உனக்கான சொற்கள்
இதோ
ஒரு நத்தை தன் கூட்டைத்
தான் செல்லுமிடமெல்லாம்
சுமப்பதுபோல
பயணித்துக்கொண்டிருக்கின்றன
எனக்கானவற்றை
பத்திரமாக
புதைகுழி தோண்டி
நீ இட்டு மூடியபின்
இற்றுப்போன மிச்சத்தை மட்டும்
கவனமாக அனுப்பிவிட்டு
என்னைப்பார்த்து சிரித்தாய்
அவை
பாழடைந்த புதைக்கூடத்தில்
ராட்சத வண்டுகளாக
பின்னொரு நாளில்
உருமாறி
உன்னைச் சுற்றியபோது
திடுக்கிட்டாய்
நானும்தான்
பகிர்வதை நம் நிறுத்திவிட்டோம்
நம் வார்த்தைகளும் புதைந்துபோயின
வெயில்
வெயில்
கொளுத்தக் கொளுத்த
வருத்தங்கள் வருவதேயில்லை
தயாரித்த சொற்கள்
எனக்காக
நீ தயாரித்தளித்த
சரியில்லாத
ஒரு சொல்
என்னை சரியாக
வந்தடையுமாறு செய்தாய்
உனக்கான
எனது சொற்கள்,
தயாரிப்பின் இடையில்
உன்னால்
பறிமுதல் செய்யப்பட்டன
ஒருபோதும்
அவை
உன்னிடமே
இருக்கப்போவதில்லை
எனக்குத் தெரியும்
மாறிமாறி
பயணிக்கும்
அவற்றிற்கும் தெரியும்
தவறாக
நினைத்துக்கொள்ளாதே
தவறாக நினைத்துக்கொள்ளாதே
என்கிறாய்
நானும் சரி என்கிறேன்
தவறானத் துகள்களையே உதிர்க்கிறாய்
வெப்பக்கொப்பரையிலிருந்து
அவை உன்
கூரிய உகிர்களில்
மட்டுமே
படுகின்றன
மயிரிழையில்
ஆனால்
உன் சருமத்தைத் துளிகூடக்
தொடவில்லை
தவறாக நினைக்காதே
என்றவாறு
நீ சிரிக்கிறாய்
மீண்டும் உதிர்க்கிறாய்
இன்னும் கொஞ்சம் துகள்களை
சரி நினைக்கமாட்டேன்
நானும் சிரிக்கிறேன்
இன்னும் இருக்கிறதா
இல்லை முடிந்ததா
நிதானமாய்க் கேட்கிறேன்
ஏமாற்றத்துடன்
'அவ்வளவுதான்' என்று
என் விழிகளை உற்றுப்பார்த்தாய்
உன் பிம்பங்களே அதில் தெரிந்தன
உன் நாணத்திற்குத் திரைச்சீலையிட
மறந்துவிட்டாய்
'தவறாக நினைக்கமாட்டாய் நீ
நானறிவேன்
போய்வருகிறேன்'
என்றாய்
உள்ளே முழுவதும் அரித்திருக்கிறது
அமிலத்தை ஊற்றி வைத்தாற்போல்,
நாளாக நாளாக
வெளியிலும் நொறுங்கி
உன்மீது விழுந்துவிடும் போலிருக்கிறது
என்று சொல்லியிருக்கலாம்தான்
இனி பயன்படுத்தாதே
இந்தக் கொப்பரையை என்று
|