|
|
புதிய சிந்தனை
என் எதிரிகள்
அவர்களில் நண்பர்களும் அடங்குவர்
அடிக்கடி வந்தென்னைப் புண்படுத்துவார்கள்
பின் குணப்படுத்துவார்கள்
'சரி! பாலம் கட்டுவோம்!' என்பார்கள்
பாலம் கட்டுவோம்
தவறாமல் தகர்ப்போம்.
அவர்கள் கவனிப்பதேயில்லை
அடியேன் மறந்துவிடுவேன்.
அவர்கள் வந்தென்னுள்
தத்தம் கூர்நகங்களைப் பதிப்பார்கள்
என் தட்டுகள், நாற்காலிகள்,
மேசை, கவிதைகள்,
சுதந்திரம், கௌரவம்,
எல்லாவற்றையும் உடைப்பார்கள்.
என்னையும் என் சுதந்திரத்தையும்
அவர்கள் வெறுக்கிறார்களென
சந்தேகிக்கும் போதே
அவர்கள் அவரவரது பயத்தையும்,
தோல்விகளையும் வெறுக்கிறார்களென
சந்தேகிக்கின்றேன்.
அவர்கள் எங்கே ஓடிவிட முடியும்!
சரணாலயம் தேடுகிறார்களா,
ஓய்வெடுக்கிறார்களா?
அவர்களைப் போலவே
என் இதயத்திலும்...
குகைகளும், புதர்களும்
சமயங்களில் அவர்கள் தெரிவதில்லை
சமயங்களில் தெரிந்து கொள்ள நாட்டமில்லை
நான்
ஒளித்து வைத்திருக்கும்
கூரிய வாளை
அவர்கள் கண்டுபிடித்துவிட்டால்?
என்
அடங்கா சினத்தின்
தலைவணங்கா சுதந்திரத்தின்
அடிநாதத்தை அவர்கள் கேட்டுவிட்டால்?
நான் அவர்களுக்கு சொல்கிறேன்:
நீங்கள் என்னை அகற்ற நினைத்தாலும்
நான் இன்னும் சுதந்திரமாய் இருக்கிறேன்.
பேடிகளாய் கூடி வேட்டையாடுங்கள்
இதைவிட சுதந்திரமாய் இருப்பேன்
வேதனை சிந்தனா வேதனை
என்னை சுதந்திரமானவனாக்குகின்றது.
என்னைப் போலவே அவர்களும்
மோசமான காதலர்கள்
எங்களில் யாருக்கும்
காதலுக்கோ காதலிகளுக்கோ
அர்பணிக்க நேரமில்லை
நாங்கள் வெறுமையையும்,
விரக்தியையும் வேட்டையாடுகிறோம்.
அவர்கள் என்னை
கொல்லத் துடிக்கிறார்கள்
காரணம்
நான் அவர்களை
கொல்லாமல் துடைத்தொழித்து விடுவேன்
என்ற சந்தேகம்
நான் அவர்கள்
பூண்டோடறுக்க முனைகிறேன்
காரணம்...
அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்
என்ற சந்தேகம்
நீயும் நானும் அவர்களுக்கு உதவவேண்டும்
நாம் நமக்கு உதவிக் கொள்ள வேண்டும்.
|
|