|
|
கோ. புண்ணியவானின் கோபாலும் அவனைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலைகளும்
மனப்பிறழ்வுகள், மனநோய்கள், ஊனங்கள் திரையுலகை அலங்கரிக்கும்போது பிரபலம்
அடைவதைக் காலந்தொட்டே காண முடிகின்றது. ஆனாலும் அதே சூழல்கள் மற்றும்
மனிதர்களை நிஜ வாழ்க்கையைக் கடக்கும் தருணங்கள் வலிகள் நிறைந்தவையாகவே
உள்ளன. திரைகளின் முன் குவியும் பரிதாபம், பரிவு, கருணை எல்லாமும் அத்துடனே
முடிவடைந்தும் விடுகின்றன. கதைகளிலும் இத்தகைய கதாப்பாத்திரங்களைக்
காணும்போது ஏதோ ஒரு உள்ளுணர்வு கசிந்து அத்துடன் முடிவடைந்துவிடாமல் அதன்
பின்னரும் தொடர்கின்றது.
அவற்றுள் ஒன்று திரு.கோ.புண்ணியவானின் ‘கோபாலும் அவனைச் சுற்றி
பின்னப்பட்டுள்ள வலைகளும்’. கதையில் வரும் கோபால் சில சமயங்களில் சற்று
வித்தியாசமாய் செயல்பட்டு பிற மனிதர்களின் கண்களுக்கு சக மனிதனாய்
காட்சியளிக்கவில்லை. கதையில் வரும் சில தருணங்கள் கோபாலின் குணாதியசங்களை
நமக்கும் புரிய வைக்கின்றன. கோபாலுக்கு மூளை நரம்பு சம்பந்தபட்ட நோய்
இருப்பதால் உணர்ச்சி வயப்படும் அளவுக்கு அவனிடம் பழகக்கூடாது என்பதை
அறிகின்றார் கதைசொல்லியாக வரும் தலைமையாசிரியர். தலைமையாசிரியருக்கு
தற்காலிக ஆசிரியராய் பணியாற்ற வரும் கோபாலின் அறிமுகம் அங்குதான்
பிறக்கின்றது. பிறிதொரு நாளில் கோபாலின் அம்மாவைச் சந்தையில் சந்திக்கும்
வாய்ப்பு ஏற்படுகின்றது. தன் மகனின் நிலையைச் சலித்துக் கொள்ளும் கோபாலின்
அம்மா, தன் உடைக்கும் ஒப்பனைக்கும் பெரிதும் முக்கியமளிப்பவராய்
இருக்கின்றார். கணக்காய்வாளாராக இருக்கும் கோபாலின் சகோதரன் அவன்
உடல்நிலையைப் புரிந்துகொள்ளாதவனாய் அவனது இயலாமையைச் சுட்டிக்காட்டி
பேசுகின்றான். பல சமயங்களில் தற்கொலைக்கு முயற்சிக்கின்றான் கோபால்.
கோபாலைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலைகளில் மீண்டும் மீண்டும் நமது
சிந்தனைகள் தேங்கி நிற்க கோபாலின் வாழ்க்கை தொடர்கின்றது.
கோபாலை விட அவனைச் சுற்றி பின்னப்படிருக்கும் வலைகள் விபரீதமாய்
தெரிகின்றன. கோபாலின் நண்பர்களற்ற பொழுதுகளையும் உறவுகளின் இடைவெளிகளையும்
நிரப்புகின்றது வெறுமை. அன்பு நீங்கிய இடங்களை எளிதாய் பற்றிக்கொள்ளும்
வெறுமையை அன்பினால் மட்டுமே நீக்க முடியும். மனப்பிறழ்வுகள், மன நோய்கள்
இயல்பாய் தோன்றுவதைக் காட்டிலும்
சுற்றியிருக்கும் சூழல்களும் மனிதர்களும் உருவாக்கி தருவதே அதிகம்.
நோய் எனும் ஒரே காரணத்தால் கோபாலின் உணர்வுகள் மறக்கப்படுகின்றன. கோபாலைக்
காணும் போதெல்லாம் அவனது நோய் மட்டுமே தலைத்தூக்கி அவனை அடையாளப்படுத்தி
அவனது மனதையும் அதனுள் இருக்கும் உணர்வுகளையும் மறைத்து விடுகின்றது. இதுவே
அவனது நோயின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்திவிடுகின்றது. அவனது உணர்வுகள்
மதிக்கப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டால் அவனது நோய் தூர விலகிப்போகும்.
அதற்கு தேவை மருந்தல்ல, அன்பு மட்டுமே.
ஊனத்தை வென்று நிற்கும் அன்பை திருப்பூர் கிருஷ்ணனின் ‘காலில்லா தேவதைகள்’
எனும் கதையில் காண முடிகின்றது. இக்கதையில் மற்றவர்களுக்கு அவன் நொண்டி,
ஆனால் நளினாவுக்கோ ‘அது’ ஒரு பரப்பிரம்மம். நல்லதும் கெட்டதும் கலந்த
மனிதரல்ல ‘அது’; வெறும் நல்லதை மட்டும் கொண்டே உருவான வஸ்து. மனம் விரும்பி
தான் மணந்து ‘அது’வுக்குக் காலாக இருக்கின்றாள் நளினா. ‘நொண்டி’ என
‘அது’வின் அண்ணி பேசும் பேச்சுக்கள் அவளைக் காயப்படுத்துகின்றன. ‘அது’வுடன்
நளினா செல்லும் நடைப்பயிற்சி அண்ணியின் பார்வையில் ஏளனமாகின்றது. அது’வின்
ஊனத்தைக் காட்டி அண்ணி பேசும் வார்த்தைகளுக்குப் பதிலின்றி தவிக்கின்றாள்
நளினா. ‘அது’ மற்றவர்களின் பேச்சையும் உதாசீனங்களையும் கருதுவதில்லை.
அதனால்தான் அது பரப்பிரம்மம். பால்காரி நாச்சம்மாவின் காதுகளில் அண்ணியின்
வார்த்தைகள் விழ, கொதித்தெழுகின்றாள். வார்த்தைகளையே அடியாய்
கொடுக்கின்றாள் நாச்சம்மா. அண்ணியின் திருப்தியின்மைக்குக் காரணம்
‘அது’வின் ஊனமல்ல ‘அது’வின் ஊனமின்மையே என்பதை உணர்கின்றாள் நளினா. ஊனம்
எப்போதும் தன்னுள் வைத்திருக்கும் தாழ்வு மனப்பான்மையைப் பிரித்தெடுத்து
அகற்றிவிடும் பரப்பிரம்மமான ‘அது’, நளினா மற்றும் நாச்சம்மா
மதிப்புக்குரியவர்கள்.
நோயைக் குணப்படுத்தும் அற்புதத்தைத் தன் வசமாக்கிக் கொண்டுள்ள அன்பு, தான்
நீங்கிய வெற்றிடங்களை நோயாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது. கண்களுக்குத்
தெரியாமலும் எத்தனையோ மனங்களில் ஊனங்களும் மனநோய்களும் ஒளிந்து
கொண்டிருக்கின்றன. அவை கண்களுக்குத் தெரியும் ஊனங்கள் மற்றும் மனநோய்களைவிட
ஆபத்தானவை. முன்குறிப்பிட்ட கதைகள், கண்களுக்குத் தெரிந்த ஊனங்களையும்
மனநோய்களையும் காட்சிப்படுத்தி கண்களுக்குத் தெரியாததைச் சிந்தனைக்குள்
பதித்துச் செல்கின்றன.
|
|