ரவிக்குமார் கட்டுரை
ரவிக்குமாரின் கட்டுரைகள் வல்லினத்தின் தரத்தைக் கூட்டுகின்றன. அரசியல்,
இலக்கியம், சமூகம் என பல்வேறு பரிணாமம் எடுத்துள்ள வல்லினம் இன்னும்
அதிகமாகப் படைப்பிலக்கியங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
தினேஸ் - மலேசியா
சிறுகதைக்கு பஞ்சமா?
வல்லினத்தில் சிறுகதைக்கு என்ன பஞ்சமா? அல்லது சிறுகதைகளை பிரசுரிக்க
சுணக்கமா? அல்லது சிறுகதைகள் போடுவதில் விருப்பம் இல்லையா? ஒவ்வொரு மாதமும்
இரு சிறுகதைகளைப் பிரசுரித்தால் என்ன? மற்றபடி தேர்ந்தெடுத்து போடும்
படைப்புகள் அனைத்தும் அருமை.
வத்சலா - கீதாஞ்சலி
தரமான சிறுகதைகளை மட்டுமே பிரசுரிப்பதென வல்லினம் ஆசிரியர் குழு
முடிவெடுத்துள்ளதால், பல சிறுகதைகள் நிராகரிக்கப்படுகின்றன. தரமான
சிறுகதைகள் வரும் பட்சத்தில் பிரசுரிக்கப்படும். - ஆர்
ஷோபா சக்தி பதில்கள்
வல்லினத்தில் ஒவ்வொரு மாதமும் நான் முதலில் வாசிப்பது ஷோபா சக்தியின்
பதில்கள்தான். அருமையான பதில்கள். வீண் சர்ச்சைகள் அற்ற தரமான கேள்விகள்.
(அப்படி இல்லாது போனாலும் ஷோபா சமாளித்து தரும் தரமான பதில்கள்
கவர்கின்றன.) அவர் எல்லா பதில்களிலும் நகைச்சுவை உள்ளது. அவரின்
படைப்புகளைப் படிக்க ஆவல் கூடுகிறது. விரைவில் வாசித்து விமர்சித்து
எழுதுவேன். அல்லது ஷோபாசக்தியிடம் கேள்வி கேட்பேன்.
அமுதவாணி - சென்னை
மலேசிய இளம் படைப்பாளிகள்
நவீன், பாலமுருகன், நித்தியா, நோவா, தயாஜி, யோகி, பூங்குழலி, ராஜம்
ரஞ்சனி... அப்பப்பா மலேசியாவில் இத்தனை இளம் படைப்பாளிகளா? அதுவும் தரமான
படைப்பாளிகள். ஒரு நல்ல படைப்பிலக்கிய சூழலை வல்லினம் வழி காண்கிறேன்.
இவர்கள் ஒவ்வொருவரின் நூல்களும் எப்படிப் பெருவது என்ற தகவல்கள் கிடைத்தால்
வாசிக்க வாய்ப்புகிடைக்கும். இவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
சண்முகம் - தமிழகம்
நித்தியா
நித்தியாவின் கட்டுரைகள் தமிழ்ச்சூழலில் புதிது. நல்ல தரமான கட்டுரை.
அதுவும் சில நல்ல தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தி அவர் எழுதியுள்ளது
மகிழ்வளிக்கிறது. இதுபோன்ற சொற்கள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால்
தமிழுக்கு வளம். நித்தியா தொடர்ந்து எழுத வேண்டும். வீரராகு என்பவர் அவர்
தந்தையாக இருந்தால் அவருக்கும் வாழ்த்துகள்.
அரங்கநாதன் - மதுரை
சிறுகதை விமர்சனம்
நான் தமிழில் எழுதப்படும் சிறுகதை விமர்சனங்களைத் தொடர்ந்து வாசிப்பவன்.
குறிப்பாக ஜெயமோகன். ராஜம் ரஞ்சனியின் சிறுகதை குறித்த கட்டுரைகளை ரசனை
அடிப்படையிலான பதிவு எனலாம். எனினும் அது என்னைப்போல வெளிநாடுகளில் வேலை
செய்பவர்களுக்கு மலேசியா மற்றும் சிங்கையில் எழுதப்படும் நல்ல சிறுகதைகளை
ஒட்டிய அறிமுகத்தைக் கொடுக்கிறது. ராஜம் குறிப்பிட்டு எழுதும் சிறுகதைகள்
இணையத்தில் இருந்தால் லிங்க் கொடுத்தால் வாசிக்க உதவியாக இருக்கும்.
தமிழ் மகன் - துபாய்
அவர் விமர்சனம் செய்யும் அத்தனை சிறுகதைகளும் வல்லினம் தளத்திலேயே உள்ளன. -
ஆர்
தயாஜியின் தொடக்கம்
தயாஜியின் சென்ற மாத பண இலை அவர் தொடர்களில் நன்றாக வந்திருந்தது.
தொடர்ந்து அவரின் வலைப்பூவையும் வாசித்து வருபவள் எனும் முறையில் தயாஜி
புதிய அவதாரம் எடுத்துள்ளார் எனலாம். சரிதானே.
செல்வா - இலங்கை
மலேசியக் கவிதைகள்
பூங்குழலி தொடர்ந்து ஏன் தமிழகக் கவிதைகளையே சிலாகித்து எழுதுகிறார்.
மலேசியா சிங்கையில் கவிஞர்களே இல்லையா?
வாசகன்
இம்மாதம் முதல் பூங்குழலி இலங்கை கவிதைகள் குறித்து எழுதுவார். தொடர்ந்து
மலேசிய - சிங்கை கவிதைகள் - ஆர்
மணிஜெகதீசன்
மணிஜெகதீசன் என்பவர் மலேசியரா? அது அவரின் உண்மை பெயரா? அவரின் மொழிநடை
பழக்கப்பட்டதாக உள்ளது. சிறுகதை எழுத வசதியான மொழி. நகைச்சுவை உணர்வு
தூக்கலாக உள்ளது.
சுப்புரத்தினம் - அமெரிக்கா
மலேசியர். உண்மை பெயர் மணிமாறன். - ஆர்
|