|
|
சோளகர் தொட்டி : வதையும் வன்முறையும்
‘சோளகர் தொட்டி’ குறித்து எழுத தடையாக வந்தமைவது எது என்ற கேள்வியை நான்
இந்த வாக்கியத்தைத் தொடங்கும் போதும் கேட்டுப் பார்க்கிறேன். ஒருவேளை
இந்நாவலை விவரிக்கத் தொடங்கும் போது உறுவி எடுக்க முடியாமல் விரவி
கிடக்கும், அதன் அடர்த்தியான வாழ்வு ஒருவித தயக்கத்தைக் கொடுக்கலாமோ என்று
தோன்றுகிறது. வெவ்வேறு சம்பவங்களைக் கொண்டிருக்கும் ஒரு பிரதியை விவரிக்க
முனையும் போது சம்பவங்களைச் சொல்லி கதையை உணர்த்துதல் எளிது. ஆனால் ‘சோளகர்
தொட்டி’ மானுட விரோதத்துக்கான எதிர்ப்புணர்வை வெவ்வேறு தொணியின் மூலம் அதன்
ஆழம்வரை கொண்டு செல்ல முனைகிறது.
ஒரு சிறுபான்மை இனத்தை எப்படி வெவ்வேறு சக்திகள் கட்டுப்படுத்த, சுரண்ட
முயல்கின்றன என ச.பாலமுருகன் நாவலின் தொடக்கம் முதல் சொல்லிக்கொண்டு
செல்கிறார். எனக்கு ச.பாலமுருகன் குறித்த முழுமையான விபரங்கள் தெரியவில்லை.
தேடிப்பார்த்ததில் அவர் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக்
கொண்டவர் என்றும் வழக்குரைஞரான அவர் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை
மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர்
என்பதும் தெரிந்தது. மேலும் பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின்
மாநிலச் செயலாளர் என்ற தகவலும் ஒரு வலைத்தளத்தில் கிடைத்தது. அவர்
எழுத்துகள் மலேசியாவில் அறிமுகமாக வேண்டிய அவசியம் இருப்பதையும் ‘சோளகர்
தொட்டி’ அழுத்தமாகச் சொன்னது.
முதலில் மிக முக்கிய ஓர் ஆவணத்தன்மை கொண்ட இந்நாவலை ச. பாலமுருகன் மிகவும்
திட்டமிட்டு அடுக்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். நாவலின்
எவ்விடத்திலும் காலம், காட்சி, சம்பவங்கள் தொடர்பான மயக்கம் இல்லை. மிக
நேரடியாக, இலகுவான ஒரு மொழியில் கதை கூறி செல்கின்றார் ஆசிரியர்.
ஒருவகையில் இதுவே இந்நாவலின் முக்கிய பலவீனமாகவும் மாறிவிடுகின்றது.
தனித்து ஒலிக்கின்ற ஒரு சமூகத்தின் மொழியினூடாக ஒரு பிரதியை வாசிக்கும்
போது, அப்பிரதி நம்மைக் அவர்கள் வாழ்வின் மிக அண்மையில் கொண்டுசென்று
நிறுத்துகிறது. அம்மொழிக்கே உண்டான தனித்த சொல்லாடல்கள் முதலில் சில தடைகளை
வாசகனுக்கு ஏற்படுத்தினாலும் பின்னர் வாசகன் நாவலினூடாகப் பயணிக்க அதுவே
வழி செய்து தருகிறது. இதை நான் பல நாவல்களை வாசிக்கும் போது
அனுபவித்ததுண்டு. ஜெயமோகனின் ஏழாம் உலகம், சு.ராவின் புளிய மரத்தின் கதை,
ஷோபா சக்தியின் கொரில்லா, ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, சீ.முத்துசாமியின்
மண்புழுக்கள் என்பவை சட்டென நினைவுக்கு வரும் நாவல்கள். ஆனால் ச.பாலமுருகன்
ஆனந்த விகடனில் செய்திருந்த ஒரு பகிர்தலின் வழி அவர் அந்நாவலை எழுத தனக்கான
மிக முக்கியமான காரணங்களை வைத்துள்ளார் என்பது புரிந்தது.
அப்பகிர்வில் அவர் சொல்கிறார், ‘1999 தொடங்கி 2002 வரை சதாசிவம் கமிஷன்
முன்பு சாட்சியம் சொல்வதற்காக பழங்குடி மக்களை அழைத்து வந்தோம். அந்த
மக்கள் ஒவ்வொருவரும் விவரித்த சித்ரவதைகள் எல்லோரையும் குலை நடுங்க வைத்தன.
காவல் துறையால் அடித்து உதைத்து முடமாக்கப்பட்டவர்கள், பாலியல்
வல்லுறவுக்கு உள்ளானவர்கள், வீடுகள் எரிக்கப்பட்டு ஊரைவிட்டுத் துரத்தப்
பட்டவர்கள் என அவர்களின் வாழ்க்கையே சிதைக்கப் பட்டு இருந்தது. போலீஸ்
சித்ரவதையால் பல பேர் பைத்தியங்களாகத் திரிந்தார்கள். அரச வன்முறையின்
கோரமான முகத்தை ஆவணமாகப் பாதுகாக்க வேண்டிய தேவையும் இருந்தது. 'சோளகர்
தொட்டி' என்ற நாவல் இப்படித்தான் உருவானது. புத்தகம் விற்றது. ஆனால்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான நீதி இன்று வரை கிடைக்கவில்லை.’
ஓர் எழுத்தாளன், தான் உருவாக்கும் பிரதியின் காரணத்தை தனக்கான ஓர் அந்தரங்க
சக்தியாகக் கொண்டுள்ளான். அதுவே அவனை இயக்குகிறது. வாசகனின் மலிவான ரசனையை
நிரப்ப எழுதும் ஜனரஞ்சக எழுத்துக்கும் வாழ்வை பதிவு செய்யும் எழுத்துக்கும்
புனைவின் பல்வேறு சாத்தியங்களில் ஊடுறுவி செல்லும் படைப்புக்கும்
எழுத்தாளனின் நோக்கமே காரணமாகின்றது. அவ்வகையில் சிதைக்கப்பட்ட பழங்குடி
மக்கள் வாழ்வை ஆவணமாக்கும் முயற்சியில் உருவான இந்நாவல் தன் பணியை நிறைவாய்
செய்துள்ளது.
0 0 0
நாவல் இரு பாகங்களாய் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் இம்மக்களுடைய
நம்பிக்கைகள், வேட்டை சார்ந்த வாழ்வு, இவற்றினூடாக பிற இனக்குழுவினைச்
சார்ந்தவர்களால் ஏற்படும் இடையூறுகள் என சொல்லிச் செல்கிறது. இரண்டாம்
பாகம் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக - கர்நாடக அதிரடிப் படைகள்
மலைவாழ் மக்கள் மீது நிகழ்த்திய வன்முறைகளைப் பேசுகிறது. என் வாசிப்பில்
இந்நாவல் அதிரடிப்படையின் வன்முறையின் உச்சமான தருணங்களை நோக்கி பயணிக்கவே
தனது முதல் வார்த்தையைத் தொடங்குகிறது என்பேன்.
அந்தப் பெரும் அவலங்களை ஒரு வாசகன் எதிர்க்கொள்ளவே, சோளகர்கள் வனவிலங்குகள்
மூலம் எதிர்க்கொள்ளும் சவால்கள் , பிற இனக்குழுவினைச் சார்ந்தவர்களால்
ஏற்படும் சுரண்டல்கள் , மழை பொய்த்தல் என்பன போன்ற இடையூறுகளைக்கூறி
வாசகனைப் பிரதி தயார்ப்படுத்துகிறது. தங்கள் மீது சுமத்தப்படும் அத்தனை
அழுத்தங்களையும் ஏற்றுக்கொண்டு வாழ்வை கொண்டாட்டமாக்கத் தொடர்ந்து முயலும்
ஓர் இனக்குழுவின் கண்ணீரின் தொடக்கத்தை அறிமுகம் செய்ய முதல்பாகம்
தயாராகிறது.
நாவலை உள்வாங்கி கொள்ள சோளகர்களின் ஆட்சி முறையை விளங்கி கொள்ள
வேண்டியுள்ளது. தொட்டிக்குத் தலைவனாக இருப்பவனை ‘கோல்காரன்' என்று
அழைக்கிறார்கள். கையில் ஒரு கோல் வைத்து தொட்டியினருக்குள் எழும்
பிரச்சினைகளை இவனே தீர்த்து வைக்கின்றான். கோல்காரனிடம் பஞ்சாயத்துக்குச்
செல்லும்போது ஒருபடி தானியம் எடுத்துச் செல்லும் வழக்கத்தினை தொட்டியினர்
பின்பற்றுகின்றனர். நாவல் வழி ‘கோல்காரன்’ அளவுக்கு ‘கொத்தல்லி’ எனும்
கிழவனும் ஒரு தலைவனுக்கான தன்மையுடன் காட்டப்படுகிறான்.
கோல்காரனின் மகன் சிக்குமாதா இறந்துவிட, அவன் மனைவிக்கு தன் கணவனின் தம்பி
கரியனிடமிருந்து தனக்கும் தன் குழந்தைகளுக்கும் அரவணைப்பு தேவைப்படுகிறது.
அதற்கான ஆயர்த்தங்களை அவள் செய்யும் போது கோல்காரன் அதை லாவகமாகத்
தடுக்கிறான். கோல்காரன் மீது அவன் மருமகள் புகார் கூறும் காட்சியில், ஒரு
படி ராகியை ஒரு முறத்தில் எடுத்துக்கொண்டு கொத்தல்லியின் முன்
வைத்தபின்பே தன் புகாரினைக் கூறி கொத்தல்லியை விசாரிக்கக் கோருகிறாள்.
கொத்தல்லியின் முடிவுதான் அங்கு எடுபடுகிறது. கரியன் தன் அண்ணியை மணக்க
தீர்ப்பாகிறது. ஒருவகையில் இம்மக்களின் உறவு சார்ந்த கட்டமைப்பின்
புறக்கணிப்புகளை அல்லது உறவின் மாற்று வடிவங்களைக் கூறும் பகுதி இதுவாக
இருக்கிறது. கரியனின் சம்மதம் பெற்று ஊரார் திருமணம் நடத்துகின்றனர்.
மேலும் பெண்ணைவிட ஏழு வயது இளையவனாகக் கரியனைக் கோல்காரன் தனது
தயக்கத்துக்குக் காரணம் காட்ட , கொத்தல்லி “எப்போது வயது பார்க்கும் முறை
நம் தொட்டியில் வந்தது ?” எனக் கேட்பதன் மூலம் உறவுகளுக்குப் போலி
மதிப்பீடுகளைக் கொடுக்காமல், மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்
பழங்குடி வாழ்க்கையை அறிந்துகொள்ள முடிகிறது.
சோளகர்களுக்கு நிகழும் சிக்கல்களுக்கு நடுவில் காலங்காலமாக அவர்கள்
சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்த நிலம் வேறு சிலரால் அபகரிக்கப்படும்
சூழலும் உருவாகிறது.
சிறையில் இருக்கு ஒரு சோளக்கனை மீட்க மணியக்காரனின் கையாள் துரையனிடம்
ஐநூறு ரூபாய் கடன் வாங்குவதிலிருந்து இச்சுரண்டல் தொடங்குகிறது.
மணியக்காரர் அப்பகுதியில் கொஞ்சம் செல்வாக்கு மிக்கவர். மழை பெய்து ராகி
விழைந்தவுடன் அக்கடனைத் திரும்பக் கொடுப்பதாகத் தொட்டியினர்
வாக்களிக்கின்றனர். இந்நிலையில் மழை பொய்க்கிறது. தொட்டியினர் தங்களின் குல
தெய்வ சடங்குகளைச் செய்தபின் மழைப்பொழிய விவசாயம் தொடங்கும் முன்பே துரையன்
அவன் மனைவி சாந்தா, மகன் ராஜு, லிங்காயத்துக்கள் மற்றும் கவுண்டர்களுடன்
பேதனின் காட்டை ஒட்டிய கோல்காரனின் காட்டில் ஓலை குடிசை போடுகின்றனர்.
கொடுத்த தவணை இன்னும் முடியாத நிலையில் வேறு ஆட்கள் தங்கள் பூமியில் குடிசை
போடுவதை அவர்களால் சிறு சலசலப்புக்குப் பின் சகித்துக்கொள்ளவே முடிகிறது.
பிரச்சனை அதோடு தீரவில்லை. துரையன், பேதன் காட்டின் வேலியையும் பிரித்து
சில அடிகள் அபகரிக்க, பிரச்சனை முற்றுகிறது. துரையன் மணியக்காரனின்
துணையுடன் சீர்காடு பூமி முழுவதையும் அரசாங்கத்தில் பதிவு செய்து தனக்கு
உரிமையாக்கிக்கொள்கிறான். அதற்கான சான்றுகளைக் காட்டுகிறான். மீறி எதிர்த்த
பேதனை போலிஸார் கைது செய்து அடிக்கிறார்கள். தொட்டியினர் எதிர்க்க
சக்தியற்றிருக்கிறார்கள். பெரும் நிலத்துக்குச் சொந்தகாரனாகிவிட்ட துரையன்
காட்டுப்பன்றி தாக்குதலால் சாகிறான். அதன் பின் மணியக்காரனுக்கும்
துரையனின் மனைவி சாந்தாவுக்கும் ஏற்பட்ட தொடர்பால் அவரும் பழைய செல்வாக்கை
இழக்கிறார். இதற்கிடையில் சென்நெஞ்சா (கோல்காரன்) தனது பதவியை தனது
மகனுக்கு வழங்குகிறான். கரியன் புதிய கோல்காரனாகிறான்.
இவ்வாறு நாவலில் பல சம்பவங்கள் மிக விரைவாக நகர்கின்றன. ஏதோ ஒரு வகையில்
இயற்கை சோளகர்களுக்கு துணை நிர்ப்பதாகவே காட்சிகள் விவரிக்க முயல்கின்றன.
அதன் ஒரு பகுதியாக வனக்காவலர்கள் காட்டில் தீ பிடித்தால் தகவல் சொல்லும்
பொறுப்பை சிவண்ணாவுக்கு வழங்கி மாதம் நூறு ரூபாய் தர சம்மதிக்கின்றனர்.
நெருப்பு கண்காணியாகிவிட்ட சிவண்ணா தனக்கு புதிய அங்கீகாரம் கிடைத்த
மகிழ்வில் காடு முழுதும் சுற்றித்திரிகிறான். சோளகர்களும் பழைய தெம்புடன்
இருக்கிறார்கள். நாவலில் இந்தச் சிவண்ணாவே மையப் பாத்திரமாக இருக்கிறான்.
நாவலின் மறுபகுதி பெரும்பாலும் அவனை சார்ந்தே வருகிறது. காட்டில் திரிந்த
காலத்தில் சிவண்ணாவுக்கும் மாதி என்ற பெண்ணுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது.
மாதிக்கு சித்தி என்ற ஐந்து வயது பெண்ணும் சதா கஞ்சா மயக்கத்தில் இருக்கும்
கணவனும் உண்டு. சிவண்ணா சித்தியிடம் அன்பு செலுத்துகிறான். தன் மனைவியை
மறந்து அவளுடனேயே தங்கியும் விடுகிறான். பின்னர் மாதியையும் சித்தியையும்
அழைத்துக் கொண்டு தன் குடிசைக்கே வருகிறான். அவன் முதல் மனைவி இருக்கின்ற
பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியேறியிருக்கிறாள். முதலில் முகம் கொடுத்த
மறுத்த சிவாண்ணனின் தாயார் ஜோகம்மா சித்திக்கு ஒரு சந்தர்ப்பத்தில் உடல்
நலம் கெட உதவிக்கு வந்து அவர்களோடு இணைந்து கொள்கிறாள். சிவாண்ணனுக்கு
நெருப்பு கங்காணி வேலையும் சில மாதங்களில் பரிபோகிறது. இதற்கிடையில்
தொட்டிக்கு வனத்தின் உட்பகுதியில் நடக்கும் சில சம்பவங்கள் குறித்த
தகவல்கள் மிக குறுகிய வடிவில் இவ்வாறு வந்து கிடைக்கின்றன.
- கர்நாடகா பகுதியில் காவல்துறை அதிகாரிகள் இறந்தார்கள்
- வீரப்பனின் ஆட்களைச் சுட்டுக் கொன்றார்கள்
- இராணுவம் வீரப்பனைப் பிடிக்க வந்திருக்கிறது
- வீரப்பன் யாரையோ கடத்தி விட்டானாம்.
இந்நிலையில் காவலர்கள் தொட்டிக்கு வந்து , இனி சோளகர்கள் வனத்துக்குள்
நுழையக் கூடாது என கட்டளைப் பிறப்பிப்பதுடன் முதல் பாகம் முடிகிறது.
முதல் பாகம், சோளகர்களிடம் நிலவும் பல்வேறு வகையான சிக்கலை விவரித்தாலும்
அவர்கள் வாழ்வில் எப்போதுமே குடிகொண்டிருக்கும் ஒரு மகிழ்ச்சியை
வெளிக்காட்டியபடியே உள்ளது. நாவலின் தொடக்கத்தில் தங்கள் காட்டில் புகும்
யானையைத் துரத்திவிட்டு, சோளகர்கள் ஒன்றாகக் குழுமி விடியும் வரை பாடி
ஆடுகின்றனர்.
புதிய மனைவியை அழைத்து வரும் சிவாண்ணன் வீடு துடைத்திருக்க, ‘உன் மூத்தவள்
நீ வரும் கோபத்தின் அனைத்தையும் துடைத்துவிட்டாள்’ என்று கூறி
சிரிக்கிறான்.
சிவாண்ணாவின் தவறைக் கண்டிக்க வேண்டிய ஊருக்கு பெரியவரான கொத்தல்லியோ,
சிவண்ணாவின் எந்தச் செயலையும் கண்டிக்காமல் ‘ஊருக்கு விருந்து வச்சிடுங்க’
என்று கூறி புதிய பெண்ணை வரவேற்கிறார்.
சோளகர்களுக்குச் சொத்து சுதந்திரம்தான் என்பது அவர்களின் கொள்கையாக
இருக்கிறது. அதை பல இடங்களில் பலமாதிரி சொல்லிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு
வாழ்வு குறித்த பெரிய கேள்விகள் இல்லை. தங்களைத் துன்பப்படுத்திய துரையனின்
மரணத்துக்கும் அவர்கள் வருந்துகின்றனர். அவர்களின் வாழ்வை அர்த்தமாக்குவது
வனம். அந்த வனத்தை அவர்களுக்கு அந்நியப்படுத்த முயலும் சக்திகளை அவர்களால்
அதிர்ச்சியோடு கவனிக்க மட்டுமே முடிகிறது. ஒரு சமயம் ஒண்ணன் சொல்கிறான்.
"காட்டிலே எல்லாத்தையும் காசாக்குறதுக்கு அவனவன் வெடிக்கட்டையும்
(துப்பாக்கி) கையுமா அலையறாங்க. எந்த உசிரும் மிஞ்சாது, தாயி. ஒரு
காலத்திலே இந்த காட்டோட எல்லைக்குள்ள வரவே நம்மகிட்ட அனுமதி வாங்கினாங்க.
எனக்குப் பதினாறு வயதிருக்கும் போது கல்யாணம் ஆச்சு. அந்த சமயத்திலே
வெள்ளைக்காரங்க இங்கே வேட்டையாட வந்தாங்க. அப்போ எங்க அப்பனைக் கூப்பிட்டு
வேட்டையாடலாமான்னு கேட்டாங்க. அது ஒரு காலம். சோலையை ஆண்டவன்டா நாம.
அதுதான் சோளகன்னு எங்கப்பன் சொல்லுவான்".
அவர்கள் வனத்தின் மைந்தர்களாகத் தங்களை வருணித்துக்கொள்கிறார்கள். அவ்வாரே
வாழ்கிறார்கள்.
0 0 0
நாவலின் இரண்டாம் பாகம், பரபரவென்று வேறொரு திசையில் நகர்கிறது. கொஞ்சம்
கொஞ்சமாகச் சுரண்டப்படும் ஒரு மக்கள் கூட்டம், வன்மமாகச் சிதைக்கப்படும்
கதை தொடங்குகிறது. இந்நாவலை வாசிக்கும் பலரையும் இரண்டாம் பகுதிதான்
அதிகமும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. அப்பகுதிகளை வாசிக்க முடியவில்லை
என்கின்றனர். வாசித்து கடக்க சிரமம் கொள்வதாகப் பலர் பதிவுகளில்
எழுதுகின்றனர். இரண்டாம் பகுதியைப் படிக்கும்போது அவ்வாறு எழும் மன நிலையை
ஒருதரம் நான் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியபடி இருந்தேன். ஒரு வாசகனாக
பலரும் அப்பகுதியை வாசிக்க சிரமப்பட காரணம் அவர்கள் அப்பகுதியில்
தங்களிடமிருந்து இதுவரை வெளிப்படாத மனதின் சிதைந்த பகுதியைக் காண்பதால்
உண்டாகும் அதிர்ச்சியாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.
இப்பகுதியில் வீரப்பனைத் தேடும் வேட்டை தொடங்குகிறது. அந்நடவடிக்கையில்
ஈடுபடும் தமிழக - கர்நாடக அதிரடிப் படைகள் மலைவாழ் மக்கள் மீது செலுத்தும்
வன்முறைகளை துள்ளியமாகப் பதிவு செய்துள்ளது இந்நாவல். தொட்டியினர் இரவு
நேரங்களில் அதிரடிப்படை முகாமைக் காவல் காக்க வேண்டுமென்றும் வீரப்பனைப்
பற்றிய துப்பு கிடைத்தால் உடனே தெரிவிக்க வேண்டுமென்றும் அதிகாரிகள்
உத்தரவிடுகின்றனர். அவர்கள் காட்டுக்குள் போகக்கூடாது என்ற அதிர்ச்சிதரும்
தடைகளிலிருந்தே அரசாங்கத்தின் நேரடி வன்முறையாளர்களாகச் செயல்படும்
இராணுவம், காவல்துறையின் அட்டகாசம் ஆரம்பமாகிறது. இது ஒருவகையில் அவர்களை
அவர்கள் வீட்டுக்குள் போகக்கூடாதென சொல்வது போன்றதான தடை. வனத்தை
அவர்களுக்கு அந்நியப்படுத்தும் உக்தி. எதுவுமே இனி இல்லை என்ற மன நிலைக்கு
அவர்களைத் தள்ளும் கட்டளைகள் அவை..
அதற்கு பின்னும் அதிரடிப்படையின் வன்முறைகள் தொடர்கின்றன. கணவன் கண்
முன்னாலேயே மனைவி மீது கூட்டாக வன்கலவியல் ஈடுபடுவது, ஆண்கள், பெண்கள்
என்று பாராமல் அவர்களின் குறிகளிலும் மார்புகளிலும் கிளிப்புகளை மாட்டி
மின்சாரம் பாய்ச்சுவது, ஆறு மாத கர்ப்பிணியை எந்த வித இரக்கமும் இல்லாமல்
வன்புணர்ச்சி செய்து அவர் கருவை சிதைப்பது, ஒருவனை கொல்ல முடிவெடுத்தவுடன்
தையல் அளவெடுத்து வீரப்பனின் கையாள் போன்ற சீருடையை அணிவித்து காட்டுக்குள்
கூட்டிப்போய் சுடுவது என சோளகர்களைச் சிதைக்கும் செயல்கள் பல்வேறு
வடிவமெடுக்கின்றன. இந்தச் சித்திரவதைகளை புரிவோர் அடையும் குரூரமான
மகிழ்ச்சியும் ஆங்காங்கு தொணிக்கிறது.
எது இவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை
சிதைப்பதில் ஏன் இன்பம் காண்கின்றான்? அவன் சிதைக்க விரும்புவது எதை?
உடலையா அல்லது உடல் மூலமாக மனதையா? அவ்வாறு செய்பவர்களோடு நாம் எவ்வகையில்
மாறுபட்டுள்ளோம்? போன்ற கேள்விகள்தான் இப்பகுதி நெடுகிலும் என்னைத்
தூண்டிக்கொண்டிருந்தன.
மனிதன் என்பவன் ஒரு சிந்திக்கத் தெரிந்த மிருகம். அவன் தான் கடந்து வந்த
வரலாற்றாலும் நாகரீக வளர்ச்சியாலும் சமூகக் கட்டமைப்புகளாலும் ஒரு
வடிவத்துக்குள் தன் ஆளுமையை அடக்கி வைத்துள்ளான். ஆனால் அவனுக்குள்
இருக்கும் மிகப்பழமையான வேட்டை விலங்கு தனது கண்களை வலுக்கட்டாயமாக
மூடியபடி இருக்கிறது. அது தனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது வெவ்வேறு
வகையில் தனது அடையாளங்களை மிக மெல்லியதாய் காட்டிவிட்டுச் செல்கிறது. தனது
பழைய குணம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்கிறது. எல்லா
தத்துவங்களையும் புறங்கையால் நகர்த்தி வைப்பதில் சுதந்திரத்தை உணர்கிறது.
அம்மிருகம் உலாவ தோதன திணை கிடைத்தவுடன் அதன் உக்கிரம் கட்டுப்படுத்த
முடியாததாகிவிடுகிறது. அது தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறது.
உலகில் மனிதத்துக்கு எதிராக மனிதன் முன்வைக்கும் அத்தனை செயல்பாடுகளும்
அவன் தனது உடைகளைக் கலைத்துவிட்டு பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி தனது
அசல் அடையாளத்தை தேடி ஓடும் கணத்திலிருந்தே தொடங்குவதாக நான் கருதுகிறேன்.
நாட்டை அபகரிக்கவும் ஒரு சமூகத்தின் அடையாளத்தை அழிக்கவும் தீவிரவாதத்தை
ஒழிப்பதாகவும் வெவ்வேறு ரூபங்களின் எளிய மக்களின்மேல் நிகழ்த்தப்படும்
வன்முறையைக் காலம் கவனித்தபடியே இருக்கிறது. நிறைய புனைவுகளும் அதை
மையப்படுத்தியும் அதனை ஒரு சம்பவமாக்கியும் இயற்றப்படுகின்றன. ‘காவல்
கோட்டம்’ நாவலின் ஆரம்ப பகுதியில் மதுரையைத் தாக்க மாலிக்கபூர் படையினர்
பெண்களை நிர்வாணப்படுத்தி குதிரைகளில் இழுத்துச் செல்வதாகட்டும், ‘புயலிலே
ஒரு தோணி’யில் ஜப்பானியர்கள் தலைகளைக் கொய்வதாகட்டும், மரண ரயில் போடும்
வேலையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதைச் சொல்லும் ‘நினைவுச்
சின்னமாகட்டும்’, ‘ம்’ நாவலில் வரும் வெலிகட பெருஞ்சிறையின்
காட்சிகளாகட்டும் எல்லாவற்றிலுமே மனித மனம் ஒடுக்கப்பட கையாளப்படுவது, உடல்
வதை கொடுமைதான்.
ஆனால் பிற நாவல்களிலிருந்து சோளகர்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமையில் ஒரு
சின்ன பேதம் உண்டு. வன்முறை அவர்கள் மேல் ஒரு விளையாட்டுபோல
திணிக்கப்படுகிறது. நாவலின் பல இடங்களில் இதை காணலாம். சோளகர்களை
விசாரிப்பதில் எந்த பயனும் இல்லை என அறிந்தே அதிரடிப்படையினர் அவர்களைத்
துன்புறுத்துகின்றனர். அதன் மூலம் தாங்கள் தங்கள் கடமையைச் செய்வது
போன்றதொரு நாடகத்தை நம்பும்படியாக்குகின்றனர். எலியைக் கொல்ல விரும்பாமல்
பூனை அரை உயிருடன் எலியை ஓடவிட்டு பிடிப்பது போல அதிரடிப்படையினர் அதை
மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகின்றனர்.
சோளகர் தொட்டியில் நடக்கும் சம்பவங்கள் எங்கோ ஒரு மலைமீது வாழும்
மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக நாம் வாசித்து அனுதாபப்படும் அதே வேளை
அவ்வாறான சம்பவங்களாக இல்லாமல் ஆனால் அதே அளவு மனம் பாதிக்கப்படும்
வன்முறையை நான் நம்மைச் சுற்றி நடக்க அனுமதிப்பதிப்பதை எவ்வாறு
எதிர்க்கொள்வதென்ற அச்சமே இந்நாவலைப் படித்து முடித்தவுடன் மிஞ்சுகிறது.
காலம், இடம், மொழி என்ற அடையாளத்தை கடந்து இதற்கு முன் பல்வேறு ஊடகங்களில்
செவிமடுத்த கோடன கோடி மக்களின் கதரலாக சோளகர்கள் வந்து செல்கின்றனர்.
அதன்மூலம் வரலாறு எப்போதுமே தன் ஆள் காட்டிவிரலால் ‘இது உங்களுக்கும்
நடக்கலாம்’ என்று சொல்லிச்செல்லும் எச்சரிக்கையை சோளகர்களும் சொல்லிச்
செல்கிறார்கள்.
ஆசிரியர் - ச. பாலமுருகன், எதிர் வெளியீடு
|
|