|
|
ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பே சிங்கப்பூரில்
நடைப்பெறவிருக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்த தகவல்கள்
தெரியவந்தது. அதன் மையக்கருப்பொருள் 'தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்' என்று
இருந்தது திருப்தி அளிக்கக்கூடியதாகவும் இருந்தது. சிங்கப்பூர்த் தமிழ்
எழுத்தாளர் கழகம், சிங்கப்பூர் தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சின் கீழுள்ள
தேசிய கலைகள் மன்றத்தின் (National Arts Council) ஆதரவுடன் உலகத் தமிழ்
எழுத்தாளர் விழாவை இவ்வாண்டு அக்டோபரில் நடத்துகிறது.
பொதுவாக மலேசியாவில் இதுபோன்ற இலக்கிய விழாக்களை நடத்துவது, கண்ணதாசன்
அறவாரியமும் தமிழ் எழுத்தாளர் சங்கமும்தான். அதற்கான பொருளாதார பலமும்
கட்டமைப்பும் அந்த அமைப்புகளிடம் உண்டு. ஆனால் அவர்களின் நோக்கம்
இலக்கியமாக இருப்பதில்லை, மாறாகக் கூட்டம் சேர்ப்பதுதான். இந்தக் கூட்டம்
ஒரு மாபெரும் இலக்கிய புரட்சியை அவர்கள் ஏற்படுத்திவிட்டது போன்ற ஒரு
பிரம்மையை தோற்றுவிக்கிறது. அவ்வாறான பத்திரிகைச் செய்திக்கு அது
காரணியாகிறது. இதனால் அதன் தலைமைப் பீடத்தில் உள்ளவர்களால் தங்கள் பதவியைத்
தக்கவைத்துக்கொள்ள முடிகிறது. அதன் பலனாக ஒரு நாட்டில் தமிழ் இலக்கிய
வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்கள் வரிசையில் அவர்கள் தங்கள் தியாக முகங்களை
வெட்கம் இல்லாமல் பதித்துக் கொள்கின்றனர்.
ஆனால், தீவிரமாக இலக்கியம் பேசவும், அடுத்த கட்ட நகர்ச்சிக்குத் தமிழ்
இலக்கியத்தைக் கொண்டு செல்லவும், இன்றைய மலேசிய தமிழ் இலக்கியத்தின்
நிலைபாட்டினை ஒட்டிய ஒரு நேர்மையான கலந்துரையாடலுக்கும் இவர்களால் கூட்டம்
சேர்க்க முடியாது. ஒருவகையில் கூட்டம் சேராததுதான் அதன் இயல்பு. அறிவுத்
தளத்தில் இயங்க எப்போதுமே ஒரு சிறு குழு மட்டுமே தயாராக உள்ளது. இந்தச்
சிறு குழு இலக்கிய அரசியல் நடத்த இயக்கங்களுக்குத் தேவைப்படுவதில்லை.
இத்தகையதொரு சூழலில் சிங்கப்பூரில் நடக்கும் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
குறித்த தகவல்கள் முதலில் திருப்தியினைக் கொடுத்தது. குறிப்பாக
எம்.ஏ.நுஃமான், சேரன், தமிழவன், லக்ஷ்மி போன்றவர்கள் இந்நிகழ்வில்
கட்டுரைகள் வாசிப்பது அதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தியது. இதன்
காரணமாக அதன் தலைவர் நா.ஆண்டியப்பன் மீது பெரிய மரியாதையே பிறந்தது. இம்மாத
வல்லினத்தில் அந்நிகழ்வு குறித்து ஓர் அறிமுக கட்டுரை எழுதவும்
ஆயத்தமாயிருந்தேன். ஆனால் மலேசிய எழுத்தாளர் சங்கத்துக்கும் தமக்கும் எந்த
வித்தியாசமும் இல்லை என நிரூபிக்கும் வண்ணம் கடந்த வாரம் ஒரு பத்திரிகைச்
செய்தி கண்ணில் பட்டது.
'இந்த நிகழ்வின் தொடக்க விழாவில் (அக்டோபர் 28) வைரமுத்து தன் பேருரையை
ஆற்றுகிறார். அதன் மறுநாள் நடிகர் சிவகுமார் (அக்டோபர் 29) வேறு பேருரை
ஆற்றுகிறார்.'
மலேசியா - சிங்கப்பூரில் மட்டும் ஏன் இந்த இழி நிலை தொடர்ந்து ஏற்படுகிறது
என்பது புரியவில்லை. ஒரு தீவிரமான இலக்கியவாதியையும் ஒரு சினிமா
பாடலாசிரியனையும், நடிகனையும் எதன் அடிப்படையில் ஒரே நிலையில் வைக்கின்றனர்
என்பது விளங்காமலேயே உள்ளது. எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் எத்தனை
மாநாடுகள் நடத்தினாலும் எங்கள் புத்தி முழுக்க இருப்பது மலிவான சினிமா ரசனை
மட்டுமே என்பதை நிரூபிக்க சிங்கப்பூர் எழுத்தாளர் கழகமும் மலேசிய
எழுத்தாளர் சங்கமும் ஏன் இப்படிப் போட்டி போடுகிறார்கள் என்பது
புரியவில்லை.
தமிழில் மிக முக்கியமான கவிஞராக இருக்கும் சேரனும்; மிக முக்கிய தமிழ்
ஆய்வாளரும், இலக்கியவாதி, திறனாய்வாளரான தமிழவனும்; மிகத் தீவிரமாக இதழியல்
துறையில் இயங்கும் எழுத்தாளர் லக்ஷ்மியும் (பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்
அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என அறிகிறேன்) இருக்கும் ஒரு
மேடையில் வைரமுத்துவும், நடிகர் சிவகுமாரும் என்ன இலக்கியம் பேசப்
போகிறார்கள்? இதை எழுதும்போது எனக்கு மலேசியாவில் நடந்த ஒரு நிகழ்வு
நினைவுக்கு வருகிறது.
ஒரு இலக்கிய மேடையில் எழுத்தாளர் பிரபஞ்சனும் திலிப்குமாரும் உலக இலக்கியப்
போக்குக் குறித்து பேசி அமர்ந்தார்கள். பிரபஞ்சன் பேசும்போது ஒரு சில
சிறுகதைகளை நினைவு கூர்ந்தார். அதில் ஒரு ரஷ்ய சிறுகதையில் வரும்
கதாபாத்திரம் (சிறுகதை முழுதுமாக நினைவில் இல்லை) போரினால் முற்றிலும் தன்
உருவை இழந்து தன் தாயைக் காண வீட்டு வருவார். தாய்க்கு அவனை அடையாளம்
தெரியாது. பின்னர் அவன் தன் காலுறையைக் கழட்டும்போது அதில் எழுந்த
வாசனையைக் கொண்டு மகனை அடையாளம் காண்பாள் என்று அக்கதையில் ஒரு பகுதி
வரும். பிரபஞ்சன் கூறிய சிறுகதைகளைக் கேட்டு அவையினர்
நிசப்தமாகியிருந்தனர். ஒரு சிறுகதையை வாசிக்கும் போது ஆழ் மனதில் என்ன
நிகழுமோ அதை பிரபஞ்சன் தன் பேச்சின் மூலம் செய்திருந்தார். அது
ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்க அனுபவமாக இருந்தது.
பிரபஞ்சனுக்குப் பின் வைரமுத்து பேசினார். அவர் மேற்கண்டவாறு பேசினார்.
"தோழர்களே... பிரபஞ்சன் ஒரு ரஷ்ய தாய் குறித்து கூறினார். அந்த ரஷ்ய தாய்
தன் மகனை அடையாளம் தெரியாமல் இருக்கிறாள். அவன் காலுறையைக் கழட்டியபின்தான்
அவனை அவளுக்கு அடையாளம் தெரிகிறது. இதுவே ஒரு தமிழ்த் தாயாக
இருந்திருந்தாள் அவன் உள்ளே நுழையும்போதே அவன் வியர்வை வாடையைக் கொண்டே
அடையாளம் சொல்லியிருப்பாள். (அரங்கினர் கைத்தட்டல்) அவன் அக்குள் வாடை
சொல்லியிருக்கும் அவன் தன் மகன் என்று (அக்குளைத் தட்டிக் காட்டுகிறார்)
அவன் தோள் சொல்லியிருக்கும் அவன்தான் உன் மகன் என்று (தோளைத் தட்டிக்
காட்டுகிறார்) ஆனால்... அவளும் ஒரு தாய். அவளால் வியர்வையின் மூலம்
அடையாளம் காண முடியவில்லை. காரணம்... ரஷ்யா குளிர் பிரதேசம். அங்கு
வியர்க்காது (பலத்தக் கைத்தட்டல்) "
ஒரு மிகையுணர்ச்சியான பேச்சு மொத்த மனித கூட்டத்தையும் எவ்வாறு சிந்திக்க
விடாமல் செய்கிறது என அன்றுதான் கண்டேன். ஓர் ஆழ்ந்த இலக்கிய
அனுபவத்திலிருந்து கைதட்டல் பெரும் முட்டாள்தனமான பேச்சுகளால் வைரமுத்து
போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பொதுவில் மையப்படுத்தப்படுகின்றனர். இந்தக்
கோமாளிகளின் வருகையால் தீவிரமான இலக்கியவாதிகளுக்கும் புத்திஜீவிகளுக்குமான
இடம் தமிழ்ச் சூழலில் மறுக்கப்பட்டே வருகிறது. இந்த அவலம்தான் எழுத்தாளர்
மாநாட்டிலும் நடக்க வேண்டுமா? ஒரு அறிவுத்துறை சார்ந்த உரையாடலில் மீண்டும்
மீண்டும் மிகையுணர்ச்சி சொற்களைக் குப்பையாகப் பேராளர்கள் முன் கொட்டும்
அருவருப்பை நிகழ்த்திக்காட்டதான் மலேசியர்களும் சிங்கப்பூரியர்களுக்கும்
எத்தனை ஆவல்?
தீவிரமான வாசிப்புப் போக்கு இல்லாதவர்கள் வேண்டுமானால், 'வைரமுத்து
கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும் எழுதினாரே' என்று
திரும்பவும் வீம்பு செய்யலாம். அவர்களிடம் இலக்கியத்தரம் குறித்து பேசுவது
வீண். எங்கள் ஊர் மிகப்பெரிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவே ஒரு தொலைகாட்சி
நேர்காணலில் 'எனக்குப் பிடித்த நாவலாசிரியர் வைரமுத்து' என்று சொல்லும்போது
மற்றவர்களைக் குறைபட்டு ஒன்றும் இல்லை. ஆனால், இக்குழுவில் உள்ள சேரன்,
லக்ஷ்மி, தமிழவன், ராமகண்ணபிரான் போன்றவர்கள் எப்படி இதுபோன்ற பலவீனம் நிகழ
சம்மதித்தார்கள் என்பதுதான் புரியவில்லை.
இதில் ஏற்பாட்டுக்குழுவினர் சொல்லும் வியாக்கியானமும் காதில் விழுந்தது.
அதாவது வைரமுத்து, சிவகுமாருக்கு எவ்வகையான இலக்கிய அந்தஸ்தும் கொடுத்து
மேடையில் ஏற்றவில்லையாம். அவர்களுக்கும், மாநாட்டில் கட்டுரை படைக்கும்
நிகழ்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாம். அவர்கள் எந்த நிகழ்வுக்கும்
தலைமை தாங்கவில்லையாம். பரவாயில்லை. மலேசியர்களைவிட சிங்கப்பூரியர்கள்
நன்றாகவே சின்னப்பிள்ளை காரணம் சொல்கிறார்கள். இவர்கள் இருவராலும் ஓர்
அறிவுத்துறை சார்ந்த கருத்தரங்கில் தலைமை வகித்து பேசமுடியாது என்பது
வெள்ளிடை மலை. குறைந்தபட்சம் தற்கால இலக்கியம் ஒட்டி ஒரு ஆய்வுகட்டுரைகூட
சமர்ப்பிக்க முடியாத இவர்களுக்கு அப்பொறுப்பை தரவாய்ப்பில்லைதான். ஆனால்,
நிகழ்ச்சிக்குக் கூட்டம் சேர வேண்டுமே. அதற்காக சினிமா ஜிகினா வேண்டுமே.
இவர்கள் இருவரையும் சிறப்புரை என்ற பெயரில் அலங்கார பொம்மைகளாக மேடையில்
ஏற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்ததல்லவா?
இதனால் ஏற்பாட்டுக்குழுவினர் இரண்டுவகையில் தம்பட்டம் அடித்துக்கொள்ளலாம்.
தம்பட்டம் 1 : நாங்கள் சினிமாக்காரர்களுக்கு கருத்தரங்கில் வாய்ப்புதரவே
இல்லையே. இது பழுத்த அறிவு ஜீவிகளால் நடத்தப்பட்ட மாநாடு அன்றோ!
தம்பட்டம் 2 : மாநாட்டில் எவ்வளவு கூட்டம் பார்த்தீர்களா? இது எங்கள்
உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.
இந்தக்கட்டுரை மூலம், நிகழ்வுக்கு வரும் வைரமுத்துவையும் சிவக்குமாரையும்
தடுப்பதோ அரங்கில் கூட்டம் சேர்ந்ததைப் படம் பிடித்து பத்திரிகையில் போட்டு
தமிழ் இலக்கியத்தை வளர்த்துவிட்டதாகப் பல் இளிப்பவர்களைத் தடுப்பதோ என்
நோக்கம் இல்லை. குறைந்தபட்சம் சுய சிந்தனை உள்ள ஒருவன் மலேசிய சிங்கை
இலக்கிய சூழல் குறித்தும் அதை முன்னெடுப்பதாகச் சொல்பவர்களின் அரசியல்
குறித்தும் விளங்கிகொண்டாலே போதுமானது. மற்றபடி மேடை கிடைத்தால்
ஓடுபவர்களையும் சினிமா வாடை இருந்தால் கூடுபவர்களையும் பற்றி நினைக்கவும்
பேசவும் இனி ஒன்றும் இல்லை.
|
|