முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 35
நவம்பர் 2011

  சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி
 
 
       
நேர்காணல்:

“தமிழ் இங்குப் பெயரளவில் தேசிய மொழிதான்” றியாஸ் குறானாவுடன் உரையாடல்: பாகம் 2
ம. நவீன் - கே. பாலமுருகன்



கட்டுரை:

அப்சரா
கோகிலவாணி கிருஷ்ணமூர்த்தி

கோ. புண்ணியவானின் 'எதிர்வினைகள்' நூல் விமர்சனம்: “சாமிக்கண்ணு ஏன் தற்கொலை செய்து கொண்டான்?”
கே. பாலமுருகன்

சாதிகள் இல்லையடி பாப்பா
யோகி

ஓர் இலக்கியச் சர்ச்சை

ஷம்மிக்கா

விவேகமான காயம்
செல்மா பிரியதர்ஷன்

யாதும் இசையே யாவரும் கேளிர்
அகிலன்



பத்தி:

புலம்பெயர் முகங்கள் ...3
வி. ஜீவகுமாரன்



புத்தகப்பார்வை:

துரத்தும் நிழல்களின் உக்கிரம் - சித்தாந்தன் கவிதைகள்
கருணாகரன்



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

தர்மினி பக்கம்
தர்மினி



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...25

அசரீரி

ந. பெரியசாமி

ம. நவீன்

சாதிகள் இல்லையடி பாப்பா! குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; என்று பாடும் போது ஏற்படும் உணர்ச்சியும் அதை ஒட்டி எழும் சமுதாயக்கோபமும் குறைந்த பட்சம் அவரவர் வாழ்க்கையில்கூட நடைமுறையாக உருமாறுவதில்லை. அதைவிடவும் பாரதி தாழ்தப்பட்டவர்களுக்குதான் அதை எழுதி இருக்கிறான் என்பதைப்போலதான் சிலரின் நினைப்பும் இருக்கிறது. பாரதியார் யார் என்று அறிமுகப்படுதாமலேயே என் தகப்பனார் 'பாரதி தமிழ்ப்பள்ளியில்' என்னை முதலாம் ஆண்டில் சேர்த்திருந்தார். முண்டாசு தரித்த தலையுடனும் அகன்ற கண்ணும் முறுக்கிய மீசையுடனும் பள்ளியின் வாசல் பார்த்து இருந்த அவரின் படத்தை பார்த்த படியேதான் யாரும் உள்ளே வர வேண்டும்.

அந்த மிக பெரிய ஆளுமையின் வரலாற்றைப் படிப்பதற்கும் வியப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் எனது ஐந்து வருடங்களை தாராளமாகக் கொடுத்திருந்தேன்.

ஆறாம் ஆண்டுக்குள் நுழையும் போது சுற்றி நடப்பவற்றை கவனிக்கும் அனுமானிக்கும் மனப்பக்குவதில் இருந்தேன். பள்ளி போட்டி விளையாட்டின் போது எனக்கும் என் பள்ளித்தோழிகளுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தின் வழிதான் என்னிடம் சாதி மிக சாதுரியமாக அறிமுகம் செய்துக்கொண்டது.

அது வரையில் சாதி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாது எனக்கு. கவுண்ட மணி ஒரு திரை படத்தில் பேசின வசனம் மட்டுமே சாதி பற்றிய அர்த்தமாக எனக்குள் இருந்தது. (அது எந்தப் படம் என்பது நினைவில் இல்லை) 'உலகத்தில் இரண்டு சாதிகள். ஒன்று ஆண் சாதி மற்றது பெண் சாதி' என்று இருக்கும் அவரது வசனம். நானும் அதையேதான் பள்ளி தோழிகளுக்கிடையில் நடந்த சம்பவம் வரைக்கும் நம்பி இருந்தேன். ஆனால் சாதியைப் பற்றிய கருத்து சொன்ன நகைச்சுவை நடிகர் மணியே தன் பெயருக்கு முன்னால் தன் சாதியைத்தான் பொறித்திருக்கிறார் என்பது அப்போது எனக்கு தெரியாது. 'தேவன்டா, கவுண்டன்டா' போன்ற சாதியை உயர்த்தி பிடிக்கும் வசனங்கள் கொண்ட படங்களை பார்த்த போதும் கூட அவை என்ன அர்த்தம் என்பதை விளங்கிக்கொள்ளவில்லை. என் அப்பாவும் அம்மாவும் அதைப்பற்றி எங்களிடம் மட்டும் அல்ல அவர்களுக்குள்ளும் பேசி நாங்கள் ஒரு நாளும் கண்டதில்லை.

ஒரே ஒரு முறை தம்பி 'தேவர் மகன்' படத்தில் வருவதைப் போல் விளையாட்டு தனமாக பக்கத்து வீட்டு பிள்ளையைப் பார்த்து நாசர் சொல்வதைப் போல் "நான் செத்தாலும் என் சாதி சாகாது... தேவன்டா" என்று சொல்லி விட்டான். அதை என் அப்பாவிடம் அண்டை வீட்டுக்காரர்கள் கோபத்தில் வத்தி வைத்து விட்டார்கள். அடுத்து தப்பிக்குச் சிறப்பு பூஜை மிகவும் விமர்சியாக அப்பா நடத்தினார். இலவசமாக எனக்கும் என் தங்கைகளுக்கும் சேர்த்தே பரிகாரமும் செய்தார். படத்தின் வசனங்களை மனப்பாடமாகப் பேச வரும் போது பரீட்சையின் பாடங்கள் மட்டும் எப்படி மறந்து போகும் என்றார். தேர்வில் உங்களை பார்த்துக்கொள்கிறேன் என்று பல்லை நரநரவென்று கடித்தார். படத்தின் வசனம் பேசியதுக்கு இந்தத் தண்டனையா என்று நானும் தம்பியும் மாறி மாறி கண்ணீரோடு பார்த்துக் கொண்டோம். ஏன் எதற்கு என்று தெரியாமல் இப்படிச் சில முறை ராகுகால பூஜை நடந்து விடும். அதற்கான விடைகளும் காலம் தாழ்த்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.

பள்ளியில் நடந்த சம்பவத்துக்கு வருகிறேன். அன்று பள்ளியின் ஆண்டு போட்டி விளையாட்டு. 4x100 திடல் சுற்று ஓட்டப்பந்தயத்தை 4 பேர் சேர்ந்து குழு வாரியாக ஓட வேண்டும். என்னுடைய அணியில் நானும் அமுதாவும் (அவள் வசதியான பெண்), செல்வி (ஏழை), விமலா (என்னைப் போலவே நடுதர வசதி உடையவள்). ஆகியோர் தேர்வாகி இருந்தோம். அமுதாவுக்கு செல்வியைக் கண்டாலே பிடிக்காது. அவளிடம் பேசக்கூட விரும்பமாட்டாள். இன்னும் சிலரிடமும் அவள் அப்படித்தான் நடந்துகொண்டாள். அவள் குணமென்று நாங்கள் நினைத்திருந்தோம். 4x100 ஓட்டத்தில் நான்தான் முதலில் ஓட வேண்டும். இரண்டாவதாக செல்வி அடுத்து விமலா இறுதியாக அமுதா ஓடி ஓட்டத்தை முடிக்க வேண்டும். முதலாவதாக ஓடி வந்த எனக்கு மூச்சுத் திணரல் ஏற்பட்டது. செல்வி உடனே அவள் வைத்திருந்த தண்ணீர் போத்தலை எனக்கு பருகக் கொடுத்தாள். அதை பார்த்துக்கொண்டிருந்த அமுதாவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல் பாட்டிலை பிடுங்கி வைத்து விட்டு அவளிடம் இருந்த தண்ணியைக் கொடுத்தாள். என் மீது அமுதாவுக்கு இத்தனை நட்பா என்று வியப்பு ஏற்பட்டது. இதை நானும் சரி செல்வியும் சரி ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. போட்டி விளையாட்டின் பரவசத்தில் இருந்தோம். ஆனால் அமுதா சிடு முகத்தோடே இருந்தாள். விளையாட்டு முடிந்து வீட்டுக்கு போகையில் அமுதா என்னை கடிந்து கொண்டாள். "ஏன் அவளிடம் தண்ணி வாங்கின" என்றாள். ஏன் என்பதைப் போல் பார்த்தேன். நாமெல்லாம் நல்ல சாதி. அவள் வேறு சாதி என்றாள். நாம் என்ன சாதி என்றேன். ஒரு சாதியின் பெயரைச் சொன்னால். உனக்கு எப்படித் தெரியும் என்றேன். அவள் அம்மா சொன்னதாகச் சொன்னால். உன் அம்மாவுக்கு எப்படித் தெரியும் என்றேன். சிலரை பார்த்ததுமே அவர்களின் தலையில் எழுதி ஒட்டி இருப்பது தன் அம்மாவுக்கு மட்டும் தெரிந்துவிடும் என்பதைப் போல பேசினாள். 'சாதிகள் இல்லையடிப் பாப்பா' என்று பாரதியார் பாடலில் சொல்லி இருக்காரே அது பொய்யா? என்றேன். அதுவெல்லாம் பள்ளிப்பாடம் என்றாள். அந்தப் பாரதியாருக்கே சாதி இருக்கு தெரியுமா என்று என் மூளையை நன்றாக குழப்பி விட்டாள்.

கேட்கக் கூடாத வார்த்தையை கேட்ட மாதிரியும் பார்க்கக் கூடாதப் படத்தை பார்த்த மாதிரியும் அமுதா கொழுத்திப் போட்ட வார்த்தை என்னைச் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. அமுதா ஒப்பித்த சாதிதான் என்னுடைய சாதியா என்று சரி பார்த்துக்கொள்ள ஆவல் கொள்ளவும் செய்தது. சாதியைப் பற்றிய விளக்கத்தை யாரிடமாவது கேட்டால்தான் அலை ஓயும் கதியில் இருந்தேன். நல்ல வேளையாக என் சிற்றன்னைகள் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். மிகவும் சகஜமாகவும் சாதரணமாகவும் நான் அளவலாவும் சிலரில் அவர்களும் அடங்குவர். அவர்களிடம் கேட்டேன். "நாம் என்ன சாதி?"

"எவ்வளவு பெரிய விஷயத்தை ரொம்ப சாதாரணமாகக் கேட்கிறாயே யார் இதை கேட்டது" என்றனர். பள்ளியில் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னேன். அந்தச் சம்பவத்தை அவர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. "நீ மட்டும் என்ன குறைந்தவளா. பிள்ளைகள் அப்பாவின் வழியை தொடர்வதால் உங்க அப்பாவோட சாதியைக் கௌரவமாக சொல்ல வேண்டியதுதானே" என்றனர். "அப்படினா அம்மா என்ன சாதி?" என்றேன். அவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அதுக்குத்தானே உங்க அப்பாவையும் அம்மாவையும் சொந்தத்தை விட்டே விளக்கி வச்சிருந்தாங்க என்று சுறுக்கமாக முடித்துக் கொண்டனர். என் அப்பாவின் சாதியைப் பற்றி பேசும் போது இருந்த உற்சாகம் தங்களுடைய சாதியைச் சொல்வதற்கு திராணியற்றுப் போனது. தாழ்ந்த சாதியென்று ஒருவரை தாழ்த்துபவர் வெளியில் இருந்து இயங்கவில்லை.

இவற்றையெல்லாம் எங்களுக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த அப்பா என்னையும் தம்பியையும் அழைத்தார். எதுக்கெடுத்தாலும் இடைவாரை உருவி சாமியாடும் அப்பா இந்த முறை அப்படிச் செய்யவில்லை. நான் பார்க்காத ஒரு புது முகத்தோடு அப்பா இருந்தார். இன்று சொல்வதுதான் என்றைக்கும் என்று ஆரம்பித்தார். "சாதினு ஒரு மண்ணும் கிடையாது. சாதி பேரை சொல்லி ஒரு மசுரையும் பிடுங்க முடியாது. நம் வீட்டிலும் சரி உங்க மனசிலும் சரி அதைப் பற்றி நினைப்பு இருந்தா அது இன்றோடு இறுதியாக இருக்கட்டும்" என்றார். சாதி என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாதுனுதான் சாதியே இல்லனு சொன்ன பாரதி பள்ளியில சேர்த்திருக்கேன் என்று கூறியவர் மடமட என்று மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியேறினார். எனக்கு ஓரளவு புரிந்தது. தம்பிக்கு எதுவும் புரியவில்லை. விட்டா போதுமடா சாமினு அவனுடைய வேலையைப் பார்க்க போய்விட்டான். நானும்தான்.

ஆனால் அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக மற்றொறு சம்பவமும் என் கண்முன் நடந்தது. அது ஒளியேரும் போது எனக்கு நன்கு விவரம் தெரிந்திருந்தது. ஒரு மூன்று வார பள்ளி விடுமுறையில் நான் தற்காலிக வேலைக்காகப் போயிருந்த அந்தச் சவுக்காரத் தொழிற்சாலையில் நடந்தது. செம்பனை எண்ணெய்தான் அங்கே முக்கிய தயாரிப்பு. ஆனால் தனி தனி ஆலையில் உற்பத்தி நடந்தது. குறிப்பிட்ட தேதியில் வந்த ஓடரை முடிக்காததால் தற்காலிக வேலைக்குப் பள்ளி விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு 16வயதுக்கு மேற்பட்ட யாராக இருந்தாலும் அவசரத்துக்கு வேலைக்கு அழைத்தார்கள். என் அப்பாவின் இளைய தப்பி அங்கு வேலை செய்துக்கொண்டிருந்ததால் என் பாட்டியிம் மூலம் தகவல் வீட்டுக்கு வந்தது. அப்பா வழக்கம் போல் முட்டுகட்டை போட்டாலும் பாட்டியிடம் அவரின் சொல்வாக்குத் தோல்வி அடைந்தது. இரண்டு வாரத்துக்கு மட்டும் வேலைக்குப் போவதற்கு எனக்கு அவகாசம் இருந்ததால் கிழம்பினேன். அதுதான் நான் வேலைக்கென்று போன முதல் தொழிற்சாலை.

பிரிட்டிஷ் ஆட்சியின் போதே கட்டப்பட்டத் தொழிற்சாலை அது. காலத்துக்கு ஏற்றார்போல் புதுப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாக அவ்வட்டாரத்திலையே பெரிய தொழிற்சாலையாக இருந்து வருகிறது.

அங்குப் போன ஒரு வாரத்திலேயே சவர்க்காரச் சாலையின் தனிதனிப் பிரிவு சாதி வாரியாக வகுந்திருப்பது தெரிந்தது. சூப்பர்வைசராக வேலை பார்த்தவரும் அவரின் சாதிக்காரர்களும் உடையில் அழுக்குப் படாத வேலையாக இருந்தது. அவர்களின் பேச்சும் நடவடிக்கைகளும் கர்வமுடனேயே இருந்தது. மற்றவர்கள் சிரமமான வேலையை செய்வதுடன் சாடைமாடையாக விமர்சிக்கவும் பட்டனர். சித்தப்பாவின் சிபாரிசில் சென்றதால் எனக்கு சூப்பர்வைசர் கூட்டணியில் வேலை கிடைத்தது. வேலை ஒன்றும் சிரமமே இல்லை. என் உறவினர்கள் என்று கூறிக்கொண்டு பலர் அங்கு இருந்தனர். எந்நேரமும் என்னிடம் எதையாவது கேட்டுக் கொண்டும் என் உயிரை வாங்கிக் கொண்டும். ஆனால் அங்கு கடிகாரத்தைப் பார்க்காமலே வேலை செய்யலாம். சுறுசுறுப்பான வேலை என்பதால் நேரம் போவதே தெரியாது. ஆனால் நான் அங்கு வேலை செய்ய முடியாமல் சம்பளம் கூட வாங்காமல் சுயமாகவே வேலை நிருத்தம் செய்துக்கொண்டேன்.

ஒரு கழிப்பறை பிரச்சனை சாதி பிரச்சனையாக மாறியதுதான் அதற்கு காரணம். ஏதோ ஒரு காரணத்துக்காகத் தொழிற்சாலையின் அலுவலகத்திலிருந்து ஒரு நோட்டீஸ் உற்பத்தி பிரிவில் ஒட்டப்பட்டிருந்தது. மூன்று நாட்களுக்கு இரண்டு சிப்டுகளில் உள்ள ஊழியர்கள் கழிப்பறையை கழுவ வேண்டும். பெயர் அட்டவணையும் மேலிடத்திலிருந்து தயாராகி வந்திருந்தது. இது எதனால் என்று இப்போதும் எனக்கு தெரியவில்லை. யூகிக்கவும் முடியவில்லை. ஆனால் சூப்பர்வைசர் கூட்டணி இதற்கு எதிராக குரல் எழுப்பியது. மூன்று கழிப்பறைகள் கொண்ட அந்த சிறிய கழிப்பறையை கழுவுவதற்கு எதற்கு இத்தனை ஆள்கள் தேவை எனவும் எதிர் அணியே அந்த வேலையை செய்ய வேண்டும் எனவும் கெக்கலிக்க ஆரம்பித்தது. எதற்குமே வாயை மூடிக்கொண்டு சொன்னதை செய்யும் எதிரணி இந்த மூறை அப்படி இருக்கவில்லை. எதிர்குரல் மிகவும் காட்டமாகவே வந்தது. நாங்கள் சுத்தம் செய்தால் சூப்பர்வைசெர் கூட்டணி அதை உபயோகிக்க கூடாது என வாதத்தில் இறங்கியது. இது மேலும் சூப்பர்வைசெர் கூட்டணிக்கு ஆத்திரத்தையும் பிடிவாதத்தையும் ஏற்படுத்தியது. எதிரணிக்கு பின்னால் யார் இருந்து சாவி கொடுப்பது என சூப்பர்வைசெர் கூட்டணியால் கண்டு பிடிக்க முடியவில்லை. சூப்பர்வைசரை பகைத்துக்கொண்டால் எதுவும் நடக்கும் என தெரிந்திருந்தும், உயிரை சூப்பர்வைசரால் பிடிங்கிவிட முடியாது என்ற கர்வம் அவர்களிடத்தில் நான் பார்த்தேன்.

விஷயம் மேலிடம் வரைக்கும் போனால் தன் வேலைக்கும் அனுபவத்துக்கும் ஏதாவது கேடு வருமென சூப்பர்வைசர் அனுமானித்திருக்க வேண்டும். அவர் தன் கூட்டணியிடம் சமாதானம் பேசி பார்த்தார். வேலைக்காகவில்லை. சண்டைக்காரர்களிடம் போனார். நாங்கள் கழிப்பறையில் மலம் கழிப்போம். அவர்கள் தங்க தட்டிலா மலம் கழிக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பினர். சூப்பர்வைசெரின் முகம் சாகும் நிலைக்கு வந்தது. காரியம் நடப்பதற்கு காலில் கூட விழுவார் என்றே எல்லோரும் நினைத்தார்கள். கிடைத்த ஒரே சந்தர்ப்பத்தை நழுவ விட யார்தான் முனைவார்கள். அசர்வதாக அவர்களும் இல்லை.

இறுதியில் அழுவலக அட்டவணைப் படி கழிப்பறையை சேர்ந்தே சுத்தம் செய்ய வேண்டும் என்ன சூப்பர்வைசர் சொல்லிவிட்டார். சூப்பர்வைசர் கூட்டணியால் சூப்பர்வைசரை பகைத்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால் நிபந்தனை இன்றி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன் பிறகு அவர்களின் சினம் வார்த்தைகளால் விநியோகம் ஆகிக்கொண்டிருந்தது.

அந்தக் கூட்டணியிடம் என்னால் வேலை செய்ய முடியவில்லை. பெண்களிடத்தில்தான் வேலை எனினும் சாதியின் போதனைகளும் மற்றவர்களை சாடும் கொச்சை வார்த்தைகளையும் சளிக்காமல் அவர்கள் பேசினர். என்னால் காதைக் கொடுத்து எதையும் கேட்க முடியவில்லை. காதை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு போயிருந்தால் இன்னும் ஒரு வாரம் தாக்கு பிடித்திருப்பேன். எதையும் செய்ய முடியாத பட்சத்தில் ஒரு வாரம்கூட தாக்கு பிடிக்க முடியாமல் அங்கு வேலைக்கு போவது பிடிக்கவில்லை என்றேன். இப்படிக் காரண காரியம் சொல்லாம நின்னா சம்பளம் கிடைக்காதுனு பாட்டி சாட ஆரம்பித்தார். சம்பளம் வேண்டாம் என்றேன். அந்தத் தொழிற்சாலையைப் பற்றி அப்பாவுக்கு முன்னமே தெரிந்திருந்தது. அங்கு வேலைக்கு வேண்டாம் என்றதுக்கு அங்கு நடக்கும் கூத்தும் ஒரு காரணம் என்றார்.

சாதியின் பெயரைப் பயன் படுத்தாமல் வாழ வேண்டும் என அப்பா சொல்லி இருக்கிறார். அப்படி வாழ்ந்ததுக்கு அப்பாதான் ஒரு உதாரணம். சில சமையங்களில் நீ என்ன சாதி என்று கேட்பவர்களிடம் என்ன சொல்வதென்றே தெரியாது. அதிகமாக தெரியாது என்ற சொல்லைதான் பயன் படுத்தியிருக்கேன். அப்பாவை சார்ந்தவர்களுடன் என்னை பார்ப்பவர்களும், அம்மாவை சார்ந்தவர்களுடன் என்னை பார்ப்பவர்களும் சில சமயம் குழப்பம் அடைவர். அவர்கள் கேட்கும் கேள்விகள் சில சமயம் சங்கடத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

மொத்தம் எத்தனை சாதி உண்டென இப்போதும் எனக்கு தெரியாது. செய்தொழிலை வைத்துதான் சாதியைப் பிரிக்கிறார்கள் என்பதையும் தற்சமையம்தான் தெரிந்துக்கொண்டேன். எனக்கு தெரிந்த நாடறிந்த மூத்த எழுத்தாளர் ஒருவர் தான் இன்னார் சாதி என்றும் தன் பாட்டி இந்த சாதிக்காரர் என்றும் முக்கிய பிரமுகர் தலைமையேற்றிருந்த சாதிசங்க சந்திப்பில் அங்களாய்த்திருக்கிறார். எழுத்தில் ஒன்றும் நடத்தையில் ஒன்றும் வேஷம் போடும் இந்த மாதிரி ஆட்களை இளைய எழுத்தாளர் சமூகம் மதிக்க மாட்டேங்குதுனு குற்றம் சாட்டுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.

சாதி என்ற உருவமற்ற ஒன்று ஆண்களைக் காட்டிலும் பெண்களை மனரீதியாக அதிகம் தாக்குகிறது. நூதனமான இந்த பிரச்சனையை எதிர்வாதத்துடனோ தேவைப்பட்டால் அடாவடித்தனமுடனோ ஆண்கள் ஏதோ ஒரு ரீதியிம் எதிர்க்கொள்கிறார்கள். மனதில் வைத்து புழுங்குவது அல்லது அழுது தீர்ப்பதுதான் பெண்களுக்கு தெரிந்த நிவாரணம்.

பட்டணத்தில் வெளிப்படையாக இல்லாமல் காதோடு காது வைத்த மாதிரி இந்த சாதிப் பிரச்சனை மிகவும் அணுக்கமாகவும் மறைமுகமாகவும் உலாவிக்கொண்டிருக்கிறது. எனது திருமணமாகட்டும் நண்பர்களாகட்டும் எவ்வகையிலும் சாதி என் வழியில் குறுக்க வரவே இல்லை. கலப்பு மணம் புரிந்துக்கொண்டதுக்காக அப்பா பல தடவை விமர்சிக்கப்பட்டும் புறங்கனிக்கப்பட்டும் உள்ளார். அப்பா இது எல்லாவற்றையுமே புறக்கனித்தார்.

சாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்,
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே.

என்று பாரதியார் பாடி என்ன பயன். புதிதாக நம்நாட்டில் தலைதூக்கிக் கொண்டிருக்கும் சாதி அமைப்புகளையும், சங்கங்களையும் இளைய தலைமுறையினர் நிராகரிக்க வேண்டும். என் காலத்தில் சாதி இல்லாமல் போகும் என்று அப்பா நம்பினார். அது நடக்கவில்லை. எதிர்காலத்தில் சாதி சாகும் என நான் நம்பிக்கை கொள்கிறேன். பார்க்கலாம்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768