|
|
மறைந்த கிராமம்
இந்த மர்ம பூமியில் வாழும் பெரும்பாலான வம்சாவளியினர் ரூமா பஞ்சாங்கில்தான்
குடியிருப்பர். முந்தய தொடரில் குறிப்பிட்டிருந்து போல அவர்கள் கொன்று
குவித்த மண்டையோடுகளை எப்போதும் ரூமா பஞ்சாங் என அழைக்கப்படும்
நீள்வீடுகளில் கட்டி தொங்க விட்டிருப்பார்கள். இது அந்த காலம். ஆனாலும்
சரவாக்கின் ஊரக பகுதிகளில் இன்னும் இந்த வகை வீடுகளை காணலாம். இவை மரபு
பொகிசமாக இந்நாள் வரை காக்க படுகின்றன. கம்போங் டஹான் என்ற கம்பமும்
இப்படிப்பட்ட வகையை சார்ந்தது தான்.
இந்தக் கம்பம் கம்போங் சோகோ (Kampong Sogo) என்ற கம்பத்தின் அருகில்
இருந்ததாகக் கேள்வி. அதாவது பாவு (Bau) வட்டாரதிற்குட்பட்டது. கம்போங் சோகோ
இன்னும் மலேசிய வரைப்படத்தில் இருக்கிறது. ஆனால் கம்போங் டஹான் சுத்தமாக
இல்லை. ஆனால் சுங்கை டஹான் இருக்கிறது. ஆக கம்போங் டஹானும் இருந்திருக்க
கூடிய சாத்தியங்கள் அதிகமாக தென்படுகின்றன.
கம்போங் டஹான் என்ற கம்பதிற்குள் மற்ற கம்பத்தை போலவே பல குடும்பங்கள்
வாழ்ந்து வந்துள்ளன. ஆனால் இந்தக் கிராமத்திற்குள் வெளியாட்கள் அத்துமீறி
நுழைந்து அட்டகாசம் அதிகம் செய்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால்
அவதியுற்ற கிராம மக்கள் கிராம தலைவரிடம் முறையிட, அவர் பிரச்சனைக்குத்
தீர்வு காண காட்டை நோக்கி நடையை கட்டிவிட்டார். அதாவது அக்காலத்தில் ஏதும்
பிரச்சனையென்றால் இங்குள்ளவர்கள் தேடும் ஒரே தீர்வு மந்திரமும் மாயமும்
தான். எனவே இந்த கிராம தலைவர் வேறு வழியின்றி மூதாதையரின் வழியை பின்பற்ற
முடிவு செய்துவிட்டார். இப்படியே இவர் காட்டுக்குள் மறைந்து பல
மாதங்களாகிவிட்டதாம். காட்டுக்குள் போனவர் ஒரு நல்ல இடமாய் பார்த்து
தவத்தில் ஆழ்ந்து விட்டார். தவத்தின் முடிவில் கண்ணெதிரே ஒரு வயோதிகர்
தோன்றி ஒரு வெள்ளை மலரை அளித்து, “இதை உன் கிராமத்தில் வைத்தாயானால் உன்
கிராமம் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாது.” என சொல்ல உற்சாகத்துடன் மலரை
எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார் கிராம தலைவர். ஆனால் அவசரத்தில் மீண்டும்
கிராமத்தை தெரிய வைக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்க
மறந்து விட்டார். தான் கொண்டு வந்த மலரை கிராமதிற்குள் வைக்க கிராமம்
முழுவதுமாக அதனோடே அங்கிருந்தவர்களும் மறைந்து விட்டனராம்.
அந்த நாளிலிருந்து இந்த நாள் வரை அந்த கிராமம் இருந்ததற்கான அறிகுறியே
இல்லை. யாராவது தப்பி தவறி அதன் எல்லைக்குள் நுழைந்து விட்டாலும் அவர்
மறைந்து விடுவாராம். ஆனால் அங்கு இன்னும் குடியிருப்பு உள்ளது என்பதற்கான
ஒரே ஆதாரம் காவாய் (Gawai) அதாவது அறுவடை திருநாளில் கொண்டாட்டாங்களின்
சத்தத்தையும் மனித பேச்சுக்குரல்களையும் இன்று வரை கேட்கலாமாம். நான்
கம்போங் சோகோ வரையில் சென்றேன். ஆனால் கம்போங் டஹானை என்னால் காண
இயலவில்லை. காரணம் நான் சென்ற அந்தக் கால கட்டம் காவாய் நேரமல்ல.
இருந்தாலும் அங்கு ஓரிரவு தங்கி இருந்த போது சில விசயங்களையும் அவர்களின்
வாழ்க்கை முறையோடு நானும் கலந்து போக சில வாய்ப்புகள் ஏற்பட்டன.
சென்ற வருட மத்தியில் அதாவது காவாய் கொண்டாட்டதுக்குப் பிறகு நானும்
க்ரேஸியுடன் அவளின் கம்பத்துக்கு சென்றேன். அங்கே புதிதாக தேவாலய கட்டட
நிதி திரட்டு விழாவை முன்னிட்டு சுற்றுலா துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர்
ஜேம்ஸ் டாவோஸ் இருந்தது. நானும் சிறுத்தொகையை அன்பளிப்பாக அளித்திருந்ததால்
என்னையும் க்ரஸியும் கூட அழைத்துப்போனாள். காரில் சென்றால் சரியாக 45
நிமிடங்கள் எடுக்கும் கம்போங் சோகோ சென்று சேர. அங்கே அந்த இரவு
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அங்கேயே தங்கி மறுநாள் மதியம் வருவதாக
திட்டம் போட்டிருந்தோம் இருவரும். கூடவே க்ரேஸியின் அக்கா, மாமா, அத்தை,
அண்ணன், தாத்தா, பாட்டி, பூட்டி என்ன பலரையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு
கிட்டியிருந்தது. அங்குள்ளவர்களின் வாழ்க்கை முறையையும் உணவு முறை,
கலாச்சாரம் என பலவற்றை உள்வாங்கினேன். ஒரே நொடியில் 2011-ம் வருடம் 1960-ம்
வருடத்துக்கு இடமாறியது போல தோன்றியது எனக்கு. அங்கே இரவு மட்டுமே நீர்
வசதி உண்டு. பகலில் ஆற்றில்தான் குளிக்க வேண்டும். அதுவும் ஆண்களும்
பெண்களும் ஒரே ஆற்றில். ஆனால் அங்குள்ளவர்களுக்கு இது ஒரு பெரும்
பிரச்சனையே அல்ல. அங்குள்ள ஆண்கள் பெண்களை வழிமறிப்பதோ கலாட்டா செய்வதையோ
என்னால் பார்க்க முடியவில்லை. இதை பற்றி க்ரேஸியிடம் கேட்ட போது,
கம்பத்தில் உள்ள ஆண்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள்.
தானுண்டடு தன் வேலையுண்டு எனத்தான் இருப்பார்கள் என சொன்னாள்.
அவர்களும் அப்படிதான் நடந்துக்கொண்டார்கள். அவர்கள் மீது எனக்கொரு தனி
மரியாதை வந்தது. சாதாரணமாகவே ஆற்றில் குளிக்க போகும் பெண்கள் குறுக்கு
மாராப்புடன்தான் செல்வார்கள். அந்த ஒரு நாளில் நான் அந்த ஊர் பெண்ணாய்
மாறிப்போயிருந்தேன். எங்களுக்கு துணையாக எங்கள் நண்பன் ஒருவனும் கூட
ஆற்றுக்கு வந்தான். சிறுமியாய் இருந்த போது குட்டி பாவாடையுடன் ஆற்றில்
குளித்த அனுபவம் உண்டு. ஆனால் வயதுக்கு வந்த பின் இதுவே முதல் முறை இப்படி
வெட்ட வெளியில் குளிப்பது. எனது கூச்சத்தைப் புரிந்து கொண்ட க்ரேஸி நான்
குளிக்கும் போதும் உடை மாற்றும் போதும் என் மானத்தை மறைத்து நின்றாள். அந்த
ஊரில் நான் ஒட்டுமொத்தமாக இந்திய இனத்தை பிரதிநிதித்து நின்றது போன்ற ஒர்
உணர்வு. யார் என்னை பார்த்தாலும் இந்த ஊர் எப்படி இருக்கிறது என தான்
கேட்டனர். க்ரேஸியின் அன்பு வேண்டுகோலுக்கு இணங்க அந்த இரவு நிகழ்ச்சிக்கு
சேலையணிந்தேன்.
இரவும் வந்தது. நிகழ்ச்சியும் ஆரம்பமானது. அந்த ஊரின் இளைய தலைமுறையினர்
கலாச்சார கட்டமைப்பின் உந்துதலோடு உருவாக்க பட்டிருந்தனர். பிடாயு இன
நாட்டியதோடு, பிற இன நடனத்தையும் ஆட தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் இந்திய
நடனம் என வந்தபோது அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்துஸ்தானி பாடலும்
இசையும் தான். நமக்கான கூத்துவகைகளையும் பாரம்பரிய நடனங்களையும் அவர்கள்
அறிந்திருக்க நியாயமில்லைதான். உணவு வகைகள் எப்போதும் போலவே தான் இருந்தன.
ஆனால் அதோடு கூட ‘Tiger’ மற்றும் ‘Anchor’ போன்றவை ஆஜார் போட்டிருந்தன.
ஆண்களும் பெண்களும் பேதமின்றி அதை அருத்தினர். பின்பு கரவொகே பாடல்களும்
ஜோகேட் நடனமும் கண்டிப்பான ஒன்றாக இருந்தது. இதில் டத்தோ டாக்டர் ஜேம்ஸ்
டாவோஸும் உற்சாகமாக பங்கு கொண்டார். பட்டத்து ராஜாவானாலும் சொந்த ஊரில்
எப்போதும் செல்ல பிள்ளைதானே. தான் மந்திரி என்ற படோபம் எதுவும் இல்லாமல்
நடந்துகொண்டார்.
நிகழ்ச்சி முடிய விடியற்காலை மணி 2 ஆகிவிட்டது. வந்ததும் படுக்கையில்
சாய்ந்து விட்டோம். பின்னே சும்மாவா, நிகழ்ச்சியில் போட்ட ஆட்டம் அப்படி.
மறுநாள் மீண்டும் பல புது அனுபவ நாளாகவே புலர்ந்தது எனக்கு.
|
|