முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 33
செப்டம்பர் 2011

  ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி
 
 
       
கட்டுரை:

மரண தண்டனை என்பது மனித விழுமியங்களுக்கு எதிரான ஊழல்
ரவிக்குமார்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்
கே. பாலமுருகன்

மெல்ல தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ. எல்.

கப்பலுக்குப் போன மச்சான்

எம். கே. குமார்

புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்

பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்



பத்தி:

உயிர்ப்பு

ஷம்மிக்கா



பதிவு:

எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...23

மாதங்கி

ஆ. மாரிமுத்து

ம. நவீன்

ந. பெரியசாமி

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.


ராமஸ்வாமி - தமிழகம்


நீங்கள் விடுதலைப் புலியா?

நீங்க என்ன க்யூ பிராஞ்சா? உங்களுடைய பெயரே சரியில்லையே!


காசிதாசன் - தமிழகம்


ஷோபா எல்லா ஊர்கள் குறித்தும் கூறினீர்கள். எல்லா நாடுகளையும் சுற்றியுள்ளதாகச் சொன்னீர்கள். உங்கள் தாயகத்துக்கு செல்லும் ஐடியா இல்லையா? அதை நீங்கள் நேசிக்கவில்லையா? மீண்டும் அங்குச் செல்லும் எண்ணம் இல்லையா? அதை நீங்கள் இழப்பாகக் கருதவில்லையா?

அன்பான காசிதாசன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானால் கூட இளம் வயதிலேயே பிரிந்து வந்துவிட்ட எனது கிராமமும் நட்புகளும் உறவுகளும் குறித்த ஏக்கமான நினைவுகள் எப்படி இல்லாமலிருக்க முடியும். தாயகத்தைப் பிரிந்தது இழப்பு எனினும் தாயத்தில் நான் இருந்திருப்பின் என்னுடைய வாய்க்கு யாராவது என்னை அப்போதே போட்டுத் தள்ளியிருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இளமையைக் கடந்துகொண்டிருக்கிறேன். இனியும் அய்ரோப்பியப் பனியிலும் குளிரிலும் இந்த அல்லைப்பிட்டியானின் உடல் தாக்குப் பிடிப்பதும் சந்தேகமே. என் தாயகத்து மக்களோடு வாழ்ந்து நான் எழுதி வெளியிட வேண்டிய விடயங்கள் குறித்தும் மனதிற்குள் ஓர் இரகசியப் பட்டியல் உண்டு. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே ராஜபக்ச அரசாங்கத்திற்குத் தப்பி (ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் நாடுகளில் உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்) அய்ரோப்பாவிற்கு அகதிகளாக ஓடிவந்துகொண்டிருக்கையில் நான் அங்கே செல்வது சரியாகயிருக்குமா என்ற கேள்வி என்னை அலைக்கழிப்பதையும் நான் மறைப்பதற்கில்லை. திரும்பி ஊருக்குச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்வியைப் போல என்னைச் சதா திணறடிக்கும் கேள்வி வேறொன்றில்லை. உண்மையிலேயே அது எனக்குத் தெரியவில்லை என்பதுதான் இந்த விநாடியில் எனது நேர்மையான பதில்.


நோர் ரஷிடா - மலேசியா


மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்... ஏன்?

அய்ரோப்பாவிற்கு வர நான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மலேசியாவிற்குள்ளால் ரூட் போடலாமா என்ற முயற்சியில் மலேசியாவிலிருந்து விமானம் ஏற முயற்சித்ததுண்டு. மலேசியப் பாஸ்போர்ட் ஒன்றில் வெற்றிகரமாக விமானத்தைப் பிடித்துவிட்டாலும் பராக் விமான நிலையத்தில் அகப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். முதலிரு மலேசியப் பயணங்களும் அவ்வகையானவை. மலேசியாவில் என்னைக் கவர்ந்தவை எங்களைவிட நீங்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவது, Oil Palm மரத்திற்கு நீங்கள் 'செம்பனை' எனப் பெயரிட்டு அழைப்பது எவ்வளவு அழகு! நீங்கள் 'பசியாறியாச்சா' எனக் கேட்கையிலேயே அந்தத் தமிழின் அழகிலேயே வயிறு நிறைந்துவிடுகிறது. ("தண்ணி சாப்பிடுகிறீர்களா" என நீங்கள் கேட்கும் முறையின் மீது மட்டும் எனக்குச் சற்றே விமர்சனமுண்டு, நம்பி ஏமாந்திருக்கின்றேன்.) எதிர்வரும் சனவரியில் மலேசியாவில் நடக்கவிருக்கும் பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைத்திருக்கிறார்கள். வரத் திட்டமிட்டுள்ளேன்.


சண்முகசுந்தரம் - லண்டன்


ஷோபா உலகில் வேறெங்கும் தமிழ் எழுத்தாளர்கள் இல்லையா? உங்கள் பட்டியலில் பெரும்பாலும் தமிழக எழுத்தாளர்களே நிரம்பி வழிகிறார்களே? ஏன் உங்கள் மீது இத்தனை அவதூறுகள்? அதை நீங்கள் விரும்புகிறீர்களா?

பெரிய 'சிக்கல்' சண்முகசுந்தரமாக இருப்பீர்கள் போலயிருக்கிறதே. நான் மட்டுமல்ல கூர்மையான தமிழ் இலக்கிய வாசகர் எவர் பட்டியலிட்டாலும் தமிழக எழுத்தாளர்கள்தான் அங்கே அதிகமாக இடம் பெறுவார்கள். நாடுவாரியாக பிரதிநிதித்துவம் கொடுக்க இதுவொன்றும் அய்.நா அவை கிடையாது, இலக்கியம் தோழா இலக்கியம்! அவர்கள் அளவிற்கு நாமும் சாதிப்பதெனில் நாம் தீயாக வேலை செய்யவேண்டும். வாசிக்கவும் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் எழுதவும் சோம்பிக் கிடந்தால் நகத்தையும் பேனையும் தவிர நம்மிடம் வேறொன்றும் வளராது.

ஏன் இத்தனை அவதூறுகள் எனில், நமது சமூகத்தில் உறுதியாக நிறுவப்பட்டிருக்கும் 'புனித' மரபுகளையும் கலாசாரத்தையும் செல்வாக்குப் பெற்றிருக்கும் அரசியல் போக்குகளையும் வழிபடப்படும் அரசியல் திருஉருக்களையும் ஈவிரக்கம் இல்லாமல் கவிழ்த்துப் போட முயன்றால் பாராட்டையா நாம் எதிர்பார்க்க முடியும். அவதூறுகள்தான் வரும். அது நமது எதிர்ப்பு அரசியலுக்கு நாம் செலுத்தவேண்டிய தவிர்க்க முடியாத விலை.

தந்தை பெரியார் எதிர்கொள்ளாத தாக்குதல்களையும் அவதூறுகளையுமா நான் சந்தித்துவிட்டேன். செருப்பு, கல்வீச்சுகள் உட்பட பெரியாரும் அவரோடு துணைநின்றவர்களும் எதிர்கொண்ட அவமதிப்புகளும் அவதூறுகளும் கொஞ்சநஞ்சமா! பெரியாரை பிரிட்டிஷாரின் ஏஜெண்ட என்றார்கள். பெரியார் இந்திய சுதந்திர நாளைத் துக்கதினமாகப் பிரகடனம் செய்தபோது 'தேசத்துரோகி' என்றார்கள். பெரியார் வெறுமனே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்திய சாதிப்பற்றாளர் என்றார்கள். நாகம்மையாரை ' தேவடியாள்' என எழுதினார்கள். ஒழுக்கக்கேட்டில் விஞ்சியவர் நாகம்மையா, மணியம்மையா எனப் பகிரங்கமாகப் பட்டி மன்றம் கூட நடத்தினார்கள். இதெல்லாம் ஆதிக்கசாதிப் பிற்போக்காளர்களின் வக்கிரங்கள் என விட்டுத்தள்ளினாலும் சில வருடங்களுக்கு முன்பு நமது ரவிக்குமார் பெரியார் மீது தொடர் அவதூறுகளைப் பொழிந்து தள்ளியதை நாம் மறந்துவிட முடியுமா! பெரியார் ஜெர்மனியில் நிர்வாண சங்கத்திற்குச் சென்றதையும் அவர்களோடு நின்று நிர்வாணமாகப் புகைப்படம் பிடித்துக்கொண்டதையும் பெரியாரின் காமக்கூத்து என்றல்லவா காலச்சுவட்டில் எழுதினார் ரவிக்குமார். பெரியார் செய்தவற்றில் இலட்சத்தில் ஒரு பங்கையாவது செய்ய முயற்சிக்கும் பேராசை எனக்குண்டு. எனவே அவதூறுகளை எதிர்கொள்ளுவது தவிர்க்க முடியாதது.


மகேன் விஜய் - தமிழ்நாடு


அண்ணா, பின் நவீனத்துவ எழுத்து என்றால் என்ன? அதை நான் பயில எந்த நூலை எல்லாம் படிக்கலாம்? பின் நவீனத்துவ புனைவுகளில் முக்கியமானவை எது?

ஏங்க இந்தக் கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்கச் சொல்லி யாருங்க உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறாங்க! தமிழ்நாட்டில்தானே இருக்கிறீர்கள், அப்படியே அ. மார்க்ஸுக்கோ பிரேமுக்கோ ராஜன்குறைக்கோ ஒரு போனைப் போட்டுக் கேட்க வேண்டியதுதானே. கண்டிப்பாக நான்தான் பதில் சொல்லியாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இன்னும் சில காலங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போதுதான் 'மூலதனம்' முதலாவது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இதை முடித்துவிட்டு இனி 'இருப்பியல்' படித்து 'அமைப்பியல்' படித்து 'அந்நியமாதல்' படித்து அங்கிருந்து பின்நவீனத்தும் நோக்கிச் செல்ல எப்படியும் ஒரு இருபது வருடங்களாவது எடுக்கும். அதுவரை நீங்களும் சும்மாயிருக்காதீர்கள், 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை வாசிப்பதிலிருந்து தொடங்குங்கள்.


நரேன்


அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை என்கிறீர்கள். ஜெயமோகன் அசோகமித்திரனை தமிழின் ஒரு சிகரமாக கொண்டாடுகிறார். அவ்வாறெனின் அவர் இலக்கிய பார்வையை நீங்கள் ஏற்பீர்களா? எவ்வகையில் அவர் கட்டுரைகள் முக்கியத்துவம் பெருகின்றன?

நண்பா! ஜெயமோகனின் இலக்கியம் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை என்றுதான் சொன்னேனே தவிர அவை வேத வசனங்கள் என்று சொல்லவில்லை. இலக்கியத்தின் நுண் தடங்களையும் வெற்று வார்த்தைகளால் கட்டப்பட்ட இரும்புக் கோட்டைப் பிரதிகளிற்குள் ஒளிந்திருக்கும் போலி இலக்கியத்தையும் அவர் நுட்பமாக அவிழ்த்துக்காட்டுகிறார். அந்தளவில் அவரது இலக்கிய அழகியல் குறித்த கட்டுரைகள் தன்னிகரற்றவை என்கிறேன். ஆரம்பகால எழுத்தாளர்களிற்கு மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களிற்கும் அவரது வழிகாட்டல் அவசியமானது. இந்த விடயத்தில் ஜெயமோகனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்லக் கூட நான் தயங்கப் போவதில்லை.

ஓர் அழகியல் கலையில் தேர்ச்சி பெற்றவர் அதை ஆழமாக உணர்ந்தவர் கண்டிப்பாக சமூக, அரசியல் பார்வைகளிலும் பிழைபடாமலிருப்பார் என்றில்லை. கிட்டத்தட்ட ஜெயமோகனின் எல்லாவித சமூகவியல், அரசியல் எடுத்துரைப்புகளையும் நான் நிராகரிக்கக் கூடியவனாகவேயிருக்கிறேன். குறிப்பாக பெரியார் ஈவெரா குறித்து அவர் சொல்லும் வார்த்தைகள் எதிர் விவாதத்திற்குக் கூடத் தகுதியற்றவை.

'ஜே.ஜே:சில குறிப்புகள்' படித்திருக்கிறீர்கள்தானே. அதைப் படிக்கும் போது வாய்விட்டுச் சிரித்தவாறே ரசித்துப் படித்தவர்களை நான் அறிவேன். குறிப்பாக நாவலில் வரும் தனித் தமிழ்ப் பற்றாளன், ஜே.ஜேயை சே. சே எனத்தான் அச்சிடுவேன் என நிபந்தனை போட்டபோது வெடித்துச் சிரித்தவர்களுண்டு. ஆனால் நான் அந்த நூல் முழுவதையும் வயிறு பற்றி எரியவே வாசித்து முடித்தேன். அதேபோல பி.ஏ. கிருஷ்ணனின் 'புலிநகக்கொன்றை'யைப் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுக்குச் சரியான பெயர்: கொலைவெறி. ஒவ்வொரு தன்னிலைகளும் ஒரே பிரதியை வெவ்வேறு விதமாக வாசிக்கவும் உணரவும் முடியும். தன்னிலை என்பது சமூகத்தின் ஏற்றத்தாழ்வான - அநீதியான விதிகளால், அந்த விதிகளால் இயக்கப்படும் தனிமனித இருப்பால் உருவாக்கப்படுவது. அங்கேயிருக்கிறது அசோகமித்திரனை மட்டுமல்ல கே. டானியலையும் பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்குமான சூக்குமம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768