|
|
இலக்கிய மோசடியில் தமிழாசிரியர் ஒருவரின் தவறான வாசிப்பு!
வளர்ப்புப் பிராணிக்கீடாக ஆசிரியர் ஒருவர்
வளர்த்துவரப்படுகிறார். அவரது தற்போதைய பெரும்பான்மையான இருப்பிடம்,
வீட்டின் வாயிற்கதவும் அது சார்ந்திருக்கும் சில பழைய
மெத்திருக்கைகளுந்தான் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அவர்
பெற்றிருந்த இலக்கியச் சிறப்புக்கும் இற்றை நிலைக்கும் பெருத்த வேறுபாடு.
அவரது அந்திமம் முடிந்த பின்பு, மலேசிய தமிழ் இலக்கிய உலகம் அவரை
விதவிதமாய்ப் போற்றிப் பாடும். இக்கட்டுரையின் நோக்கம் அவரைப்
போற்றுதற்கல்ல. மனிதரின் இன்னொரு பக்கத்தைச் சொல்வது அநாகரிகம் என்பர்
சிலர். அப்படியாயின்,நடந்த உண்மையை எங்கே, எப்படிச் சொல்வது? அவர் புரிந்த
நயவஞ்சகத்தின் ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே சுட்டி, இதையே இக்கட்டுரையின்
முன்னோட்டமாகச் சொல்லிவிடுகிறேன்.
எமது தனிப்பட்ட கருத்தோட்டத்தில் மனிதர்கள் எல்லோருமே தெரிந்தோ தெரியாமலோ
உளவியல் நோயாளிகளாகத்தான் நடமாடுகிறார்கள். இதில் என்னையும் சேர்த்துத்தான்
சொல்கிறேன். இப்படி எல்லோருமே ஒரு வகையில் வழக்கத்திற்கு மாறான
குணாதிசயங்களுடன்தான் அன்றாட வாழ்வை நகர்த்தி வருகின்றனர். நிரம்பக்
கற்றவர்களிடந்தான் இந்த நோய் வெகுவாகப் பீடித்துள்ளது. ஒன்றில் இருக்கின்ற
வேகம் மற்றொன்றில் சரிந்து, சில சமயங்களில் எவ்வளவுதான் நுண்மாணிருந்தாலும்
அது சாதாரண அதிகார வர்க்கத்தின் பிடியில் அடங்கிப்போய்விடுகிறது.எமது
இளம்பிராயத்தில் அவரை அநேக இடங்களில் பார்த்திருக்கிறேன். மோட்டார்
சைக்கிளில் பணி நிமித்தம் பள்ளிக்குப் பயணம் செய்துகொண்டிருப்பார்.
சாலையின் பயணத்தின்போது அவரது வாய் எதையோ உச்சரித்தபடியிருக்கும். அவர்
மனநிலை பாதிக்கப்பட்ட மனிதராக இருக்கலாமெனத் திடீர் எண்ணத்திற்கும்
வந்ததுண்டு. காலம் நகர்ந்தபோது அவரையும் அவரிடம் இருக்கின்ற அசாத்தியமான
இலக்கிய ஆளுமையையும் புரிந்துகொண்டேன். அதன் பின் அபிமான விருத்தியில்
அவரைப் படிக்கத் தொடங்கினேன். காலம் பலவற்றை உணர்த்தியது. ஆனாலும்,இந்தக்
கட்டுரையைப் பதிவு செய்துகொண்டிருக்கிற நேரத்தில் அவர்மீது பட்சாதாபமே
ஏற்படுகிறது. தமது வாணாளில் தமிழ் எழுத்தாளர்கள் புரிந்திராத அரிய சாதனைகளை
அவர் உருவாக்கியிருந்ததை மறுக்க முடியாது. அதை மலேசிய தமிழ் இலக்கிய உலகம்,
தவறாது பால் ஊற்றியும் ஊதுவர்த்தி கொளுத்தியும் தமது கடமையை வழக்கம்போலவே
செய்யும் மீண்டும் வலியுறுத்துகிறேன். உரிய காலத்தில் அதையும் பதிவு
செய்வேன்.அதற்கு முன் மாதிரிக்கு ஓரிரு விடயங்களை மட்டும் இவ்விடம் சொல்ல
வேண்டியுள்ளது.
எனது பிந்தையக் காலத்தில் அவரோடு பழகிய அனுபவமுண்டு. ஒரு முறை என்
வீட்டிற்குக் கடிதம் ஒன்று வந்திருந்தது. அவரது சிறுகதைத் தொகுப்பு
வெளியீட்டு விழா என்பதை அறிந்து குறிப்பிட்ட திகதியில் சென்று விழாவிலும்
கலந்து கொண்டேன். அநேகமாக எண்பதுகளில் இருக்கும். கனமுள்ள பிரமுகர்கள்
நால்வரையும் தமக்குத் தெரிந்த சிலரையும் வைத்து வெளியீட்டைக் கச்சிதமாக
முடித்துக்கொண்டார். விழா முடிந்து எல்லோரும் போய்விட்ட பின்பு, என்னிடம்
சட்டென்று ஒரு கணக்கைப் போட்டுக் காண்பித்து இவ்வெளியீட்டு விழாவில் தாம்
சம்பாதித்ததைப் பேருவகையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். குறைந்த உழைப்பில்
பெருத்த ஆதாயம்! எல்லாம் சரி. அவர் போட்டிருந்த தொகுப்பில் மிகச் சில
கதைகளும் அதுவும் பதினெட்டு எழுத்துரு அளவில் இடைவெளி விட்டு
அச்சடிக்கப்பட்டிருந்தது. அவற்றில் பெயர் சொல்லும் கதைகள் எதுவும்
காண்கிலேன். அப்பொழுதெல்லாம் இந்தத் தகிடுதத்தங்கள் எனக்குச் சரிவரப்
பிடிபடவில்லை. அவர் ஏன் இப்படிக் குறுக்கு வழியில் இறங்குகிறார் என்பதிலேயே
என் எண்ணம் சுழன்று சுழன்று வந்தது. என்னதான் ஆற்றல் இருந்தாலும், இந்த
வினாடி வரை அவர் மீது இனிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ள என்னால் இயலவில்லை.
அவரைப் பற்றி மேலும் மேலும் புரிந்துகொள்ள முற்பட்டபோது முற்றாக
வெறுத்திருந்தது மனம். அந்த வெறுப்புக்குக் காரணமான சம்பவமே இக்கட்டுரையின்
நாதம்.
நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போக வேண்டும். பழையவர்களில் சிலருக்குத்
தெரிந்திருக்கலாம்.மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஆவணப்படுத்த முயற்சி
எடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. இலக்கியக் குரிசில் டாக்டர் மா. இராமையா
அவர்கள் மும்முரமாகத் தமது இலக்கியப் படைப்பினூடே இதையும் தலையில்
போட்டுக்கொண்டு மெனக்கெட்டுக்கொண்டிருந்த நேரம். அப்பொழுது உலக தமிழ்
பண்பாட்டு இயக்கத்தின் தலைவராகச் செயற்பட்ட அமரர் இர.ந.வீரப்பனார் மலேசிய
தமிழ் இலக்கியத்தை மலாய் இலக்கியவாதிகளிடம் கொண்டு செல்வதற்காக டேவான்
பஹாசா டான் புஸ்தாக்காவிடம் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்.
இத்தகவலை அறிய வந்த மா.இராமையா தாம் எடுத்திருக்கின்ற முயற்சியை நண்பர்
வீரப்பனாரிடம் கூற, இருவரது எண்ணமும் ஒரே கோட்டில் பயணிக்க, மறு வாரமே தாம்
திரட்டித் தொகுத்து தட்டச்சுப் பொறியில் தயாரித்திருந்த பன்னூறு பக்கங்கள்
அடங்கிய பிரதியைக் கட்டாக அனுப்பி வைத்திருந்தார் மா.இராமையா. வீரப்பனார்
கலந்து கொண்டிருந்த சந்திப்பில் மலாய் இலக்கியம் படைக்கும் மலாய்க்காரர்
அல்லாதார் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். பேச்சு வார்த்தையின் முடிவில்
மொழிபெயர்ப்புத் திட்டம் தோல்வியில் முடிந்திருந்ததால், செய்தியை உடனடியாக
மா.இராமையாவிடம் தொலைபேசியின் வழி தெரிவித்ததுடன், பிரதியை நிகழ்வில்
கலந்து கொண்ட மற்றோர் எழுத்தாளரிடம் ( இக்கட்டுரையின் நாயகன் ) கொடுத்துச்
சேர்ப்பித்துவிடும்படி கட்டளையிட்டிருந்தார் இர.ந.வீரப்பனார். பிரதியைப்
பெற்றுக்கொண்டு மா.இராமையாவிடம் சேர்த்துவிடுவதாகக் கூறிய சம்பத்தப்பட்ட
எழுத்தாளர் பெருமனத்தோடு பெற்றுக்கொண்டார். அன்றையத் தினமே மா.இராமையா
அவர்கள் தமது துணைவியார் அமரர் சுந்தரமேரியுடன் சம்பத்தப்பட்ட எழுத்தாளரின்
வீட்டிற்குச் சென்று பிரதியைக் கேட்கப்போய், அப்படிப்பட்ட பிரதி தமக்குக்
கிடைக்கவேயில்லையெனச் சத்தியம் செய்தார் தமிழாசிரியராகப் பணி புரிந்த அந்த
வஞ்சக எழுத்தாளர். அவருக்குப் பின்பாட்டுப் பாட அவரது மனைவியும்
உடனிருந்ததுதான் வேடிக்கை. காரணம், வீரப்பனார் அப்பிரதியை டேவான்
பஹாசாவிடம் ஒப்படைத்துப் பேசிக்கொண்டிருந்த சமயம், மூக்குக் கண்ணாடி
அணிந்தபடி மினுக்கலுடன் கூடிய தோற்றத்தில் எழுத்தாளரின் மனைவியும்
உடனிருந்தார். அப்பொழுது எல்லாமும் தலைகீழாய் மாற முற்றாக இடிந்து போய்
விழுந்தார் மா.இராமையா. மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுத் தொகுப்புக்காகத்
தாம் இத்தனை நாட்கள் தன்னந்தனியாக ஒற்றையனாய்ப் பட்ட துன்பம் பாழாய்ப்
போய்விட்டதே என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சித்தப் பிரம்மை
பிடித்தாற்போல உழன்றதை மா.இராமையா அவர்களின் துணைவியார் முன்பு
அழாக்குறையாகச் சொன்னதை இன்னமும் ஞாபகத்தில் வைத்துள்ளேன். சம்பவம்
நிகழ்வதற்கு முன்பு, மா.இராமையா அவர்களின் துணைவியார் அப்பொழுதுதான் தம்
மகளின் மருத்துவக் கல்வி தொடர்பாகத் தமிழகத்திற்குப் போய்த்
திரும்பியிருந்த நேரம். அவர் அங்குப் போன நேரத்தில் அங்குள்ள எழுத்தாளர்கள்
சிலர் மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றைக் கொண்டு வரும்படி சொல்லியிருந்த
சமயத்தில்தான், மா.இராமையாவும் அதைத் தொகுக்கும் பணியில் இறங்கியிருந்தார்.
தமிழகத்திலிருந்து திரும்பியதும் அவர் கேட்ட முதல் கேள்வி, “ என்னங்க,தமிழ்
இலக்கிய வரலாறு வேலை முடிந்துவிட்டதா?!” என்பதுதான். ஆனால்,இப்படியொரு
செய்தியைச் செவிமடுக்கும் துர்பாக்கியம் நேரும் என்பதை அவர் கனவில்கூட
நினைக்கவில்லை! நடந்துவிட்டதே!
துர்த்தகவலை மா.இராமையா இணையர் இர.ந.வீரப்பனாரிடம் தெரிவிக்க பெரிய
கொந்தளிப்பே ஏற்பட்டு மறு வாரமே பத்திரிகையில் சம்பத்தப்பட்ட நம்பிக்கைத்
துரோகியின் நாகாசத்தை நார் நாராய்க் கிழித்து வைத்தார் இர.ந.வீரப்பனார்.
அப்பொழுதும், சம்பத்தப்பட்ட எழுத்தாளர் உண்மையை ஒப்புக் கொள்வதாய் இல்லை.
இடிந்து விழுந்த மா.இராமையா சோர்ந்துவிடவில்லை. தாம் வழக்கமாக எழுதி
வைத்திருக்கும் குறிப்புப் புத்தகத்தைத் திறந்து பழைய உற்சாகத்துடன்
தொகுக்கும் பணியில் மீண்டும் இறங்கலானார். இத்தனையும் நிகழ்ந்தது 1977 இல்.
மா.இராமையா என்ற தனி மனிதரின் விடா முயற்சியால் 1978 இல் அச்சுக்குப் போய்
1979 இல் முதன் முதலாக மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு உதயம் கண்டது.
இடைப்பட்ட 1978 ஆம் ஆண்டில் சம்பத்தப்பட்ட நயவஞ்சகத் தமிழாசிரியர் இன்னொரு
கசடு வேலையிலும் இறங்கியபோது கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்
எனும் கதையானது! ஆம், விரைவில் மலேசிய தமிழ் இலக்கிய வரலாறு மலாய் மொழியில்
வெளிவரப்போகிறது எனும் செய்தியைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்.
அப்படியானால், மா.இராமையாவின் நூல் வெளிவருவதற்கு முன்பே தாம்
முந்திக்கொள்ள வேண்டும், அதுவும் டேவான் பஹாசாவின் ஆளுமையின் கீழ்
முற்றிலும் தமது சுய உழைப்பால் வெளிக்கொணர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணம்
அந்த குறுக்குப் பேர்வழிக்கு இருந்திருக்கிறது! மா.இராமையாவின்
கேள்வியெல்லாம் ஒன்றுதான். “அட,கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேனே!
வேண்டுமானால் என் பெயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எதற்கு இந்த
ஏமாற்று?!” என்பதுதான். இறுதி வரையில் வெளிவந்து வெற்றியை ஈட்டியது
மா.இராமையாவின் நூல்தான்.
இந்தப் பிரதான சம்பவத்திற்குப் பின் எத்தனையெத்தனை பின்வழிகளை ஏனைய இலக்கிய
முயற்சிகளுக்கும் அந்தத் தமிழாசிரியர் கையாண்டிருப்பார் என்று சொல்லத்
தெரியவில்லை. எத்தனையோ மாற்று மொழி இலக்கியப் பணியில் இவர்
இறங்கியிருப்பார் என்பது ஒருபுறமிருக்க, அவற்றில் எத்தனை சம்பவங்கள்
நேர்மையின் விளைநிலத்தில் முளைத்தது என்பதைக் கூற மனம் துணியவில்லை.
இப்படிச் சிறுபுத்தியின் சிந்து விளையாட்டில் சின்னாபின்னமானது அவரது
ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்புத்தான்! காவியப் புனைவிலும் வெண்பா
பாடுவதிலும் தனித்தபெரும் திறம் கொண்டிருந்த அந்தத் தமிழாசிரியர்
போற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால். இல்லையே...!
இந்த அசகாயச் சாதனையைப் புரிந்த அந்தத் தமிழாசிரியரின் தற்போதைய நிலவரம்
எந்தவொரு தந்தைக்கும் நேரக் கூடாத மிகவும் பரிதாபத்திற்குரியது. அவரது
பிள்ளைகளிடம் தமிழும், பெற்றோரைக் கனப்படுத்தும் அடிப்படை நெறியும்
கிஞ்சிற்றும் இல்லை. நுனி நாக்கில் ஆங்கிலம் விளையாட அப்பாவின் மீது
கடுகளவு கரிசனையும் அற்றுப் போய்விட்டது. இப்போது மனைவியும் அவரும் மட்டுமே
வீட்டில் இருக்க, மனைவியின் கொடுக்கிப் பிடியில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது
எழுத்தாளரின் மீந்த உயிர். ஏதோவொரு பட்சாதாபத்தில் நம்மைப் போல் இலக்கிய
நேசரெல்லாம் நோயாளியான அவரைச் சென்று காண நினைத்தால், அவரது நிலைமை
சரியில்லை என்று வாய் கூசாமல் சொல்வதுதான் அவரது மனைவியின் வழக்கம்.
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு அந்தத் தமிழாசிரியரின் முன்னாள்
மாணவரொருவர், குடும்பம் சகிதமாக அவரைக் காணச் சென்றிருந்தார். ஆனால், அந்த
வீட்டுக்கார அம்மா போட்ட சத்தத்தில் அரண்டு மிரண்டு போய் வீடு திரும்பியது
அந்தக் குடும்பம். 1970 களில் அந்தத் தமிழாசிரியர் போட்ட
குருட்டாட்டத்துக்கெல்லாம் சகுனி வேலை செய்து ஒத்து ஊதிய அந்த அம்மா,
இப்போது அந்த வீட்டின் மகாராணி. அவரது இலக்கியக் கணவரோ வீட்டு வாசலில்தான்
யாரோ ஒரு சித்தனைப் போல் சரிந்திருக்கிறார்! அவருக்குப் பக்கத்தில்
நாயொன்றும் வாலை மடக்கிப் படுத்திருக்கிறது. ஆனால், அதற்குக் குரைக்கத்
தெரியாது!
|
|