|
|
பரமக்குடி : மூன்று
கவிதைகள்
1.
சாவு விழுந்தால்
சடலத்தைக் கொண்டுசெல்ல
விதிமுறைகள் உள்ளன
சிலரது சடலங்கள் ராணுவ வண்டிகளில்;
சிலரது சடலங்கள் அலங்கரிக்கப்பட்ட
ரதங்களில்;
சிலரது சடலங்கள் சந்தனப் பேழைகளில்
அதிகாரமோ வசதியோ அற்றவராயினும்
அவரது சடலம்
வீதியில் சென்றால்
வாகன ஓட்டிகள் வழிவிட வேண்டும்
அமர்ந்திருப்போர் எழுந்திருக்கவேண்டும்
விதிகள்
மனிதர்களுக்கானவை
விலங்குகளுக்கும்கூட இருக்கின்றன
வரைமுறைகள்
நாம் ஒரு சடலத்தைப் பார்த்தோம்
ஆளுக்கொரு கை
ஆளுக்கொரு கால்
தூக்கிச் சென்றார்கள்
தொங்கியது தலை
வாயிலிருந்து சொட்டிக்கொண்டே போனது
கடைசிச் சொல்
கண்களிலிருந்து சிந்திக்கொண்டே போனது
கடைசிக் கனவு
அதை
மனிதனாக நினைத்திருந்தால்
மதிப்பு கிடைத்திருக்கும்
விலங்கின் உடலென்றால்
விருந்துக்குப் போயிருக்கும்
நாம் அந்த சடலத்தைப் பார்த்தோம்
நகரும் மேகங்களுக்கிடையேயிருந்து
கடவுளும் பார்த்திருப்பான்
தீண்டப்படாத ஒருத்தனின்
சடலம்
பார்த்தோம்
மறந்துபோனோம்
2.
புலப்படாத சுவர்களுக்குள்
அடைத்து வைத்திருக்கும்
அவர்களை அழைத்து
சுத்தம்செய்யச் சொல்கிறார்கள்
வீடுகளை வீதிகளை
அலுவலகங்களை
சுற்றுப்புறங்களை
இதயங்களைத் தவிர
எல்லாவற்றையும்
3.
நிர்மலமான பொழுதுகளில்
பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்
சுதந்திரத்தைப் பற்றி
வகுப்பெடுத்தபடி
திரிகின்றன ஊரெங்கும்
அவற்றைப் பின்தொடர்கிறது
குழந்தைகளின் பட்டாளம்
வண்ணத்துப்பூச்சிகளின்
நிறங்களைக் காட்டிலும்
விடுதலையை விளக்க வேறென்ன வேண்டும்
ஆனால்
கோட்டையிலிருந்து
பெருங்காற்று வீசும்போது
குருதி மழை பொழிந்து
சடலங்கள் மிதக்கும்போது
வண்ணத்துப்பூச்சிகளைப்
பார்க்க முடிவதில்லை
அது குழந்தைகளுக்குப்
புரிவதில்லை
காற்று வீசாத பொழுதில்
மீண்டும்
பறக்கத் தொடங்குகின்றன
வண்ணத்துப்பூச்சிகள்
புதர் ஓரம்
ஒதுங்கிக் கிடக்கும் சடலங்களிடம்
போதிக்கத் தொடங்குகின்றன
சுதந்திரத்தின்
பெருமதிப்பை
|
|