|
|
ம.நவீன் : தோழர்,
நீங்கள் இலங்கை எழுத்துலக சூழலில் எத்தனையாவது தலைமுறையைச் சேர்ந்தவர்?
றியாஸ் : ஈழத்தில் தமிழ் இலக்கிய முயற்சிகள் 16ம் நூற்றாண்டின்
ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டிருப்பதை அவதானிக்க
முடிகிறது. கி.பி.3ம் மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே ஈழத்துப்
பூதந்தேவனார் என்பவர் சில தனிப்பட்ட பாடல்களைப் பாடியிருப்பதாகக்
கருதப்படுகிறது. இவர் ஈழத்தவர்தானா என்ற தீர்க்கப்படாதச் சந்தேகம்
இன்றுவரையுள்ளது. ஆயினும் பூதந்தேவரானுடனேயே ஈழத்து தமிழ் இலக்கியம்
ஆரம்பிப்பதாகக் கருதுவது இங்கு மரபு. நான் 1995களில் இலக்கியப்பரப்பில்
நுழைந்தாலும் அதைப் பயிற்சிக் காலமாகக்கொண்டு 2003ம் ஆண்டுகளின் பின்பே
எனது எழுத்துக்களை அடையாளப்படுத்துகிறேன். இப்போது என்னை எத்தனையாவது
தலைமுறை என்று கணித்துக்கொள்ளப்போகிறீர்கள்..?
ம.நவீன் : தங்களின் முந்தையத் தலைமுறை படைப்பாளர்களில் யாரை
முக்கியமாகக் கருதுகிறீர்கள்?
றியாஸ் : தனிப்பட்ட வகையில் ஒவ்வொருவருக்கும் முக்கிய படைப்பாளிகள் என்பது
வேறுபட்டே இருக்கும். இங்குப் பல இலக்கியக் கருத்துநிலைகளை முன்னெடுத்த
இன்னும் முன்னெடுக்கின்ற முகாம்கள் இருந்துவருகின்றன. அந்த முகாம்கள்
தங்களுக்கென்ற முக்கியமான படைப்பாளிகளின் பட்டியல்களைக் கைகளிலே
வைத்திருக்கின்றன. நான் கடந்த காலத்தின் முக்கியம் எனக் கருதுகின்ற
படைப்பாளிகளை முன்வைக்கும்போது, மற்றவர்களின் பட்டியல்களை முக்கியமற்றவை
என்று கருதுவதாகப் புரிந்துகொள்ளப் பட்டுவிடக்கூடாது என்ற ஒரு
வேண்டுதலையும் அதோடு இணைத்தே பேசுகிறேன்.
முதலாவது நாவலை எழுதியவர் (1885-அசன்பே சரிதம்) என்றவகையில் சித்திலெவ்வை,
சிறுகதையின் முன்னோடிகளில் ஒருவரான இலங்கையர்கோன், ஈழத்து நவீன கவிதையின்
பெரும் படிமமாகக் கருதப்படும் மஹாகவி (நான் இவரை அப்படிக் கருதவில்லை.
மரபுக்கவிதையை நவீனப்படுத்தியவர் என்றே வாசிக்க விரும்புகிறேன்.) ஈழத்து
நவீன கவிதையின் முன்னோடி பிரமிள் என்கிற அரூப் தருமு சிவராம். (இவரை
அதிகமும் தென்னிந்திய இலக்கியத்தோடுதான் அடையாளப்படுத்துவர். அப்படி
அடையாளப்படுத்துவதற்கான காரணங்கள் விரிவாக முன்வைக்கப்படவில்லை.)
முற்போக்கு முகாமிற்கு தலைமைகொடுத்து மார்க்சியக் கருத்துக்களை
இலக்கியப்பேச்சாக முன்னெடுத்த கைலாசபதி, தமிழின் விரிந்த பரப்பிற்குள்
அதிகமும் பங்களிப்புச் செய்த கா.சிவத்தம்பி, நற்போக்கு என்று ஒன்றுமற்ற
வெட்டிப்பேச்சுகளை உதிர்த்தாலும், சிறுகதைகளின் பல வகைமைகளை எழுதிப்பார்த்த
எஸ்.பொ, மலையகப் பின்னணியை பேசிய தெளிவத்தை ஜோசப், கதைகளுக்குள் உரிய
இடத்தில் தலித்துகளை வைத்து பேசிய, பின்னாளில் முன்னிலைக்கு வந்த தலித்
இலக்கியப் பேச்சுக்களுக்கும் முக்கியமாகிப்போன டானியல், விஞ்ஞான சிந்தனைகள்
மற்றும் ஆன்மீக கருத்தாக்கங்களை இணைத்தும் கலந்துமான ஒரு புள்ளியில்
இலக்கியத்தைச் சொந்தமாய் சிந்தித்த முக்கியமான சிந்தனையாளர் தளையசிங்கம்,
கவிதை எழுத்தின் புதியபோக்கு ஒன்றை உருவாக்கிய சோலைக்கிளி, இஸ்லாமிய தமிழ்
இலக்கியத்தை முன்வைத்து செயற்பட்ட அ.ஸ.அப்துஸ்ஸமது, இலக்கியப்பிரதிகளின்
மீது அரசியல் கருத்தாக்கத்தை ஏற்றி வாசித்த வாசிக்க முற்பட்ட
எம்.ஏ.நுஃமான், போராளிகளாகவே இருந்து தமிழுக்கு புதியதொரு வகைமையை வழங்கிய
புதுவை இரத்தினதுரை, கேப்டன் வானதி, புலம்பெயர் சூழலில் பிறிதொரு இலக்கிய
அனுபவத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த ஷோபாசக்தி, சிறுகதைகளை அதன்
முழுப்பெறுமானத்தோடு வெளிப்படுத்திய பெண் எழுத்தாளர் கவிதா, பெண்கவிஞர்
சிவரமணி, பன்முகவிமர்சனப் பார்வையை முதன்மைப்படுத்திய எம்.ஐ.எம்.றஊப்,
பின்நவீன எழுத்துக்களை அதிகம் வாசித்து அதிலிருந்து பிரதிகளைத் தொடரும்
மஜீத், நேர்த்தியான கதைசொல்லலும், அங்கதமான மொழியமைப்பையும் கொண்டிருக்கும்
அ.முத்துலிங்கம், உமா வரதராஜன், எதிர்க் குரல்கள் என்றவகையில் சேரன்,
ரஞ்சகுமார், ஓட்டமாவடி அறபாத்....என நீளக்கூடியது இந்தப்பட்டியல். பட்டியல்
போடுவதை அதிகமும் விரும்பாதவன் நான் எனினும், உங்கள் கேள்விக்கு இது
பொருந்தும் என நினைக்கிறேன். எனது சமகாலத்தவர்கள் பல முக்கியமானவர்கள்
இருக்கிறார்கள்.
கே.பாலமுருகன் : உங்களுக்கு அடுத்ததாக இலங்கை சூழலில் புதிய இளம்
தலைமுறை எழுத்தாளர்களை அடையாளம் கண்டுள்ளீர்களா?
றியாஸ் : அடுத்த தலைமுறையினரை இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின்னரே அடையாளம்
காணக்கூடியதாக இருக்கும் என நினைக்கிறேன்.
ம.நவீன் : இன்றைக்கு மலேசியாவில் இளம் தலைமுறை எழுத்தாளர்களை
வளர்ப்பதாகக் கூறும் அமைப்புகள், அவர்களை அதிகாரத்திடம் அடிமைகளாய் இருக்க
பயிற்றுவிப்பதையே தலையாய நோக்கமாகக் கொண்டுள்ளனர். அடுத்த தலைமுறை
எழுத்தாளர்களை உருவாக்கும் வகையிலோ அல்லது வளர்க்கும் விதத்திலோ இலங்கை
இலக்கிய சூழலில் என்னென்ன நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன?
றியாஸ் : என்ன நடவடிக்கை எடுக்கிறது என அறிய முடியாதுள்ளது. கடந்த
காலங்களில்கூட அப்படி நடந்திருக்கிறதா எனச் சந்தேகமாக இருக்கிறது. முக்கிய
எழுத்தாளர்கள் எனப் பரவலாகக் கருதப்படுபவர்களுக்குப் பின்னால்
அலைவது...அல்லது பின்னால் அலைவதற்கு ஊக்கப்படுத்துவது என்பதைத்தவிர இங்கு
எதையும் அறியேன். அதற்கு காரணம் நான் வளர்க்கப்பட்டவனோ அல்லது
ஊக்கமளிக்கப்பட்டவனோ அல்ல.
ம.நவீன்: மலேசியாவிற்கு முன்பு வருகை புரிந்தபோது சுந்தர ராமசாமி,
மலேசியாவில் நல்ல இலக்கியங்கள் இல்லை என்பதுபோல பேசினார். மலேசியாவில் நல்ல
படைப்புகள் முன்னெடுக்கப்படாத சூழலில் அவர் அவ்வாறு சொன்னது அவர்
வாசிப்பின் நிலைபாடு குறித்தது. ஆனால் 'பஞ்சமர்' நாவல் எழுதிய டேனியல்
போன்ற முக்கியமான எழுத்தாளர்கள் இருந்த காலக்கட்டத்திலேயே, தமிழ்நாட்டு
இலக்கிய மையங்களாகக் கருதப்பட்ட சுந்தர ராமசாமி போன்றவர்கள், டேனியலின்
எழுத்துகள் ரொம்ப காலம் நிற்காது என விமர்சித்துள்ளார். இது போன்ற
தமிழ்நாட்டு புறக்கணிப்புகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
றியாஸ் : சுந்தர ராமசாமி போன்றவர்களின் அவதானிப்புக்களை ஒரு இலக்கிய
விமர்சனமாகவோ, கருத்தாக்கமாகவோ நான் கருதவில்லை. அப்படிக் கருதுவது பிழையான
ஒரு இடத்திற்கே கூட்டிச்செல்லும். அவருடைய பார்வை உள்ளொளி சார்ந்த
கலைப்பெறுமானம் என்ற மாய நிலை சாரந்தது. கா.நா.சு வழிவந்த அபிப்பிராய
கர்த்தாக்களின் பலமான இறுதிப்பிரதிநிதி அவர். அதற்குமாறாக, ஈழத்து
இலக்கியம் தமிழ்நாட்டு சிந்தனையாளர்களால் கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது.
ஏன் மு.தளையசிங்கம் போன்றவர்களைச் சுந்தர ராமசாமி சிலாகித்திருக்கின்றார்.
எம்.ஏ.நுஃமான், சேரன் போன்றவர்கள் சு.ராவின் காலச்சுவடு இதழின் ஆலோசகர்களாக
இன்றும் இருக்கின்றனர். டானியலின் எழுத்துக்கள் தலித் மக்களின் வாதைகளை,
வலிகளை, அவர்களின் வாழ்வு அரசியலின் பக்கம் நின்று பேச அதிகமும்
பிரயத்தனப்படுபவை. சுராவுக்கு தலித் என்றாலே ஒரு ஒவ்வாமை எப்போதும்
இருப்பதை இலக்கியப் பரிட்சையம் இருப்பவர்கள் மறந்துவிடமுடியாது. இதுபோல
பலவற்றைச் சொல்லலாம். டானியலின் 'பஞ்சமர்' நாவல் தலித் இலக்கியக்
கதையாடலில் மறுக்கமுடியாத ஒரு திசைகாட்டி. அ.மார்க்ஸ் போன்று பலர் ஈழத்து
இலக்கியச் செயற்பாடு குறித்து ஆர்வமாகவே உள்ளனர்.
சு.ராவின் அபிப்பிராயங்களைப் புறக்கணிப்புக்களாகப் பார்க்கமுடியாது.
இதுபோலதான் ஜெயமோகனும். இவருக்கு ஈழத்து கவிதைகள் தொடர்பில் ஒரு பின்தங்கிய
புரிதலே உள்ளது. அது அவரின் கவிதை பற்றி மனத்தடைகளிலிருந்து உருவான ஒன்று.
இப்படி ஒன்றிரண்டுபேரின் ஈழத்து இலக்கியத்தைப் புறக்கணிப்பதற்கு
போதுமானதல்ல. இதைச் சொல்வதால், இவர்களின் புனைவாற்றலையோ, புலமையையோ
புறந்தள்ள முடியாது. அவர்களின் இலக்கியப் பங்களிப்புக்களும் தனித்த
பேச்சுக்குரியன. அவர்கள் ஏற்றுக்கொண்ட, வெளிப்படுத்திய, வெளிப்படுத்துகிற
சிந்தனைகள் போன்றவற்றோடு அதிகம் எனக்கு ஈடுபாடு இல்லை. அவை புதிப்பிக்கப்பட
வேண்டிய நிலையிலே இன்னும் உள்ளன.
கே.பாலமுருகன்: தமிழக விமர்சகர்கள் ஒரு புறம் இருக்க, இன்றும்
முக்கியமான விமர்சகர்களாகக் கருதப்படும் ராஜ்கௌத்தமன், கா.சிவதம்பி
போன்றவர்கள் இருக்கும் காலக்கட்டத்தில்கூட ஏன் இலங்கை படைப்புகள்
கவனப்படுத்தப்படாமல் போனது? தமிழ்நாட்டு இலக்கியமே அனைத்துக்குமே
மேற்கோளாகவும் மையமாகவும் அடையாளப்படுத்தப்படும் சூழலலெப்படி
உருவாகியிருக்கலாம் என நினைக்கிறீர்கள்?
றியாஸ் : தமிழ் நாட்டு இலக்கியம் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய நிலையில்தான்
உள்ளது. மேற்கோள்களாக அமையும் அளவிற்கு தனக்குள் அதிக வளங்களை அவை
கொண்டிருக்கின்றன என்பதை இலக்கியப் பயிற்ச்சியுள்ள எந்த விமர்சகரும்
ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும். அதனால், அதுவே முதன்மைப்படுத்தப்படுகிறது
என்ற ஒரு வெளித்தோற்றம் உருவாகியிருக்க வாய்ப்புகளுண்டு. ஈழத்து
இலக்கியங்கள் எதுவும் இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. அங்கொன்றும்
இங்கொன்றுமாகச் சிலரின் படைப்புக்கள் மாத்திரமே தொகுக்கப்பட்டிருக்கின்றன.
அதற்குப்பின்னாலும் குறித்த இலக்கியப்போக்கின் முதன்மைத் மேலெழும் வகையிலான
நாற்றமே வீசிக்கொண்டிருக்கின்றது. அதிலிருந்துதான் ஈழத்து வரலாறு எழுதுவது
தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இது ஒரு புறமிருக்க ஈழத்தில் எவரும் தொடர்ச்சியாக இலக்கியச் செயற்பாட்டில்
இயங்கியதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் இதற்கு விலக்கு. பல காரணங்களால்
எழுத்தின் தொடர் செயற்பாடு அறுந்துவிடுகிறது. இவர்களின் இலக்கியக் குறுக்கு
பின்னர் தெளிவதே இல்லை. நவீன எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்களின்
புத்தகங்களை, ஆக்கங்களைக் கணக்கிட்டால் இது புரியும். அளவில் குறைவாக
எழுதினாலும் ஆழமாக எழுதியிருக்கம் எண்டு பஞ்ச் டயலொக் எல்லாம் பேசிக்கொண்டு
இருப்பதைக் கவனித்துள்ளேன். இலக்கியத்தின் புதிய வகைமைகளான நாவல், சிறுகதை,
புதுக்கவிதை தமிழ் மொழிக்குள் நுழையும்போது, அதே காலகட்டத்தில்
உள்வாங்கப்படவில்லை. தமிழ் நாட்டிலிருந்துதான் ஈழத்து இலக்கியத்திற்கு
வந்து சேர்ந்தது. நாவல் அதிக கால வித்தியாசமின்றி ஈழத்திலும்
உருவாக்கப்பட்டது. சிறுகதை கிட்டத்தட்ட 15 - 20 ஆண்டுகள் பிந்தியே வந்தது.
ஆனால் புதுக்கவிதையோ ஏறத்தாழ ஒரு முக்கால் நூற்றாண்டு பிந்தியே ஈழத்து
தமிழ் இலக்கியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவும் 80களின் பின்புதான்
பலவகையான புதிய அம்சங்களை உட்செரித்து அதிக ஆற்றலோடு எழுதப்பட்டது.
80பதுகளில் தமிழ் நாட்டில் பல இலக்கிய மாறுதல்கள் உருவாகின்றன.
அதிலிருந்துதான் தமிழ் இலக்கிய விமர்சனம் கோட்பாட்டுத்தன்மையாக
உருவெடுக்கத்தொடங்குகின்றன. புதிய பிரக்ஞையுடனான இலக்கிய அணுகுமுறை
பயன்பாட்டுக்கு வருகிறது. அந்நியமாதல், இருப்பியல், அமைப்பியல், பின்
அமைப்பியல் அதைத்தொடர்ந்து பின் நவீனத்துவம் என இலக்கியம் மற்றும்
சிந்தனைத்தளம் என்பன பன்முகத்தன்மையைப் பெறுகிறது. மிக அதிகமான
சிந்தனைகளும் இலக்கிய அணுகுமுறைகளும் சில ஆண்டுகளுக்குள்ளே தமிழை நிறைக்கத்
தொடங்கின. அதன் விளைவுகளாக உருவான பல இலக்கிய ஆற்றல்களைத் தமிழ் நாட்டு
இலக்கியங்கள் உருவாக்கத்தொடங்கின. ஆனால், ஈழத்து இலக்கியத்தில் இந்தப்
புதிய புரிதல் மற்றும் சிந்தனை முறைகள் எந்த நிலையிலிருந்தன என்பதற்கு,
இங்கு இன்றுவரை பேசப்படாத, உரையாடல்கள் நிகழாத ஒரு நிலை சுட்டிக்காட்டலாம்.
ஈழத்து இலக்கியச் செயற்பாட்டாளர்களின் புட்டாணங்களில் அதன் காத்துக்கூட
அடிக்கவில்லை. ஆனால், புலம் பெயர்ந்த சூழலில் சற்றுப்பிந்தியேனும்,
குறைந்தளவிலேனும் பேசப்பட்டது என்பதை மறுக்கமுடியாது. அவர்கள் உள்வாங்கிக்
கொண்டார்கள். மேற்கோள்கள் காட்டக்கூடியளவு இலக்கிய முயற்சிகள் தமிழ்
நாட்டில் இருக்கிறது என்பதே இதன் மறுபேச்சாகும்.
ஆயினும், தமிழ் மொழி என விளிக்கப்படும் விரிந்த பரப்பிற்குள்,
பல்கலாச்சாரம், சிறுமரபுகள், அதன் சிறுதன்மையிலான இலக்கியங்கள் என்பன
இன்னும் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. இன்றைய பின்நவீன சூழலில்(இது
பிடிக்காதவர்களுக்கு) அல்லது பன்மைத்துவம் ஏற்கப்பட்ட சூழலில் இவைகள் அதிக
கவனத்துக்குட்படுத்தப்படவில்லை என்ற ஒரு கண்டனத்தை முன்வைக்கலாம் எனத்
தோன்றுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உருவாகியிருக்கும்
இன்றைய நவீன எழுத்து அலை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு
விசயமல்ல. அதுபோல, ஈழத்து இலக்கியத்தில் குறித்த ஒரு காலப்பிரிவை போராட்ட
இலக்கியமாகவோ அல்லது எதிர்ப்பிலக்கியமாகவோ மாத்திரம் வாசிக்கப்பட்டதை,
கவனத்தில் கொண்டமை என்பதன்மீது கண்டணங்களை முன்வைக்கமுடியும். போராட்ட
மற்றும் எதிர்ப்பிலக்கியம் என்று அடையாளப்படுத்தப் படாதபாடுபட்டவர்கள்,
மலையை மற்றப்பக்கம் கவிழ்த்ததாக பெருமைப்பட்டவர்கள் போராளிகளாக களத்தில்
நின்றபடியே எழுதிய இலக்கியங்களை ஒரு தனிவகையினமாக வாசிக்க முடியாமல்
போயினர் என்ற கண்டனங்களை முன்வைக்கமுடியும். அது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு
நவீன வரவாகும். இதுமட்டுமல்லாமல் போரும் காதலுமாக இருந்த தமிழ்
இலக்கியத்தின் பழைய நினைவை புதிப்பித்து புது உள்ளடக்கங்களைப் பெற முடியும்
என்ற வகையிலும் மிக முக்கியமானது அது. அதுபோல ஈழத்து முஸ்லிம்களின்
எழுத்துக்களையும் சொல்லலாம்.
அதுமட்டுமன்றி, இலக்கியப் பெறுமானம் என்ற ஒரு முட்டாள்தனமான புரிதலினால்
ஈழப்போராட்டத்திற்கு சற்றும் குறையாத துயரத்தை அனுபவிக்கும் மலையக மக்களின்
இலக்கியங்கள் கவனிப்பின்றியே கிடக்கின்றது. அதன் இன்றைய அரசியல்
முக்கியத்துவம் கருதி, இலக்கியப் பேச்சுகளில் உள்ளிளுக்கப்பட வேண்டும் என்ற
அவதானங்களையே, இன்றைய காலகட்டத்தில் நீங்கள் கேட்காத கேள்விக்கு, கேட்ட
கேள்வியின் பதில்களாக முன்வைக்கிறேன். அப்படியென்றால்,இலக்கியச்
சிந்தனையாளர்கள் என்ன செய்கிறார்கள் என்ற அடுத்த கேள்வியை நீங்கள்
கேட்டுவிடக்கூடாது என்பதனால்,அவர்கள் நற்சான்றிதழ் வழங்கும் வேலையைப்
பொறுப்பெடுத்துக்கொண்டார்கள் என்ற பதிலையும் இதனோடு இணைத்துவிடுகிறேன்.
ம.நவீன் : தோழர், இலங்கை இலக்கியத்தை முழுமையாக
வாசித்திறாவிட்டாலும் எனக்கு அதன் தீவிரப்போக்கை நன்கு உணர முடிகிறது. மிக
அண்மையில் இலங்கை சென்று திரும்பியபோது என் கவனத்தை மிகவும் ஈர்த்தது
சிற்றிதழ் முயற்சிகள். எல்லாவகையான அரசியல் நெருக்கடி சூழலிலும் இலங்கையில்
சிற்றிதழ் சூழல் இருந்தே வந்துள்ளது எனவும் அறிய முடிகிறது. மலேசியாவில்
அதற்கான சூழல் மிக அண்மையில்தான் உருவாகியுள்ளது. இலங்கையில் சிற்றிதழ்
தொடக்கம், இன்று அதன் பரிணாமம் குறித்து கூறுங்கள்.
றியாஸ் : கலாச்சார உள்ளடுக்குகளில் நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை அறிய
தமிழில், சிற்றிதழ்களையே நம்பியிருக்க வேண்டும். அத்தோடு, மிக முக்கியமான
இலக்கிய ஆக்கங்கள் மற்றும் சிந்தனை முறைகள் பற்றிய விவாதங்கள்,
கோட்பாட்டுப் பிரச்சினைகள் போன்றவை எல்லாம் சிற்றிதழ்கள் வழியாகவே
பரவியிருக்கிறது என்ற வகையில் உங்கள் கேள்வி அமைந்திருக்கிறது என
நம்புகிறேன். தமிழ் நாட்டில் இதுதான் நடந்தது. அங்குச் செய்தி
பத்திரிக்கைகளுக்கும் சிற்றிதழ்களுக்குமான இடைவெளி மலைக்கும் மடுவுக்கும்
உள்ளதைப்போன்ற ஒன்று. ஈழத்தைப் பொறுத்தமட்டில் அப்படியல்ல. இலக்கியச்
செயற்பாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது சிற்றிதழ்கள் என்பதை மறுக்க
முடியாது எனினும் சிற்றிதழ்களின் இலக்கியப் பங்களிப்புகளுக்கு சற்றும்
குறைவில்லாத சரிநிகரான பங்களிப்புக்களை பல காலகட்டங்களில் பல
பத்திரிக்கைகள் வழங்கியிருக்கின்றன. 1950களுக்குப் பின்னர் ஈழத்தில் உருவான
இலக்கியத்தின் நவீன மாற்றத்திற்கு வளமான பாதையை, சமிஞ்சைகளை 1930களிலேயே
தொடங்கிவைத்தது 'ஈழகேசரி' என்ற பத்திரிக்கைதான். நவீன இலக்கியத்தின்
தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பத்திரிக்கைகள் இங்குப் பெரும்
பங்காற்றியுள்ளன. ஈழத்தில் சிற்றிதழ்களும் அதன் பரிணாமங்களும் குறித்துப்
பேசும்போது தவிர்க்கமடியாமல் இந்தப் பத்திரிகைகளையும் இணைத்தே
பேசவேண்டியுள்ளது. அதிலும் முக்கியம் எனக்கருதும் பத்திரிக்கைகளை
இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டவே நான் விரும்புகிறேன்.
ஈழத்தின் முதல் நாவலான அசன்பே சரித்திரம் முஸ்லிம் நேசன் பத்திரிகையிலேயே
வெளிவந்துள்ளது. ஈழத்துச் சிறுகதைகளுக்கான ஆரம்ப முயற்சிகள்(ஆனாலட்
சதாசிவம் பிள்ளளை எழுதிய கதைகள்) உதயதாரகையில் வெளிவந்துள்ளது. 1930
காலப்பகுதியில் தோன்றிய ஈழகேசரி,வீரகேசரி,தினகரன் ஆகிய மூன்று
பத்திரிக்கைகளும் இலக்கியப் பங்காற்றியுள்ளன.அதில் ஈழகேசரி ஈழத்துப்
படைப்பாளிகளை மாத்திரம் கவனத்தில் கொண்டது.மற்றவை தமிழ் நாட்டு
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தது. 1947 களில் தோற்றம் பெற்ற
'சுதந்திரன்;', 1957 -61 வரை முற்போக்கு அணிசார்ந்த க.கைலாசபதியை
ஆசிரியராகக்கொண்ட 'தினகரன்', அத்தோடு எழுபதுகளில் தமிழ் நாட்டு நூல்களுக்கு
இங்கு தடையிருந்த 7ஆண்டுகள் அனைத்துப் பத்திரிகைகளும் பங்காற்றின.
80பதுகளில் உருவான தமிழ்தேசிய கருத்தாக்கங்கள் தேசியப்பத்திரிகைகளில்
வரமுடியாத நிலையில் இங்கு உருவான பிராந்தியப் பத்திரிகைகளான 'முரசொலி,
உதயன், 90களுக்குப் பின்னர் வெளிவந்த 'சரிநிகர், திசை, எங்கள் தேசம்,
மீள்பார்வை' என வெவ்வேறு காலகட்டத்தில் அதிக பங்காற்றியுள்ளன. அதிலும்
சிறுபத்திரிகைகளைவிட மிக முக்கிய பங்காற்றிய பத்திரிக்கை 'சரிநிகர்' என்பதை
எவரும் மறுக்கமுடியாது.
ஈழத்து நவீன கவிதை, சிறுகதை போன்றவற்றுக்கு சிற்றிதழ்களும்
பத்திரிக்கைகளும் பங்காற்றியிருப்பினும், ஈழத்து நாவல் வளர்ச்சிக்கு
பத்திரிகைகளின் பங்குமட்டுமே உள்ளது. சரி இப்போது உங்கள் கேள்விக்கு
வருவோம். ஈழத்துச் சிற்றிதழ்கள் 1945களுக்குப் பின்பே உருவாகின்றன. நவீன
இலக்கியப் பிரக்ஞை கொண்ட இளைஞர்களின் முயற்சியால் 46களில் 'மறுமலர்ச்சி'
வெளிவருகின்றது. இது நவீன இலக்கியம் மற்றும் ஈழத்து போன்றவற்றை ஆரம்ப நிலை
பேச்சுக்களாக முன்வைத்தன. இதே காலகட்டத்தில் வெளிவந்த 'பாரதி'(கொழும்பு)
ஈழத்தில் மாரக்சியம் சார்ந்த முற்போக்குச் சிந்தனைகளையும் அதன் வெளிப்பாடான
படைப்புக்களையும் முதன் முதலில் வெளியிட்டது. இதே காலகட்டத்தில்
மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும் 'பாரதி' என்ற ஒரு சிற்றிதழ்
வெளிவந்திருக்கிறது. ஈழத்தில் இன்னும் பேசப்படாத ஒரு இதழாகும். எனினும்
ஈழத்தில் ஆய்வுக் கட்டுரைகளுக்கு முதன்மையளித்தது இந்த இதழேதான். அது
மட்டுமன்றி யாழ்ப்பாணம்,கொழும்பு தவிர்ந்த ஏனைய பிரதேச எழுத்தாளர்களுக்கும்
இடமளித்தது என்பதை இங்குச் சுட்டிக்காட்டவேண்டும்.
1956 களுக்குப்பின் ஏற்பட்ட தனிச் சிங்கள மயமாக்கல் போன்ற அரசியல்
மாற்றங்களால் ஈழத்தவர் என்ற உணர்வு மக்கள்மயப்படுத்தப்பட்டதென்றே
சொல்லலாம். இக்காலகட்டத்தில்தான் ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள்
என்ற அறிவுபூர்வமான பிரக்ஞை திரட்சியாக வெளிப்படத் தொடங்கியது. அதை
நிறைவேற்றும் செயற்களமாக 'கலைச்செல்வி' வெளிவந்தது. ' இலங்கை எழுத்தாளர்கள்
இனி என்றுமே இந்தியாவை நம்பியிருக்க முடியாது' என்ற வரலாற்றுப்
புரட்சிக்கான கோசங்களை தாங்கி நின்றது. (சிற்றிதழ்கள் எப்போதும் பெரும்
புரட்சிகர கோசங்களோடுதான் வெளிவருகின்றன) இக்காலப் பகுதியிலேயே ஈழத்து
இலக்கியம் என்ற உணர்வு மார்க்சியம் முற்போக்கு எழுத்தாளர்களின் புரட்சிகர
முழக்கங்களாகவும், போராட்டமாகவும் அமைந்தன.அதைத் தொடர்ந்து பல சிற்றிதழ்கள்
வெளிவரத்தொடங்கின. 'மரகதம்' இதழ் ஈழத்து இலக்கியம், தேசிய இலக்கியம் போன்ற
கருத்தாக்கங்கள். சிந்தனைகள் போன்றவற்றை கட்டுரைகளினூடாக முதன் முதலில்
விவாத்திற்கு உட்படுத்தியது. 'மல்லிகை' இன்றுவரை தொடர்ச்சியாக வெளிவந்து
கொண்டிருக்கிறது. கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான், மு.பொன்னம்பலம்
போன்றவர்களின் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டதும் இதில்தான். இன்றைய
நாளில் இச்சிற்றிதழ் அதிகம் கவனிக்கப்படுவதில்லை. 'குமரன்' முற்போக்கு
சார்ந்த இலக்கியம் மற்றும் சீனச் சார்புடைய மார்க்சியக் கோட்பாடுகளில்
ஆர்வங்காட்டியது. 'பூரணி' மு.தளையசிங்கத்தின் முக்கிய சிந்தனையான பிரபஞ்ச
யதார்த்தவாதத்தை முன்வைத்தது.
1975 களுக்குப் பின்னர் ஈழத்துத் தமிழ்ச் சூழல் புதிய திசைகளின் பக்கம்
கவனத்தைத் திருப்பத் தொடங்கியிருந்தது. தமிழ் தேசிய சிந்தனைகள்
புத்திசீவிகள் மட்டத்திலிருந்து அடிமட்ட மக்கள் வரை பரவி பெரும்
கொந்தளிப்பாக மாறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஆயுதப் போராட்டத்தைப் பற்றி
சிந்திபதும் விவாதிப்பதும் செயற்படுவதுமாக ஒரு சுழல் முகிழ்ந்த
படியிருந்தது. இந்தச் சமூக கலாச்சார மற்றும் சிந்தனை மாற்றம் இலக்கியச்
செயற்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இக்காலகட்டத்தில்
வெளிவந்ததுதான் 'அலை' சிற்றிதழாகும். அது முற்போக்கு எழுத்தாளர்களின்
படைப்புக்கள் சிந்தனைகள் போன்றவற்றின் மீது விவாதங்களை முன்வைத்ததோடு;
தமிழ்த் தேசியப் பிரச்சினையின் மீது கவன ஈர்பையும் செய்தது. இது காலவரை
வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து வேறுபட்டு பல புதியவிசயங்களையும்
சிற்றிதழ்களின் பேசுபொருளாக்கியது. உதாரணமாக நவீன சினிமா, ஓவியங்கள்
மற்றும் பத்தி எழுத்துக்களையும் கலைத்தன்மையிலானதாக மாற்றியது. எனக்
கூறலாம். 'தீர்த்தக்கரை' மலையக மக்களைப் பேசியதுடன் அதிலிருந்து மலையக
இலக்கியம் தன்னைப் புதிப்பித்துக்கொள்ள ஏதுவாகவும் இருந்தது.
1983ம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின்பின் ஈழத்திலிருந்து புலம் பெயரத்
தொடங்குகிறார்கள். இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து ஈழத்து அரசியல் பல
மாற்றங்களைச் சந்திக்கத்தொடங்குகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, நவீன
கல்வி, இனக்கலவரங்கள், போரின் கெடுபிடி, போன்றவற்றினூடாக பலர் புலம்பெயரத்
தொடங்குகிறார்கள். வீட்டுக்குள்ளேயே கிடந்த பெண்கள் பொருளாதார
முக்கியத்துமிக்க வர்களாக மாறுகிறார்கள். முஸ்லிம் மற்றும் தமிழ்ப் பெண்கள்
குடும்பங்களைவிட்டு தனியே வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய மாற்றங்கள்
உருவாகின்றன. தனித்தமிழ் ஈழம் என்ற கருத்து மேலோங்குகின்றது. அதனடியாக
தமிழ்பேசும் மக்களுக்கான போராட்டம் எல்லோரும் கலந்து கொள்ளுங்கள் என்ற
அழைப்புக்கள் ஒரு முக்கிய செயற்பாடாகச் சமூகக் களத்தில் வலம்வருகின்றது.
அதே வேகத்தில் போராட்ட அமைப்புக்கள் மக்களின் காவலர்கள் என்ற
நிலையிலிருந்து மாறத்தொடங்குகின்றனர். விடுதலை பெற்றுத்தர வந்த
அமைப்புக்கள் கொலைத்தொழில் செய்யும் நிறுவனங்களாக மாற்றமடைகின்றனர்.
இயக்கங்களுக்கிடையிலான கொலைகள், மக்களின்மீதான கொலைகள், முஸ்லிம்களின்
மீதான பாரிய படுகொலைகள் மற்றும் சொந்த நிலங்களிலிருந்து
துரத்தியடிப்புக்கள் என இக்கால கட்டம் அமைந்தது. இந்தக் காலகட்டங்களில்
மலையக மக்களிடமும், முஸ்லிம்கள் மத்தியிலும் புதிய அரசியல் தேவைகள்
உருவாகத்தொடங்கின. அவர்களின் அரசியல் மட்டத்தில் முக்கியமான போக்குகள்
உருவாகத்தொடங்கின.
இதன்நிமித்தம், போராட்ட இயக்கங்களுக்கெதிரான கூட்டுச் செயற்பாடுகளும்
அமைப்புகளும் அந்த இயக்கங்களிலிருந்து விலகியவர்களாலே உருவாகத்தொடங்கியது.
மறுபுறத்தில் முஸ்லிம்கள் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் என்பதை உடைத்து
தம்மை ஒரு தேசியமாக உணரத்தலைப்பட்டனர். இந்தக் காலகட்டமே ஈழத்து
இலக்கியத்தின் முக்கிய காலகட்டம் எனச்சொல்லலாம். மிக அதிகமான
சிற்றிதழ்களும், தொடர் இலக்கிய அரசியல் சர்ச்சைகளும் விவாதங்களும் அதிக
புனைவுகளும் உருவான காலகட்டமாக இதைச் சொல்லலாம்.
புலம்பெயர்தவர்களிடமிருந்து அதிக சிற்றிதழ்கள் வெளிப்பட்டன. எக்ஸில், உயிர்
நிழல், தூண்டில்.... இப்படி நீளும் பெரும் பட்டியலே உண்டு. புலம்பெயர்
இலக்கியம் எனத் தனித்துப் பார்க்கவேண்டிய ஒரு வகையினமே ஈழத்து
இலக்கியத்தில் உருவாகத்தொடங்கியது. பின்நவீனக் கருத்தாக்கங்களை
உள்ளிழுத்துக்கொண்ட வகையிலும், மாற்றுக்கருத்துக்களை ஏற்றுக்கொண்ட
வகையிலும் புலம்பெயர் சிற்றிதழ்கள் முக்கிய பங்காற்றின. அதேநேரம் பெண்ணிலை
நோக்குகளை அவாவுகின்ற சிற்றிதழ்களும் வெளிப்படத்தொடங்கின. தோழி, பெண்,
சக்கி போன்றவற்றைச் சொல்லலாம். போராளிகளால் எழுதப்படும் இலக்கியங்கள் என்ற
ஒரு புலமும் உருவாகத்தொடங்கியது. வெளிச்சம் போன்ற பல இதழ்களை இங்குக்
குறிப்பிடலாம். மலையகத்திலிருந்து நந்தலாலா போன்றவைகளும், முஸ்லிம்கள்
மத்தியிலிருந்து வெளிவந்த 'முனைப்பு, பூவிழி, ஆகவே, யாத்ரா, இருப்பு'
போன்றவையும் முக்கியமாகின்றன. இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த மிகவும்
முக்கிய பங்காற்றிய பத்திரிக்கையான 'சரிநிகர்' கவனிக்கப்படவேண்டிய ஒன்று.
இதை ஈழத்தின் முதலாவது மாற்றுப்பத்திரிக்கை என்றுகூடச் சொல்லலாம்.
புலம்பெயர்ந்தவர்கள், போராளிகள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள்,
தமிழ்நாட்டவர்கள் என எல்லோரினது இலக்கியச் செயற்பாடுகளையும் இணைத்து பேசும்
ஒரு களமாகச் செயல்பட்டது. இது தமிழின் விரிந்த பரப்பிற்குள் உள்ள அனைத்து
இலக்கியங்களையும் பேச முற்பட்டது என்றவகையிலும் ஒரு மாற்றுக்குரலதகவே
செயற்பட்டது என்றவகையிலும் முக்கியமாகின்றது. அது போல 'மூன்றாவது மனிதன்'
சிற்றிதழையும் குறிப்பிடவேண்டும். நவீன ஈழத்து இலக்கியத்தின் கிட்டத்தட்ட
அனைத்து எழுத்தாளர்களையும் உள்வாங்கிச் செயற்பட்டது. நவீன ஈழத்து இலக்கிய
திசைகளைச் செப்பனிட்டது என்ற வகையில் முக்கியமானது. 2000மாம் ஆண்டுகளில்
சிற்றிதழ்களின் வரவில் ஒரு தளர்ச்சியை அவதானிக்கலாம். இணையப் பயன்பாடு
இலக்கியத்தில் பலமாற்றங்களை உருவாக்கிவிட்டிருந்தது. சிற்றிதழ்களை
நம்பியிருக்கத்தேவையில்லை என்ற ஒரு நிலை உருவாகத்தொடங்கியது. தனித்தனியே
தமக்கான வலைப்பக்கங்களை நிறுவி செயற்படும் வசதி சிற்றிதழ்களின்மீது,
அவைகளின் கடந்தகால செயற்பாடுகளின் மீது அதிருப்தியடைந்த பலருக்கு
உவப்பானதாக மாறத்தொடங்கியது. இணைய இதழ்களும் உருவாகத்தொடங்கியது.
பணச்சுமையின்மை, உலகெங்கிலும் ஒரு வினாடியில் படிக்கக்கூடிய வசதி,
சுதந்திரம் என இதன் பின்னணியைச் சொல்லலாம். எனினும், 'மறுகா, மறுபாதி,
எதுவரை, பெருவெளி, காலம் போன்ற பல சிற்றிதழ்கள் வெளிவரத்தான் செய்கின்றன.
யாழ்பாணத்திலிருந்து பல சிற்றிதழ்களும், மிகவும் கவனிக்கப்படவேண்டிய பல
இலக்கியச் செயற்பாட்டாளர்களும் உருவாகிவருவதை அறிய முடிகிறது. இதில்
பெருவெளி மற்றும் எதுவரை போன்ற இதழ்கள் முக்கியமாகப்படுகின்றன.
கதைசொல்லலின் பல்வகைமைகளையும், பின்நவீனத்தின் மீதான ஆர்வத்தையும்
வெளிக்காட்டும் விதத்தில் பெருவெளி முக்கியமாகப்படுகின்றது. எதுவரை இதழ்
புலம்பெயர், ஈழம் மற்றும் தமிழ் நாட்டு எழுத்துக்களை உள்ளடக்கிவருவதால்
முக்கியமாகப்படுகிறது. கவிதைக்காக மட்டுமே வெளிவருவதால் மறுபாதி இதழ்
முக்கியமாகப்படுகிறது.
இது ஈழத்து நவீன இலக்கிய சிற்றிதழ்கள் மற்றும் சிற்றிதழாகச் செயற்பட்ட
பத்திரிகைகள் போன்றவற்றின் பரிணாமம் குறித்த மேலோட்டமான ஒரு பதில்தான்.
இதைவிட பதிலை நீட்டிக்க முடியாது எனவும் நினைக்கிறேன். 1985 களுக்குப்
பிறகு ஈழத்து இலக்கியங்கள் தமிழின் விரிந்தபரப்பிற்கு வழங்கிய இலக்கியப்
பங்களிப்புக்கள் மிகப் பெரிது. தனித்து ஆய்வு செய்யப்படவேண்டியதும்கூட.
தமிழுக்குப் புதிய வித்தியாசமான பல உள்ளடக்கங்களை இணைத்திருக்கிறது
என்பதையும் இவ்விடத்தில் நினைவுபடுத்தலாம்.
கே.பாலமுருகன் : இன்றைய சூழலில் ஈழத்தில் வெளிவரும் சிற்றிதழ்கள்
வெறும் அரசியல் எதிர்ப்புணர்வுகளையும் ஈழம் குறித்த பேச்சுகளையும்
மட்டும்தான் முன்னெடுக்கிறதா?
றியாஸ்: ஆம், அது இங்கு இன்னும் அவசியமான ஒன்றாகவே இருக்கின்றது. எதிர்ப்பு
அரசியலின் தேவை மேலும் மேலும் கூடிக்கொண்டே இருக்கின்றது. (அது
முடிவுறுவதேயில்லை.) ஈழம் குறித்த பேச்சுக்களை மட்டும்தான் பேச வேண்டும்
என்றும் நினைக்கிறேன். ஈழம் குறித்த பேச்சுக்களை ஈழத்தில் மட்டுமல்ல
தமிழில் வெளிவருகின்ற அனைத்து சிற்றிதழ்களும் தனது முக்கிய பேசு பொருளாக
இந்தக்காலகட்டத்தில் முன்னிலைப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.
ஏனென்றால் முன்னெப்போதையும்விட அதிகம் கவனிக்கப்பட வேண்டிய நிலையில் இன்று
ஈழம் இருக்கிறது. ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வு என்ற வகையில்
அமைகின்ற பொதுவான பேச்சுக்களை என்னால் ஆதரிக்க முடியாது. அப்படியான
பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை மற்றும் புரிதல்கள் கடந்த காலங்களில் எதை
நிகழ்தியது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
முஸ்லிம்கள்,மலையமக்கள்,தலித்கள் என விளிம்புநிலையில் வைக்கப்பட்டு
புரிந்தகொள்ளப்படும் அனைத்து சமூகங்களையும் தனித்தனியாகவும் உள்ளெடுத்தும்
அமையும் பேச்சுக்களே ஈழத்து அரசியல் பரப்பிற்கு இன்று அவசியமாகின்றது.
'அரசியல் எதிர்ப்புணர்வு' என்ற விளிப்பு ஈழத்து அரசியல் பிரச்சினையை உணர்வு
நிலைக்குள் மட்டும் நிறுத்திவிடுவதாக நினைக்கிறேன். நெடிய வரலாறு கொண்ட
அரசியல் சிக்கல்களாலும், புறமொதுக்கல்களாலும், திட்டமிட்ட படுகொலைகளாலும்,
நிலப்பறிப்புக்களாலும் உருவான சமூக அரசியல் கருத்தாக்கம்தான் இந்த ஈழத்துப்
பிரச்சினை. அதனடியாக வெளிப்படும் செயற்பாடுகள்தான் இந்த எதிர்ப்புரிதல்.
பகைமறப்பு என்று பரவலான ஒரு பேச்சு இப்பொழுது மேலெழுந்துள்ளது. பகையை மறக்க
முடியுமா..? பகை உருவான காரணிகளைப் பரஸ்பரம் புரிந்துகொள்வதினூடாக ஒரு
புதிய உறவை முன்னிலைப்படுத்துவதாக அந்தக் கருத்தாக்கம் எல்லோரையும்
சென்றடையுமானால் நல்லது. அதற்கு மாறாக அந்த வாசகம் நேரடியாகவும்
வேறுவிதமாகவும் மக்களைச் சங்கடப்படுத்துகிறது. அது கடந்த காலத்தைத் திடீரென
மறந்துவிடுங்கள். அதுதான் நமக்கிருக்கின்ற ஒரே வழி வேறு தெரிவுகள் இல்லை
என்பது போல துயரங்களைச் சுமந்துகொண்டிருக்கும் சகலரையும் பார்த்து எதுவித
தயக்கமுமின்றி பேசுகிறது. அவர்களின் முகத்தில் அறைகிறது. இது ஒரு
புறமிருக்க, ஈழத்திற்கு வெளியே வருகின்ற சிற்றிதழ்கள் என்ன செய்து
கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். காலச்சுவடு, உயிர்மை
போன்ற இதழ்கள் குமுதம், ஆனந்த விகடன்போல் மாறிக்கொள்ள உள்ளுக்குள்
விருப்பமிருந்தும் தயங்குவதுபோல் ஒரு பரிதாபகரமான நிலையில் இருக்கின்றது.
அதிக வாசகர் கூட்டம், ஜனரஞ்சகம் போன்ற உள்ளாசைகளை மறைக்கமுடியாமல்
திணறிக்கொண்டிருப்பதை நீங்கள் அறியாதவரல்ல. இன்னும் பல இதழ்கள்
தரவிறக்கங்களாலும், மொழிபெயர்ப்புக்களாலும் புழுத்துக்கிடப்பதை என்னவென்று
சொல்லுவது. அவைகளைப் பார்க்கும்போது ஈழத்து சிற்றிதழ்கள் தமது தேவையை
முன்வைக்கிறது என்று உங்கள் கேள்வியிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
கே.பாலமுருகன்: உண்மைதான் தோழர். அவை தங்களை இடைநிலை ஏடுகள் என
மொழிந்துகொள்வதன் மூலம் அந்தத் பரிதாபத்தை உணர முடிகிறது. நாம் இப்போது
கவிதை குறித்து பேசலாம். ஈழத்தில் இன்று எழுதப்படும் கவிதைகள் போர் மீதான
கசப்புகளையும், பாதிப்புகளையும், இழப்புகளையும், உரிமைகளை மீட்டெடுக்க
முயலும் குரல்களையும், பாசிசத்தின் மீதான புகார்களையும் சார்ந்தே ஒலிப்பதாக
ஒரு விமர்சனம் இருக்கிறது. உங்கள் பார்வையில் ஈழத்தில் எழுதப்படும்
கவிதைகளின் இலக்கிய தரம் என்ன? தரத்தையும் மதிப்பிடுகளையும் மீறிய ஒன்றை
உங்களால் அக்கவிதைகளில் பார்க்க முடியுமென்றால் அதையும் குறிப்பிடுங்கள்.
றியாஸ் : போரின் மீதான வெறுப்பு, பாதிப்புக்கள், பாசிசத்தின் மீதான
எதிர்ப்புக்கள், உரிமையின் பக்கம் சாய்வான குரல்கள் என்பது ஒரு வகை.
இவைகளுக்கு மாற்றமான இலக்கியக் குரல்களும் இங்கு உண்டு. இன்று ஈழத்து
அரசியல் நிலைமைகள் குறித்து அறியப்பட்ட அளவு இலக்கியம் சார்ந்து
அறியப்படவில்லை என்பதே குறித்த விமர்சனங்களின் மீது முன்வைக்கும்
எதிர்ப்பேச்சாகும். அல்லது ஈழத்தின் சில கவிஞர்களின் கவிதைகளோடு மட்டும்
பரீட்சயம் கொண்டவர்களின் விமர்சனமாகவும் இது இருக்கக்கூடும். அதே நேரம்,
கவிதைகளின் மீது அரசியல் கருத்தாக்கங்கள், அரசியல் பிரச்சினைகள்,
போர்சார்ந்த மனப்பதிவுகள் (அவர்களுக்கு தெரிந்த வகையில்) போன்றவற்றை ஏற்றி
வாசிக்கும்போது தோன்றும் ஈழத்துக் கவிதையின் குறுக்குவெட்டு முகம் அது. இது
தவிர, இன்றும் எழுதிக்கொண்டிருக்கும் சோலைக்கிளியின் கவிதைகள்
முக்கியமானது. அதீத படிமங்களாலானதும், முற்றிலும் தமிழுக்கே புதிய
உவமைகளாலானதும், தமிழின் விரிந்த பரப்பில் பார்க்கும்போதுகூட
தனித்துத்தெரியும் புதிய கவிதை நிகழ்த்தும் முறையும் மிகமிக முக்கியமானவை.
முற்றிலும் வேறுபட்ட விமர்சன முறைகளைக் கோரும் கவிதை வெளி அவருடையது.
அதுபோல அனாரின் கவிதைகள் முக்கியமானது. அனார் உருவாக்கும் கவிதைப் பெண்கள்,
கவிதைச் சம்பவங்கள் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியவை. மொழியின் தீவிர
அலைச்சலும், கவிதைச் சம்பவங்கள் கலந்து கலந்து பெருகும் எளிமையான
நிகழ்வுகளினூடாகக் கவிதையை நிகழ்த்துபவை. அதுபோல ஆழியாளின் கவிதைகள்-
மிகச்சாதாரணமான சொற்கள், மிகச்சாதாரணமான கவிதைச் சம்பவங்கள், சாதாரணமான
கவிதை அமைப்பு முறை ஆனால் இவைகளைக் கொண்டு ஆழியாள் உருவாக்கும் கவிதைகள்
நமது நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடியது. அடிக்கடி தொந்தரவு செய்யும்
ஆற்றல் கொண்டதாகச் சிறிய சம்பவங்களைக் கொண்டு நிகழ்த்தும் கவிதைகள்.
வாசித்து மறந்துபோன பின்பும் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொந்தரவாக
மாறுவது. இப்படியான ஆற்றலைக் கொண்ட கவிதைகள் தமிழில் மிகக்குறைவு. இதற்கு
சிறந்த உதாரணமாக தேவதேவனைச் சொல்லலாம். ஆயினும் ஆழியாளின் கவிதைக்
கட்டமைப்பு மிகப் புதிய கலாச்சார சமூக மன உருவாக்கத்தைத் தருவது. மஜீத்
அவர்களின் சிக்கலான தொடர்ச்சியற்ற கவிதைச் செயலை முன்வைப்பவை. கவிதையைக்
கலைப்பதனூடாகவும், ஒரு காவியப் பின்னணியை உருவாக்குவது போன்றதுமான மாயையை
உருவாக்கி கவிதையை நிகழ்த்துபவை. பல கவிதைக் காலங்களின் தொடர்ச்சிபோல
வெளியே காட்டிக்கொள்பவை. ஆனால் கவிதைச் சம்பவங்களின் அறுபடும்
தொடர்ச்சிகளினூடாகக் கிளைத்துச் செல்ல எத்தனிப்பவை. வாசித்து
முடிக்கும்போது தனியே ஒரு அனுபவத்தை உருவாக்கியமாதிரி தோன்றுபவை.
இளங்கோவின் கவிதைகள் தொன்மையான காலத்தையும் சமகாலத்தையும்
கலந்துவிட்டதைப்போன்று சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளுபவை. இப்படிச்
சொல்லலாம் இளங்கோவின் கவிதைகளை 'தொன்மையான ஒரு நினைவை அகழ்ந்து எடுத்து
புதிதாய் ஆய்வு செய்வதைப்போன்ற கவிதை உலகை உருவாக்குபவை' சிதைந்துபோன
துண்டுகளிலிருந்து புதியதோர் அர்த்தத்தை நம்முன் கவிதைச் சம்பவங்களாக
நிகழ்த்திக் காட்டுபவை. சித்தாந்தனின் கவிதைகள்- உணர்வுகள், வாழ்வு, வாதை,
எனப் பலவற்றை கலந்து மிகத் தெளிவாக முன்வைப்பவை. வாசிக்கும்போது ஒரு
கட்டத்தில் கவிதைக்குள் நாம் உள்நுழைந்துவிட்டோம் என்ற உணர்வைத் தருபவை.
வாழ்விலிருந்து பெறுதல் அல்லது பெறும் அனுபவங்கள் கவிதைக்கு முக்கியமென பேச
முற்பட்டால் முதலில் வைக்கவேண்டிய ஈழத்துக் கவிஞர் சித்தாந்தனும்,
தீபச்செல்வனும்தான். கவிதைக்கான மாற்றுக்களை முயற்சிப்பதும், அனுபவங்களை
உருவாக்கக் கூடியதும், கதைசொல்லலின் சாத்தியங்களைக் கவிதைக்குள்
நுழைப்பதுமாக உருவாக்கப்படுபவை எனது கவிதைகள். செய்தி, விளம்பரங்கள் போன்ற
இலக்கியத்திற்கு வெளியில் வைத்துப் பார்க்கப்பட்ட பல அம்சங்களைக் கவிதையாக
நிகழ்த்த முற்படுபவை. இப்படிப் இன்றைய ஈழத்து கவிதைகளைச் சொல்லிக் கொண்டே
போகலாம். இவை அனைத்தும் தனித்துப் பேசவேண்டிய அவசியத்தைக் கொண்டிருப்பவை.
அரசியல் கோசங்கள், வெற்றுப் புகார்கள் மட்டும்தான் ஈழத்துக்கவிதைகள் என்று
ஒரு கதையைக் கட்டிவிட்டவர்களில் ஜெயமோகன் முக்கியமானவர். இது ஒரு வியாதிபோல
பரவி பலர் பேசிக்கொண்டிருப்பதை அறிந்திருக்கிறேன். நவீன கவிதையின் முக்கிய
திசைமாற்றங்கள் தமிழ் நாட்டிலே நடந்தேறியதாக நம்பிக்கொண்டிருக்கும் மரபைச்
சார்ந்தவர் அவர். இப்படி இருந்தால்தான் கவிதை என்ற ஒரு வாய்ப்பாடு
ஜெயமோகனிடம் இருக்கிறது. அந்த வாய்ப்பாட்டை கலைத்துப்போடுவதோ அல்லது அதைச்
சங்கடப்படுத்துவதோ கவிதையாகாது என்று மடத்தனமான அறிவிப்பை வெளிப்படையாகச்
செய்யக்கூடியவர். இது மட்டுமல்ல, ஒரு பிரதியைக் கவிதைத்தான் என
அடையாளப்படுத்த ஒரு சில அல்லது மிக்குறைவான அணுகுமுறைகளும் விமர்சன
முறைகளுமே தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இலக்கியத் தரம் என்பது மிகச் சிக்கலான ஒரு பகுதி. குழுக்கள், நிறுவனங்கள்,
தனிநபர்கள் என வேறுபடக்கூடியது. இலக்கியத் தன்மை என அடையாளப்படுத்துகிற
ஒன்றை இலக்கியமற்றதாக பயிலும் மொழிச் செயற்படுகளிலும் காணமுடிகிற
காரணத்தால், இலக்கியம் என்ற கதையாடல் பல சிக்கல்களை புரிந்துகொள்ளும்
உழைப்பை நம்மிடம் வேண்டி நிற்கிறது. பெரும்பாண்மையாக இதுதான் இலக்கியம்
என்ற ஒரு மாயவிதியை நம்புகிறவர்களிடையே தரம் பற்றிய மாற்றமுடியாத அதிக
இறுக்கங்கள் இருக்கிறது. சமூகக் குழுக்கள், நாடுகள், மொழிகள்,
பிராந்தியங்கள், நிறுவனங்கள் என ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுவிதமான
எழுத்துக்களை இலக்கியமாகப் பாவிக்கின்றன. இலக்கியம் என்றால் என்ன..? இந்த
ஒரு கேள்விக்கு எல்லாப் புலங்களிலிருந்தும் ஒரே பதில் கிடைப்பதில்லை. ஒரு
பிரதியை இலக்கியம் என நம்மை நம்பவைப்பது எது என்று பேச முற்படும்போது பல
கதைகள் உருவாகிவிடக்கூடிய சாத்தியங்களே அதிகமிருக்கின்றன. அதுபோல ஏற்கனவே
இருக்கின்ற இலக்கியம் பற்றிய கதையாடல்கள் சிதறிவிடக்கூடிய நிலையிலே
எப்போதும் இருக்கின்றது. தரம் தரமற்றது என்ற இடத்தில், ஒரு கவிதைப் பிரதி
என்ன செய்கிறது என்ற வாசிப்பே முக்கியம் என நினைக்கிறேன். ஒரு
பிரதியிலிருந்து மற்றது எந்த வகையில் வேறுபடுகிறது என்ற வாசிப்புக்களும்
அணுகுமுறைகளுமே இன்று அவசியம் என நினைக்கிறேன். தரம் என்ற மதிப்பீட்டு
முறையைப் பலகாலம் பயன்படுத்திவிட்டோம்.. அதற்கு சற்று விடுதலை கொடுப்போம்.
தரம் பற்றிய அணுகுமுறைகள் கடந்த காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்களை நான்
புறக்கணிக்கவில்லை.
கவிதை வார்த்தைகளாலான ஒரு கட்டமைப்பு அல்லது புனைவு எனச் சொல்லும்போதே
கவிதை ஒரு சம்பவம் என்று உணர்த்தத்தான் செய்கிறது. அர்த்தத்தை
உருவாக்குவதற்கும், அதனூடாகக் கவிதையாகத் தன்னை அறிவிப்பதற்கும் இடையிலான
உறவுகளையும் முரண்களையும் கண்டடைய ஒரு அணுகுமுறையே முயற்சியே கவிதை என
நினைக்கத் தூண்டுகிறது. ஒரு கவிதைப் பிரதி என்ன செய்ய முற்படுகிறது, அல்லது
எத்தணிக்கிறது அதற்காக அது உருவாக்கும் கவிதைச் சம்பவங்கள் என்ன என்ற
அளவிலான விமர்சன அணுகுமுறைகளே இன்று சாத்தியம். தர மதிப்பீடுகள் எப்போதும்
தன்னிடம் வன்முறைகளால் தாக்கமுற்ற அளவுகோல்களையே தன்னிடம்
வைத்திருக்கின்றன.
எனவே ஈழத்துக் கவிதைகளைப் பற்றி மிக மோசமான புரிதலைத் தர மதிப்பீட்டு
அளவுகோல்கள் சுட்டிக்காட்டுவதில் பின்னிற்கப்போவதில்லை. ஈழத்துக் கவிதைகள்
பேச்சு, எழுத்து என்ற மொழியின் இரண்டு புலங்களையும் உட்செரித்து
நிற்கின்றன. அந்த இரண்டுக்கும் முக்கியத்துவம் வழங்குகின்றன. மிக
நெருக்கமான அன்றாடச் செயல்களைப்போல் கவிதையை நிகழ்த்துகின்றன. கோசங்கள்,
புகார்கள் போன்ற கவிதைக்குள் வரக்கூடாது என்று தர மதிப்பீடுகள்
தடைவிதித்திருக்கும் சராசரிச் செயல்களை அத்துமீறி கவிதைக்குள்
நுழையவைத்திருக்கின்றன. இவை சார்ந்த அம்சங்களையே கவிதை மொழிதலாகவும்,
கவிதைச் சம்பவங்களாகவும் கட்டமைத்து கவிதைக்குள் ஒரு புதிய வெளியை அதாவது
தர மதிப்பீடுகளைக் கேலி செய்யும் பிரதிச் செயற்பாடுகளை முன்னெடுக்கன்றன.
களப்பணியாளர்களின் வேலைகளைப்போன்று மொழிப் பரப்பிற்குள் கவிதையாகச்
செயற்படுகின்றன. இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். நமது தர
மதிப்பீட்டு விமர்சன ஜாம்பவான்களால் 'தனித்தன்மை' என்ற ஒரு பிடிவாதமும்
(இலக்கிய வாதிக்கு அவரின் படைப்பிற்கு கட்டாயம் இருக்க வேண்டிய அமசம்)
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அது நமது கவிஞர்களின் ஆற்றலைக்
கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது என்பது
புரிந்துகொள்ளப்பட வேண்டும். இது ஓரே மாதிரி ஆயிரக்கணக்கில் எழுதிக்
குவிப்பதற்கு பயன்பட்டதுதான் வரலாறு. கவிதையைப் படித்தால் அது இவருடையது என
அடையாளப்படுத்துமளவு ஒத்த தன்மைகளை ஒரு கவிஞரின் எல்லாக் கவிதைகளும் இருக்க
வேண்டும். ஒரே மாதிரியான கவிதை மொழிதல் முறையே அதிகம்
பயன்படுத்தப்படவேண்டும். இதற்காகப் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
புதிய விசயங்களை, முறைகளை, முயற்சிப்பதில்லை. ஒரே கவிதையைத்
திரும்பத்திரும்ப வெவ்வேறு சம்பவங்களாக எழுதிக்கொண்டிருப்பதுதான் இந்தத்
தனித்தன்மையின் சாதனைகள். ஒரே மாதிரியாக எழுதிக்கொண்டிருப்பது அவர்களின்
பிரதியை அவர்களே கிண்டல் செய்வதுதான். தமிழ் கவிதை வகைமைகள் குறைவாக
இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். தர மதிப்பீட்டு விமர்சன முறைகள் ஒரே
வகையான கவிதைகளை உருவாக்கக்கூடிய அச்சுகள். பிரேம்கள்.
ம.நவீன் : இலங்கை இலக்கியம் குறித்து பேசும்போது ஒரு சின்ன
குழப்பம் எனக்கு எப்போதும் உண்டு. புலம்பெயர்ந்த ஈழ இலக்கியவாதிகளை இன்றை
இலங்கை இலக்கிய வரலாற்றோடு இணைத்துப்பார்க்கும் சூழல் உள்ளதா? இல்லை அவற்றை
அந்தந்த நாடுகளுக்கான இலக்கியமாகப் பார்க்கப்படுகிறதா? என்னளவில்
புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்கள் ஈழ வாழ்வையே தங்கள் படைப்புக்குள்
தருகின்றனர். புலம்பெயர்ந்தாலும் அவர்கள் எழுத்துகள் ஈழத்தைத் தழுவியே
உள்ளன.
றியாஸ்: ஈழத்து இலக்கியம் என்று பார்ப்பது சௌகரிகமற்றது. சற்று
இடைஞ்சலானது. இன்றைய நிலையில் இது பொருத்தமற்றதும் கூட. ஈழத்தில் பல வகையான
இலக்கியங்கள் இருக்கின்றன. ஈழத்து இலக்கியங்கள் எனப் பன்மையில்
அழைக்கக்கூடிய நிலையிலுள்ளது. அதில் புலம் பெயர் இலக்கியம் ஒன்று என்றே
நான் வாசிக்க விரும்புகிறேன். ஈழத்து இலக்கியம் என்று பல இலக்கியப்
போக்குகளைப் பொதுமைப்படுத்தி பொதுப்போக்குகள், பொதுத்தன்மைகள் போன்றவற்றைக்
கண்டடையும் வாசிப்புக்களும், விமர்சன அணுகுமுறைகளும் தான் இதுவரைகாலமும்
பயன்படுத்தப்பட்ட ஒன்று. இனி மேலும் அது தொடரத்தேவையில்லை. அதைக் கடந்து
வித்தியாசங்களைப் பேசுவதுதான் பல புதிய உள்ளடக்கங்களைச் சந்திக்க
உதவக்கூடும்.
ம.நவீன்: புலம்பெயர்ந்த இலக்கியவாதிகளுக்கும் ஈழத்தில் இன்று
இயங்கும் இலக்கியவாதிகளுக்குமான இலக்கியத் தொடர்புநிலைகள் எவ்வாறு உள்ளது?
றியாஸ்: ம்ம்...மிக நெருக்கமாக உள்ளது. புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள்
ஈழத்திலிருப்பவர்களைவிட பல வகையில் பல சௌகரிகங்களோடும், பல வசதி
வாய்ப்புகளோடும் இருக்கிறார்கள். தாயகத்திலிருக்கும் மக்களின் சகல
புலங்களையும் தாமே கையாளக்கூடியவர்கள், தாமே அவர்களைப் பிரதிநிதிப்படுத்தக்
கூடியவர்கள் என்ற நிலைப்பாடுகளும் அவர்களிடமுண்டு. தாயகத்து மக்களை
எப்படிப் பயன்படுத்தினார்கள் இன்னும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பது
தனியான கதைகளைச் சொல்லக்கூடியது. அது இருக்கட்டும், இலக்கியத்தைப் பொறுத்த
மட்டில் பதிப்பாக்கங்களுக்கு உதவுகிறார்கள். ஒரே களத்தில்
செயற்படுவதைப்போன்ற ஆழமான உறவு எப்போதும் இருக்கிறது. ஈழத்திலிருந்து புலம்
பெயர்ந்த முதல் இலக்கியவாதி பிரமிளாகவே இருக்கும் என நினைக்கிறேன். இது
தவறாகக்கூட இருக்கலாம். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா..? ஒன்று இரண்டு
பேருடன் மட்டும்தான் எனக்கு உறவிருக்கிறது.
ம.நவீன்: எனக்கும் சட்டென பிரமிள்தான் ஞாபகத்துக்கு வருகிறார்.
பிரமிள் இருக்கட்டும், நீங்கள் உங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்கொள்ள
விரும்புகிறீர்கள்? கவிஞரா? எழுத்தாளரா?
றியாஸ்: இன்று இரண்டில் ஏதாவது ஒன்றோடு அடையாளப்படுத்தலாம் என்று
யோசிக்கிறேன். அப்படி அடையாளப்படுத்துவதை ஒரு முக்கிய விசயமாக நினைக்க
முடியவில்லை. உண்மையில் என்னை அடையாளப்படுத்த நினைத்தது ஒரு
போராளியாகத்தான். அதற்கான சந்தர்ப்பங்கள் கைக்கூடவில்லை. அதற்கான முக்கிய
காரணம் எனக்கிருக்கின்ற அளவுக்கதிகமான பயம்தான். என்னை மிகச் சிறந்த
பயந்தான்கொள்ளி என்றே நான் கருதுகிறேன். அதிகக் கொலைகளைச் செய்தவர்கள்,
நாடுகளைக் கைப்பற்றி அதிகாரம் செலுத்தியவர்கள் என இன்றும்
நினைத்துப்பார்க்கும்போது என்னைக் கவர்ந்தவர்களாகவே உணர்கிறேன். இன்று
வரையில் கூட வன்முறைதான் மிகக் கவர்சியான ஒன்றாகத் தெரிகிறது. அதற்கு
மாற்றீடான ஒன்றை தத்துவங்களோ, மதங்களோ, அறிவியலோ, இலக்கியமோ இன்னும்
உருவாக்கிவிடவில்லை. சமூகம், கலாச்சாரம் ஏன் நமது எல்லா உற்பத்திகளும்
சிந்தனைகளும் வன்முறையின் பேராசை கொண்டவைதானே... எழுத்தாளனாகவோ கவிஞனாகவோ
அடையாளப்படுத்துவதைவிட நாம் ஏன் வன்முறை செலுத்துபவர்களாக இருக்கிறோம் எனப்
புரிந்து கொள்ள முயற்சிப்பதையே எனது அடையாளமாகக் கொள்ள விரும்புகிறேன்.
வெளிப்படையாக இதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கங்களும் இல்லை.
ம.நவீன்: எழுதுவதை தவிர்த்து, உங்களின் கள வேலைகள் எவ்வாறானவை?
றியாஸ் : சொல்லும்படியாக எதுவுமில்லை. அவ்வப்போது சில இருப்பினும். இனியும்
சாத்தியமா எனத் தெரியவில்லை. ஒத்த கருத்துடையவர்களாக நடிப்பவர்கள் இணையும்
ஒரு இடமாகவே களப்பணி அமைந்திருக்கிறது. அது என்னை உள்ளிளுத்துக் கொள்ளாது.
கொண்டாலும், மிக விரைவில் வெளியேற்றிவிடும்.
ம.நவீன்: இலங்கை போர் சூழலை, நீங்கள் ஒரு முஸ்லிம் என்ற கண் கொண்டு
அவதானிக்கிறீர்களா? அந்தப் போராட்டத்தில் உங்கள் முனைப்பு எவ்வாறானது?
றியாஸ்: ஆமாம், பல வேளைகளில் முஸ்லிம் என்ற அடிப்படையிலிருந்தே புரிந்து
கொள்ள விரும்பியிருக்கிறேன். பின்னர் சில மாற்றங்களும் ஏற்பட்டிருக்கிறது.
மிக மோசமாக வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படும் சிறு சமூகமொன்றின் பக்கம்
சாய்வாக நின்று புரிந்து கொள்ளவும் எதிர்வினையாற்றவும் முயற்சிப்பதாக
உணர்ந்திருக்கிறேன். 'தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டம்' என அறிவித்து
களத்தில் செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், கட்சிகள், புத்திசீவிகள் தமிழைப்
பேசுகின்ற பிற சமூகங்களை (முஸ்லிம்கள், மலையக மக்கள்) பொருட்படுத்தாது
ஓரத்தில் வைத்தே செயற்பட்டனர். அவர்களின் அரசியல் திட்டங்களிலும், அது
சார்ந்த செயற்பாடுகளிலும் இந்த விளிம்பு நிலை சமூகங்களை உள்ளெடுக்கவில்லை.
இவர்கள் ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் அதிகாரம் செலுத்துவதற்கு தேவையான
சனக்கூட்டம் என்றுமே அர்த்தப்படுத்திவந்திருக்கிறார்கள். இன்றும்கூட
இதுதான் நிலைமை. அதிகம் செல்வாக்கற்ற மாற்றுக் குழுக்கள் எப்போதும்
முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்கள் போன்றவர்களின் பக்கம் சாய்வாகவே
செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில்
நினைவுகூரவேண்டும். ஆயுதப் போராட்டத்திற்கான தேவை நியாயமானது. அதைப்
பொறுப்பேற்று நடத்திய நிறுவனங்களின் அரசியல் புரிதல்கள் மிகக் கேவலமானவை.
கே.பாலமுருகன் : இன்று ஒவ்வொரு தேசங்களிலும் சிறுபாண்மை இனம்
அரசியல், மொழி, கலாச்சார ரீதியில் ஒட்டுக்கப்படுவதையும்
புறக்கணிக்கப்படுவதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால்
இலக்கியத்தில் நிகழும் புறக்கணிப்புகளை உரையாடலின் மூலமாகவே அம்பலப்படுத்த
முடியும் என நினைக்கிறேன். இலக்கிய சூழலில் தனிநபர்கள் தங்களுடன்
உடன்படாதவர்களை நோக்கி எதிர்வினையையும் விமர்சனங்களையும் முன்வைத்து
விவாதிதிக்கிறார்கள். இது ஒரு பக்கம் பிம்பங்களைத் தற்காத்துக்கொள்வதைப்
போன்ற ஒரு சார்புடமையைப் பெற்றுவிடுகின்றது. மறுப்பக்கம் இலக்கியத்திற்கான
நியாயத்தைக் கோருவதிலிருந்து இலக்கியத்தில் தனக்கான இருப்பைப்
பத்திரப்படுத்திக்கொள்ளும் சூழலுக்குள் கொண்டு சென்றுவிடுவதுமுண்டு.
ஆகையால் இப்போதைய இலக்கிய சூழலில் தீவிரமான உரையாடல்கள் இலக்கியச்
சுரண்டல்களை வெளிக்கொண்டு வருவதில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
எனக்கு இப்போது உங்கள் கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதை இந்த
உரையாடலில் இணைப்பதன் மூலம் ஒரு பொதுவான பேச்சுக்கு நம்மால் வரமுடியும் என
நினைக்கிறேன். அதில், முஸ்லிம் இலக்கியவாதிகளின் இலக்கிய பங்களிப்புகள்
தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும் அடையாளம் இல்லாமல் இருப்பதாகவும்
கூறியிருந்தீர்கள். அவர்கள் ஈழ இலக்கிய சூழலில் எதிர்நோக்கும் அடையாள
சிக்கல் என்ன?
றியாஸ்: ஆம். அதுதான் உண்மை. ஈழத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற ஒன்று
மிகப் பரவலாக அறியப்பட்டிருக்கிறது. அவை ஈழத்து நவீன இலக்கியம் என்ற
வகையிலோ அல்லது ஈழத்து இலக்கியம் என்ற வகையிலோ கவனிக்கப்பட்ட ஒன்று அல்ல.
முற்போக்கு அணியினர் மிகமோசமாக கடாசி வீசி எறிந்துவிட்ட ஒன்று. தரம்,
மதிப்பீடு, என்று முற்போக்கு அணியினர் மட்டுமல்ல இங்குச் செயற்பட்ட விமர்சன
தாதாக்கள் எல்லோரும் கருதிய எல்லைக்கு வெளியே நிற்பதாக தட்டிக்கழித்த ஒன்று
என்பது எனது அணுகுமுறையாகும். 85 களில் தொடங்கி 90களில் தீவிரமடைந்த
முஸ்லிம் தேச அரசியலும் அதனடியான இலக்கியச் செயற்பாடுகளும்
கவனிக்கப்படவில்லை. தமிழ் பேசும் மக்களின் எதிர்க்குரல்கள் என்றளவிலே
நின்றுவிட்டன. அவைகளை அணுகக்கூடிய விமர்சனமறைகளை கண்டடையவில்லை. தமிழ் தேச
உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டையானது. அதன் அரசியல் செயற்பாடுகளைச்
சிதைக்கக்கூடியது என்றே இன்றும் இது புரிந்துகொள்ளப்படுகிறது. ஈழத்து
இலக்கியம் என்றே இன்றுவரை பேசப்படுகிறது. அது 'தமிழ் பேசும் மக்களுக்கான'
போராட்டம் என்பதைப்போல ஒரு கண்கட்டி வித்தைதான். ஈழத்து இலக்கியங்கள் என
வாசிப்பதையே அந்தக் கட்டுரையில் முன்வைத்திருப்பேன்.
கே.பாலமுருகன்: மதிப்பீடுகள் பற்றி நீங்கள் சொல்லுகையில் அவை ஒரு
சார்புடைய பகுத்தறிவு செயல்பாடாக மாறிவிடுவதாகக் கூறியிருக்கிறீர்கள்.
இன்றைய நவீன இலக்கியத்துக்கு எந்த மாதிரியான விமர்சனம் அல்லது மதிப்பீடு
அவசியம் என நினைக்கிறீர்கள்? கா.நா.சு தமிழ் இலக்கியச் சூழலில் உருவாக்கிய
விமர்சன பார்வை காலாவதியாகிவிட்டதாகக் கருதுகிறீர்களா? அவருடைய விமர்சன
போக்குக்கும் ஈழ விமர்சகர்களின் விமர்சனப் போக்குக்குமிடையே என்ன
வித்தியாசங்களை உங்களால் அடையாளம் காண முடிகின்றது?
றியாஸ்: மதிப்பீடு எப்போதும் பிரதியை அமைதிப்படுத்தவே விரும்பி
வந்திருக்கின்றது. துப்பாக்கியைக் கையில் வைத்துக்கொண்டு எப்போதும் நமது
பின்னால் அலையும் ஒரு கண்காணிப்பாளரைப் போலவே பணிபுரிந்து
வந்திருக்கின்றது. அதற்கு மாற்றாக நான் உரையாடலைப் பரிந்துரை
செய்திருப்பேன். இன்று அதுகூடப் போதுமானதாக அல்லாமலிருக்கலாம். ஒவ்வொரு
பிரதிக்கும் புதிய புதிய வாசிப்பு முறைகள் மற்றும் விமர்சன அணுகுமுறைகள்
தேவை என்றே கருதுகிறேன். கா.நா.சு வழி பரவிய இலக்கிய அணுகுமுறை இன்னும்
காலாவதியாகவில்லை. அது மிக ஆழமாக இலக்கியப்பரப்பை ஆக்கிரமித்திருப்பதாகவே
உணர்கிறேன். 'உள்ளொளி' அபிப்பிராயங்களை ஒற்றை வரிகளில் ஒரு வகை கவிதை
மயக்கமான சொற்களில் உதிர்த்துவிடும் விமர்சன முறை இது. கடந்த காலங்களில்
அதிக இலக்கியப் பயிற்சி உள்ளவர்களாக கருதியவர்கள் பயன்படுத்திய இந்த
முறைமையை இன்று, ஆரம்பநிலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் கையளமுடிகிற
ஒன்றாய் மாறியிருக்கிறது. விமர்சன அணுகல்முறை 80களுக்குப் பிறகு கோட்பாட்டு
நிலையை சார்ந்து நிற்கத்தொடங்கிவிட்டது. இப்போது அபிப்பிராயம் சார்ந்த
இலக்கிய அணுகல் முறையை யாரும் கண்டுகொள்வதில்லை. ஒரு புராதனப் பொருளைப்
பார்க்கும் ஆனந்தத்தை மட்டுமே அதில் உணர விரும்புகிறார்கள். இது பழைய
பொருட்களைச் சேகரிக்கும் தொழில்முறை சார்ந்தவர்களின் கண்களுக்கே முக்கியமான
ஒன்றாய் போய்விட்டது.
தனது இலக்கியம், தரம் சார்ந்த, ஏற்கனவே தன்னிடமுள்ள தீர்மானங்களை
ஒத்துப்போவதைக் கொண்டாடுவதும், தனது பார்வையே அணுகுமுறையே
எக்காலத்துக்குமான சரியான அணுகுமுறை என வலியுறுத்தவும் அறைகூவல்
விடுக்கவும் அதிகம் பேரால் இந்த உள்ளொளி அணுகல் பயன்பட்டது. கா.ந.சு -
இலக்கியம் ஒரு வகையான வித்தை. அது ஒவ்வொருவருக்குள்ளும் எங்கிருந்தோ
உதிக்கிறது போன்ற நம்பிக்கை சார்ந்து சிந்திப்பவர். எனது கருத்து, எனக்குப்
படுகிறது அதைச் சொல்கிறேன். எனது நிலைவரை நீயும் உயர்ந்தால், உனக்கு
தானாகவே புரியும். தனிநபர் அவரது வாழ்க்கை, எழுத்தாளரின் அனுபவம் அதற்கே
முக்கியத்துவம் என்றே அமைந்த ஒன்று இவரின் அணுகல் முறை. எனவே, இது ஒரு
கவர்ச்சியுள்ள இருப்பிடமாக மாறியது. எல்லோரும் அதில் தஞ்சமடைந்தனர். இவரின்
அணுகல்முறை பிராமண சிந்தளைகளால் அதிகம் பாதிப்புள்ளாகியிருந்தாலும் அதைக்
கவனிக்கும் புரிதல்களுக்கான வசதி அன்றிருக்கவில்லை. ஈழத்தில் நவீன
விமர்சனம் மார்க்சிய தன்மைகொண்டதாக தன்னை காட்டிக்கொண்டது. மு.தளையசிங்கம்
சொந்த விமர்சன அணுகுமுறையை உருவாக்கியபோதும் வளர்த்தெடுக்கப்படவில்லை.
உள்ளொளி சார்ந்த விமர்சன அணுகுமுறை ஈழத்தில் புளக்கத்திலிருந்தாலும் அது
பிராமணத் தாக்கம் அற்றதாகவே இருந்தது. ஆனாலும், கலைத்தரம் என்ற ஒன்றை
முன்னிறுத்தி மற்றைய இலக்கியங்கள் மற்றும் பிராந்திய இலக்கியங்கள்
போன்றவற்றை புறக்கணிக்கத்தக்கதாக தன்னை மாற்றிக்கொண்டது. பின்னர்
மார்க்சியம், உள்ளொளி, அரசியல் நிலைப்பாடுகளுக்கான முன்னுரிமை என ஒரு
கலப்பு விமர்சன அணுகல்முறை உருவாகத் தொடங்கின. ஈழத்து விமர்சனப்போக்கை
கோட்பாடு சார்ந்து முதன்மைப்படுத்திவர் எம்.ஐ.எம்.றஊப் அவர்களே. பின்
நவீனத்துவம் சார்ந்த வாசிப்புக்களும் இவரின் அணுகலிலிருந்தே கவனத்தைப்
பெறத்தொடங்கியது. இது 2000 ஆண்டுகளுக்குப் பின்பே இங்கு நிகழ்ந்தது.
கே.பாலமுருகன் : ஈழ இலக்கியம் வெறும் எதிர்ப்பிலக்கியமாகவும்
புரட்சி இலக்கியமாகவும் எதிர்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டு விடுமோ
என்கிற சிந்தனை உங்களிடம் இருக்கின்றதா? இந்தக் கூற்றை மறுக்கும்விதமான
சூழல் ஈழத்தில் இருக்கின்றனவா?
றியாஸ்: இல்லை. அப்படி நான் கருதவில்லை. எதிர்ப்பிலக்கியம், புரட்சி
இலக்கியம் என்ற வகையில் சிந்திக்கக் கூடிய இலக்கியங்களும் இங்கு
இருக்கின்றன என்பதாகவே பேசப்படும் என நினைக்கிறேன். இப்படித்தான்
பேசப்படவும் வேண்டும். அது ஈழத்தில் முகிழ்ந்த ஒரு வகை இலக்கியப்போக்கு.
ஈழத்தில் பல இலக்கியப்போக்குகள் இருக்கின்றன. அவைகளை விரிவாக
வாசிக்கும்போது இது புலப்படும் என்றே நினைக்கிறேன். அவைகளைப்
புரிந்துகொள்ளப்படக்கூடிய விமர்சன அணுகல் முறைகளும் இங்குப்
முயற்சிக்கப்படுகின்றன.
தொடரும்...
|
|