கடலில் நடைபழகுபவள்
ஒவ்வொரு ஆண்டும்
வயது குறைந்துகொண்டே வரும்
பெண் ஒருத்தியைப் பார்த்தார்கள்
உன் வயதின் ரகசியம் என்ன என்று கேட்டபோது
பூக்களின் தேனால் பல்துலக்கி
கதிர்மாலையைப் பருகுவேன்
பூமியெங்கும் நீந்திவருவேன்
கடலைக் கண்டபோதெல்லாம்
நடை பயில்வேன்
மாகேந்திர ஜாலமுமில்லை
மந்திரதந்திரமும் இல்லை
என்னைப்போலவே இருந்தால்
ஆண்டுகள் கூடக்கூட
வயது குறைந்து வரும் என்றாள்
சரி
குறைந்து குறைந்து பூஜ்ஜியமாகிவிட்டால்
என்றார் ஒருவர்
கூடிக்கொண்டுதான் போகும்
என்றாள்
இப்படி கேட்பவர்களுக்கு
தளைதட்டல்
அவன் பிறக்கும்போது
ஆட்டுக்குட்டியாகத்தான் பிறந்தான்
அழுதான் சிரித்தான் விழித்தான்
பிற ஆட்டுக்குட்டிகளுடன்
வாஞ்சையோடு பழகினான்
சுற்றியிருப்பவர்கள் விழித்துக்கொண்டார்கள்
ஆட்டுக்குட்டியல்லவே அவன்
சிங்கம் என்று கூப்பிடத்துவங்கினார்கள்
அழுவது சிரிப்பது விழிப்பது
இதையெல்லாம்
கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைக்கச் சொல்லி
வளர்த்தார்கள்
ஓர் உன்னத நாளில்
ஓர் ஆட்டைப்பிடித்து அவனுக்கு
இணையாக்கினார்கள்
ஆட்டுக்குட்டியாகப் பிறந்தவன்
ஒரு சிங்கத்திற்குண்டான
பாவனைகளை முற்றிலுமாகக் கற்றிருந்ததால்
ஆட்டிடம்
அவனுக்கு எப்போதுமே வெற்றிதான்
சிங்கமாக அறியப்பட்டவன்
ஒரு நாள் விலங்கியல் தோட்டத்தில்
கண்டான்
சிங்கம் ஒன்றை
அது கூண்டிலிருப்பதை
உறுதிசெய்துகொண்டபின்
ஆட்டிடம்
சிங்கம்போல்
கர்சித்துக்காட்டி
உவந்துமகிழ்ந்தான்.
வியப்பு தாங்காத ஆடு
சிங்கத்தின் கூண்டைத் திறந்துவிட்டது
|