|
|
சன்னல் தவம்
சன்னவை விட்டு வா கண்ணே!
இன்னும் அப்பாவுக்காகக்
காத்திருப்பதில் அர்த்தமில்லை...
இன்றிரவு அப்பா வரமாட்டார்.
சன்னலை விட்டு வா கண்ணே!
கண்ணைப் பறிப்பதெல்லாம்
நட்சத்திரங்களே...
அப்பாவின் கார் விளக்கொளியில்லை.
சன்னலை விட்டு வா கண்ணே!
உன் இதயத்தில் ஏன் என்ற
ஏவுகணைகள் வெடிப்பதை நானறிவேன்...
என் இதயமும் அச்செய்து
பொய்யென்றே
நம்பத் துடிக்கிறது.
சன்னலை விட்டு வா கண்ணே!
இன்றிரவு இருளும் குருதி வடிக்கிறது...
விதைகளுக்கோ மலரின் முகம்
தெரியவில்லை.
சன்னலை விட்டு வா கண்ணே!
உண்மைக்காக வாழ்வதென்பது
எளிதான போராட்டமன்று...
அதிகாரமெல்லாம் பேடிகளின் கையில்
அடைக்கலம் பெறும் போது.
சன்னலை விட்டு வா கண்ணே!
இன்றிரவு... அப்பாவின் கார்
வெடிகுண்டுக்கிரையானது...!
ஆனால் அப்பாவின் வார்த்தைகள்
இன்னும் பிரகாசமாய் எரிகின்றன.
சன்னலை விட்டு வா மகனே!
இன்றிரவு...
வருடங்கள் பழுக்கும் முன்னே
நீ பெரியவனாகி விட்டாய்!
வருடங்கள் பழுக்கும் முன்னே
நீ பெரியவனாகி விட்டாய்!
|
|