|
|
ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும் பதின்மூன்று
நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல்
குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத்தள்ளிய கலைஞர்
அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும்
பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக்
கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில்
இதற்கடுத்த பத்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை
அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது.
முத்தமிழையும் கரைத்துக்குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர்
கருணாநிதிக்கு பின்பாகப் பெயர் சொல்லத்தக்க நபர்களில் கலைஞர் அப்புக்காத்து
முதன்மையானவர். ஈழகேசரிப்பத்திரிகையில் தான்தோன்றிக்கவிராயர் என்ற பெயரில்
தன் முதல் கவிதை வெளிவந்ததாக பேட்டியொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
சொல்லழகர், முத்தமிழ்ச்சங்கமம், கவிதைக்கடல், கதைச்சனாமி முதலான பல்வேறு
பட்டங்களை வென்றிருக்கிறார். அவர் இறுதியாக எழுதியது சுவையாக நண்டுக்கறி
சமைப்பதெப்படி என்பது குறித்த கலாபூர்வமான சமையல் குறிப்பொன்றே.
ஒருநாள் அப்புக்காத்துவின் நோக்கியா தொலைபேசிக்கு அறிமுகமற்ற
இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்தது. அது சும்மா லோக்கல் அழைப்பல்ல.
வெளிநாட்டு அழைப்பு. கதைத்தவர் தானுமொரு யாழ்ப்பாணவாசிதானெனவும் இப்போது
வெளிநாட்டிலிருப்பதாகவும் சஞ்சிகையொன்றை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.
அப்புக்காத்துவின் அத்தனை முக்கிய படைப்புக்களையும் படித்திருப்பதாகக்
கூறியவர், தமது சஞ்சிகைக்கு அப்புக்காத்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்
கொண்டார். அதாவது மே மாதம் வருவதால், முள்ளிவாய்க்கால் துயரம் குறித்து
அப்புக்காத்து எழுதவேண்டுமாம். முள்ளிவாய்க்கால் வரை சென்று,
முகாமிலிருந்தும் வந்தமையினால் இதற்கு சரியான ஆள் நீங்கள்தானெனவும்
கூறினார்.
அப்புக்காத்து அன்று முழுவதும் உட்கார்ந்து யோசித்தார். தமிழில் வெளியாகும்
ஆயிரத்துச் சொச்சம் பத்திரிகை,சஞ்சிகை,இணையங்களில் கடந்த இரண்டு வருடமாக
இந்தப்பிரச்சனை குறித்து விலாவாரியாகப் பேசிவிட்டனர். செல்லடி கிபிரடியில
சனம் செத்தது, சாப்பாடில்லாமல் செத்தது, மருந்தில்லாமல் செத்தது, ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு ஊருக்கு இடம்பெயர்ந்தது என அடியாழம் வரை சென்று அலசி
ஆராய்ந்து விட்டனர். ஏதாவது புதிதாக எழுத வேண்டுமே என யோசித்துக்
கொண்டிருக்க, ஆளுக்கு இலேசாக வயிறு கலக்குவது மாதிரியிருந்தது. அந்தக்
கணத்திலதான் அவருக்கு இந்த ஐடியா தோன்றியது.
அப்புக்காத்துவின் அனேக கதைகளில் வரும் பெண் பாத்திரமான பாமாவே இந்தக்
கதைக்கும் நாயகியானாள். அடிப்படையில் அவளொரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச்
சேர்ந்தவள். அவளது உணர்வுகளும் வெளிப்பாடுகளும் நடுத்தர வர்க்கத்தைப்
பிரதிபலிப்பனவாக இருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறையெடுத்துக் கொண்டார்.
பாமாவை ஒரு தனிப் பொம்பளையாக விட அப்புக்காத்துவின் மனம் ஒப்பவில்லை. இப்ப
காலம் கெட்டுக்கிடக்குது. கலியாணம் செய்யாத பெட்டையென்றால், போறவாற பொடியள்
நொட்டை சொல்லுவினம். ஒரு நொட்டைக்கு பெட்டை சிரிச்சால் கதையே சரி. ஒரு
பொடியனைப் பிடித்து கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் சோலியில்லையென
நினைத்தார். ஒரு பொடியனையும் கொண்டு வந்தார். பெயர் அகத்தியன். ஏதாவது
தொழில்துறை வேணுமே. வன்னிச்சனமென்றால் விவசாயிதானென்றது
அவருக்குப்பிடிக்கயில்லை. இந்த நிலை மாற வேணுமென யோசித்தார். தச்சு, மேசன்,
கூலி வேலைகள் செய்யிறவனைக்கட்டிக் குடுத்து, பெட்டையைக் கஸ்டப்பட விடவும்
விரும்பவில்லை. அரசாங்க உத்தியோகமும் சரி வராது. மே மாதம் சம்பந்தமான
கதைகளில் வரும் பாத்திரங்கள் சிங்கள இனவாத அரசில் சம்பளம் வாங்குபவையாக
படைக்கப்படுவதையும் விரும்பவில்லை. பலதையும் யோசித்து விட்டு,
ஆளைப்பிடித்து இயக்கத்தில் சேர்த்து விட்டார்.
தமிழக முதலமைச்சர் முத்துவேலு கருணாநிதி உண்ணாவிரதம் இருந்த செய்தியைப்
பாதுகாப்பு வலயத்துக்குள்ள இருந்த சனம் ரேடியோவுக்குள்ள இரண்டு காதையும்
வைச்சு கேட்டுக் கொண்டிருக்குதுகள். புலிகளின் குரல், இலங்கை வானொலி,
வெரித்தாஸ், பி.பி.ஸி, ஐ.பி.ஸி, இந்திய வானொலி, சூரியன் என்று காலமை ஐஞ்சறை
தொடங்கி இரவு பத்து மணிவரையும் விழுந்து விழுந்து செய்தி கேட்டுதுகள்.
ஈழத்தமிழர்களிற்காகக் கருணாநிதி உயிரையும் குடுப்பாரென்று அபிப்பிராயப்பட்ட
ஆக்களும் இருக்கத்தான் செய்யினம். இந்தக் கூத்துக்கள் இப்பிடி
போய்க்கொண்டிருக்க, அரசாங்கம் புது சீன் ஒன்றை ஓப்பின் பண்ணிச்சுது.
அதாவது, பாதுகாப்பு வலயத்துக்குள்ள இனி கனரக ஆயுத பயன்பாடு இருக்காதாம்.
இலங்கை வானொலியின் பின்னேரச் செய்தியில் இந்த நியூசை உவைசூர் ரஹ்மான்
வாசிச்சுக் கொண்டிருக்க, இரட்டை வாய்க்கால் சந்திக்குக் கிட்டவாக இரண்டு
கிபீர் விமானங்கள் குண்டு போட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொன்றும்
இருநூற்றைம்பது கிலோ எடையுள்ள எட்டு ஷஎயார் சொட் குண்டுகள் வீசப்பட்டன. ஏழு
குண்டுகள் வெடித்தன. ஒன்று வெடிக்கவில்லை.
வெடிக்காத குண்டு விழுந்தது, இயக்க பொடியளின்ர பங்கருக்கப் பக்கத்தில.
பங்கருக்குள்ள மூன்று பொடியள். அந்த ஏரியா கொஞ்சம் மணல்த்தரை. குண்டு
விழுந்த அதிர்வில் பங்கரின் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. இனி இதுக்குள்ள
இருக்க முடியாதென்ற நிலை வந்ததும், பங்கருக்குள்ளால வெளிக்கிட்டு
ஓடத்தொடங்கிச்சினம். இரண்டு பேர் பக்கத்து பனங்கூடலுக்குள்ள பாய்ந்து
விட்டினம். ஒரு பொடியன் மட்டும் சந்தி கடந்து வலைஞர்மடப்பக்கம் திரும்பி
ஓடினான். வழியில இருந்த ஆலமரத்திற்குக் கீழ படுத்திட்டான். அதில ஏற்கனவே
வயசான மனுசனொராள் படுத்துக் கிடக்குது. பொடியனை வடிவாகப் பார்த்து விட்டு
ஆள் இயக்கமோவெனக் கேட்டார். பொடியனும் ஓம் பட்டான். மனுசன் என்ன நினைச்சுதோ
தெரியாது பொடியனின்ர கையைப் பிடிச்சுக் கொண்டார்- ஷஷ தம்பி..என்ர மகனை
நீர்தான் எப்பிடியாவது கண்டுபிடிச்சுத்தர வேணும்..||. பொடியன் கிபீரடிச்சு
கலங்கினதை விட, இந்த வசனத்தை கேட்டுத்தான் கூடுதலாக கலங்கின
மாதிரியிருந்தது. தனது மகன் இரண்டு மாதங்களாக தொடர்பில்லாமலிருப்பதாகவும்,
போன கிழமை முள்ளிவாய்க்காலில் கண்டதாக யாரோ சொன்னதால் தேடிப்போய்
காணமுடியாமல் திரும்பி வருவதாகச் சொன்னார். பொடியன் கொஞ்ச நேரம் யோசிச்சுப்
போட்டு, மனுசனின்ர கையைப்பிடிச்சுக் கொண்டான். தான் மூன்று மாதங்களாக
வீட்டுப்பக்கம் போகவில்லையெனவும், மனிசி பிள்ளைகளின்பாடு என்னவென்பது
தெரியவி; ல்லையெனவும், வலைஞர்மடம் சேர்ச்சுக்கு கிட்டவாக எங்கேயோதான்
அவர்களைப் ;பாதிருப்பதாகவும் சொன்னான். மனுசனுக்கு சரியான கவலையாய்ப்
போயிற்றுது. மகனின்ர ஞாபகம்தான் வந்தது. பொடியனை தன்ர மோட்டார் சைக்கிளில
ஏற்றிக் கொண்டு வெளிக்கிட்டார்.
வழியில கேட்டார்- “ தம்பியையும் பிடிச்சுத்தான் சேர்த்ததோ?“
அவன் பேசாமலிருந்தான். மனுசன் விடுகிறமாதிரியில்லை.
“ சும்மா சொல்லும் ஐ.சே...இப்ப கன பொடியளை பிடிச்சுத்தானே சேர்த்தது..என்ன
வெக்கம்.. எங்க வைச்சுப்பிடிச்சவங்கள்..?“
“என்னைப் பிடிச்சுச் சேர்க்கயில்லை..”
“ஓ..ஓ.. நீர் விரும்பிப் போன ஆள்...”
“விரும்பியும் போகயில்லை..”
அனேகமாக இந்தச் செக்கனில மனுசனுக்கு தலை விறைச்சிருக்க வேணும். ஒன்றில்
அது. அல்லது இது. இவன் இரண்டுமில்லையென்கிறான். அவர் கனக்க யோசிக்கத்
தொடங்க, பொடியன் தன்ர கதையைச் சொல்லத்தொடங்கினான்.
“எங்கட மாமா இந்த கதை, கவிதை எழுதிக் கொண்டு திரியற விசர் மனுசன். கனகாலமாக
இயக்கத்தோடதான் திரியிறார். வீட்டுக்கொராள் சேர வேணுமென்டதும், தான்
சேரப்போயிருக்கிறார். பிள்ளையளெல்லாம் கலியாணம் கட்டிவிட்டுதுகள். வயசான
ஆள்த்தானே. இயக்கம் இவரை வேண்டாம் என்று விட்டுது. இந்தாள்
என்னைப்பிடிச்சுச் சேர்த்து விட்டார்..”
வலைஞர்மடம் சேர்ச்சுக்குக்கிட்டவாக இறங்கினான். பொடியனின்ர உடுப்பு,
எடுப்பைப் பார்க்க அப்பிடியே இயக்க சாயலடிக்குது. முந்தியென்டால் சேர்ச்சில
நின்று பார்க்க கடற்கரை தெரியும். இப்ப அந்த சின்னத் துண்டிலதான்
சனமெல்லாம் தரப்பாளடிச்சிருக்குதுகள். இவன் ஒவ்வொரு தரப்பாளுக்குள்ளயும்
உள்ளட்டு வீட்டுக்காரரைத் தேடத் தொடங்கினான். இவன் அந்த ஏரியாவுக்குள்ள
உள்ளட்டதும் சனம் வெருளத் தொடங்கி விட்டுதுகள். வயசான ஆம்பிளை, பொம்பிளையள்
எழும்பி வெளியில வரத் தொடங்கி விட்டினம். அந்த நேரம் இப்பிடி வாறது
ஆள்ப்பிடிக்கிற இவன் தரப்பாளுக்க உள்ளட, இவனின்ர மனிசி தகப்பன்காரனோட சண்டை
பிடிச்சுக் கொண்டிருக்கிறாள். இவனைக்கண்டதும் கட்டிப்பிடிச்சு அழத் தொடங்கி
விட்டாள். இவனில்லாமலிருந்த மூன்று மாதங்களிலும் தான்பட்ட கஸ்ரங்களை
பட்டியலிட்டு அழுதாள். தைப்பொங்கலன்று விசுவமடுவிலயிருந்து இடம்பெயரத்
தொடங்கியதிலிருந்து போன கிழமை ஏழாவது தடiயாக இடம்பெயர்ந்தது வரை சொன்னாள்.
இடையில், தகப்பன்காரன் ஒன்றுக்கும் உருப்படாமலிருப்பதையும்
குத்திக்காட்டினாள். உதாரணத்திற்கு உடையார்கட்டில் நடந்த சம்பவத்தைக்
குறிப்பிட்டாள்.
பாதுகாப்பு வலயத்தில அன்றுதான் அகோரமான செல்லடியை ஆமிக்காரர்
தொடங்கிச்சினம். றோட்டு முழுக்க சனம் செத்துக்கிடக்குது. இந்த
அமளிதுமளிக்குள்ளயும் கொஞ்சச்சனம் உடையார்கட்டு சேர்ச்சுக்கு
முன்னாலயிருந்த செஞ்சிலுவைச்சங்கத்தின்ர ஸ்ரோரை உடைச்சுப் போட்டினம். செல்
விழுற வேகத்தை விட இந்த விசயம் வலுவேகமாக பரவிவிட்டது. ஆம்பிளையள்
ஓடிப்போய் அரிசி,மா,சீனி மூட்டையளை கொண்டு போகத் தொடங்கிவிட்டினம்.
பக்கத்து வீட்டுச்சனம் ஒரு மூட்டை மா கொண்டு வரத்தான் அவளுக்கு விசயம்
தெரியும். தகப்பன்காரனைக் கூட்டிக்கொண்டு ஓடிப்போனால், அங்க சாப்பாட்டு
ஐற்றங்கள் முடிஞ்சுது. வேற சாமானுகள்தான் கிடக்குது. அதிலயும் சனத்தின்ர
கவனமெல்லாம் ஷமொபைல் கக்கூஸ்ஷ என்ற ஐற்றத்திலதான். அதாவது உங்கட வீட்டு
மலசலகூடத்தின்ற தரைப்பகுதியை மட்டும் தனியாக கற்பனை செய்து பாருங்கோ. இது
பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. ஒரு கிடங்கு வெட்டி,அதுக்கு மேல இதை
வைசு;சு சுத்தி வர மறைச்சு விட்டால் விசயம் முடிஞ்சுது. இந்த ஐற்றத்தை
சுத்தி சனம் இலையான் மாதிரி மொய்த்து நிற்குது. தகப்பன் அதுக்குள்ள
நுழையிறதுக்கிடையில அதுவும் முடிஞ்சுது. இதைப்போல, இடப்பெயர்வுகளின் போதும்
உருப்படியான காரியங்கள் செய்யாமல் தேசம் விடும் கண்ணீர், வேருடன்
பிடுங்கப்பட்ட ஆன்மா போன்ற தலைப்புக்களில் கவிதை எழுதிக் கொண்டிருந்தாராம்.
இப்ப தனக்கு அவசரமாக மலங்கழிக்க வேண்டுமெனவும், அன்று அதை எடுத்திருந்தால்
இப்பொது பிரச்சனையிருந்திருக்காது எனவும் சிணுங்கினாள். பிறகு, எல்லோரையும்
போல ஒரு பிளாஸ்டிக்பாயை எடுத்துக் கொண்டு அவளைக் கடற்கரைக்குக் கூட்டிக்
கொண்டு போனான்.
பாதுகாப்பு வலயத்துக்குள்ள இருந்த பொம்பிளையள் இரவுகளிலதான் கடற்கரைக்கு
வந்து மலங்கழிப்பினம். கடற்கரை முழுக்க குந்தியிருப்பினம். ஒன்றும்
செய்யேலாமல் பகலில போக வேண்டியவையள், ஒரு பாயைச் சுத்தி மறைச்சுக்
கொண்டிருப்பினம்.
எல்லாம் முடிஞ்சு திரும்பி தரப்பாளுக்கு வர, பக்கத்து தரப்பாள்காரனும்
வந்தான். அவன் நல்ல எதுகை மோனையாக கதைச்சான். அடுத்த கட்டமாக
நாட்டுப்பிரச்சனை எந்த திசையில் போகும், இயக்கத்திடம் ஏதும்
திட்டமிருக்குதோ, இயக்கத்திடம் எஞ்சியிருக்கம் ஒரே பிளேனும் மகிந்தவின்
தலையில் விழுமா? மன்மோகனின் தலையில் விழுமா என்பது பற்றியெல்லாம் விரிவாக
அலசிஆராய்ந்தவன், போகும்போது மெல்லிய குரலில் சொன்னான்... “நான் எங்கட
வீட்டுப் பொம்பிளையளை இருட்டுக்கதான் கக்கூசுக்கு கூட்டிக் கொண்டு போறனான்.
பகலில விடுறதேயில்லை. உங்களுக்கு தெரியாது கக்கூசுக்கு போறதாலேயே கன
பிரச்சனை வருது. இதுக்கென்டே கொஞ்சப் பேர் அலையிறாங்கள்...இவங்கட தலையில
செல் விழாதாம்..”
வன்னிச்சனம் முழுக்க வவுனியா முகாம்களுக்குள்ள அடங்கிக் கிடக்குதுகள்.
பாதுகாப்பு வலயமாகயிருந்த கடற்கரை வெட்டையிலயிருந்த சனங்கள், இப்ப
செட்டிக்குளத்தில காடு வெட்டின இடத்தில இருக்குதுகள். கடைசி நேரம்
அல்லோலகல்லோலப்பட்டு வந்தது, இயக்கத்திலயிருந்தது அப்பிடி இப்படியென்று கன
குடும்பங்கள் பாதிக்குடும்பங்களாகவே வந்து சேர்ந்திருந்தன. இந்த முகாமில
கொஞ்சப் பேர், அடுத்த முகாமில மிச்சப் பேர் என்று இருக்கினம். இப்பிடியான
ஆக்களை தேடிக்கண்டு பிடிக்கிறதுக்கு ஒவ்வொரு முகாமிலயும் ஸ்பீக்கர் கட்டி
அறிவிச்சுக் கொண்டிருக்கினம். பாமா தகப்பனோட போய் புருசனின்ர பெயரையும்
எழுதிக் குடுத்திட்டு வந்தாள்.
புருசன்காரன் காணாமல் போனது அவளுக்கு அவ்வளவு பெரிய தாக்கமாக இருக்கயில்லை.
அவளின்ர போக்கை பார்க்க தகப்பனுக்கு சில நேரங்களில எரிச்சல் வரும்.
என்னயிருந்தாலும் பழசை மறக்கக்கூடாது. எங்கட சனம் கொஞ்ச நாளில என்ன மாதிரி
மாறிவிட்டுதுகள் என்று பலதையும் பத்தையும் யோசித்துக் கொண்டு மலங்கழிக்கப்
புறப்பட்டார். முகாமில பெரிய கஸ்ரமான விசயங்கள் மூன்று இருந்தன.
சாப்பாடு,தண்ணீர்,மலங்கழிப்பது. மலங்கழிப்பதற்கு மூன்று கிலோமீற்றர்கள் வரை
நடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு தூரம் போனாலும் மலசல கூடமெதுவுமில்லை.
சனத்தை குடியிருத்த வசதியாக காடு வெட்டப்பட்ட இடமது. புல்டோசர்கள் மரங்களை
வெட்டி, ஒரு பெரிய தடுப்பரண் மாதிரியாக ஒதுக்கியிருந்தன. அது நாற்பது
ஐம்பது அடிவரையான உயரமிருக்கும். அதன் அடிப்பகுதியிலதான் சனங்கள்
மலங்கழித்தனர். கொஞ்ச நாளில அந்தப்பகுதியில கால் வைக்கேலாமல் போக, மரங்களில
ஏறிஏறி இருந்து, கடைசியில நாற்பது ஐம்பதடி உயரத்திலயுமிருக்கத்
தொடங்கிச்சினம். இதிலயும் பொம்பிளைப்பிள்ளையள் பாடுதான் பெரும்பாடு.
பாதுகாப்பு வலயத்திலயென்டாலும் இயக்கத்துக்குப் பயந்து பொடியள் கொஞ்சம்
கட்டுப்பாடாக இருந்தினம். இஞ்ச வலு மோசம். கொஞ்சம் வடிவான பெட்டையள் இந்த
ஏரியாவுக்க போனால், பின்னால கொஞ்சப் பேர் திரிவினம். அதுகள் ஒன்றுக்கு
இரண்டக்கு போக ஏலாமல் நெளிஞ்சு கொண்டு அப்பிடி இப்பிடி திரிவினம்.
இப்பிடியான கன சீனுகளை இவர் கண்டிருக்கிறார். இனேகமாக இந்த சீனின்ர
கடைசிக்கட்டம், பொடியனும் பெட்டையும் ஒரு மரத்தின்ர மறைவில நின்று
கதைக்கிறதில முடியவும் கண்டிருக்கிறார். இந்த கண்றாவிகளை கண்டதுக்கு பிறகு,
இந்த அலுவலெனில் பாமாவை தனியாக அனுப்பவதில்லை. ஆனால் கொஞ்ச நாளாக இவரை காய்
வெட்டிப் போட்டு அவள் தனியாக போக தொடங்கி விட்டாள்.
வழியில தெரிஞ்ச ஆக்கள் கனபேர் சுகம் விசரிச்சுப் போட்டுப் போச்சினம்.
அதிலயும் கவிஞர் கந்தப்பு கதைச்சிட்டுப்போனதுதான் இவரை யோசிக்க வைச்சுக்
கொண்டிருந்தது. இவரும் கந்தப்புவும் இன்னும் கொஞ்சப்பேரும் சேர்ந்து ஊரில
ஒரு தமிழ்ச்சங்கத்தை நடத்தினவையள். இவருக்கு இப்பவும் நல்ல ஞாபகமிருக்குது.
கடைசியாக நடந்த நிகழ்வில இவர் தலைமையில ஒரு பட்டிமன்றம் நடந்தது.
இராமாயணத்தில பெரிதும் விஞ்சி நிற்பது இலக்குவனின் சகோதர பாசமா, சீதையின்
பதி பாசமா என்பதுதான் தலைப்பு. இலக்குவனின் அணிக்கு கந்தப்புதான் தலைமை.
அதுக்குப்பிறகு ஊர் இடம்பெயர்ந்து விட்டது. இப்ப கந்தப்பு எதிர்ப்பட்டு,
இவரின்ர கையைப்பிடிச்சு கதைச்சிட்டுப் போனார். கந்தப்பு கடைசியில சொன்னார்-
“ கலைஞர் என்னயிருந்தாலும் நாங்கள் தோற்றுப் போனம். எங்கட இளம் பரம்பரையை
சிங்களவன் அழிச்சுப் போடுவான். மருமகன முகாமுக்குள்ளாள எடுத்து சின்ன
நாட்டுக்கென்றாலும் அனுப்பிப்போடுங்கோ..”
இவருக்கு முகாமுக்கு வந்த நாளிலயிருந்து மருமகனின்ர நினைப்புத்தான். தன்ர
கடைசிப் பெட்டை வாழாவெட்டியாகிவிடுவாளோ என்ற பயமுமிருந்தது. ஊரில கடையும்
தானுமாக இருந்த பொடியனை இயக்கத்துக்கு போ என்று அனுப்பினது பிழையோ என்றும்
யோசிக்கத்தலைப்பட்டார். இவர் அப்ப ஏரியா போரெழுச்சிக்குழுத்தலைவராக
இருந்தவர். வீட்டுக்கொராள் இயக்கத்துக்கு வரவேணுமென்ற றூள்ஸ் வந்ததும்,
போரெழுச்சிக்குழுவிலயிருந்த நாற்பத்தைந்து ஐம்பது வயசுக்காரரெல்லாரும்
தாங்களே இயக்கத்தில சேர்ந்து விட்டினம். வீட்டில ஒராள்
இயக்கத்திலயிருந்தால் காணும்தானே. பிள்ளையள் போகத்தேவையில்லை. அவையளுக்கு
தெரியும் தங்களை சண்டைக்கு விடமாட்டினமென்பது. இவருக்கு அப்பவே அறுபத்தேழு
வயசு. இவருக்கும் சேருற ஐடியா இருந்ததுதான். வயசான நேரம் நீங்கள் ஏன்
கஸ்ரப்படுகிறியள் என அரசியல்த்துறைப் பொடியள் அபிப்பிராயப்பட்டினம். தலைவர்
பங்களிப்பில்லாமல் இருக்கிறதோ என்று மருமகனைப்பிடிச்சு சேர்த்துவிட்டார்.
மருமகனுக்கு ஒரு சாரத்தை குடுத்துக்கட்டச் சொல்லி, துவாயையும் தலைக்கு
போடவைச்சு வட்டுவாகல் பாலம் கடந்தார். அங்க முன்னுக்கு நிற்கிற ஆமிக்காரன்
நல்லாத்தமிழ் கதைக்கிறான். ஒரு ஆமிக்காரன ;ஷஅகத்தியன்| என்று இவரது
மருமகனின்ர பெயரைச் சொல்லி கூப்பிட்டான். பிறகுதான் தெரியும், அதெல்லாம்
முந்தி இயக்கத்திலயிருந்து சண்டை நேரம் அங்கால மாறிய ஆக்களென்றது. ஒன்றும்
செய்யேலாத கட்டத்தில மருமகனும் அதில சரணடைஞ்சார். சரணடைஞ்ச ஆட்களை ஒரு
மாமரத்துக்குக் கீழ இருக்க வைச்சிருக்கினம். இவர் றோட்டுக்கு இஞ்சால நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பதான் கவனிச்சார். கவிஞர் புதுவை
இரத்தினதுரையும் அந்த வரிசையிலயிருக்கிறார். புதுவையர் இவரோட நல்ல ஒட்டு.
புதுவை தன்ர பொடியன் சோபிதனை இயக்கத்துக்கு சேர்க்காமல் வைச்சிருந்ததுதான்
இவருக்கு உறுத்தலாகயிருந்தது. கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, ஒரு மினி பஸ்
கொண்டுவந்து அதிலயிருந்த ஆட்களை எற்றிச்சினம். மருமகன் யன்னலுக்குள்ளால
எட்டிப்பார்த்து கையசைத்தான். இவர் நல்ல வடிவாகப்பார்த்தார். அவனுக்கு முன்
சிற்றில தலையைக் குனிஞ்சு கொண்டு புதுவை இருந்தார்.
இது நடந்து இரண்டு மாதமாகுது. முகாமிலயிருக்கிற எல்லா அதிகாரிகளுடனும்
கதைச்சுப்பார்த்திட்டார். எல்லாரும் ஒரே மாதிரியே கதைச்சினம். “கொஞ்சம்
பொறுங்கோ... எல்லாரும் பத்திரமாக முகாமிலயிருக்கினம். விரைவில
சந்திக்கலாம்.”
இதுக்குள்ள இன்னொரு பிரச்சனையாக, பாமாவின்ர நடவடிக்கை கொஞ்சம் பிழையாக
இருப்பது மாதிரி இவருக்குப்பட்டது. அவள் காலமை எழும்பி தண்ணி லைனில வைச்ச
வாளியைப்பார்க்க போவாள். அந்த லைனில வாளி வைச்சால் மூன்று
நாளுக்குப்பிறகுதான் தண்ணீர் கிடைக்கும். அதுவரை வாளியை கவனிச்சுக் கொள்ள
வேணும். இந்த அலுவல் முடிய, சாப்பாட்டு லைனில நிற்க வேணும்.
இதுக்குப்பிறகு, ஒரு போத்தில தண்ணியெடுத்துக் கொண்டு கக்கூசுக்குப் போவாள்.
வர மத்தியானமாகும். ஆரம்பத்தில இவர் இதை பெரிதாக எடுக்கவில்லை. பிறகுதான்
அரசல்புரசலாக கதை அடிபடத் தொடங்கிச்சுது. பக்கத்து தரப்பாள் மனிசி ஒரு நாள்
விசயத்தை இவரிட்டச் சொல்லிச்சுது. கூடவே, அந்தப் பொடியனைப்பார்க்க எங்கட
பொடியன் மாதிரி தெரியயில்லையென்றும், சிங்கள மூஞ்சையாக இருக்குதென்றும்,
அனேகமாக முகாம் காவலுக்கு நிற்கிற ஆமியோ,பொலீசாகவோதான் இருக்க
வேணுமென்றார்.
பின்னேரம் ஆற்றில குளிக்க போகேக்க,மகளிடம் விசயத்தை கேட்டார். அவள்
சிரிச்சுப் போட்டு வலு சிம்பிளாக சொன்னாள்- “ஓ..அதோ.. அது என்ர பிரன்ட்
அப்பா...நல்ல ஷவோய்.” .பொலீசில இருக்கிறார்... அம்பாந்தோட்டையாம்..”
ஆமி,பொலீசோட கதை பேச்சு வைக்கக்கூடாதென்றும், வலு கவனமாக இருக்க
வேணுமென்றும் அட்வைஸ் பண்ணினார். அவள் சிரிச்சக் கொண்டு வந்தாள்.
கொஞ்ச காலத்தில இவையள் ஊருக்கு திரும்பி வந்திட்டினம். இதுக்கு பிறகு இவர்
கதை,கவிதை ஒன்றும் எழுதயில்லை. நிவாரணங்களுக்கு போறதோடயே பொழுது கழிஞ்சுது.
இப்பிடித்தான் ஒரு நாள்,காணாமல் போனவையளின்ர சொந்தக்காரரை கண்டாவளைக்கு
வரச் சொல்லியிருந்தினம். அரசாங்கத்தின்ர ஆணைக்குழுவொன்று
வரப்போகிறதென்றும்,சில வேளை நல்ல பதில் கிடைக்கலாமென்றும் ஊர் விதானையார்
சொல்லி விட்டிருந்தார். இவர் எவ்வளவோ சொல்லியும் அவள் போகமாட்டன் என்று
விட்டாள். இவ்வளவு காலத்திற்குப்பிறகும் காணமல் போனவையள் இருப்பினமென்று
நம்புறியளோ என்றொரு பதில் கேள்வியும் கேட்டாள்.
நாலுநாள் கழிய, பொலிஸ் வேலைக்கு தமிழ் ஆட்களை சேர்க்கினம். தானும் சேரப்
போறன் என்றாள். அவளின்ர அம்பாந்தோடடை ஷவோய் பிரண்ட்டும் நல்ல வேலை. போ
என்றானாம். ஒரு சுயவிபரக் கோவை தயார் செய்து, அஞ்சல் செய்துவிடுமாறு
தகப்பனிடம் கொடுத்து விட்டாள்.
முந்தி இவையளின்ர போரெழுச்சிக் குழு அலுவலகம் இருந்த வீட்டுக்கு
முன்னாலயிருந்த தபால்பெட்டியிலதான் அந்தக் கடிதத்தைப் போட்டார்.
இந்தக் கதையை படித்து முடித்ததும் சஞ்சிகை ஆசிரியருக்கு அடிமுடியெல்லாம்
பற்றியது. தனது இலக்கிய நண்பரொருவரை தொலைபேசியில் அழைத்து, கலைஞர்
அப்புக்காத்து ஷமாறி| விட்டார் என்று தகவல் சொன்னார். அதற்கு ஆதாரமாக ஐந்து
காரணங்களைச் சொன்னார்.
1. இயக்கத்திலிருந்து ஓடி வந்த மருமகனை விட்டில் மறைத்து
வைத்திருந்திருக்கிறார்.
2. போராளிகளனைவரும் குப்பி வைத்திருப்பார்கள். ஆனாலும் இவரது மருமகன்
இராணுவத்தினரிடம் சரணடைந்திருக்கிறான்.
3. சுதந்திரம் என்ன சுக்கா,மிளகா என்று கவிபாடிய கலைஞர், முகாமில்
சோற்றுக்கு சிங்களவனிடம் வரிசையில் நின்றிருக்கிறார்.
4. அவரது மகள், சிங்களவனான பொலீஸ்காரனொருவனுடன் இரகசிய தொடர்பை
பேணுவதையறிந்தும் பேசாமலிருந்திருக்கிறார்.
5. மகளை இலங்கை பொலீஸ் வேலையில் சேர்ப்பதற்காக விண்ணப்பப்படிவத்தை தானே
அஞ்சல் செய்திருக்கிறார்.
இவ்வளவு காரணங்களை கடந்தும், சிறு குறிப்பொன்றுடன் தனது சஞ்சிகையில் கதையை
பிரசுரம் செய்தார். அதற்கு காரணமிருந்தது. அப்புக்காத்துவை அம்பலப்படுத்த
கிடைத்த சந்தர்ப்பமிதுவென கருதினார். அவரது நோக்கம் பெரும்பாலும்
நிறைவேறியிருக்க வேண்டும். ஏனெனில், வாசகர் கடிதங்கள் அதனைப்பிரதிபலித்தன.
குறிப்பாக, பிராங்போர்ட்டிலிருந்து கடிதமெழுதிய ஒருவர் அப்புக்காத்துவை
கிழிகிழியென கிழித்தெடுத்திருந்தார். அவரது கடிதத்தின் சாரமிதுதான். பாரதி
கண்ட புதுமைப் பெண்கள் தோன்றிய தேசத்தில் இந்த இழிகுண பெண் பாத்திரம்
வாழ்வதாக படைத்த கதையாசிரியன் நிச்சயம் போர்க்குற்றம் புரிந்த சிங்கள
இனவெறியரசிடம் பணம் பெற்றிருக்க வேண்டும். அவரது கதையில் வரும்
பெண்பாத்திரமானது பெண்விடுதலைக்கு எதிராக படைக்கப்பட்டிருப்பதுடன், பெண்களை
பாலியல் பண்டங்களாக நோக்கும் கூறுகள் வெளிப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள்
பத்திரிகை எழுத்தாளர்களிற்குரிய இயல்பாகும்.
பாரிஸ் மற்றும் சென்னையிலிருக்கும் இரண்டு பெண்கள் அமைப்புக்கள்
அப்புக்காத்துவிற்கெதிராக இணையத்தள கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்தன.
பிற நாடுகளிலுமுள்ள தமிழ் எழுத்தாளர்களும், கவிஞர்களும் இதில்
கையெழுத்திட்டனர். இவ்வாறு கையெழுத்திட்ட கவிதாயினி ஒருவர் தனது
வலைத்தளத்தில் கீழ்வருமாறு கேள்வியெழுப்பியிருந்தார்.
“அட இனமானமற்ற பொறுக்கி...உனது சொந்த மகளெனில் சிங்களவனுடன் படுக்க
விடுவியா?..”
கவிதாயினி இதை பதிவேற்றம் செய்து நாற்பத்தொரு நிமிடத்திற்குள்
முப்பத்தைந்து பேர் அவரை வழிமொழிந்து கருத்தூட்டமிட்டனர். இதற்கடுத்த
ஐந்தாவது நிமிடத்தில், இணையத்தில் நடக்கும் இந்தச்சங்கதிகளெதுவும் தெரியாத
இந்தக் கதையை எழுதியவர், வீட்டில் சாப்பிடுவதற்கேதாவதிருக்கிறதா என
தேடிப்பார்த்தார். எதுவுமில்லை. பசி ஆளை புடுங்கித்தின்றது.
குசினிச்சுவருடன் சாய்ந்திருந்து கொண்டார். அவருக்கு போரெழுச்சிக்குழு,
புதுவை இரத்தினதுரை, மருமகன், கதை, கவிதை, சுதந்திரமென்ன சுக்கா மிளகா,
மகள், மகளின்ர அம்பாந்தோட்டை ஷவோய் பிரண்ட், அவன் கடைசியாக குடுத்த
இருபதாயிரம் காசு எல்லாம் ஞாபகம் வந்தது. கடைசியில யோசிச்சார்-
“ச்சா...முகவெட்டான இன்னொரு பொம்பிளைப்பிள்ளையும் இருந்திருக்கலாம்..?”
|
|