முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 34
அக்டோபர் 2011

  மனிதம் மிஞ்சும் உலகம் ...4
நித்தியா வீரராகு
 
 
       
கட்டுரை:

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு : பாலில் விழுந்த நஞ்சு
ம. நவீன்



நேர்காணல்:

“வன்முறைதான் மிகக் கவர்ச்சியான ஒன்றாகத் தெரிகிறது” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 1
ம. நவீன் - கே. பாலமுருகன்


பத்தி:

தேர்தலும் கலர் துண்டும்

கே. பாலமுருகன்

புலம்பெயர் முகங்கள் ...2

வி. ஜீவகுமாரன்


சிறுகதை:

தமிழ்க்கதை
யோ. கர்ணன்



பதிவு:

தூது போகும் போராளிகளும், போராடும் தூதுவர்களும்...
தயாஜி



எதிர்வினை


கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டு செல்லும் வாழ்வு
ம. நவீன்

தர்மினி பக்கம்
தர்மினி


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...24

ந. பெரியசாமி

மாதங்கி

லதாமகன்

வ.ஐ.ச. ஜெயபாலன்

ஷம்மி முத்துவேல்

ரவிக்குமார்

தேனு

Finding Nemo : கைகளில் சிக்காத வெளி

அந்த இளைஞன் ஒரு கைதி. சகல வசதிகளும் பாதுகாப்பும் நிறைந்த ஓர் இடத்தில் சிறை வைக்கப்படுகிறான். அவன் வாழ்க்கை குறித்து எந்த முடிவுகளும் எடுக்கும் உரிமை அவனிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதுதான் அவனுக்கான தண்டனை. அவ்விளைஞனின் பெற்றோர் அல்லது அவனின் நெருங்கிய குடும்பத்தினர்தான் அவனைச் சிறைவைத்தவர்கள் என்பது அதிர்ச்சியைத் தரலாம். மிக சுவையான அல்லது சத்தான ஆனாலும் அவனுக்குப் பிடிக்காத உணவுவகைகள், வேளை தவறாமல் அவன் முன்னே வைக்கப்படுகிறது. அதை உண்ண வேண்டுமா வேண்டாமா என்ற முடிவும் கூட அவன் கைகளில் இல்லை. அதே போல் அவனுக்கான உடை, இருப்பிடம், செய்ய வேண்டிய வேலைகள், போக வேண்டிய இடங்கள், எதிர்காலத்திற்கான திட்டங்கள் என யாவும் அவனுக்காகப் பிறரால் வரையறுக்கப்படுகிறது. அவனின் சுயமுடிவுகள் பாதுகாப்பற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எண்ணுவதால் அவன் வாழ்வை அவனே நிர்ணயிக்கத் தகுதியற்றவனாய்க் கருதப்படுகிறான். அந்த இளைஞன் வேரெங்கோ நமக்குத் தெரியாதோர் இடத்தில் இருப்பதாகக் கருதவேண்டாம். இப்படியொருவன் அல்லது பலர் நமக்கு மிக அருகாமையில், நம் குடும்பத்தில்தான் இருக்கிறார்கள். ஏன், நான் உட்பட நம்மில் பலரும் இந்தச் சூழலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்.

2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Finding Nemo’ - எனும் அமெரிக்கத் திரைப்படமும் இப்படியொரு முடக்கப்பட்டச் சூழ்நிலையில் மிகை பாதுகாப்புணர்வுடைய தன் தந்தையை எதிர்த்து தனக்கு முன்னால் எண்ணற்ற அனுபவங்களை உள்ளடக்கி பறந்து விரிந்திருக்கும் உலகைப் பேருவகையோடு தரிசிக்க புறப்படும் நீமோ என்னும் ஒரு மீனின் கதையைத்தான் சித்தரிக்கிறது. Andrew Stanton திரைக்கதை எழுதி இயக்கிய இந்த முழுநீல சிறப்புப் பண்பியலுடைய இயக்கவூட்டத் திரைப்படத்தை (Full Length Feature Animated Film) அவருடன் இணைந்து Lee Unkrich-உம் இயக்கியுள்ளர். Pixar தயாரித்து Wall Disney வெளீயீடு செய்த இந்தப் படம் அவ்வருடத்தின் சிறந்த இயக்கவூக்கப்படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. 2003ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளிலும் அமெரிக்க டாலர் சுமார் $868 மில்லியன் வரை வசூலித்து, இது போன்று வசூல் சாதனை நிகழ்த்தியத் திரைப்படங்களுள் இரண்டாம் நிலையைப் பிடித்தது. அதன் பிறகு 2006 வரை 400 மில்லியன் இருவட்டு (DVD) பிரதிகள் விற்கப்பட்டு இருவட்டு விற்பனையில் காலம் கண்டிராதப் பெரும் சாதனையைப் புரிந்துள்ளது.

இத்தகைய சாதனைகள் படைத்திருக்கும் இத்திரைப்படத்தின் நாயகன் நீமோவின் தந்தையான மர்லின் (Marlin) அவனைப் பெரிதும் நேசிப்பதால் அவன் பாதுகாப்பின் மேல் அக்கறை கொள்வதாகக் கருதி அவன் செயல்பாடுகளில் உள்நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறான். நம் சமுதாயத்தில் இது போன்று தங்களின் பிள்ளைகளின் மேல் ஆதிக்கத்தைச் செலுத்தும் பெற்றோர், ‘ஹெலிகாப்டர் பெரண்ட்’ (helicopter parent) என்று அழைக்கப் படுகின்றனர். 1990ஆம் ஆண்டில், Foster W. Cline, M.D. மற்றும் Jim Fay எழுதிய Parenting with Love and Logic: Teaching Children Responsibility என்ற நூலில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். ஓர் உலங்கு வானூர்தி (helicopter) மிக குறைந்த உயரத்தில் பறக்கவும் மிதக்கவும் கூடியது. தேவைப்படும் போதெல்லாம் அநேக நேரங்களில் உடனே தரை இறங்கும் தயார் நிலையில் இருக்கக் கூடியது. தனது ரோடர்களைச் (Rotors) சாய்த்துத் தனக்குக் கீழே உள்ள காற்றைச் சுழற்றித் தள்ளி தனக்கு வேண்டும் திசைககளில் நகரக்கூடியது. சதா தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும் ஓர் உலங்கு வானுர்தியைப் போல் தேவைப்படாத போதும் எல்லா நேரங்களிலும் தங்கள் பிள்ளைகளைப் பின் தொடர்ந்து, அவர்களைத் தங்களுக்கு வேண்டும் திசைக்கு வழிநடத்துவதால், இத்தகைய பெற்றோர்கள் ‘ஹெலிகாப்டர் பேரண்ட்’ என்ற காரணப்பெயரில் மேற்கத்திய அறிஞர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

மிக பாதுகாப்பாதானதாய்த் தாங்கள் கருதுவதைத் தங்களின் பிள்ளைகளின் மீது திணிப்பது மிகப் பெரிய அத்துமீறல் என்றாலும் இந்தச் செய்கையைத் தூண்டுவது பிள்ளைகளின் மேல் பெற்றோர்கள் கொண்டுள்ள அன்பும் அக்கறையுமே என்பதை மறுக்க இயலாது. இன்னும் சொல்லப் போனால் இப்படியெல்லாம் நடந்து கொண்டு பிள்ளைகளைக் ‘கரை சேர்ப்பது’தான் அவர்களின் கடமை என்று பல பெற்றோர்கள் நம்பி கொண்டும் இருக்கின்றனர். நீமோவின் தந்தை மர்லினும் இதையே நம்புகிறான். ஆனால் மர்லின் இப்படி நடந்து கொள்வதற்குத் தகுந்த காரணமும் இருக்கின்றது,

இந்தப் படத்தின் களம் வண்ணமிகு கடல் தாவரங்களும் பாறைகளும் நிறைந்த ஓர் அழகிய கடல் தரையில் தொடங்குகிறது. வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியான பெரும் தடுப்புப் பவளத்திட்டுப் (The Great Barrier Reef) பகுதியில் ‘clown fish’ வகை மீன்களான மர்லினும் அதன் துணை மீனுமான கோரலும் (Coral) வாழ்ந்து வருகின்றனர். தங்களின் வண்ணமயமான இருப்பிடத்தை இரசித்தப்படி இன்னும் சில நாட்களில் குஞ்சு பொறிக்கவிருக்கும் தங்கள் வாழ்க்கையின் புதுவரவுகளை ஆவலோடு எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் இவர்களை barracuda எனும் ஓரு மூர்க்கமான பெரியவகை மீன் தாக்குகிறது. தன் துணையையும் முட்டைகளையும் காப்பாற்றும் போராட்டத்தில் மர்லின் ஒரு பாறையில் மோதி காயமடைந்து மயங்கி விழுகையில் திரைக்காட்சி இருண்டு விடுகிறது.

மயக்கம் கலைந்த மர்லின் கண் விழித்துப் பார்க்கையில் ஓரு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தது. சற்று முன்னர் தன்னுடன் பெரும் காதலுடனும் வாழ்வின் தீராக் கனவுகளுடனும் நீந்தித் திரிந்த கோரலின் எந்தத் தடயமும் அங்கிருக்கவில்லை; முட்டைகள் அனைத்துமே தொலைந்து விட்டிருந்தன. தன் துணையைக் காப்பாற்ற முடியாத இயலாமையால் விளைந்த குற்ற உணர்வு இதயத்தைப் பிசைந்தெடுக்க மர்லின் எல்லாவற்றையும் இழந்து நிற்கதியாய் நின்ற தருணத்தில் எதிர்ப்பாராத வகையில் சற்றே சிதைந்திருந்த தனது ஒற்றை முட்டையைப் பார்க்க நேர்கிறது. மிக கவனமாய் அதனைத் தன் துடுப்பினில் ஏந்தி அதற்குத் தன் துணையின் விருப்பபடி நீமோ என்று பெயரிட்டுத் தன் ஒரே உறவான அதனையும் இனி தொலைத்து விடாமல் பாதுகாக்க உறுதி கொள்கிறான்.

பொதுவாக, அக்கறை உள்ள எல்லா பெற்றோர்களும் மர்லினைப் போலவே தங்களின் பிள்ளைகளைப் பொக்கிஷங்களாக நினைத்துக் கவனத்துடன் பாதுகாக்கின்றனர். ஒரு தாய் கருவுற்ற நாள் முதலே, ஊறேதும் நிகழ்ந்து விடாமல் தன் ஒவ்வொரு செயல்பாடுகளின் வழி தன் கருவை மிக கவனமாய்ப் பாதுகாக்க ஆரம்பிக்கிறாள். பெரும் போராட்டங்களுக்குப் பிறகு அக்குழந்தையைப் பிரசவித்தப் பின் தாய் தந்தை இருவருமே மிகுந்த கவனத்துடனும் பாதுகாப்புணர்வுடனும் அதைப் பேணி வளர்க்கின்றனர். குழந்தைகளின் அல்லது சிறுவர்களின் எந்த செயல்பாடுகளும் risk அல்லது இடர் நிறைந்தவையாய்த்தான் இருக்கும் என்று பெற்றோர்கள் நம்புவதால் அவர்கள் சுயமாய்ச் செயல்படுவதில் இளம் வயது முதலே முட்டுக் கட்டையாய் இருக்கின்றனர். எங்கும் போய் மோதி கொள்ளுமோ, கீழே விழுந்து விடுமோ என்ற பயத்தில் குழந்தையை இயன்றவரை ஒருவரின் பாதுகாப்பின் கீழ் இருக்கும்படியே வைக்கின்றனர்.

பெற்றோர்களின் இந்த உணர்வும் செயல்பாடுகளும் குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை எய்தும் வரை மிக நியாயமானதே. சிறு வயதில் நடை பழகும்போது பிடித்த ஒரு சிறுவனின் கையை அவன் வளர்ந்து சுயமாய் வாழ எல்லா தகுதிகளும் அடையும் வயதிலும் விடாமல் பிடித்திருப்பதே பெற்றோர்களின் பெரிய குறை. சில நேரம் பெற்றோர்கள் இளைஞனாய் வளர்ந்த மகன் தனக்கு ஏற்றக் கல்வி, கல்லூரி, உத்தியோகம், பழகும் நண்பர்கள், வாழ்க்கைத்துணை போன்றவற்றைத் தேர்ந்தெடுப்பதிலும்கூட அக்கறை என்ற பேரில் உள்நுழைவு செய்து அவன் சுயமுடிவுகள் எடுக்க வேண்டிய அத்தனை வாய்ப்புகளையும் பறித்துக் கொள்கின்றனர்.

மிகை பாதுகாப்பு உணர்வுக்கொண்ட பெற்றோர்களின் பேரன்பில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினரும் இளைஞர்களும்தான். எந்தச் சூழ்நிலையிலும் சுயமுடிவுகள் எடுத்துப் பழகாத இளைஞர்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய மிக இன்றியமையாத திறனான இடர் மேலாண்மை திறனைப் (Risk Management Skill) பெற்றிருப்பதில்லை. குடும்பத்திலோ வேலை இடத்திலோ துணைக்கு யாருமில்லாத ஓரு சூழலில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டு விட்டால் செய்வதறியாது நிலை குலைந்து போகின்றனர். இன்னும் சில பெற்றோர்கள் வெளி உலகம் ஆபத்துகளால் மட்டுமே நிறைந்தது என்ற எண்ணத்தில் பிள்ளைகளை எந்தவொரு வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட விடுவதில்லை. வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகள் தொலைக்காட்சி முன்னாலோ இணையத்திலோ அதிக நேரம் செலவழித்து உடல் பருமன் போன்ற பல உடற்குறைகளுக்கு ஆளாவதோடு பிறரோடு சகஜமாய்ப் பழக சமூகத் திறன் இல்லாதவராய் மாறுகின்றனர். சில பிள்ளைகள் பல ஆண்டுகள் அவர்களின் சுதந்திரம் முடக்கப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஒரு நாள் தங்கள் பெற்றோர்களுக்கு மிக வெளிப்படையான எதிர்ப்புகளைத் தெரிவித்து விட்டு இந்த அடக்குமுறையை உடைத்து வெளியேறுகின்றனர். இது சில வேளைகளில் ஆபத்திலும் முடியும். இப்படி ஒரு நிலை, நாயகன் நீமோவுக்கும் ஏற்படுகிறது..

திரைப்படத்தின் அடுத்தக் காட்சி, நீமோ முதன் முதலாய்ப் பள்ளிக்குச் செல்ல தயாராய் இருந்து கொண்டு தன் தந்தை மர்லினை எழுப்புவதாகத் தொடங்குகிறது. நீமோ தன் தந்தையைப் போலவே ஆரஞ்சு நிறத்திலும், உடலைச் சுற்றி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கோடுகளும் கொண்டிருக்கிறான். கருவாக இருக்கையில் நிகழ்ந்த தாக்குதலினால் அவனின் வலப்பக்க துடுப்பு, அளவில் சற்றே சிறியதாய் இருக்கிறது. இந்த உடற்குறையினால் மர்லின் தன் மகனின் நீந்தும் திறன் குறித்துக் கவலை கொள்கிறான். நீமோவால் தன் வேலைகளைச் சுயமாய்ச் செய்துவிடவும் தன்னை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் முடியாது என்று எண்ணி அவனைத் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள நினைக்கிறான். இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே, இங்கே போகாதே, அங்கே போகாதே என்று நீமோவுக்குக் கட்டளைகள் இட்டு அவனின் செயல்பாடுகளில் குறுக்கிடுகிறான் மர்லின். நீமோவைப் பள்ளிக்கு அனுப்புவதைக் கூட ஓரிரு தவணைகள் தள்ளிப் போட நினைக்கிறான். ஆனால் நீமோ அவன் இருப்பிடத்தைத் தாண்டி விரிந்திரிக்கும் அந்தப் பெரும்கடலின் எல்லைவரை கண்டுவிடும் துடிப்பிலிருக்கிறான். ஒரு வழியாய் மர்லின் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்பச் சம்மதிக்கிறான். மீன்குஞ்சுகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனமாய்ச் செயல்படும் திருக்கைமீன் வந்துவிடவே நீமோவை மற்ற மீன்குஞ்சுகளுடன் விட்டுச் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறான் மர்லின். நீமோ பெரும் உற்சாகத்துடன் பள்ளிக்குப் புறப்படுகிறான். யாருமறியாமல் நீமோவைத் தொடர்கிறான் மர்லின்.

பள்ளிக்குச் செல்லும் வழியில் நீமோ புதிய குறும்புக்கார நண்பர்கள் சிலரைச் சந்திக்கிக்க நேர்கிறது. அவர்களின் தூண்டுதலின் பேரில் திருக்கை வாகனத்திலிருந்து தப்பித்து அவர்களோடு கடலின் மிக அபாயகரமான பகுதிக்கு நீந்தி செல்கிறான். அங்கே ஒரு படகின் அடிப்பாகம் கடலுக்கடியில் மிதப்பதைக் கண்டு விழி பிதுங்குகிறான். முதன் முதாலாய்த் தான் காணும் அந்த அதிசயப் படகினைத் தொட்டுவிட எண்ணம் எழவே அதனை நோக்கி நீந்திச் செல்ல நினைக்கையில் தீடீரென மர்லின் நீமோவின் முன் தோன்றி அவனைக் கண்டிக்கிறான். நீமோவோ அபாயம் அறியாமல், இனியும் அடக்கிவிட முடியா விடுதலைக்கான வேட்கை உந்திவிட முதன் முதலாக வெகுண்டெழுந்து தன் தந்தையிடம் மிக வெளிப்படையாய் எதிர்ப்பினை அறிவித்துவிட்டுப் படகை நோக்கி நீந்துகிறான். தன்னால் எல்லாமே சுயமாய்ச் செய்துவிட முடியும் என்பதைத் தன் தந்தைக்கு உணர்த்த நினைத்த நீமோ அதற்குத் தகுந்த சந்தர்ப்பம் இதுவல்ல என்பதை அறியாமல், பாவம், ஓர் ஆழ்கடல் முக்குளிப்பாளனின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறான்.

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது. மர்லின் தன் மகனைத் தேடி எங்கே செல்வது என்ற ஒரு துப்புங்கூட கிடைக்காமல் ஆழ்க்கடலில் அங்குமிங்குமாய்ப் பதறி திரிகிறான். அந்த நேரத்தில் மர்லினைக் குறுக்கிட்ட டோரி (Dory) என்னும் Regal Tang வகை பெண் மீன் அவனுக்கு உதவுகிறாள். டோரி பிறருக்கு உதவும் நல்ல மனம் படைத்த மீனாக இருந்தபோதும், எதையும் திடுமென மறந்துவிடும் மறதி நோயும், அணைத்தையும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் மனப்போக்கும் கொண்டிருப்பதால் பல தொந்தரவுகளை விளைவிக்கும் மீனாகவும் இருக்கிறாள். நீமோவைத் தேடி மர்லினும் டோரியும் நீண்ட தூரம் நீந்தி செல்கையில் தாவரங்களை மட்டும் உண்ண முடிவெடுத்திருக்கும் ஒரு நல்ல சுறாமீன் கூட்டத்தைச் சந்திக்கிறார்கள். அங்கே மர்லின் தன் மகனைப் பிடித்துச் சென்ற முக்குளித்தவனின் முக கவசத்தைக் கண்டெடுக்கிறான். அதில் அம்மனிதனின் முகவரி எழுதியிருப்பதையும் பார்க்கிறான். அதற்குள் நீரில் கரைந்து வந்த இரத்த வாடையை நுகர்ந்திருந்த சைவ சுறாமீனான புரூஸ் (Bruce) தன் விரதத்தைக் களைத்து டோரியையும் மர்லினையும் துரத்த ஆரம்பிக்கிறது. இந்தப் போராட்டத்தில் மனிதனின் முக கவசம் கடல் ஆழத்தில் விழுந்து விடுகிறது. அதனைத் துரத்தி ஓடும் மர்லினும் டோரியும் மேலும் ஓர் ஆபத்தில் மாட்டிக் கொள்கின்றனர். Anglerfish எனும் ஒரு வகை மூர்க்கமான மீனிடம் மாட்டிக்கொள்ளும் அந்த நெருக்கடியான நேரத்தில் திடீரென மனிதனின் முககவசம் டோரியின் கண்களில் படுகிறது. அதில் எழுதப்பட்டிருந்த முகவரியைத் தன்னால் வாசிக்க முடிவதை உணர்கின்றதோடு மட்டுமல்லாமல் மறதி நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் டோரியால் அந்த முகவரியை மட்டும் நினைவில் நிறுத்தி கொள்ளவும் முடிகிறது. அந்த முகவரி நீமோ அநேகமாய் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரத்துக்குப் பிடித்துச் செல்லப் பட்டிருப்பதாய்க் காட்டுகிறது.

இதற்கிடையில் பிடிபட்ட நீமோ சிட்னி துரைமுகத்தையொட்டிய ஒரு பல் மருத்துவரின் மருந்தகத்திலுள்ள மீன் தொட்டியில் விடப்படுகிறான். தன் தவற்றை உணர்ந்து வருந்தும் நீமோ மீண்டும் பெருங்கடலுக்குத் தப்பித்துப் போக மீன் தொட்டியில் வாழ்ந்திருக்கும் சக மீன்களின் துணையுடன் முயற்சி செய்கின்றான். நீமோ தன் முயற்சியில் வெற்றி கண்டானா? மர்லின் பல போராட்டங்களைக் கடந்து, பெருங்கடல் தாண்டி சிட்னிக்கு வந்து தன் மகனைக் காப்பாற்றினானா என்பதே மீதிக் கதை.

இந்த திரைப்படம் Anndre Stanton-இன் மற்ற திரைப்படங்களைப் போல அவரின் வழக்கமான பாணியில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமான அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்ளும் நிறைந்த ஒரு திரைப்படம் எனினும் இப்படத்திக்கான திரைக்காட்சிகளை வடிவமைக்க CGI (Computer Generated Imaginary) தொழிற்நுட்பத்தைக் கையாண்டுள்ள விதம் உண்மையில் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஒரு காட்சியில் மர்லினும் டோரியும் ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் மாட்டிக்கொண்டு, அது அசையும்போதெல்லாம் அதன் வயிற்றுச் சுவரில் முட்டி மோதி, அதன் நாக்கில் சறுக்கி தத்தளிக்கும் காட்சியும், சில மூர்க்கமான மீன்களிடம் இருவரும் மாட்டிக் கொண்டு தப்பிச் செல்லும் காட்சிகளும் மிரட்டுகின்றன. மர்லினுக்கும் டோரிக்கும் சிட்னி நகரத்திற்குச் செல்ல வழிகாட்டும் moonfish வகை மீன்கள், குழுவில் இருந்து தங்களின் வரிசைமுறையை மாற்றிக் கொண்டு ஆஸ்திரேலியாவின் மிக அறியப்பட்டச் சின்னமான ஓபேரா மாளிகையையும் அது அமைந்துள்ள திசையையும் மிதக்கும் உருவங்களாக அணிவகுத்துக் காட்டுவது புதுமை.

அது மட்டுமல்லாமல் கடலில் வாழும் ஒரு மீன், நிலத்துக்குச் சென்று தன் மகனைக் காப்பாற்றிச் செல்வதைத் திரையில் எப்படிச் சாத்தியப்படுத்துவது என்பதுதான் இந்தப் படத்தின் இயக்குனர்களும் தொழிற்நுட்பக் கலைஞர்களும் சந்தித்த மிகப் பெரிய சவால். பல போராட்டங்களுக்குப் பிறகு சிட்னி துரைமுகத்துக்கு நீந்தி வரும் மர்லினும் டோரியும் நைஜேல் (Nigel) எனும் Pelican பறவையின் துணையுடன் தரைக்கு வருகின்றனர். நீண்ட கூசாவைப் போன்ற அலகுகளைக் கொண்ட Pelican பறவைகள் கொக்குகளைப் போல மீன்களை இறையாய்க் கொள்பவையாகும். மீன்களான மர்லினுக்கும் டோரிக்கும் உதவ நினைக்கும் நைஜேல், அவர்கள் தனக்கு உணவாகக்கூடும் என்பதையும் பொருட்படுத்தாமல் தன் அலகில் நீர்த் தேக்கி அதற்குள் இருவரையும் ஏந்தி நீமோ அடைப்பட்டிருக்கும் மருந்தகத்திற்குத் தன் பெரிய சிறகை விரித்துப் பறந்து செல்லும் காட்சி அபாரமான புனைவாகும். தொழிற்நுட்பத்தினால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களைத் திரையில் பதிவு செய்துகாட்ட முடிகின்றது. இதுவே இப்படத்தின் பெரிய பலம்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றுமோர் காரணம் இதன் திரைக்கதையாகும். இந்தப் படத்தின் கதை, ஒரு தந்தை மகனுக்கிடையே நிகழும் உறவுசார்ந்த பிரச்சனைகளையும், பாசத்தையும், பிரிவின் தவிப்பையும் மையமாய் வைத்து இயக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்களை எளிதில் நெருங்கி விடுகிறது. மகனைத் தொலைத்து விட்டுச் சோர்வுற்றிருந்த மர்லின் ஒரு முறை கடல் ஆமைகள் வாழும் பகுதிக்கு நீந்திச் செல்லுகையில் கரஷ் (Crush) என்னும் ஓர் ஆமையைச் சந்திக்கிறான். சுழல் போல் பிரளும் கடல் அலைகளுக்கு மத்தியில் நீச்சல் பழகும் கரஷின் குட்டி மகன் ஒரு தருணத்தில் கடல் அழுத்ததினால் அலைகளுக்கு நடுவில் மாட்டி கொள்கிறான். இதைக் கண்ட மர்லின் பதற்றம் அடைந்து அந்த ஆமைக்குஞ்சைக் காப்பாற்ற முற்படுகையில் தடுத்துவிடும் கரஷ், தன்னிச்சையாகச் செயல்பட்டு தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தன் மகனுக்கு வாய்ப்பளித்துவிட்டு தள்ளி நின்று கவனிக்கிறான். சிறிது நேரத்தில் பெரும் குதூகலத்துடன் அலைகளுக்கு நடுவில் வெளிப்படுகிறான் கரஷின் மகன். இந்தச் சம்பவம் மர்லினுக்குப் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அக்கறை என்ற பெயரில் இது நாள் வரை, தன் மகன் மீது தான் செலுத்தியது அன்பல்ல வன்முறையே என்பதை உணர்கிறான். அதே நேரத்தில் தந்தையின் சொல் கேளாமல் பேராபத்தில் மாட்டிக் கொள்ளும் நீமோ மனம் வருந்தியபோதும் தன் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்வைப் பழகுகிறான். மற்றொரு காட்சியில் சிட்னியில் உள்ள மருந்தகத்தின் மீன் தொட்டியில் உள்ள மீன்கள், நீரைத் தூய்மை படுத்தும் வடிகலத்தின் (filter) செயற்பாடுகளை நிறுத்துவதன் மூலம் அந்தத் தொட்டியை மாசுபடுத்தி அதை மருத்துவர் சுத்தம் செய்யும் நேரம் பார்த்துத் தப்பித்துப் பெருங்கடலில் குதித்து விடத் திட்டம் போடுகின்றன. வடிகலத்தின் சிறிய குழாயில் புகுந்துவிடும் சிறிய உடல் நீமோவுக்கு மட்டுமே அமைந்திருப்பதால் தொட்டி மீன்கள் நீமோவின் உதவியை நாடின. முதலில் ஆபத்துக்குப் பயந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியுறும் நீமோ ஒரு கட்டத்தில் தன் தந்தையைச் சென்றடைந்தே தீர வேண்டும் என்ற தீர்க்கமான முடிவில் ஒரே பாய்ச்சலில் குழாயில் நுழைந்து அதன் வாயிலில் கல்லை வைத்து அடைத்து அதன் செயல்பாட்டை நிறுத்தி, தொட்டி மீன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறான்; இடர்களைத் தானே சமாளிக்கும் திறனைப் பெறுகிறான். மனத்தைத் தொடும் இது போன்ற காட்சிகள் கதையை இன்னும் அடர்த்தியாக்குகின்றன.

ஒவ்வொரு இயக்கவூட்டப் படங்களிலும் திரைக்குப் பின்னால் இருந்து கதைப்பாத்திரங்களுக்குப் பின்னனி குரல் வழங்கும் குரல் நடிகர்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களே கதைப்பாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பவர்கள். ‘Finding Nemo’ திரைப்படத்தின் கதைப்பாத்திரங்களுக்குக் குரல் கொடுத்தவர்கள் அமெரிக்கத் திரை உலகுக்கு நன்கு அறிமுகமானவர்களே. நீமோவின் தந்தையான மர்லினுக்கு குரல் கொடுத்தவர் பிரபல அமெரிக்க இயக்கவூட்டத் தொலைக்காட்சித் தொடரான The Simpsons தொடரின் குரல் நடிகரரான Albert Brooks என்பவராவார். மர்லின் தன் மகனைக் கொஞ்சும் போதும், கண்டிக்கும்போதும், அவனின்மையில் ஏங்கும் போதும் ஒரு தந்தையாகவே மாறி இருக்கிறார், Albert Brooks. நீமோவுக்குக் குரல் கொடுத்திருக்கும் Alexander Gould எனும் சிறுவனும் அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகனாவான். டோரிக்குக் குரல் கொடுத்திருப்பவர் நடிகையும் அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பிரபல தொகுப்பாளினியுமான Ellen DeGeneres என்பவர் ஆவார். மர்லினுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் கடல் ஆமையான கரஷுக்குப் படத்தின் இயக்குனரே குரல் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பின்னனியிலிருந்து செயல் பட்டு இந்தப் படத்தின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றிய மற்றொரு முக்கிய நபர் Thomas Newman ஆவார். இவரே இந்தப் படத்தின் இசை இயக்குனர். இவர் Finding Nemo-வில் இயக்கிய இசைத்தொகுப்பு அந்த வருடத்தின் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Finding Nemo’ வின் சிறப்புகள் எல்லாவற்றையும் தவிர்த்து இந்தத் திரைப்படம் என்னை நெருங்கியதற்கு வேறு காரணமும் உண்டு. எனது 21ஆம் வயதில் வீட்டை விட்டு தூரமாய் வந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு வாய்ப்பின்போதுதான் உண்மையில் முதன்முதலாய் ஒரு கடலை நேரில் பார்த்தேன். ஒரு கடல் முழுக்க எனக்கான அத்தனை சுதந்திரமும் மிதந்து கொண்டிருக்க ஒரு மீனாக மாறி கடலெல்லாம் நீந்தி எனக்கான விடுதலையைப் பருகத் தோன்றியது. அன்பின் சிறையில் அடைப்பட்டு பல வருடங்களாக விடுதலைகாய்ப் பசித்திருந்த அனுபவம் எனக்கும் இருப்பதால் நாயகன் நீமோ எனக்கு மிக அணுக்கமானவனானான்.

படம் பார்க்கத் தொடங்கிய முதல் இறுதிவரை நானும் ஒரு கடல்வாழ் உயிரினமாய் மர்லினுடன் நீந்தி சென்று நீமோவைத் தேடினேன். அந்த அளவுக்கு ஒரு பார்வையாளனை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றலுடைய திரைப்படமிது என்றால் அது மிகையாகாது. இந்தத் திரைப்படம் முழுக்க கணினி தொழிற்நுட்பம் நிகழ்த்தியுள்ள ஆழ்க்கடலின் அத்தனை அதிசயங்களின் வண்ணமும் படம் முடிந்த பின்னும் என் தொலைக்காட்சித் திரையில் ஒட்டிக்கிடக்கிறது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768