருடன்
தொடர்பு கொள்கின்றனர். இவற்றுக்கெல்லாம் மேலே, பூமி என்ற ஒன்று
இருப்பதையும், தம் மூதாதையர் அங்கிருந்து தான் கடத்தப்பட்டிருக்கின்றனர்
என்ற விழிப்புணர்வும் இல்லாமலே இருக்கின்றனர். அக்சியோமிக்கு கேப்டன் பீ
(Captain B. McCrea) என்ற ஒரு விமானி இருந்தும் அக்சியோமின் மொத்த
இயக்கத்தை ஓட்டோ (Auto) என்னும், செயற்கை அறிவாற்றலைப் (Artificial
intelligence) பயன்படுத்தி செயல்படும் ஒரு தானியங்கிக் கருவி, முழுக்க
முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மனிதர்களின் பூர்வீகத்தை
மறக்கடித்து அவர்களை எப்பொழுதும் அக்சியோம் வாசிகளாகவே வைத்திருக்க
வேண்டும் என்ற ரகசியக் கட்டளை பதியப்பட்ட ஓட்டோ பிற்பகுதியில் தன் கட்டளையை
எப்படியும் நிறைவேற்றும் மிக கொடூர எதிர்மறை பாத்திரமாக மாறுகிறது.
ஓட்டோவிற்கு கோ-4 (GO-4) என்னும் பொடி இயந்திரம் ரகசிய கையாளாய்ச்
செயல்படுகிறது.
ஈவா கொண்டு வந்திருக்கும் தாவரம் பூமியில் மீண்டும் வாழ்வுத் தொடங்கும்
என்பதின் அறிகுறியாகும். ஈவா அக்சியோமில் நுழையும்போதே கோ-4 பொடியன்
ஓட்டோவின் கட்டளையின் பேரில் அந்தத் தாவரத்தைத் திருடி பதுக்கி வைக்கிறான்.
இதற்கிடையில் கேப்டன் பீ பூமியைப் பற்றியும் இந்தத் தாவரத்தின் மூலம்
அக்சியோமைப் பூமிக்கு பாய்ச்சும் செயற்பாடுகளைப் பற்றியும் அறிகிறான்.
ஆனால் தாவரம் பதுக்கப்படுகிறது. தாவரத்தைத் தவறவிட்ட ஈவா ஒரு பழுதடைந்த
இயந்திரமாய்க் கருதபட்டு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்படுகிறாள். இதுவரை
ஈவாவை பின்தொடர்ந்த வால்.ஈ கேப்டனின் கண்ணில் பட்டு விடவே அவனும்
சுத்தப்படுத்தப்பட பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கே
ஈவாவின் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளால் அவள் வதைக்கப்படுகிறாள் என்று
தவறாக புரிந்து கொள்ளும் வால்.ஈ தன் காதலியைக் காப்பாற்றிவிட வீரு
கொண்டெழுந்து சோதனைகூடத்தின் கண்ணாடியை உடைத்து உள்நுழைகிறான். தொடர்ந்து
அவனால் இயந்திரங்கள் யாவும் முட்டி மோதி பெரும் சேதம் ஏற்படுகிறது. இதனால்
பொறுமை இழந்த ஈவா வால்.ஈயை அவசர நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஓர்
இனண வான்கலத்தில் ( escape pod) ஏற்றி பூமிக்கு அனுப்பிவிட முற்படுகிறது.
இந்த நேரத்தில்தான் கோ-4 தான் திருடிய தாவரத்தை மற்றுமோர் இணைவான்கலத்தில்
ஏற்றி பூமிக்கு அனுப்ப முற்படுவதை ஈவா பார்த்து அதிர்கிறாள். அதற்குள்
வால்.ஈயும் அதே வான்கலத்தில் ஏறி, பின் ஒரு இயக்கக் கோளாறினால் அது
வெடிப்பதற்குள் , தன்னோடு சேர்த்துத் தாவரத்தையும் காப்பாற்றி ஈவாவை
மீண்டும் வந்தடைகிறான். வால்.ஈயின் அரியச் செயலினால் பெரும்
மகிழ்ச்சியடைகிறாள் ஈவா. தங்களின் மகிழ்சியைக் கொண்டாடும் வகையில் இருவரும்
சேர்ந்து நடனமாடுகின்றனர், விண்வெளியெங்கும் காதலைத் தூவியபடி.
இதனையடுத்து ஈவா தாவரத்தைக் கேப்டன் பீயிடம் சேர்க்கிறாள். ஈவாவின்
நினைவுத்தளத்தை முடுக்கியவுடன் தோன்றிய ஒர் ஒளித்திரையில் பார்த்து, இறந்து
கிடக்கும் பூமியின் தற்போதைய நிலையைக் கேப்டன் பீ அறிகிறான்; அக்சியோமில்
தன் இனத்தின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதைவிட பூமியை மீட்டெடுத்து அங்கே
வாழ்ந்தே ஆக வேண்டும் என்ற விழிப்புநிலைக்கு வருகிறான். அதே சமயம் பூமியில்
தான் இயக்கமற்றுக் கிடந்தபோது வால்.ஈ தன்னை உயிர்ப்பிக்க மேற்கொண்ட
முயற்சிகளையும், தன் மீது செழுத்திய அன்பையும் அக்கறையையும் பார்க்க
நேரிட்டபோது ஈவா வால்.ஈயின் மீது காதலில் விழுகிறாள். நடப்பதை எல்லாம்
கவனித்துக் கொண்டிருந்த ஓட்டோ தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற தடையாய்
இருக்கும் வால்.ஈயைத் தாக்கி அதன் பாகங்களைச் சிதைக்கிறது. வால்.ஈயைச்
சரிசெய்யும் உபரி பொருள்கள் பூமியில் இருக்கும் அதன் கணவுந்தில்தான்
இருக்கிறது என்று உணரும்போது வால்.ஈயைக் பூமிக்கு அழைத்துச் செல்ல
முடிவெடுக்கிறாள் ஈவா. கேப்டன் பீயும் ஈவாவும் ஒரே நேரத்தில் பூமிக்குச்
சென்றே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். ஈவா கொண்டு வந்த
தாவரத்தை அதற்கென அக்சியோமில் அமைக்கப்பட்டிருக்கும் தடயறிக்கருவிக்குள் (holo-detector)
பொருத்தி பூமிக்கான மிகைப்பாய்ச்சலை (hyper jump) முடுக்கிவிடுவதே அதற்கு
ஒரே வழி. இது சாத்தியமானதா? ஓட்டோவின் தாக்குதலை இவர்களால் எதிர்கொள்ள
முடிந்ததா? நூற்றாண்டுகள் கடந்து பூமியில் மீண்டும் வாழ்க்கை தொடங்கியதா?
வால்.ஈ பழுதுபார்க்கப் பட்டு ஈவாவுடன் இணைந்தானா? தன் மண் மீது பற்றுற்ற
மனிதனும் ஒரு காதலுற்ற இயந்திரமும் தங்களுக்கு உணர்த்தப்பட்ட அறிவுநிலையைக்
கடந்து வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளை உடைத்து வாழ்வை வென்றனரா?, என்ற
கேள்விகளுக்குப் பதில்களாய் அமைகின்றன படத்தின் இறுதிகட்ட காட்சிகள்.
இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது என் மனமுழுக்க
வியாபித்திருந்தான் வால்.ஈ. இவனின் பாத்திரப்படைப்பே இந்த திரைப்படத்தின்
வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாகும். ஒரு பெரும் சூன்யத்தை எதிர்கொள்ளும்
மனிதனின் உணர்வுகளையும் அதன் விளைவால் கிடைக்கரிய அன்பை அதீதமாய்
அங்கீகரிக்கும் அவனின் மனப்போக்கையும் செயற்பாடுகளையுமேதான் வால்.ஈ என்ற
இயந்திரப் பாத்திரம் பிரதிபளிப்பதால் இப்பாத்திரம் நம் மனதை எளிதில்
கவர்கிறது.
அடுத்ததாக இப்படத்தின் திரைக்கதையும் அதற்கேற்ற காட்சியமைப்புமே இதன்
பெரும் பலம். இன்றைய சூழ்நிலையில் பூமியில் நிகழ்ந்துவரும் பல்வகை
தூய்மைக்கேட்டினால் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பாதிப்புகளை அனுமானித்துக்
காட்டி எச்சரிப்பது மட்டுமில்லாமல் இத்திரைக்கதை காதல் எனப்படும் உணர்வை
அதற்கான சரியான பரிணாமத்தில் எடுத்துக் காட்டுகிறது. இதன் இயக்குனர் Andrew
Stanton காதலைப் பற்றி கூறுகையில், தனக்கு அறிவுறுத்தப்பட்ட அறிவோடு
மாறுபட்டு நிற்கவும் தயங்காத அன்பு நிலையே, வாழ்க்கையின் கட்டமைப்புகளைத்
தகர்த்து வெற்றி காணும் என்கிறார். நம் சமூக அமைப்புக்கு எதிரானதாக
இருக்கக்கூடும் எனினும் காதலின் மீதான இத்தகையப் பார்வை மிகச் சரியானதே.
அன்பு அல்லது காதல் என்ற சொல் நம் புரிதலை விட மிக ஆழமானது; அது
அறிவுநிலைக்கு மாறுபட்டும் இருக்கலாம்; மேலும் அது மிகவும்
வெகுளித்தனமானதும் கூட. பல வேளைகளில் நம் சமூகம் நம்மைச் சுற்றி
எழுப்பியுள்ள வட்டத்துக்குள்ளும் கட்டத்துக்குள்ளும் அது அடங்குவதில்லை.
அது ஒரு சன நெருக்கடியில் சந்தித்த ஒரு பெண்ணின் முகத்தைக் காலம் முழுக்கத்
தேடி அலையச் செய்யலாம்; தன் பூனையைத் தொலைத்த பேரறிஞரைக் கதறி அழச்
செய்யலாம்; வீட்டிற்குத் திருட வந்தவனுக்கு உணவளித்து உபசரிக்கலாம்; பல
வருடங்கள் தான் வளர்த்த மரம் வெட்டப்படும்போது ஒரு தற்கொலையைக் கூட
தூண்டிவிடலாம்; உண்மையில் எது அன்பெனப்படுகிறதோ அதை எதிர்கொள்ள மிகுந்த
வலிமை வேண்டும். இத்தகைய வலிமையுள்ளவர்களே பல இடர்களைக் கடந்து இணைய
முடியாமல் போனாலும்கூட காலத்தை வென்று காவியங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இத்தகைய வலிமைமிக்க ஒரு காதல், அதன் ஆழம் குறையாமல், காமக்
கிளர்ச்சியூட்டும் எந்த காட்சிகளும் இல்லாமல் ஏன் ஒரு ‘ஐ லவ் யூ’ கூட
இல்லாமல் படம் நெடிகிலும் நம் மனதை மயிலிறகால் வருடிச் செல்கிறது.
மிக துள்ளியமாய் அமைந்திருக்கும் காட்சியமைப்பு முதல் பாதியில் மனிதன் அற்ற
பூமியிலும் மறுபாதியில் விண்வெளியிலும் திரைக்கதையை நகர்த்தி மிக
நம்பும்படியாக புனையப்பட்டும் இயக்கப்பட்டுமிருக்கிறது. பூமியின்
வளமின்மையை உணர்த்துவதற்காக பூமியைக் காட்டும் காட்சிகளில் ஒளி அளவு
குறைக்கப் படுவதும் அக்சியோம் வான்கலத்தின் நவீனத்துவத்தை பிரகாசமாக
காட்டுவதும் காட்சிக்கேற்ற உணர்வுநிலையை நமக்குள் உற்பத்தி செய்கிறது.
மேலும் அக்சியோமின் அதி நவீன பின்னனி அமைப்பும் (setting), அங்கே மனிதனின்
வாழ்க்கை முறையும் பார்க்கும்போது, ஒரு வேளை எதிர்காலம் இப்படிதான்
இருக்குமோ என்று, கேள்விகளுக்கு இடமில்லாமல் ஏற்க முடிகிறது.
இவற்றை எல்லாம் தவிர்த்து இந்தப் படத்தைப் பற்றி மிக முக்கியமாய்ப்
பேசவேண்டிய தொழிற்நுட்ப கூறு ஒன்று இருக்கிறது. அது இந்தப் படத்தின் ஒலி
இயக்கமாகும். இயக்கவூட்ட வரலாற்றில் தன் படத்தில் முதன்முதலாக ஒலியைப்
புகுத்திய நிறுவனம் Walt Disney ஆகும். 1928-இல் வெளிவந்த தனது Steamboat
Wille எனும் கார்டூனின் மூலம் இயக்கவூட்டத் திரைப்படங்களில் ஒலி கூற்றுக்கு
ஒரு புதிய பரிணாமத்தை வழங்கியதும் இந்நிறுவனமே. வால்..ஈ படத்தின் ஒலி
இயக்குனர் Ben Burtt என்பவர் Star Wars (1977), Invasion of the Body
Snatchers (1978), Raiders of the Lost Ark (1981), E.T. the
Extra-Terrestrial (1982), Indiana Jones and the Last Crusade (1989)
போன்ற புகழ்ப்பெற்ற படங்களில் ஒலி இயக்குனராய்ப் பணியாற்றியுள்ளார். இந்தப்
படத்தில் இயந்திரங்கள்தான் அதிகம் நடித்திருப்பதால் இதில் அவை நீள வசனங்கள்
பேசவேண்டிய அவசியம் இருக்கவில்லை. உடல் அசைவின் மூலமும் சிறு சிறு இயந்திர
ஒலிப்புகள் ( Robotic sound) மூலமே அவை தொடர்பு கொள்கின்றன. இத்தகைய
இயந்திர ஒலிப்புகளை Ben தான் கணினியில் வடிவமைத்திருக்கிறார். மனித குரலை
உள்வாங்கி அவற்றைக் குரல்பதிவுக்கான மென்பொருளைப் பயன்படுத்தி
இயந்திரங்களுக்கேற்ற எண்ணியல் ஒலிகளாக (digitalized sound) மாற்றி
இருக்கிறார். மேலும் செயற்கை அறிவாற்றலைப் பயன்படுத்தும் ஒரு தானியங்கிக்
கருவியான ஓட்டோவிற்கு முழுக்க முழுக்க மனித குரலின் உதவியை நாடாமலே குரல்
ஒலியை இயக்கியுள்ளார். இதற்கு MacInTalk எனப்படும் ஒரு பேச்சொலியாக்க
(speech synthesizer) கணினி அமைப்பு முறையை பயன்படுத்தியுள்ளார். இது
விசைப்பலகை (keyboard) அனுப்பும் எழுத்துமுறை உள்ளீட்டை (text input)
பேச்சொலியாக மாற்றி தருகின்றது. இப்படியாக Ben-உம் அவரின் குழுவினரும்
இப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமான பின்னனி குரலை
உருவாக்குவதில் தொழிற்நுட்பத்தின் உதவியோடு மிக கடுமையாக
உழைத்திருக்கிறார்.
இந்தப் படம் ஓர் அமெரிக்கத் திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த உலகமே அமெரிக்க
மண் போலவும் ஒட்டுமொத்த மனித குலமே அமெரிக்க மக்கள்தான் என்பது போலவும்
இதில் சித்தரிக்கிறார்கள். பொதுவாக Wall Disney, Pixar போன்ற அமெரிக்க
நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் அவர்களின் நாடு, அரசியல், கலாச்சாரம்,
மதம் சார்ந்த கூறுகளைத் தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நியாயப் படுத்தியும்
பெரிதுபடுத்தியும் காட்டுவார்கள். இதுபோல பல திரைப்பட நிறுவனங்கள் தங்களின்
அரசியல், சமூகம், மதம் சார்ந்த சிந்தனைகளைத் தங்களின் படங்களின் மூலம்
பிரபலப்படுத்துவது இயல்பான விசயம்தான். ஆனால் ஒட்டு மொத்த உலகமே ஓர்
அமெரிக்க நிறுவனமான BnL- இன் சுண்டுவிரலில் சுற்றுவதுபோல காட்டியிருப்பது
உலக நாடுகளின் மீது அவர்கள் செழுத்தும் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. பல
மூன்றாம் உலக நாடுகளில் போய்க் குப்பைகளைக் கொட்டியதும், சுற்றுச் சூழலை
மாசுபடுத்தியதும், அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள்தான் என்பதை
மறைத்து அவர்கள்தான் என்னவோ மாசுபடிந்த இந்த உலக சுற்றுச் சூழலை பெரும்
அக்கறையுடன் மீட்டு எடுப்பதுபோல் இறுதி காட்சிகளில் காட்டி இருப்பது
மிகையாக இருக்கின்றது. இந்தத் திரைப்படத்தில் இது போன்ற சில சறுக்கல்கள்
இருப்பினும் இயக்கவூட்ட வரலாற்றின் மிக முக்கியமான பதிவு வால்.ஈ என்பதை
மறுத்துவிட முடியாது.
|
|