|
|
கதைக்கு காதுண்டு; கதைக்கத்தான் வாயில்லை...!
விக்ரமாதித்தன்;
தெனாலி ராமன்;
மரியாதை ராமன்;
ஜானகி ராமன்;
வாண்டு மாமா;
அக்பர்;
பீர்பால்;
முல்லா நசுருதின்;
என் பள்ளிக்கூட நாட்களில் இவர்கள் எனக்கு மிக நெருக்கமானவர்கள்; என்
நாயகர்கள் என்றே சொல்லலாம். நூல்நிலையத்திலும் இவர்கள் கதைகளே
அதிகமிருக்கும். வகுப்பிற்கு வரும் புது ஆசிரியர்கள்; இவர்கள் குறித்து
பேசிதான் எங்களுடன் நெருக்கமாவார்கள். பாடம் ஏதுமில்லாத நேரத்திலும்
நாங்கள் ஒவ்வொருவராக இவர்கள் குறித்துதான் பேசிக்கொள்வோம். அவ்வளவு
பிடிக்கும் இவர்களை.
படித்த கதையோடு எங்கள் சொந்த கதைகளிலும் ‘இவர்கள்’ உலா வருவார்கள். அப்போது
வந்து கொண்டிருந்த நாளிதழ்களிலும், வாரா மாத இதழ்களிலும் இவர்கள் பற்றிய
கதைகள் நிச்சயம் இருக்கும். அதனை வெட்டி அதற்கென்ற ஒரு புத்தகத்தை வாங்கி
ஒட்டுவோம். ஒவ்வொரு பக்கமாக இவர்கள் ஒவ்வொருவரும் கதைகளாக இருப்பார்கள்.
இதில் சக மாணவர்களுக்குள் போட்டியும் உண்டு. எங்கள் வகுப்பாசிரியரின்
துணையோடு மாதம் ஒருமுறை வகுப்பு மாணவர்கள் முன் கௌரவிக்கப்படுவோம்.
இப்படியாக, நான் வளர்ந்த பின்னாலும் ‘அவர்கள்’ பற்றிய புத்தகங்களை
வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அன்று தெரிந்த கதைகள் இன்று வேறுமாதிரி
புரிகிறது. தெரிவதற்கும் புரிவதற்கும் வயது முக்கிய பங்காற்றுகிறது. இதற்கு
இன்னொரு காரணம் உண்டு. அப்போது கடவுள்கள் குறித்த சித்திரக்கதைகள்
வந்திருக்கவில்லை. கடவுளைக் கடவுளாக பார்த்து பழகியவன் நான். கார்டூனின்
கடவுள்களின் பந்து விளையாட்டு, வாய் சண்டை, பறப்பது, பஞ்ச் பேசுவது, ஊர்
சுற்றுவதையெல்லாம் உட்கார்ந்து பார்க்க மனமில்லை.
கடவுள்களை கேலிச்சித்திரத்திரங்களில் நாம் அனுமதிக்கிறோம். பின்னர் இதனையே
ஆடைகளில் வரும் போதும், காலணிகளில் வரும்போது எதிர்வினை செய்கிறோம். ஏன்..?
கார்டூனாக வந்து கடவுள்கள் செய்யும் லூட்டிக்கும் இதற்கும் அப்படியென்ன
பெரிய வித்தியாசம்.
கடவுள்களின் சாகசங்களைக் கார்டூனாக பார்க்காமல்; வீட்டில் உள்ளவர்கள் சொல்ல
கேட்டு வளர்ந்தேன். சொல்ல கேட்கும் போது எனக்கு நானே அதனை என் கற்பனையில்
பார்க்க ஆரம்பிப்பேன். இப்படிக் கார்டூனாக பார்க்கும் குழந்தைகளின் மனதில்
மேற்கொண்டு கற்பனை செய்ய வேண்டிய அவசியமின்றி முழுவதும் காட்சியாக
வந்துவிடுகிறது. பின்னாளில் கடவுள்கள் குறித்து பயங்களும்
மறைந்துவிடுகிறது. கார்டூனில் பார்த்த தோமுக்கும் ஜெர்ரிக்கும்
பயப்படுகிறோமா என்ன..?
கார்டூனாக காட்டும் போது பெற்றோருக்கும் சரி மற்றோருக்கும் சரி
குழந்தைகளிடம் சொல்வதற்கு கதைகள் இல்லாமல் போகிறது. இவர்கள் நான் மேற்சொன்ன
மனிதர்கள் குறித்து நன்னெறி கதைகளைப் பார்ப்பதில்லை, பால ஹனுமனும், பால
கணேசாவும் இப்படிப் பல பால கடவுள்கள் போதும் என்று
நிறுத்திவிடுகின்றார்கள். மனிதன் கடைபிடிக்க வேண்டிய நன்னெறிகளைப்
பார்த்தால் குழந்தைகளுக்குத் தாங்கள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்
தெரிகிறது. கணேசனும் ஹனுமனும் நன்னெறி கடைபிடித்தால் என்ன; பெற்றோரை
மதித்தால் என்ன..? இவர்களை போல எப்படிக் குழந்தைகளால் பறந்து சாகசங்கள்
செய்ய முடியாதோ அவ்வாறே கார்டூனில் கடவுள்கள் கடைபிடிக்கும் நன்னெறிகளும்
குழந்தைகளுக்கு அன்னியமாகிவிடுகின்றன.
“தோ, பார்த்தியா ஹனுமன் கூட அம்மா பேச்சை கேட்காம போனதாலதானே பிரச்சனை”
“ம்... அப்பயும் ஹனுமனாலே பறக்க முடியுதே அது போதாதா...?”
அம்மா பேச்சைக் கேட்பதைவிட பறப்பதே குழந்தைகளுக்கு முக்கியமாக தெரிகிறது.
இவை வெறும் உரையாடல் அல்ல. உரையாடலாகவும் இருக்கப் போவதில்லை.
குழந்தைகளிடம் எந்தக் கதையாக இருந்தாலும் பெற்றோர் சொன்னால் சுவாரஸ்யமாகக்
கேட்பார்கள். தாங்கள் தப்பிக்க; பகலில் குழந்தைகளில் தொலைக்காட்சியில்
கட்டிபோட்டு இரவில் அவர்கள் மெகா நாடகங்களின் அடிமையாகிவிடுகின்றனர்.
சமீபத்தில் நவீன் அழைப்பில் அவர் பணியாற்றும் பள்ளிக்கூடத்திற்கு கதை
குறித்து பேச சென்றிருந்தோம். நான், யோகி, மணி மொழி ஆகியோர். அங்கே
தொடங்கியது கதை சொல்ல செல்லும் பயணங்கள்.
அதனை அடுத்து மற்றொரு பள்ளிக்கும் நான் பணியாற்றும் மின்னல் பண்பலை மூலமாக
மாணவர்களிடம் கதை சொல்ல சென்றிருந்தேன். இனி ஒவ்வொரு பள்ளியாக
மாணவர்களுக்குக் கதை சொல்ல செல்லும் யோசனையும் முளைத்திருக்கிறது. இதற்கு
விதையாக எனக்கு அழைப்பை கொடுத்த நவீனுக்கு நன்றி.
குழந்தைகளிடம் கதை சொல்வது சாவல் என்ற எண்ணம் மாறி சந்தோஷம் என்பதை
உணர்ந்தேன். இரண்டு மணிநேரம் முடிந்து நவீன் மீண்டும் கூப்பிடும் போதுதான்
தெரிந்தது இன்னும் சொல்ல வேண்டிய கதைகள் ஏங்கி தவிப்பது.
ஒவ்வொருவரிடமும் கதை இருப்பது என்னவோ உண்மைதான். அதில் எத்தனை பேருக்கு
குழந்தைகளுக்கு சொல்ல கதைகள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. இனியும்
குழந்தைகளுக்குக் கடவுள்களின் கார்டூன்களே போதும் என்று நினைத்தால்....
கடவுள்கள் எல்லா நாளும் கேலிச்சித்திரங்கள்தான்.
பாவம் கடவுள்கள் அல்ல குழந்தைகள்.
|
|