|
|
முதலை மந்திரவாதிகள்
இந்த மாறுபட்ட சரவாக் பூமியின் கலாச்சாரத்தையும் அதன்
நூதனமான வாழ்வியல் கட்டமைப்பையும் தெரிந்துகொள்ள க்ரேஸி (Gracy) ஒரு
மீடியமாக இருந்தாள். ஆனால் மீடியத்தை விட மேலாக என்னை அவள் குடும்ப
உறுப்பினராகவே பாவித்தாள். அதுவும் பழகிய ஒரு சில நாட்களிலேயே. அவள் மூலமாக
நான் பல நபர்களையும் பல விசயங்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
அவள் எனக்கு அறிமுகமான நாள் முதலே எங்களுக்குள் நல்ல வேதியலுடை நட்பு
விதையில்லாமல் மரமாகி கொண்டிருந்தது.
கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி சரவாக்கில் கால் வைத்த நான் இன்று
சரவாக் பற்றி பிறருக்குச் சொல்லுமளவு தெரிந்து வைத்துள்ளேன் என்றால் அதற்கு
க்ரேஸியும் ஒரு காரணம். நாங்கள் இருவரும் என் பள்ளியில்தான் முதலில்
சந்தித்தோம். அதன் பின் அவள் வீடும் என் வீடும் ஒரே தெருதான் என தெரிய
வந்ததும் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. ஓய்வு கிடைத்தால் நான் அவளைப்
போய் பார்ப்பதும் அவள் என்னை வந்து பார்ப்பதும், இருவரும் சேர்ந்து ஊர்
சுற்றுவதும் வாடிக்கையானது. அந்த இடைப்பட்ட நேரங்களில் நாங்கள் அதிகம்
கலாச்சாரத்தின் நூதன வித்தியாசங்கள், கேள்வி பதில் ஆராய்ச்சி என பல
விசயங்களை செய்தோம்.
க்ரேஸிக்கு இந்திய கலாச்சாரம் பற்றிய அடிப்படை விவரங்கள் அவளின் இன்னொரு
இந்திய தோழியின் மூலம் தெரிந்திருந்தது. ஆக நான்தான் அதிகம் கேள்வி
கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போதேல்லாம் எனக்கு சரவாக்கிய மொழி இன்னும்
சரளமாக பேசத் தெரியாது. இருந்தாலும் மற்றவர்கள் பேசுவதையே கூர்ந்து
கவனித்து சொந்தமாக நானே கிரகித்துக்கொள்வேன். எனக்கு தெரிந்த நான் பேசிய
அந்த ஓட்டை மொழியையும் புரிந்து கொண்டு சிறு முறுவலுடனே பல விசயங்களை
சொன்னாள் க்ரேஸி. அவள் சொன்ன முதல் விசயம் சரவாக்கில் இந்தியர்கள் குறைவு
என்பதுதான்.
இது
எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் சரவாக்கிலேயே காலங்காலமாய் இருப்பவர்கள்
கூறும்போது அது வேறொரு உணர்வை எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தது. இன்னுமும்
இந்திய வம்சாவாளியினர் சரவாக்கில் ஆழ கால் பதியவில்லை என்பதுதான் அவள்
கூற்றிலிருந்து மறைமுகமாக வெளிவந்த நிதர்சனமான உண்மை. ஏறக்குறைய இங்கே வேலை
செய்ய வந்த இந்தியர்கள் இங்குள்ள பூர்வ குடியினரை திருமணம் செய்து அவர்கள்
வழி வந்த சந்ததிகள்தான் கொஞ்சம் அதிகம் காணலாம். அதுவும் அவர்களின் முக
அமைப்பிலோ பேச்சிலோ ரொம்பவும் இந்திய ஆளுமை இருக்காது. சொல்லப்போனால் தமிழே
பேசத் தெரியாது. அப்படி பேசுகிறார்கள் என்றால் இன்னுமும் தமிழோடு ‘டச்’
விட்டு போகலே என்று தான் சொல்ல வேண்டும். அதாவது இங்கே கறுப்பு தமிழர்களை
பார்ப்பது மிகவும் கடினம். நம்மின கதையை பிறகு சொல்கிறேன். இப்போது க்ரேஸி
கதைக்கு வருவோம்.
ஆரம்பம் முதலே சரவாக் ஒரு மாய மந்திர ஆளுமை மிக்க மாகாணம் என ரொம்பவும்
கேள்வி பட்டிருந்தேன். அதை தொட்டு தான் முதல் உரையாடல் சூடுப்பிடிக்க
தொடங்கியது. இது எப்படி உருவானது என்பதே முக்கிய சாரம். இங்கே உள்ள பூர்வ
குடியினருக்கு முற்காலத்திலிருந்தே இயற்கையுடனே அதிக நெருக்கம் இருந்தது.
அதாவது இயற்கையில் உலாவும் மாறுப்பட்ட சக்திகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருந்தனர். சொல்லப்போனால் மனிதத்தை மீறிய சக்திகளுடன் மானசீக உறவு
வைத்திருந்தனர். இதைதான் பாகான் (Pagan) நம்பிக்கை என சொல்வர். அதாவது
மொத்தமாக இங்கே இருக்கும் பெரும்பான்மை குடியினரை டாயாக் லவுட் (Dayak Laut),
டாயாக் டாராட் (Dayak Darat) என இருப்பிரிவாக பிரிக்கலாம்.
டாயாக் லவுட் குழுவினர் பின்னர் ஈபான் எனவும் டாயாக் டாராட், பிடாயு என
பெயர் பெற்றனர். இவர்களின் ஆண்கள் தங்கள் ஆண்மையை மெய்ப்பிப்பதற்கும்
வீரத்தை வெளிக்காட்டி தங்கள் குழுவில் உள்ள அழகான பெண்களை மணப்பதற்காகவும்
மற்ற குழு ஆண்களின் தலையை கொய்து வீட்டினுள் வைத்து பூஜை செய்வார்கள். இதன்
மூலம் அவர்கள் வீரம், மந்திர சக்தி இன்னும் அதிகரிக்கும் என்பது பாகான்
நம்பிக்கையின் முக்கிய அஸ்திவாரம். இவர்கள் பூஜை செய்ய செய்ய தலை கொய்ய
பட்டு இறந்த ஆன்மாக்கள் இவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடிமையாகி
ஆக்கிரமித்து கொள்ளுமாம். இவ்வாறு அடிமை படுத்தப்பட்ட ஆவிகளின் முதலாளிகள்
காலப்போக்கில் கிறிஸ்துவராக மாறியதாலோ அல்லது மந்திர வாரிசு இல்லாமல்
மண்டையை போட்டதாலோ மேய்ப்பாரின்றி ஆங்காங்கே திரியுமாம். எனவேதான் இங்கே
ஆவிகளின் ஆட்சி அதிகம் என சொல்லப்படுகிறது.
ஆவிகள்தான் கண்டதனமாக திரிகிறது என்றால் முதலைகளின் நடமாட்டம் அதைவிட
கொடூரம். நான் சொல்வது சாதரண முதலைகளில்லை. க்ரேஸியின் கூற்று படி மக்கள்
நடமாட்டம் அதிகம் இருக்கும் நதிகளிலே யாரையும் சீண்டாமல் முதலைகள்
இருந்தாலெனில் அவை உண்மையில் முதலைகள் அல்ல. மந்திர சக்தி வேண்டி தவத்தில்
ஈடுப்பட்டவர்கள்தான் முதலைகளாக உருமாறுமாறுவார்களாம். கொஞ்சம் கூடு விட்டு
கூடு பாயும் வித்தையும் இங்கே அத்துபடி போலும். ஆக மந்திரமும் மாயமும் இந்த
பூமியின் அடிப்படை சித்து விளையாட்டு எனதான் சொல்ல வேண்டும்.
அதுவும் ஈபான் வம்சாவளியினர் பிடாயு வம்சாவளியினரை விட கொஞ்சம்
கரடுமுரடானவர்கள். அதிகம் பாகான் நம்பிக்கையை வாழ்வின் ஒரு பகுதியாக
கொண்டவர்கள். அவர்களிடம் தயவு தாட்சணைக்கே இடம் கிடையாது. கொஞ்சம்
மென்மையாகதான் அணுக வேண்டும். அப்படியென்றால் அவர்களின் மூர்க்க குணம்
பற்றி சொல்லவே தேவையில்லை. ஆனாலும் பாலையிலும் நீர் சுரப்பது போல அவர்களின்
குணத்திலும் பல தலைமுறைகளுக்கு பின் மாற்றம் ஏற்பட்டதாம். இவர்களின்
குணாதிசயங்களை அறிந்து கொள்வது எனக்கு கடினமாகதான் இருந்தது, அதுவும் யார்
பிடாயு யார் ஈபான் என கண்டுபிடிப்பதே பெரும்பாடு. அவர்களே சொன்னாலொழிய
என்னால் கண்டுபிடிக்க முடியாது. என்னதான் இருந்தாலும் ஒரே பூமியில்
இருப்பதால் எல்லா இனத்தாரும் எதோ ஒரு வகையில் ஒரே மாதிரி இருந்தனர்.
இப்படியே பேசிக்கொண்டிருந்த போது மந்திரத்தின் விளைவால் காணாமல் போன
கம்போங் டஹான் (Kampong Dahan) என்ற பிடாயு கம்பத்தை பற்றி தெரிய வந்தது.
மந்திரம் மாயம் மர்மம் என எனக்கு மண்டை முன்னுக்கும் பின்னுக்கும் அலைப்பாய
தொடங்கியது கதை கேட்டு.
|
|