|
|
இலங்கை எழுத்தாளர் திருமலை அஷ்ரஃபின் அறுவடைக் காலமும் கனவும்
செப்டம்பர் மாதத்தில் என் மனதிற்குச் சிலிர்ப்பூட்டிய முக்கிய விடயங்களில்
ஒன்று நண்பர் நவீனின் இலங்கைப் பயணம். ஒரு பெரும் போராட்டத்திற்கும்
இழப்பிற்கும் பிறகான அந்த தேசத்திற்கு நன்கு அறிமுகமான ஒருவரின் பயணம் என்
கவனத்திற்குரிய ஒன்றாக மாறியிருந்தது. இலங்கையில் இருந்து திரும்பிய
இரண்டொரு தினங்களில் நவீன் அழைத்திருந்தார். இலங்கைப் பயணம் குறித்தும்,
அங்குள்ள படைப்பாளிகளின் நிலைப்பாடு அவர்களின் எதிர்பார்ப்பு குறித்தும்
அவரின் சுருக்கமான உரையாடல் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக இருந்தது. இலங்கை
எழுத்தாளர்களின் அறிமுகமும் அவர்களின் படைப்புகள் குறித்த பகிர்வும்
காலத்தின் தேவையாகவே நான் கருதுகிறேன். மொழி, இனம், சமயம், கல்வி என
வாழ்வியல் உரிமைகள் அத்தனைக்கும் மீதான ஒடுக்குமுறைகளையும்
கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளையும் மீறி கட்டுகளைக் உடைத்துக் கொண்டு
வெளிவரும் இலங்கை இலக்கியத்தின் வீரியத்தை நாமும் உணர வேண்டும். அது
குறித்து உரையாட வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அந்த வரிசையில் இம்மாத
சுவடுகளின் பயணத்தில் இலங்கை எழுத்தாளர் திருமலை அஷ்ரஃபின் அறுவடைக்
காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுப்போடு பயணம் தொடர்கிறது.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்துல் பரீட் முகம்மது அஷ்ரஃப் –
நேஹா, புரட்சி மகன், திருமலை அஷ்ரஃப் போன்ற பல பெயர்களின் கவிதை எழுதி
வருகின்றவர் ஆவார். தினகரன், வீரகேசரி நாளிதழ்களிலும் ஞானம், மல்லிகை,
நிஷ்டை, படிகள், பெருவெளி முதலிய இதழ்களிலும் இவரது கவிதைகள் கண்டுள்ளன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராக கடமையாற்றி
வருகிறார்.
பஸ்தரிப்பு நிலையம்
பயணம்
இங்கேதான் ஆரம்பிக்கிறது
சாதாரண வண்டியிலா
அரை சொகுசு
சொகுசு வண்டியிலா
எதிலும் ஆரம்பிக்கலாம்
அது அவரவர்
வசதியைப் பொறுத்தது.
வாழ்வின் யதார்த்தத்தை மிக எளிமையாக பதிவு செய்திருக்கிறார் கவிஞர்.
பணக்காரன் தொடர்ந்து பணக்காரன் ஆகிக் கொண்டே போவதும் ஏழைகள் தொடர்ந்து பரம
ஏழைகள் ஆகிக் கொண்டே போவதும் உலகியல் யதார்த்தமாகி விட்டது. அமெரிக்கா
என்றாலும் ஆசியா என்றாலும் இந்த நடைமுறை மட்டும் மாறாமல் பொருளாதார ஏற்றத்
தாழ்வுகள் மிக வன்மையாக நடந்தபடியே இருக்கின்றன. பணம்தான் வாழ்வைத்
தீர்மானிக்கின்றது; பணம்தான் வாழ்வை நகர்த்திச் செல்லும் பிரதான கருவியாக
இருக்கின்றது. பணம் எனும் கருவி வலிமை உள்ளவன் வாழ்வை தனக்கேற்றதாக எல்லா
நிலையிலும் மாற்றிக் கொள்கிறான். கல்வி எனும் கருவி வலிமையற்றவன் தன்
வாழ்வு செல்லும் வழியிலேயே தானும் சென்று எல்லா துன்பங்களிலும் உழன்று
எப்போதாவது வரும் இன்பங்களில் சிரித்து வாழ்வை முடித்துக் கொள்கிறான். ஒரு
சாதாரண பேருந்து பயணத்தில் கூட இதுதான் நடக்கிறது. எந்த பேருந்தில் பயணப்பட
போகிறோம் என்பதையும் பல வேளைகளில் பண இருப்பும் சில வேளைகளில் மனமும்
தீர்மானிக்கின்றது.
எப்படியாயினும்
வழியில்
பல்வகைத் தடங்கல்கள் வரலாம்
தூங்கினால்
சிலர் நம்மைத் தாங்குவர்
நாமும் சிலரைத் தாங்கலாம்
கையைக் காலை
நீட்டவும் முடியாது
அயலவரின்
அறுவையும் அரிப்பும்...
பயணம் செல்லும் ஒரு பயணிப்பவனின் வலிகள் இவை. பயணத்தில் தடங்கல்கள் என்பது
இயல்பானது தடங்கல்களில் மீண்டு வருகிற போதுதான் நாம் செதுக்கப்படுகிறோம்.
வாழ்வியல் பாதையில் தடுக்கி விழாமல் பயணிக்க தடங்கல்களும், சவால்களும்
தரும் பாடங்கள்தான் பாலமாக விளங்குகின்றன. சில வேளை தடங்கலிருந்து நம்மை
யாராவது மீட்டெடுக்கலாம். நாமும் யாரையாவது மீட்டெடுக்கலாம். சில
நன்றிகளோடும் புன்னகைகளோடு கைக்குலுக்கல்களோடும் நமது பயணம் தொடங்கலாம்.
சில பயணங்களில் நாம் முடக்கப்படலாம். பயணம் முடியும் வரை
ஒடுக்கப்பட்டவர்களாய் பயணிக்கலாம். பயணத்தில் நாம் தனித்திருப்பதில்லை.
நம்மோடு உடன் பயணிக்கும் சக பயணியையும் சுமந்தபடிதான் பயணிக்கிறோம். நமது
பயணம் சுகப் பயணமாய் அமைய சக பயணியையும் நமது எல்லைகளையும் மீறி பொறுத்துக்
கொள்கிறோம்.
நாளாந்த வாழ்வில்
எறும்புகளாய்
மனிதர்கள்
கூடியும்
சிதறியும்
அணிவகுத்தும்
தனித்தும்
சேர்ந்தும்
பொந்துகளில்
மறைந்தும்
தெரிந்தும்
அவர்கள்
நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
எறும்புகளோடு மனிதனை ஒப்பிடும் ஒரு கவிஞனின் வலி இங்கே
பதிவாக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டே மலிவாக்கப்பட்ட மனிதம் படும் அவலம்
இது. எறும்புகளைப் போலவே நசுக்கப்படுகிறது மனித வாழ்வு. எப்படி எறும்புகள்
நசுக்கப்படுவது தெரிவதில்லையோ அதுபோல்தான் மனிதர்கள் நசுக்கப்படுவதும்
பெரும்பாலும் வெளிவருதில்லை. அவர்களின் இழப்புகள் நான்கு சுவர்களுக்குள்
கண்ணீர்கூட மறைக்கப்பட்டு நிரந்தரமாய் புதைக்கப்பட்டு விடுகின்றன.
அவர்களது
நம்பிக்கைச் சுவரை
உங்கள் துப்பாக்கிகள்
ஒரு போதுமே தகர்க்கப் போவதில்லை
அது உறுதியானது
அதற்கு அப்பாலும்...
போர்ச்சூழலினான வாழ்வில் எப்போதும் உடன் வருவது நம்பிக்கை ஒன்றுதான்.
வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கைதான் தொடர்ந்து போராட வைக்கிறது.
பின்வாங்காமல் எதிர்க்க வைக்கிறது. எதிரியின் ஆன்ம பலத்தை இந்த
நம்பிக்கையினால் மட்டும்தான் தகர்த்தெறிய முடியும். துப்பாக்கிகளாலும்
தோட்டாக்களாலும் அந்த நம்பிக்கையினைத் தகர்த்தெறிந்துவிட முடியாது.
முற்றும் துடைத்தொழிக்கப்பட்ட பிறகு கூட நம்பிக்கை விதையானது முளைத்தெழ
முடியும். பாறையில் முளைத்தெழும் விதை போன்றதானது அந்த நம்பிக்கை. அது
நம்பிக்கை உறுதியானது என்பதுதான் நமது கண்களுக்குத் தெரியும் ஒரு சிறு
வெளிச்சம்.
தலைகளுக்குத்
தரம் நிர்ணயிக்க
இது ஒன்றும் வியாபாரமல்ல.
போராட்டம்.
வாழ்வதற்கும் பின்னர்
சாவதற்கும்,
சாவதற்கும் பி்ன்னர்
வாழ்வதற்குமான
வாழ்க்கைப் போராட்டம்.
இலங்கை எழுத்தாளர்களையும் அவர்கள் கடந்து வந்த போராட்ட வாழ்வையும்
பிரித்தெடுக்கவே முடியாது. போராட்டம் என்பது அவர்களின் படைப்புகளில் பல
தளங்களில் தொடந்து பதிவு செய்யப்படுகிறது. போராட்டத்தை ஆதரிப்பவர்கள் அதன்
அவசியம் குறித்தும் போராட்டத்தை மறுப்பவர்கள் அதன் அநாவசியம் குறித்தும்
தொடர்ந்து பதிவு செய்ய படிதான் இருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் வழி
அவர்கள் மிக முக்கியமாக தம்மை தமது வாழ்வை வெளிக்கொணர்ந்தவிட தொடர்ந்து
முயற்சித்தபடியே இருக்கின்றார்கள். அந்த வரிசையில் எழுத்தாளர் திருமலை
அஷ்ரஃபும் அவசியங்கள் குறித்தும் அநாவசியங்கள் குறித்தும் தமது கவிதைத்
தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளில் பதிவு செய்திருக்கின்றார். மிக எளிமையான
சொற்களின் பயன்பாட்டில் அவரின் கவிதைகள் மிளிர்க்கின்றன. தொடர்ந்த
அடுத்தகட்டத்தை நோக்கி பயணப்படும் படைப்புகளை அவர் தொடர்ந்து படைக்க
வேண்டும் என்பதே நமது அவா.
|
|